சொற்களின் சீனப்பெருஞ்சுவர்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

நாகூர் ரூமி


இப்படித் தொடங்கினால் எப்படி ? ஆவதும் சொல்லாலே, அழிவதும் சொல்லாலே. ஆம். உண்மைதான். சாதாரண உண்மையல்ல இது. இது சத்தியம் என்று உங்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்வேன். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்லி வைத்திருப்பதுகூட ஒரு உள் நோக்கம் கொண்ட, ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகின்ற கூற்று என்று வாதிட முடியும். அதில் நியாயமும் இருக்கலாம். ஆனால் இந்த சொல் இருக்கிறதே, அது அப்படியல்ல. இன்று நடந்து கொண்டிருக்கும் எல்லா அட்டூழியங்களும் சொற்களால், சொற்களைக் கொண்டு, சொற்களுக்காக நடந்து கொண்டிருப்பவைதான் என்று சொன்னால் அது மிகையே ஆகாது. சொற்களால் செய்யப்படும் இந்த யுத்தம் மனிதனை மனிதனிடமிருந்து தூரமாக்குகிறது. இதைப் புரிந்துகொள்ளும்போது நமக்குள் ஒரு நெருக்கம் ஏற்படலாம். அதற்காகத்தான் இந்த கட்டுரை.

‘ஆங்கில மொழியின் அரசியல் ‘ (The Politics of the English Language) என்று ஜார்ஜ் ஆர்வெல் ஒரு அற்புதமான கட்டுரை எழுதினார். அதில் pacification என்ற சொல்லை அரசியல் வாதிகள் எதைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள் என்று விளக்குவார்.

அமைதிக்காக ஒரு போர்

போருக்குப் பின்

ஒரே அமைதி (நதியின் கால்கள்)

இது நான் எழுதிய கவிதைதான். ஆர்வெலின் வாதமும் இக்கவிதை சொல்வது போன்றதுதான். படுகொலை செய்வதைத்தான் வல்லரசில் இருந்த அரசியல் வாதிகள் ‘அமைதிப்படுத்துதல் ‘ (அதாவது ‘pacification ‘) என்ற சொல்லால் குறித்தனர் என்றும், இப்படிச் சொல்வதன் மூலம் எப்படி மொழி அரசியலாக்கப்படுகிறது என்பதையும் அவர் விளக்குவார்.

இன்றைக்கு உலகம் முழுவதுமே இவ்வித அரசியலாக்கத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்வார்களே. அதுதான் இன்று உலகெங்கிலும் நடந்துகொண்டுள்ளது. ஒரு இளம் விதவைப் பெண்ணை வலுக்கட்டாயமாக, இறந்த கணவனின் சிதையோடு சேர்த்து கட்டிவைத்து கொளுத்திவிட்டு, ‘சதி மாதா கி ஜே ‘ என்று கோஷமிடுவது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கீறி, சிசுவை வெளியில் பிடுங்கி எடுத்து, தீயில் வீசும்போது, ‘ஜெய் ராம் ‘ என்று சொல்வது, வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்க்கையை அடகுவைத்து அந்நிய மண்ணுக்கு வந்து ஊழியம் செய்து கொண்டிருந்த ஒரு அப்பாவியைப் பிடித்து, அவன் கழுத்தை கத்தி கொண்டு அறுத்து, தலையை தனியே எடுத்து மேலே தூக்கிப் பிடித்து, ‘அல்லாஹு அக்பர் ‘ என்று கத்துவது – இப்படி மனிதன் செய்கின்ற அக்கிரமங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதன் பின்விளைவுகள் பெரும்பாலும் வார்த்தைகளால் விளைகின்றன.

‘அல்லாஹு அக்பர் ‘ என்று சொல்லி கழுத்தை அறுப்பதற்கு பதிலாக, ‘ராம் ‘ என்றோ, ‘ஜீஸஸ் ‘ என்றோ சொல்லியிருந்தால் அந்த நிகழ்ச்சியின் நிறமே மாறிவிடும். சொல்லில்தான் எல்லாமே இருக்கிறது. ‘அல்லாஹு அக்பர் ‘ என்று சொல்லிவிட்டதால், அவன் ஒரு முஸ்லிம் தீவிரவாதி. மனசாட்சியைப் பொரித்துத் தின்றுவிட்ட அயோக்கியன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தீவிரவாதியாக இருக்கும் சாத்தியம் உண்டு. ஆனால் சொற்களைக் கொண்டு இதை நீட்டிப் பார்க்கும்போதுதான் சத்தியம் சிதைக்கப்படுகிறது. அப்படிச் சொல்லி ஒரு கொலை செய்ததால், அல்லாஹ்தான் திருக்குர்ஆனில் கொலை செய்யச் சொல்கிறான் என்ற வாதமும், ‘வியாக்கியானங்களும் ‘ அதற்கான ‘ஆதாரங்களும் ‘ எடுத்துக் காட்டப் படுகின்றன! இத்தகயை ‘அறிவார்ந்த ‘ செயல்களின் இறுதி விளைவு என்னவாக இருக்கும் ? வெறுப்பும் கசப்பும்தான்.

