பலியர்களுடன் உரையாடல்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

குடியரசு


பலியர்கள் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களின் மூதாதையர்களுடன்—-அவர்களின் தொண்மத்தோடு உறவு கொண்டு வாழ்கிறவர்கள் என்ற கருத்தோடு நாம் பலியர்களை நேர் காணச் சென்றோம். அவர்கள் மீது நகரத்தின் தூசி இது வரை படிய வில்லை என்ற நம்பிக்கையோடு அவர்களைப் பேச்சுக்கு அழைத்தோம்.

நாங்கள் சாதி கேட்டு நடப்பதில்லை—-என்று ஓர் இளைஞர் குறிப்பிட்டார்.

அவரிடம் நாம்,

‘உங்க பேரு என்ன ? ‘

‘காமாட்சி பலியன். ‘

‘உங்க பொஞ்சாதி பேரு என்ன ? ‘

‘பொஞ்சாதின்னா, மனைவிதானுங்களா ? ‘

நாம் திடுக்கிட்டோம். அந்தப் பலியர் இளைஞரிடம் அவர் மொழியில் பேசுவதாக நாம் நினைத்துக் கொண்டு அவருடைய மூதாதையருடைய மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். பின்னர்,

‘ஆமாங்க பொஞ்சாதின்னா அது மனைவிதாங்க ‘ என்றோம்.

‘அப்புறம் ஏனுங்க மனைவின்னு சொல்லாம பொஞ்சாதின்னு சொன்னீங்க ? ‘ என்றார் அவர். ‘அது வந்துங்க, உங்க மக்கள் அப்பிடித்தான் பேசிக்குவாங்கன்னு நான் நினைத்து. . . ‘

‘ஏங்க, நானும் உங்களைப் போல நல்லாத்தானே இருக்கேன் ‘ என்றார்.

‘ஆமாங்க, நீங்கள் என்னை விட நல்லாவே இருக்கீங்க ‘ என்றேன்.

‘உங்களைப் போல என்றால், உங்க கூட வந்திருக்கிற ரீசன்டா இருக்கிறவங்க மாதிரி ‘ என்று அவர் என்னுடன் வந்திருந்த ப்ரதிபா ஜெயச்சந்திரன் போன்றவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.

முதலில் என்னுடைய உடை சற்றுப் பழையதாக இருந்ததால் நான் நாகரிகமாக அவர் கண்ணுக்குத் தெரிய வில்லையோ என்று நினைத்திருந்தேன். பின்னர் புரிந்தது அவர் நாகரீகம்னா என்னன்னு தெளிவா இருக்கிறார் என்று.

நான் கேட்டேன், ‘ஏன்—-நான் நாகரீகமாக இல்லையா ? நான் மற்றவர்களை விட எந்த வகையில் நாகரீகத்தில் குறைந்து போய் விட்டேன் ? ‘

ஏங்க நான் என்ன சொன்னேன். நீங்க நாகரீகமாக இல்லைன்னா சொன்னேன். அவங்க அதாவது மத்தவங்க உங்களை விட நாகரீகமாக நல்லா இருக்காங்கன்னுதானே சொன்னேன் ‘ என்றார் அவர்.

எனக்கு அவமானமாகப் போய் விட்டது. ‘இந்தாங்க, நாம பேசும் போது நம்மளை மட்டுமே பேசுங்க. அங்க இங்கே பேசாதீங்க ‘ என்றேன்.

அவர் சொன்னார் ‘சார், நான் அங்க போய் உட்கார்ந்து கொள்ளட்டுமா ? ‘ என்றார். அங்கு பார்த்தா, ப்ரதிபா கையை ஆட்டி ஆட்டி, கழுத்தையும் ஆட்டி ஆட்டி அவர் ஏதோ உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்.

நான் சொன்னேன் ‘இதோ பாருங்க, நான் வேணும்னா அவர் போல நாகரீகமாகப் பேசுகிறேன். நீங்க வேணும்னா பாருங்க என்றேன். ‘

‘ஏங்க நீங்க நல்லா இல்லைனா சொன்னேன். அவர் நல்லா பேசுறார்னுதானே சொன்னேன். அதுக்குப் போய் ஏன் நீங்க இப்படி நாகரீகமே இல்லாம பேசுறீங்க ‘ என்றார்.

எனக்குத் திக் என்றது.

இவர் எதை நாகரீகம் என்கிறார் என்பது எனக்குப் புரிந்தது.

அழகாக இருக்கிறவங்கதான் நாகரீகமாக இருக்குறவுங்கன்னு அவர் நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதைத் தெரிந்து கொள்ள அவரிடம் நான்,

‘இங்க பாருங்க, நீங்க கேள்விப் பட்ட ரொம்ப ரொம்ப நாகரீகமானவங்கள்ளாம் யாருங்க ? பேர் சொல்லுங்க ‘ என்றேன்.

அவர் சொன்னார், ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ‘ என்று.

இடையில் கந்தசாமி பலியர் இடைமறித்து, ‘யாம்பா நீயா ‘ —- என்றார்.

‘நான் சொல்லுங்க அய்யா ‘ என்றேன்.

‘சார், உங்களை இல்லே சார், அவனை ‘ என்றார். ‘சரி சரி, நீங்க என்ன சொல்றீங்க ‘ என்றேன். அவர் சொன்னார் சிவாஜிதான் ரொம்ப நாகரீகம். ரொம்ப பர்ஸ்ட் கிளாஸ் ‘ என்றார். எனக்கு என்னவோ போலாகி விட்டது.

கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு கேட்டேன் ‘நீங்க எப்படி இது மாதிரிச் சொல்றீங்க ‘ என்று.

‘இங்க பாருங்க, திரும்பி திரும்பி இதே போலக் கேட்காதீங்க. நான் மொதல்லேயே சொன்னேன் இல்லையா ? ‘ என்றார் கந்தசாமி பலியர்.

‘சார், இங்க பாருங்க, என்னை விட சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அதிகமாக நாகரீகம் உடையவர்கள்ன்னு நீங்க சொல்லீட்டாங்க. அது எப்படின்னு எனக்கு இப்ப விளக்கம் வேண்டும் ‘ என்றேன். எங்கே, நான் அழகாக இல்லைன்னு இவர் எல்லார் முன்னாலேயும் சொல்லிடுவாரோன்ற பயத்திலே இந்தக் கேள்வியைக் கேட்டேன். என் உடல் முழுவதும் தேவைக் கதிகமான அவமானம் பரவுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கந்தசாமி பலியர் சொன்னார் ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வராங்கன்னு சொன்னா, நாங்க பல மைல் தூரம் நடந்து வந்து பார்ப்போம். ஆனால் நீங்க எங்களைத் தேடி வந்து பார்க்கிறீங்க. இதில்லேருந்தே தெரியல்லையா ? யார் நாகரீகம் அதிகம்னு. ‘ ‘சரிங்க, நீங்க கூடத்தான் என்னைத் தேடி, இங்க வந்து பார்க்கிறீங்க ‘ என்றேன். மனம் ரொம்ப பயத்துடன் இந்த வாக்கியத்தை முடித்தேன்.

‘சார், நீங்க இது மாதிரி எல்லாம் பேசாதீங்க. நீங்கதான் எங்களைக் கூப்பிட்டு வந்து பார்க்கிறீங்க. நான் ஒன்னும் உங்களையெல்லாம் பார்க்கனும்னு அலையலை ‘ என்றார்.

நான் ப்ரதிபாவைச் சுட்டிக் காட்டி, ‘பின்னர் அவர் மட்டும் நாகரீகமாக இருக்கிறார் என்று எப்படிச் சொல்றீங்க ? ‘ என்றேன்.

அதற்கு கந்தசாமி பலியர் சட்டென்று, ‘அவர் பார்க்கிறதுக்குச் சம்சாரி ஊட்டு ஆளுங்க மாதிரி இருக்கிறது. ஆனா நீங்க அப்பிடி இல்ல ‘ என்றார்.

நான் என் மனதிற்குள், நான் ஒரு SC, நான் ST அல்ல என்று உரக்கச் சொல்லிக் கொண்டேன்.

