நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

ஆசாரகீனன்


நாமக்கல் பகுதி மூன்று விஷயங்களுக்குப் புகழ் பெற்றது.

முதலாவது, பெண் சிசுக் கொலைகள் இந்தப் பகுதியில் பரவலாக உண்டு. இரண்டாவது, லாரித்தொழில்- கிட்டத்தட்ட 20,000 பேர் லாரித்தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்று சமீபத்திய கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. மூன்றாவது, தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகமான எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழுமிடம்(இரண்டு லட்சத்துக்கும் மேல். இதே பகுதியில் பால் நோயால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையும் மிக அதிகம் என்று அதே கட்டுரை தெரிவிக்கிறது. [கு1]

இரண்டும் மூன்றும் தொடர்புடையவை என்பது தெரிய சாதாரண அறிவு போதும். ஆனால் பெண் சிசுக் கொலைக்கும் எய்ட்ஸ் நோய்க்கும் என்ன தொடர்பு ?

மூன்றுமே தொடர்புடைய விஷயங்கள் எனக் காட்ட இக் கட்டுரை.

நாமக்கல்லில் பரவலாக இந்த பெண் சிசுக்கொலை இருக்கிறது. பொதுவாகவே தமிழ் நாட்டில் ஆண்வழி சமூகம்தான் பண்பாட்டளவில் ஆட்சியில் உள்ளது. இந்த வகை சமூகங்களில் சொத்து ஆண்கள் வழியே கை மாறுகிறது – சட்டம் என்ன சொன்னால் என்ன ? கட்டைப் பஞ்சாயத்துதானே கிராமங்களில் கூடுதலான வலு உள்ளதாக இருக்கிறது. ஆண்வழி சமூகங்களில் பெண்ணுக்குத் திருமணச் செலவு அதிகம் என்பதோடு பெண் திருமணத்துக்குப் பிறகு தனது கணவனின் வீட்டுக்குப் போகக் கடமைப்பட்டவள் ஆகிறாள். திருமணத்துக்குத் தரப்பட்ட நகைகள், சீர்வரிசைகள் எல்லாமும் கணவன் வீட்டார் கையில் போய்ச் சேர்கிறது.

கூட்டுக் குடும்பங்கள் முன்னளவு நிலவவில்லை என்றாலும் ஓரளவுக்காவது கணவனாகும் இளைஞர் இன்னமும் தம் பெற்றோரின் கட்டளைக்குப் பணியக் கூடியவராக இருப்பதால் திருமணம் மூலம் பெண்ணுடன் அனுப்பப்படும் சீர்வரிசைகள் கணிசமான அளவு அப் பெண்ணிடம் போய்ச் சேர்வதில்லை. இறுதியில் எப்படி இருந்தாலும் அவை பெண்ணின் குடும்பத்துக்கு நஷ்டம்தான் என்று கருதப்படுகிறது. தன் பெண்தானே, அவளுக்குத் தானே சேர்ந்தது என்று மகிழும் பெற்றோர் இல்லை என்று இங்கு சொல்லவில்லை. ஆனால், நஷ்டம் என்று கருதும் பெற்றோரே அதிகம் என்று கருத வாய்ப்பிருக்கிறது, ஏனெனில் ஆண்களின் வழியேதான் தமது குடும்பம் வளர்கிறது, காலம் காலமாகத் தொடர்கிறது என்று கருதுவதுதான் ஆண்வழி சமுகப் பண்பாடு என்று சொல்கிறோம் இல்லையா ?