போரில் வெல்லப்பட்ட பொருள்களில் தனக்குக் கொடுத்தவை போதவில்லை என்று ஒரு கவிஞன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் குறை கூற, அவன் நாக்கை வெட்டும்படி அவர்கள் சொன்னார்கள். உடனே அந்த கவிஞனது நாக்கை வெட்ட ஒருவர் வாளை உறுவிவிட்டார். ஆனால் கூட இருந்த அலீ (ரலி) அவர்கள், நாயகம் சொன்னதன் அர்த்தம் அதுவல்ல என்றும், அவனுக்கு மேலும் சில பொருட்களைக் கொடுத்து, அவனை மேற்கொண்டு பேசாமல் அமைதிப் படுத்துங்கள் என்பதைத்தான் நபிகள் நாயகம் அப்படிச் சொன்னார்கள் என்று சொல்லி அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது.

நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலேயே, அவர்கள்கூட இருந்தவர்களுக்குள்ளேயே அவர்களுடைய சொற்களை சரியாகப் புரிந்துகொள்வதில் இப்படிப் பட்ட பிரச்சனைகள் இருந்திருக்குமானால், கிட்டத்தட்ட 1425 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுடைய பேச்சையும், திருக்குர்ஆனில் உள்ள வசனங்களையும் வைத்து இன்று இது இப்படித்தான், அது அப்படித்தான் என்று வியாக்கியானம் செய்து கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?

நானே வர்ணங்களைப் படைத்தேன் என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். மனிதனை மனிதன் வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவன் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்பது ஒரு சாராரின் வாதம். இல்லை, அப்படியல்ல, அதன் உட்கருத்து வேறு மாதிரியாக உள்ளதாகும். அது ஜாதி சம்பந்தப் பட்டதல்ல, அது மனம் சம்பந்தப்பட்டது என்பது இன்னொரு சாராரின் விளக்கம். இதில் பிரச்சனையை அமைதிப்படுத்தும் விளக்கம் எது ?

வேதங்களில் யான் சாம வேதம் ; தேவரில் இந்திரன் ; புலன்களில் மனம் யான் ; உயிர்களிடத்தே உணர்வு யான்

என்று கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்வதாக கீதையின் பத்தாவது அத்தியாயமான விபூதி யோகம், 22வது ஸ்லோகம் சொல்லுகிறது. ஓஹோ, அப்படியா ? அப்போ, கிருஷ்ணன் இந்திரனைப் போல பிறன் மனைவி விழைபவன் என்று குறிப்பால் உணர்த்துவதாக புரிந்துகொண்டால், தவறு யார் மீது ?

ஜீஸஸ் பேசிய மொழி எபிரானி. பழைய ஏற்பாடு முதன் முதலில் ஹீப்ரூ மொழியில்தான் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இப்போது உள்ள பைபிள் வெறும் மொழிபெயர்ப்புதான். அதனால் அதை முழுமையாக நம்ப முடியாது. உண்மையான பைபிளில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற கருத்து வைக்கப்படவே இல்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கவில்லை. இப்படிப் பலப்பல வாதங்கள்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை ஜீஸஸ் கடவுளின் மகன். அவர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். முஸ்லிம்களுக்கு ஜீஸஸ் ஒரு இறைத்தூதர். அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் உயிர் போகவில்லை. அவரை இறைவன் மேலே தூக்கிக் கொண்டான். இருக்கட்டும். இதில் எது உண்மை என்று நீருபிக்க எடுத்துக் கொள்ளும் மொழிசார்ந்த முயற்சிகளினால் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் அன்பும் உறவும் ஆழமாகப் போகிறதா என்ன ?

