வாரபலன் அக்டோபர் 28,2004 –

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

மத்தளராயன்


வெங்கட்நாராயணா தெருவுக்குச் சில விசேஷங்கள் உண்டு.

விடிகாலையில் வீட்டு பால்கனியில் கையில் காப்பி கோப்பையோடு நின்று எட்டிப் பார்த்தால், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு லால்குடி ஜெயராமனும் எதிர்த்திசையில், சிவப்பு நிற டிராக் சூட் அணிந்து டி.ராஜேந்தரும் உலாவப் போய்க் கொண்டிருப்பார்கள். ‘மத்தளராயன் வீட்டு வாசலில் நிப்பாட்டுங்கப்பா ‘ என்று கிளம்பும்போதே காக்கி யூனிபாரம் போட்ட யட்சிணி கண்டிப்பாகச் சொன்னபடிக்கு வாரம் ஒரு முறையாவது பிரேக் டவுன் ஆன பல்லவன் பஸ் ஒன்று வாசலுக்கு நேரே நின்று கொண்டிருக்கும்.

மாதாமாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை காலை திருப்பதி தேவஸ்தானக் கோவில் வாசலில் அரை கிலோமீட்டருக்குச் சற்று அதிகமாக க்யூ நீளும். திருப்பதியிலிருந்து ஸ்பெஷலாக வந்து இறங்கும் புத்தம்புது லட்டு பிரசாதம் வாங்க க்யூவில் பொறுமையோடு காத்திருக்கும் யாரிடமாவது பெருமாளே நேரில் வந்து என்ன வேணும் என்று விசாரித்தால், இன்னும் ரெண்டு லட்டு என்று பதில் வரலாம். இதை வீட்டுக்கு வந்த புதிதில் எழுதிய நினைவு.

வாராவாரம் கோயில் மண்டபத்தில் வந்து மாண்டலின் ஸ்ரீனிவாஸோ, வீணை காயத்ரியோ, கத்ரி கோபால்நாத்தோ கிட்டத்தட்ட பக்தி சிரத்தையோடு முழுக் கச்சேரியே செய்யும்போது, சிமிண்ட் கோபுரத்தில் பதித்த இக்கிணியூண்டு ஒலிபெருக்கி மூலம் இசையும், பக்கத்து உடுப்பி ஓட்டல் ரவாதோசை வாசனையும் முதல்மாடிக்கு கலந்து எழுந்து வரும். கோவில் வாசலில் சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பூ விற்கும் பெண்கள், கூடைகளைத் தூக்கிக்கொண்டு போகச்சொல்லி பொலீஸ் விரட்டும்போது ஒற்றுமையாகி ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வார்கள். அவர்கள் பக்கத்தில் நாள் முழுக்கத் தோளில் மாட்டிய துணிப்பையோடு நின்று துளசித் தட்டோடு கோவிலுக்குள் தரிசனம் முடிந்து வருகிறவர்களிடம் ஆங்கிலத்தில் கையேந்தும் தாத்தா, மழை தூற ஆரம்பித்ததும் தெருவில் வரும் ஆட்டோ ரிக்ஷாவைக் கைகாட்டி நிறுத்தி ஏறிப் போவார்.

நவராத்திரி நேரத்தில் பாதி ராத்திரி வரைக்கும் பக்கத்து குஜராத்தி பள்ளி வளாகத்தில் குஜராத்தி டாண்டியா என்று டமார் டமார் என்று கொட்டி முழக்கி அ-குஜராத்தி சேட்டுக்களும், சேட்டிணிகளும் குல்ஃபியும் பேல்பூரியும் பாவ்பாஜியும் சாப்பிட்டு சற்றே சிரம பரிகாரம் பண்ணிக்கொள்ள நாட்டியமாக மெல்ல அப்படியும் இப்படியும் அசைவார்கள். வாசலில் வரிசையாக நிறுத்திய கப்பல் கார்களில் கொட்டாவி விட்டபடி ஸ்டாயரிங்கில் தலைவைத்துக் கவிழ்ந்திருக்கும் டிரைவர்களுக்கு சாயா விற்க அந்த அர்த்த ராத்திரியிலும் கெச்சலான ஒரு சேட்டன் சைக்கிளில் உருளைச் செம்போடு சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருப்பார்.

