வரலாறும் மார்க்சியமும்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

என். குணசேகரன்


கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்யாமல், கருத்துக்களை எழுதுவதும், பேசுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. கட்டுக் கதைகளாக உலா வரும் கருத்துக்களை எல்லாம் வரலாறு எனும் பெயரில் பலர் கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வெளியிடுகின்றனர்.

இது ஆபத்தான போக்கு. எந்த அளவில் இது ஆபத்தானது என்பதற்கு அயோத்திப் பிரச்சனை தான் மிகச் சிறந்த உதாரணம். ‘ராமர் பிறந்த இடம் அயோத்தி, ராமர் கோயிலை இடித்து பாபர், மசூதியைக் கட்டினார்’ என்பன போன்ற பல பொய்களைச் சொல்லி லட்சக்கணக்கானோரை நம்பவைத்து, ஏராளமான மதக்கலவரங் களுக்கு நாட்டை இட்டுச் சென்றதும் ‘வரலாறு’ என்பதன் பெயரால் தான் நடந்தது.

வரலாறு அறிவினை வளப்படுத்தும் துறை. அதே நேரத்தில் அதனை அணுகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாகவும் மாற்ற முடியும். இதற்கு அயோத்திப் பிரச்சனையிலிருந்து, haிட்லரின் யூத எதிர்ப்பு பிரச்சாரம் வரை ஏராளமான சான்றுகள் உலக வரலாற்றில் உண்டு.

சமீபத்தில் சாவர்க்கர் பற்றிய சர்ச்சை எழுந்தது. எவ்வாறு நேரு, காந்தி போன்றோர் சுதந்திரத்திற்காகப் போராடினார்களோ அதே போன்று சாவர்க்கரும் போராடினார் என்று சங்பரிவாரங்கள் வாதிட்டார்கள். இதற்கு ஆதாரமாக சாவர்க்கர் எழுதிய புத்தகம், அவரது சிறைவாசம் போன்றவற்றை அவர்கள் முன்வைத்தனர்.

சாவர்க்கர் தான் ‘இந்துத்துவா’ என்ற மதவெறித் தத்துவத்தின் பிதாமகன் என்ற உண்மையை அனைவரும் அறிந்ததே. இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த மரியாதையும், சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற குறிக்கோள்களில் நம்பிக்கை கொண்டவர்கள் தான் நம் நாட்டில் அதிகம். இவர்களின் ஆதரவைப் பெற்றிடவும், இவர்களிடமும் இந்துத்துவா கொள்கையை லாகவமாக நுழைத்திடவும், சாவர்க்கரை சங்பரிவாரத்தினர் பயன்படுத்திட முனைகின்றனர்.

ஆக, வரலாற்று நிகழ்வுகளைப் பயன்படுத்தி, அந்த நிகழ்வுகள் உண்மையாகவே நடந்திருந்தாலும், ஒரு ஆபத்தான மாற்றத்தை சமூகத்தில் உருவாக்க முயற்சி மேற்கொள்ள முடியும் என்பதற்கு சாவர்க்கர் பிரச்சனை ஒரு உதாரணம். எனவே வரலாற்றைப் பயன்படுத்திடும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை. வரலாற்று விபரங்களை சம்பவம் நிகழ்கிற சூழலில் பொருத்திப் பார்த்து ஆராயும் பாங்கு வேண்டும். இன்றைய நிலையில் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய விவரங்களை மறைக்க வேண்டியதில்லை; ஆனால் கடுமையான விமர்சனக் கண்ணோட்டத்துடன் இவற்றைக் கையாண்டு நிராகரிக்க வேண்டும்.

சாதி, மதம் பற்றி வெளிவரும் பல வரலாற்றுக் கட்டுரைகள், புத்தகங்கள் எல்லாம் பல்வேறு நோக்கங்களோடு எழுதப் படுகின்றன. உதாரணமாக, தலித் பிரச்சனை பற்றி எழுதும் ஒருவர் தலித்துக்கள் எல்லாம் தனிக் குழுவாக, தனிக்கட்சியாக ஒன்றுபட வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதுகிறார்; அப்போது வரலாறு பற்றி போகிற போக்கில் சில கருத்துக்களை முன்வைக்கிறார். சாதியின் தோற்றம் போன்ற பிரச்சனைகளை தனது மனம் போன போக்கில், வலுவான ஆதாரங்கள் இல்லாத கருத்துக்களை சரளமாக வெளியிடுகிறார்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் தலித் மக்களை ஜனநாயக நீரோட்டத்திலிருந்து பிரித்திடும். அவர்களுக்கும், நாட்டிற்கும் நலன் பயக்காத வகையில் சாதியின் இருத்தலை மேலும் கெட்டிப்படுத்த இது உதவிடுகிறது.

வரலாற்றாசிரியர்களின் கடமை

வரலாற்றாசிரியர்களும் தங்களது பொறுப்பை உணர வேண்டியுள்ளது. தமது இனத்திற்கு, சாதிக்கு, மதத்திற்கு, எது நல்லது என்று பார்ப்பது கூடாது. வலுவான ஆதாரங்களே மேன்மை யானது எனும் உணர்வு வரலாற்றாசிரியர்களுக்கு வேண்டும்.

