நன்றி நவில ஓர் நாள்.

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

ஆல்பர்ட்


‘ எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு ‘ –

இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது;அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி சொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள்.அதுக்காக மத்த நாள்ல அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டாங்களா ? என்றுயாரும் கேட்டுவிடாதீர்கள்.

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உட்பட இந்தியர்கள்ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் கூட பார்க்காத மாதிரிஒதுங்கியும், முகத்தைத் திருப்பிக் கொண்டும் செல்வதை பெரும்பாலும்அமெரிக்காவில் காண முடியும். அறிமுகமில்லாத ஒரு இந்தியர் இன்னொருஇந்தியரைப் பார்த்து நமஸ்தே….வணக்கம்….ஹாய்…. என்று சொல்கிறார்என்றால் சொன்னவர் அமெரிக்காவுக்கு புதுசு என்று அர்த்தம்;-))அதே நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு அமெரிக்கர்/ரி ஒருவரை ஒருவர் சந்திக்கநேரிட்டால் ஹலோ… ஹாய் என்பார்கள். எப்படி இருக்கிறீர்கள் ? என்றெல்லாம்கூட விசாரிப்பதும், உதவி என்ற வகையில் அல்லாமல் ஒரு சாதாரண தகவலைச்சொன்னால் கூட நன்றி என்று நாலு முறை நாவலிக்காமல் சொல்லுகிறவர்கள்அமெரிக்கர்கள்;

வருசம் முழுக்க எங்களுக்காக உழைச்சீங்க, உங்களுக்கு எங்கள் நன்றிகள்!

முதலாளிகள், தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும்;ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக்கொள்ளும் நன் நாளாக, ஆண்டுதோறும்நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமை அனுசரிக்கப்படுகிறது. ‘உதவி ‘ என்ற மூன்றெழுத்தைச் செய்யும் போதோ, பெறும் போதோ,அடிமனத்து வானில் உதயமாகும் மூன்றெழுத்துத் தான் ‘நன்றி ‘. அந்தநன்றியை கொடுக்கிறவருக்கும் பெறுகிறவருக்கும்தான் எவ்வளவுபேரானந்தப் பெருவெள்ளம் மனதில் பொங்கிவழிகிறது.இன்றைக்கு அமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுகிறதற்குகாரணம் யார் ?

இங்கிலாந்து…! ஏன் ?

இதற்கும் ஒரு பின்னணி உண்டு. அது என்னவென்று பார்ப்போமா ?

இங்கிலாந்து…

1600களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவக் கோவில்கள் அந்த நாட்டைஆண்டுவந்த அரசனின் இரும்புப்பிடிகளுக்குள் சிக்கித்தவித்தது. இப்படித்தான்கோவில்களில் வழிபடவேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெறவேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும் அரசகட்டளைப்படிதான் நடக்கவேண்டும், என்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையைஏற்படுத்தியது.

இவர்கள் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரைகுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டுசித்திரவதைகளுக்கு ஆளாகினர். தங்களுக்கு விருப்பமானமுறையில் கடவுளைவணங்கமுடியவில்லையே என்று எண்ணியவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டிஇங்கிலாந்தைவிட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர்.இவர்கள் ‘புரிடான்ஸ் ‘ (puritans) என அழைக்கப்பட்டனர்.

மத சுதந்திரம் வேண்டி, தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும் பெண்களும்குழந்தைகளுமாக, ‘ஸ்பீட் வெல் ‘ மற்றும் ‘மே ஃப்ளவர் ‘ என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணத்தை (செப்டெம்பர் ,1620ம் ஆண்டு)துவங்கினர். புதிய உலகம் புகுவோம்; புதிய, புதிய இன்பம் காண்போம்;நமக்கென ஒரு வரலாறு சமைப்போம் என்கிற உறுதிமொழியோடு புறப்பட்டனர்.உணவு, துணி, ஆயுதம், விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடுநிரந்தரமாகப் புலம் பெயர்ந்துவிடுகிற முயற்சியாகப் பயணித்தனர். இந்த மரக்கலங்களில்பயணித்த பயணிகள் பட்டியலைப் பார்க்கவேண்டுமா ? கிளிக்குங்கள் இங்கே…

