ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

ஆசாரகீனன்


ஆப்பிரிக்காவில் இத்தகைய மனிதர்களைத் தலைவர்களாக மீண்டும் மீண்டும் காண முடிகிறது. காலனி ஆதிக்க ஆட்சியாளரையும் விடக் குரூரமாகவும், வன்முறையோடும், அலட்சியத்தோடும் ஆளும் பல ஆட்சியாளர்கள் மேல் நாட்டுப் பல்கலைக்கழகங்கள், ராணுவப் பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றில் பயின்றவர்கள்தாம். உதாரணமாக, சூடானில் இப்போது ஆளும் கூட்டத்தில் அவசியமான கருத்தாக்கத் தலைவராக விளங்குபவர் மேலை நாட்டில் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றவர்தான். இவரோ ஓர் அடிப்படைவாத இஸ்லாமியத்தை மக்கள் மீது திணித்து ஜனநாயகத்தை நசுக்கிக் கொண்டு இருக்கிறார். [கு1]

நேரு, கென்னத் கவுன்டா, ஜூலியஸ் நயிரெரெ, நிக்ரூமா போன்ற பல காலனியம் கடந்த நாடுகளின் முதல் தலைமுறைத் தலைவர்களே அயல் நாடுகளில் பயின்றவர்கள்தாம். இத்தகைய தலைவர்களில் பலரும் சோசலிசம் அல்லது ஜனநாயகம் ஆகிய கருத்தியல்களை (ideologies) மிகவும் நம்பியவர்கள். ஆனால் நடைமுறை அரசியல் இவர்களது கருத்தியல் போக்கை சீராகச் செல்ல முடியாமல் நிறுத்தவும், இவர்களில் பலரும் எதேச்சாதிகாரத்தையும், அடக்கு முறையையும், வாரிசு அரசியலையும், கூட்டாளிகளை மையமாகக் கொண்ட அரசியலையும், தான் தோன்றித்தனமான நடைமுறைகளையும் கடைபிடிக்கத் தொடங்கினார்கள். காலனிய அரசின் ஆட்சியில் மக்கள் ஒரு விதமாக நடைமுறை வாழ்வைப் பயின்று அந்தப் பழக்கத்தைக் கைவிட முடியாமல் போய், அதையே தொடர முயலவும் – இது அரசு எதிர்ப்பாகவோ, அரசை ஏமாற்றும் நடைமுறையாகவோ, அரசிடம் நம்பிக்கை இன்றி ஒளிவு மறைவாக நடப்பதாகவோ, அல்லது அரசுடன் தம் வாழ்வை இணைக்க மறுப்பதாகவோ, அல்லது அரசைத் தமது சிறு குழு நலனுக்கு எப்படி வளைப்பது என்று எப்போதும் முற்படுவதாகவோ அமையலாம். இப்படி எதிர்மறையாகச் செயல்படும் போக்கை ஒடுக்கினால்தான் ஒருங்கிணைவும், முனைந்த செயல்பாடும் சாத்தியம் என்று இத் தலைவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், விளைவு என்னவோ காலனிய ஆட்சி முறை இன்னொரு முகத்துடன் உலவுவதாகவே சாதாரண மக்களுக்குத் தோன்றி இருக்கும்.

காலனியம் எப்படி ஆண்டது என்று சிந்திக்க முடியாதவர்கள் அல்லர் இத் தலைவர்கள். அவர்களுக்கு விடைகளாகக் கிடைத்தவை அவர்கள் வாழ்ந்த வரலாற்றுக் கட்டத்தில் தக்க விடைகளாகத் தோன்றி இருக்கலாம். இவர்களில் பலரும் அன்னிய மோகம் பிடித்தவர்கள் என்று கூடச் சொல்ல முடியாத வகையினரே. ஆனாலும் பயின்றதும், பழகியதும் மேலை கருத்தாக்கங்கள், மேலை வரலாற்றியலில் வந்த தகவல்கள், மேலைப் பொறியியல், மேலை அரசு ஆட்சி முறை,