இதனால் பெண் குழந்தை என்று சொன்னாலே அது எதிர்காலக் கடனுக்குக் காரணம், ஒரு சுமை என்று இயல்பாகவே கருதும் மனப்போக்கு நிலவுகிறது. இது தவறு என்று தெரிந்த படித்த நடுவயதுக்காரர்கள் இப்போது அங்கும் இங்கும் உள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நடுவில், இறுதியில் என்று மூன்று கட்டமாகப் பார்த்தால், முதல் இரு கட்டங்களில் பெண்ணைச் சுமை என்று கருதிய போக்கு அதிகமாக இருந்திருக்கும். இறுதியில், அதாவது 1980களுக்குப் பிறகு இப்போக்கு குறைந்திருக்கும்தான். ஆனாலும் சமீபத்திய ஆய்வுகள் கூடப் பெண் ஒரு சுமை என்று கருதும் மனப் போக்கு இன்னமும் பெருவாரி நபர்களிடம், அதுவும் பெண் சிசுக் கொலை செய்யும் சாதிகள்/சமூகங்களில் நிலவுகிறது என்று தெரிவிக்கின்றன. சுதந்திரம் அடைந்து ஐம்பதாண்டுகள் பொதுக் கல்வியும், ஓரளவு முற்போக்கு சிந்தனையும் பொது அரங்கத்தில் நிலவின என்றாலும் கூட அவற்றின் தாக்கம் மிக மெதுவாகத்தான் மக்களை மாற்றி இருக்கிறது என்றுதான் நாம் கருத வேண்டி இருக்கிறது.

நாட்டின் சட்டம் பெண்ணுக்கும் சொத்தில் உரிமை உண்டு எனச் சொல்வதால் சமூகங்களோ, குடும்பங்களோ அச் சட்டத்தை உடனே ஏற்று அதன் வழியே சொத்துப் பிரிவினையை நடத்துகின்றன என்று நாம் கருதி விட முடியாது. துணிந்து சொத்து கேட்கும் பெண்களோ, அவர்களின் கணவன்மாரோ இன்னமும் குறைவாகவே இருப்பர். ஆனால் பெண்ணுக்குச் சொத்து பிரித்துக் கொடுத்தாலுமே அது கணவன்மாரின் கையில் போய் விடும், பெயரளவுக்குத்தான் பெண் உடமையாளராக இருப்பார் என்பது வேறு விஷயம்.

ஆனாலும் ஒரு வேளை வரப் போகும் கணவன் சண்டைக்காரனாகவோ, விவகாரம் பிடித்தவனாகவோ இருந்து, வீட்டின் மகன் ஓர் ஆக்கம் கெட்ட மூதியாகவும் இருந்து தொலைத்தால் குடும்பச் சொத்து தொலைந்தே போய் விடுமே என்ற பயங்கள் பெண் குழந்தையின் முகத்தைப் பார்த்ததுமே தாய் தகப்பன் மனங்களில் பெருக்கெடுக்கும் போலிருக்கிறது.

உண்மை நிலை எப்படி இருந்தாலும் பாதி நேரமும் எதிர்காலம் பற்றிய பயம்தான் மனிதரைப் பிடித்து ஆட்டுகிறது!

ஆக பெண்ணால், விவசாய நிலங்களோ அல்லது நகரத்தில் வீடுகளான சொத்தோ பிற்பாடு குடும்பத்தின் கையில் இருந்து விடுபட்டு ‘மாற்றார் ‘ குடும்பத்துக்குப் போய்ச் சேரும் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே, பெண்ணே ஒரு கடன் என்ற பார்வையும், ஆண் வரவு என்ற பார்வையும் இச் சமூகங்களில் பரவலாக, குடும்பம் குடும்பமாகப் பின்பற்றப் படுகிறது. இப் பிரச்சினையைத் தீர்க்க அச் சமூகங்கள் கண்டு பிடிக்கும் ஓர் அவசர வழி, பெண் குழந்தையைக் கொல்வது. பிறந்த பின் ஒரு குழந்தையைக் கொல்வது ஒரு முறை என்றாலும் இது இன்னமும் கிராமங்களில்தான் அதிகம் உண்டு. நகர மக்கள், குறிப்பாகப் படித்தவர் இதையே சற்று நாசுக்காகச் செய்கிறார். கடந்த இரு பத்து ஆண்டுகளில் கர்ப்பத்தில் சிசு இருக்கும் போதே அது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய நவீன மருத்துவத்தில் வழி இருப்பதால் அதைப் பயன்படுத்திப் பெண் சிசுவைக் கண்டறிந்து அது கர்ப்பத்தில் இருக்கும் போதே கலைத்து விடுகிறார்கள். மூன்றாவது வழியும் உண்டு. இது மற்ற இரு வழிகளையும் விட சற்று மேலானது போலத் தெரியும், ஆனால் மற்ற இரண்டையும் விடக் குரூரமானது இது – பிறந்த பெண் குழந்தையைப் பராமரிப்பதில் மெத்தனமும், பாராமுகமும், அலட்சியமும் காட்டுவது இவ்வழி. அன்றாட உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவம் செய்தல், சரியான போஷாக்கு அளித்தல், அன்பும் அரவணைப்பும், காலத்துக்குத் தக்கபடி அறிவு வளர்ச்சிக்கு வகை செய்தல் என்ற கடமைகளைச் செய்யாததோடு அக் குழந்தையை எந் நேரமும் கரித்துக் கொட்டுதல், அதன் மீது வன்முறை செலுத்துதல், மேலும் அதன் சுய நம்பிக்கையைத் தொடர்ந்து குறைத்தல் என்று பலவழிகளில் பலவீனமாக்குவது இவ்வழி. இதனால் இக் குழந்தைகள் முதல் ஐந்தாண்டுகளுக்குள் நோய்வயப்பட்டு இறந்து போகின்றன. ஆக, பலவழிகளில் பெண் சிசுக்கள் ஆண் சிசுக்களை விட அதிகம் இறந்து போகின்றன.

இதன் விளைவு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட இந்தப் பகுதிகளில் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஏராளமான இளைஞர்கள் பெண் துணை இல்லாமலேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 100 பெண்களும் 120 ஆண்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். இந்த 120 பேரில் 20 ஆண்களுக்குப் பெண்துணை கிடைக்கும் வாய்ப்பே இல்லை. அப்படியே திருமணமாகும் காலம் வரும்போது பலருக்கும் 30க்கும் மேல் வயதாகி விடுகிறது. பலர் லாரி டிரைவராகவோ, பயணம் செய்யும் தொழிலில் ஈடுபடுவதாலோ நிலைப்பு இல்லாத வாழ்வில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 30 வயது வரை பெண் துணை இல்லாது வாழ வேண்டியிருக்கிற ஆண்களின் எண்ணிக்கை அதிகமான இந்தப் பகுதிகளில் லாட்ஜ்கள் பெருகிக்கிடக்கின்றன. காரணம் பயணிகள் இப் பகுதியில் அதிகம் என்று மேம்போக்காகப் பார்த்தால் தோன்றும். வெளிப் பார்வைக்கு உடனே தெரியாத காரணம், ஆண்களுக்கு ஈடான எண்ணிக்கைப் பெண்கள் இல்லாததுதான். லாட்ஜ்களில் நடக்கும் ஒரு வியாபாரம் பயணிகள் தங்குவது என்றாலும், முக்கியமான வியாபாரம் சதை வியாபாரம். ஆக இந்தப் பகுதிகளில் பாலுறவு வியாபாரம் பெருகிக் கிடக்கிறது.

சந்தையில் தேவை அதிகமாக இருப்பதால் சரக்கு கிட்டுவதும் இங்கு அதிகம். அதாவது, நிறைய வந்து போகும் லாரித் தொழிலாளர்களில் பலருக்கும் மனைவி இல்லாததால் இங்கு பெண்களைச் சரக்காகத் தேடுகிறார்கள். நிறைய பெண்களை வியாபாரப் பொருளாகத் தேடுவோர் இங்கு அலைவதால், அப் பெண்களைக் கொண்டு கொடுக்கவும் ஆட்கள் இங்கு அதிகம் இருக்கிறார்கள். தமக்குப் பெண் துணையை எளிதில் தேடிக் கொள்ள முடியாத ஆண்களில் பலர் இப்படிப் பெண்களைக் கொண்டு கொடுக்கும் இடைத் தரகராகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

இங்கு ஏராளமான நபர்கள் தொடர்ந்து உடல் பசி தீர்த்துக் கொள்ள அலைவதால், விபச்சாரத் தொழில் பெருகி, தமிழ் நாடு மேலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பெண்கள் இங்கு கொணரப் படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்தலும் அதிகரிக்கையில் பாலுறவு நோய்களும் இப் பகுதியில் அதிகரிக்கிறது. சமீபத்து ஆண்டுகளில் உலகை ஆட்டிப் படைக்கும் எய்ட்ஸ் நோய் வியாபாரப் பாலுறவு வழியே எளிதாகவே பரவுகிறது. இதுவரை கட்டுப்பாடான வாழ்வு வாழ்ந்த சமூகங்களில், குடும்பங்களில் அதிகம் பரவ வாய்ப்பில்லாத பாலுறவு நோய்களும், எய்ட்ஸ் போன்ற கொலைகார நோய்களும் இப்போது விரைவாகவே இந்தப் பகுதியில் பரவி விட்டன.

தொலை தூரங்களிலிருந்து இங்கு வந்துள்ள எய்ட்ஸ் நோய் விபச்சாரிகளின் வழியே லாரி டிரைவராக இல்லாத மற்ற உள்ளூரைச் சேர்ந்த உழைப்பாள இளைஞர்களுக்கும் பரவுகிறது. அண்டைக் கிராமங்களில் மண வாழ்வுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ள இளைஞர்கள் நகரத்தில் விலைக்குக் கிட்டும் பாலுறவுக்காக நகரம் வந்து நோயைச் சம்பாதித்துக் கொண்டு, மருத்துவ வசதியோ, மருத்துவ அறிவோ அதிகம் இல்லாத கிராமங்களுக்கு அந் நோய்களை எடுத்துச் செல்கிறார்கள். பாலுறவு நோய்களில் பல நோய்கள் மருத்துவம் பார்க்காமல் இருந்தால் உடலுக்குள் தற்காலிகமாக மறைந்து கொண்டு பரவிக் கொண்டு இருக்கும். பின்னர் திடாரென்று கட்டுப்படுத்தவோ அல்லது சிகிச்சையால் தீர்க்கவோ முடியாத வகையில் குபீரெனப் பற்றி எரியும். உயிருக்கே ஆபத்தாக மாறும். ஆக நகரம் கிராமத்தைச் சீரழிப்பது என்ற வழக்கமான பதறலுக்கு இன்னொரு பரிமாணம் இப்போது கிட்டுகிறது. ஆனால் மூல காரணம் இந்த தடவை நகரம் அல்ல. சொத்து ஆசைக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடம் கொடுத்துப் பெண்களை மதிக்காத ஒரு பண்பாடு, தன் அழிவுக்குத் தானே வித்திடுகிறது.

பெண்கள் மிகவும் குறைவாக இருப்பதால், பெண்களைப் பெற்றவர்களுக்கு ஓரளவு முன்னை விட திருமணச் சந்தையில் கவுரவம் கூடுகிறது. வந்து பெண் கேட்பவர் பலர் இருப்பதால் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் தகுதி வாய்ந்த ஆட்களுக்கே திருமணம் செய்து கொடுக்கின்றனர் அல்லது தமக்கு விருப்பமான தகுதி உள்ள ஆண்கள் கிட்டும் வரை காத்திருக்கவும் அவர்களால் முடிகிறது. பெண்களுக்குக் கிராக்கி கூடுகிறது. விளைவு, ஓரளவு வசதி உள்ள இளைஞர் கூடக் காலம் தாழ்த்தித்தான் மணம் செய்ய முடிகிறது. ஏராளமான இளைஞர்கள் திருமணம் செய்யாமலேயே நடு வயதைத் தாண்டி விடுகிறார்கள். ஏழை இளைஞருக்கு மணமுடிக்கும் வாய்ப்பே இல்லாமலும் போகிறது.

சரி, வேறு சாதிப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களை மணம் செய்யலாமே என்று கேட்பவர் இருப்பர். கிராமங்களில் இன்னமும் சாதி நிலவுகிறது, கட்டுப்பாடும் இருக்கிறது என்பது சிறிது விவரம் தெரிபவருக்கும் தெரியும். விதிகளை மீறுவது எல்லாருக்கும் எளிதல்ல. ஆனால், மறைவில் விதிகளை மீறுவது எல்லாருக்கும் சாத்தியம். நகரத்துக்குப் பயணம் போய் விலைக்குப் பாலுறவை நாடும் அதே மக்கள், சாதி விட்டு சாதி மாறி மணம் புரியத் துணிய மாட்டார்கள் என்பதுதான் இதில் ஒரு விசித்திரம்.

ஒரே ஜாதியில் பெண் சிசுக்கொலை புரியும் குடும்பத்தினரும், பெண் சிசுக்கொலை புரியாத குடும்பத்தினரும் இருப்பதால், பெண்கள் பிறக்கும் வீடுகளில் பெண்கள் அதிகமாகவே பிறப்பதும் நடக்கிறது. இத்தகைய குடும்பங்கள் பொதுவாகப் பெண்களை அதிகம் மதிக்கின்றனர் என்று சொல்லி விட முடியாது என்றாலும், பெண்களை அலட்சியம் செய்யாமல் ஓரளவு கனிவாகவே நடத்துகிறார்கள். இவர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை கொடுப்பவரும், பெண்களை உயர் கல்விக்கு அனுப்புவோரும் உண்டு. பெரும்பாலும் அந்தப் பகுதியில் பெரும்பான்மை சமூகமாகவோ, அல்லது ஆதிக்க சாதியினராகவோ இருக்கும் இச் சமூகங்களில் பெண்களும் சரி, ஆண்களும் சரி சுய மதிப்பை உயர்வாக எண்ணுவர். ஆக, இப்பெண்கள் மேல்படிப்புக்குச் சென்றால் தம்மளவில் சாதனைகள் புரிபவராக இருப்பதோடு அல்லாமல், தமக்குக் கணவராக வருவோரும் அப்படியே இருக்க வேண்டும் என்று கருதுவர். ஆக ஒரே சாதியில் கணிசமான பகுதியினரின் குடும்பப் பெண்கள் தம்மை விட மேல் நிலையில் உள்ள ஆண்களையே மதிப்போடு கருதி மணம் புரியத் தயாராக இருக்கின்றனர்.

ஓரளவு வசதி உள்ள விவசாயக் குடும்பங்களில், ஆண்கள் வழியாகவே நிலச் சொந்தம் செல்வதால், பெண்கள் அதிகபட்சம் படிக்க வைக்கப்படுகிறார்கள். சில நேரம் ஆணுக்குச் சொத்து, பெண்ணுக்குப் படிப்பு என்று கூடக் கருத்து நிலவுகிறது. இத்தகைய பெண்கள் சிறப்பாகப் படித்து தங்களை கல்வி ரீதியாக உயர்த்திக் கொண்டுள்ளார்கள். ஆகையால் தங்களுக்கு இணையாகப் படித்த ஆண்களையே தேடுகிறார்கள். மெத்தப் படித்த ஆண்களைத் தமக்குத் துணையாகத் தேடும் பெண்களின் எண்ணிக்கை கூடும் அதே நேரம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் கிராமப் பகுதிகளில் வாழ படித்த பெண்கள்விரும்புவதில்லை. அதாவது சென்ற நூற்றாண்டின் முதல் இரு பகுதிகளில் கிராமத்தில் இருந்து நகரத்திற்குப் புலம் பெயர்வது அனேகமாக இளைஞர்கள் அதுவும் ஆண்களால்தான் நிகழ்ந்தது என்றால், அதே இடம் பெயர்தல் இப்போது படித்த இளம் பெண்களால் நிறையவே நிகழ்கிறது. ஓர் ஆணாதிக்க சமுதாயம் பெண்களின் ஊக்கத்தாலும், மனச்சாய்வாலும் நிலை பெயர்க்கப்படுகிறது என்பது ஒரு விதத்தில் நல்ல விளைவாகவே இருக்கிறது. ஆனால், சொத்தாக நிலம் கையில் கிட்டி அதனால் கிராமங்களில் நிலம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டி உள்ள ஆண்களுக்குப் பணவசதி இருந்தாலும், பல நேரம் தக்க வாழ்க்கைத் துணை கிட்டுவது கடினமாக இருக்கிறது. ஏனெனில் வெள்ளைச் சட்டை வேலை போல அல்லாமல் உறுதியான வருமானம் இல்லாத சூதாட்டம் போன்ற வாழ்வு விவசாயியின் வாழ்வு. அதுவும் சிறு நில உடமையாளர் வாழ்வு திரிசங்கு சொர்க்கம்தான். எங்கும் சென்று சேர வாய்ப்பில்லாத அதே நேரம் மதிப்பு இருப்பது போலப் பிரமை தரும் வாழ்வு. எனவே, இத்தகைய வாழ்வில் இருந்து விடுபட படித்த பெண்கள் முயல்வதில், பெரிதும் விரும்புவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சமீபத்தில் பல தமிழ் நாவல்களில் இத்தகைய கதை மாந்தர்களை வாசகர்கள் பார்த்திருக்கலாம். அந்த நாவல்கள் யதார்த்தத்தோடு தொடர்புள்ள நாவல்களே.

ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் போது, இலவம் பஞ்சு என்ன செய்யும். பஞ்சையான ஆண்கள், அதாவது, திருமணம் என்று வரும்போது, சொத்தும் இல்லாது, படிப்பும் இல்லாது, நிலைத்த வேலையும் இல்லாது, லாரி டிரைவர் போன்ற தற்காலிக வேலைகளில் இருக்கும் ஆண்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா ?

இப்படி ஒரு புறம் பெண்கள் கிடைத்த சிறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி சமூக அந்தஸ்து ஏணியில் மேலேறத் துணியும்போது, மறுபுறம் கிராமத்தில் உள்ள குறிப்பு அதிகம் அறியாமல், ஆண் என்பதால் தனக்கு மதிப்பு உண்டு என்று தவறாகப் பாடம் படிக்கும் இளைஞர், தாம் வயதுக்கு வரும்போது வெளி உலகம் மிகவும் சிக்கலானது என்பதை அறியாமல், தொலை நோக்கு இல்லாமல், கையில் நான்கு காசு பார்க்கும் தற்காலிகக் கவர்ச்சி காட்டும் தொழில்களில் அவை எளிதே கைவசப்படுகின்றன என்பதால் அவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இத்தகைய வேலைகள் அனேக நேரம் உறவினர், தெரிந்தவர் ஆகியோரின் உதவியால் உடனடியாகக் கைவசப்படுகின்றன. சிறு வயதில் உடனே பணம் கை வசப்படுவதன் மீது உள்ள ஆசையாலும், பல ஊர்களுக்குச் செல்லும் கவர்ச்சியாலும் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இத்தகைய அலைப்பான வேலைகளில் சென்று இந்த இளைஞர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால், ஒப்பீட்டில் இச் சமூகங்களில் பெண்கள் அளவுக்குப் படித்து முடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இது இன்னும் கூடுதலான ஆண்களை மனைவிகள் பெற முடியாமல் அடித்துவிடுகிறது.

இந்தப்பகுதியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தாமதமாகவே வந்திருக்கிறது. இங்கிருக்கும் மருத்துவ மனைகளில் எய்ட்ஸ் நோய்க்குச் சிகிச்சை அளித்து அனுபவம் உள்ள அல்லது அதற்கான பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லை. அரசு மருத்துவ மனைகளில் சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவே பல நேரம் மருத்துவர் வருவதில்லை. அவர் வந்தால் செவிலியர் வருவதில்லை. இருவரும் வந்தால் சோதனைக் கருவிகள் இராது. அதுவும் இருந்தால் வருடத்தில் பாதி நாட்கள் அவை வேலை செய்யாது – இந்தக் கதைதான் நம் எல்லாருக்கும் தெரியுமே. பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்குக் காத்திருந்து கவலையால் மனநோய் வராதவர் குறைவாகத்தான் இருப்பர்.

போதாக் குறைக்கு எரிகிற வீட்டில் அகப்பட்டது லாபம் என்று பெரும் துன்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் மோசடி செய்து தாம் கொழுக்க முற்படும் கொடிய மிருகங்களும் உண்டு. மனிதர் என்ற பெயருக்கே களங்கம் தேடும் அவர்கள், இங்கிருக்கும் மக்களுக்கு வட்டாரக் கேபிள் கம்பெனிகள் வழியாகத் தொலைக் காட்சிகளில் பொய் விளம்பரங்கள் செய்து ‘நான் பத்துத் தலைமுறையாகப் பெயர்பெற்ற சித்த வைத்தியன், போகரின் மூல நூலே எங்கள் குடும்பத்தின் கைவசத்தில் மட்டுமே உள்ளது, உலகமே அறியாத ரகசிய மூலிகைகளையும் பாஷாணங்களையும் வைத்துச் சித்த வைத்தியம் மூலம் எய்ட்ஸ் நோயை தீர்க்கிறேன், ஒரு லட்சம் கொண்டுவா, இரண்டு லட்சம் கொண்டுவா ‘ என்று வேறு நம்பிக்கை மோசடி செய்து ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டு நொந்தவர்களை மேலும் போண்டி ஆக்குகிறார்கள்.

நாமக்கல்லில் சுமார் இரண்டு லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோயின் தீவிரம் இன்று லாரித் தொழிலாளர்களிடமிருந்து அந்தத் தொழிலுக்குச் சம்பந்தமில்லாத கிராமத்து மக்கள் வரைக்கும் எல்லோரிடமும் பரவி ஒரு தீவிரத் தன்மையை அடைந்துவிட்டது. ஆனால் அரசும் மக்களும் பத்திரிக்கைகளும் இந்தப் பிரச்னையைப் பற்றி எந்த வித அக்கறையுமின்றி போய்க்கொண்டிருக்கிறார்கள்.

எய்ட்ஸ் நோய் ஒரு சமூகத்தில் பரவ ஆரம்பித்தால், அதுவும் வேரற்று அலையும் இளைஞரின் எண்ணிக்கை கூடி, வியாபாரப் பாலுறவுகள் பெருகி இருக்கும் ஒரு சமூகத்தில் பெரிய அளவில் பரவினால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை நாம் ஏதோ கற்பனை செய்து பார்க்கக் கூடத் தேவை இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எய்ட்ஸ் நோய் தீவிரமடைந்ததும் வந்த பிரச்னைகளைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். அந்த நாடுகளில், தாயோ தந்தையோ முதலில் இறப்பதால் ஒரே ஒரு பெற்றவர் உள்ள குடும்பங்கள் முதலில் தோன்றின. ஆனால் நோய் ஏற்கனவே குடும்பத்தில் ஊடுருவி இருக்கும், அதாவது வாழ்கிற பெற்றவரும் ஏற்கனவே நோய் வயப்பட்டுதான் இருப்பார். தாய் அல்லது தந்தை இறந்த மனபாரம் குறைவதற்குள், அதன் விளைவுகளின் தீவிரம் இன்னம் சரியாகப் புலனாகும் முன்னமே மீதமிருக்கும் பெற்றவரும் இறக்க, ஏராளமான சிறுவர்களும் சிறுமிகளும் அனாதைகளாக தெருக்களுக்கு வந்தார்கள்.

சுமார் 1 கோடியே 40 லட்சம் அனாதைகள் அதுவும் மக்கள் நெருக்கம் அதிகமில்லாத ஆப்பிரிக்க தேசங்களில் இருக்கிறார்கள். இந்தியாவோ பெரும் மக்கள் நெருக்கடி இருக்கும் நாடு. இங்கு எய்ட்ஸ் நோய் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அதன் விளைவு மிகவும் தீவிரமாக இருக்கும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறார்கள் தங்கள் இளமைப் பருவத்தை இழக்கும் அவலம் மட்டுமல்ல, சரியான வளர்ப்பு இல்லாமல் மதிப்பீடுகள், நம்பிக்கை, இலக்குகள் எதுவும் சரியே பெறாததால், அவர்களது எதிர்காலமும் சிதிலமடைந்தது, இச் சிறுவர்கள் குற்றங்கள் பெருகக் காரணமாகிறார்கள். பலர்

தீவிரவாதம் வன்முறை என்று கிட்டுகிற பாதைகளில் தொலைந்து போகிறார்கள். அரசுகள் அனாதை இல்லங்கள் கட்டமுடியாமல் திணறுகின்றன. உள்ள இல்லங்களும் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அலைப்புறுகின்றன. சமீப காலம் வரை இப்படி அனாதையான குழந்தைகளில் ஒரு பகுதியினர் அவர்களே கூட நோய் வசப்பட்டவராக இருந்து வருகிறார்கள்.

நிலைத்த குடும்ப உறவு அற்ற இவர்கள் சமூகக் குற்றங்களுக்குக் காரணமாக மாறுகிறார்கள். ஆப்பிரிக்காவின் இந்த சமீப காலத்து அனுபவம் இந்தியாவிலும் எய்ட்ஸ் நோயால் ஒரு பெரும் சமூகச் சீர்குலைவு வர வாய்ப்பு எழுந்திருக்கிறது என்றே காட்டுகிறது.

இன்றைய உடனடித்தேவைகள்.

1 பாலுறவு தொழிலாளர்களின் தொழிலை அங்கீகரிப்பது. அதை ரகசியமாகவோ அல்லது குற்றமாகவோ வைத்திருக்கும் வரை அதனால் பொது சமுதாயத்துக்கு ஏற்படும் ஆபத்து கூடுகிறதே தவிரக் குறைவது இல்லை. இதனால் பாலுறவுத் தொழிலை ஊக்குவிக்கிறோம் என மதி மயங்கத் தேவை இல்லை. புதிதாக ஈடுபட முயல்பவரை அல்லது இத் தொழிலில் குற்றம் செய்யும் கும்பல்களால் நுழைக்கப்படுபவர்களை நாம் காப்பாற்றி வேறு வாழ்வுக்குக் கூட வழி காட்ட முடியலாம். ஒழிக்கவே முடியாத ஒன்றைக் குறைந்த பட்சம் முறைப்படுத்திக் கட்டுப்படுத்தவாவது செய்யலாம்.

2 அவர்களிடம் மாதம் ஒரு முறை எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து நோயில்லை என்று சான்றிதழ் வாங்கவேண்டும், அப்படி அல்லாமல் தொழில் செய்வது குற்றம், மீறினால் கடும் தண்டனை கிடைக்கும் என்று அறிவிக்க வேண்டும்.

3 போர்க்கால அடிப்படையில் இங்கு எய்ட்ஸ் பரிசோதனையை இலவசமாக அனைவருக்கும் வழங்குவது. முக்கியமாக லாரி டிரைவர் தொழிலில் இருப்பவர்களுக்கு இலவச எய்ட்ஸ் பரிசோதனை வழங்குவது. சமீபத்தில் உலகுக்கே எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளின் கலவையை மலிவான விலையில் தயாரிக்க சில இந்திய மருந்து நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன. அவற்றின் உதவியுடன், மிக மலிவாகவோ அல்லது தேவையானால் தகுதியும் அவசியமும் கருதி இலவசமாகவோ மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவது மொத்த சமூகத்தையே காப்பாற்றும்.

நீண்டகாலத் தேவைகள்

1 பெண் சிசுக்கொலையை நிறுத்துவது. ஆண்-பெண் எண்ணிக்கையில் சம நிலை இயற்கையில் இருப்பதைக் குலைப்பது எத்தகைய பாதிப்புகளை நீண்ட கால அளவில் உருவாக்கும் என்று போதிப்பது.

2. பெண்கள் ஆண்களுக்கு சரி சமமானவர்கள், அவர்களும் சமூகத்தில் எல்லாத் தொழில்களிலும், எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டு நிகராக உழைக்க வாய்ப்பு அளித்தால் மொத்த சமுதாயமுமே பெரும் வளமை பெறும் என்பதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து அத்தகைய வாய்ப்புகளைப் பெண்களுக்கு அளித்து, பெண்களில் சாதனையாளர்களுக்குப் பெரு விளம்பரம் தந்து சமுகத்தின் விழிப்புணர்வை அதிகரித்தல்.

3. அடிப்படைக் கல்வியைப் பரவலாக்குவதும், பலவிதமான தொழில் நுட்பப் பயிற்சிகளைக் கிராமங்களில் பரப்புதல்.

4. கிராமங்களில் உள்ள உபரி லாபம், நிதி வசதிகள் ஆகியவற்றைத் தொழிற் கூடங்களில் உள்ளூரிலேயே நிறுவி இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வழி செய்தல். (இது தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே சோதித்துப் பார்க்கப்பட்ட ஒரு முன்மாதிரி.)

[1] http://www.thestatesman.net/page.arcview.php ?clid=2&id=48579&usrsess=1

மேலும் இணைப்புகள்

http://news.bbc.co.uk/1/hi/health/3867401.stm

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3250285.stm

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3227275.stm

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்