காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

தியாகு


வெளிச்சம் விடுதலைக்கு வழிகாட்டும் என்பதாலேயே உலகெங்கும் ஆதிக்கச் சக்திகள் இருட்டை நேசிக்கின்றன. இருட்டில் நடைபெறும் திருட்டுக்களிலேயே பெரியது உண்மைத் திருட்டு. எல்லா வகை ஆதிக்கங்களும் வரலாற்றைத் திரித்துப் புரட்டிப் பொய்மையின் பீடத்தில் வசதியாக உட்கார்ந்து கொள்கின்றன.

கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுக் காஞ்சி சங்கர மடத்தின் அதிபதி ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் வேலூர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்க, நாளொரு கொடுமையும் பொழுதொரு கேடுமாய் அவரைப் பற்றிய புதுப்புதுச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமிருக்க, அவரை இன்னமும் நம்புகிற அல்லது நம்புவது போல் நடிக்கிற ஒரு கூட்டத்தார் ‘எல்லாம் பொய், எல்லாம் சதி ‘ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கூச்சலுக்கு எந்தச் சான்றும் காட்ட முடியாத நிலையில், மடத்தின் அருமை பெருமைகளைச் சொல்லி மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முற்படுகின்றனர்.

ஈராயிரம் ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பதும், ஆதிசங்கரர் நிறுவியது என்பதும் இணக்கப்படுத்த முடியாத கால முரண்பாட்டைக் கொண்டிருந்தாலும், அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஈராயிரம் ஆண்டுப் பழமை என்பதும் பொய், ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று என்பதும் பொய். அது மட்டுமல்ல, இந்த மடத்தைக் ‘காஞ்சி காமகோடி பீடம் ‘ என்கிறார்களே, அதுவும் கூட சரியல்ல என்பதைத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எடுத்துக்காட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மடம் என்பது இருபதாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்ற பெயரால் நிறுவப்பட்ட போலி மடம்தான் என்பதை சிருங்கேரி மடத்தின் பக்தர்கள் புத்தகம் போட்டு மெய்ப்பித்துள்ளார்கள். இதற்குக் காஞ்சி மடத்தின் விடை என்ன ?

தஞ்சாவூர் சரபோஜி மகாராஜாவிடம் அமைச்சர் பதவி வகித்த ஒருவர் 1719இல் காஞ்சி மடத்து வரலாற்றை எழுதினாராம். அந்த வரலாற்றில் காஞ்சி மடம் ஆதிசங்கரரால் கிறிஸ்துவுக்கு முன்பே நிறுவப்பட்டதாகக் குறிப்புள்ளதாம். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், 1719இல் வரலாற்றுப் புத்தகம் எழுதியதாகச் சொல்லப்பட்டவர் 1586ஆம் ஆண்டே ‘முக்தி ‘ அடைந்து விட்டார் என்பதுதான். இந்த முரண்பாட்டையும் சிருங்கேரி பக்தர்கள் அம்பலப்படுத்தி விட்டார்கள்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி இந்த முரண்பாட்டுக்குச் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா ?

‘இவர் மகா சித்த புருஷராய் இருந்தபடியால் ஏன் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்க முடியாது ? ‘

‘அப்படிப் போடு அரிவாளை! ‘ என்று சொல்லத் தோன்றுகிறதா ? சொல்லி விடாதீர்கள், நேரம் சரியில்லை!

காஞ்சி மடம் உண்மையான சங்கர மடமும் இல்லை, காஞ்சி மடாதிபதிகள் ‘ஜகத்குரு ‘ பட்டத்துக்குத் தகுதியானவர்களும் இல்லை. இப்படியே இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் காஞ்சி மடம் என்பதும் கூட சரியில்லை எனத் தோன்றுகிறது. சிருங்கேரி பக்தர்களின் புத்தகத்தில் ‘மடத்தின் இருப்பிடம் காஞ்சியா ? கும்பகோணமா ? ‘ என்ற தலைப்பில் ஓர் அத்தியாயமே உள்ளது. மகாப் பெரியவரின் உடன்பிறப்பாகிய சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் எழுதிய ‘ஜெகத்குரு திவ்ய சரித்திரம் ‘ என்ற நூல் 1957இல் வெளியிடப்பட்டது. இந்நூலிலிருந்தே சிருங்கேரி பக்தர்கள் சான்று காட்டுகிறார்கள்.

அந்தச் சான்று என்னவென்றால், ‘சீனியர் ‘ சுவாமிகள் 1919ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சிவராத்திரி-அமாவாசை அன்று கும்பகோணத்திலிருந்து இருபத்தோராண்டு இடைவிடாத யாத்திரைக்காகப் புறப்பட்டாராம். 1921ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகம் நடைபெற ‘சீனியர் ‘ சங்கராச்சாரி சுவாமிகள் மகாமகத்துக்காகக் கும்பகோணத்துக்கு வந்தவர் அங்குள்ள தமது மடத்துக்குச் சென்று தங்க மறுத்து விட்டாராம். மகாமகக் குளத்தின் தென்கரையிலுள்ள மண்டபத்தில் தங்கி, குளத்தில் குளித்தாராம்.

கும்பகோணத்தில் தமது மடத்தில் தங்க மறுத்ததற்கு ‘சீனியர் ‘ சுவாமிகள் தந்த விளக்கம் என்ன தெரியுமா ? கும்பகோணம் மடத்திற்குள் நுழைந்து விட்டால் 21 வருட இடைவிடாத யாத்திரை என்ற உறுதி குலைந்து 2 வருடத்திலேயே யாத்திரை முடிந்து விட்டதாகப் பொருள்படுமாம்! ஆக, அவரது மடம் என்பது கும்பகோண மடம்தானே தவிர காஞ்சி மடமன்று.

‘ஜெகத்குருவின் திவ்ய சரித்திரம் ‘ சொல்கிற இன்னொரு தகவல் – சீனியர் சுவாமிகள் 25.1.1931இல் காஞ்சிபுரத்திற்கு முதன் முதலாக விஜயம் செய்தார் என்பது. அதாவது 1907ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதியாகப் பட்டத்துக்கு வந்தவர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு 1931ஆம் ஆண்டுதான் காஞ்சிபுரத்துக்கு முதன் முதலாக வந்தாராம்! காஞ்சி மடத்துக்குள்ளும் நுழைந்தாராம்!

கும்பகோணம் மடத்துக்குக் காஞ்சி காமகோடி பீடம் என்று பெயர் சூட்டியதும், கும்பகோண மடாதிபதி காஞ்சி பீடாதிபதியாகப் பட்டம் சூட்டியதும் ஒரு புரட்டு வேலைதான். தமிழ்நாட்டில் மோசடி செய்வதை ‘கும்பகோண வேலை ‘ என்று கேலியாகச் சொல்வதுண்டு. இந்தப் பெயர் மாறாட்டத்தையும் கும்பகோண மடத்தின் ‘கும்பகோண வேலை ‘ என்றுதான் சொல்ல வேண்டும்.

‘சீனியர் ‘ சுவாமிகளின் இயற்பெயர் சுவாமிநாதன். இவர் 13.2.1907இல் மொட்டையடித்துக் கொண்டு, தண்டம், கமண்டலம், கஷாயம் தரித்துத் துறவியாகி சங்கர பீடத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டாராம். இவருக்கு 9.5.1907இல் பட்டம் கட்டியதும் கும்பகோணத்தில்தான் என்பதை ‘திவ்ய சரித்திரம் ‘ சொல்கிறது.

‘காஞ்சி மடம் ‘ என்பது உண்மையில் கும்பகோண மடமே என்பதை ‘மகாப் பெரியவர் ‘ எனப்படும் ‘சீனியர் ‘ சுவாமிகள் தம் வாயாலேயே ஒப்புக் கொள்ளும்படியான ஒரு செய்தி 2004 திசம்பர் 3 தினமணி இணைப்பாகிய வெள்ளிமணியில் வந்துள்ளது.

‘ஸ்ரீமடம் கைதான கதை ‘ என்ற தலைப்பில் (மகாப் பெரியவர்) சந்திரசேகரேந்திர சரசுவதி மகா சுவாமிகளே கூறிய உண்மைச் சம்பவமாக அந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது. சங்கர பீடத்தின் 64ஆவது பட்டமான ஐந்தாம் சந்திரசேகரேந்திரர் காலத்திலிருந்து கதை ஆரம்பமாகிறது. கதையின் தொடக்கத்திலேயே ‘அப்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இருந்தது ‘ என்கிறார் சீனியர் சுவாமிகள்.

கும்போணம் அருகே திருவிடைமருதூரில் ஹொய்சாள பிராமணர் வகுப்பில் பிறந்த கணபதி சாஸ்திரிகள் என்பவர் கும்பகோணம் சங்கர மடத்தில் நிர்வாகம் பார்த்துக் கொண்டிருந்தாராம். 1843-44இல் திருச்சி அருகே திருவானைக்காவலில் அம்பிகையான அகிலாண்டேசுவரிக்கு மடத்தின் சார்பில் திருப்பணி செய்யும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம். மடம் இந்த வேலையைச் செய்யக் கூடாது என்று திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டதாம். இதனால் ஸ்ரீமடம் (அதாவது மடாபதிபதியே) கும்பகோணத்தை விட்டுத் திருச்சிக்கு இடம்பெயர நேரிட்டதாம். நான்கைந்து வருட காலம் வழக்கு நடந்து மடத்துக்கு ஆதரவாக முடிவுற்றதாம். ஆனால் மடத்துக்குப் பெரும் பொருட் செலவாகிக் கடன்சுமை ஏற்பட்டு விட்டதாம்.

கணபதி சாஸ்திரிகள் உடனே தஞ்சாவூருக்குப் புறப்பட்டாராம். அப்போது சரபோஜியின் மகன் ‘சிவாஜி ‘ தஞ்சையை ஆண்டு கொண்டிருந்தாராம். சாஸ்திரிகள் மன்னரிடம் எடுத்துச் சொல்லி உதவி கேட்டாராம். ஆனால் மகாராஜா சாதகமாக எதுவும் சொல்லவில்லையாம்.

மறுபடியும் மடாதிபதி தன் பரிவாரங்களுடன் குடந்தையை நோக்கிப் புறப்பட்டாராம். யானை, குதிரை, ஒட்டகங்களோடு பல்லக்கில் ‘பெரியவர் ‘ பயணித்துக் கொண்டிருந்தாராம். திருவையாற்றுக் காவிரிக் கரையில் சென்று கொண்டிருந்த போது திடாரென்று ஏராளமான சிப்பாய்கள் வந்து சூழ்ந்து கொண்டு, தஞ்சாவூர் செல்லும் பாதையில் திருப்பி விட்டார்களாம். பண்டிதர்கள் சிலர் ஆச்சாரியாரின் பல்லக்கை நெருங்கி வந்து, பூர்ண கும்ப மரியாதை செய்து, அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்தார்களாம். நாலாப் பக்கமும் சிப்பாய்களும் சூழ்ந்து கொண்டார்களாம்.

தஞ்சாவூருக்குள் இப்படிக் கைது செய்வது போல் அழைத்துப் போய் விருந்து உபசாரம் செய்து, நிறைவாகப் பொருளுதவியும் செய்து, கும்பகோணத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தாராம் தஞ்சையின் மராத்திய மன்னர்.

இதைத்தான் ‘ஸ்ரீமடம் கைதான கதை ‘ என்று ‘சீனியர் ‘ சுவாமிகள் வருணிக்கிறார். இதே போல் இன்னொரு கதையும் சொல்கிறார்:

ஐந்தாம் சந்திரசேகரேந்திர சுவாமிகள் சித்தி அடைந்த பின் அடுத்த பட்டமான சுதர்சன மகாதேவேந்திரர் பீடாதிபதி ஆனார் – இவர் வேறு யாருமல்ல, கணபதி சாஸ்திரிகளின் அண்ணன் பிள்ளைதான்.

புது சுவாமிகள் கொடைக் குணம் நிரம்பியவராம். அவர் கணக்கு வழக்கு இல்லாமல் தாராளமாகச் செலவு செய்ததால் மடத்தின் சொத்து வேகமாகக் கரையத் தொடங்கியதாம். இப்போதும் மடத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் கணபதி சாஸ்திரிகள்தாம். பெரியவருக்குத் தஞ்சாவூர் மன்னர் செய்த கனகாபிஷேகத்தில் கடனை அடைத்தது போக பதினேழாயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சாஸ்திரிகள் மீதப்படுத்தி வைத்திருந்தாராம்.

புது சுவாமிகளை எவரும் அணுகி உதவி பெறுவதைத் தடுப்பதற்காக கணபதி சாஸ்திரிகள் தஞ்சாவூர் மன்னருக்குச் செய்தி அனுப்பி சிப்பாய்களை வரவழைத்துக் காவலுக்கு நிற்க வைத்து விட்டாராம். இதை விரும்பாமல் புது சுவாமிகள் ‘பிட்சை ‘ பண்ண மறுத்து விட்டாராம். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் என்று பொருள். ஒரு வழியாகச் சிக்கல் தீர்ந்து கபிஸ்தலம் மூப்பனார் ஆலோசனைப்படி அணக்குடியில் மடத்துக்கு நிலம் வாங்கிப் போட்டார்களாம்.

இதையே ஸ்ரீமடம் கைதான இரண்டாவது கதை என்கிறார் ‘மகாப் பெரியவர் ‘. இந்த இரு கதைகளும் குடந்தையைச் சுற்றி சுற்றி வருகின்றனவே தவிர, காஞ்சியை நெருங்கக் கூட இல்லை.

யசோதை கண்ணனை உரலோடு கட்டிப் போட்ட பாகவதக் கதையோடு மேற்சொன்ன ‘கைதான கதைகளை ‘ ஒப்பிடுகிறார் ‘மகாப் பெரியவர் ‘. ஜெயேந்திரர் கைதான கதையோடு இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவே நமக்குத் தோன்றும்.

‘கைது ‘ என்பதை உருவகமாகவே ‘மகாப் பெரியவர் ‘ குறிப்பிட்டாலும் இப்போது ஜெயேந்திரரைப் பொறுத்த வரை அது உருவகமாக அல்ல, உண்மையாகவே தளைப்படுத்தலும் சிறைப்படுத்தலுமாகி விட்டது. மற்றபடி, கனகாபிஷேகம், தங்கம் சேர்த்தல், ஊதாரித்தனம், திருப்பணி செய்தல், மன்னரிடம் கொடை பெறுதல், உறவுக்காரர்களை மடத்தில் வைத்துக் கொள்ளுதல், மடத்துக்குள் பூசல்… அன்றும் இன்றும் மட நடப்புகள் இப்படித்தான் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

கணபதி சாஸ்திரிகளின் அண்ணன் மகன்தான் மடத்தின் அறுபத்தைந்தாவது பட்டமாகப் பொறுப்பேற்ற சுதர்சன மகாதேவேந்திர சுவாமிகள் என்று பார்த்தோம். அறுபத்தெட்டாவது பட்டம் யார் தெரியுமா ? இந்தக் கதையைச் சொன்ன ‘மகாப் பெரியவர் ‘ ஏழாம் சந்திரசேகரேந்திர சரஸ்வதியேதான். இவர் வேறு யாருமல்ல, கணபதி சாஸ்திரிகளின் பேரன்தான்.

மடம் கைதான கதையோடு ‘மகாப் பெரியவ ‘ரின் ‘அருள்வாக்கு ‘ ஒன்றும் வெள்ளிமணியில் தரப்பட்டுள்ளது.

‘மடத்துக்குப் பண பலம் அதிகம் கூடவே கூடாது என்கிற கட்சிதான் நான். அதை ஜாக்கிரதை பண்ணுவது, அப்புறம் குட்டி போடப் பண்ணுவது என்கிற விசாரம் நாங்கள் செய்ய வேண்டிய ஆத்ம விசாரத்துக்கே இடையூறுதான் என்பதே என் அபிப்ராயம். திரவ்ய பலம், ஆள் கட்டு எல்லாம் குறைவாக இருந்தாலே ஒரு மடாதிபதி தன்னுடைய தபோபலத்தை விருத்தி பண்ணிக் கொண்டு, அதன் மூலமே தம் பரிபாலனத்துக்கான சக்தியைப் பெற அதிகம் வழி ஏற்படும் ‘ என்கிறார் ‘மகாப் பெரியவர் ‘.

இது ஜெயேந்திரருக்காகவே சொன்னது போலில்லை ?

பெட்டிச் செய்திகள்:

1. காஞ்சி மடத்தின் இன்றைய சொத்து மதிப்பு ரூ, 5,000 கோடி. 1990க்குப் பின் மடம் கல்வி வணிகத்தில் இறங்கியது. வேத பாடசாலைகள் மட்டுமல்ல, 38 சங்கரா பள்ளிக்கூடங்களும் மடத்தின் சார்பில் நடக்கின்றன. காஞ்சியிலிருக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமி விஸ்வமகா வித்யாலயத்துக்கு அது தொடங்கி ஈராண்டுக்குள் (1993) நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியைத் தந்தவர் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்.

2. காஞ்சி மடம் பல மருத்துவமனைகளும் நடத்துகிறது. இவற்றில் ஒன்றாகிய ‘சைல்டு டிரஸ்ட் ‘ மருத்துவமனையில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றிக் கேட்டதற்கு ஜெயேந்திரர் சொன்னார், ‘முதலீடு செய்த 9 கோடி ரூபாயை முதலில் எடுத்தாக வேண்டும். பிறகு தர்மம் செய்வது பற்றி யோசிக்கலாம். ‘

3. புதுவையில் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியின் தாளாளராயிருந்த வி. பாலசுப்பிரமணியம் கல்வி இயக்குநருக்கு 2004 ஜூனில் எழுதியதாவது: ‘வணிக நோக்குடன் பள்ளி நடத்தப்படுகிறது. ஆனால் கிறித்தவர்களையும் முஸ்லீம்களையும் பள்ளியில் சேர்க்காமல் தவிர்க்கப்படுகிறது. சங்கராச்சாரியாரின் சகோதரர் திரு ராமகிருஷ்ணனின் பரிந்துரை பேரில் பொன்மலர் என்ற சஞ்சிகை ஒவ்வொரு மாணவர் மீதும் விற்பனை வளர்ச்சிக்காகவே திணிக்கப்படுகிறது. ‘

—-

(ஆசிரியரின் அனுமதியுடன் நா திருப்பதிசாமி அனுப்பியது)

Series Navigation

தியாகு

தியாகு