மேலைச் சட்டங்கள், மேலைச் சிறை அமைப்புகள், மேலை ராணுவம் – இப் பட்டியல் இன்னமும் விரியும். பல நூறாண்டுகளில் உள்நாட்டுப் பண்பாடும், பொருளாதாரமும், அரசும், அரசியலும், இதர சமூக அமைப்புகளும் காலனிய ஆதிக்கத்தால் பயனற்றவை என்று ஆக்கப்பட்ட பின், அவற்றை முற்றிலும் நம்பி விடுதலைக்குப் பிறகு அவற்றிடம் ஆட்சியை ஒப்புவிப்பது அவ்வளவு எளிய தேர்வாக இருக்காது. இன்று திரும்பிப் பார்க்கையில் இது நமக்கு உடனேயே புலப்படுகிறது. அன்றைய நிலையில் விடுதலை பெற்ற மக்கள் திரளிடமும் சரி, ஆட்சியில் பலவகை தற்செயல் நிகழ்வுகளாலும், சுய தேர்வுகளாலும், விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டதாலும் உயர்மட்டத்தில் பொருத்தப்பட்ட சிலர் நடுவிலும் சரி, எப்படிப்பட்ட ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி நிறையவே குழப்பம் இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாடும் ஒரு வகைத் தேர்வை மேற்கொண்ட போதும், பெரும்பாலும் காலனி ஆட்சியை நிறுவிய மேலைப் பண்பாடு, அரசியல், பொருளாதாரம், சமூகப் பார்வைகள் இவற்றிலிருந்து எவ்வளவு விலகி நிற்க முடியுமோ அவ்வளவு தள்ளி நிற்கும் அவசம் பெரும்பாலான தலைவர்களுக்கும் இரண்டாம் நிலை மேலாட்சியாளருக்கும் இருந்திருக்க வேண்டும். அதே நேரம் வலிமை அற்றதும், எளிதில் தோற்கடிக்கப் பட்டதுமான உள்நாட்டின் பாரம்பரியம், உலகில் ஆட்சியில் உள்ள பல வகை அமைப்புகள், பண்பாடுகள், பொருளாதாரச் செயல்பாடுகள் இவற்றோடு ஒப்பிடுகையில் மிக பூஞ்சையானதாகத் தான் தோன்றி இருக்க வேண்டும்.

மேலை முதலாளியத்தோடு தொடர்பற்று, அதே நேரம் உலக முதலாளியத்தால் தோற்கடிக்கப்படாமல் இருக்கும் அளவு வலிமை ஊட்டக் கூடியதான எதிர்க் கருத்தாக்கம் என அன்று உலவியது மார்க்சியம் சார்ந்த பொது உடைமை அரசியலும், மார்க்சியம் சாராத சமூகப் பொருளாதார ஜனநாயகமும் தான் (socialist democracy). பெரும்பாலான முன்னாள் காலனிகள் இவற்றைத் தேர்ந்தெடுத்தது அன்றைய நிலையில் அறிவார்ந்த செயல் போலத்தான் தோன்றி இருக்கும். ஆனால் கள நிலைகளை ஊன்றிக் கவனித்தவர்கள், சோசலிச நாடுகளிலோ அல்லது பொதுவுடைமை நாடுகளிலோ வாழ்ந்த அனுபவம் உள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை அணுகி உண்மை நிலை என்ன, அந்த வாழ்க்கையின் சாதக பாதகங்கள் என்ன, அம்முறைகள் ஒரு நாட்டில் வெற்றி பெறவோ அல்லது வேரூன்றி நன்கு செயல்படவோ அடிப்படைத் தேவைகள் என்ன என்றெல்லாம் ஆராயாமல், கட்சியில் உள்ள சித்தாந்தவாதிகளின் வேரற்ற, அனுபவமற்ற புத்தக அறிவை நம்பி இத்தகைய தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏராளமான இயற்கை வளங்கள் இருந்த போதும் 40 ஆண்டுகளில் சோவியத் ரஷ்யா, மைய அரசியலின் தலைமையில் நடத்தப்பட்டதொரு பொருளாதார அமைப்பால் அடைய முடியாத அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியை, அந்த வகைப் பொருளாதாரத்தைச் செலுத்தத் தேவையான ஜனநாயகத் தன்மை சிறிதும் அற்ற அரசியல் மேலாளரால் தான்தோன்றித் தனமாக மேற்கொள்ளப்படும் கடும் ஒடுக்கு முறைகள், எதிரிகள் என்று முத்திரை இட்டு ஒரு பெரும் மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் கொடூரம் ஆகியவற்றால் கூடக் கொணர முடியாத பொதுவுடைமை நோக்கை, ஜனநாயகம், வன்முறையை எதிர்த்த அரசியல் ஆகியவற்றுடன் தனது பயணத்தைத் துவக்கிய இந்தியா போன்ற ஒரு நாடு, தானும் அடைய முடியும் என்று நம்பியதைப் போன்ற ஒரு விபத்து எதுவும் இருந்திருக்க முடியாது. ஆனாலும், ஒரு கொடும் அரசியல் அமைப்பை தமது மென்மையால், மேன்மையால் வன்மை அற்றதாக ஆக்கி விட முடியும் என்று நம்பிய படித்த முட்டாள்கள் இந்திய மேல் வட்டத்தில் அன்று நிறையவே இருந்திருக்கிறார்கள். அதனால்தான் மகலநாபிஸ் போன்ற புள்ளியியல் மேதைகள் அரசியலில் தமது (ஆதாரமற்ற) நன்னம்பிக்கையைத் தளமாகக் கொண்ட, அரசியல் அதிகாரத்தால் செலுத்தப்படும் பொருளாதாரத்தை இந்திய அரசுக்கு வழி மொழிந்து அதற்கான ஒரு சிக்கலான பொருளாதாரத் திட்டத்தையும் தயாரித்தார்கள். இதே போலத்தான் பல ஆப்பிரிக்க ஆசிய நாடுகளிலும் மக்களுக்கும், ஆட்சியில் இருந்த மேல் தட்டு மக்களுக்கும் இடையே எதிர்கால வாழ்வுக்கான கனவு காண்பதில் இருந்த பெரும் வேறுபாடுகள், மக்களின் திறமைகள், நம்பிக்கைகள், வாழ்முறைகள், விருப்பங்களுடன் ஒட்டுதலே இல்லாத ஓர் அரசியலை அவர்கள் மீது திணிக்க வழி செய்தன.

தமது நாட்டின் முன்னாள் காலனிய எதிர்ப்புப் போராளிகளுக்கும் அரசியல் நிர்வகிப்புக்கும் எந்த உறவும் இல்லை, இவர்கள் உதவாக்கரைகள் என்பது மக்களுக்குப் புரிந்து தமது எதிர்ப்பை அவர்கள் காட்டத் துவங்கும் முன், காலனிய அரசின் எச்ச சொச்சங்களான அரசின் செயலர்கள், ஆணையாளர்கள், மேலும் உயர் அதிகாரிகளின் ஒட்டுண்ணி அரசு நன்றாகவே வேரூன்றி விட்டது. அதன் பிறகு பெருவாரியான முன்னாள் காலனிய நாடுகளில் வாழ்வு கீழ் நோக்கித்தான் தான் பயணித்திருக்கிறது.

சில நாடுகள் பெரும் சிக்கல்கள், தேக்க நிலைகள், பஞ்சங்கள், மேலும் ஊழல் நிறைந்த ஆட்சி ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுத் தத்தளித்த பின், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு நேரான நிலைக்கு வந்திருக்கின்றன. அவை தமது பொருளாதாரம், அரசியல், சமூகப் பண்பாடு ஆகியவற்றில் ஒரு விதமான உள்நாட்டுத் தன்மையை இப்போதுதான் அடையத் தொடங்கி இருக்கின்றன. இந்த உள்நாட்டுத் தன்மை என நான் குறிப்பது பாரம்பரியத்தின் நீட்சி அல்ல. காலனிய ஆட்சியின் எச்ச சொச்சங்களை முற்றிலும் நீக்கிய பண்பாடும் அல்ல. இது உலகமயமாதலின் தாக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டதும் அல்ல. [கு2]

மெதுவான விஷம் போல, காலனி ஆட்சியாளர்கள் தமது உலகப் பார்வையை காலனியாதிக்கத்தில் குடியுரிமை இல்லாமல் வெறும் அடித்தள மக்களாக வாழ்ந்த சமூகங்களுக்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த விஷத்தின் தனித்தன்மை என்னவென்றால், அது இம் மக்களின் மேம்படுத்தலுக்காகக் கொணரப்பட்ட அறிவுத் துலக்க காலத்து அமுதம் என்ற பிரசாரம் – அடிமை வாழ்வில் இருந்து தப்ப வழி கிட்டாதா என்று தேடும் எந்த மனிதருக்கும் அது கவர்ச்சிகரமான பாதையாகக் கூடத் தோன்றி இருக்கலாம்.

