போரும் இஸ்லாமும்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சூர்யா


நம்பிக்கையாளரிடம் விவாதிக்காதே என்று ஜெயமோகன் சொல்லிவிட்டார். அது மத விஷயங்களுக்குச் சரிதான். ஆனால் ரூமியும் பிறரும் இங்கே இஸ்லாம்பற்றிப் பேசுவது மதம் ஆன்மீகமீட்பு முக்தி பற்றியெல்லாம் இல்லை. இது சுத்த அரசியல். இங்கே விவாதம் இல்லாமல் முடியாது. குர் ஆனும் தான் போர் புரியச்சொல்கிறது, நபியும் போர்வீரரே என்ற ஜெயமோகன் கருத்தை ஒருவர் மழுப்பி மறுத்திருந்தத்தனால் இதை எழுதுகிறேன். இன்னொருவர் குர் ஆனை படிக்கவேண்டும் என்றார். நானும் அதையே சொல்கிறேன். மூலத்தைப் படித்தால் இந்த ‘அமைதி இஸ்லாம் ‘ ஆட்கள் எப்படி எப்படி மழுப்புகிறார்கள் என்பது தெரியவரும்.

குர் ஆனில் எட்டு ஒன்பதாம் அத்தியாயங்கள் முழுக்க இறைநம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் இணைவைப்பாளார்களிடம் போரிடுவதைப்பற்றிச் சொல்கின்றன. ரூமி போன்றவர்கள் இந்துக்களிடம் பேசும்போது ஜிகாத் என்றால் ஆன்மீகமான குறியீடு என்று சொல்கிறார்கள். அது மிகப்பிற்காலத்தில் அளிக்கப்பட்ட விளக்கம். இந்த அத்தியாயங்களில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நேரடியாகச் சென்று மாற்று நம்பிக்கை கொண்டவர்களை கொலை செய்து நிகழ்த்தும் போரே மிகத் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. எந்தவிதமான கவித்துவ உருவகத் தன்மையும் இந்த பகுதிகளில் இல்லை.

இங்கே ஒரு விசயம். பொதுவாக பலர் [ஜெயமோகன் போன்றவர்கள் கூட ] குர் ஆனின் கவித்துவம் பற்றியெல்லாம் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. இ எஃப் டி வெளியிட்டுள்ள குர் ஆன் மொழிபெயர்ப்பு நல்ல தமிழில் அழகாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் மொழியில் பேசும் நூலாகவே படுகிறது. மிக flat ஆன கூறுமுறையில் கறாராக இது தப்பு இது சரி என்று கட்டளைகள் போடுகிறது குர் ஆன். பெரும்பாலான வசனங்கள் குர் ஆன் சொல்லும் கடவுளே மெய்யான கடவுள் என்று கூறி நம்பாதவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளைச் [ நரகம், கொலை] சொல்லி மிரட்டுவதாகவே உள்ளது.

அதன் பிறகு நிறைய அரபு நடைமுறைச்சட்டங்கள். படைப்பு குறித்த யூத மரபைச்சேர்ந்த நம்பிக்கைகள் சொல்லபட்டுள்ளன .அவைகூட பிற மதநூல்களில் உள்ள கவித்துவம் இல்லாமல் தான் உள்ளன.

‘ ‘மேலும் நாம் பூமியை விரித்தோம். அதில் மலைகளை நாட்டினோம். அதில் எல்லாவகையான தாவரங்களையும் மிகப்பொருத்தமான அளவில் முளைக்கச்செய்தோம். ‘ ‘

இம்மாதிரி. இப்பகுதியில் எவ்விதமான ‘பிரபஞ்சம் தழுவிய நோக்கும் ‘ இல்லை என்பதை காணலாம். பூமியை மையம் கொண்ட ஒரு எளிய பார்வையே உள்ளது. பூமியை வானத்தில் இருக்கும் அல்லாஹ் படைத்தார் என்ற அளவில். ரிக் வேத சூத்திரங்களில் , தம்ம பதம் போன்றவற்றில், கீதையில் உள்ள விஸ்வரூப தரிசனக் காட்சியில், தாவோயிச சூனியதரிசனத்தில் எல்லாம் அளவிடமுடியாத மாபெரும் பிரபஞ்சவெளிபற்றிய ஒருவகை அகவயப் புரிதல் வெளிப்படுவதைக் காணலாம். பிரபஞ்சபெருவெளியில் பூமியும் மனிதரும் ஒரு துளியே என்ற இன்றைய அறிவியல் நோக்கு அவற்றில் வெளியாகியுள்ளதைக் காணலாம். மாற்றுப்பார்வை மிக எளிமையான ஒரு பாமர அரபியின் பார்வை மட்டுமே. அகத்தரிசனமே இல்லாத ஒன்று.