http://www.mayflowerhistory.com/Passengers/passengers.php

கனவுப் பூமி…

ஏதோ ஒரு துணிச்சலில் குழந்தைகுட்டிகளோடு 1620ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள்ஆறாம் தேதி 102 பயணிகளுடன் 32 குழந்தைகள் உடபட கிளம்பிய அவர்களுக்குஇன்ன இடத்துக்குத்தான் போகிறோம் என்கிற உறுதியில்லாமல் மனம்போன போக்கில்….அல்ல….அல்ல கப்பல் போன போக்கில் பயணித்தனர்!

கடற்பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டுகொண்டே போக, கடல் நோய் கண்டு பலர் தங்கள் கனவு நிறைவேறாமலேயேமாண்டுபோயினர். கடற்பயணத்திலேயே இரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததும்குறிப்பிடத்தக்கது. ஸ்டாபன் எலிசபெத் தம்பதியருக்கு பிறந்த குழந்தைக்கு சமுத்திரம் (Oceanus) என்றும், இன்னொரு தம்பதியருக்கு பிறந்த குழந்தைக்குபிரிகிரீன் (Peregrine White) என்றும் பெயர் சூட்டியதும் ஒரு வித்தியாசமானநிகழ்வாக இருந்தது.

பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர்கள் வந்து சேர்ந்தஇடம் அமெரிக்காவின் மஸாச்சுசெட்ஸ் மாநிலத்தின் வடக்கு கேப் காட் நகரின்ப்ளைமவுத் பகுதியாகும். கனவுப் பூமியில் கால் பதித்த நேரம் (டிசம்பர் 11ம் தேதி)உடலை ஊடுருவி உள்ளெலும்பைக் குளிர வைக்கிற டிசம்பர் குளிர்; பயணக்களைப்பு,பழக்கமில்லாத சீதோஷ்ண நிலை என அவர்களில் பலர் பலியாக நேரிட்டது.ப்ளைமவுத்தில் கால் பதித்ததும் அங்கிருந்த ஒரு கல்லில் அவர்கள் கால் பதித்தவருடத்தை பதிவு செய்து வைத்தனர். இன்றும் அது காணக் கிடைக்கிறது.

(படம்)

எஞ்சியிருந்தோர், கனவுகள் கலைந்து, எதிர்காலம் இருண்ட கவலை சூழ,நம்பிக்கைகள் பொய்த்துப் போன நிலையில் அவர்களுக்கு விடிவெள்ளியாக,

‘ஸ்குவாண்டோ ‘

என்ற அமெரிக்கர் தனது சகாக்களோடு உதவ முன் வந்தார். புதிய சுற்றுச் சூழலில்தங்களைக் காத்துக் கொள்ள, வாழ்வை எதிர்கொள்ள வழி முறைகளைச் சொல்லிக்கொடுத்தார். அநேக விஷயங்களை பூர்வீக அமெரிக்கர்களிடம் கற்றுக்கொண்டனர்.அமெரிக்கச் சூழலுக்கு ஏற்றவாறு எப்படி விவசாயம் செய்வது ? விஷத்தன்மை வாய்ந்தபயிர்கள் எது ? முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்திக்கு என்ன முறைகளை கடைப்பிடிப்பது ?வேட்டையாடுவதற்கான சிறந்த வழிமுறைகள் எது ? போன்றவற்றைக் கற்றுக் கொண்டனர்.

‘ ஸ்குவாண்டோ ‘ தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இவர்களுக்கு உதவச்செய்தார். இவர்களுக்கு மீனைச் சாப்பிட மட்டும் கொடுக்காமல் மீன் பிடிக்கவும் கற்றுக்கொடுத்தார்கள். இது அவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. மண்ணின் மகிமைக்குஏற்றவாறு பயிர் செய்தனர்; மக்காச் சோளம் பொன் போல் விளைந்தது; மிகப் பெரியபூசணி மற்றும் காய்கறி, பழவகைகளை பயிரிட்டனர்.

‘டர்க்கி ‘ எனப்படும் காட்டு வான்கோழிகளை வளர்த்து உணவுக்குப் பயன் படுத்தினர். இங்கிலாந்திலிருந்து கையோடு கொண்டுவந்த விதைகள் பல இந்த மண்ணில் முளைக்கும் சாத்தியமற்றுப் போனாலும் அமெரிக்கர்களின் அன்பான உதவியாலும் வழி காட்டுதலாலும் கடின உழைப்பால் கற்பாறை நிலங்களை பொன்கொழிக்கும் பூமியாக மாற்றினர்.

அறுவடைத்திருவிழா…

அறுவடைக்காலம் வந்தது; அதாவது 1621ம் ஆண்டு அவர்களுக்கு கிடைத்த செழிப்பான பூமி விளைச்சலால் அகமும் முகமும் ஒருசேர மகிழ்ந்து அதைச் சிறப்பாக கொண்டாட எண்ணினர். புதிய பூமியில் அவர்களுக்கு வழிகாட்டிய அமெரிக்கர்களை கெளரவிக்க விரும்பினர். அபரிமிதமான விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்ததற்கும், தங்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஒளியை எண்ணெய்யும் திரியுமாக இருந்து உதவிய அமெரிக்கப் பேருள்ளங்களை மகிழ்விக்க மூன்று நாட்கள் விருந்தை ஏற்பாடு செய்தனர். எப்படி இங்கிலாந்து தேசத்தில் அறுவடைத் திருநாளை பரம்பரை பரம்பரையாகக் கொண்டாடுவரோ அதைப்போலக் கொண்டாடினர்.

உற்சாக ஷாம்ப்பெய்ன்…

இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்குத் தலைவராக இருந்த ‘கேப்டன் மைல்ஸ் ஸ்டாண்டிஷ், ‘ வெனிசன் என்ற ருசிமிக்க காட்டு வான்கோழி, காட்டுப் பறவைக்கறி வகைகள், விதவிதமான மீன்வகைகள், பழங்கள், பூசணி, வெள்ளரிக்காய், கார்ன் (மக்காச் சோளம்) இனிப்பு உருளைக்கிழங்கு, க்ரான்பெர்ரீஸ் பழங்கள் என்று தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்தார். வந்தாரை வரவேற்று… வாழ வழிகோலியவர்களுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் வகையில், செய் நன்றி மறவாமல் அவர்களுக்கான விருந்தை விமரிசையாகப் படைத்தனர்.

இவ்விருந்திற்கு ஸ்குவாண்டோவும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எனஅழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். பொதுவிடத்தில் பெருவிருந்து நடத்தி தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர். மூன்று நாட்கள் நடை பெற்ற இந்த நன்றித் திருவிழாவில் விளையாட்டு, கேளிக்கைகள், நடனங்கள் என அமெரிக்கர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர். மூன்றாம் நாள் விசேஷ மதுபானவகைகளுடன் ‘பம்ப்கின் பை ‘எனப்படும் பூசணி கேக் வெட்டி, ஷாம்ப்பெய்ன் பாட்டில்கள் உற்சாகமாய் பொங்கித் திறக்க, உல்லாசப் பொழுதாகிப்போனது.

அன்றிலிருந்து ‘தாங்க்ஸ் கிவ்விங் டே ‘ மெனுக்களில் இன்றுவரை பெரிய மாற்றம் ஏதுமின்றித் தொடர்கிறது!

1621ம் ஆண்டு நடைபெற்ற நன்றித் திருநாள், ‘First Thanks Giving Day ‘. தொடர்ந்து இது அமெரிக்காவின் பட்டி தொட்டி, நகரம் எங்கும் நன்றி நவில்கிற விருந்து…. வருடம் தவறாமல் நடந்தது. 1676ம் ஆண்டு மஸாச்சுசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த சார்லஸ் டவுன் கவுன்சில் இந்த நாளை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றி அங்கீகரித்தது.

1777ம் ஆண்டு அமெரிக்க கான்டிணென்டல் காங்கிரஸ் தேசியக் கொண்டாட்டமாக அறிவித்தது. இதில் அன்றைய 13 மாகாணங்கள் கலந்து கொண்ட பெருவிழாவாக நடைபெற்றது.

1783ம் ஆண்டு வரை அரசின் சார்பில் நன்றி நவிலும் நாளாக விளங்கினாலும் அமெரிக்க அதிபர் ஜியார்ஜ் வாஷிங்டன் 1789ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று நாம் ஒவ்வொருவரும் நன்றி பரிமாறிக்கொண்டாலும் அன்றையதினம் இறைவனுக்கும் நன்றி செலுத்திடும் வகையில் விசேஷ பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்றார்.

தேசிய விடுமுறை தினம்…

‘சாரா ஜோசப் ஹேலி ‘ என்ற பத்திரிக்கை ஆசிரியரும் சமூக சேவை இயக்கத்தலைவியுமான இவர் அமெரிக்க அரசாங்கத்தை இந் நாளை தேசிய விடுமுறைதினமாக அறிவிக்கக்கோரி போராடினார். இவருடைய சீரிய முயல்வுகளுக்கு விடை கண்டவர் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஆவார். நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் வரும் வியாழக்கிழமை ‘தேசிய விடுமுறை தினம் ‘ என 1863ம் ஆண்டு அறிவிக்க, நன்றி நவிலல் மழையில் நனைந்தார் லிங்கன். அரசியல்வாதிகள் அநியாயம் அந்தக் காலகட்டத்தில்கூட அரங்கேறியிருக்கிறது. லிங்கனுக்குப் பின் வந்த அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் தடாலடியாக நன்றி நவிலல் தினம் நவம்பர் மாதத்தில் மூன்றாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமை என்று 1939ம் ஆண்டில் மாற்றி அறிவித்தார். இந்த மாற்றத்திற்கு வினோதமான காரணத்தைக் கூறினார். இதற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு இல்லாததோடு தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல் வழக்கமாக கொண்டாடும் நாலாவது வாரத்தில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதிபர் ரூஸ்வெல்ட், தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் 1941ம் ஆண்டு மீண்டும் ‘THANKS GIVING DAY ‘ நவம்பர் நான்காம் வார வியாழக்கிழமை தேசிய விடுமுறையோடு நன்றி நவில் தினம் அனுசரிக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இன்று…

உறவினர்களும் நண்பர்களும் அவரவர் பகுதியில் உள்ள சமூகக் கூடங்களில் கூடி மன மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றனர். குடும்பங்கள், நண்பர்கள், அண்டை அயலார், தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றி பொதுவிருந்தில்

கலந்துகொள்கின்றனர். சந்தோசங்களில் சங்கமித்துப் போகின்றனர். வெளியூர் மற்றும் அண்டைமாநிலங்களில் உள்ள உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து அஞ்சல் அட்டைகளை அனுப்பித் தங்கள் எண்ணக் கிடக்கைகளை – நன்றியைவெளிப்படுத்துகின்றனர். அலுவலகங்களில் வேலை பார்ப்போர் அலுவலக வளாகங்களிலோ அல்லது ஹோட்டல்களில் விருந்து உண்டு பரிசுப் பொருட்கள் அளித்து மகிழ்கின்றனர். இந்த நாளில் எல்லோர் இல்ல விருந்துகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது ‘டர்க்கி ‘ எனப்படும் வான்கோழி இடம் பெற்றிருக்கும்.

இல்லங்களில் அங்குமிங்குமாக பணியின் நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களால் சிதறியிருக்கிறவர்கள் ஒன்று கூடுவார்கள்; விருந்து உண்ணும் முன் பிரார்த்தனைக்கு கூடுவது போல கூடத்தில் கூடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நன்றியை சொல்லுவார்கள்.

அது 5 வயதுச் சிறுமியாக யிருந்தாலும் 60வயது பாட்டியாக இருந்தாலும், ‘இந்த வருடத்தில் இன்ன நன்மை கிடைக்கச் செய்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன், ‘ என்று நினைவுகூர்வது முக்கிய அம்சமாக இடம் பெறும். அதன் பின் அவர்களை அழைத்த உறவினர் அல்லது நண்பர்கள் இல்லத்துக்குச் சென்று நேரில் வாழ்த்துச் சொல்லி அல்லது நன்றி கூறி அவர்கள் அளிக்கும் விருந்திலும் பங்கு பெறுவார்கள்.

தங்களுக்கு உதவி செய்தவர்கள் இல்லத்துக்குநேரில் சென்று தங்கள் நன்றியை தெரிவிப்பதோடு ‘பரிசு ‘ களும் அளித்து தங்கள் நன்றியை வெளிப்படுத்துவார்கள். சர்ச்சுகளில் விசேஷ பிரார்த்தனைகளின் முடிவில் சிறப்பு விருந்துண்டு மகிழ்கிறார்கள். பெரும்பாலான அலுவலகங்களில் தமது ஊழியர் களுக்கு ‘கிஃப்ட் சர்டிபிகேட் ‘டை பரிசாக வழங்கி கெளரவிக்கின்றனர். கடைகள் 10% முதல் 50% வரை சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கி வாடிக்கையாளர்களை வசீகரிக்கிறது. பள்ளிகளில், கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி நன்றிதனை விருந்தோடு பரிமாறிக் கொள்ளுகின்றனர். அமெரிக்கா என்றாலே சொர்க்கமாகவும், பணம் கொழிக்கும் பூமியாகவும், வாழ்கிறவர்கள் எல்லோரும் மலர் படுக்கையில் இருப்பதுபோலவும் பல நாட்டினர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர்களுக்கு முள் படுக்கையாக இருக்கிறது என்பதை இது போன்ற நாளில்தான் அறியமுடியும். அனாதைச் சிறுவர், சிறுமியர், ஆதரவற்ற முதியோர், மூவேளை உணவுக் கனவு… ஒருவேளை நனவு ஆகுமா ?

உயிரை உறையவைக்கும் உறை பனியில் உறைவிடம் சாத்தியமில்லாமல் வாழ்க்கைச் சிக்கல்களில் நைந்து நாராகிப் போனவர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்றால் மிகப் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்காக பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்கள் இந் நாளில் பொது விருந்து ஏற்பாடு செய்து அளிக்கின்றனர். பெரிய, பெரிய உணவு விடுதிகள் கூட பாரம்பரிய விருந்தான வான்கோழிக் கறி சமைத்து ஏழைகளுக்கு அன்று மதியம் இலவசமாக வழங்குகிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு உணவுடன் சிறுபரிசுகள் அல்லது ஐந்து டாலர் பணமும் உணவுப் பொட்டலமும் வழங்குவதைக் காணலாம். பசித்தே கிடந்த வயிறு புசித்த பின் மன நிறைவாக இதயப்பூர்வமாக பூக்கிற ‘நன்றி ‘யும் இந் நாளில்தான் என்றால் அது மிகையில்லை!

***

-ஆல்பர்ட், அமெரிக்கா.

கொசுருத் தகவல்கள்:-

** AAA அமைப்பு தரும் ஆய்வுத் தகவலின்படி, தரை மற்றும் வான் வழிப்பயணம் மிக நெரிசலானதாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.

**அமெரிக்காவில் நன்றி நவிலல் தினத்திற்காக தம் குடும்பத்தோடு சேர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இடம்விட்டு இடம் பெயர்கிறவர்கள் பல லட்சம் மில்லியன் பேர்களாகயிருப்பார்கள். கடந்த ஆண்டை விட 3.1 விழுக்காடு இந்த ஆண்டு கூடுதலாக தரைவழி பயணிப்போர் இருப்பார்கள்; அதாவது கடந்த ஆண்டில் தரைவழிப்பயணிகள் 36.1மில்லியனாக இருந்தது இவ்வாண்டு 37.2மில்லியனாக உயரக்கூடும்.

** 12விழுக்காடு விடுமுறைகாலப் பயணிகள் விமானங்களில் பயணிப்பர்; அதாவது 4.6மில்லியன் பேர்கள் என்பது கடந்த ஆண்டைவிட இந்தா அண்டு 4 விழுக்காடு அதிகம். 2.0 மில்லியன் பயணிகள் இரயில் மற்றும் தொலைதூர பேருந்துகளை பயன்படுத்திச் செல்வர். இதுவும் கடந்த ஆண்டைவிட 5விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது.

**தரை வழி மிக நெரிசலாக இருக்கும் நேரங்கள் பற்றி கருத்துரைத்த விஸ்கான்சின் AAA கருத்துரைப்பாளர் மைக்கேல் பை நவம்பர் 24ம்தேதி பிற்பகலிலிருந்து இரவு எட்டுமணிவரையிலும் 28ம்தேதி பிற்பகலிலிருந்து இரவு எட்டுமணி வரையிலும் இருக்கும் என்று தெரிவித்தார்.

**மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த குளிர்கால இரவு நேர தரைவழி பயணிப்போருக்கு சாலைகளைக் கடக்கும் ‘மான்கள் ‘ பெரும் சவாலாக இருக்கக் கூடும் என்பதால் ஓட்டுனர்கள் வேகக்கட்டுப்பாட்டில் மிகுந்த எச்சரிக்கையாகச் செல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

**எரிபொருள் ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருப்பதால், வாகன ஓட்டிகள் எரிபொருள் விலை நிலவரத்தை கீழ்கண்ட இணையதளத்தில் சோதித்து தெரிந்துகொண்டு வாகனங்களை எப்போது எரிபொருள் நிரம்பி இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் கடந்த ஆண்டைவிட 43 செண்ட் விலை தற்போது அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி $2.02 ஆகவும் சில இடங்களில்குறைவாகவும் காணப்படுகிறது.

www.fuelgaugereport.com

***63 விழுக்காடு பயணிகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் உள்ள விருந்தினர் அறைகளிலும், 23 விழுக்காடு பயணிகள்தங்கும் விடுதிகளிலும், 3 விழுக்காட்டினர் கூட்டுக்குடியிருப்புகளிலும்(Condo) 2விழுக்காட்டினர் நடமாடும் வாகன இல்லங்களிலும், 1விழுக்காட்டினர் படுக்கை மற்றும் காலைச் சிற்றுண்டி வசதியளிக்கும் விடுதிகளிலும், இரவுத் தங்கல் இல்லாதவர்கள் மூன்று விழுக்காடும், எந்தவித ஏற்பாடு களையும் இதுவரை செய்து கொள்ளாத அல்லது தெரியாதவர்கள் 4 விழுக்காடாகவும் இருப்பதாகவும்

இந்த ஆய்வு அறிக்கைக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

***சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 40 விழுக்காடு பயணிகள் தங்கத் திட்டமிட்டுள்ளனர்; 36 விழுக்காட்டினர் பெரிய நகரங்களுக்கருகிலும், கடற் பயணத்திலும் கடற்கரை ஓரங்களில் 9 விழுக்காட்டினரும், மலை சார்ந்த பகுதியில் 5 விழுக்காட்டினரும், ஏரிக்கரையிலும், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள பூங்காக்களிலும், மாநிலம் மற்றும் தேசிய பூங்காக்களிலும் இரண்டு விழுக்காட்டினரும், வேறு விதமான பொழுது போக்குகளில் 3 விழுக்காட்டினரும், என்ன செய்யப்போறோம்ன்னே தெரியலை என்போர் ஒரு விழுக்காடாகவும் இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

** நன்றி நவிலல் நாள் விடுமுறைப் பயணம் குறித்த இந்த ஆய்வினை அமெரிக்க பயண நிறுவன அமைப்பு அமெரிக்காவிலும் கனடாவிலும் 45மில்லியன் பேர்களை உறுப்பினர்களாகக் கொண்ட AAA நிறுவனத்துக்கான சிறப்பு ஆய்வாக மேற்கொண்டு தொலைபேசி மூலம் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

**குழந்தைகளை வைத்துக்கொண்டு விமானத்திலும் கார்களிலும் பறப்பவர்கள் எப்படியெல்லாம் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்ற அறிவுரைகளாவது பரவாயில்லை. உங்கள் செல்லப் பிராணியையும் உங்களோடு எடுத்துச் செல்கிறீர்களா ? இந்த விமானம் உங்கள் காலடியிலேயே வைத்துக் கொண்டு பறக்க 75 டாலர் கட்டணம் வசூலிக்கிறது, செல்லப்பிராணிகளை எப்படிப்பட்ட கூண்டில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூடியவரை வழியில் இறங்கி வேறு விமானம் பிடித்துச் செல்லுவதை விட்டு நான் ஸ்டாப்பிங் விமானத்தில் முன் பதிவு செய்து கிளம்புவது தான் நல்லது என்ற ஆலோசனைகள் அமோகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

**அமெரிக்க தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு தூக்கமில்லாமல் வாகனம் ஓட்டி ஆயிரக்கணக்கான விபத்துகள் ஏற்படுகிற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கிறது. The National Sleep Foundation என்ற அமைப்பு நீண்ட தொலைவு கார் ஓட்டுபவரகள் போதுமான அளவு தூங்கிய பின் கார் ஓட்டவும், பெரியவர்கள் சுமார் எட்டரை மணி நேரமும் இளைஞர்கள் ஒன்பதே கால் மணி நேரமும் நன்றாக தூங்கி பின் வாகனம் ஓட்டவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

**அதே போல கார் ஓட்டுபவர் தனது சக பயணி அல்லது உடனிருப்பவரை தூங்காமல் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வருபவராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நூறு மைல் தூரத்துக்கும் ரெண்டு மணி நேரம் ஓய்வு எடுப்பதோடு மது பான வகைகளையோ போதை வஸ்துக்களையோ உபயோகிக்காமல் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

**அதிகமான மூட்டை முடிச்சுகளை கையோடு எடுத்துச் செல்வதை தவிர்த்து Fedex போன்ற கூரியர் சேவை நிறுவனங்கள் தள்ளுபடி தருவதை பயன்படுத்தி அவற்றில் அனுப்பிவிட்டு நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்பது உட்பட ஏராளமான பயணப் பாதுகாப்புக் குறிப்புகளை அமெரிக்கா ஆன் லயனின் இண்டிப்பெண்டண்ட் டிராவலர் இதழின் ஆசிரியர், கேரி பெக்கர் டிரக், டிரக்காக ஆலோசனைகளை வாரி வழங்கியுள்ளார்.

**அது மட்டுமா, குழந்தைகளுக்கு ‘பேபி சிட்டர் ‘ தேடுவது போல உங்கள் செல்லப் பிராணிகளுக்கு எங்கள் ‘பெட் சிட்டரை ‘ நாடுக என்கிற விளம்பரம்…. அப்புறம் விமானப் பயணத்தில் உணவு, தண்ணீர் மற்றும் அவசரத்திற்கு உபயோகிக்க மாத்திரை மருந்துன்னு ஏக அமர்க்களம் போங்க…!

**அமெரிக்காவில் நன்றி நவில்கின்ற நாளில் மட்டும் 100,000 விபத்துக்கள் நிகழ்வதாக ஒரு ஆய்வு கூறுகின்றது.

***

albertgi2004@yahoo.com

Series Navigation

ஆல்பர்ட்

ஆல்பர்ட்