தமிழின் மறுமலர்ச்சி – 7

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

பி.கே. சிவகுமார்


(தமிழின் மறுமலர்ச்சி – நூற்களஞ்சியம்: தொகுதி – 2 – பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை – வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், ‘வையகம் ‘, 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.)

‘தமிழ்மொழிப் பற்றும் பிறமொழி வெறுப்பும் ‘ என்ற கட்டுரையிலிருந்து…

நாட்டில் மொழிப் பிரச்னைகள் நாளுக்கு நாள் வலுவடைந்தும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு ஆதாரக் காரணம் தாய்மொழிப் பற்று. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் இம்மொழிப்பற்று வெளியாகி வந்துள்ளது. இது புலப்படுத்தும் நெறிகளும் பல வகையானவை.

ஒவ்வொருவரும் தனது தாய்மொழியே உலகிற் சிறந்தது என்று நினைக்கிறார். வடமொழி பேசுகிற ஒருவர் அதைத் ‘தேவபாஷை ‘ என்று அழைக்கிறார். அதுமட்டுமின்றி, அம்மொழியின் இயல்போடு தொடர்பற்ற ‘தமிழைப் பேசுபவர்களும் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும் ‘ என்கிறார். தமிழரும் தன் மொழி வடமொழியோடு ஒத்த பெருமையுடையதாக இறைவனால் படைக்கப்பட்டதென நம்புகிறார்.

விடை யுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்

வட மொழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத்

திட முறுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல்

என்பது திருவிளையாடற் புராணம். வடமொழியோடு ஒப்பிடுதல் தற்காலத்தில் விரும்பப்படுவதில்லை. எனவே, இறைவனைப் போல எக்காலமும் அழிவில்லாதது கன்னித் தமிழ் என்ற கருத்துப் பிறந்தது.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

என்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. சிலர் தமிழ்தான் இயற்கை மொழி என்பர். கருத்தளவில் இருந்த இந்நிலை மாறி தற்போது காரிய அளவிற்கு வந்துவிட்டது. ‘தமிழனாய்ப் பிறந்தவனுக்குத் தமிழ்தான் மூச்சு; அவன் உயிர்ப்பது தமிழ்; அவன் நினைப்பது தமிழில்; எழுதுவது தமிழில்; தமிழ் பேசும் இனத்தவரிடையேதான் எளிதாக மூச்சு விட்டு வாழமுடியும் ‘ என்று இவ்வாறான உணர்ச்சியோடு செயலில் இறங்கவும் தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர்.

பிறமொழி வெறுப்பு:

இச்செயல் பெரும்பாலும் பிறமொழி மீதும் பிறமொழி பேசுவோர் மீதும் வெறுப்பாக முற்றிவிட்டது. தமிழ் இலக்கண வரம்புடையது. பிற மொழிகளில் சில இலக்கண வரம்பற்றதென திருவிளையாடற் புராண ஆசிரியர் கூறினர். ஆரியர்கள் பிறமொழி பேசும் மக்களை ‘மிலேச்சர் ‘ என்று இகழ்ந்தனர். இந்தச் சொல்லுக்குத் ‘திருந்தாத மொழியைப் பேசுபவர் ‘ என்று பொருள். வடமொழி திருந்துவதற்கு முன்னிருந்த மூலமொழிக்குப் ‘பிராகிருதம் ‘ என்று பெயரிட்டனர். இதற்கு அநாகரிக மொழி என்று பொருள். ஒரு பிராகிருத மொழியைப் பைபாச மொழி என்ற பெயரால் வழங்கினர். தமிழையும் சிறிது இகழ்ச்சியோடு வழங்கியும் குறிப்பிட்டும் வந்தனர் என்று கருத இடம் உண்டு. தமிழ் மக்களும் பின்வாங்கவில்லை. ஆரியர் என்ற சொல்லுக்கே மிலேச்சர் என்று தமிழ் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன. (ஆரியரை அவ்வாறு கூறுதல் தகாதென்று கருதி, சூடாமணி நிகண்டினைப் பிரதி செய்தோர் ஆரியர் என்றதனை அநாரியர் என்று திருத்தி விட்டனர். திவாகர நிகண்டைப் பதிப்பித்தவர் இச்சூத்திரத்தையே ஒழித்து விட்டார். மிகப் பழைய ஏட்டுச் சுவடிகளில் இது காணப்படுகிறது. நகைச்சுவைக்கு உதாரணமாக ‘ஆரியர் கூறும் ‘ தமிழ்ப் பேச்சை செயிற்றியனார் என்ற ஆசிரியர் தந்துள்ளார்).