அப்பொழுது ப்ரதிபா ஜெயச்சந்திரன் நிகழ்ச்சி துவங்கும் போது, அதாவது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மேடையில் பேசியது நினைவிற்கு வந்தது.

* எங்களைப் போலவே நீங்களும் மனிதர்கள்தான்

* நீங்கள் வெளி உலகத்திற்குத் தெரியாமல் இருந்திருக்கிறீர்கள்

* உங்களைப் பொறுத்த வரையில், நாங்களும் வெளி உலகம்

அறியாதவர்கள்தான்

* அறிவு ரீதியில் நாங்களும் பிற்போக்கானவர்கள்தான்

* எங்களைப் பற்றிய records உங்களுக்கும் தெரியாது என்பதை உண்மையிலேயே வருத்தப் படுகிறேன்

* நாங்கள் tribes பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்

* நாங்கள் உங்களிடமிருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவு கற்றுக் கொண்டு போவோம்.

என் மனதில் அவர் பேசிய நிகழ்வுகள் முடிவடைய, பின்னர் நான் நிதானத்திற்கு வந்தேன். ஒரு வேளை இந்தப் பழங் குடியினர் இவர் பேசிய வார்த்தைகளால் வசீகரிக்கப் பட்டுத்தான் இவரை இப்படி உசத்துகின்றனவோ என நினைத்தேன்.

நான் கேட்டேன், ‘ஐயா, நீங்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? ‘ காமாட்சி பலியர் சொன்னார், ‘நீங்கனா யார் யாரெல்லாம் ? ‘

நான், ப்ரதிபா, அமைதி, சன்னா, மேடம், இந்தத் தாசில்தார். . . உடனே இந்த காமாட்சி பலியர் குறுக்கிட்டு, ‘இதோ பாருங்க, நாங்க உங்க எல்லாரையும் நல்லவங்கன்னு நினைக்கிறோம்.

* உங்க எல்லோரையும்

* பண்ணைக் காரர்கள்

* செட்டிமார்கள்

* சம்சாரிகள் —- ஆகத்தான் நினைக்கிறோம். ‘

எனக்கு இவர்களின் புரிதலின் அடிப்படையிலேயே சந்தேகம் வந்தது. ‘ஐயா, நீங்க எங்க எல்லாரையும் எப்படிச் சம்சாரிகள் அதாவது ஆதிக்கச் சாதிக் காரர்கள் என்று நினைக்கலாம் ‘ என்றேன். ‘ச்ச, என்ன நீங்க. . . நீங்க நல்லா ரீசன்டா (decent)தானே பேசுறீங்க. படிச்சிருக்கீங்க. எழுத வேற செய்யிறீங்க. அப்பன்னா, நீங்க நல்லவங்கதானே. அதனாலே நான் உங்களைச் சம்சாரிங்கன்னுதானே நினைக்க வேண்டியிருக்கு. ‘

‘எப்பிடிங்க ‘ என்றேன் நான்.

‘ஏங்க, எங்ககிட்ட காசு, பணம் கிடையாது. ஆக, எங்க பகுதியில் இருக்கிற நிலத்தை, நாங்க தினம் தினம் பார்த்துப் போகும் நிலத்தை, நாங்க ஓடி ஆடி விளையாடுகிற நிலத்தை, நாங்களே எடுத்துக்கலாம்னு, இது வரைக்கும் அந்த நிலத்துப் பக்கம் கூட வராத கலக்டருதா சொல்ல முடியுன்னு எல்லாரும் சொல்றாங்க. நீங்களும் சொல்றீங்க. கலக்டருக்குச் சொல்லி, நிலம் வாங்க நாங்க பண்ணுவோம்னு நிலம் இருக்குறவுங்கதானே நிலத்தை மத்தவங்களுக்குத் தர முடியும். எங்க ஊர்ல சம்சாரிக்குத்தான் நிலம் இருக்கு. நீங்க நிலம் எங்களுக்குத் தரும் போது, நாங்க உங்களைச் சம்சாரிங்களாத்தானே பார்க்க முடியும் ? ‘ என்றார்.

‘வேலை செஞ்சா, சம்சாரிக்குப் புடிச்சிருந்தா பணம் தருவார். நீங்க எங்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கீங்க. அப்ப நீங்கதான பெரிய சம்சாரிங்க ‘ என்றார்.

எனக்குப் புரிந்தது அவர் எங்களை எப்படிப் புரிந்து கொண்டுள்ளார் என்று. எனவே, அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்,

‘எல்லா சம்சாரிகளும் நல்லவங்கன்னா, அவங்க ஏன் உங்களிடம் நிறைய வேலை வாங்கிட்டு, கொஞ்சம் பணம் மட்டும் தராங்க ‘ என்றேன்.

‘என்ன சார் நீங்க புரிஞ்சுக்கவே மாட்டாங்களா ? அவர்கள் எங்களுக்கு நிறைய பணம் தந்தா, அதாவது கொள்ளப் பணம் தந்தா, நாங்கள்ளாம் சம்சாரிகளாகி விடுவோம். பின்னர் நாங்க அவங்க காட்டிற்கு வேலை செய்யப் போக மாட்டோம்ல. அப்புறம் அவங்க காட்டை யார் பார்த்துக்குவாங்க ? ‘ என்றார்.

எனக்குப் புரிந்தது. சம்சாரிகள்னா பணம், நிலம் வைத்திருப்பவர்கள் என்று இவர்கள் நினைக்கின்றனர் என்று.

அதை விட மற்றொன்றும் புரிந்தது. தன்னிடம் நிலம் வைத்திருந்து, அதை மற்றவர்களுக்கு வேலைக்கு வைத்திருக்கும் இந்த ஆதிக்கச் சாதியினரை விட கொடுமையானவர்களாகத்தான் அரசு இயந்திரம் நடந்து கொள்கிறது என்று.

சம்சாரிங்க கிட்டே நிலம் இருக்கு. பணம் இருக்கு. அதை அவர்கள் பலியர்கள் கிட்ட பகிர்ந்து கொள்ளப் போவதே இல்லை.

அரசு கிட்டேயும் பணம் இருக்கு, நிலம் இருக்கு, அரசும் இவர்களை நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. உண்மையிலேயே இவர்களைப் பொறுத்த வரையில் அரசும் மிகப் பெரிய சம்சாரிதான் என்று நான் புரிந்து கொண்டேன். இந்தக் கலக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள் சம்சாரிகளை விட மிகுந்த அதிகாரத்துடன் விளங்குவதை இவர்கள் புரிந்து கொண்ட விதம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை. மாறாக, எனக்கு நான் வாழும் அரசு—-அரசு இயந்திரத்தின் மீது கோபம் வந்தது.

நான் மேலும் தொடர்ந்தேன். ‘ஐயா, அதோ இருக்காங்க மேடம். அவுங்க நிகழ்ச்சி துவக்கத்திலே என்ன பேசினாங்கன்னு நீங்க எல்லோரும் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு வரி சொல்லுங்க ‘ என்றேன்.

* உங்க பாடல்களை நீங்க மறக்கக் கூடாது

* காடுகள்தான் பழங்குடியினருக்குத் தெய்வம்

* பலியர்களின் மொத்த மக்கள் தொகை 2000 பேர்

* இயற்கையைப் பாதிக்காமல் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள்

* 1904-ஆம் ஆண்டிற்குப் பிறகு உங்களைப் பற்றிய ஒரு தகவலும் பதியப் பட வில்லை.

* மனிதன் பேசும் போதுதான் அதிகாரம் மற்றும் Power வரும்

என்று மேடம் பேசிய வரிகளை அவர்களுக்கு எடுத்துத் தந்தேன். மேலும் ‘இப்பச் சொல்லுங்க, மேடம் அவுங்கள நீங்க இப்ப பண்ணைக்காரர், செட்டிமார், சம்சாரி மாதிரிதான் பார்க்கிறீங்க ‘ என்றேன்.

முருகம்மா சட்டென்று மிகுந்த கோபத்துடன் ‘என்ன இப்படில்லாம் அவுங்களப் பேசுறீங்க படிச்சி இருந்தீங்கன்னா அது உங்களோட மட்டும் வச்சுக்குங்க. அவங்க நாங்க கும்பிடுற ‘பலிச்சியம்மன் ‘ போல. அவுங்க எங்களை நிலத்தைக் காட்டி, பணத்தைக் காட்டி ஒரு போதும் அடக்க மாட்டாங்க. மாறா, நாங்க சந்தோசம்மா ஆடி, பாடி சந்தோசம் தர வந்திருக்கிற பலிச்சி அம்மன். ‘இதைச் சொல்லும் போது, அந்தம்மா கண்கள் ஈரப் பட்டு விட்டன. கொஞ்ச நேரத்தில் அந்த இடம் மிக மிக அமைதியாக இருந்தது. எனக்கு என்ன மேலே பேசுவது என்றே புரியாமல் போய் விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தம்மா, என்னை வாடா, போடான்னு திட்டி விடுவார்களோ என்ற அளவிற்குப் பயம் வந்து விட்டது. அந்தம்மாவுக்குக் கோபம் தணிய வில்லை.

‘இல்லீங்க, நான் என்ன சொல்றேன்னா ‘ என்று ஆரம்பித்தேன். உடனே காமாட்சி பலியர் குறுக்கிட்டு, ‘ஏன் சார், நீங்க இப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது ‘ என்றார் வெறுப்புடன்.

கந்தசாமி பலியர் சொன்னார். ‘சார், நீங்க எங்களையெல்லாம் கேலி பண்ண வந்தீங்களா ‘ என்று. என்னுடைய டாம் உறுப்பினர்கள் எல்லோரும் என்னை மிகவும் கோபமாகப் பார்ப்பதை உணர்ந்தேன்.

நான் சொன்னேன், ‘மேடம் மீது எனக்குக் கூட ரொம்ப மதிப்பும் மரியாதையும் இருக்கு. நானும் உங்களைப் போல அவர்களை ரொம்ப மதிக்கிறவன் தான் ‘ என்றேன். ‘உங்க பேச்சே ரொம்ப எங்களைச் சீண்டுர மாதிரிதான் இருக்கு என்றார் ‘ காமாட்சி பலியர்.

நான் என்னை பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொண்டு, ‘சரி… சரி… நீங்க எல்லோரும் அமைதியாக இருங்க. நான் உங்களுக்கு நிலம், அரசு, நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு சொல்றேன். உங்களுக்குப் புரியுதான்னு பாருங்க ‘ என்றேன். இப்படிச் சொல்வதன் மூலம் அவர்களுக்குக் கூடுதலாகப் பேச வரும் என்று நினைத்தேன். ஆனால் அவர்களுக்குக் கோபம்தான் வந்தது. கோபம் வந்திருக்கிற போது, அவர்கள் மனதை relax செய்யலாம் என நினைத்தேன்.

‘சரி, சரி, நம்ம எல்லோரும் போய் காபி சாப்பிடலாம் வாங்க ‘ என்றேன்.

‘சார், பால் காப்பியா ‘ என்றார் காமுத்தாய்.

‘ஏங்க காபி-ன்னா பால்லதானே போடுவார்கள் ‘ என்றேன்.

‘காபின்னா, வருத்த காபியிலே போடுவாங்க. நீங்க சொல்றது, அதாவது இங்க தரது, பால் காபி ‘ என்றார்.

நான் புரிந்து கொண்டேன். இவ்வளவு நாட்களாக நான் பால் கலந்த காபியைத்தான் காபி என்றும் உண்மையான காபியைக் கறுப்புக் காபி என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன் என்று.

சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் பலியர்களின் வார்த்தைகளைக் கூட என்னால் புரிந்து கொள்ள இயல வில்லை. நான் சொன்னேன். ‘காபியை நாங்கள் எல்லோரும் பாலில்தான் சேர்த்துக் குடிப்போம் ‘.

காமுத்தாய் தொடர்ந்தார், ‘நாங்க காபி குடிப்போம். காபிக் கொட்டையை நன்றாக வறுத்து, இடித்து நொறுங்கிய குருணையை நீக்கி விட்டு, நல்லா பொடியான பிறகு, நல்லா தண்ணி விட்டுக் காச்சிக் குடிப்போம். மதியம் வரை அதுதான் உணவு. அந்தப் பொடி நெஞ்ச அடைச்சி நெறைய பேருக்கு நெஞ்சு வலி வந்ததும் உண்டு. ‘

எனக்கு மனதிற்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.

அன்றைய பொழுது என்னைப் பாதி சுய நினைவிற்கு இட்டு வந்தது.

அன்று மாலை அருகாமையில் உள்ள பலியர் குடியிருப்பிற்குப் போனோம். அந்த மக்கள் வெகு ஆர்வமாகத் திரண்டிருந்தனர். மக்கள் எங்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். அங்கு ஒரு பலியர் இரவுப் பள்ளி. அதில் சிறுவர், சிறுமியர் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

லேட்டஸ்ட் சினிமா பாட்டிற்கு நடனம் வரை தெரிந்து வைத்திருந்தனர் அந்தச் சிறுவர்கள்.

ஓர் அம்மா எழுந்து மெதுவாக என் பக்கத்தில் வந்து நின்றார். அந்தம்மாவுக்கு வயது 70 இருக்கும். என்னை உத்துப் பார்த்தார். சிறிது பின்னோக்கி நகர்ந்து பின்னர் சிவகாமி அவர்கள் வரை நகர்ந்து அங்கிருந்து காணாமல் போனார்.

பாட்டு, நடனம், கூடவே எங்களுடைய அறியாமையை வெளிப் படுத்துகின்ற பேச்சு என்று நிகழ்வு முடியும் தருவாயில் இருந்தது.

அந்தம்மா கூட்டத்தின் வெளியே தனியாக வேறு ஒரு வட்டம் நடத்திக் கொண்டிருந்தார். நான் அங்கு சென்று கவனித்தேன்.

அந்தம்மா, ‘நான் கலக்டரைக் கிட்டப் போய் பார்த்தேன் ‘ என்றார் தன்னுடைய கூட்டத்தினரிடம்.

‘நாங்க கூடத்தான் பார்த்தோம் ‘ என்றனர் மற்றவர்கள். ‘நான் கலக்டரம்மாவைத் தொட்டுப் பார்த்தேன். என் ஆயுசுக்கும் இது போதும் ‘ என்றார் அந்தம்மா.

எனக்கு மனசு கனத்து விட்டது. நாம் படிக்கிறது, நம்ம மக்களை விட்டு விலகி வாழத்தானா ? படிப்பு மக்களுக்கு உதவும்னு நினைச்சா, படிப்பு மக்களை இப்படிப் பிரிக்குது. ஒருத்தருடைய அறிவு எப்படி, ச்ச… எனக்கு அங்கு நமது கல்வி, அரசு/நிர்வாக முறை மீது மிகுந்த கோபம் வந்தது.

‘ஏம்மா, ஆம்பள கலக்டரா இருந்தா, நீங்க போயி இப்படி உரசிக்கிட்டு வந்திருப்பீங்களா ? ‘ என்றேன் நான். என்னையும் என் கேள்வியையும் பார்த்து ஒரு கணம் அதிர்ந்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு, ‘கலக்டருன்னுட்டப் பிறகு ஆம்பிள்ளைன்னா என்னா ? பொம்பிளைன்னா என்னா ? நாங்களெல்லாம் சின்னஞ் சிறுசா இருக்கும் போது பத்து வயசில தோட்ட வேலைக்குப் போனேன். சம்சாரிங்க எங்க மேல ஆசைப் பட்டா, அதை நாங்க பெருமை பேசியெல்லாம் திரிந்திருக்கிறோம் ‘ என்றார் அந்தம்மா.

நான் புதிய சுமைகளை மனதில் இருத்திக் கொண்டு அன்றைய நாளைக் கழித்தேன்.

அடுத்த நாள் 7.02.04 அன்று, நாம் இன்னிக்கு அரசியல் பேசலாம் என்றேன். தன்னுடைய மக்களைப் பார்த்து, ‘எம்.ஜி.ஆர். ஐ விட ஜெயலலிதா அம்மா ரொம்ப நல்லவங்க என்றார் கன்னியம்மாள் பலிச்சி.

‘எப்படி ‘ என்றேன் நான்.

‘அந்தம்மா ஊருக்கெல்லாம் அள்ளித் தராங்க. கோடிக் கணக்கா அள்ளித் தராங்க. ஆனால் எங்களுக்கு மட்டும் வந்து சேர மாட்டேங்குது ‘ என்ற பதில் காமாட்சி பலியரிடம் இருந்து வந்தது.

நான் கேட்டேன், ‘ஜெயலலிதா ஊருக்கெல்லாம் அள்ளித் தராங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் ? ‘

‘ஏன் சார், அதுதான் ரேடியோவில் சொல்றாங்கள்ள ? ‘ என்றார் காமாட்சி பலியர்.

‘ரேடியோவில் பொய் கூட சொல்வார்கள் ‘ என்றேன் நான்.

‘சார், அதை எங்க கிட்ட வந்து ஏன் சார் சொல்றீங்க ? நீங்க போய் ரேடியோவில் சொல்லுங்க. நாங்க நம்புறம் ‘ என்றார்.

‘என்னை ரேடியோவில் பேச விட மாட்டாங்க ‘ என்றேன். ‘பின்ன இப்படித் தனித் தனியா எத்தனை ஊரைப் போய் பார்த்து ரேடியோவில் பேசினது தப்புன்னு நீங்க இன்னும் எம்புட்டு நாள வீணாக்கப் போறீங்க ? அதுக்குள்ள அந்தம்மா பத்தி தினமும் ரேடியோவில் நல்லாச் சொல்லப் போறாங்க. நீங்கதான் சரியில்லை ‘ என்றார் அவர்.

மீடியாவின் வீச்சை நன்கு புரிந்து கொண்டு பேசுகிறவர் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஒரு பத்தரிகைக்கான வேலையையே என்னால் திறம் பட அக்கறையுடன் செய்ய முடிவதில்லை. நான் போய் எப்படி ரேடியோ வரை. . .

என் முன்னால் உள்ள கடமைகளின் கட்டாயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறைந்த பட்சம் ஒரு பத்தரிகையாவது, இந்தப் பலியர்கள் மத்தியில் படைக்கப் பட வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.

ஏற்கனவே உன் உழைப்பு மீது மேடத்துக்கு நம்பிக்கையில்லை. இந்த நேரத்தில், பலியர்களுக்கு ஒரு பத்தரிகை தேவை. அவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க அது பயன் படும் என்று நான் எப்படிச் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘நீங்க நிலத்தில்தானே வாழ்கிறீர்கள். நிலம் சும்மாதானே கிடக்கிறது. நீங்கள் அதில் பயிர் வச்சா என்னங்க ‘ என்றேன்.

‘ஏற்கனவே இருக்கிற வள்ளிக் கிழங்கு, தேம்லி கீரை, அமுங்கு கறி, உடும்பு கறி, பூரான் கறி, மான் கறி மட்டும் உணவாக உண்டு வாழ்ந்தார்கள் எங்களைப் பெத்தவுங்க. நாங்க ஆட்டுக் கறி சாப்பிட்டதில்லை. அதனால எங்களுக்கு நோய் நொடி வந்ததில்ல. ஆனா இப்ப நாங்க, உங்களைப் போலவே கடையில் ரேசன் அரிசி வாங்கி சாப்பிடுவோம். அதனால் நாங்களும் உழுது வாழ வேண்டி தேவை வந்துள்ளது. அதுக்காகத்தான் அரசாங்கத்திடம் நிலம் கேட்டுக் கெஞ்சறோம் ‘ என்றனர்.

நான் புரிந்து கொண்டேன்—-நாம இந்தப் பலியர்களின் நிலத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, நிம்மதியைச் சீர்குலைத்த கொடுமைக் காரர்கள் என்று.

அந்தம்மா மேலும் தொடர்ந்தார். ‘இப்ப பச்சத் தண்ணியைக் குடிக்கக் கூட பயமாய் இருக்குது. கிழங்கு, தேன் சாப்பிட்டு வருடங்கள் ஓடி விட்டன. தினையை வறுத்து அரைத்து (அப்பொழுது உரல் இல்லை) தேனைக் கலந்து உருண்டையைச் சாப்பிட்டு விட்டு, காட்டு மிருகம் போல அலைவோம் ‘ என்றார்.

‘அப்ப, நாங்க காட்டு மிருகம் போல காடுகளுக்கு வந்து உங்களைத் தொந்தரவு செய்கிறோம்னு சொல்றீங்களா ‘ என்றேன். ‘மிருகம் தேடி வந்து தொந்தரவு செய்யாது சார். நீங்க நாட்டு மக்கள். எங்களுக்கு நல்லது சொல்ல வந்திருக்கிறீங்க ‘ என்றார். எனக்கு நிம்மதி தோன்றியது.

நான் கேட்டேன், ‘கடவுள் யார் ? ‘

‘நீங்க சொல்லுங்க. ‘

‘ஈசுவரன் என்றேன். ‘

‘சரி வச்சுக்குங்க ‘ என்றார்.

‘யேசு கிருஸ்து என்று நமது பாதர் சொன்னாரே ‘ என்றேன்.

‘சார், எந்த சாமி பக்கத்திலிருக்குதோ அதை மனசில் நினைத்துக் கொள்வோம். மொத்தத்தில் ரெண்டும் ஒன்னா இருந்தா எல்லாத்தையும் ஒன்னா நினைத்துக் கொள்வோம்.

‘சில பேர் சாமி இல்லேன்னு சொல்றாங்களே ‘ன்னு நான் சொன்னேன்.

‘சரி அவுங்க அப்படியே வச்சுக்கட்டும் ‘ என்றார்.

நான் கேட்டேன், ‘ஏங்க கடவுள் இருக்கா அல்லது இல்லையா ? ‘ என்று.

‘அது உங்க இஷ்டம். ‘

‘நீங்க சொல்லுங்க ‘ என்றேன்.

‘ஏங்க நீங்க இதைப் போயி பெரிசு பண்ணிக்கிட்டு. நாம நல்லா இருக்கத்தானே கடவுள்னு நீங்க சொல்றீங்க. இப்ப கடவுள்னு சொல்லி சண்டை மூட்ட வர்றீங்க ‘ என்றார்.

நான் என்னுடைய நாட்டில் ‘கோயில் ‘ கட்டுவதாகக் கூறி மக்களைப் பலி வாங்கிய கூட்டத்தை நினைத்து வெக்கப் பட்டேன். ஆனால் பலியர்களோ, தங்களுக்கு வீடு கூட இயற்கையைப் பாதிக்கும் வகையில் கட்ட விரும்பாதவர்களாய் உள்ளனர்.

எங்களை விட எல்லா வகையிலும் நல்லவங்களச் சந்தித்து நான் அறிவு பெற்றதாக நினைத்தேன்.

எங்கள் நிகழ்வு முடியும் தறுவாய், மேடம் எங்களைக் கூப்பிட்டு,

‘நாம பலியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பத்தரிகை அவர்களை நடத்தச் சொல்லலாம். அதற்கு நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன் ‘ என்றார்.

எங்களைத் தாண்டி செயல் பட்டவர் Madam என்பது அப்பொழுது நிருபணம் ஆகிக் கொண்டிருந்தது. மலைப்புடன், ‘சரிங்க மேடம் ‘ என்றேன். சரியான துவக்கம் இது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இனி உங்களை இந்த பலியர்களின் பத்தரிகையின் வாயிலாகவே நான் சந்திப்பேன்.

கேட்டாலும் கிடைக்காது என்ற நிலை பல் வேறு இடங்களில் இருக்க, நினைத்த உடனே, அது சரியாக இருக்கும் போது, அதை மெய்ப்பித்து உடனடியாகச் செயல் படும் மேடத்தின் வேகத்தையும், ஆக்கத் திறனையும் கண்டுணர்ந்த நான், ‘சரியான தலைமையின் வழி காட்டுதலில்தான் பயணிக்கிறேன். ஆனால் இவரிடம் பணியாற்ற அதிகம் உழைக்க வேண்டும் ‘ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

(ஏப்ரல் 2004 புதிய கோடாங்கியில் வெளியானது.)

Series Navigation

குடியரசு

குடியரசு