பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

எச்.பீர்முஹம்மது


பேரீத்தபழங்களின் பருவகாலம் தொடங்கி விட்டது. உச்சியை பிளக்கும் வெய்யிலின் உக்கிரத்தை உள்வாங்கி கொண்டு பழங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழுக்க தொடங்கி விட்டன. மரத்திலிருந்து கீழிறங்க துடிக்கும் பழங்கள், கீழிறங்கி நம்மவர்களின் பூட்ஸ் காலால்

மிதிபடும் பழங்கள், கீழிறங்கி பரந்து விரிந்து கிடக்கும் பழங்கள் இந்த பழங்களின் காட்சி அவதானிக்க தகுந்தது. Lion dates காட்சி படிமத்தை காட்டிலும் தத்ரூபமானது. இதனை பொறுக்குவதற்காக ஓடும் மனிதனின் நிலை பரிதாபகரமானது. அந்த தத்துவத்தின் வறுமை

எவ்வளவு விசனகரமானது. வாழ்க்கை போராடுவதற்கு தான். நானும் நினைத்து கொண்டேன். நான் இங்கு வராவிட்டால் இந்த அபூர்வ காட்சிகளை காண முடியுமா ?

கடல் ஆரவாரமற்று நிசப்தமாக காணப்படுகிறது. வெள்ளை மணல்களை மிக அரிதாகவே சிற்றலைகள் தொடுகின்றன. விரிந்த வளைகுடாவை சுற்றி வடபுறம் நகரம் இருக்கிறது. தெற்கே ஈச்சமரங்கள் நிற்கின்றன. ஆழமற்ற நீர்பரப்பினுள் நின்ற மணல் மேட்டிற்கு பின் ஆழமான கடலில் சுறாக்கள் நகர்கின்றன. அவற்றுக்கு பின்னே மீனவர்களின் வலிமையான கயிற்றினால் கட்டப்பட்ட மரத்துண்டுகளாலான கட்டுமரங்கள் தெரிகின்றன. துள்ளி ஓடும் மீன்களை பிடிப்பதற்காக மீனவர்கள் ஓடுவது தெரிகிறது. இந்த நேரத்தில் மூஸா நபியின் அஸா கைத்தடி நினைவுக்கு வருகிறது. அந்த கைத்தடியால் செங்கடல் பிளந்து பிர்அவ்ன் என்ற அரசனின் சேனைகள் செங்கடலில் மூழ்கியது இதனோடு குறிப்பிடதகுந்தது.

மத்திய கிழக்கு சமூக பொருளாதார நிலையில் நாளுக்கு நாள் சீரழிவுக்கு உள்ளாகி வருகிறது. சார்பு நிலையிலிருந்து இன்னும் அது விடுபடமுடியவில்லை. அரபு நாடுகளின் சமூக, பொருளாதார, கலாசார மட்டங்களில் மாறுதல் மற்றும் சீர்திருத்தம் குறித்து

விவாதிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு சிவில் அமைப்பு ஒன்று மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மாநாட்டில் அரபுலகின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அவர்கள் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்தார்கள். குறிப்பாக அரபுலகின் சீர்திருத்தம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை எல்லாம் முடிவில் வரைவாக வெளியிடப்பட்டன.

சீர்திருத்தமானது அரபுலகில் ஜனநாயக அமைப்பு முறையை ஏற்படுத்துவதில் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்ற முறையில் அது சிவில் சமூக நிறுவனங்களை கொண்டதாக , முழு சமூக முறையை பிரதிபலிப்பதாக , அரபுலகின் இறையாண்மையை அதன் புவியியல் கலாசார அமைப்பை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மேலும் நாட்டின் அரசியல் கட்டுமானம், அதிகார சுழற்சி, குடிமக்களின் உரிமை இவற்றை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும். குறிப்பாக அரபுலகில் கருத்து சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும். அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முறையில் அமைய வேண்டும். இது அரபுலகின் அரசியல் சீர்திருத்தத்திற்கு வழிகோலும். அரபுலகிற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். சட்டமானது எதார்த்த- ஜனநாயக அமைப்புக்கு முரண்படாத வகையில் சர்வதேச மரபுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரபு நாடுகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் சர்வாதிகார மன்னராட்சி முறை முடிவுக்கு வரும். மேலும் அரபுலகின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக அமைப்பு முறையானது நிர்வாகம், சட்டம், நீதித்துறை, பத்திரிகை மற்றும் சிவில் நிறுவனங்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்நிறுவனங்கள் அதற்கான வழிகளில் சுதந்திரமாக செயல்பட முழுமையான முறையில் அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மாநாட்டில் பங்கு கொண்ட பல அமைப்புகள் அரபுலகின் மன்னராட்சி முறை ஏற்படுத்தும் முரண்பாடான அவசரசட்டங்கள் மற்றும் அசாதாரண நீதிமன்றங்கள் குறித்த தங்களின் மனப்பதிவை வெளிப்படுத்தின. இவை தவிர்க்கப்பட வேண்டுமென்று பல அமைப்புகள் வலியுறுத்தின. அரபு நாடுகளில் அரசியல் கட்சி அமைப்பதற்கான சுதந்திரம் வேண்டும். பல நாடுகளில் இவை மறுக்கப்படுகின்றன.

