பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

மோனிகா


கடந்த செப்டம்பர் 10ம் தேதி திண்ணை இதழில் வெளியான சி.மதிவாணனின் கட்டுரை என்னை எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியமையால், சில எண்ணங்கள்.

பெண்ணை/பெண்ணுடலை கற்பு, தாய்மை போன்ற கட்டமைப்பு-களுக்குட்படுத்துவதுடன் பெண்ணை தெய்வமாகக் கருதுதல், ஆண்களுக்கு நிகராக மதியாமல் சிறப்பு சலுகைகளும் அங்கீகாரங்களையும் அளித்தல், அழகியல் கட்டுமானங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகப் பெண்ணை பாவித்தல் போன்ற பார்வைகளும்கூட பெண்களை ஒரு சாதாரண தளத்தில் இயங்கவிடாமல் தனிமைப்படுத்துவதற்கான (alienation) ஒரு உத்தியாகவே பார்க்க வேண்டும். ‘உங்களுடைய தங்கத்தாம்பாளங்கள் எங்களுக்கு வேண்டாம். அவற்றினுள் ஒளிந்துகொண்டிருக்கும் தூக்குக்கயிறுகளும் எங்களுக்கு வேண்டாம் ‘ என்பதே பெண்களின் அறைகூவலாக இருக்க முடியும்.

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் தன் வாழ்தலுக்கான சூழல்களையும், வழிமுறைகளையும் கட்டமைத்துக்கொள்வதற்கான வெளி (space) தேவை. ஒருவருக்கான வாழ்முறையை ஒருவர் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது பொருளாதார, சுகாதார மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டி சரியாக சுவாசிப்பதற்கான ஒரு சுதந்திரம். மேற்கண்ட விஷயங்களுக்கு ஏற்றவாறு பெண்கள் கற்பு, தாய்மை என்று காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் நியதிகளை மாற்றியமைத்துக் கொள்ளவும் பாலியல் விடுதலைகோருவதற்கான சமூகச் சூழல் மட்டுமே ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும். பாலியல் சுதந்திரத்துடன் ஒரு விதத்தில் தொடர்புடைய பாலியல் தொழிலை சட்ட விரோதமாக்கி அத்தொழிலாளர்களை காவல்துறையின் ‘பரிபாலனத்திற்கு ‘ விடுவதும். பாலியல் தொழிலை நோய் என்று சொல்வதும் தவறு. பாலியல் தொழிலை நோய் எனக்கொண்டால் ஆணாதிக்க சமூகத்தை ஆலால விடமென்றல்லவா சொல்ல வேண்டும் ?

வழமைபோல மேலைநாடுகளை பெண்கள் விஷயத்துக்கு வழிகாட்டிகளாக எடுத்தாள விரும்பாவிட்டாலும் அங்குள்ள பொருளாதார மற்றும் பாலியல் சுதந்திரம் இந்தியாவிலும் மிகவும் தேவை. பாலியல் தொழிலாளர்களின்மீது செலுத்தப்படும் வன்முறையும் பாலியல் தொழிலை மற்ற தொழில்கள்போன்று எண்ணாமல் இழிவுபடுத்தும் கொடுமைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால், பாலியல் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள், அரசியல் வாதிகள், காவல்துறையினர் ஆகியவர்களின் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி பாலியல் தொழிலை அரசாங்கம் அங்கீரித்துக் கொள்வதாகத்தான் இருக்கமுடியும். சரியான பாலியற்கல்விமுறை மூலமாகவும் அங்கீகரிக்கப் பட்ட (licensed) தொழில் நடைமுறைகளாலும் மட்டுமே ஏழ்மையாலும் பிறகாரணங்களாலும் இத்தகைய தொழிலுக்கு வரப்பட்ட பெண்கள் நசுக்கப்படுவதையும், பழிக்கப்படுவதையும் தடுத்து அவர்களுக்கான சுயமரியாதையை பராமரித்துக் கொள்ளமுடியும்.

நியூயார்க், பாரிஸ் போன்ற நகரங்களில் தெருப்போஸ்டர்களிலும் தினசரிகளிலும் பாலியல் தொழிலாளர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். இவர்கள் தங்களது தற்காப்புக்காக காவல்துறையை உண்மையாகவே துணைக்கு அழைக்கமுடியும். ஆனால் இந்தியாவிலோ அரசியல்வாதிகளும் காவல்துறையுமே இப்பெண்களை கைப்பாவையாக்குவதற்கான சூழ்நிலை நிலவிகிறது.

ஆதிகாலம் முதல் தொடர்ந்துவரும் இந்த நடப்புகளை திரும்பத்திரும்ப முளை க்ிள்ள முயற்சித்து அந்தச் சிறுபாண்மையினருக்கு கொடுமை இழைப்பதைவிட்டுவிட்டு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் அங்கீகாரமும் செய்து கொடுப்பதன் மூலம் நமக்குள் உடல்கள் குறித்து பதிய வைத்துக் கொண்டிருக்கும்/ பதியம் செய்யப் பட்டிருக்கும் பாரபட்சப் பார்வையை போக்கிக் கொள்ளலாம்.

—-

monikhaa@hotmail.com

Series Navigation

மோனிகா

மோனிகா