ஏனெனில் வரலாற்றாசிரியர்கள் எழுதும் ஒவ்வொரு விஷயத்தையும் வரலாற்றியல் தெரியாத பலர் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய விளைவுகள் நேரும் என்ற எச்சரிக்கை உணர்வு ‘தொழில் ரீதியான வரலாற்று ஆசிரியர்களுக்கு தேவை’ என்று எரிக் haாப்ஊவாம் கடுமையாக எச்சரிக்கிறார்.

தமிழகத்தில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. ‘இமயம் வென்றான் சேர மன்னன் நெடுஞ்சேரலாதன்’ என்று எழுதுவது இலக்கியச் சுவைக்கும், கவிதை நயத்திற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அதனை உண்மை வரலாறாக எடுத்துக் கொண்டு வடக்கில் இருப்பவர்களை விட தெற்கில் உள்ள தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமிதம் கொள்வதும், அந்த உணர்வை ஏற்படுத்துவதும் தவறு. கவிதைக்குரிய பொருளைக் கொண்டு வரலாறு எழுதுவது மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்திடும். அது மட்டுமல்லாது, இது மக்களுக்கு ஆரோக்கியமான வரலாற்று உணர்வை ஏற்படுத்துவதையும் கெடுத்துவிடும். அறிவுக்கு பதிலாக வெற்று, அர்த்தமற்ற உணர்வுகளுக்கு மக்கள் பலியாகிடும் நிலை ஏற்படும். இதற்கு சிறந்த உதாரணம், ஆரியப் பிரச்சனை.

ஆரியப் பிரச்சனையும், வரலாறும்

இந்திய வரலாற்றில் அதிகமாக அலசப்பட்ட பிரச்சனை ஆரியப் பிரச்சனை. இது தமிழகத்தில் பெரும் மக்கள் இயக்கமான திராவிட இயக்கத்தையும் சில சமயங்களில் தடம் மாறி பிரிவினை மற்றும் இனவெறிப் பாதையில் செல்லுவதற்கு தூண்டுகோலாக இருந்தது.

அதே போன்று சங்பரிவார இயக்கங்களுக்கு இந்து மதவெறி உணர்வையும், இந்து மத அடிப்படையிலான தேசிய வெறியையும் உசுப்பி விட இன்றும் பயன்பட்டு வருகின்ற பிரச்சனை ‘ஆரியப்’ பிரச்சனை.

கைபர் கணவாய் வழியாக வந்து இங்கிருந்த திராவிடர்கள் மீது படையெடுத்து, அவர்களது பண்பாட்டையும் நாகரீகத்தையும் அழித்து, ஆரிய கலாச்சாரத்தை புகுத்தினர் என்பது ஒரு வரலாற்றுக் கருத்தாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த ‘ஆரியப் படையெடுப்பு’ எனும் கருத்து தமிழகத்தில் தொடக்க கால திராவிட இயக்கத் தலைவர்களுக்கு பெரிதும் பயன்பட்டது. ‘வடக்கிலிருந்து வந்த ஆரியர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்’ என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். சமூகத்திலிருந்த பிராமணீய, சாதிய ஆதிக்கத்தை எதிர்க்க ஆரியப் பிரச்சனை ஒரு ஆயுதமாக இங்கு பயன்படுத்தப்பட்டது.

மறுபக்கத்தில், ‘ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்லர், இங்கேயே வாழ்ந்து வந்த மூத்த பூர்வீகக் குடிகள்’ என இந்துத்துவா கூட்டம் பிரச்சாரம் செய்கிறது. ஆரிய கலாச்சாரம் மேன்மையானது என்று சொல்லி, அதுவே வேதக்கலாச்சாரம் என போதித்து, மீண்டும் அந்த பொற்காலம் வரவேண்டுமென அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். வெளியிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் அல்லர்; முஸ்லீம்கள் கிறித்துவர்கள் தான் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆக, ஆரியப் பிரச்சனை என்பது அடிப்படையில் இரண்டு வரலாற்றுக் கருத்துக்களை கொண்டதாக புரிந்து கொள்ளப் படுகிறது; (1) ஆரியப் படையெடுப்பு (2) ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடி மக்கள். இந்த இரண்டும் வரலாறு எனும் பெயரில் வரலாற்று முடிவுகளாக கூறப்படுகிறது.

உண்மை என்ன ?

ஆனால் உண்மையில், சமீபகால வரலாற்று ஆய்வுகள் இந்த இரண்டு கருத்துக்களும் தவறு என்பதை மிக அழுத்தமாக எடுத்துரைக்கிறது. மொழியியல், தொல்லியல், கல்வெட்டுகள், மானுடவியல் எனப் பல வகையிலான ஆராய்ச்சிகள் எதுவுமே மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் அங்கீகரிக்கவில்லை.

ஆரிய படையெடுப்பு என்ற பெயரில் ஒரு நாட்டாரோடு, மற்றொரு நாட்டார் திரண்டு மோதி பெரும் போர் புரிந்து இங்கே வாழ்ந்தவர்களையும், கலாச்சாரத்தையும் அழித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. என்ன நிகழ்ந்திருக்கிறது என்றால் இடம் பெயர்வுகள் (ஆபைசயவiடிளே) ஏராளமாக நடந்திருக்கிறது. இந்திய இரானிய எல்லைப் பகுதியிலிருந்து சிறு சிறு கூட்டமாக ஒரு குறிப்பிட்ட வகை மொழி பேசுவோர் இடம் பெயர்ந்து ஆங்காங்கே குடியிருப்புக்களை அமைத்து வசித்தனர். இதற்கான ஆதாரங்களே அதிகம் உள்ளன.