இதை ஒட்டிய ஒரு பொதுவான அலசலை ஓர் ஆப்பிரிக்க இணையத்தில் படித்தேன். ஆப்பிரிக்கரின் விடுதலைக்கான அடித்தளம் (Free Africa Foundation) என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பில் ஆப்பிரிக்க நாடுகளின் இன்றைய நிலை பற்றிய தெளிந்த கண்ணோட்டத்தைக் காணலாம். இந்த இணைய தளத்தின் ஒரு கட்டுரையில் சொல்கிறார்கள் – காலனி ஆதிக்கத்தை ஆப்பிரிக்க மக்கள் எதிர் கொண்டதில் மூன்று விதமான போக்குகள் உண்டு. ஒரு கூட்டம் பின்னோடிப் போய்ப் பழக்க வழக்கங்களின் சுத்தத்தில் பதுங்க முயன்றது. இவர்கள் நகரங்கள், மக்கள் கூட்டமாக வாழும் மையங்கள் ஆகியவற்றை விடுத்து குக்கிராமங்கள், காட்டுப் பகுதிகள், மேலும் ஆட்கள் அதிகம் இல்லாத மலைப் பகுதிகளில் தம் இனம்/குழு/சமூகப் பழக்க வழக்கங்களைக் கைவிடாமல் பின்பற்றி காலனி ஆட்சியாளருடனோ அல்லது காலனி ஆட்சியால் ஆளப்பட்ட இதர மக்களுடனோ அதிகம் தொடர்பின்றி வாழ்ந்தனர். இன்னொரு சாரார், சுமார் 20 சதவீதம் பேர், காலனிய ஆட்சியாளரின் நாகரிகத்தைத் தமது நாகரிகமாகப் பயின்றனர். அதையே காலனிய ஆட்சியில் தம்மைப் பொருத்திக் கொள்ளவும், தமது சுய மேம்படுத்தலுக்கும் பயன்படுத்தினர். இவர்களைச் ‘சடங்கு மனப் பாங்கு உள்ளவர்கள் ‘ என இக்கட்டுரை அழைக்கிறது. (இவர்களை ஹோமி பாபா போலி செய்பவர்கள் (Mimics) என்கிறார்). மூன்றாவது வகையினர், காலனிய ஆட்சியில் அதிகாரிகளாக வேலை செய்யவோ அல்லது ஆட்சியாளருக்கு உதவியாக இருந்து நல்ல வாழ்க்கைத் தரம் பெறவோ தேவையான தகுதிகள் அனைத்தும் இருந்தும் அத்தகைய வசதிகளை நாடாமல் முனைப்போடு காலனி ஆதிக்கத்தை எதிர்த்த அதிருப்தியாளர்கள் (malcontents) என்று ஒரு சாதாரண வகைப்படுத்தலைச் செய்கிறது. இவர்கள் அனைவருமே காலனியம் முடிந்த பின் விடுதலை பெற்ற நாடுகளில் எப்படித் தொடர்ந்து முன்னேற்றம் ஏதும் காண முடியாத ஒரு விஷச் சுழலில் சிக்கி அவதிப்படுகிறார்கள், அதன் புற, அகக் காரணிகள் என்ன என்று ஆய்கிற முயற்சியில் இந்த அமைப்பில் உள்ள பல சமூக ஆர்வலர் சேர்ந்துள்ளனர். இதன் தகவல்களைக் கீழ்க் கண்ட இணையத்தில் காணலாம்: http://www.freeafrica.org/board.html

http://www.freeafrica.org/index.html

விமர்சனமற்று மார்க்சியத்தை ஒரு விடுதலைக்கான வழியாக பல ஆப்பிரிக்கத் தலைவர்கள் மேற்கொண்டதை ஒரு பெரும் பிரச்சினையாக இந்த அமைப்பு கருதுகிறது. சந்தேகப் பேர்வழிகளுக்கு ஒரு தகவல். இதில் உள்ளவர்களில் பலர் வழக்கமான இடதுசாரிகள். இது ஏதோ முதலாளிகளின் கைப் பாவை என்று ஒதுக்க முடியாத வகை அமைப்பு. இந்திய இடதுசாரிகளுக்கும், திராவிடச் சிந்தனையாளர்களுக்கும் பிடித்தமான தீவிரக் கிருஸ்தவ அமைப்புகளும் இதில் உண்டு.

காலனியத்திடம் இருந்து விடுபட்ட நாடுகளில், விடுதலைக்குப் பிறகு வரும் தலைமுறைகளில் ஒரு கணிசமான பகுதியினர், பெரும்பாலும் உயர் கல்வியைப் பெற்றவர்கள், உலக ஏகாதிபத்தியத்தின் மையம் நோக்கி புலம் பெயரத் தொடங்குகிறார்கள். இத் தலைமுறைகளின் கருத்தில் முன்னாள் காலனிய நாடுகள் குறித்து விமர்சனம் இருந்தாலும், பொதுவாகத் தனி நபரளவில் முன்னேற வாய்ப்பு தேடித்தான் அனேகமாக எல்லாரும் செல்கிறார்கள். இவர்களது பார்வையில் காலனிய ஆதிக்க நாடுகள், அம் மக்கள், அங்கு நிலவும் பண்பாடு ஆகியன எப்படி உள்ளன என்பது குறித்து நிறையவே சமீப காலத்தில் எழுதப் பட்டுள்ளது. இவர்களில் ஒரு சாராரைக் கருதித்தான் முன்பு இக் கட்டுரையில் விமர்சனம் வைத்தேன். இந்த வகை மனிதர்களுள் நானும் ஒரு நபர்தான். இது ஒரு சுய விமர்சனம் போல எனவும் கருதலாம்.

இப்படி விமர்சிக்கப்படுபவர்களிடமிருந்து தமது நல்லெண்ணம், நடவடிக்கைகள் குறித்து நிறைய தன்னிலை விளக்கம் கிட்டும். ஆனால் தன்னிலை விளக்கங்கள் உண்மையை அறிய அதிகம் உதவுவதில்லை. நமது நல்லெண்ணங்களோ தீய எண்ணங்களோ களம் மாற்றி நாம் சேர்க்கும் செய்கைகளின் இறுதிப் பலன்களை நேராகத் தீர்மானிப்பதில்லை. நமது முயற்சிகள் நல்ல முயற்சிகளாக இருப்பினும், அவற்றைப் பல கூட்டாளிகளின் வழியே தான்

செயல்படுத்துகிறோம். குறிப்பாக வெளிநாட்டு வாசிகள் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் உதவியோடுதான் எதையும் செய்ய முடியும் என்பதால், களம் இந்தியா/தமிழ்நாடு என்பதால் களத்தில் உள்ள கோணல்கள் அனைத்தும் ஒருவரது முயற்சியில் ஏதோ ஒரு விதத்தில் குறுக்கு வெட்டாக விழத்தான் செய்யும். களத்தில் உள்ள கோணலை நீக்கத்தான் இம்முயற்சிகளே மேற்கொள்ளப் படுகின்றன என்பது ஒரு எதிர்வாதமாக இருக்கலாம். இது மறுபடி நம்மைத் துவக்கப் புள்ளியிலேயே சேர்க்கிறது. கோணல்களைக் களத்தில் வாழும் மக்களே கோணல்கள் எனப் பார்த்து அவற்றை நீக்க ஏது வழி என்று தேடும் வரை கற்றுக் கொடுக்கும் பாடம் காத வழி கூட தாங்காது. பல நேரம் ஏகாதிபத்திய மையத்தில் இருந்து, அதாவது மேலை நாட்டுச் சூழலில் இருந்து எழுப்பப்படும் விமர்சனத்தின் நோக்கமே முன்னாள் காலனிகளின் மக்களைத் தட்டி எழுப்பவும், அவர்களின் அறவுணர்வுகளை மேம்படுத்தவோ அல்லது விழித்தெழ வைக்கவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளாக இருக்கலாம்.

சில நேரம் ஒரு கூட்டு முயற்சியில் உள்ள அனைவரின் குறிக்கோள்களுமே நல்லவையாக இருக்கலாம். ஆனால் விளைவுகள் எதிர்பாராத வகையில் மக்களின் வாழ்வைக் குலைப்பதாக இருக்கலாம்.

உதாரணமாக கங்கை-காவேரி நதி நீர் இணைப்பு என்னும் ஒரு திட்டம் அமெரிக்க வாழ் இந்தியரால் பல ஆண்டுகளாக முன் வைக்கப்படுகிறது. பன்னாட்டு வங்கிகள் இத் திட்டத்தை ஆதரிக்கும் என்ற தூண்டில் புழு வேறு இந்திய அரசின் முன் தொங்கவிடப் பட்டது. இந்திய அரசின் மெத்தனம், அதன் செயல் திறன் குறித்து அரசிற்கே சுய நம்பிக்கை இல்லாமை, பல மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்ற சிக்கல், ஏற்கனவே உள்ள நதிநீர்த் திட்டங்கள் சரிவர வேலை செய்யாததும் அதில் கற்ற பாடங்களும், நர்மதை நதித் திட்டத்திற்கே ஒரு பத்தாண்டாக இழுபறியாக இருக்கும் நிலை, தவிர இடையில் பெரும் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எதிர்ப்பு ஆகியன இத்திட்டத்தை காகிதத்தைத் தாண்டிச் செல்லாமல் நிறுத்தி இருக்கின்றன. இது ஒரு வேளை நிறைவேற்றப்பட்டால் அது சூழலியல் ரீதியாக மத்திய இந்தியாவில் வாழும் பல கோடி மக்களின் வாழ்வை மிகவும் மோசமாகப் பாதிக்கும் என்று இப்போது உணரத் துவங்கி இருக்கிறோம். துவக்க கட்டத்தில் அத்தகைய சூழலியல் சார்பான தெளிவு யாருக்கும் இருக்கவில்லை. அரசு அதிகாரிகளுக்குக் குறிப்பாகச் சிறிதும் இல்லை. மேற்சொன்ன காரணங்களினால் இத் திட்டம் நின்று போனது மக்களின் ஏற்கனவே சிக்கலாக உள்ள வாழ்வை மேலும் குலைக்காமல் காப்பாற்றியது. இது நல்லெண்ணம் பெரும் தீமையாக முடியக் கூடும் என்பதற்கு ஓர் உதாரணம்.

(தொடரும்)

[கு1] சூடானில் தற்போது அதிபராக அதிகாரத்தில் இருப்பவர் ஒமார் எல்-பஷீர். இவர் நிதானமானவராகக் காட்டிக் கொள்ளும் முஸ்லிம் என்று சொல்லப் படுகிறது. இவரை முதலில் பதவிக்குக் கொணர்ந்தவர் ஹஸான் அல் டுரபி என்பவர். பின்னர் இவர் ஓரம் கட்டப்பட்டார். சூடானில் புறம் தள்ளப்பட முடியாதபடிக்கு முக்கியமான ஓர் அரசியல்வாதி. சூடானை இஸ்லாமியத் தீவிர அடிப்படை வாதத்துக்குத் தள்ளியவர் இவரே. தம் ஆட்சியைக்

கவிழ்க்க டுரபி முயல்கிறார் என்று பஷீர் குற்றம் சாட்டி டுரபியைப் பல ஆண்டுகள் சிறையில் தள்ளி இருந்தார். சமீபத்தில் விடுதலை செய்தார். மறுபடி சில வாரங்களுக்கு முன்பு டுரபி கைது செய்யப்பட்டார். டுரபி நாவன்மை மிக்க ஒரு வழக்கறிஞர். மேலும், இஸ்லாமிய சட்டங்களில் வல்லுநர். இவர் மேலை நாட்டுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு திறமையான சிந்தனையாளர். இவர் ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதியாக மாறினார் என்பதை இவரே விளக்கும் கட்டுரை இதோ:

http://www.aboutsudan.com/interviews/hassan_al_turabi.htm

[கு2] ராணுவப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சி, அரசியல் சித்தாந்தப் புரட்சி என்றெல்லாம் தம்பட்டம் அடித்து உலகுக்கே ஒரு முன் மாதிரியாகத் தான் திகழ்வதாகச் சொன்னது சீனப் பொதுவுடைமைக் கட்சி. அது இன்று எல்லாப் புரட்சியும் முதலாளியத்தால்தான் சாத்தியம் என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டு, மேலை அரசியல் அமைப்புகளின் ஒரு மோசமான நகலாகத் தான் திகழ்ந்து வருகிறது. மேலை அரசுகளின் அடிப்படைகளான மக்களுக்குத் தரப்படும் பேச்சுரிமை, பயண உரிமை, (உள்நாட்டில் விரும்பும் இடத்துக்கு) குடிபெயரும் உரிமை, அரசியல் செயல் உரிமை போன்ற எதுவும் இல்லாமல், அதே நேரம் மேலை நாடுகளில் சிலவற்றிலாவது உள்ள தொழிற் சங்கப் போராட்ட உரிமைகளும் இல்லாமல், வியாபார முதலாளியம் உலகில் தலை எடுத்த காலத்தில் உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்த ஓர் உற்பத்தி முறையைப் போன்ற ஓர் உற்பத்தி முறையைத் தனது மையச் செயல் முறையாகக் கைக் கொண்டு ஒரு வலிய பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது.

இதற்கு பல மிலியன் மக்களைத் தேவை இன்றி புரட்சி தேவதைக்குப் பலி இட்டு இருக்கவே வேண்டாம். அருகாமையில் இருக்கும் தாய்வான் அப்படிப்பட்ட கொடும் படுகொலைகள், மக்கள் திரளை நசுக்குதல் ஆகிய அரசியல் ஒடுக்கு முறைகள் இல்லாமலேயே, சாதாரண முதலாளியத்தின் ஊழல்கள், மாஃபியாக்கள், அரசியல் அகட விகடங்களுடன் அதே வகை அல்லது பல மடங்கு மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியைச் சாதித்து இருக்கிறது. தாய்வானிய மக்களுக்கு மேலே சொன்ன உரிமைகளில் பெருவாரியானவை பல பத்தாண்டுகளாகவாவது கைவசப்பட்டு இருக்கின்றன. அதுவும் சீனப் பண்பாடுதான். இதே போலத் தென் கொரியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. இந் நாடுகளிலும் கடந்த பல பத்தாண்டுகளில் சில லட்சம் மக்களாவது ஏதேனும் ஒரு சித்தாந்தத்துக்குப் பலி இடப்பட்டுள்ளார்கள். ஆனால், மாஒவின் பெரும் படுகொலைகளுக்கு முன் இவை தூசு கூட இல்லை. இந்தியாவில் வன்முறைப் புரட்சியை இன்னமும் நாடும் மூளை பிறழ்ந்த மாஒயிசங்களுக்கும், அவர்களோடு உடனோடுவோருக்கும் இந்த எளிய உண்மைகள் புரிய இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன்.

திறந்த கருத்துப் பரிமாற்றமும், சாதாரண மக்களின் சுதந்திரமான தேர்வுகளும் ஊடாடி அதில் பிறக்கும் விமர்சன நோக்குகளால் செலுத்தப்படும் ஒரு பண்பாடு, அரசியல், பொருளாதாரம் ஆகியன இல்லாத சீனா, எல்லாவற்றையும் வேவு பார்த்து அவ்வப்போது கடும் தண்டனைகளால் மக்களை அச்சுறுத்தி வைப்பதில் மட்டும் திறன் காட்டி இதர வகையில் உருப்படியான செயல் திறனற்ற ஒரு மெத்தனமான அரசினால் முடமாக்கப்பட்ட மக்களால் நிரம்பி இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் வேரற்ற ஒரு பண்பாட்டில் எப்பக்கம் செல்வது என்று தெரியாமல் அவரவர் அளவில் கைவசப்பட்ட பண்பாட்டுத் தேர்வுகளை எல்லாம் மேற்கொள்ளவும், ஒரு வலிமையுள்ள உள்ளீடு இல்லாத கலவைப் பண்பாடாக மாறி வருகிறது. சீனர்களுக்குப் பெரும்பாலும் உழைப்பில் உள்ள ஒரு நாட்டமும், எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும், சீனக் குடும்பங்களில் காலம் காலமாக உள்ள கட்டுப்பாடும் – இது ஓரளவு பெண்ணடிமைத் தனமும், வளர்ந்த ஆண்களின் மேலாட்சியும் நிறைந்தது என்றாலும் – அதாவது பண்டைப் பண்பாட்டின் எச்ச சொச்சங்கள்தான் இன்று மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளன. தம்பட்டம் அடிக்கப்பட்ட பொதுவுடைமைப் புரட்சியோ, பண்பாடோ அல்ல. ஏற்கனவே சமூகத்தில் வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே குறைக்கப்பட்ட சமத்துவ நோக்கும், பொதுவுடைமைப் பொருளாதாரச் சொல்லாடலும் நாளாக நாளாக வெறும் கேலிக் கூத்துகள் என்று ஒதுக்கப்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

இதில் ஓரளவு கவுரவமான நிலையில் இருக்கும் தேர்வுகள் (அதாவது ஓரளவாவது நேர்மையான தேர்வுகள்), பெரும்பாலும் பண்டைச் சீனாவில் கவுரமானவை என்று கருதப்பட்டவை அல்லது மேலை ஜனநாயக அரசியலில் மக்களுக்குப் பிடித்தமானவையாகத் தென்பட்டவைதான். சீனப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களை இன்று ஊக்குவிப்பவை, பெரும்பாலும் மற்ற எல்லா ஏகாதிபத்திய நாடுகளிலும் மக்களிடையே இருக்கும் அதீத தேசியம், உலகில் தாம்தான் மிகச் சிறந்த மக்கள், மிகச் சிறந்த பண்பாடு என்ற நம்பிக்கைகள், மேலும் தாம் வரலாற்றால் பின்னொதுக்கப்பட்டோம், அதை மீறி வந்து உலகின் முதல் நாடாக ஆக வேண்டும் என்ற வகை ஆதர்சங்களே.

மற்றபடி, சீனாவில் மாஒயிச காலத்து அற்பத்தனங்களையும் கொடுமைகளையும் பற்றி நிறையவே படிக்கக் கிடைக்கின்றன இன்று. இவற்றில் ஆங்கிலத்தில் கிட்டுபவை பலவும், முன்னாள் செம்படையினர்களில் பலர் சமீப காலத்தில் எழுதிய நாவல்களும், வாழ்க்கை வரலாறுகளும். இவர்கள் இன்று சீனரிடையே பண்பாடு மற்றும் அரசியலில் இயல்பான தன்னிலை அற்ற குழப்பம் நிலவுவதின் காரணங்களாக மாஒயிசத்தின் தான் தோன்றி அரசியலைச் சுட்டுகிறார்கள். இதைத் தவிர உலகெங்கும் மக்கள் திரள்கள் நடுவே காலம் காலமாகக் காணப்படும் குணாதிசயங்களில் மோசமானவை மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு மாஒயிசப் ‘புரட்சி ‘ இவற்றின் மோசமான ஒரு பதிப்புதான் என்பதை உறுதி செய்தது என்று இவர்கள் நிறுவுகிறார்கள். அவற்றை வெல்லும் வலு மாஒயிசத்துக்கு இல்லாதது மட்டும் அல்ல, மாஒயிசமே தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இத்தகைய மோசமான குணங்களைத்தான் ஆதாரமாக நம்பி இருந்தது என்பதும் இத்தகைய அடிமட்ட செம்படையினரின் கருத்துகள். இந்த வகை நூல் ஒன்றைப் பற்றிய மதிப்பீடு இதோ:

http://books.guardian.co.uk/review/story/0,12084,1044987,00.html

கார்டியன் பத்திரிகை முதலாளியப் பத்திரிகை என்று நமது இடதுசாரிகள் இதை ஓரம் கட்ட முடியாது. சென்னையிலிருந்து வெளிவரும் சீன தேசியப் பத்திரிகையான ‘தி ஹிந்து ‘ போல அல்லாமல் இடதாக இருந்தாலும் விமர்சன பூர்வமான இடதாகவாவது இருக்கிற பத்திரிகை கார்டியன். சீனாவுக்கு ஜால்ரா போடுவதை முற்போக்கு என்று தவறாகப் புரிந்து கொள்வதில்லை இப் பத்திரிகை. மேலும் பல நூல்களின் பட்டியல்:

http://www.yellowbridge.com/literature/modernfiction1980cr.html

இவை ஃபூகோவின் கருத்துகளை ஓரளவு நிறுவுவதாக எனக்குத் தெரிகிறது. அதாவது அதிகார நோக்கு, அதிகாரத்துக்கான விழைவு, சூழலை ஆளும் விருப்பம் (governmentality) ஆகியவை எல்லா வகை சித்தாந்தங்களையும் ஊடுருவி, அச் சித்தாந்தங்களை, உண்மைகளாக, அடைய விழைய வேண்டிய இலக்குகளாக நிறுவ உதவிய ஆரவாரமான கருத்தாக்கங்களை எல்லாம் செயல் தளத்தில் பயனற்றவையாக ஆக்குகிறது என்னும் கருத்தை நிறுவுகிறது.

சீனாவில் இருந்து வெளியேறி வெளி நாட்டில் வசிக்கும் எழுத்தாளர்களில் ஒரு குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் ஹா ஜின் (Ha Jin). இவருக்கு இலக்கியத்தில் பல முக்கியமான பரிசுகள் சில வருடம் முன்பு கிட்டின. விவரங்களுக்குப் பார்க்க:

http://collectedstories.com/files/storyteller/hjin.html

அமெரிக்காவில் வசிப்பதால் இவர் ஒரு முதலாளியத்தின் கைப் பாவை என்று நமது உள்ளூர் மார்க்சிய ‘அறிஞர்கள் ‘ குதிக்கக் கூடும். அதனால் என்ன, சீனாவை இன்று ஆள்பவர்களே முதலாளியத்தின் கைப்பாவைகள் தானே ? இதில் ஹா ஜின் என்ன மோசமாகி விடப் போகிறார் ? குறைந்தது அவர் ஜனநாயக நாடுகளிலாவது வாழ்கிறார். சக மனிதரை எதிரி போலவோ, அல்லது தம்மைக் காட்டிக் கொடுப்பாரோ என்ற பயத்துடனேயே பார்க்காமல் வாழும் உரிமை அவருக்கு இருக்கிறது. அவரால் மாஒயிச அபத்தங்களையும், முதலாளிய அபத்தங்களையும், இவற்றிடையே நிகழும் தற்கால மோதலில் சாதாரணச் சீன மக்கள் படும் அவதிகளையும் சிரிக்கச் சிரிக்க, அதே நேரம் நம் மனம் வெகுவாகப் புண்படும்படியான துக்க உணர்வை எழுப்பிய வண்ணமும் தன் கதைகளை எழுத முடிகிறது. அது ஒன்றே போதும். நாம் நாட வேண்டியது நம்பிக்கையை அல்ல. சான்றுகளை, தொடர்ந்த விசாரிப்பை, கேள்விகளை. அது ஹா ஜின் போன்றவர்களால் நடக்கிறது. இந்திய மார்க்சியருக்கும் தெளிந்த விசாரிப்புக்கும் வெகு தூரம் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். இது குறித்துப் பின்னர் பார்க்கலாம்.

aacharakeen@yahoo.com

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்