ராமர் அயோத்தியில்தான் பிறந்தார். அதுவும் பாபர் கட்டிய மசூதியில்தான் பிறந்தார். இல்லை ராமன் ஒரு வரலாற்று பாத்திரமே அல்ல. இல்லை பாபர் ஏற்கனவே இருந்த ஒரு கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார். இல்லை பாபர் உண்மையில் அப்படியெல்லாம் செய்யவில்லை. உள் நோக்கம் கொண்ட உங்கள் அகழ்வாராய்ச்சிகள் தரும் ஆதாரங்கள் யாவும் பொய்யானது. இது அரசியல் சூழ்ச்சி. நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லை இது உணர்ச்சி சார்ந்த விஷயம். முஸ்லிம்களின் கடைகளின் எந்தப் பொருளும் ஹிந்துக்கள் வாங்கக் கூடாது. இப்படி வாதப் பிரதிவாதங்கள். இதனால் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அன்பு வளருமா ? இந்தியா சுதந்திரமடைந்தபோது கோவிலாக இருந்தது கோவிலாகவும், தேவாலயமாக இருந்தது தேவாலயமாகவும், மசூதியாக இருந்தது மசூதியாகவும் இருக்கட்டும் என்று சொல்கின்ற, நினைக்கின்ற மனம் ஏன் யாருக்கும் வராமல் போனது ?

இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவென்ன ? அரபி, ஆங்கிலம், தமிழ், உர்து, ஹிந்தி, சமஸ்க்ருதம், ஹீப்ரூ, லத்தீன், கிரேக்கம், எபிரானி என எல்லா மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்றால் அதுதான் இல்லை. தீர்வதற்கு பதிலாக பிரச்சனை இன்னும் தீவிரமடையலாம்.

ஒரு சின்ன உதாரணம். ‘ஜகாத் ‘ என்றால் அரபியில் ‘தூய்மை ‘ என்று பொருள். திருக்குர்ஆனில் ‘தொழுங்கள், ஜகாத் கொடுங்கள் ‘ என்று இறைவன் கூறுவதாக வருகிறது. அரபு நாட்டவருக்கு அரபி தாய்மொழி என்பதால் இந்த வசனத்துக்கு அர்த்தம் புரிந்துவிடுமா என்றால் அதுதான் இல்லை. ஏனெனில் வெறும் தூய்மை என்ற பொருளில் அது அருளப்படவில்லை. ‘ஜகாத் ‘ என்பது பணக்காரர்கள் தங்கள் வருமானத்திலிருந்து ஏழைகளுக்காக கொடுக்க வேண்டிய தொகையின் அளவு என்றும், அது 2.5 விழுக்காடு என்றும், அது வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றும், அதன் மூலம் அவர்களுடைய வருமானம் தூய்மையடைகிறது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது!

ஒரிஜினல் மொழி அல்லது ஆதி மொழி என்பது இதயத்தின் பேச்சுதான். அந்த பேச்சின் மொழிபெயர்ப்பாகத்தான் இந்த உலகத்தில் உள்ள மொழிகள் அனைத்தும் இருக்கின்றன என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் பிரச்சனை ஓரளவு அமைதியடையலாம். ஹதீஸில் இதற்கான குறிப்பு உள்ளது.

நபிகள் நாயகத்துக்கு எப்படி இறைவன் செய்திகளைக் கொடுத்தான் என்பதைப் பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன. அதில் ஒன்றில், தேனீக்களின் ரீங்காரத்தைப் போலவும், மணியோசை போலவும் இறைச்செய்தி வந்ததாக சொல்லப்படுகிறது. மிகமிக முக்கியமான ஒரு உண்மையை மிக சூசகமாகவும் ரொம்ப அழகாகவும் சொன்ன ஹதீஸ் இது. இறைவனின் செய்தி என்பது மொழி கடந்தது என்ற உண்மையை இது உணர்த்துகிறது. அப்படியானால், மொழியை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமானது ?

விளக்கங்கள் யாவும் நமது பாண்டித்தியத்தைக் காட்டலாமே தவிர, அது மனிதர்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க உதவும் என்று சொல்ல முடியாது. இதுவரை வரலாறு கண்ட பாண்டித்தியங்கள் எல்லாம் மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைக்கத்தான் பெரும்பாலும் பயன்பட்டுள்ளன.

மன்ஸூர் அல்ஹல்லாஹ் என்று ஒரு சூஃபி இருந்தார். அவர் ஒரு நாள் இறைத்தியானத்தில் இருந்தபோது, ‘அன்தல் ஹக் ‘ என்று சொல்வதற்கு பதிலாக, ‘அனல்ஹக் ‘ என்று சொல்லிவிட்டார். ‘ஹக் ‘ என்றால் ‘உண்மை ‘ என்று பொருள். ‘அன்தல் ஹக் ‘ என்றால் ‘நீதான் உண்மை ‘ என்று பொருள். ‘அனல்ஹக் ‘ என்றால் ‘நான்தான் உண்மை ‘ என்று பொருள்.

‘ஹக் ‘ என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாக இருப்பதனால், ‘அன்தல்ஹக் ‘ என்பது ‘நீதான் அல்லாஹ் ‘ என்றும், ‘அனல்ஹக் ‘ என்பது ‘நான்தான் அல்லாஹ் ‘ என்றும் பொருள்படும். எனவே, இறைவனுக்கு இணை வைத்த ‘குற்ற ‘த்துக்காக அவரை வெட்டி கடலில் போட்டனர் சட்ட வல்லுணர்கள்! உயிர் துறப்பதற்கு முன் அவர், ‘இறைவா, எந்த உண்மையை நீ எனக்குக் காட்டி, மக்களுக்கு மறைத்தாயோ, அதை எனக்கும் மறைத்திருந்தால் எனக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது. இறைவா, எந்த உண்மையை நீ எனக்குக் காட்டி, மக்களுக்கு மறைத்தாயோ, அதை மக்களுக்கும் காட்டியிருந்தால், எனக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது ‘ என்று இறைஞ்சினார்! நீ என்பதற்கு பதிலாக நான் என்று சொன்னதால் ஒரு ஞானியின் உயிர் வாங்கப்பட்டது!

ஒருமுறை புத்தரை ஒருவன் வேசியின் மகனே என்று திட்டினானாம். புத்தர் அதற்கு ஒன்றுமே சொல்லவில்லையாம். ஏனிப்படி இருந்தீர்கள் என்று வெகுண்டெழுந்த சிஷ்யர்கள் கேட்டதற்கு, ‘அவன் சொன்னதை நான் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் சொன்னது உண்மையில்லை. உண்மையல்லாத ஒரு விஷயத்துக்கு நான் ஏன் கோபப்பட வேண்டும் ? ஒருவேளை அவன் சொன்னது உண்மையாக இருக்குமானால், உண்மையைச் சொன்னதற்காக ஒருமனிதன்மீது நான் ஏன் கோபப்பட வேண்டும் ? ‘ என்றாராம்!

இது வரலாறா அல்லது கற்பனையா என்பது இங்கே முக்கியமல்ல. வார்த்தைகளால் தூண்டப்பட்டு செயலாற்றுவதை புத்தர் தவிர்த்திருக்கிறார். தனது தர்க்க ஞானத்தின் மூலம் மற்றவர்களின் வாயை அடைத்திருக்கிறார். வார்த்தைகளால் ஏற்படப் போகும் துன்பத்தை அறிந்து அதிலிருந்து விடுபட்டிருக்கிறார். அதுதான் செய்தி. உண்மையான ஞானமும் அதுவாகத்தான் இருக்க முடியும். ஒரு புத்தரால்தான் அப்படி இருக்க முடியும் என்பதல்ல. எல்லா கெளதமர்களும் புத்தர்களாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

மனிதர்களில் பெரும்பாலோர் மொழியின் ஆழங்களுக்குச் செல்லத் தெரியாதவர்கள் என்பதால்தான், சூஃபி ஞானிகள் அவர்களுடைய அனுபவங்களை பரிமாறிக்கொள்வதற்கு புதிய மொழி வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். ஆன்மீகப் பாதையில் எதையும் மொழியின் வழியாக விளக்குவதில்லை. எல்லாம் ‘ஸீனா-ப-ஸீனா ‘ என்று சொல்லப்படும் இதயத்திலிருந்து இதயத்துக்குத்தான்!

ஒருமுறை கல்லூரி முதல்வர் ஒருவர், குறிப்பிட்ட ஒரு ஆங்கிலப் பேராசிரியரை தான் அழைத்ததாகச் சொல்லும்படி ப்யூனிடம் சொல்லியனுப்பினார். அந்த ப்யூனுக்கு ரொம்ப நாளாக ஆங்கிலத்தில் பேசி தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று ஆசை. அவன் அந்த பேராசிரியரிடம் வந்து, ‘Sir, Principal Wanted ‘ என்று சொன்னான்! இப்படித்தான் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்துகொண்டுள்ளது! பிள்ளையார் பிடிக்க, குரங்குகளாய் வந்துகொண்டிருக்கின்றன!

ஒரு சின்ன சொல்லை, எப்படி எந்த இடத்தில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் சொன்ன காரணத்தால், பல குடும்பங்கள் இன்று ஜென்மப் பகையாகி பிரிந்து கிடக்கின்றன. தாயிடமிருந்து பிள்ளையும், கணவனிடமிருந்து மனைவியும், சகோதரனிடமிருந்து சகோதரனும், நண்பனிடமிருந்து நண்பனும்.