ஆக பெரும் படையெடுப்பு மற்றும் அழிவு என்ற கருத்தும் தவறு, அதே நேரத்தில் வெளியிலிருந்து அவர்கள் வரவில்லை, இங்கேயே உள்ள பூர்வகுடிகள் எனும் கருத்தும் தவறு.

இந்த இரு கருத்துக்களுக்கு மூல காரணமாக இருப்பது ‘ஆரியர்கள்’ என்பவர்கள், தமிழர், தெலுங்கர் போன்று குறிப்பிட்ட இனம் என்ற கருத்து. ஆரியர்கள் தனிக் கூட்டமாக வாழ்ந்த இனக்குழு (சுயஉந) என்ற கருத்து மேற்கண்ட இரண்டு தவறான கருத்துக்களுக்கு அடிப்படை. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, ஆரியர்கள் தனி இனக்குழு அல்ல. நீண்ட பரப்பளவில் பல்வேறு இடங்களில் வசித்து வந்த கூட்டங்கள். இவர்கள் பேசிய மொழியில் சில ஒற்றுமைகள் நிலவின. இந்தோ – ஆரிய மொழிவகை சார்ந்ததாக அது இருந்தது. இதுவேதான் ‘ஆரிய’ எனும் சொல் சுட்டிக்காட்டுவது. உண்மையில் ஆரிய என்பது மொழியை குறிக்குமே அன்றி இனக்குழுவை குறிப்பிடுவ தாகாது. ஆரியர் என்பதை விட ‘இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்கள்’ என்று குறிக்கலாம் என வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பார் குறிப்பிடுகிறார். (சுருக்கமாக சொல்ல வேண்டுமென்ற வசதிக்காக ஆரியர் என குறிப்பிடலாம். ஆனால் இனக்குழு என்ற புரிதலில் பயன்படுத்துவது தவறு)

‘ஆரியப்பிரச்சனை’ பற்றி இங்கு விரிவாக விவரிப்பதன் நோக்கம், சில தவறான வரலாற்றுக் கருத்துக்கள் பெரும் மக்கள் இயக்கங் களாக மாறி மக்களை திசைதவறி அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதை எடுத்துரைப்பது தான்.

திராவிட இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ஆரியப் பிரச்சனை மக்களை இனவெறி, பிரிவினைப் பாதைக்கு செல்லாமல் பாதுகாத்துக் கொண்டது. அதேசமயம் ஆரியப் பிரச்சினையை திராவிட இயக்கம் தேவைக்கேற்ப துருப்புச் சீட்டாக அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறது. எனினும், தெளிவான வரலாற்றுக் கருத்துக்கள் அடிப்படையில், பிராமணீயத்திற்கு எதிராக மக்கள் திரண்டிருந்தால், முற்போக்கான பாதைக்கு தமிழக மக்கள் வந்திருப்பார்கள்.

ஆனால் இந்துத்துவா இயக்கம், கணிசமான மக்களை இன்னமும் தவறான வரலாற்றைச் சொல்லி திரட்டிக் கொண்டிருக் கிறது. இது நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரும் ஆபத்து.

சமய இலக்கியமும் வரலாறும்

பழங்கால இலக்கியங்கள், காவியங்கள், சமய நூல்கள் போன்ற வற்றில் வருகின்ற விவரங்களை அப்படியே வரலாற்று உண்மைகளாகக் கருதிடக் கூடாது. அவற்றில் வரும் தகவல்களும், விவரங்களும், பல்வேறு அறிவியல் முறைகளில் கிடைக்கும் தகவல்களோடு ஒத்துப்போக வேண்டும். அகழ்வாராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சி போன்ற பல வழிகளில் கிடைக்கும் ஆதாரங்களோடு இலக்கியம் மற்றும் சமயநூல் தரும் விபரங்களும் ஒன்று சேரும் போது தான், அவற்றை வரலாற்று உண்மைகளாகக் கருதி பயன்படுத்தலாம். அதுவரை இலக்கியச் சான்றுகளை கவிதை ரசனைக்காக மட்டுமே எனக் கருதிட வேண்டும்.

கடந்த நூற்றாண்டிலும், அதற்கு முந்தைய நூற்றாண்டிலும், வரலாறு எழுத முனைந்தவர்கள், பிராமணர்கள் எழுதிய சமஸ்கிருத நூல்களையே ஆதாரமாகக் கொண்டனர். இதனால் இந்தக் கால வரலாறுகள் அனைத்தும் பெரும்பாலும் ஒரு தலைபட்சமாகவே இருந்தன. ஏனெனில் ஆதார நூல்கள் அனைத்தும் சமய நூல்களாகவோ, அல்லது சடங்குகளை விளக்கும் கையேடுகளாகவோ இருந்தன. இவற்றில் பிராமண நூலாசிரியர் களின் சொந்தக் கருத்துக்களே மிதமிஞ்சி இருந்தன. சமூக மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு சாதகமாகவே இவை இருந்தன.

உதாரணமாக, சாதி பற்றிய விளக்கங்களை தரும சாஸ்திரங்கள் தருகின்றன. அவை சாதீய அமைப்பு முறையை எவ்வித விலகலும் இல்லாத கட்டுக்கோப்பான நால் வருணங்களாக சித்தரிக்கின்றன. இதில் பிராமண சாதியினரின் உள்நோக்கம் உள்ளது. கீழ்சாதிகள் தங்களுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான், அதைக் கட்டுக்கோப்பான தெய்வீக முறையாக சித்தரித்தனர். இதில் அவர்களது மேலாதிக்க விருப்பம் அடங்கியிருந்தது.

ஆனால் காலப்போக்கில் இதுவே வரலாறாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையில் பழைய சமுதாயம் அப்படியே மிகவும் கட்டுக்கோப்பான சாதி முறையில் அடங்கி இருந்ததில்லை. பல விலகல்கள், விதிவிலக்குகள், எதிர்ப்புகள் எல்லாம் இருந்தன. சமூக இயக்கத்தில் ஸ்தல நிலைமைகளுக்கு ஏற்ப சாதி முறையில் மாறுபாடுகள் காலங்காலமாக இருந்து வந்துள்ளன.

இவ்வாறு சமஸ்கிருத நூல்களில் காணப்பட்ட விபரங்களை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சேர்த்த தகவல்களோடு பொருத்தி ஆராயும் தன்மை இல்லை. இதில் வரலாற்றாசிரியர்களுக்கே இருந்த பாரபட்சமான பார்வையும் ஒரு காரணம். ‘சமஸ்கிருத இலக்கியங்கள் மேன்மையானவை, அவைதான் உண்மை விளம்பிகள்’ எனும் பார்வையும், அடித்தட்டு ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம் வாய்வழியாக உலாவரும் கதைகள் நாடோடிப் பாடல்கள் இவையெல்லாம் கவனத்தில் கொள்ளத்தக்கதல்ல எனும் பார்வையும் இருந்தது. சமஸ்கிருத நூல்கள், நாடோடி இலக்கியங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, இதர அறிவியல் ஆதாரங்களோடு ஒப்பிட்டு வரலாற்று உண்மைகளை காணும் பார்வை மிகச் சமீப காலத்தில் தான் தோன்றியது. அதிலும் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் தான் இத்தகு சரியான பார்வை கொண்டவர்களாக இருந்தனர்.

இத்தகைய அணுகுமுறையை கையாண்டால்தான் வரலாறு அணுகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக இல்லாமல் வாழ்க்கைக்கு பயன்படும் துறையாகவும், சமூக முன்னேற்றத்திற்கான கருவியாகவும் பயன்படுத்திட முடியும்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபடும் அரசியல் ஊழியர் அல்லது ஒரு இயக்கத்தின் செயல் வீரர், ஒரு வரலாற்றுப் பிரச்சனையைப் பற்றி பேச வேண்டுமானால், அகழ்வாராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சி எல்லாம் செய்து விட்டுத்தான் பேச வேண்டுமா ? தேவையில்லை என்பதுதான் இதற்கான பதில். ஏற்கெனவே அறிவியல் முறைகளில் வந்தடைந்த வரலாற்று முடிவுகளை திறன் மிகுந்த, சிறந்த, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதனைக் கண்டறிந்து, கிரகித்து, இயக்க ஊழியர்கள் பயன்படுத்திட வேண்டும். இதையும் அவரால் செய்ய இயலவில்லையென்றால், வரலாற்று விவகாரங்களுக்குள் இறங்காமல், அமைதி காக்க வேண்டும். அத்துடன், கற்றுக்குட்டி வரலாற்றாசிரியர்கள் எழுதிய அரை வேக்காட்டு வரலாறுகளை படித்துப் பிரச்சாரம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

இதுவரை தமிழக இந்திய வரலாறுகளில் உள்ள தவறான போக்குகளை கண்டோம். இனி, எல்லா வரலாற்றுப் பிரச்சனை களுக்கும் அடிப்படையாக எவ்வித அணுகுமுறை தேவை என்பதை காண்போம். மார்க்சீய வரலாற்றுப் பொருள் முதல்வாதமே சிறந்த ஆய்வு முறையாகும்.

மார்க்சீய வரலாற்றுப் பார்வை

மார்க்சியத்தின் மீதான அவதூறுகளை முதலாளித்துவ மீடியா கூட்டம் இடைவிடாது செய்து வருகின்றது. உலகம் முழுவதும் பணக்காரக் கம்பெனிகளால் நடத்தப்படும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மார்க்சை பழித்தும், இழித்தும் கட்டுரை களையும், செய்திகளையும் பரப்பி வருகின்றன. மார்க்சியம் பொருத்தமற்றது; அது தோற்றுவிட்டது – என்ற கருத்துக்களை பரப்பும் புத்தகங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கின்றன.

இவையனைத்தும் எடுத்துக் காட்டுவது என்ன ? மார்க்ஸை யாராலும் மறைக்கவோ, மறக்கவோ முடியாது என்பதுதான். மார்க்சை மறுத்து பல லட்சம் கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிடப் படலாம். ஆனால் மார்க்சிய சிந்தனையின் தாக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் யாராலும் அழித்திட முடியாது. இதற்குக் காரணம், இன்றைய முதலாளித்துவ அமைப்பின் வரலாற்றையும் அதன் எதிர்கால திசைவழியையும் மார்க்ஸ் தனது தேர்ந்த ஆய்வு முறையால் கண்டுபிடித்தார் என்பது தான். சில ஆண்டுகளுக்கு முன்பு, பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் சிறந்த சிந்தனையாளர் வரிசையில் ஐன்ஸ்டான், நியூட்டன், டார்வின் இவர்களையெல்லாம் தாண்டி முதலிடத்திற்கு வந்து நின்றவர் காரல் மார்க்ஸ். ஆனால் பிபிசி நிறுவனத்திடமிருந்தோ இதர முதலாளித்துவ மீடியாக்களிடமிருந்தோ சர்டிபிகேட் தேடி அலையும் நிலையில் மார்க்சீயம் இல்லை. மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலும் கூட அவர் எந்த மேட்டுக்குடி சீமான்களிடமும் அங்கீகாரத்திற்காக அலைந்தது இல்லை. மார்க்சின் தனிச் சிறப்பு வாய்ந்த வரலாற்று ஆய்வு முறைதான், மேதைகளையும், பாமரர்களையும் அவர்பால் ஈர்த்தது.

சில மாதங்களுக்கு முன்பு இலண்டனிலிருந்து வெளிவரும் எகானமிஸ்ட் பத்திரிகையும், அமெரிக்காவிலிருந்து வரும ‘வெளியுறவுக் கொள்கை’ என்ற பத்திரிகையும், மார்க்சின் வரலாற்றுப் பார்வை பற்றி கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. மார்க்சின் வரலாற்றுப் பார்வையை கொச்சைப்படுத்தி இக்கட்டுரை களில் எழுதி இருந்தனர். இத்தகு அவதூறுக் கருத்துக்களை இலவசமாகப் பெற்று நமது நாட்டிலும் கூட மார்க்சீயத்தின் மீதான தரம் குறைந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மார்க்சை எதிர்த்து எழுதப்பட்ட மேற்கண்ட இரண்டு கட்டுரைகளிலும் கூட, மார்க்சின் கருத்துக்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை, தவிர்க்க முடியாமல் மிகவும் வெறுப்போடுதான் அவர்கள் அங்கீகரிக்கின்றனர்.

ஏனெனில், கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு முறைகள் அனைத்தையும் விட, மாபெரும் தாக்கத்தை செலுத்தி வருவது மார்க்சிய வரலாற்றியல் அணுகுமுறைதான்.

இயந்திரகதியில் பயன்படுத்தப்படும் மார்க்சியம்

மார்க்சிய ஆய்வு முறையை மிகவும் இயந்திர கதியில் பயன்படுத்தும் போக்கும் பரவலாக காணப்படுகிறது. சரியான மார்க்சீய அணுகுமுறையிலிருந்து இயந்திர கதியிலான மார்க்சீயத்தை

(ஏரடபயச ஆயசஒளைஅ) பிரித்து அடையாளம் காண வேண்டும்.

சமூக வளர்ச்சியின் போது பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களுக்கு மார்க்சியம் முக்கியத்துவம் கொடுக்கிறது. பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் சமூக வரலாற்றை நிர்ணயிக்கிறது என்பது மார்க்சீய அணுகுமுறை.

இதில் மார்க்சீயம் எனும் பெயரில் சிலர் வெறும் பொருளாதார அம்சங்களை ஆய்வு செய்துவிட்டு, மற்ற அம்சங்களை புறக்கணித்து விடுகின்றனர்.

உதாரணத்திற்கு, இன்றைய வகுப்புவாதம் பற்றி ஒரு மார்க்சிஸ்ட் ஆய்வு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் முதலில் இன்றைய வகுப்புவாதத்திற்கு அடிப்படையாக உள்ள இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை ஆராய்கிறார். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பொருளாதார வளர்ச்சி முறை மதவெறிப் போக்குகளுக்கு களமாக இருப்பதைக் காண்கின்றார். குறிப்பாக நிலப்பிரபுத்துவம் நீடிப்பது வகுப்புவாத போக்குகளுக்கு களமாக இருப்பதை காண்பார். இவையனைத்தும் சரியானதே. ஆனால் அந்த ஆய்வாளர் வகுப்புவாதத்திற்கான காரணம் பொருளாதார கொள்கைகளே என்று தனது ஆய்வை முடித்துக் கொள்வார் என்றால், இது தவறானது. இது மார்க்சீய அணுகுமுறை எனக் கூற இயலாது.

பொருளாதார அடித்தளத்தோடு, வகுப்புவாத வளர்ச்சிக்கான இதரக் காரணிகளையும் அவர் ஆராய வேண்டும். குறிப்பாக வகுப்புவாத சக்திகளின் ஸ்தாபனமயமான முன்முயற்சிகள், அவர்களது பிரச்சாரம், மக்களது உணர்வு நிலையில் ஏற்படுகிற மாற்றங்கள், உலகமயம் ஏற்படுத்தும் நுகர்வு கலாச்சாரம் போன்ற பல தொடர்புடைய அம்சங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. இவை அனைத்தும் பொருளாதார அம்சங்களோடு பின்னி பிணைந் துள்ளன. அவை அனைத்தையும் ஆராய்ந்து முடிவுகளுக்கு வருவதுதான் சரியான மார்க்சீய அணுகுமுறை.

அடிப்படை – மேல்கட்டுமானம்

மார்க்சின் ‘அடிப்படை – மேல்கட்டுமானம்’ என்ற கோட்பாடும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. சமூக இயக்கத்தின் அடிப்படை, பொருளாதாரம், அதற்கு மேலே அதைச் சார்ந்து இயங்குவதுதான், தத்துவம், அரசியல், மதம், பண்பாடு, சட்டம் அனைத்தும். இவை மேல்கட்டுமானம் எனப்படுகிறது. மேல்கட்டுமான அம்சங்கள் அனைத்தையும் நிர்ணயிப்பது பொருளாதாரம். ஆனால் பொருளாதார காரணியே சமூக வரலாற்றில் ஆதிக்கம் வகிக்கும் ஒரே காரணி என்ற தவறான அணுகுமுறையோடு மார்க்சியம் எனும் பெயரில் பலர் ஆய்வு செய்கின்றனர்.

மார்க்சும் ஏங்கெல்சும் தங்கள் காலத்திலேயே இப்படிச் செய்த பலரை விமர்சித்து ‘இது தவறுகளுக்கு இட்டுச் செல்லும்’ என எச்சரித்தனர். அவர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றாசிரியர்கள் லாப்ரியோலா போன்றவர்கள் இப்படி குட்டுப்பட்டவர்கள்தான்.

மேல்கட்டுமான அம்சங்கள் மக்களிடம் செலுத்தும் செல்வாக்கை நிராகரிக்க இயலாது. உதாரணமாக இன்றைய சூழலில் ‘சுதந்திர வர்த்தகம்’ என்பது சரியான கொள்கையாக வலியுறுத்தப்படுகிறது. சுதந்திரம் என்ற உயரிய கொள்கைக்கு இருக்கும் மதிப்பு மரியாதை உணர்வுகளை, பெரிய பணக்கார நாடுகள் தாங்கள் கொள்ளையடிக்க உதவும் சுதந்திர வர்த்தகத்தோடு இணைத்து பிரச்சாரம் செய்கின்றனர். இந்தக் கருத்து வலிமை உலகமயக் கொள்கைகள் நீடிப்பதற்கு உதவிடவில்லையா ? உலக அளவில் மீடியாவின் கருத்துப் பிரச்சாரம், கருத்துக்களை மக்களிடம் உருவாக்கும் சக்தி படைத்ததாக மாறியுள்ளதை கவனிக்கத் தவறுவது சரியாக இருக்குமா ?

எனவே மேல்கட்டுமான அம்சங்களின் தாக்கத்தையும் துல்லியமாக அறிந்திடல் வேண்டும். மார்க்ஸே கூறியது போன்று, இறுதியாக தீர்மானிப்பது உற்பத்தி முறைகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் ‘அடிப்படை – மேல்கட்டுமானம்’ என்ற மார்க்சின் கோட்பாடு வரலாற்றுத் துறையிலும், சமூக அறிவியல்களிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்திய ஒன்று. மார்க்சின் அரிய பங்களிப்பு என்று அனைவராலும் போற்றுகிற கருத்து இது.

இதைப் பற்றிப் புரிந்துகொள்ளும் போது, பலர் சமூகத்தை அஸ்திவாரம், மேல் அமைப்பு என்ற இரண்டு கூறுகளாக பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கருதுகின்றனர். இவர்களுக்கு மார்க்சீய வரலாற்று அறிஞர் எரிக் haாப்ஸ்வாம் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“மார்க்சின் சமூக மாடல் என்பது வேறுபட்ட பல ‘மட்டங்களை’ (டுநஎநடள) உள்ளடக்கியது. இவையனைத்தும் ஒன்றோடொன்று வினை புரியும் தன்மை கொண்டன.”

அதாவது, இரண்டு சரிநிகர் கூறுகளாக சமூகத்தை பிளவு படுத்திப் பார்க்காமல், பொருளாதாரம், அரசியல், தத்துவம், பண்பாடு, கலை, இலக்கியம் என்ற அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புள்ளதாகவும், ஒன்றோடொன்று வினையாற்றும் தன்மை கொண்டனவாகவும் பார்க்க வேண்டும். இவை வேறுபட்ட பல மட்டங்களில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பன என்பதை மறந்திடக் கூடாது.

வர்க்கப் போராட்டம்

இந்த தொடர்புகளும் வினையாற்றுதலும் தான் வர்க்கங்களுக்கு இடையேயான போராட்டமாக நீடிக்கிறது.

“இது வரை எழுதப்பட்ட எல்லா வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்ற மார்க்சின் நிர்ணயிப்பு பிரசித்தி பெற்றது. இது கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் வரி. ஆனால் இதையும் இயந்திர கதியில் புரிந்து கொண்டு, வரலாற்றை ஆராய முற்படுவோர் பலர்.

இதைப்பற்றி எரிக் haாப்ஸ்வாம் குறிப்பிடும்போது, மார்க்சிஸ்ட்டுகள் எனும் பெயரில் வரலாறு எழுதும் பலர் “கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதல் பக்கத்தை மட்டும் படித்து, அதற்கு மேல் படிக்காதவர்கள்” என்றார்.

வர்க்கங்களுக்கு இடையேயான போராட்டம், வெவ்வேறு வர்க்கங்களின் பலம், பலவீனங்கள் இவையனைத்தும் வரலாற்று ஆராய்ச்சிக்கு அவசியமானவை. இவை நிச்சயமாக வரலாற்றின் உந்து சக்திகளே. எனினும் மேலே குறிப்பிட்டவாறு ‘அடிப்படை – மேல்கட்டுமான’ வடிவத்தின் பின்னணியில் வர்க்கப் போராட்டங்கள் ஆராயப்பட வேண்டும். சித்தாந்தம், தத்துவம் பண்பாடு இந்த துறைகளிலும் வர்க்கப் போராட்டத்தின் தாக்கம் என்ன என்று ஆராய்ந்தால் தான் வரலாற்று ஓட்டத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

விதிகளும், மாற்றங்களும்

மார்க்சின் வரலாற்றுப் பார்வை, வரலாற்று பொருள்முதல் வாதம் ஆகும். இதனை பலர் “வரலாற்று விதிகள் அடிப்படையில் சமூக மாற்றங்கள் நடைபெறுகிறது. வரலாற்று மாற்றங்களின் போது குறிப்பிட்ட மாற்றங்கள் தவறாது நிகழ்ந்தே தீரும்” என்ற வகையில் புரிந்து கொள்கின்றனர்.

உண்மையில் வரலாற்று விதிகள் சமூக வளர்ச்சியை வழிநடத்து கின்றன என்பது உண்மையே. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி சமூகத்தில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னேற்றிச் செல்லுகிறது என்ற விதி சரியானதுதான். ஆனால், இது இதர சமூகக் காரணிகளின் துணையோடு நடைபெறுகிறது என்பதை காண தவறிடக் கூடாது.

மிகவும் பொதுவான விதிகள் வரலாற்று மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பது உண்மையே. ஆனால் இயந்திர கதியில் இவற்றை புரிந்து கொள்ளக் கூடாது. உதாரணமாக புராதன பொதுவுடைமை சமுதாயத்திற்கு அடுத்து நிலவுடைமை சமுதாயம், அதற்கடுத்து முதலாளித்துவ சமுதாயம் என அடுத்தடுத்து சூத்திரம் போல் நிகழும் மாற்றங்களாக புரிந்து கொள்ளக் கூடாது. இந்தியாவிலும், இதர சில நாடுகளிலும் முதலாளித்துவத்தோடு நிலப்பிரபுத்துவமும் அழியாமல் நீடித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாற்று விதி எனும் பெயரால் இவற்றை அணுகி மார்க்சியம் தவறு என்ற முடிவுக்கு வந்தோர் பலர். சமூகத்தில் மனிதர்களின் செயல்பாடுகள், அவர்களது சிந்தனைகள், வர்க்கங்களாக அவர்கள் திரண்டு நடத்தும் போராட்டங்கள் இவற்றுக்கெல்லாம் வரலாற்றில் பெரும் பாத்திரம் உள்ளது.

வரலாறு பின்னோக்கிச் செல்லாது என்ற கருத்தும் மார்க்சின் பெயரால் சொல்லப்படுகிறது. இது மார்க்சைப் பற்றிய தவறான புரிதல். மிகவும் பொதுவான வரலாற்று முன்னேற்றங்களையே மார்க்ஸ் குறிப்பிடுகிறார். முதலாளித்துவம் அழிந்து சோசலிசம் வரும் என்பது முதலாளித்துவ சமூக முரண்பாடுகளை ஆய்வு செய்து அவர் வந்தடைந்த கருத்து. ஆனால் இடையிடையே பின்னடைவுகள் பல்வேறு காரணங்களால் ஏற்படும் என்பது சரியாக உணரப்படவேண்டும். . சோவியத் சோசலிசத்திற்கு ஏற்பட்ட சரிவு இந்த வகையில்தான் என்பதை மறந்திடக் கூடாது.

மனித உறவுகள்

மார்க்ஸ் வரலாற்றைப் பற்றி ஆராயும்போது முக்கியமாக, மனிதர்களுக்கு இடையே ஏற்படும் உறவுகளையே பிரதானமாக அவர் காண்கிறார். இதனை எரிக் haாப்ஸ்வாம் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“மனிதர்களுக்கு இடையேயான உறவுகளை உள்ளடக்கி இயங்கும் அமைப்புதான் மனித சமூகங்கள்” என்பதே மார்க்சின் பார்வை. இவ்வாறு இயங்கும் சமூக உறவுகளில் எது அடிப்படை யானது ? மார்க்சின் கருத்து என்ன என்பதை எரிக் கூறுகிறார்.

“… இந்த மனித உறவுகளில், உற்பத்திக்காகவும், மறு உற்பத்திக் காகவும் மனிதன் ஏற்படுத்திக் கொள்கிற உறவுகள் தான் பிரதானமானதாக மார்க்ஸ் கருதினார்”

இந்த உறவுகளின் அடிப்படையிலான சமூக உறவுகளோடுதான், இயற்கை உள்ளிட்ட வெளிப்புற சூழல்கள் வினை புரிந்து தாக்கம் ஏற்படுத்துகின்றன. எனவே, வரலாற்றை ஆராயும் போது, மனிதச் சமூகங்களுக்கு உள்ளே, வெளியே உள்ள உறவுகள் அனைத்தையும் ஆராய வேண்டும்.

இரண்டு தனித்தன்மைகள்

பல சிந்தனையாளர்களின் வரலாற்றுப் பார்வைகளிலிருந்து மார்க்சின் பார்வை எந்த வகையில் வேறுபட்டது ? இரண்டு வகைகளில் வேறுபட்டதாக எரிக் haாப்ஸ்வாம் கருதுகிறார்.

1. சமூக நிகழ்வுகளை பல்வேறு ‘மட்டங்களாக’ (டுநஎநடள) அல்லது அடுக்குகளாக மார்க்ஸ் காண்கிறார். (முன்பு குறிப்பிட்ட, அடிப்படை – மேல்கட்டுமானம்).

2. எந்த சமூகத்திலும், அதற்கு உள்ளே பல முரண்பாடுகள் இருப்பதைக் காண்பது மார்க்சின் அணுகுமுறை. இந்த முரண்பாடுகள் எப்போதும் அந்த சமூகத்தின் ஸ்திரத் தன்மையை அச்சுறுத்திக் கொண்டே இருக்கும். இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும்.

உதாரணமாக, இன்றைக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு சிதைவு அடையவில்லை என்றாலும், அவ்வப்போது நெருக்கடி, கவலை, பயம், பீதி ஆகியவற்றுக்கு ஆளாகி தத்தளிப்பதைக் காண்கிறோம். உடனடியாக சோசலிச மாற்றத்துக்கு செல்லவில்லை என்றாலும், இந்தன்மைகள் இருப்பதை காண முடிகிறது. இதற்குக் காரணம் அதற்குள் இயங்கும் முரண்பாடுகளே. எனவே வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ள முரண்பாடுகளை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

காஸ்ட்ரோவின் அறிவுரை

மார்க்சின் வரலாறு பற்றிய பார்வை சுரண்டல் சமூகத்தை மாற்றும் நோக்கம் கொண்டது. சமூக மாற்றத்திற்காக போராடுவோர் அனைவரும் இந்த மார்க்சீய ஆய்வு முறையில் தேர்ச்சி பெறுதல் வேண்டும். இந்த மார்க்சீய ஆய்வு முறையை கொண்டு, ஏற்கனவே பல சிறந்த வரலாற்று அறிஞர்கள் ஆய்ந்து கண்டறிந்த முடிவுகளை படித்துத் தெளிதல் வேண்டும்.

மார்க்சிஸ்ட்டுகள் தனிப்பட்ட முறையில் இவற்றை தெரிந்து தெளிவு பெறுதல் எதற்காக ? மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே;. மக்களைத் திரட்டி சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே. மார்க்சிஸ்ட்டுகள் இதைச் செய்யவில்லை எனில், அரைவேக்காட்டு, வரலாற்றுக் கருத்துக்கள், மதவெறி, சாதி வெறியைத் தூண்டும் வரலாறுகள் அனைத்தும் உலா வரும். மக்கள் இயக்கங்கள் திசை மாறிச் சென்றிடும்.

எனவே, அறிவியல்பூர்வமாக வந்தடைந்த வரலாற்று முடிவுகளை மார்க்சிஸ்ட்டுகள் எவ்வித தயக்கமின்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதர தவறான வரலாற்றுக் கருத்துக்களுக்கு எதிராக சரியான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இதை எவ்வாறு செய்வது ? பிடல் காஸ்ட்ரோ தனது சமீபத்திய உரையில் குறிப்பிடுகிறார்.

“நாம் நேரிடையாக மக்களிடம் சென்று பணியாற்ற வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அரசியல் கூட்டங்கள், மாநாடுகள், பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக நிகழ்த்தப்படும் உரைகள் போன்றவற்றை விட மேலான ஒரு உன்னத பணியை நாம் செய்திட வேண்டும்.”

“ஒருவருக்கு ஒருவர் என்ற வகையில் மனிதர்களை நேரில் சந்தித்து உரையாற்றி, விவாதித்து, கருத்துக்களைச் சொல்லி இணக்கத்துக்கு கொண்டு வரவும், செயலுக்கு தூண்டவும் செய்திட வேண்டும். இதுவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இருக்கும்.”

இதற்கு ஆதாரமாக மற்றொரு அற்புதக் கருத்தையும் சுட்டிக்காட்டுகிறார் காஸ்ட்ரோ.

“மதங்கள் இப்படித்தான் உருவாக்கப்பட்டன. அதனால் தான் அவை பல ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கின்றன.”

மார்க்சிஸ்ட்டுகள் ஒவ்வொருவரும் உண்மை வரலாற்றை பரப்பிடும் கடமையை ஆற்றிட காஸ்ட்ரோவின் இந்த அரிய வழிகாட்டுதல் உதவிடும்.

ஆதார நூல்கள்

“வரலாறு குறித்து” – எரிக் ஹாப்ஸ்வாம்

“துவக்ககால இந்தியா” – ரோமிலா தாப்பார்

(மார்க்ஸிஸ்ட் இதழில் வெளிவந்தது)

ksperumal@gmail.com (மூலமாகப் பெறப்பட்டது)

Series Navigation

என். குணசேகரன்

என். குணசேகரன்