வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ஞாநி


புதைக்கப்பட்ட கடத்தல் வீரப்பனின் உடலோடு சேர்ந்து பல உண்மைகளும் வெளி வராமல் புதைக்கப்பட்டுவிட்டன என்பதில் சந்தேகமில்லை. வீரப்பன் கொல்லப்படாமல் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவாவது பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கக் கூடும். அதிரடிப்படையின் குண்டுகள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

வீரப்பன் ஒரு கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவன் கொன்றது 150 மனிதர்கள், 3000 யானைகள், வெட்டிய சந்தன மரங்கள் 10,000. சம்பாதித்த பணம் பல கோடி ரூபாய்கள் என்றெல்லாம் சொல்லப்படும் புள்ளி விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும், பல கொலைகளையும் கொள்லைகளையும் நடத்திய நபர் ஒரு கிரிமினல்தான்.

ஆனால் வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்களையும் யானைத் தந்தங்களையும் ஒருவன் தனி ஆளாக ஒரு போதும் கடத்தி விற்ரிருக்க முடியாது.

அந்தப் பொருட்களை எடுத்துச் சென்று, விற்று, வாங்கிப் பயனடைந்து பணம் சம்பாதித்தவர்களும் கிரிமினல்கள்தான். யார் அவர்கள் ?

அவர்களும் அவனைப் போல காட்டுக்குள் தலை மறைவாக இருந்திருக்க முடியாது. ஆனால் அந்தத் தலைகள் இப்போது மறைக்கப்பட்டுவிட்டன.

மும்பை குண்டு வெடிப்பு கொடூரம் பற்றிய விசாரணையின்போது தெரிய வந்த ஒரு முக்கியமான தகவல் அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கடத்தலுக்கு உதவிய கஸ்டம்ஸ் அதிகாரி பற்றியதாகும். வெடி மருந்து கடத்தலைக் கண்டு கொள்ளாமல் விடுவதற்கு அந்த அதிகாரி பெற்றுக் கொண்ட லஞ்சப் பணம் இருபது லட்ச ரூபாய்.

வீரப்பனின் தந்தம் சந்தன மரம் கடத்தலில் இதே போல லஞ்சம் வாங்கிக் கொண்டு கடந்த இருபதாண்டுகளில் எந்த நடவடிக்கையிலும் சிக்காமல் செளகரியமாக கெளரவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டிலாகா, அரசு அதிகாரிகள் யார் யார் ? அவர்களும் கிரிமினல்கள் இல்லையா ?

யானைத்தந்தம், சந்தன மரம் கடத்தல் தொழிலை விட்டுவிட்டு அடுத்தபடியாக வீரப்பன் செய்து வந்தது ஆள்கடத்தல், மிரட்டல், பிணைத்தொகைத் தொழில்தான். இந்தத் தொழிலில் முக்கியமாகக் கடத்தப்பட்டவர்கள் பலரும் கல் குவாரி தொழிலதிபர்கள். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன், சில ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் உட்பட பல கன்னட மாநிலப் புள்ளிகள் கல் குவாரி தொழிலில் இருந்து வருகிறார்கள்.

காட்டுக்குள் கல் குவாரிகளை அனுமதித்து காட்டை அழிக்கும் வேலையை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம்தான் செய்து வருகிறது. 5 ஏக்கரில் கல் எடுக்க அனுமதித்தால் 500 ஏக்கரில் எடுத்து ஏமாற்றக் கூடியவர்கள் கல் குவாரி காண்டிராக்டர்கள். இந்த வியாபார முதலைகளுக்கும் வீரப்பனுக்கும் இடையில்தான் கொடுக்கல் வாங்கல், உரசல், மோதல் எல்லாம். அதவ்து இரண்டு விதமான கிரிமினல்களுக்கிடையில் மோதல். இதில் எந்த அரசும் எப்போதும் கெளரவமான கிரிமினல்கள் பக்கம்தான் நிற்கும்.