பாலுவும் கோமுவும் கணவன் மனைவி. இருவரும் பேசிக்கொள்கிறார்கள். கேளுங்கள்.

‘கோமு, டாக்டரா இருக்குற ஒன்னெ அடையிறதுக்கு நா எவ்வளவு குடுத்து வச்சிருக்கணும் தெரியுமா ? ‘

‘நல்ல லீடிங் இஞ்சினியரா இருக்குற ஒங்களெப் புருஷனா அடையிறதுக்கு நா எவ்வளவு குடுத்து வச்சிருக்கணும் தெரியுமா ? ‘

‘கோமு, ஒன்னெவிட நா தான் குடுத்து வச்சவன் ‘

‘இல்லை பாலு, நா தான் ஒங்களெவிடக் குடுத்து வச்சவ ‘

‘இல்லெ கோமு, நா தான் குடுத்து வச்சவன் ‘

‘இல்லெ பாலு, நா தான் உண்மையிலேயே குடுத்து வச்சவ ‘

‘இல்லெ கோமு, நீ புரியாம பேசறே, நா தான் குடுத்து வச்சவன் ‘

‘இல்லெ பாலு, நீங்கதான் புரியாம பேசறேள், நா தான் குடுத்து வச்சவ ‘

‘என்ன நா சொல்ல சொல்ல நீ மறுத்து பேசிண்டே இருக்கே ? நா இப்ப முடிவாச் சொல்றேன். நாதான் குடுத்து வச்சவன். சரிதானா ? ‘

‘ஒங்களுக்கு சுத்தமா அறிவு பிசகியாச்சு. நா தான் குடுத்து வச்சவ. வச்சவ. வச்சவ. காதெ நன்னா தொறந்து கேட்டுக்கோங்க ‘

‘அட கோமாளிச் சனியனே, நா ஆரம்பத்திலேர்ந்து சொல்லிண்டே வர்றேன், நா தான் குடுத்து வச்சவன்னு. எதுத்து எதுத்தாப் பேசறே ? ‘

கோபி கிருஷ்ணனின் ‘தீராத பிரச்சனை ‘ என்ற சிறுகதையின் பகுதி இது. வயிறு புண்ணாகும் வரை சிரிக்க வைக்கும் இக்கதையின் சத்தியம்தான் என்னே!

நாய்கள் எலும்புத் துண்டுகளுக்காகவும், பன்றிகள் மலத்துக்காகவும் சண்டையிட்டுக் கொள்கின்றன. மனிதர்கள் வார்த்தைகளுக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இதில் ‘புனித ‘ மொழிகளுக்கான ‘புனித ‘ச்சண்டைகள் வேறு!

தனிமனிதர்கள், குடும்பங்கள், அரசியல் வாதிகள், அரசுகள் என எல்லா நிலைகளிலும், தளங்களிலும் மனிதர்கள் வார்த்தைகளால் ஆளப்படுகிறார்கள். வார்த்தைகளால் தூண்டப்படுகிறார்கள். வார்த்தைகளால் துண்டாடப் படுகிறார்கள். வார்த்தைகளுக்காக வாழ்கிறார்கள். வார்த்தைகளுக்காக சாகிறார்கள்.

இறைவணக்கம் என்பது பத்து பகுதிகளைக் கொண்டது. அதில் ஒன்பது பகுதிகள் மெளனமாக இருத்தலைத் தவிர வேறில்லை என்கிறது ஒரு ஹதீஸ்!

ஜோ பாத் தில் ஸே நிகல்தீ ஹே அஸர் ரக்தீ ஹே!

பர் நஹீ, தாகத்தே பர்வாஸ் மகர் ரக்தீஹே!

என்றார் கவிஞர் அல்லாமால் இக்பால்.

எந்த சொல் இதயத்திலிருந்து எழுகின்றதோ

அதுவே சக்தி மிக்கது!

சிறகுகள் இல்லை எனினும்

பறக்கும் திறன் கொண்டது அது! (தோராயமான தமிழாக்கம் எனது)

எவ்வளவு உண்மை! அப்படிப்பட்ட ஒரு சொல் கிடைக்கும் வரை, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்களை தகர்த்தெறிந்துவிட்டு, மெளனப் பெருவெளியின் அமைதியிலும் ஆனந்தத்திலும் திளைக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

2:35 AM 22 செப் ’04

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி