உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

அசுரன்


இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற போபால் யூனியன் கார்பைடு விபத்தையும் அதன் விளைவாக அநியாயமாக கொல்லப்பட்ட பல்லாயிரம் உயிர்களையும் இன்றுவரையிலும் அந்த நச்சோடு அல்லாடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மக்களையும் மறக்க முடியுமா நம்மால் ?.

இன்று வரையிலும் போபாலின் நச்சு மாசு அகற்றப்படவில்லை, மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை, அக்கொடுமைக்குக் காரணமான, தேடப்படும் குற்றவாளியான யூனியன் கார்பைடு தலைவன் ஆண்டர்சன் அமெரிக்காவிலே சொகுசு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறான்.

நடந்த கொடுமைக்குத்தான் நம்மால் சரியாகத் தீர்வு காணப்படவில்லை என்றாலும், இனிமேலாவது அத்தகைய கொடுமைகள் நடைபெறாமல் தடுக்கவாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டாமா ?. ஆனால், இத்தகைய நமது ஆசைகளையெல்லாம் நிராசையாகும் நிகழ்வுகளே நமது நாட்டில் அதிகம் தென்படுகின்றன. அதிலும் அண்மையில் கேரளாவில் எல்லூர் என்ற இடத்தில் உள்ள இந்துஸ்தான் இன்செக்டிசைடு லிமிட்டட் என்ற பூச்சிக்கொல்லி நச்சு தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து இந்த நச்சு நிறுவனங்களின் பொறுப்பற்றத்தனத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகியுள்ளது. கடந்த சூலை 6 ஆம் நாள் நடைபெற்ற இந்த விபத்து குறித்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தணல் மற்றும் டெல்லியைச் சேர்ந்த அதர் மீடியா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் அடங்கிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

பெரியாறும் அதிலிருந்து பிரிந்த நீரோடைகளும் சுற்றிலும் ஓட, தீவாக அமைந்திருக்கும் எல்லூரில் உத்தியோக்மண்டல் என்ற பெயரில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் 12க்கும் மேற்பட்டவை இந்துஸ்தான் இன்செக்டிசைடு போன்ற பெரிய தொழிற்சாலைகளாகும். இந்துஸ்தான் இன்செக்டிசைடு தொழிற்சாலையில் என்டோசல்பான், டைகோபால், மன்கோசெப் மற்றும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள டி.டி.ற்றி. ஆகிய பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் டி.டி.ற்றி. தயாரிக்கும் ஒரே நிறுவனம் இதுமட்டுமே. இத்தகைய ஆபத்தான நச்சுக்களைத் தயாரிக்கும் இத்தொழிற்சாலையில் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்றால் இல்லை என்பதே அதிர்ச்சியான உண்மையாகும்.

1999ஆம் ஆண்டே கிரீன் பீஸ் அமைப்பானது எல்லூரில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தியது. அப்போது சுற்றிலுமுள்ள காயல்களில் 111 வேதிபொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 37 ஆர்கனோகுளோரின் வகை நச்சுகளாகும். பல ஹைட்ரோகார்பன்களாகும். இவை பெரியாறிலும் கலந்து அதையும் மாசுபடுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. டி.டி.ற்றி. போன்ற நீண்ட ஆயுள் உடைய பூச்சிக்கொல்லிகள் உணவுச்சங்கிலி மூலம் மனிதருக்கும் பரவி பேராபத்து விளைவித்து வருபவையாகும்.

மேலும், பாதரசம், தாமிரம், துத்தநாகம், காரீயம், குரோமியம், காட்மியம் போன்ற கன உலோகங்களும் காணப்பட்டன. இவை அருகிலுள்ள ஃபேக்ட் (FACT) உர நிறுவனத்திலிருந்து வந்து கலந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக கிரீன்பீஸ் வெளியிட்ட எச்சரிக்கைகளை யாரும் பொருட்படுத்தவில்லை. 2002 ஆம் ஆண்டு மீண்டும் இங்கே கிரீன்பீஸ் மாதிரிகள் எடுத்து இங்கிலாந்தின் எக்ஸ்சிடர் பல்கலைக்கழக ஆய்வகத்தில் நடத்திய ஆய்வில் நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருப்பது வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்தான் இக்கொடிய, அரசு நிறுவனத்தின் பொறுப்பற்றத்தனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சூலை 6 விபத்து நடந்தேறியுள்ளது.

என்டோசல்பான் தயாரிப்பு உலை அமைந்திருந்த 5 மாடி கட்டிடத்தில் சூலை 6 நள்ளிரவு 2.30 அளவில் ஏற்பட்ட தீயால் அடர்ந்த நச்சுப் புகை மண்டலம் அவ்வட்டாரம் எங்கிலும் பரவியது. இதுவரைக்காலமும் இல்லாதவகையில் தொண்டைக்கமறலும், நெஞ்சு எரிச்சலும் இன்னபிற நச்சு அறிகுறிகளும் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டன.

ஆனால் தொடர்புடைய எந்தத்துறையும் எவ்வித பாதுகாப்பு/ மீட்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“2.30 மணிக்கு எல்லூரைச் சேர்ந்த புருசன் என்பவர் தொலைபேசியில் பேசினார். தீ பற்றி எரிவதாகவும், ஆற்றைக் கடக்க இயலாமல் பெருமளவு மக்கள் படகுத்துறையில் அல்லாடுவதாகவும், தாங்கள் என்ன செய்வது ? என்றும் அவர் கேட்டார்” என்கிறது தணல் அறிக்கை. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க தொழிற்சாலை அதிகாரிகளுக்கே தெரியவில்லை என்பதுதான் வேதனை. மீட்பு நடவடிக்கைகள் பற்றியெல்லாம் மாவட்ட ஆட்சியருக்குத்தான் தெரியும் என்கிறார் தொழிற்சாலை உயர் அதிகாரி. மேலும் வலியுறுத்திக் கேட்டால் இவை பற்றியெல்லாம் இணையதளத்தில் தெளிவாக எடுத்துரைத்திருப்பதாகக் கூறுகிறார்.

அந்த தொழிற்சாலைகளில் என்னென்ன தயாரிக்கப்படுகிறது ?, விபத்து ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி ?, தப்பிக்க வசதியாக பெரியாற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டித்தாருங்கள் என்று அப்பகுதி மக்கள் கேட்டதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டன.

சூலை 8 ஆம் தேதி உண்மை அறியும் குழுவினர் தொழிற்சாலையை சுற்றிப்பார்த்த போதுதான் அதன் அலங்கோலம் முழுமையாக வெளிப்பட்டது. தொழிற்சாலை பராமரிப்பு என்பது எள்ளவும் இல்லை. கழிவு நீற்றுலையானது மிகத்தரங்கெட்டது, இதற்கான எரிபொருளும் அதற்கு அருகிலேயே திறந்தவெளித் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது. கழிவுகளும் கூரைகளற்ற அறைகளிலேயே கொட்டி வைக்கப்பட்டிருந்தன. காலியான வேதி கலன்கள் அங்கங்கே சிதறிக்கிடந்தன.

சரி, எப்படித்தான் தீ பிடித்தது ?.

என்டோசல்பான் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் டொலுயின் பயன்படுத்தப்படுகிறது. நள்ளிரவு 2 மணிக்கு அதில் கசிவு ஏற்பட்டதைத் தொழிலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், உடனடியாகவே அதில் தீப்பற்றிவிட்டது. உடனே அவர்கள் அனைவரும் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர். இதில் நமக்கு ஏற்படும் சந்தேகம், உடனடியாக அப்பகுதிக்கு டொலுயீன் செல்வது ஏன் நிறுத்தப்படவில்லை ?, பயிற்சி பெற்ற தீயணைப்பாள˜கள் ஏன் இல்லை ?, இத்தனை பெரிய தொழிற்சாலையில் ஏன் தீயணைப்பு எந்திரம் இல்லை ?.

அதுமட்டுமல்ல, அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஏன் எந்த தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்ணும்கூட இல்லை ?, எச்சரிக்கை மணியொலி ஏன் விட்டு விட்டு ஒலித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது ?.

ஃபேக்ட் நிறுவனத்திலிருந்து தீயணைக்கச் சென்ற வர்க்கீஸ் கூறுகிறார், “அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. தீயணைக்க தண்ணீர் எடுப்பதற்கு மோட்டார் வேலை செய்யவில்லை. நாங்கள் 3 முறை எங்கள் தொழிற்சாலைக்குச் சென்றுதான் தண்ணீர் எடுத்துவந்தோம்”.

பத்திரிகை அறிக்கையில் 2.45 மணிக்கு இரண்டாவது தளத்தில் தீப்பற்றியதாக நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அப்பகுதி மக்களோ 2 மணி முதலே சத்தம் கேட்டதாகக் கூறுகிறார்கள். எல்லூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகீமும் 2.44 மணிக்கு தான் வந்தபோது 5வது மாடி எரிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கிறார்.

சுமார் 200பேர் காலை 3 மணிக்கும் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றுவிட்ட நிலையில், தாம் என்ன செய்வது ?, எப்படி தப்பிப்பது என்று கேட்டு தொழிற்சாலை வாயிலில் வந்து நின்ற மக்களுக்கு நிர்வாகம் சொன்ன பதில் என்ன தெரியுமா ?,

“நாங்க எல்லாம் தீய அணைக்கறதுல ரொம்ப பிசியா இருக்கறோம். இப்ப உங்கக்கிட்ட பேச நேரமில்ல.”

“நாங்க சாதாரணமா தீயணைக்கறது மாதிரிதான் இந்தத் தீயையும் அணச்சோம். முகத்துக்கு சாதாரணமா கர்சீப்பத்தான் கட்டியிருந்தோம். அடுத்தநாள் காலைலதான் அது சாதாரண இடமில்ல; நச்சு வேதிகள் உள்ள இடம்ணு தெரிஞ்சிது. நாங்க ஆபத்தில்லாம தப்பிச்சது நல்லகாலம்” என்கிறார் வர்க்கீஸ்.

உண்மை அறியும் குழுவைச் சேர்ந்தவர்கள் சென்றபோதுகூட அனைவருக்கும் வெறும் தலைக்கவசம் மட்டும்தான் வழங்கப்பட்டது. அப்போதுகூட நச்சுப்புகை எழுந்துகொண்டுதான் இருந்தது. உண்மை அறியும் குழுவில் சென்றவர்களுக்குக்கூட தொண்டை புகைச்சல், தலைவலி போன்ற உடனடி நச்சுப் பாதிப்புகள் ஏற்பட்டன.

ஆனால், முதலில் மக்களிடம் சில ரப்பர் விரிப்புகள்தான் எரிகின்றன என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அதன் பின்னர்தான் டொலுயின் எரிகிறது என்றும், ஆனால், அதிலிருந்து கரியமில வாயுவும் நீராவியும் மட்டும்தான் வெளிப்படும் என்றும் அதனால் பாதிப்பில்லை என்றும் சொன்னார்களாம்.

இதையெல்லாம்விட மோசமாக, இதனால் ஒரு சிறுமிக்கு மட்டுமே சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால், உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சுகன்யா அப்பகுதி மக்களைச் சந்தித்தபோது அனைவருமே இதுவரையிலும் இல்லாதவகையில் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், நெஞ்சு பாரம், வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மொத்தத்தில் போபாலைப் போன்றதொரு பெரும் விபத்து எல்லூர் பகுதியில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும், ஆனால், அதனை எதிர்கொள்ளும்வகையில் மாவட்ட நிர்வாகமோ, தொழிற்சாலை நிர்வாகமோ இல்லை என்பதையும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது இந்நிகழ்வு. உயிர்களை அலட்சியப்படுத்தும் இந்த நச்சுத் தொழிற்சாலைகளை என்ன செய்யலாம் ?.

மின்னஞ்சல்: asuran98@rediffmail.com

Series Navigation

அசுரன்

அசுரன்