மேலும் இதில் கணிசமான பகுதி அன்றைய அரேபியச்சூழலில் நபிக்கும் பிறருக்கும் இருந்த பூசல்களில் நபிக்காக அல்லா ‘ நேரடியாக ‘ பரிந்துபேசும் பகுதிகள். அவற்றில் உள்ளதெல்லாம் அன்றைய அரபிய இனக்குழுப்பூசல்கள்தான். இன்றைய இலக்கிய பாணியில் Polemics என்று சொல்லலாம். இந்நூலில் மிகப்பெரும்பகுதி இவ்விஷயத்தாலேயே நிரம்பியுள்ளது. பைபிளில் எந்த அளவுக்கு சிறந்த கவித்துவம் உள்ளது என்பதைக் காணலாம்.

ஜிகாத் என்றால் மாற்று நம்பிக்கை கொண்டவர்க்ளுடனான நேரடியான போர் என்பதை குர் ஆனை நேரடியாக வாசித்துப் புரிந்துகொள்ளலாம். ரூமியின் பசப்பல்களுக்கு அவசியமில்லை. இஸ்லாமின் பூசல் பிறரிடம் தொடங்கும் புள்ளி இதுவாகும்

திண்ணமாக இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் [ஒப்புக்கொள்ளப்பட்ட] வாழ்க்கைநெறி [தீன்] ஆகும் 3:19

இதன் அடுத்தபடிதான் இதை நம்பாதவர்களிடம் அது காட்டும் பொறுமையின்மை

‘ ‘மேலும் எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே ‘ [5 :3]

அதிலிருந்து ஆரம்பிக்கிறது போர். காரணம் இத்தகைய ஒரு நம்பிக்கை கொண்ட ஒருகுழுவினர் அல்லும்பகலும் போரிடாமலிருக்க இயலாது. அனைவருக்கும் அவரவர் நம்பிக்கை மேலானதுதானே ? இவர்கள் சொல்வதுபோல என்றாவது உலகில் அனைவருமே இஸ்லாமியர்களாக ஆனால் போரிடாமல் இவர்கள் வாழ முடியும்.

‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]

‘ ‘எனவே போரில் அவர்களை நீர் சந்தித்தால் அவர்களை சின்னப்பின்னமாய்ச் சிதறடித்து அவர்களுக்கு பின்வருவோரைத் திகிலடையச்செய்திடவேண்டும் .அவர்கள் படிப்பினைபெறக்கூடும் [[8:57]

‘ ‘பூமியில் பகைவர்களை முற்றிலும் முறியடிக்காதவரை அவர்களைச் சிறைப்பிடிப்பதில் ஈடுபடுவது எந்த நபிக்கும் உகந்ததல்ல ‘ ‘ [8 : 67 ]

போர்மட்டுமல்ல அதன் விளைவான கொள்ளையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அது புனிதமானதாக கருதபப்டுகிறது

‘ ‘எனவே நீங்கள் போரில் கைப்பற்றியவற்றை உண்ணுங்கள் அவை அனுமதிக்கப்பட்டவையும் தூய்மையானவையுமாகும் ‘ ‘{ 8:67]

மாற்று நம்பிக்கையாளர்களைக் கொல்வது இஸ்லாமியனின் புனிதகடமையாக கூறப்பட்டுள்ளது.

‘ ‘எனவே சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால் இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்றுவிடுங்கள்.மேலும் அவர்களை சிறைப்பிடியுங்கள் அவர்களை முற்றுகையிடுங்கள் மேலும் எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு அவர்கள் பாவமன்னிப்பு கோரி தொழுகையை நிலைநாட்டி ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள். ‘ ‘ [9: 5,6]

‘ ‘நீங்கள் அவர்களோடு போர் புரியுங்கள் அல்லாஹ் உங்கள் கைகளால் அவர்களுக்கு தண்டனை அளிக்கசெய்வான் மேலும் அவர்களை இழிவுபடுத்துவான். இன்னும் நீங்கள் அவர்களை வென்றிட உங்களுக்கு உதவி புரிவான் ‘ ‘ ‘ [9:14]

இன்று உலகம் முழுக்க போர்புரியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மந்திரமாக உள்ள குர் ஆன் வாசகங்கள் இவை. ஆப்கானிஸ்தான் பிடிக்கப்பட்டபோது தாலிபான்கள் இந்த வசனத்தை ஓதியபடி போரிட்டனர் என்று டிவியில் பார்த்தோம்.

‘ ‘எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் ஹிஜ்ரத் [ ஊரையும் உடைமைகளையும் துறந்து போருக்காக கிளம்புதல்] செய்து அல்லாஹ்வின் வழியில் தங்கள் உயிர்களாலும் உடைமைகளாலும் போர்புரிகிறார்களோ அவர்களும் எவர்கள் [ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு] தஞ்சமளித்து உதவியும் புரிகிறார்களோ அவர்களும் உண்மையில் ஒருவருக்கொருவர் ஆதரவானவர்களாய் இருக்கிறார்கள் ஆனால் எவர் நம்பிக்கை கொண்டபின்பும் [தார் உல் இஸ்லாமுக்கு] ஹிஜ்ரத் செய்யவில்லையோ அவர்களுடைய எந்த விஷயத்துக்கும் நீங்கள் பொறுப்பாளிகள் அல்லர். ‘ ‘[8:72 .73]

நபி தன் எதிரிகளான மாற்று நம்பிக்கையாளர்களிடம் போர் புரியச்சென்றபோது சிலருக்கு அவர்கள் மிகவும் விண்ணப்பித்தமையால் கலந்துகொள்ளாமலிருக்க அனுமதி அளித்தார். அதை அல்லாஹ் கண்டிக்கிறார்

‘ ‘நபியே அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக![போரில் கலந்திடாமல் இருக்க] நீர் ஏன் அவர்களுக்கு அனுமதி அளித்தீர் ? ‘ ‘

[9:43]

ஜிகாதுக்காக புறப்பாடாதவர்களை குர் ஆன் இவ்வாறு மதம் விலக்குகிறது. :

இனி அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவர்களுக்காக ஜானஸா [மரணத்தொழுகை] தொழாதீர் .மேலும் அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர் [9:84]

ஆனால் இன்றுவரை இஸ்லாமுக்காகப் போருக்குச் சென்றவர்கள், குழந்தைகளை கொன்றுகுவித்தவர்கள், மதவிலக்கம் செய்யப்பட்டதாக தகவலே இல்லை! இஸ்லாம் தீவிரவாதத்தை அனுமதிப்பது இல்லை என்று சொல்லும் எவரும் இதை விளக்கியதும் இல்லை.

இந்த ‘வேதத்தை ‘ அருளிய நபி போர் புரியச்சொல்லவில்லை, அவருக்கு போரே தெரியாது என்றெல்லாம் இங்கே வாதிடுகிறார்கள். ஆனால் எந்த தேசத்தில் இஸ்லாமியர் பெரும்பான்மையினராக உள்ளனரோ அங்கேயிருந்துவரும் இணையதளங்களை நூல்களைப் பாருங்கள் எவ்வித ஒளிவும் மறைவும் இல்லாமல் இவ்விஷயங்கள் பேசபட்டிருக்கும். அதே போன்றுதான் மதரஸாக்களுக்கு உள்ளே கற்பிக்கப்படுகின்றன என்பதும் ரகசியமல்ல.

***

இங்கே இன்னொரு விசயம். உண்மையில் இங்கே முஸ்லீம்கள் எதிர்த்துப் போராடவேண்டிய இறைமறுப்பாளர்கள் யார் ? ‘கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி ‘ என்று சொல்பவர்கள். ஆனால் அவர்களை இங்கே இஸ்லாமியர் தங்களுடையவர்களாக நினைக்கிறார்கள். காரணம் என்ன ? அவர்கள் கடவுள் என்று சொல்லி தாக்குவது இந்துமதத்தை மட்டுமே என்று இஸ்லாமியர் அறிவார்கள். அது தங்கள் அரசியலுக்குச் சாதகம் என்றும் அறிவார்கள். இறைமறுப்பாளர்களுடன் சேராதே என்ற மத கட்டளையை விட மத அரசியலே ரூமி உட்பட அனைவருக்கும் உவப்பானதாக உள்ளது.

**

எந்தமதத்தையும் வெறுக்காதவர் சுவாமி விவேகானந்தர். ஏசுவை மானுடதெய்வமாகவே வழிபட்டவர் அவர். அப்படிப்பட்டவர் இஸ்லாம் மதத்தைப் பற்றிப் பேசும்போது ‘ ‘ அவரது தரிசனங்களின் விளைவாக ஆயிரம் வருடங்கள் அரேபிய மண்ணில் ரத்தம் ஓடியது ‘ ‘ என்றார். ரத்தம் இன்னும் காயவில்லை. ஏன், இப்போது அது ஜீவநதியாக உள்ளது.

**

இதை எந்த மதத்தையும் கண்டிப்பதற்காகச் சொல்லவில்லை. மதங்கள் எல்லாம் நன்மையை நோக்கமாகக் கொண்டவை. எல்லா மதங்களிலும் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்கள் இருக்கலாம். நபி சொல்லிய பல விஷயங்கள் அக்கால அரேபியச்சூழலுக்கு ஏற்பவும் அன்றைய அரசியல் நிலைமைகளுக்கு ஏற்பவும் சொல்லப்பட்டதாக இருக்கலாம். அவற்றை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உரிய எல்லா காலகட்டங்களுக்கும் உரிய உண்மைகள் என்றும் மற்ற எல்லாம் முற்றிலும் தவறானவை என்றும் அழித்தொழிக்கப்படவேண்டியவை என்றும் நம்புவது ஆபத்தானது. குறிப்பாக ரூமி போன்றவர்கள் அப்படிப் பிரச்சாரம் செய்வது மேலும் பயங்கரமானது. பிற சமூகத்தினருக்கு மேல் நிகழ்த்தும் வன்முறை அது. ஒருபோதும் பூமியில் அமைதியை அது உருவாக்காது. அந்நம்பிக்கையுடன் நம்மால் பிறரை நேசிக்க முடியாது. அவர்களுடன் சேர்ந்து நிம்மதியாக வாழமுடியாது.

உலகில் பலகோடி மக்கள் வாழ்கிறார்கள். பலவகையான நம்பிக்கைகள் உள்ளன. அனைத்துக்கும் எதிராக ஜிகாத் தொடுத்துக் கொண்டு எவராலும் வாழமுடியாது. இதுவரை உலகில் சிந்திய ரத்தம் போதும். இனியாவது பிறர் நம்புவதும் சரியாக இருக்கலாம் என்று எண்ணும் போக்குக்கு சிறிதளவேனும் இடம் கொடுங்கள். நம்பிக்கையை கொஞ்சமேனும் அவ்வப்போது தர்க்க பூர்வமாக பரிசீலனை செய்யுங்கள். படித்தவர்கள் மேலும் பாமரர்களாக ஆகி நம்பிக்கைக்கு சப்பைக்கட்டு போடும் வழக்கத்தைப்பற்றி மனசாட்சியுடன் யோசியுங்கள். சேர்ந்து வாழ்வோம் சகோதரர்களே. நம் குழந்தைகளாவது இந்த மண்ணில் சேர்ந்து நிம்மதியாக வாழட்டும். யோசியுங்கள் ! ஏகம் சத்விப்ரா பஹுதாவதந்தி [உண்மை ஒன்றுதான் . வழிமுறைகள்தான் பலவிதம்; ரிக் வேதம் ]

—-

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

சூர்யா

சூர்யா