நீங்களுமா கலைஞரே ?

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

தியாகு


சங்கரராமன் கொலை வழக்கில் முதல் எதிரியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரைக் காப்பாற்றப் பல முனைகளிலும் முயற்சி நடைபெறுகிறது.

துறவிகள் எப்போதும் பூசை செய்து கொண்டே இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. தீபாவளி நாள் இரவில் மகபூப் நகரில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யச் சென்ற போது கூட ஜெயேந்திரர் ‘திரிகால பூஜை ‘ செய்து கொண்டிருந்தாராம். இது பழைய செய்தி. இல்லை இல்லை, ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான செல்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார் என்பது புதிய செய்தி.

வெளியில் எப்படியோ, சிறையில் ஜெயேந்திரர் முறையாக மூன்று வேளையும் பூஜைகள் செய்கிறாராம். அதற்கான வசதிகளையெல்லாம் சிறை நிர்வாகம் செய்து கொடுத்திருக்கிறது. மூன்று நாள் காவல்துறைப் பொறுப்பில் இருந்த போதும் பூசைகள் நிற்கவில்லை. சிறையில் தன்னைக் காண வருகிறவர்களிடமெல்லாம் ‘பூசை பண்ணுங்கோ, கடவுளை வேண்டிக்குங்கோ ‘ என்று ஜெயேந்திரர் சொல்லத் தவறுவதில்லை.

இத்தனை நாட்களில் ஒரே ஒரு முறை வாய் திறந்து பேசிய விஜயேந்திரரும் ‘பூஜை பண்ணுங்கோ ‘ என்றுதான் அறிவுறுத்தினார். இந்தியாவெங்கும் பல கோயில்களில் ஜெயேந்திரருக்காக வேண்டிய வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. ஜெயேந்திரரைக் காப்பாற்ற அவரும் மற்றவர்களும் செய்யும் இறைவழிபாடுகள் போதும் என்று அவர்களே நினைக்கவில்லை. வேறு முயற்சிகளும் நடைபெறுகின்றன.

சட்டத்தின் பிடியிலிருந்து விடுபட ஜெயேந்திரர் சட்டத்தின் துணையை நாடுவதைக் குற்றஞ் சொல்வதற்கில்லை. ஆனால் பெரிய பெரிய வழக்கறிஞர்களை அமர்த்தி நீதிமன்றங்களில் போராடிய போதும் இதுவரை ஜெயேந்திரருக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் அவரை 3 நாள் காவல்துறையின் பொறுப்பில் புலனாய்வுக்காக ஒப்படைத்தது. இதைத் தடுக்க ஜெயேந்திரர் தரப்பில் செய்த முயற்சிகள் யாவும் தோற்றன. உயர் நீதிமன்றமும் ஜெயேந்திரரைக் காவல்துறையின் பொறுப்பில் ஒப்படைத்தது சரிதான் என்று சொல்லி விட்டது. காவல்துறைக் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்க நடுவர் மறுத்தது ஜெயேந்திரருக்குக் கிடைத்த ஆறுதல் வெற்றி எனலாம்.

ஜெயேந்திரருக்குப் பிணை விடுதலை தர உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ராம் ஜெத்மலானியே தில்லியிலிருந்து பறந்து வந்து வாதிட்டும் பயனில்லை. பிணை விடுதலை தர மறுக்கும் தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ள கருத்துக்கள் முக்கியமானவை: ‘ஜெயேந்திரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது ‘ என்று அவர் சொல்லியிருக்கிறார். ‘ஜெயேந்திரர் மேல் இருக்கக் கூடிய பக்தியையும் அதனால் வரும் உணர்ச்சியையும் ஒதுக்கி வைத்து விட்டு, விருப்பு வெறுப்பின்றி சட்ட விதிகளின்படி அணுகிப் பார்த்தால் ஜெயேந்திரரை வெளியே விடுவது வழக்கின் புலனாய்வுக்குக் கேடு செய்யும் ‘ என்றும் நீதிபதி சுட்டுகிறார். இது முதலமைச்சர் ஜெயலலிதாவோ காவல்துறை அதிகாரியோ கூறியதல்ல, இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி கூறிய கருத்து!

ஜெயேந்திரர் உச்ச நீதிமன்றத்தையே அணுகினாலும் இந்தக் கட்டத்தில் அவருக்குப் பிணை விடுதலை கிடைக்காது என்பதுதான் சட்ட அறிஞர்களின் கருத்து. மையப் புலனாய்வுப் பிரிவிடம் (சி.பி.ஐ.) வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் மறுதலித்துள்ளது, நன்று.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எதிரிகளில் ஒருவரான கதிரவன் முன்பு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு, இப்போது காவல்துறை அடித்து உதைத்ததால் அப்படிச் சொன்னேன் என்று கூறியிருப்பதும், மற்றொரு எதிரி காவல்துறை தன்னை அடித்தததாகக் கூறியிருப்பதும், ஜெயேந்திரர் தரப்புக்கு வாய்ப்புத் தந்துள்ள போதிலும், இந்தத் ‘திருப்ப ‘ங்களால் வழக்கின் போக்கிலோ முடிவிலோ பெரிய மாற்றம் வந்து விடாது. ‘கதிரவனே சொல்லி விட்டார், சின்னாவே சொல்லி விட்டார், சுவாமிகள் மீது பொய் வழக்குதான் போட்டுள்ளனர் ‘ என்று ஜெயேந்திரரின் வழக்குரைஞர் துள்ளிக் குதிப்பதைப் பார்க்க வேடிக்கையாகவும் பரிதாபமாகவும் உள்ளது. நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்குச் சிறு துரும்பு கிடைத்தாலும் மகிழத்தானே செய்வான்!

வழிபாடு செய்வதோடும் வழக்காடுவதோடும் அவர்கள் நின்று விடவில்லை. அரசியல் களத்தில் எல்லா வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயேந்திரரைக் காப்பாற்றுவது மட்டுமல்ல அவர்களின் நோக்கம். அவர் பேரைச் சொல்லி அரசியலும் செய்யப் பார்க்கிறார்கள். நீதியின் வழக்கை வீதியில் அரசியலாக்கும் இந்த முயற்சியில் பாஜக, ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி யாவும் ஈடுபட்டுள்ளன.

‘ஜெயேந்திரரைச் சிறையில் அடைப்பதா ? என்னால் கனவிலும் இதை எண்ணிப் பார்க்க முடியவில்லை ‘ என்கிறார் அத்வானி. ஒரு துறவி தன் குறைகளைச் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதியவரை ஆள் வைத்துக் கொலை செய்வதை அத்வானியால் கனவில் எண்ணிப் பார்க்க முடியுமா ? தெரியவில்லை.

முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால் போன்றவர்கள் நிதானமிழந்து பேசுகிறார்கள். வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதையே இவர்களின் பேச்சுக்கள் காட்டுகின்றன.

ஜெயேந்திரரைக் காப்பாற்றும் முயற்சியில் காவிக் கூட்டத்தின் கோபம் இப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை நோக்கித் திரும்பியுள்ளது. ஜெயேந்திரர் ஜெயலலிதாவின் அகங்காரம் பற்றிப் பேசியதால்தான் இந்த நடவடிக்கை என்று முரளி மனோகர் ஜோஷி குற்றஞ்சாட்டுகிறார். இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே சங்கரராமனைக் கொலை செய்ய ஜெயலலிதா ஏற்பாடு செய்தாரா ? ஜோஷிதான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஜெயேந்திரர் கைது போல் மக்களுக்கு மகிழ்ச்சியளித்த செய்தி அண்மைக் காலத்தில் வேறொன்றுமில்லை. ஒரு சிறு கும்பல் மட்டுமே இந்நடவடிக்கையை எதிர்க்கிறது. ஜெயலலிதாவே இந்நடவடிக்கைக்கு இசைவளித்து விட்டார் என்பதால் நடுநிலையாளர்கள் யாரும் இதற்கு உள்நோக்கம் கற்பிக்க முற்படவில்லை. பாஜக ஒன்றைத் தவிர எல்லா அரசியல் கட்சிகளும் இதை ஆதரித்தன. திமுக தலைவர் கருணாநிதியே கூட காவல்துறையின் நேர்மையைப் பாராட்டுவதாகச் சொன்னார்.

ஜெயேந்திரர் கைதுக்கு விளக்கமளிக்கும் போது முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிக்கையையே கருணாநிதி எடுத்துக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்றிலாவது ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றாக நிற்கிறார்களே என்று தமிழ் மக்கள், குறிப்பாகச் சமூகநீதி போற்றுவோர் மகிழ்ந்தார்கள்.

கருணாநிதி இப்போது திடாரென்று ஜெயேந்திரர் கைது பற்றி வேறு விதமாகப் பேச ஆரம்பித்துள்ளார். ‘ஜெயலலிதாவுக்கும் ஜெயேந்திரருக்கும் ஏதோ சொந்த விவகாரம் ‘ என்கிறார். ‘ஜெயேந்திரரைக் கைது செய்வதில் இரண்டு மாதக் காலத் தாமதம் ஏன் ? ‘ என்கிறார். ‘இடையில் என்ன நடந்தது ? ‘ என்று கேட்கிறார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் ‘ஜெயேந்திரரை நடத்திய முறை சரியில்லை ‘ என்கிறார்.

‘கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சொந்த விவகாரம் ? ‘ என்றும் ‘ஜெயேந்திரர் கைதுக்குப் பின்னால் வேறு காரணம் இருப்பதாகக் கருணாநிதி கண்டுபிடிக்க இத்தனை நாள் தாமதம் ஏன் ? ‘ என்றும் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். ‘இந்த வழக்கு குறித்துக் கருணாநிதி இப்படிப் பேசியது சரியல்ல ‘ என்கிறார்கள்.

ஜெயேந்திரர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா இசைவளித்ததற்கு அல்லது ஆணையிட்டதற்கு உள்நோக்கம் உண்டா ? இல்லையா ? என்பதல்ல கேள்வி. உள்நோக்கம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் நடவடிக்கை எப்படித் தவறாகும் ? எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் அரசின் சரியான நடவடிக்கையை முதலில் பாராட்டி விட்டு, பிறகு உருப்படியான காரணம் எதுவுமே இல்லாமல், ‘கேள்விப்பட்டேன், தெரிய வந்தது ‘ என்றெல்லாம் கிசுகிசு அரசியல் செய்வதும், மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணுவதும் சரியல்ல. வலையில் சிக்கியிருப்பது திமிங்கிலம். எல்லோரும் சேர்ந்து இழுத்தால்தான் கரை வந்து சேரும். படகில் இருந்து கொண்டே வலையை அறுத்து விடும் வேலை – கருணாநிதிக்கு அழகல்ல.

வர்ணாசிரமத்துக்கும் மனுதர்மத்துக்கும் ஆபத்து வந்து விட்டதாக நினைக்கும் அத்வானி-தொகாடியா-இராம. கோபாலன் கூட்டம் மக்களைக் குழப்ப என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். ‘இதே வேலையை நீங்களுமா செய்ய வேண்டும் கலைஞரே! ‘ என்றுதான் கருணாநிதியை நேசிப்பவர்களும் கூட கேட்பார்கள். இந்த ஒன்றிலாவது அவர் குறுக்குசால் ஓட்டாமலிருப்பதே தமிழ்நாட்டுக்கு நல்லது.

—-

(ஆசிரியரின் அனுமதியுடன் நா திருப்பதிசாமி அனுப்பியது)

Series Navigation

தியாகு

தியாகு