மழையோ வெய்யிலோ நாள் முழுக்க வாகன இரைச்சலில் அலுத்துப் போய் கொஞ்சம் உள்ளொடுங்கிய பக்கத்துத் தெருவில் குடித்தனம் மாறியதில் இந்த ஒலி ஒளிக்காட்சிகள் கிட்டாவிட்டாலும், தண்ணி லாரி வராத நேரங்களில் முழு அமைதி. என்னத்துக்கு அது என்று எதிர்ப்பட்ட குடியிருப்புக்கு ஒரு ஜீயர் சுவாமிகள் வந்து சேர்ந்தார்.

துணி பேனர். குத்து விளக்கு. வாசலில் பந்தல்கால். வாழைமரம். ஸ்டால் நாற்காலியில் மேற்பார்வைக்கு ஒரு தொண்டர். செருப்புக் காவலுக்கு நின்றபடிக்கு இன்னொருத்தர். பக்திப் புத்தக விற்பனை என்று மேஜை போட்டு நாற்காலி போட்டு அதில் கொண்டை போட்டு ஓர் அம்மணி. அப்புறம் ஒலிபெருக்கி. ராவாகப் பகலாக சத்விஷயங்கள் தவிர வேறு எதுவும் காதில் விழுவதே இல்லை.

ராத்திரி கூட்டம் அலைமோதுகிறது. லேப்டாப் கம்ப்யூட்டரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, வெள்ளைத்திரையில் ஒளி பரத்தி பவர் பாயிண்ட் பிரசண்டேஷனோடு சுவாமிகள் பகவத்கீதை பேருரை நிகழ்த்துகிறார். அது முழுக்க சுந்தரத் தெலுங்கில் என்பதால் மத்தளராயனுக்குப் புரிவதில்லை. ஆனாலும் முந்தாநாள் ராத்திரி தெரு முழுக்க கூட்டம். காரை தெரு முனையிலேயே நிறுத்தி விட்டு சுவாமிகளின் உபந்நியாசத்துக்குப் படியேற, அங்கே எல்லா வண்ணமும் கசியும் பழைய ஈஸ்ட்மென் கலர் தெலுங்குப் பக்தித் திரைப்படக் காட்சிகள் பெருந்திரையில். அங்கங்கே நடுவில் நிறுத்தி சுவாமிகள் ரஜோகுணமு, தமோகுணமு, மோக்ஷமு, பக்தி மார்க்கமு என்று மு-மு-மும்முரமாக இணப்புரையாற்றிக் கொண்டிருந்தார்.

தொலைக்காட்சியில் காம்பியர் பெண்கள் கொக்கு சுடுவதுபோல் இரண்டு கையைக் குவித்து நீட்டிக் கொண்டு செய்கிற வேலையில்லையோ இது ? இதை எப்படித் தெலுங்கில் கேட்க வேண்டும் ?

****

இலக்கிய விமர்சனத்தை ஆங்கிலத்தில் படிப்பது சுவாரசியமான விஷயம். முக்கியமாகத் தமிழ் புத்திலக்கியம் பற்றி.

இந்து பத்திரிகையில் வரும் விமர்சனங்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். முன்னொரு காலத்தில் செவ்வாய்க்கிழமை இந்து இணைப்பில் அசோகமித்திரன் நிறைய எழுதி, போதும் என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார். நீல பத்மனாபன் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அவ்வப்போது எழுதுவது பெரும்பாலும் மலையாள நாவலையோ, சிறுகதைத் தொகுப்பையோ தமிழில் மொழிபெயர்த்த புத்தகம் பற்றிய விமர்சனமாக இருக்கும். நல்ல கதை, சரளமான மொழிபெயர்ப்பு என்ற ரொட்டான் வாக்கியங்களுக்காக நீல பத்மநாபனைத் தொந்தரவு படுத்தாமல் இந்து நிருபரே இதை எல்லாம் எழுதிக்கொண்டு விடலாம்.

ஆங்கிலப் புத்தக விமர்சனத்துக்காகவே வெளிவரும் தி புக் ரெவ்யூ செப்டம்பர் இதழைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அதிரடியான ஒரு வாக்கியம் கண்ணில் பட்டது. ‘லாலு பிரசாத் யாதவ் கூடப் படிக்க விரும்பாத புத்தகம் ‘.

எந்தப் புத்தகத்தைப் பற்றி இப்படி ஒரு விமர்சனம் என்று பார்த்தால், அது புக் ரிவ்யூ விமர்சகர் சித்தார்த் சாட்டர்ஜி எழுதியதில்லை. தில்லியிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல நாளேடு எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ‘The bus stopped ‘ என்ற நாவல் பற்றி எழுதியது. தபீஷ் கெய்ர் எழுதிய இந்த நாவலைப் படிக்க எடுத்ததற்கே இந்த முட்டாள்தனமான விமர்சனம்தான் காரணம் என்கிற எழுத்தாளர் சித்தார்த் சாட்டர்ஜி, நாவலுக்கு நல்ல மதிப்புரைதான் தருகிறார்.

லாலு பிரசாத் யாதவை ஏதாவது சாக்கு வைத்துக் கிண்டல் பண்ணுவது மூக்கு விடைத்த இந்தியக் கனவான்களின் பழக்கம். அதே கல்லில் இலக்கியவாதிகளையும் குறிவைத்துத் தில்லி ஆங்கிலப் பத்திரிகை செய்ததற்கு உவமையாகச் சொல்ல சு.ராவின் ஜெ.ஜெ சில குறிப்புகள் காட்சி தான் நினைவு வருகிறது. மழை நேரத்தில் பசுமாடு மேல் வெற்றிலை எச்சிலைத் துப்புகிறவனுடைய சித்தரிப்பு அது.

ஜெ.ஜெ சில குறிப்புகள் பற்றியும் புக் ரிவ்யூ இதழில் உண்டு. அந்த நாவலை சலபதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, கதா வெளியீடான JJ – Some Jottings பற்றி என்.எஸ்.ஜகன்னாதன் எழுதிய விமர்சனம் அது. மொழிபெயர்ப்புக்கான விமர்சனம் என்பதைவிட மூல நூலுக்கான விமர்சனம் என்றே இதைக் கொள்ளலாம்.

சு.ராவைப் பற்றி என்.எஸ்.ஜெ சொல்லும்போது ‘lapsed communist என்ற பதத்தைப் பயன்படுத்துவதை எப்படி எடுத்துக் கொள்வது என்று விளங்காமல் நண்பரைக் கேட்க, அவர் சொன்ன பொருள் இது –

‘A lapsed Communist is one who once was a member of the party or a fellow traveller and who had later given up the ideology but is still sympathetic to some of its causes ‘.

சரிதான். ஆனால், ‘சு.ரா என்ற lapsed communist தன்னைப் பிடித்து இன்னும் ஆட்டும் பழைய கம்யூனிசப் பேயை ஓட்டும் விதமாக எழுதியது தான் இந்த நாவல் ‘ என்கிறாரே என்.எஸ்.ஜெ. கொஞ்சம் போல் அனுதாபம் மிச்சம் இருந்தால் ஏன் உடுக்கடித்து ஓட்ட வேண்டும் என்பதை என்.எஸ்.ஜெயிடம் தான் கேட்க வேண்டும்.

‘நாவலை சு.ரா ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதியிருக்கிறார். எனவே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும் ‘ என்கிற என்.எஸ்.ஜெ கருத்தோடு சலபதியோ சு.ராவோ உடன்படுவார்களோ தெரியாது.

‘(This novel) is the story of one self conscious intellectual ‘s quest for intimacy with another, an established intellectual, whom he has already adopted as his role model ‘ என்று என்.எஸ்.ஜெ ரத்தினச் சுருக்கமாக எழுதியதை நிச்சயமாக ஆங்கிலத்தில் சிந்திப்பதும் ஆங்கிலத்திலேயே எழுதுவதும்தான் எளிதாக இருக்கும் என்பது மத்தளராயனின் தாழ்மையான கருத்து. Intimacy வார்த்தைப் பிரயோகத்தைப் பற்றி சாவகாசமாகக் கதைக்கலாம்.

****

லத்தீன் அமெரிக்கா ரொம்பவே வித்தியாசமான பூமி. நிஜத்துக்கும் புனைவுக்கும் அங்கே இழை வித்தியாசம் தான் என்பதை காப்ரியல் கார்ஸ்வா மார்க்வெஸ் நாவல் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஆற்றிய உரையைப் படித்தாலே போதும்.

காயலான்கடை உடைசலை வாங்கி தேசத் தலைவர் சிலை என்று பிரதிஷ்டை செய்து மரியாதை செலுத்துவதில் தொடங்கும் நிஜ யதார்த்தம் இது. பீட்டில்ஸ் ஜான் லெனன் சிலைக்கு அசல் மூக்குக் கண்ணாடி மாட்டிவைத்து, அதை யாராவது திருடிக் கொண்டு போகாதிருக்க மூணு ஷிப்ட் பொலீஸ் காவல் ஏற்பாடு செய்வது, காஸ்ட்ரோ தடுக்கி விழுந்தால் வினாடிக்கு வினாடி தொடர்ந்து எடுத்த ஆக்ஷன் புகைப்படங்களோடு உலகம் முழுக்கச் செய்தியாக்குவது என்பதெல்லாம் இதன் நீட்சி.

மார்க்வஸ்ஸின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக அடிக்கப்பட்டபோது, மாபியா கும்பல் புத்தகம் ஏற்றிப்போகும் லாரிகளைக் கடத்தி, கருப்பு மார்க்கெட்டில் புத்தகம் விற்றுக் காசு பார்த்த செய்தி கொஞ்சம் பழசு. லட்சக் கணக்கான பிரதிகள் அச்சான அவருடைய புத்தம்புது நாவலான ‘துக்க வேசிகள் பற்றிய நினைவுக் குறிப்புகள் ‘ -நாவலுக்குப் பெயர் வைப்பதிலேயே மார்க்வெஸ் எழுத்தின் வெற்றியில் ஐம்பது பெர்சண்ட் அடைந்து விடுகிறார் -வெளிவரும் முன்பே நகல் பிரதிகளை சகட்டு மேனிக்கு இறக்கி கால் விலை, அரை விலைக்கு விற்று இதே மாபியாக்கள் இலக்கியத்திலும் முதலெடுத்தது போனவாரச் செய்தி. இந்த வாரம் வந்த செய்தி இதைவிட விநோதம்.

கருஞ்சந்தை தாதாக்களை முட்டாளாக்கி விட்டு மார்க்வெஸ் தாத்தா இப்போது இருமலுக்கு நடுவே சிரித்துக் கொண்டிருக்கிறார். புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தைச் சட்டென்று கடைசி நிமிடத்தில் மாற்றி எழுதி உரிமைப் பதிப்பு உடனடியாக வெளியாக, போன வாரம் வெளியான நகல் பிரதிகள் எல்லாம் குப்பைக் கூடையில்.

கொலம்பிய மக்கள் புத்தகக் கடைகளை முற்றுகையிட்டு அசல் பிரதிகளை அடித்துப் பிடித்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பதிப்பாளர்கள் இலவச இணைப்பாக காண்டாமிருகம், கால் கிலோ விதை நீக்கிய புளி, காண்டொம் எல்லாம் புத்தகத்தோடு கொடுப்பதாகவோ, ப்ரஷ் கண்ணா ப்ரஷ் என்று வாசகர்கள் உற்சாகத்தோடு களிதுள்ளி ஆடுவதாகவோ இதுவரை செய்தி இல்லை.

****

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்