தெலுங்கர் தமது மொழியைத் ‘தெளிந்த தேன் ‘ (தேட) என்றும், தமிழ்மொழியை அரவம் (பொருள் அற்ற மொழி) என்றதோடு நில்லாமல், நீர்ப்பசையற்ற பாலைநிலம் (அத்வாநமு) என்றும் குறிப்பிட்டனர். வடுகர் முதலியோரை நெருங்குதல் கூடாதென்று ஒரு பழைய செய்யுள் கூறுகிறது:

வடுக ரருவாளர் வான்கரு நாடர்

சுடுகாடு பேயருமை என்றிவை யாறும்

குறுகார் அறிவுடையார்

பிற நாடுகளிலும் இத்தகைய சுயமொழிப் பற்றும் அந்நிய மொழி வெறுப்பும் காணப்படுகின்றன. கிரேக்கர்கள் பிறமொழி பேசும் மக்களை ‘பார்பெராய் ‘ (Barbaroi – உளறுபவர்) என்றனர். சீன மக்கள் தென் சீனத்தில் வாழ்ந்த சிலவகையினரை ‘தென் மிலேச்சர்கள், ‘அப்பாவிகள் ‘ என்று பொருள்படும் சொற்களால் அழைத்தனர்.

மேலே கூறிய விருப்பு வெறுப்புகளின் காரணமாக மொழி பற்றிய ஜாதீயமும் தேசீயமும் விளைகின்றன. ஆனால், இது குறித்து நாம் அதிகமாக வெட்கப்படவேண்டிய அவசியமில்லை. உலகில் தேசீய இனத்தவர் எல்லாரிடத்திலும் இது காணப்படுவதே.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்றார் பாரதி. ஒவ்வொருவரும் அவரவர் மொழிதான் உலகிலேயே சிறந்தது என்று எண்ணுவது இயல்பே. பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் அழகிய பிரெஞ்சே உலகில் கற்கத் தகுந்தது என்கிறார்கள். உலகில் இனிய மொழி தமிழ் ஒன்றே என்பர் தமிழர்கள். தமிழ் என்ற சொல்லுக்கே அவர்கள் இனிமை என்று பொருள் கண்டனர். ஸங்கீதத்துக்கு ஏற்ற மொழி தெலுங்கு ஒன்றே என்பர் தெலுங்கர். இத்தாலியரும் தம் மொழி குறித்து இவ்வாறே சொல்வர்.

மொழி பற்றிய ஜாதீய உணர்ச்சி பலவகையாக வெளிப்படுகிறது. தூயமொழிக் கிளர்ச்சி இவ்வகைகளுள் ஒன்று. இது பெரும்பாலும் மொழிநூற் பயிற்சி இல்லாதவரால் தொடங்கப்படுகிறது ஆனால், அடிக்கடி மொழி மாற்றத்திற்குக் காரணமாகிறது. தமிழில் வடசொல் முதலிய பிறமொழிச் சொற்கள் கலத்தல் கூடாதென நம்மில் சிலர் விலக்கி வருகின்றனர். ஐரேனியர் தமது பாரசீக மொழியிலிருந்து துருக்கி, அராபியச் சொற்களை விலக்க முற்பட்டு வருகின்றனர். ஜெர்மானியர் அந்நிய மொழிப் பதங்களைக் கடன் கொள்ளாது அவற்றை மொழிபெயர்த்து வழங்குதலை விரும்புகின்றனர். நெருப்பின் பெயராகிய ‘ஆஸ்ரயாஸ ‘ என்றதனை ‘சேர்ந்தாரைக் கொல்லி ‘ என வள்ளுவர் வழங்கியது இங்கே ஒப்பிடற்குரியது. ஒரு சில தமிழ் அறிஞர்கள் தமது பெயர்களில்கூட வடசொல் இருத்தல் கூடாது என்று எண்ணி, அவற்றையும் மொழிபெயர்த்து வருகின்றனர். உதாரணங்கள்: மணவழகு (கல்யாணசுந்தரம்), மதியழகன் (சோமசுந்தரம்).

ஒரு தேசீய மொழியே ஒரு நாடு முழுவதிலும் பரந்து வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தினர் முயற்சி செய்வதும் இவ்வகையைச் சார்ந்ததே. ஒருநாட்டில் அங்கங்கே வழங்கும் பிராதேசிக மொழிகளையும் (Dialects) சிறுபான்மை மொழிகளையும் (minority languages) ஒழித்துவிட வேண்டுமென்று இவர்கள் முயல்கின்றனர். நமது நாட்டில் இப்போது அரசாங்கத்தினர் ஹிந்தியைத் தேசீய மொழியாக்க அரும்பாடு படுகின்றனர். இதுபோன்ற முயற்சிகள் பல தேசங்களில் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றின் வரலாறுகள் ஓரளவு பயன்படலாம்.

முசோலினி தமது நாட்டில் அங்கங்கேயுள்ள பிராதேசிக சபைகளை ஒழிய வைத்தார். மொழி விளக்க – ஐரோப்பா படமொன்று (Linguistic map of Europe) வரைய ஆணையிட்டு, அதில் மற்ற தேசங்களிலுள்ள பிராதேசிக மொழிப்பகுதிகளை விடாமல் குறிப்பிட்டு, இத்தாலி தேசத்தில் மட்டும் மொழிப் பிரிவினை எதுவும் இல்லாததுபோல் ஒரே மொழி வழங்கும் நாடாகக் காட்டச் செய்தார்.

பிரான்ஸ் பொதுவாக விரிந்த மனப்பான்மையுடையது. ஆனாலும், அதன் உட்பகுதியான பிரிட்டானியிலுள்ள கலாசாலைகளில் பிரெட்டன் (Breton) மொழியைக் கற்பிக்கக் கூடாதென ஆணை பிறப்பித்தது. பிரெட்டன் மொழியில் விலாசம் எழுதிய கடிதங்களைக் கூடப் ‘பிரெட்டன் மொழியில் விலாசம் எழுதப்பட்டுள்ளது ‘ என்ற முத்திரை குத்தி, பிரெஞ்சு தபால் இலாகாவினர் திருப்பிவிடுவார்களாம். மொழி அடக்குமுறை ஐரோப்பாவில் வெகுகாலமாக நிகழ்ந்து வருகிறது. பிரெஞ்சுப் புரட்சியின் பின்னால் 1790ல் அதன் அரசாங்க ஆணை அந்நாட்டிலுள்ள எல்லா பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அம்மொழிகள் அபிவிருத்தி அடைவதற்கு அனுகூலங்களும் செய்யப்பட்டன. ஆனால், சிறிது காலம் கழித்து ‘விடுதலை தந்த மொழி பிரெஞ்சுதான்; அதனால் அம்மொழியே உலகமொழி ஆதற்குரியது. அப்படி ஆவதற்கு முன் பிரான்ஸ் தேச முழுமைக்கும், அது தேசீய மொழியாகுக ‘ என்ற மறுதலைக் கருத்துத் தோன்றிவிட்டது.

நூறாண்டு யுத்தத்துக்குப் பிறகு, அதன் விளைவால் எழுந்த தேசீயவுணர்ச்சியால் இங்கிலாந்தில் பார்லிமெண்டு நடவடிக்கைகள் முதலியன ஆங்கில மொழியில் எழுதப்பட்டன. அதற்கு முன்வரை அவைகள் நார்மன்-பிரெஞ்சில் எழுதப்பட்டு வந்தன.

ருஷ்யா தேசத்தில் ட்ஸார்கள் காலத்தில் போலிஷ், லேட்டிஷ், லிதுவேனியன் முதலிய சிறுபான்மை மொழிகள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டன. சோவியத் ஆட்சியில் இதற்கு எதிரான முறை கையாளப்பட்டது. ஸ்டாலின் சோவியத் எல்லைக்கு அப்பாலும் வழங்கிய சிறுபான்மை மொழிகளை ஆதரித்து வந்தார். அவர் கொள்கை பிற இடங்களிலும் பரவுவதற்கு இது அனுகூலமாயிருந்தது. ஆனால், இச்சிறுபான்மை மொழிகளில் ஏதேனும் ஒன்று தேசீய மொழியாக முற்றிவிடும் நிலைமை நேர்ந்தால் அல்லது அது வழங்கிவரும் பிரதேசங்கள் அனைத்தும் ஒன்றுபட்டுத் தனிப்பட்ட தேசமாவதற்கு முயலும் நிலை ஏற்பட்டால், உடனே அடக்குமுறையைக் கையாண்டு அம்மொழி ஒதுக்கப்பட்டது. மலையாள தேசத்தில் தமிழ் படும்பாடு இத்தகையதுதான்.

ஒரு ஜாதிய மொழி, இன்னொரு ஜாதிய மொழியோடு போட்டியிடும்போது, அவ்விரண்டு ஜாதியினருக்கும் மொழி பற்றிய தற்பெருமை உண்டாகிறது. ‘ஹிந்தி ஒழிக ‘, ‘தமிழ் வாழ்க ‘ முதலிய கூக்குரல்கள் இத்தற்பெருமையின் விளைவே. இது வளர்ந்து முதிருமாயின் பெருங்கேடு உண்டாகக் கூடும். அரசாங்கம் இதில் தலையிடுவதில் மிக்க விழிப்புடன் இருக்க வேண்டும். அரசாங்கம் தலையிட்டால், இயற்கையாகவே விரைவில் மாய்ந்துவிடக் கூடிய சில்லறை மொழிகள் பெரிதும் வலுவடைந்து ஜாதீய உணர்ச்சியை மிதமிஞ்சி வளரவிட்டுத் தேசீய ஒற்றுமையைக் கெடுத்து விடும். பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலில் ஸ்பானிய மொழியும் பிற்பாடு ஆங்கில மொழியும் பரவியிருந்தன. அது விடுதலை அடைந்தவுடன், இவ்விரு மொழிகளையும் நீக்கிவிட்டு, அந்நாட்டுக்குரிய பூர்வ மொழிகளில் ஒன்றைத் தேசீய மொழியாய்க் கொள்ளத் தீர்மானித்தது. ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியைத் தேசீய மொழியாக்குவதற்கு நமது நாட்டினர் எடுக்கும் முயற்சிகளோடு இது ஒப்பிடத்தக்கது.

அந்நிய மொழி வெறுப்பிலிருந்து அந்நிய தேசீய வெறுப்பு எளிதில் உண்டாகி விடுகிறது. இத்தேசீய வெறுப்பினால், தேசீய சொல்லுக்குப் புதுப்பொருள் ஏற்பட்டு விடுகிறது. உதாரணங்கள்: dutch courage (இயற்கைத் தைரியமின்றி, சாராயம் குடித்து, அதனால் வெறி கொண்டு போரிடுவது), கேரளா சாரம் (ஆசாரமின்மை அல்லது மிருகவொழுக்கம்) ஆகிய சொற்கள்.

வர்க்க வேற்றுமை காட்டுதல் (Racial discrimination) சமீபகாலத்திலே தோன்றியுள்ளது. இது ஒரு போலி விஞ்ஞான சாஸ்திரக் கொள்கையின் அடிப்படையிலானது. நோர்டிக் அல்லது ஆரிய வர்க்கத்தினர் (பழுப்பு கலந்த பொன்னிறத் தலை, வெண்ணிற மேனி, நெட்டை உருவமுடையோர்) பால்டிக் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தவர்களாம். அங்கிருந்து கீழே வந்து ஆல்பைன் அல்லது மத்திய தரைக்கடல் வர்க்கத்தினரை வென்று அவர்களோடு கலந்துவிட்டார்களாம். மத்திய தரைக்கடல் வர்க்கத்தினர் கறுப்பு நிறத்தவர், குட்டை மேனியர், அகன்ற தலையோடு இருப்பவர். இக்கொள்கை சென்ற நூற்றாண்டில் கோபிநோ (Gobineau) என்ற பிரெஞ்சுக்காரரால் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் மாடிஸன் கிராண்ட் (Madison Grant) என்ற அமெரிக்கரால் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இக்கொள்கைப்படி, தெற்கு ஐரோப்பாவின் அனைத்துப் பெருமைகளுக்கும் இவ்வர்க்கக் கலப்பே காரணமாம். கிரேக்கர், ரோமர், எபிரேயர், இடைக்கால பிரெஞ்சுக்காரர், ஸ்பேனியர், மறுமலர்ச்சி இத்தாலியர் இவர்கள் யாவரும் செய்த நாகரிக வளர்ச்சிக்கு இந்த நோர்டிக் வர்க்கக் கலப்பே விளைநிலமாயிருந்ததாம்.

இந்த நோர்டிக் வர்க்கத்தினரை இந்தோ – ஐரோப்பிய மொழிகளைப் பேசும் வகுப்பினரோடு இணைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தோ – ஐரோப்பிய மொழி, அதன் ஆதி நிலையில் நோர்டிக் வர்க்கத்தினரின் ஆதி மக்களுக்குரியதாக இருந்ததாம். இவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் வெற்றி கிடைத்ததால், தங்கள் மொழியைத் தோல்வியுற்றவர் மீது சுமத்தி விட்டார்களாம். தோல்வியுற்றவர்களில் அங்கங்கே சில வகுப்பினர் இம்மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்ஙனம் ஏற்றுக் கொள்ளாதவர்கள், முற்காலத்தில் பெரிதும் வழக்கில் இருந்த ஐபீரியன் அல்லது திராவிட மொழிகளைப் பேசிவந்த மக்களாம்.

ஆரிய வர்க்கம், மூல இந்தோ-ஐரோப்பிய மொழி என்ற இரண்டு கொள்கைகளையும் கலந்து, தமது அதிகார வரம்பு பரந்து நீடிக்க வேண்டும் என்ற கருத்துடன், தாமே உலகில் உயர்ந்தவர்களென்றும், பிறரெல்லாம் கீழானவர்கள் என்றும் ஜெர்மன் மக்கள் கருதி வந்தனர். எனவே, உலக மக்கள் ஆளுதற்குரியோர், ஆளப்படுதலுக்குரியோர் என இரண்டு பகுதியினராயினர். ஆனால், மேற்கூறிய இரண்டு கொள்கைகளும் பொய்க்கால்களேயாகும். இவற்றின் மீது நின்று யாரும் நடனமாட முடியாது. மொழிக்கும் வர்க்கத்துக்கும் இன்றியமையாத தொடர்பு எதுவுமில்லை. ஏதேனும் ஒரு தேசீய மக்கள் மேலோரென்றும், பிறர் கீழோர் என்றும் கொள்வது சரித்திரத்திற்கு ஒவ்வாதது.

சமய வகுப்பு வேற்றுமை:

இதைப்போலவே, சமய வேற்றுமையினாலும் வகுப்பு வேற்றுமையினாலும் விளைந்த மொழி மாற்றங்களும் மிகப் பல. ஆனால், இவையெல்லாம் ஒரே முடிவையே தெரிவிக்கின்றன. போர்தான் இவற்றின் விளைவு. இப்போர்களும் பலவகைப்படும். சில, தேசீயப் போர்கள். உதாரணம், நெப்போலியன் போர்கள். சில, வகுப்புப் போர்கள். உதாரணம், ஹிட்லர் போர்கள். சில சமயப் போராக இருக்கலாம். உதாரணம், முஸ்லீம்களுடைய ஜிகாத், கிறிஸ்துவர்களுடைய க்ருஸேட். சில வர்க்கப் போராயிருக்கலாம். உதாரணம், ருஷ்யப் புரட்சிப் போர்கள்.

இப்போர்களில் மொழி அதிகம் உதவுகிறது. அந்நிய மொழிப் படிப்பு அவசியம் என்பதையும் அவை காட்டுகின்றன. போர்களினால் மொழிகளில் சொற்களும் பெருகுகின்றன. ஆகவே, மொழி நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுகிறது என்று அறியலாம். இது, மொழியின் குறையன்று. எந்தக் கருவியையும் தீமை விளைவிக்கவும் பயன்படுத்த முடியும் அல்லவா. ஆதலால், அதனைப் பயன்படுத்தும் மனிதனே தீமைக்குப் பொறுப்பாளி.

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே.

இத்துடன் ‘தமிழ்மொழிப் பற்றும் பிறமொழி வெறுப்பும் ‘ என்ற இக்கட்டுரை நிறைவுறுகிறது.

மொழி, மொழி அடிப்படையிலான தேசீயம், அவற்றின் வரலாறு, மொழிவாரியான தேசீயத்தை எவ்வாறு அணுகுதல் வேண்டும் என்று பல விவமானக் கருத்துகளை இக்கட்டுரையில் சான்றுகளுடன் பேராசிரியர் தந்துள்ளார். தமிழை ஆதரித்து, ஹிந்தியை எதிர்த்த திராவிட இயக்கத்தினர் இங்கே இவர் அளவுக்கு மொழிப் பிரச்னையை விஞ்ஞான மற்றும் சரித்திர பூர்வமாக அலசினார்களா என்று தெரியவில்லை. பேராசிரியரை திராவிட இயக்த்தினர் தமிழின் எதிரி என்று நிந்தாஸ்துதி பாடினர். ஆனால், இங்கே அவர் ஹிந்தி மொழி தேசீய மொழியாக முன்னிறுத்தப்படுவதில் எழக்கூடிய பிரச்னைகளை ஆய்வுபூர்வமாக அலசியுள்ள அளவுக்கு, திராவிட இயக்கத்தினர் எவரும் செய்திருக்கிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. மொழிவாரியான தேசீய உணர்வு இயல்பானதே என்றும் பேராசிரியர் புரிந்து கொண்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அத்தகைய தேசீய உணர்வு பிற மொழிகளின் மீதான வெறுப்புக்கும், பிறமொழி பேசுகிறவர்களின் மீதான வெறுப்புக்கும் துணைபோகலாகாது என்று பிரச்னையை மனிதநேயத்துடனும் நல்லிணக்கத்துடனும் பேராசிரியர் அணுகுகிறார். இதுவே பேராசிரியரை, – ஹிந்தி ஒழிக என்று கோஷமிட்டுப் பிறமொழிகள் மீதும் பிறமொழிகள் பேசும் மக்கள் மீதும் வெறுப்பை வளர்த்தவர்களிடமிருந்து – பிரித்துக் காட்டுகிறது.

அடுத்த கட்டுரை, ‘தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் புதிய துறையான மொழியியல் பற்றியது. எனவே, இக்கட்டுரை எனக்கு அடிப்படையான பல விஷயங்களைச் சொல்லித் தந்தது. ஒலி இலக்கணம், ஒலிகள் பிறக்கும் வரலாறு, அசோகரின் லிபி அடிப்படை, தமிழின் சிறப்பெழுத்துகள், மாத்திரை கற்பிக்கும் வழக்கு என்று பல விஷயங்கள் இக்கட்டுரையில் உள்ளன. கல்வியாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரிய பொருள், கட்டுரை இது என்பதுபோல மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றினாலும், சாமான்யனான என்னாலும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருப்பதே பேராசிரியர் கட்டுரைகளின் சிறப்பு. மொழியியல் குறித்த அடிப்படை அறிவு அனைவருக்கும் வேண்டும் என்று நான் நம்புகிறேன். மொழியை வைத்து செய்யப்படுகிற அரசியலைப் புரிந்து கொள்ளவும், மொழியை உணர்வுபூர்வமாக மட்டுமே அணுகாமல் இருக்கவும் அந்த அறிவு உதவும் என்று நான் நம்புகிறேன்.

(தொடரும்)

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்