எல்லா அரபு நாடுகளும் கீழ்கண்ட சர்வதேச மரபுகளை கடைபிடிக்க வேண்டும்.

1. சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை அமுல்படுத்துதல்

2. சர்வதேச அரசியல், சமூக உரிமைக்கான உடன் படிக்கை

3. சர்வதேச அரசியல், பொருளாதார, கலாசார உடன்படிக்கை

4. அரபுலக நிபுணர்களால் 2003ஆம் ஆண்டு வரையப்பட்ட மனித உரிமை செயல் திட்டம். இது முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

5. பெண்ணுரிமையில் சர்வதேச மரபுகள் பின்பற்றப்படவேண்டும். பெண்களுக்கெதிரான எல்லா பாகுபாடுகளும் நீக்கப்பட வேண்டும்.

6. சர்வதேச குழந்தைகள் உரிமை மற்றும் அவர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பத்திரிகை சுதந்திரம் தற்போது அரபுலகில் இல்லாமல் இருக்கிறது. பத்திரிகை சுதந்திரம் ஜனநாயக அமைப்பு முறைக்கு வலுவான காரணியாகும். பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அவற்றின் சுதந்திரம் அரபுலகில் மிக இன்றியமையாதது.

அரபு நாடுகளில் சிவில் சமூகங்களின் தேவை இன்றியமையாதது. அதன் தர்க்கரீதியான வளர்ச்சியே நாட்டின் பிரதிபலிப்பாகும். அடிக்கடி கருத்துகணிப்பு நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் சர்வாதிகார முறைக்கு முடிவு கட்டலாம். இதனடிப்படையில் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். மேலும் பாலஸ்தீன் பூர்விக முறையில் அம்மக்களுக்கே சொந்தமானது. எனவே இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை அம்மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு நிலவியல் அடிப்படையில் இரு சுதந்திர அரசுகள் அமைக்கப்பட வேண்டும். பாலஸ்தீன் விடுதலையே மத்திய கிழக்கின் விடுதலை. மாநாட்டில் பங்கு கொண்ட அனைவரின் கருத்தும் இதுவாக தான் இருந்தது.

சமூக, பொருளாதார, கலாசார நிலையில் அரபுலகின் வளர்ச்சியானது மேற்கண்ட வரைவு திட்டங்களை அடிப்படையாக கொண்டே அமையும். மாநாட்டில் எகிப்து அதிபரின் துவக்க உரை குறிப்பிடதகுந்ததாக இருந்தது. அரபுலகில் எகிப்து வரலாற்று பாரம்பரிய, அறிவு சார் நாடு. அதன் கலாசார அமைப்பே வித்தியாசமானது. எகிப்தில் இந்த மாநாடு நடைபெற்றிருப்பது அரபுலகிற்கு துவக்கபுள்ளியாக அமையும்.

வளைகுடா நாடுகளில் தற்போது வட்டாரமயமாக்கல் தொடங்கி விட்டது. உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பு குறைந்து வரும் சூழலில் பலநாடுகள் வெளிநாட்டு வேலைக்கான விசா கொடுப்பதை குறைத்து விட்டன. இந்திய பாட்டாளி வர்க்கம் குறிப்பாக மலையாள பாட்டாளி வர்க்கத்தின்நிலைமை பரிதாபகரமானது. எல்லை தாண்டிய வர்க்கபோர் என்பது நல்ல விசயம் தான். கேரளாவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.கே வாசுதேவன் நாயர் வருவதாக சில பலசரக்கு கடைகளில் சோட்டா சுவரொட்டிகளை காண முடிகிறது. அவர் பேசும் தலைப்பு ‘ கேரள வளர்ச்சியில் அச்சுத மேனனின் (முன்னாள் முதல்வர்) பங்கு ‘. வேடிக்கை மனிதர்கள் அரங்கில் காட்சியளிக்கும் போது அகஸ்தோ போவாலின் மாற்று அரங்கு தான் நினைவுக்கு வருகிறது. வர்க்கபுரட்சி என்பது எவ்வளவு ஆழமான விசயம் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

—-

peer8@rediffmail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது