பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

முனைவர் எஸ்.பி. உதயகுமார் (தமிழில்: அசுரன்)


கும்பகோணம் பள்ளியில் நடந்த தீவிபத்துப் பேரழிவு நமக்கு மற்றொரு விசயத்தை எடுத்துச்சொல்கிறது. அதாவது, நமக்கு, நமது நாட்டிற்கு பேரழிவுகளை தடுக்கவோ எதிர்பாராத அவசரகால நிலைகளை எதிர்கொள்ளவோ திறனில்லை; தெம்பில்லை என்பதை இது வெளுப்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் கும்பகோணம் துயரம் மதிப்புமிக்க 94 இளம் உயிர்களைப் பலியெடுத்துவிட்டது. நாம் உடனடியாக ஆக்கபூர்வமாகச் செயல்படவேண்டியதன் தேவையை இது எடுத்துரைக்கிறது. நமது சமூகத்திலுள்ள அனைத்து பிரிவினருக்கும் வாழ்வின் ஒவ்வொருகணத்திலும் தேவையான பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசரகால நிலைகளில் செயல்படுவதற்கான தயாரிப்பு பயிற்சியை அளிப்பதே பெரியவர்களின் அலட்சியத்தாலும் கையாலாகாத்தனத்தாலும் பலியான ஏதுமறியா இளம் தளிர்களுக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள அஞ்சலியாக இருக்கும்.

இதுபோன்ற, ‘பேரிடர் விழிப்புணர்வு கல்வி ‘யில் இரு பகுதிகள் உண்டு. அவை, பேரிடர் தடுப்பு ஆயத்தநிலைக்குத் தேவையான தகவல்கள் அளிப்பது மற்றும் இவற்றைக் கையாள நேரடிப் பயிற்சி அளிப்பது. இக்கல்வியில் பல்வேறுவகையான பேரிடர்கள் குறித்த அடிப்படைத் தகவல்களும் அளிக்கப்படவேண்டும். மேலும், இத்தகைய பேரிடர்கள் நேரிடும்போது காயங்கள் மற்றும் இழப்புகளைக் குறைத்திட மக்களுக்கு உதவும்வகையில் செயல்படுவதற்கான குறிப்புகளும் (Tips) வழங்கப்படவேண்டும். பேரிடர்கள் நிகழ்வதற்கு முன்- நிகழும்போது- நிகழ்ந்த பின் என மூன்று நிலைகளிலும் எப்படிச் செயல்படவேண்டும் என்று இந்த குறிப்புகள் அளிக்கப்படவேண்டும்.

பேரிடர் நிகழ்வதற்கு முன்பு எப்படி செயல்படவேண்டும் என்று அளிக்கப்படும் பயிற்சியானது பொதுக் கட்டிடங்களிலோ அல்லது பிற இடங்களிலோ எத்தகைய அடிப்படை பாதுகாப்பு வசதிகள் தேவை என்று தெரிவிப்பதுடன் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பாதுகாப்பு உணர்வுடன் கவனிக்கச்செய்கிறது. பேரிடரின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று வழங்கப்படும் வழிகாட்டிக்குறிப்பானது பல்வேறு அவசரநிலைகளில் எப்படிச் செயல்படவேண்டும் என்று பட்டியலிட்டு பயிற்சியாளர்களுக்குத் தெரிவிக்கும். பேரிடருக்குப் பிறகு எப்படி நடந்துகொள்வதென்று அளிக்கப்படும் பயிற்சியானது பேரிடரின் பின் அப்பகுதியில் என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் மக்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியானது பேரிடர்களின்போது ஏற்படும் மனித உயிரிழப்பைக் குறைப்பதுடன் பாதிப்பையும் தணிக்கிறது.

இவ்விழிப்புணர்வுக் கல்வியானது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வாகன ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், திருமண மண்டப மேலாள˜கள் மற்றும் பணியாள˜கள், கோயில் பூசாரிகள், உணவகங்கள் மற்றும் விடுதிப் பணியாளர்கள், கட்டிடக் காவலாளிகள் மற்றும் பிறருக்கு என அனைவருக்கும் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். உண்மையில், இத்தகைய பயிற்சியானது அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், அஞ்சலகங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும், இடங்களிலும் நடத்தப்படவேண்டும்.

கல்விக்குப் பயன்படும் ஸ்லைடு-ஷோக்கள், கார்ட்டூன்கள், விவரணப்படங்கள் மற்றும் பிற ஒலி, ஒளு சாதனங்கள் மூலம் பேரிடர் விழிப்புணர்வுக் கல்வியானது நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடத்தப்படவேண்டும். மேலும், சுயஉதவிக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதுபோன்ற பிரிவினைச் சேர்ந்தோருக்கும் பயிற்சி அளிக்கப்படவேண்டும். அரசு துறைகள், தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், செய்தி ஊடகங்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகத்திலுள்ள அனைத்து பிரிவினரும் கைகோர்த்து பேரிடர் விழிப்புணர்வு பயிற்சியினை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அளித்திட முன்வரவேண்டும்.

பேரிடர் விழிப்புணர்வுக் கல்வியானது ஏதோ வாழ்வில் ஒரேயொருமுறை அல்ல, ஒவ்வொருவரினதும் வாழ்க்கை முழுவதுமே பாதுகாப்பிற்கான தேவையாகும். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் விழிப்புணர்வு செய்திப்பலகைகள் வைக்கப்பட்டு, அவற்றில் பேரிடர் விழிப்புணர்வு தொடர்பான புதியபுதிய செய்திகள் தொடர்ச்சியாக வெளுயிடப்படுவது கட்டாயம் நமது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக்கப்படவேண்டும். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டுமேயல்லாது, தமக்கிடையே மாறுபட்ட கருத்துகளை வெளுப்படுத்தக்கூடாது என்பதும் முக்கியமானதொரு அம்சமாகும்.

பேரிடர் என்பதில் இயற்கையானதும் அடங்கும் மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதும் அடங்கும். இயற்கைப் பேரிடர்களில் இடி, மின்னல், புயல், சூறாவளி, எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ, நிலநடுக்கம், நிலச்சரிவு போன்றவை அடங்கும். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பேரிடர்கள் என்பவை மனிதர்கள் சில செயல்களைஷ செய்வதாலோ அல்லது அலட்சியப்படுத்துவதாலோ ஏற்படுபவையாகும். வெடிகுண்டு மிரட்டல், தீவிரவாதத் தாக்குதல், கார் குண்டு வெடிப்பு, தீவிரவாத எதிர்ப்பு தாக்குதல், ஆந்த்ராக்ஸ் போன்ற ஆபத்தான வேதிகளை அஞ்சலில் அனுப்புதல், உயிரியல் தாக்குதல் போன்றவை முதலாவது வகையில் வரும். மின்கசிவு, கட்டிடம் இடிதல், ஆபத்தான வேதிகள் தேக்கம், அணை பாதுகாப்பு, வெளிளக்கட்டுப்பாடு, கதிரியக்க பாதிப்பு, உணவு மற்றும் தண்ணீர் நச்சாதல் போன்றவை நமது அலட்சியத்தின் விளைவுகளாலான பேரிடர்களைக் காட்டும்.

தனியார்துறையினரின் பேராசை, அலட்சியம் போன்றவை கல்வி, போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் குடும்பச் செயல்பாடுகள் போன்றவற்றில் பல பெருந்துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறது. இன்று நமது நாட்டிலுள்ள சோகமான நிலைக்கு அரசின் பொறுப்பின்மையும் காரணமாக இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இலஞ்சம், ஊழலால் சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவை பக்கச்சார்பு உடையவையாக உள்ளன. உரிமைகள், அனுமதிகள் போன்றவை உண்மையில் விலைக்கு விற்கப்படுகின்றன. பாதுகாப்பின் மீதான அக்கறை படுமோசமாக மீறப்படுகின்றது. நம்மை மிகக் கவலைகொள்ளச் செய்வது நமது ஊடகங்களாகும். நமது சமூக, பொருளாதார, அரசியல் தோல்விகளை கண்காணிக்கும் இவ்வமைப்புகள் தமது சமூகப் பொறுப்புணர்வை இழந்து, உணர்வைத் தூண்டும் செய்திகள், கொள்ளை லாபந்தரும் செய்திகளை அளித்து நம் கவனத்தைத் திசைதிருப்புகின்றன.

குதிரை ஓடிய பின்னர் லாயத்தைப் பூட்டுவதே நமது பண்பாடாகிவிட்டது. வருமுன் காப்பதே சிறப்பு என்பதை நாம் உணர்ந்துகொள்ளவில்லை. எல்லா வகையிலும் தனது அன்றாட வாழ்க்கை குறித்து கவலையுடைய சாதாரணக் குடிமகனைத் தவிர, நமது அரசின் அதிகாரவர்க்கமோ, அரசியல் தலைவர்களோ, ஊடகங்களோ, விஞ்ஞானிகளோ அல்லது பிறரோ அனைவரும் இறுமாப்புடையவர்களாகவும் கலக்கமில்லாதவர்களாகவுமே இருக்கின்றனர்.

இத்தகைய அலட்சியமான, இரக்கமற்ற போக்கிற்கு கூடங்குளம் அணுமின் திட்டம் சரியானதொரு எடுத்தக்காட்டாகும். பொதுவாக உலகில் எங்குமே ஒரு அணுஉலை கட்டப்படுவதாக இருந்தால் பெருமளவு தகவல்கள் வெளுயிடப்பட்டு, ஒரு பொது விவாதம் நடத்தப்படும். ஆனால், நமது நாட்டில்… ?. அணுசக்தித்துறையும் சரி, இந்திய அரசும் சரி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு அறிக்கை (Environment Impact Assessment Report), இட ஆய்வறிக்கை மற்றும் பாதுகாப்பு ஆய்வறிக்கை (site evaluation study and safety analysis report) போன்றவற்றை யாருக்கும் தர மறுக்கின்றன. அவ்வளவு ஏன் ஒரு பொது விவாதத்தையே நடத்தத் தயாராக இல்லை. ஆனால், எந்தவொரு அரசு அதிகாரியோ, அரசியல் கட்சியோ, தலைவரோ, செய்திஊடகங்களோ இதை ஏன் என்று கேள்வி கேட்கவேயில்லை.

அக்கறையற்ற, ஊழல் அதிகாரிகள் நிறைந்த, தனியாரின் பேராசைமிக்க, தகவல் பரிமாற்றம் மற்றும் முடிவெடுப்பதில் சனநாயகமற்ற ஒரு சமூகம் திறமான பாதுகாப்புப் பண்பாடு இல்லாத சமூகமாகவே இருக்கும். மொத்தத்தில், பொதுமக்களின் பாதுகாப்பு என்பது வெறும் உடல்ரீதியிலான பார்வையல்ல, அரசியல் கருத்தும் உடையதாகும். மக்களின் அடிப்படை உரிமைகளான தகவல் அறியும் உரிமை, வாழ்வுரிமை போன்றவை அளிக்கப்பட்டு, போதுமான தகவல் பொதுமக்களோடு பகிர்ந்துகொள்ளப்படும்போதுதான் பாதுகாப்பு சாத்தியமாகும். பொதுமக்களின் பாதுகாப்பும் சனநாயகமும் பின்னிப்பிணைந்ததாகும். இந்த இணைப்பு மட்டுமே மனித வாழ்வுக்கு மதிப்பளிப்பதாக இருக்கும்.

மனித வாழ்க்கைக்கு மதிப்பளிப்பதை ஊக்குவிப்பதற்கு, பேரிடர் விழிப்புணர்வுக் கல்விக்கான முயற்சிகள் மேலே விவாதிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களுடன் ஒருங்கிணைந்து திட்டமிடப்படவேண்டும். தனியாருக்கானதோ அல்லது அரசுக்கானதோ, எதுவாக இருந்தாலும் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு கட்டிடத்திலும் விபத்து இறப்புகள் மற்றும் காயங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார அவசரகாலத் தேவையான உபகரணங்கள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் விபத்தில் சிக்கினால் உயிர்காப்புக்குத் தேவையான முதலுதவி சாதனங்கள், குடிநீர், அடிப்படை உணவு இருப்பு ஆகியவை கட்டாயம் அவசரகாலத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். மீட்புத் திட்டம், அதில் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் ஊனமுற்றோருக்குமான சிறப்பு வசதிகள் போன்றவை அவசரகால மேலாண்மைத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் இத்தகைய அவசரகாலக் கருவிகள், அவசரகாலச் செயல்திட்டம், அதற்கான தயார்நிலை, புயல், வெளிளம், வெடிகுண்டு மிரட்டல் போன்றவற்றிற்கான மீட்புச் செயல்பாடுகள் குறித்த விபரங்கள் வெளுப்படையாக ஒட்டப்படவேண்டும்.

அவசரகாலத் திட்டமிடலுக்கான வழிகாட்டிகள், வெளுயீடுகள், வரைபடங்கள், அறிக்கைகள், உண்மை அறிக்கைகள் போன்றவை ஒவ்வொரு பொது நூலகத்திலும் கல்லூரி நூலகத்திலும் இருக்கவேண்டும். அதுபோல நிலநடுக்க வரைபடங்கள், வெளிள வரைபடங்கள், காற்று வரைபடங்கள், சூரிய கதிர்வீச்சு வரைபடங்கள் உள்ளிட்ட அனைத்து வரைபடங்களும் இந்த நூலகங்களில் கிடைக்கவேண்டும். துயர் துடைப்புப் பணிகளில் அரசு துறைகள், மீட்பு அமைப்புகள், தனியார் தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும் பொதுமக்களுக்கும் சேவைகள், வாய்ப்புகள் ஆகியவை அரசிடமிருந்தும் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் தனியாரிடமிருந்தும் கிடைக்கவேண்டும்.

இதுபோன்ற ஒட்டுமொத்தமான மீட்புப் பண்பாட்டிற்கு காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டுக்கொள்கைகள், சமூக சேவகர்களின் பட்டியல், விபத்தின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்காக மனநலப் பணியாளர்கள், அதிர்ச்சிக்குப் பிந்தைய மனஅழுத்தச் கோளாறுக்கு சிகிச்சை போன்ற பிற துயர்துடைப்புச் செயல்பாடுகளும் தகவல்களும் தேவை. பிணங்களைக் கையாளுதல், சுகாதார வசதி, கழிவு மேலாண்மை மற்றும் நீர் மாசுபாடு, உணவு மாசுபாடு, தொற்றுநோய்கள், கொள்ளை நோய்கள் பரவலைத் தடுப்பது போன்றவை மேற்கொள்ளப்படுவதால் பொதுசுகாதாரத்துறை மற்றும் அதன் பணியாளர்கள் குறித்த தகவல்களும் இதற்கு ஈடாக முக்கியத்துவம் உடையவையாகும்.

கும்பகோணம் பள்ளியில் நடந்த கொடூரம் தொடர்பான செய்திகள், குழந்தைகளை வகுப்பறையிலேயே இருக்குமாறு ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கின்றன. திகிலடைந்த ஆசிரியர்களுக்கு அந்த நேரத்தில் நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. மேலும், உண்மையில் சில குழந்தைகள் தமது புத்தகப் பைகளை எடுப்பதற்காகவும் சிலர் தம் உடன்பிறப்புகளைப் பார்ப்பதற்காகவும் எரியும் வகுப்பறைக்குள் புகுந்துள்ளனர். இவர்களில் யாரும் இத்தகைய பேரிடரின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது அறிந்திருக்கவில்லை. பள்ளி நிர்வாகமோ அல்லது அரசு அதிகாரிகளோ ஆசிரியர்களுக்கு தீயணைப்பு குறித்து ஒரு அரைநாள் பயிற்சியும், மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் தப்பிப்பது குறித்த பயிற்சியும் அளித்திருந்தால் இத்தகையதொரு கோரம் அங்கே நிகழ்ந்திருக்காது.

முனைவர் எஸ்.பி. உதயகுமார் கல்வி மற்றும் ஆய்வுக்கான தெற்காசிய சமூக மையம் (South Asian Community Centre for Education and Research (SACCER) ) என்ற அமைப்பை நாகர்கோவிலில் நடத்திவருகிறார். மின்னஞ்சல்: drspudayakumar@yahoo.com, spuk@vsnl.net

**

asuran98@rediffmail.com

Series Navigation

அசுரன்

அசுரன்