இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

அசுரன்


இரசிய உளவுத்துறையானது அணுசக்தி மாசுபாடு குறித்து ஆராயும் இவரைப்போன்றவர்களை விரும்புவதில்லை. இதுவே செர்கி பசெங்கோ என்ற இந்த அணுக்கதிரியக்க ஆராய்ச்சியாளரும் பிரச்சாரகருமான இந்த விஞ்ஞானியின் பணியை மிக ஆபத்தானதாக்கியுள்ளது. இவரது கண்டுபிடிப்புகள், அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டதைவிட அதிகளவு கதிர்வீச்சு உண்மையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. அணுக்கழிவுகளை இறக்குமதி செய்து அதன் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கலாம் என்று எண்ணியிருந்த இரசிய அரசுக்கு இக்கண்டுபிடிப்புகள் பெரும் நெருக்கடியாக உள்ளன. சைபீரியாவிலுள்ள இரசிய அறிவியல் கழகத்தில் அணுவிஞ்ஞானியாகவுள்ள இவர் நோவோசிபிர்ஸ்க் பல்கலைக்கழகத்தில் ஏரோசோல் மாசுபாடு குறித்த விரிவுரையாளராக உள்ளார். தான் இரசியாவை நேசிப்பதாகவும் இரசிய அதிகாரிகளை மதிப்பதாகவும் அவர் சொன்னாலும்கூட அவரது பணியின் காரணமாக தொடர்ச்சியாக அவர் காவல்துறையின் தொந்தரவுக்கு ஆளாகிவருகிறார். நியூ சயின்டிஸ்ட் இதழுக்காக இரசியாவின் துணிச்சலான இந்த விஞ்ஞானியைச் சந்தித்து உரையாடினார் பால் வெப்ஸ்டர். அந்நேர்காணல் இது. தமிழில்: அசுரன்

உங்களுக்கு எப்படி கதிர்வீச்சு தொடர்பாக ஆர்வம் ஏற்பட்டது ?

1953 ஆம் ஆண்டு நான் பிறந்தபோது எனது பெற்றோர் செக்கோஸ்லேவியாவிற்கும் கிழக்கு ஜெர்மனிக்கும் இடையேயான எல்லைக்கிடையே இருந்த கெம்னிட்ஸ் யுரேனியச் சுரங்கத்தில் நிலவியலாளர்களாகப் பணியாற்றிவந்தனர். நான் பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புவரை எனது தாயார் நிலத்தடிச் சுரங்கத்திற்குள் சென்றுவந்தார். இதுவே எனக்கு கதிர்வீச்சு தொடர்பாக ஆர்வமேற்படக் காரணமாக இருந்திருக்கலாம்.

நான் பிறந்தபிறகு கிர்கிஸ்தானில் உள்ள யுரேனியத்தை உருக்கும் நகரத்திற்கு குடிபெயர்ந்தோம். அது ஒரு இரகசிய இடம். வெளியுலகில் இருந்து கம்பிவேலியால் பிரிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அங்கு சென்றபோது அப்பகுதியெங்கும் செந்நிற கசகசா செடிகள் பரவியிருந்தன. நான் பள்ளிப்படிப்பை முடித்தபோது எங்குமே கசகசா செடிகளைக் காணவில்லை. மிகப் பிற்காலம் வரை -அதாவது, 1980களின் பிற்பகுதியில் கிளாஸ்நாஸ்ட் சோவியத்தின் அணு இரகசியங்களை வெளிப்படுத்தும்வரை உண்மையில் எனது பெற்றோர் என்ன செய்துவந்தனர் என்று எனக்குத் தெரியாது. அந்நேரம் நான் ஒரு அணு விஞ்ஞானியாக ஆகியிருந்தேன். ஆக, ஏதோவொருவகையில் கதிரியக்கம் எனது குடும்பத் தொழிலாக இருந்து வந்திருக்கிறது என்று நீங்கள் எடுதுதுக்கொள்ளலாம்.

முதன்முதலாக நீங்கள் எப்போது கதிரியக்க மாசுபாடு குறித்து அக்கறைகொள்ளத் தொடங்கினீர்கள் ?

நான் 1995 ஆம் ஆண்டு முதல் இதில் செயல்படத்தொடங்கினேன். நான் நோவோசிபெர்ஸ்க்கில் உள்ள வேதியல் இணைப்பு உலையில் (உண்மையில் அது அணு எரிபொருள் உருவாக்கு மையம்) இருந்தபோது அறிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் 1975ஆம் ஆண்டு முதலே அங்கு வாழ்ந்துவந்த போதிலும் அதுகுறித்து எந்தவொரு சிந்தனையும் எனக்கு இல்லை. காற்றிலுள்ள மாசுபாடு தொடர்பாக 5 ஆண்டுகள் ஆய்வு செய்யுமாறு அவர்கள் என்னை கேட்டுக்கொண்டனர்.

அந்த உலையைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் தூய்மையாக இருப்பதை நாங்கள் கண்டோம். ஆனால் அதிலிருந்து வீசுகின்ற காற்றில் கதிரியக்கம் இருந்தது. அப்பகுதியில் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான மக்கள் வழக்கு தொடுப்பதற்கும் மேலதிகமாக பெருமளவு கதிரியக்கத்தைப் பெற்றிருந்தனர்.

நீங்கள் எப்போதெல்லாம் கைதுசெய்யப்பட்டார்கள் ?

பலமுறை. சிலவேளைஅதிகாரிகளும் நானும் சுற்றி அமர்ந்துகொண்டு சில பீர்களை சாப்பிடுவோம். அவர்கள் தம் சிக்கல்களை எடுத்துரைப்பார்கள். சில முதுநிலை அதிகாரிகளும் வந்துள்ளனர். அவர்கள் இங்கு வந்த பின்னர் அவர்களிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்றாலும் அவர்கள் வலிமையான இரசியாவும் உளவுத்துறையும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் படைக்குறைப்பை எதிர்க்கின்றனர். இரசிய அதிபர் புதினை ஆதரிக்கின்றனர். புதின் சுற்றுச்சூழல் விதிகளையும் கண்காணிப்பையும் இரசியாவில் பெருமளவில் குறைத்துள்ளார். இது சுற்றுச்சூழல் அறிவியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தம் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிகிற ஒரு நாட்டை விரைவிலேயே அடைய விரும்புகின்றனர்.

நீங்கள் எந்தெந்த அணுசக்தி மையங்களை ஆராய்ந்தீர்கள் ?

இரசிய அணுசக்தித்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் உலைகளைச் சுற்றிலும் ஆராய்ந்தேன். இதில் சைபீரியாவின் மேற்குப்பகுதியில் உள்ள செலியாபின்ஸ்க், கிழக்கிலுள்ள டோம்ஸ்க், கர்ஸ்நோயர்ஸ்க் ஆகியவை அடங்கும். இவற்றில் அணுமின் நிலையங்கள், அணுஎரிபொருள் தொழிற்சாலைகள் மற்றும் அணுக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை மறுசுழற்சி செய்யும், சேமிக்கும் இடங்கள் போன்றவை அடங்கும்.

இவை எல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கானவையா ?

ஆம். எனினும் சில இராணுவ பயன்பாட்டிற்கானவை. இராணுவ பயன்பாட்டிற்கான நிலையங்களைப்பற்றிி கேள்வி கேட்பது சட்டவிரோதமாகும். எனவே நாங்கள் அவற்றிலிருந்து விலகியே இருக்கிறோம். ஆனால், எவை மக்கள் பயன்பாட்டிற்கானவை, எவை இராணுவப் பயன்பாட்டிற்கானவை, எவற்றில் இரண்டுமே உள்ளன என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியாது. எனவே, ஏதாவதொன்றின் மாசுபாடு பற்றி நாம் ஆராய்ந்து, அது இராணுவப் பயன்பாட்டிற்கானதாக இருந்துவிட்டால், உளவு பார்த்ததான குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்படும் ஆபத்து உள்ளது. அப்படி பல விஞ்ஞானிகள் தம் வழக்கு விசாரணைக்கு வராமலேயே பல்லாண்டுகளாகச் சிறையில் வாடிவருகின்றனர். இவ்விசாரணைகள் இரகசியமாகவே நடைபெறுகின்றன. இதில் நமது தரப்பை நியாயப்படுத்துவது மிகக் கடினம். நாம் மூடிய பகுதிகளுக்கு வெளியே இருக்கிறோம். ஆனால், அந்தத் திறந்த பகுதிகளில் தொடர்ச்சியாக கணக்கற்ற அளவில் கதிர்வீச்சை அனுபவித்துவருகிறோம்.

நீங்கள் என்ன கண்டறிந்தீர்கள் ?

சைபீரியாவின் கதிர்வீச்சு மாசுபாடானது அணுசக்தி அமைச்சகம் ஒப்புக்கொண்டதைவிட மிக அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. எல்லா நிலையங்களிலும் இதே நிலைதான். ஆனால் இப்போதுள்ள மாசுபாட்டையும் முன்னரே ஏற்பட்ட, பழைய மாசுபாட்டையும் பிரித்தறிவது சிக்கலானதாக இருக்கிறது. இம்மாசுபாடுகள் பழையவை என்று அதிகாரிகள் சொல்லும்போது, நாம் கதிரியக்கத் தனிமங்களின் சிதைவுறும் தன்மையின் அடிப்படையில் அவற்றை கண்டறியவேண்டும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் கண்டறிந்த ஏதாவதொன்றைப்பற்றிக் கூற முடியுமா ?

எனது மிக ஆச்சரியப்படத்தக்கக் கண்டுபிடிப்பு 2000ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்போது நான் அமெரிக்காவைச் சேர்ந்த அரசின் பொறுப்பாண்மைத் திட்டம் என்ற பெயரில் செயல்பட்ட விஞ்ஞானிகள் குழுவுடன் சேர்ந்து செயல்பட்டேன். அமெரிக்காவில் அணுசக்தி மாசுபாடு குறித்து ஆராயத் தொடங்கிய அவர்கள் பின்னர் உலகளவில் செயல்படத்தொடங்கினர். 1999ல் சைபீரியாவில் நடைபெற்ற மாநாட்டில் நான் அவர்களைச் சந்தித்தேன். அப்போது நாங்கள் டோம்ஸ்க்கில் அபாயகரமான அளவு கதிரியக்கம் இருப்பதைக் கண்டறிந்தோம். அங்குள்ள புளூட்டோனிய உற்பத்தி உலை மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், கண்டறிய இயலாத இரகசிய இராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த உலைக்குக் கீழ்ப்பகுதியில் டோம் ஆற்றில் மிக அதிகளவு கதிரியக்கம் இருந்தது. அதில் புளூட்டோனியமும் இருந்தது. 1993ஆம் ஆண்டு அங்கு ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தபோதிலும், அந்த ஆற்றில் நாங்கள் கண்டறிந்த தனிமங்கள் அதற்கும் மிகப் பிந்தியதாகவே இருப்பதைக் கண்டறிந்தோம்.

டோம் ஆறானது ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கும் மற்றொரு ஆற்றுடன் கலப்பதால் இப்பெருமளவு மாசானது ஆர்க்டிக் பெருங்கடலையும் பாதிக்கும் ஆபத்து உள்ளது. எமது ஆராய்ச்சியில் இந்த உலையானது உலகிலேயே மிகப்பெரிய கதிரியக்க மாசுபாட்டாளராக இருப்பதும், உள்ளூர் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

அதிகாரிகளின் எதிர்வினை என்னவாக இருந்தது ?

டோம்ஸ்கிற்கு அருகில் நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டபோது உளவுத்துறையினர் என்னைக் கைது செய்தனர். ஒரு நாள் விசாரணையின் பின்னர் வெளியிட்டனர். உண்மை என்னவென்றால் பல அயல்நாட்டினர் அச்சம்பவத்தைப் பார்த்தது உனக்கு உதவியாக இருந்தது. இராணுவப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் அணுஉலைகளை ஆராய்வதன் ஆபத்துகள் குறித்து உளவுத்துறையினர் மற்றொருமுறை என்னை எச்சரித்தனர்.

நாங்கள் அந்த ஆற்றிலிருந்து மாதிரிகள் எடுப்பதை அவர்கள் தடுக்கவில்லை. ஆனால் எங்கள் கருவிகளை அவர்கள் முழுமையாக பரிசோதித்தனர். குறிப்பாக, ஒரு வயதான அதிகாரி, நாங்கள் மாதிரி எடுக்கும் இடத்தை மிகச்சரியாகக் கணக்கிடப் பயன்படுத்தும் நில அமைவிட அறிதல் கருவியைப் (GPS locator) பயன்படுத்தி நாங்கள் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனுக்குத் தகவல்கள் அனுப்புவதாக ஐயப்பட்டார். 6 மாதங்களின் பின்னர், அக்கருவியைப் பதிவு செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறெந்த விளஸ்ரீகமும் இல்லாமல் அக்கருவி எங்களிடம் திரும்பத் தரப்பப்பட்டது. எனவே நாங்கள் பதிவு செய்தோம்.

அணுசக்தி அமைச்சகத்தின் எதிர்வினை என்னவாக இருந்தது ?

அனைத்து மாசுபாடுகளும் கட்டுக்குள் இருப்பதாகக்கூறி டோம் ஆற்று மாசுபாடு தொடர்பான எங்கள் ஆய்வை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் இதன்விளைவாக, முதன்முதலாக அந்த ஆற்று மாசுபாடு தொடர்பான தகவல்களைத் தந்தனர். ஆச்சரியப்படும்வகையில், புளூட்டோனியத்தின் சிதைவுற்ற வடிவமான நெப்டூனியம் போன்ற சில அபாயகரமான கதிரியக்கத் தனிமங்கள் அந்த ஆற்றுப்படுகையில் இருப்பதாக ஒப்புக்கொண்டனர். இதன்மூலம் அந்தப் புள்ளிவிபரங்களை நாங்கள் வெளியிடுவோம் என்று அவர்கள் எண்ணினர். என்றாலும் அது ஒருவகையில் மேலதிக ஆய்வுக்கு வழியமைப்பதாகவே இருந்தது.

பிற அணுசக்திப்பகுதிகளில் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறு அவர்கள் என்னை அழைத்தனர். 1995ஆம் ஆண்டு முதல் நோவோசிபிர்ஸ்க் பகுதியில் காற்றில் இருக்கும் கதிரியக்கம் தொடர்பாக அவர்களின் அனுமதியுடன் ஆய்வுசெய்தோம். ஆச்சரியப்படும்வகையில் செலியாபின்ஸ்கில் நாங்கள் ஒரு ஆய்வு செய்வதில் அவர்கள் ஆக்கபூர்வமாக ஒத்துழைத்தனர். அதோடு, அப்பணியில் எங்களுடன் இணைந்து பணியாற்றவும் விருப்பம் தெரிவித்தனர். நாங்கள் அனைத்தையும் மூடவேண்டும் என்று சொல்கின்ற பசுமை அராஜகவாதிகள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டனர். காற்றில் பரவும் கதிரியக்கம் தொடர்பான எங்கள் நிபுணத்துவத்தை அவர்கள் பாராட்டினர். அது மிக ஆர்வமூட்டும் காலமாக இருந்தது. என்றாலும் உளவுத்துறை அண்மைய மாதங்களிலும் எங்களைக் கண்காணித்தே வருகிறது.

இதை உங்கள் நிறுவனம் எப்படி எடுத்துக்கொண்டது ?

உளவுத்துறையானது தொடர்ந்து என்னை விசாரணைக்கு அழைத்துக்கொண்டிருந்தது. எனது நிறுவனத்தின் இயக்குநரிடமும் என்னைப் பற்றி விசாரித்தது. இதனால் கதிரியக்க மாசுபாடு தொடர்பான எனது ஆய்வு பெருமளவு தடைபட்டது. எனது ஆய்வால் இந்நிறுவனத்துக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. என்றாலும் ஏரோசால் இயற்பியல் தொடர்பான எனது ஆய்வு அங்கீகரிக்கப்பட்டது. எனவே, கதிரியக்க ஆய்வுகளை நான் அங்கே மேற்கொள்ளவில்லை. அதன் முடிவுகள் அரசியல்ரீதியாக ஆபத்தானவை என்பதால் எமது அறிஞர்கள் மிக அச்சமடைந்துள்ளனர்.

உங்கள் பணி உங்களின் அன்றாட வாழ்வை எப்படி பாதித்துள்ளது ?

எனது நிறுவனத்தின் இயக்குநருடன் பேசி, எனது இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடி வீட்டை ஆய்வகமாகப் பயன்படுத்திவருகிறேன். இது எனது மனைவிக்கும் மகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது- ஏன் எமது பூனைக்கும்கூடத்தான். அது ஒருமுறை எனது மாதிரிகளை சாப்பிட்டுவிட்டது.

இப்போது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள் ?

இந்த (2003) இளவேனிற்காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அரசின் பொறுப்பாண்மைத் திட்டம் அமைப்பிடம் இருந்து ஒரு போட்டோன் ஸ்பெக்டோமீட்டர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது கிடைத்தால், 2000ஆம் ஆண்டில் டோம் ஆற்றில் நாங்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளை சரிபார்த்துக்கொள்ளமுடியும். அதோடு, பிற பகுதிகளில் ஆய்வுகளை எளிதாக, வசதியாக நடத்தமுடியும். ஆனால், இது சந்தேகத்திற்கிடமானதாக ஆகிவிட்டது. கடந்த (2003) பிப்ரவரி மாதம் 3 காவல்துறை அதிகாரிகள் எனது வீட்டின் முன் வைத்து எனது 9 வயதேயான மகளிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ஜி.பி.எஸ். கருவி குறித்தே கேட்டுள்ளனர். எனவே, இப்போது போட்டோன் ஸ்பெக்டோமீட்டரை எனக்குத் தந்தால் அது மேலும் சிக்கலை உருவாக்கும் என்று அஞ்சிய அமெரிக்க நண்பர்கள் தற்போது தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். என்றாலும் இந்தக் கோடையிலும் நான் டோம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

உங்கள் மீது என்ன குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது ?

சில இரகசிய இடங்களில் அளவிடுவது தடுக்கப்பட்டுள்ளதை மீறியதாக என்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எந்தெந்த இடம் இரகசிய இடம் என்ற பட்டியலை நான் பெற முடியாதாகையால் இதை நான் தவிர்க்க முடியாது. அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இது முட்டாள்தனமானதாகும். ஏனென்றால் இந்த இடங்கள் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படாதவையாகும். இப்பகுதிகளில் வழக்கமாக மக்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கின்றனர், பெர்ரி பழங்கள், காளான்களை சேகரித்துக்கொண்டிருக்கின்றனர், ஆயினும் இந்த இடங்களில் நாங்கள் கதிர்வீச்சை கண்டறிந்திருக்கிறோம்.

உங்கள் ஆய்வுகள் ஏன் இப்போது மிக சந்தேகத்திற்கிடமாகியுள்ளன ?

அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இரசியாவில் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாங்கள் டோம் ஆற்றில் மீண்டும் ஆய்வுகள் நடத்த இருப்பது அணுசக்தித்துறை அமைச்சகத்துக்குத் தெரியும். அண்மைய ஆண்டுகளில் கதிரியக்க ஆராய்ச்சியாளர்கள் மீது உளவு பார்த்ததாக பெருமளவு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நோவோசிபிர்ஸ்க்கில் அமெரிக்காவைச் சேர்ந்த எட்வர்டு போப் என்ற ஆய்வாளரைக் கைதுசெய்ததற்காக உள்ளூர் உளவுத்துறையினருக்கு விருது அளிக்கப்பட்டது. அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் அதிபர் புதினால் விடுதலை செய்யப்பட்டார்.

நீங்கள் வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் சேர்ந்து வேலை செய்வதன் முக்கியத்துவம் என்ன ?

எனது மாத ஊதியமாக நான் நிறுவனத்திலிருந்து பெறுவது மாதம் 5000 ரூபாய்தான். விலைமதிப்புமிக்க கருவிகளை நான் வெளியிலிருந்து பெற விரும்பவில்லை. ஏனென்றால் அது நமது அறிவியல் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். வெளிநாட்டினருடன் சேர்ந்து பணிபுரிவதால் சிக்கல்கள்தான் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால், அணுசக்தித்துறையைப் பொறுத்தளவில் வெளிநாட்டு அணுசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதில் நாடுகளிடையே போட்டி உள்ளதால் வெளிநாட்டுக்காரர்களை அந்நிய ஏஜென்டுகளாகக் கருதுகின்றனர்.

நீங்கள் உங்களை ஒரு விஞ்ஞானி என்பதைவிட சுற்றுச்சூழல் போராளி என்றுதான் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா ?

ஆம், மிகத் திட்டவட்டமாக.

நீங்கள் அணுசக்திக்கு எதிரானவரா அல்லது மோசமான அணுசக்திக்கு எதிரானவரா ?

அணுசக்தியை மிகக்கட்டுப்பாடான பாதுகாப்பு அமைப்பின்கீழ் படிப்படியாக அகற்றுவதை ஆதரிக்கிறேன். அதோடு இது தூய, புதுப்பிக்கத்தக்க மாற்றுகளால் அகற்றப்படவேண்டும் என விரும்புகிறேன்.

சோவியத் ஆட்சிகாலத்தில் கதிரியக்க மாசுபாடு குறித்து ஆராய்வது எளிதாக இருந்ததா ?

சோவியத் ஆட்சிகாலத்தில் எனது ஆய்வுகள் வெறுமனே கருத்தியல்மட்டத்திலேயே இருந்தன. அப்போது நாங்கள் சிறிதளவே கள ஆய்வு மேற்கொண்டிருந்தோம். அணு உலைகளுக்கு அருகில் சென்றதே இல்லை. சங்கிலித்தொடராக பல அணுசக்தி நகரங்கள் அமைந்திருந்த சைபீரியாவில் பணியாற்றிபோது எனக்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இரகசியம் என்ற சொல் இதுகுறித்து நான் மாணவர்களிடம் பேசுவதைக்கூட தடைசெய்தது.

இந்நிலை எப்போது மாறத்தொடங்கியது ?

உண்மையில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற செர்னோபில் அணுஉலை விபத்து இதுகுறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்தது. என்றாலும், 1993ல் சைபீரியப் பாலைவனத்தில் உள்ள கதிரியக்க மாசுபாட்டின் அளவு குறித்துத்தான் மக்கள் வெளிப்படையாகப் பேசினர். கள ஆய்வின் அடிப்படையிலான எனது முதல் ஆய்வு 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்பிறகும்கூட இரகசியம் தொடர்பான சட்டங்களால் பெரும்பாலான இரசிய இதழ்கள் எமது ஆய்வை வெளியிடும் வலிமையற்றவையாகவே இருந்தன. இப்போது ஆய்வு மேற்கொள்வது என்பது மனித உறவுகளுக்கான ஒரு காரியமாகிவிட்டது.

தமிழில்: அசுரன் (asuran98@rediffmail.com)


Series Navigation

அசுரன்

அசுரன்