வீரப்பன் போன்ற கிரிமினல்கள் சாதாரண ஏழை மக்களை பணத்தாலோ, பலத்தாலோ மிரட்டி தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். சந்தன தைல மில் அதிபர்கள், தந்த வியாபாரிகள், கல் குவாரி காண்ட்டிராக்டர்கள் போன்றவர்கள் பண பலத்தால் அரசாங்கங்களின் அதிகார பலத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள்.

கிரிமினல்களுக்கிடையிலான இந்த மோதலில் எப்போதும் போல பாதிப்புக்குள்ளாவது இயற்கையும் சாதாரண மனிதர்களும்தான். அதைத்தான் சத்தியமங்கலம் , மாதெஸ்வர மலைப் பகுதி ஆதிவாசி மக்கள் அனுபவித்தார்கள். இன்றும் அனுபவித்து வருகிறார்கள். வீரப்பன் பிரச்சினையில் யாருக்காவது தியாகிப் பட்டம் அளிக்க வேண்டுமென்றால் அதற்கு முதல் உரிமை இந்த மக்களுடையதுதான்.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப்படையினர் சிலர் நடத்திய அட்டூழியங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெண்களுக்கும் இன்றளவும் அரசிடமிருந்து எந்த நிவாரணமும் இல்லை. வீரப்பனுக்கும் அதிரடிப்படைக்கும் இடையில் சிக்கிச் சீரழிந்த நுற்றுக்கணக்கான குடும்பங்களின் இன்றைய கதி என ? சுமார் 150 விதவைப் பெண்களும், சித்ரவதையினால் மன நோயாளிகளான பெண்களும் குலைக்கப்பட்ட குடும்பங்களும் எந்த அரசு நிவாரணமும் இன்றி இன்னமும் வாடுகிறார்கள். நீதிபதி சதாசிவா- முன்னாள் சி.பி.ஐ தலைவர் சி.வி நரசிம்மன் குழுவின் பரிந்துரைகள் கடந்த டிசம்பரிலேயே அளிக்கப்பட்டும் கர்நாடக அரசும் தமிழக அரசும் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.

வீரப்பன் சகாப்தத்தை முடித்ததற்காக அதிரடிப்படையினருக்கு ஜெயலலிதா அரசு அள்ளிக் கொட்டும் பரிசுகள், சலுகைகள் அளவு கடந்தவையாக உள்ளன. நூலகத்துறைக்கு புத்தகங்கள் வாங்க இன்னும் ஒரே ஒரு கோடி ரூபாய் கூட அரசிடம் இல்லை. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் அதிரடிப்படைக்காக 50 கோடி ரூபாய் (மட்டுமே) செலவிட்டதாகக் கூறும் முதலமைச்சர் இப்போது ஒரே நாளில் அவர்களுக்கு இன்னொரு 50 கோடி ரூபாய் மதிப்புக்குப் பரிசுகளை அறிவித்திருக்கிறார்.

வீரப்பனை வீழ்த்தியதில் அதிரடிப்படையின் உழைப்பும், புலனாய்வும், புத்திசாலித்தனமும் பாராட்டுக்குரியவைதான். ஆனால் அதற்கு பதவி உயர்வு என்பதைத் தவிர வேறு எந்தப் பரிசு தருவதும் நியாயமல்ல.

வீரப்பன் வேட்டையில் உயிரிழந்த காவலர்களின் தியாகம் நிச்சயம் குறிக்கத் தக்கதுதான். ஆனால் வீரப்பனை இத்தனை காலம் வளர்த்த, அவனால் பயனடைந்த சந்தன மர- யானைத் தந்த வியாபாரிகள், மில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை தப்பிக்க விட்டுவிட்டது அந்தத் தியாகத்தை இழிவுபடுத்த வில்லையா ? நேர்மையான வீரர்களுக்கு பரிசு தருவது போலவே, அதிகார முறைகேடு செய்த காவலர்களுக்கு தண்டனை தருவதும் ஓர் அரசின் கடமை. உண்மையில் அதுதான் நேர்மையான காவலர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையும் கூட.

வீரப்பன் கொலையில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. மோதல் எப்படி நடந்தது ? என்று நடந்தது ? அதிரடிப்படை சொல்லும் கதையில் எவ்வளவு சதவிகிதம் வரை உண்மை ? வீரப்பனின் டைரிகள் சிக்கியதாக ஒரு பத்திரிகை சொல்லுகிறது. அதிலிருந்து தகவல்களை வெளியிடுகிறது. இன்னொரு பத்திரிகையில் அதிரடிப்படை அதிகாரி எந்த டயரியும் கைப்பற்றப்படவில்லை என்கிறார்.

இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் எழுப்பும் கேள்விகளை சந்திக்க ஏன் அரசோ, அதிகாரிகளோ தயங்க வேண்டும் ? எந்த மோதல் கொலையாக இருந்தாலும் தேசிய மனித உரிமை ஆணையப் பரிந்துரையின்படி அதில் பங்கேற்ற காவலர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். விசாரணையில் மோதல் நியாயமக நடந்தது என்று நிரூபிக்கும் கடமை காவல் துறையுடையது. இதைப் பின்பற்ற அரசு ஏன் தயங்க வேண்டும் ?

வீரப்பன் விஷயத்தில் மனித உரிமை என்றெல்லாம் பேசவே கூடாது என்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வி.ஆர்.லட்சுமி நாரயணன் போன்ற சில அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அவன் ஒரு மிருகம். மனிதனே அல்ல. இதில் மனித உரிமை எங்கிருந்து வந்தது என்பது அவர்களின் முதல் வாதம். இந்த வாதத்தை ஒப்புக் கொண்டால், மிருகம் போல நடந்து கொள்ளும் யாரையும் யாரும் சுட்டுத் தள்ளலாம் என்று ஆகிவிடும். இதையே ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுள்ள நக்சல்பாரிகள் சொன்னால் அது ஏற்கப்படுமா ? ஏழைக் கூலிகளுக்கு நியாயமான கூலி தராமல் கொத்தடிமைகளாக அவர்களைக் கொடுமைப்படுத்தும் நிலப்பிரபுக்கள், ஏழைப்பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் அதிகாரிகள்- காண்ட்டிராக்டர்கள் முதலியோர் என்ன மனிதர்களைப் போலவா நடந்து கொள்கிறார்கள் ? மிருகங்களாகத்தானே நடக்கிறார்கள். அவர்களை மக்கள் சுட்டுக் கொன்றால் அதை வி.ஆர்.லட்சுமி நாராயணன் போன்றோர் எற்பார்களா ? அல்லது அப்படி சுட்டுக்கொல்லும் உரிமை காவல் துறைக்கு மட்டுமே உரியது என்பார்களா ?

இவர்களின் இரண்டாவது வாதம் மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் வீரப்பன் பல அப்பாவி மக்களையும் காவலர்களையும் கொன்றபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? அப்போது ஏன் வரவில்லை என்பதாகும். இது ஒரு மகாஅசட்டுத்தனமான வாதம். வீரப்பன் சட்டத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்படுவதாக அறிவித்துக் கொண்டு பகிரங்கமாக வாழ்கிறவன் அல்ல. அதை ஏற்காத ஒரு கிரிமினல். அவனிடம் எப்படி யாரும் போய் மனித உரிமை பற்றி பேச முடியும் ? ஆனால் அரசாங்கமும், காவல் துறையும், காட்டிலாகாவும் அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் அதைக் காப்பாற்றவே இயங்குவதாக பிரகடனப்படுத்திவிட்டு இயங்கும் அமைப்புகள். அவை சொன்னபடி செய்யாமல் சட்ட விரோதமாக நடந்து கொண்டால் அதைக் கேள்வி கேட்பது மனித உரிமை ஆர்வலர்களின் கடமை. அவ்வளவுதான். வீரப்பனைக் கேட்க முடியாது இல்லையா ? எங்களையும் கேட்காதே என்று பதில் சொன்னால் என்ன அர்த்தம் ? வீர்பபனைப் போல நாங்களும் சட்டத்தை மதிக்காத கிரிமினல்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலமாக அல்லவா அது ஆகிவிடுகிறது ?

மனித உரிமை அமைப்புகளின் நோக்கம் கிரிமினல்களை, குற்றவாளிகளைக் காப்பாற்றுவது அல்ல. அவர்களை சட்டத்துக்குட்பட்ட முறையில் விசாரித்து சட்டப்படியான தண்டனைக்குள்ளாக்கவேண்டும் என்பதுதான். சட்டத்தை மீறி செயல்பட அரசாங்க அமைப்புக்கு அனுமதி கொடுத்தால், அது கிரிமினல்களை மட்டுமல்ல, சாதாரண அப்பாவி மக்களையும் சேர்த்தேதான் பாதிக்கும். அத்தகைய பாதிப்பிலிருந்து எல்லா மக்களையும் பாதுகாப்பதுதான் மனித உரிமை கோட்பாடு.

கிரிமினல் வீரப்பன் விவகாரத்தில் இன்னொரு கிரிமினலாக இருப்பது மீடியா. எந்தப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது. பரபரப்பான விற்பனைக்காக எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற அணுகுமுறையை கிரிமினல் அணுகுமுறை என்றுதான் வர்ணிக்க வேண்டும்.

வீரப்பனை வளர்த்த, பயன்படுத்திய, லாபத்தை அனுபவித்த கடத்தல் லாரி அதிபர்கள், சந்தனத் தைல மில் அதிபர்கள், யானைத் தந்த வியாபாரிகள், லஞ்சம் பெற்ற அதிகாரிகள், ஒத்துழைத்து ஆதாயமடைந்த அரசியல்வாதிகள் என்று இதர கிரிமினல்கள் ஒருவரைப் பற்றியும் இத்தனை ஆண்டுகளில் மீடியா துப்பறிந்து அம்பலப்படுத்தவில்லை. வீரப்பனின் பேட்டி, வீடியோ, சாகச பேட்டிகள், திரை மறைவு ரகசியங்கள் என்று அவனை தனி நபர் மாயாவி, சாகசக்காரனாக உருவகப்படுத்தி பயன்படுத்தி பணம் சம்பாதித்த புலனாய்வு இதழ்களும் மீடியாவும் தங்கள் சக்தியை ஏன் இதற்கு இதுவரை பயன்படுத்தவில்லை ? இதுவும் உடந்தையாக இருந்த குற்றம் ஆகாதா ?

பத்திரிகைகளின் சுயநலம் அருவெறுப்பூட்டுகிறது. வீரப்பனை முதன் முதலில் பேட்டி கண்டு அவன் தரப்பையும் வாசகர்களுக்குத் தெரிவித்த அளவில் பத்திரிகைக்குரிய கடமையை சிறப்பாகச் செய்ததாகவே நக்கீரனின் முதல் கட்ட புலனாய்வைக் கருத வேண்டும். ஆனால் தொடர்ந்து அதையே தன் விற்பனைக்கான உத்தியாக்கி இதழை வளர்த்துக் கொண்ட பத்திரிகை, வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு அவன் கிரிமினல்தான்; அவனை ஒழித்தது சரிதான். அவனால் பாதிப்புக்குள்ளான ஆதிவாசி மக்கள் பற்றி மட்டுமே எங்களுக்குக் கவலை என்று கூசாமல் எழுதுகிறது. காட்டுக்குள் தூது போய்க் கொண்டிருந்த சமயங்களில் இவ்வளவு தெளிவாக இதைச் சொல்லாமல் தடுத்தது எது ? அவனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஆதரித்த நிலையிலிருந்து இப்படி மாறியது எதனால் ?

வீரப்பன் இறுதிச் சடங்கையொட்டி வீரப்பன் மகள்களின் புகைப்படங்களை போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டிருக்கிறது மீடியா. தொடர்ந்து அவர்களுடன் பேட்டிகள். அந்த சிறுமிகளின் அந்தரங்க சுதந்திரத்தைப் பாதுகாக்க அவர்களின் வழக்கறிஞர்களும் தவறிவிட்டார்கள். பத்திரிகைகளும் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை. நான் பெரியவளான பிறகு என் அப்பாவை சுட்டுக் கொன்றவர்களை சுட்டுக் கொல்வேன் என்று ஒரு மகள் கூறியதாக தினமணி, ஜுனியர் விகடன் இரண்டு ஏடுகளும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தரம், பொறுப்புணர்ச்சி இரண்டுக்கும் முக்கியத்துவம் தருவதாக நம்பப்படும் இந்த இதழ்கள் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருப்பதே கண்டனத்துக்குரியது. அந்தச் சிறுமி அப்படி சொல்லியிருப்பாளா என்பதே சந்தேகத்துக்குரியதுதான். உணர்ச்சிவசப்பட்டு அப்படி சொல்லியிருந்தால் கூட, பத்திரிகை நிருபரும் ஆசிரியர் குழுவும் அதை வெளியிடாமல் இருப்பது அவசியம். எத்தனையோ அரசியல்வாதிகள் தங்களிடம் மனம் விட்டுச் சொல்லும் ரகசியங்களையெல்லாம் பாதுகாக்கிற நிருபர்கள் இதைச் செய்ய தவறியது குழந்தைகள் விஷயத்தில் நுட்பமன உணர்வுகள் நமது பத்திரிகையாளர்களுக்கு இன்னமும் இல்லை என்பதையே காட்டுகிறது.

வீரப்பன் விஷயத்தில் அரசியல்வாதிகளின் பாத்திரம் ஒரு புறம் மர்மமானதாகவும் மறு புறம் அலட்சியமானதாகவும் இருக்கிறது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் கொள்ளைக்காரர்கள், கிரிமினல்கள், காட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அட்டகாசம் செய்திருக்கிறார்கள். வி.பி.சிங் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த போது, அவரது சகோதரரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அந்த மாநிலங்களில் எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்களால் கொள்ளையர்களை சரணடைய வைக்க முடிந்தது. பூலான் தேவி போன்ற ஒருவரை பொது வாழ்க்கைக்கே அழைத்து வர முடிந்தது. ஆனல் தமிழ் நாட்டில் வீரப்பன் பிரச்சினை கூட தி.மு.க- அ.தி.மு.க போட்டி அரசியலுக்கான ஒரு விஷயமாக மாற்றப்பட்டுவிட்டது.

வீரப்பன் இறந்த பிறகு அவன் சமாதியில் பா.ம.க கொடி நடப்படுகிறது. அவன் மனைவி முத்து லட்சுமியை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சிகள் தொடங்கி விட்டன. குழந்தைகள் படிப்புக்காக வீடு தேடிப் போய் சாதி விஸ்வாச அடிப்படையில் வீர வன்னியர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். இந்த அமைப்புகளெல்லாம் வீரப்பனை சரணடையச் செய்வதிலும் அவனை வளர்த்த ஊழல் பேர்வழிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவதிலும் அக்கறை காட்டவில்லை.

வீரப்பனை ஒரு தமிழ் தேசிய வாதியாகக் காட்டவும் புரட்சியாளனாக சித்தரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அபத்தமானவை மட்டுமல்ல. ஆபத்தானவையும் கூட. தமிழ்மக்கள் நலன் எதையும் வீரப்பன் போன்ற கிரிமினல்கள் தலைமையில் சாதிக்கவே முடியாது என்பது மட்டும் அல்ல. அப்படிப்பட்ட சக்திகளை அரசியல் தலைமையாக வளர்ப்பது தமிழர் நலனுக்கு எதிராகத்தான் முடியும். ஏற்கனவே அரசியலுக்கு வந்தபின் கிரிமினல்களாக மாறிவிடுவோரின் கீழ் தமிழ்ச் சமூகம் திணறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கிரிமினல்களாக உள்ளவர்களையும் தலைவர்களாக்கி அரசியலுக்கு அழைத்து வருவது இன்னும் ஆபத்தானது.

வீரப்பன் விவகாரம் மீடியாவில் இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் ஓய்ந்துவிடும். அவர்களுக்குத்தான் சிவகாசி ஜெயலட்சுமி, கஞ்சா செரினா, அண்ணாச்சி ஜீவஜோதி என்று பல காமதேனுக்கள் இருக்கிறார்களே.

தேர்தல் சமயத்தில் சில அரசியல் லாபங்களுக்காக வீரப்பன் விவகாரம் டைரி தகவல்கள், வழக்குகள் என்ற ரூபத்தில் மறுபடியும் தலை தூக்கலாம்.

ஆனால் வீரப்பன் விவகாரத்தில் முழுமையான நியாயம் வரவேண்டுமென்றால், 1) வீரப்பனின் அட்டூழியங்களுக்கு உடந்தையாக இருந்து பயனடைந்து வந்த அத்தனை பிரமுகர்களும் வர்த்தகர்களும் வன அதிகாரிகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். 2) வீரப்பன் – அதிரடிப்படை மோதலில் பாதிக்கப்பட்ட அத்தனை மலை வாழ் மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். 3) வீரப்பனால் இது வரை கிடைத்த ஒரே நன்மை வனப்பகுதியின் இயற்கை வளம் அரசு-காண்ட்ராக்டர்கள் கூட்டால் அழிக்கப்படாமல் இருந்ததுதான். அது தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும். 4) தந்தையின் குற்றத்துக்காக தாங்களும் தண்டிக்கப்படாமல் தங்கள் வாழ்க்கையை அமைதியாகத் தொடரும் வாய்ப்பு வீரப்பனின் மகள்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.

பல உண்மைகள் ஒரேயடியாக புதைந்து போய்விட்டன என்பது தவிர வீரப்பன் மரணம் குறித்து வருத்தப்பட ஏதுமில்லை.

என்னளவில் ஒரே ஒரு கேள்வி மிஞ்சி நிற்கிறது.

வீரப்பனால் ஒரு முறை கடத்தப்பட்ட வன வளப் புகைப்ப்டக்காரர்கள் கிருபாகர்- செனானி இருவரும் வீரப்பன் இறந்தபிறகு அளித்திருக்கும் பேட்டியில் வீரப்பனுக்கு காடுகள், காட்டு உயிரினங்கள் பற்றி இருந்த அறிவை தாங்கள் அடைவது பற்றி எந்த ஒரு உயிரியல் விஞ்ஞானியோ வனவள அறிஞரோ கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

அத்தனை அறிவும் இப்படி வீணாகப் போனது ஏன் ?

ஏன் கிரிமினல்கள் புத்தி சாலிகளாகவும், நல்லவர்கள் அத்தனை புத்திசாலித்தனமில்லாதவர்களாகவும் இருக்கும் சமூகமாக நாம் இருக்கிறோம் ?

இந்தக் கேள்விக்கான விடைகளில்தான் ஏன் வீரப்பன் மட்டும் சிக்கினான், அவனுடைய கூட்டாளிகள் அம்பலமாகவில்லை, ஏன் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை, ஏன் அதிரடிப்படைகளுக்கு பம்பர் பரிசுகள் கிட்டுகின்றன, ஏன் மீடியா இப்போது இருக்கிற நிலையில் இருக்கிறது போன்ற கேள்விகளுக்கும் விடைகள் ஒளிந்திருக்கக்கூடும்.

தீம்தரிகிட நவம்பர் 1-15 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி