ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ஆசாரகீனன்


மேலோட்டமான அறிமுகம் என்று முன்பே சொல்லியாயிற்று. இருபத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பிரசுரித்த ஃபூகோவின் கருத்துப் பயணம் ஒரு சிறு கட்டுரையில் அகப்படாது என்பதால்தான் இந்த மேலோட்டம். குறிப்பிட்ட தலைப்புகளில் இவரது கருத்துகளைத் தொகுத்துச் சுருக்கிக் கொடுத்தால் ஓரளவு புராணங்களிலோ அல்லது வீர வணக்கங்களிலோ அல்லது மூதாதையர் வழிபாட்டிலோ சிக்கிக் கொண்டு நிகழ்கால வாழ்வை மேலும் மேலும் உளைச்சலாக்கிக் கொள்வதை எப்படித் தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ள முடியலாம். தமிழகத்தில் உள்ள ஃபூகோ நிபுணர்கள் இதைக் கவனித்தால் நல்லது. அவரது கருத்துகளை அன்றாட அரசியலுக்குப் பயன்படுத்துபவர்கள் தமது கருத்துக் கருவூலத்தைப் பிறருக்கும் திறந்து விட்டால் என்ன ?

ஃபூகோவின் மையக் கருத்து ஒரு புறம் எளியதுதான் என்றாலும் இவருடைய கருத்துக் குவியலுடைய முக்கிய தன்மை – மக்கள் வாழ்வின் எல்லாத் தளங்களையும் இணைத்து ஒரு கருத்தாக்கச் சங்கிலியில் கோர்க்கிறது, அதே நேரம் எந்தத் தளத்தையும் அதி முக்கியமாகக் கருத இது இடம் தருவதில்லை. அந்தரங்கம், குடும்பம், சிறு சமூகம், சமுதாயம், அரசு என்று பலதள மனிதச் சேர்க்கைகளையும் அவற்றில் மனித நடத்தைகள், நம்பிக்கைகள், பயன்படுத்தும் பலவித மொழிகள், அவற்றின் சமயோசிதப் பயன்பாடுகள், வரலாறும் தற்காலமும் ஊடாடி உருவாக்கும் யதார்த்தங்கள் என்று பலவிதமான இயக்கங்களை இது ஆராயத் தலைப்படுகிறது.

ஃபூகோவைப் பொறுத்தவரை அரசு, அரசியல், சமூகம் ஆகிய தளங்களில் எதிர்ப்பு காட்டுவதையோ, மாற்றுப் பாதைகளுக்கு முயல்வதையோ அவர் தள்ளி வைக்கவில்லை என்றாலும் மார்க்சியத்துக்கும், அதன் மோசமான மாணாக்கர்களான லெனினிய, ஸ்டாலினிய, மாவோயிசவாதிகளின் அபிமானப் போராட்ட முறையான பெரும் ரத்தக் களரிகளுக்கு அவரிடம் பெரிய ஆதரவு ஏதும் வெளிப்படவில்லை. மேலும், தனிமனிதரின் அவசங்களை (aspiration) அல்லது குறிக்கோள்களை ஓரம் கட்டி அவரை ஓர் இயந்திரத்தனமான கட்சிக்கு அடிமையாக்குவதை ஃபூகோவின் கருத்தாக்கம் எதிர்க்கிறது. ஆனால், ஃபூகோ யதார்த்த அரசியலில் அவ்வளவு ஒளிரவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். காட்டாக, அயதுல்லா கோமெய்னியின் ‘இஸ்லாமியப் புரட்சியை ‘ ஃபூகோ முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டு, அது மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்று கருதி, சில வருடங்கள் அந்த ஆட்சியை ஆதரித்தார் என்பதற்குச் சான்று இருக்கிறது. இதை ஒரு தவறு என்று அவரே பிற்பாடு அசடு வழிய ஒத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. லல்லுப் பிரசாத் யாதவுக்கு அரசியல் தெரிந்த அளவு முட்டைத் தலையரான பல்கலைக்கழகச் சிந்தனையாளருக்குத் தெரிவதில்லை என்று சொல்லலாமோ ?

ஆனால், யதார்த்த அரசியலை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகத் தம்மைத் தாமே கருதுபவரும், மனித விடுதலைக்குப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு மனிதரை உழைக்கும் இயந்திரமாக்கும் அல்லது உற்பத்திக்கான பெரும் இயந்திர அமைப்பில் ஒரு சிறு திருகாணியாக்கும் புரட்டல் வேலையை – புரட்சி வேலையை அல்ல – தொடர்ந்து பல நாடுகளில் செய்து காட்டிப் பெரும் ‘சாதனை ‘ படைத்தவருமான மார்க்சியருக்கு, துவக்க காலத்தில் ஃபூகோவைப் பிடிக்காததற்குக் காரணம் உண்டு என்பது தெளிவு. முன்னர் தெரிவித்த மாதிரி வலதுசாரியினருக்கும், குறிப்பாக கிருஸ்தவ அடிப்படைவாதம் சார்ந்த அமெரிக்க வலது, ஐரோப்பிய வலது, மற்றும் இந்துத்துவா/இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் ஃபூகோவைப் பிடிக்க வழியில்லை. இது குறித்து ஃபூகோவைப் பற்றிய நல்ல கட்டுரைகளையும், புத்தகத்தையும் எழுதியுள்ள பால் ரபினெள (Rabinow), ஃபூகோவோடு நடத்திய ஒரு நேர்காணலில் ஒரு பகுதி:

ரபினெள: உங்களை ஒரு கருத்தியல்வாதி (idealist), ஒரு அழிப்புவாதி (nihilist), ஒரு ‘புதுத் தத்துவாசிரியர் ‘, ஒரு மார்க்சிய எதிர்ப்பாளர், ஒரு புதுப் பழமைவாதி என்றெல்லாம் விதம் விதமாகப் படிக்கிறார்களே, நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் ?

ஃபூகோ: இந்த அரசியல் சதுரங்கப் பலகையில் நான் அநேக கட்டங்களில் இருந்திருக்கிறேன் என நினைக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக, சில நேரம் ஒரே சமயத்தில் – அமைப்பு எதிர்ப்புவாதியாக, ஆடம்பரமான அல்லது ஒளிவான மார்க்சியவாதியாக, அழிப்புவாதியாக, பகிரங்கமான அல்லது ரகசியமான மார்க்சிய எதிர்ப்பாளனாக, கெளலியவாதத்திற்கு வேலை செய்யும் தொழில்நுட்ப நிபுணராக (Gaullist technocrat), தாராளவாதியாக எல்லாம் காணப்படுகிறேன். ஓர் அமெரிக்கப் பேராசிரியர், மறைமுக மார்க்சிஸ்டான எனக்கு அமெரிக்கா வர அழைப்பு தரப்பட்டது குறித்துப் புகார் செய்தார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்நாட்டு அரசு எதிர்ப்பாளரின் கூட்டாளி நான் என்று பழிசாட்டப்பட்டேன். இந்த வருணனைகள் எவையும் அவற்றின் அளவில் முக்கியமானவை அல்ல. மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் அவை அர்த்தம் பெறுகின்றன. அவற்றைச் சேர்த்துப் பெறும் பொருள் எனக்குப் பிடித்திருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் யார் என்று என்னை அடையாளம் காட்டிக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இப்படிப் பலவிதமாக என்னை இனம் காண்பதையும், என் மீது தீர்ப்பு சொல்வதையும் பார்க்க எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது. …

(இடையில் பல வரிகள் விடப்பட்டுள்ளன. அவற்றில் ஃபூகோ இப்படி இனம் காணும் மனிதரின் செயல் திறன் மீது தனக்கு ஏதும் சந்தேகம் இல்லை என்கிறார். தன் செயல்பாடுகளின் விளைவுகள் இவை என்பது தனக்குத் தெரிந்துள்ளது. ஆனால் தன் விமர்சனங்களோ அல்லது மனச் சாய்வுகளோ மற்ற பார்வைகள், வழிகள் ஆகியவற்றை கழித்துக் கட்டுவதற்காகத் தான் மேற்கொண்ட ஓர் ஒழுங்கு முறையான ஆய்விலிருந்து வரவில்லை. ஒரே ஒரு சரியான வழிதான் இருக்கிறது என்ற நிச்சயத்திலிருந்தும் புறப்படவில்லை என்கிறார். அரசியல் என்ற தளத்தில் எவை பிரச்சினைகள் ஆக்கப்படுகின்றன என்பதை ஆய்வதில் இருந்துதான் இத்தகைய தீர்ப்புகள் புறப்படுகின்றன என்கிறார். [கு1])

… ரிச்சர்ட் ரார்ட்டி என் பகுப்புகளில் நான் எந்த இடத்திலும் ‘நாம் ‘ என்று சொல்லி எந்த ஒரு குழுவுக்கும் எனது கோரிக்கைகளை முன்வைப்பதில்லை என்று சுட்டுகிறார்…

பிரச்சினை என்னவென்றால், அதுவும் கருக்காகப் பார்த்தால், தான் அங்கீகரிக்கும் கருத்துகளுக்காகவோ, மேலும் ஏற்றுக் கொள்ளும் மதிப்பீடுகளுக்காகவோ ஒருவர் தன்னை ஒரு ‘நாம் ‘ என்ற குழுவுக்குள் அமர்த்துவது பொருத்தமானதா என்பதைத் தீர்மானிப்பதுதான். (அல்லது ஓர் எதிர்காலத்து ‘நாம் ‘ என்பதை உருவாக்குவதைச் சாத்தியமாக்குவதற்காக அந்த ‘நாம் ‘ என்ற கருத்தையே கேள்விகளுக்கு உள்ளாக்குவது மேலானதா என்று அடுத்து கேட்கிறார். அந்த ‘நாம் ‘ அத்தகைய கேள்விகளுக்கு முன்னால் உருவாகி இருக்க முடியாது, கேள்விகளின் மூலமாகத்தான் உருவாகும் என்கிறார். பிற்பாடு இந்தப் பதிலில் தான் மார்க்சியத்துக்கு எதிரியும் அல்ல, ஆதரவாளனும் அல்ல என்கிறார். மாறாக நமது அனுபவங்களை அது எதிர் கொள்ளும் விதத்தைத்தான் கேள்விக்கு உள்ளாக்குவதாகச் சொல்கிறார்.) …

இந்தப் பார்வையில் இருந்து பார்த்தால், இத்தகைய கேள்வி கேட்கும் செயலில் இருந்து ஓர் ஆக்கமான விளைவு ஏற்பட்டுள்ளது: இப்போது அரசியலை நோக்கிப் பன்மையான (plurality) கேள்விகள் எழுப்பப்படுகின்றன. வெறும் அரசியல் கோட்பாடுகளுக்குள் இருந்து கேட்கப்படும் கேள்விகள் மட்டுமே எழுப்பப்படுவதில்லை. காட்டாக, சிறு சமூகங்களை, இனக் குழுக்களைக் காப்பாற்றுவதாகவும், அவர்களின் நலன்களை முதலாளியத்திலிருந்து பாதுகாப்பதாகவும் இந்தியாவில் காட்டிக் கொள்ளும் இடதுசாரியினர், சோசலிசம் என்ற பெயரில் ஐரோப்பாவிலும், சீனாவிலும் இடதுசாரி அரசுகள் சிறு சமூகங்களையும், இனக் குழுக்களையும் பெரும்பான்மையினரின் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி ஓர் அரை நூறாண்டு ஆண்டபோது அது குறித்து வாய் திறந்ததில்லை. மாறாக, அச் சமூகங்களுக்குத் தமது அரசியல் புத்துயிர் ஊட்டியதாக வேறு விளம்பரம் செய்து கொண்டார்கள். இன்றென்னவோ அந்த அடக்கு முறையின் விபரீத விளைவுகள் குறித்த மாற்றுச் சொல்லாடல்கள் இந்த இனச் சமூகங்களில் இருந்து பல சமூக அறிவு ஜீவிகளின் வாயிலாக வெளிவருகின்றன. இவை வெளிவர ஒரே காரணம், ரஷ்ய (சோவியத் என்று புரிந்து கொள்க) ஏகாதிபத்தியம் உடைந்து பல சில்லுகளாகப் போனதில் முன்னாள் சோவியத் காலனிகள் இன்று தனி நாடுகளாகவோ அல்லது துணை நாடுகளாகவோ மாறியதில் மறு-வரலாறு வெளி வருகிறது. மாறாக சீனாவின் அடக்கு முறை பற்றி அங்கிருந்து வெளியேற்றப் பட்டவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், அகதிகளாக ஓடி வந்தவர்களிடம் இருந்துதான் தகவல் கிட்டுகிறது. சமூகவியலாளர்கள், குறிப்பாக இடதுசாரியினர் இவற்றைச் சட்டை செய்வதில்லை – இவை மாசுபட்ட தகவல்கள் என்பது அவர்களுடைய விமர்சனம்!!

அதாவது தம்முடைய முன் தீர்மானங்களுக்கு ஒத்து வருபவன மட்டுமே சரியான அறிவு, வழிமுறை, இயக்கம், பயன்படுதல் எல்லாம். முன் தீர்மானங்களை மறுப்பன அல்லது அவற்றை நிறைவேறாமல் தடுப்பன அல்லது சட்டை செய்யாமல் தம் வழியே சென்றிருப்பன ஆகிய எல்லாம் தவறானவை, பிற்போக்கானவை, அழிக்கப் படவேண்டியவை, அல்லது அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டு, மோசமாக வருணிக்கப்பட்டு மக்கள் நினைவிலிருந்து எடுக்கப் படவேண்டியவை. இதை அறிவியல் பூர்வமான அணுகு முறை என்று பிரகடனப்படுத்துவதுதான் வினோதம்.

ஆனால், இந்த வகைப் பொய்மை இடதுசாரிக்கோ, வலதுசாரிக்கோ தனிப்பட்ட குணம் இல்லை என்பதுதான் ஃபூகோவின் உறுதி. இது நவீன காலத்துக்கு மாத்திரமானதும் அல்ல. இத்தகைய பொய்மையை கிரேக்க நாகரிகத்தில், ரோம நாகரிகத்தில், பின்னர் நவீன நாகரிகத்தில் எல்லாம் ஆராய்ந்து ஃபூகோ மீண்டும் மீண்டும் பல நாடுகளில், பல பண்பாடுகளில், பல வரலாற்றுக் கட்டங்களில் இனம் காட்டுகிறார். அவருடைய தனித்தன்மை என்னவென்றால், அரசியல் அல்லது பொருளாதாரத்தை இலக்காகக் கொள்ளாமல், மனிதரின் பால் தன்மை, அது சார்ந்த ஒழுக்கவியல் பார்வைகள், சட்ட ஒழுங்கு முறைகள், சமூக உறவுகள், மேலும் இவற்றின் மொத்த உருவான தத்துவ மற்றும் வரலாற்றுப் பார்வைகள் ஆகியவற்றை ஆராய்கிறார். பால் தன்மையின் வரலாறு என்ற மூன்று புத்தக வரிசையில் முதலில் நவீன காலத்துப் பால் தன்மை, பிறகு கிரேக்க நாகரிகத்தில், பிறகு ரோம நாகரிகத்தில் என்று ஆராய்ந்திருக்கிறார். அடுத்து கிருஸ்தவ நாகரிகங்களில் பால் தன்மை எப்படி கையாளப்பட்டது என்று ஆராயத் திட்டமிட்டிருந்தார் என்று தெரிகிறது. ஆனால், 1984-ல் அவர் இறந்து போனதால் கிருஸ்தவ நாகரிகம் அவரது சஸ்திர சிகிச்சையில் இருந்து தப்பியது போலும்.

மற்றபடி பீடர் கா(வ்)ஸ், தத்துவப் பேராசிரியர், ஹண்டர் கல்லூரி, நியூயார்க் மாநகரம் – ஃபூகோ பற்றிச் சொல்வதைச் சிறிது கவனித்தால் மேலே சொன்ன சிறு சர்ச்சை மேலோட்டமாகப் புரியலாம்.

‘ஃபூகோவின் முன் அனுமானம் இது – ஒவ்வொரு சமூகத்திலும் சொல்லாடல் உற்பத்தி அல்லது சொற்களன் தயாரிப்பு உடனடியாக (ஒரே நேரத்தில்) கட்டுப்படுத்தப்படுகிறது, தேர்ந்தெடுக்கப்படுகிறது, ஒழுங்குபடுத்தப்படுகிறது, மேலும் மறுவினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு சில குறிப்பிட்ட அளவுள்ள வகைமுறைகள் உள்ளன; இந்த முறைகளின் பங்கு என்னவோ இந்த சொல்லாடல்களின் வீரியத்தைக் குறைப்பதும், அதிலிருந்து எழக் கூடிய ஆபத்துகளைத் தடுப்பதும்தான். மேலும் கா(வ்)ஸ் சுட்டுவது – ஒத்துக்கொள்ளப் படக்கூடிய வரையறைகளைத் தாண்டும் வகையான சொல்லாடல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒடுக்குவது, பிறவற்றை மனநோயின் விளைவுகள் எனப் புறந்தள்ளுவது ஆகிய முறைகள், மேலும் எதிர்த் தாக்குதல் நடத்துவோரின் உரைகள் மூலம் விளைவற்றதாக்குதல், அல்லது சொல்லாடலை உருவாக்குபவர் தகுதி பெற்ற பிறகே தம் கருத்துகளை வெளிப்படுத்தும்படி வற்புறுத்துவது ஆகியன இதர முறைகள் என ஃபூகோ சுட்டுவது ஒரு சக்தி வாய்ந்த ஆய்வு முடிவு என்று வலியுறுத்துகிறார். (NYT, october 22, 1972- book reviews)

இன்னொரு உரையாசிரியர் ஃபூகோ முதலில் சுயம் என்பதில்தான் அர்த்தம் என்பது தொடங்குகிறது என்ற தேகார்த்திய முடிவை மறுக்கிறார், அதிலிருந்துதான் பண்பாடுகள் உற்பத்தி ஆகின்றன என்பதையும் மறுக்கிறார் எனச் சுட்டுகிறார் [கு2]. இது, ஃபூகோ முதலில் கிட்டத்தட்ட ஒரு அமைப்பியல் வாதியாக (structuralist) இருந்த காலத்தில் எடுத்த நிலைபாடு. அதே நேரம் அறிவியல் வாதத்தை அறவே மறுக்கிறார். அதாவது உண்மை என்பது ஒரு புறவயப் பொருள், மாறாத உறுதி உடையது என்பதையும் மறுக்கிறார். (கவனித்தால் மார்க்சியத்திலிருந்து எப்படி துல்லியமாக விலகுகிறார் என்பது இங்கு தெரியும்.) அறிவியல் வழி அறிதிரட்டு (Knowledge) என்பது விதி முறைகளால்தான் தீர்மானிக்கப்படுகிறது, இந்த விதிமுறைகள் வரலாற்றுப் போக்கால் தீர்மானிக்கப்படுபவை என்பதையும் அறிவிக்கிறார். ஆக மார்க்சியத்தின் இரண்டு அடிப்படைகள் ஃபூகோவால் நிராகரிக்கப்படுகின்றன. வரலாற்றை அறிவியலாக்க முடியும் என்ற மாஒயிச உறுதிப்பாட்டை இங்கு உடைக்கிறார் ஃபூகோ. அதே நேரம் வரலாற்றில் பல கட்டங்களில் அறிபொருள்களாக (facts) அறியப்பட்டவற்றையோ அல்லது பண்பாட்டு வரலாறுகளையோ ஃபூகோ மறுதலிக்கவில்லை என்று இந்த உரையாசிரியர் சுட்டுகிறார்.

எப்படி குறிப்பிட்ட வகை அறிமுறைகள் உருவாயின, அவை எப்படி வழக்கமாயின அல்லது நடைமுறை ஆயின என்று ஆய்வதே அவருடைய இரண்டாம் கட்ட நகர்வு. இதை ஃபூகோ அகழாராய்வு முறை எனக் குறிக்கிறார். இந்த நகர்வின் போது ஃபூகோ எப்படி அதிகாரம் இந்த வகை அறிமுறைகளை உருவாக்குவதில் பங்கெடுக்கிறது, எப்படி அவற்றை அது பயன்படுத்துகிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இக்கட்டத்தில் அவர் உருவாக்கும் அதிகாரம், அதன் சமூகக் கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய கருத்துகள் அப்போதைய கருத்து மரபுகளாக வேரூன்றி இருந்த மார்க்சியம், ஃப்ராய்டியம், மேலும் பொருளாதாரக் கருத்தாக்கங்களில் இருந்து விலகி வேறு விதமான அறிதிரட்டுக்கு வகை செய்தன. இதன் வழியே தான் அவர் பால்-தன்மையின் வரலாற்றை ஆய்வதற்குச் செல்கிறார். இங்கு ஒரு தற்காலிக முடிவுக்கு வருவோம். ஃபூகோவின் கருத்தாக்கம் முழுதும் அரசியல் பற்றியது. அதிகாரத்தின் வழியே வசதிகள்/ சக்திகள்/ பொருட்கள் எப்படி வினியோகிக்கப்படுகின்றன என்பதைத்தான் அரசியல் கண்காணிக்கிறது. இதன் வழியே ஃபூகோ மேலை வரலாற்றை அணுகியதும் அரசியல் சார்புடையதுதான். குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களால் மேலை நாகரிகத்தில் மனிதரின் இருப்பு தீர்மானிக்கப்படுவதாக ஃபூகோ கருதுகிறார். பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகியவற்றின் நிறுவனங்கள் இந்த வகை அரசியலின் வழியேதான் நிர்மாணிக்கப்படுகின்றன என்பதும் அவர் கருத்து என்று ஹோரஸ் பிரசுரத்தின் ‘ஃபூகோவுக்கு ஒரு வழிகாட்டி ‘ என்ற நூல் தெரிவிக்கிறது. இது என்னளவில் முழுதும் சரியான முடிவு அல்ல. அது குறித்து பிறகு பார்ப்போம். அதிகாரம் என்பதை இப்படிப் பரந்ததொரு ஆளும் சக்தியாகப் பார்க்கிற ஃபூகோ ஒரு பொருள் முதல் வாதியா ? இதையும் பிறகு பார்ப்போம்.

இங்கு கவனிப்பது என்ன என்றால், ஃபூகோவைப் பொறுத்து, நவீன காலத்தில் ஆட்சி மனப்பான்மையில் இடது வலது என்று பெரும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆளும் உத்தேசங்களை நன்முயற்சிகள் என்றோ அல்லது முன்னேற்றப் பாதை என்றோ அல்லது கூட்டும் முயற்சிகள் என்றோ பலவிதக் கருத்துக் கட்டுகளில் ஒளித்து தமது அதிகார உத்தேசத்தைக் கண்ணியப்படுத்தி விடுகிறார்கள் என்பது அவர் வாதம்.

ஃபூகோவின் அணுகல் முறை குறித்துப் பேசும் பால் வெயின் என்னும் (ரோம சாம்ராஜ்யத்தின்) வரலாற்றாளர் சொல்கிறார்: (ஃபூகோவின் முயற்சிகளின் வழியே) ‘நாம் சித்தாந்தம் அல்லது கோட்பாடு என்பதைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறோம். பழக்கங்களை விவரிக்க முயல்வதாகத் தோன்றும் அதே நேரம் அவற்றை அடைய வேண்டிய இலக்குகளாக உயர்த்தி விடும் உயரிய மேலும் தெளிவற்ற நடைமுறை அது. யதார்த்தத்தில் உள்ள பழக்கவழக்கங்களின் திருகல்கள், ஒழுங்கற்ற பல எல்லைப் பரப்புகள், வரலாற்றில் அவை மாறி மாறி ஒன்றை ஒன்று வெல்லும் விதம் ஆகியவற்றை ஒரு போலியான, ஆனால், பெரும் மேலங்கிக்குள் மறைத்து விடும் முயற்சி. இந்தப் பழக்கவழக்கங்கள் (practices), ஒவ்வொன்றும் தன் தனித்துவம் மிக்க நெளிவு சுளிவுகளோடு எங்கிருந்து புறப்படுகின்றன ? இந்தக் கேள்விதான் ஃபூகோவின் அடிப்படையான கேள்வி, அவருடைய முறை என்பது வெயின் உடைய கருத்து.

இந்த இடத்தில் மாஓ ‘கருத்துகள் எங்கிருந்து வருகின்றன ‘ என்று கேட்பது நமக்கு நினைவுக்கு வரலாம். ‘சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன ? விண்ணிலிருந்தா அவை விழுகின்றன ? இல்லை. நம் மனதின் உள்ளே இயல்பாக இருப்பனவா அவை ? இல்லை. அவை சமூக நடவடிக்கைகளில் (practices) இருந்து வருகின்றன, அவற்றிலிருந்து மட்டும்தான் வருகின்றன; மூன்று விதமான சமூக நடவடிக்கைகளில் இருந்து வருகின்றன, அவையாவன – உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், மேலும் அறிவியல் சோதனைகள். மனிதனுடைய சமூக இருப்புதான் அவனுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது… அவர்களுடைய சமூக நடவடிக்கைகளில் மனிதர்கள் பலவிதமான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். மேலும், வெற்றி தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் வளமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். ‘ (Mao, selected readings, p.502, may 1963)

– மேலே கண்ட வரிகள் மக்கள் திரள் வழி (Mass line) எனப்படும் ஒரு மாஒயிசப் பாதையைப் பின்பற்றுபவரின் கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டன. அந்தக் கட்டுரை மேலும் சொல்கிறது- ‘மக்கள் திரள் சரியான கருத்துகள், அறிவுத் திரட்டு, மேலும் மதிநுட்பத்தின் பெரும் கருவூலமாவர். குறிப்பாக பெருவாரியான சமூக நடவடிக்கைகளை அவர்களே எடுத்துச் செய்கிறார்கள் என்பதால் இப்படி. இது பொதுவாகவும் உண்மை, குறிப்பாக புரட்சிக்கான போராட்டங்களிலும் உண்மை. ‘

இந்த வரி வரை பார்த்தால் மக்கள் திரள் வழியும் ஃபூகோவும் அதிகம் வேறுபடுவதாகத் தெரியாது. ஃபூகோவின் குறிப்பிட்ட சொற்கள் சிறிது கறாராக வரையறுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அந்த கட்டுரையில் அடுத்த பத்தியைப் பார்த்தால், ஃபூகோவின் பாதை வேறு திசைக்கே போகிறது என்பது புரியும். அடுத்த பத்தி இதோ:

‘இதை அங்கீகரித்த பின், நாம் இங்கு பொருந்தும் இயங்கியல் வழியான அடுத்த அம்சத்துக்குச் செல்ல வேண்டும்: மக்கள் திரளின் அறிவுத் திரட்டும், மதி நுட்பமும், மிகப் பெரியவை என்ற போதும், ஒழுங்கமைக்கப்படாமலும், பரவலாகச் சிதறியும் இருக்கின்றன. மக்கள் திரளிடையே பல மிகச் சரியான கருத்துகள் இருக்கின்றன என்பது உண்மை என்றாலும், அவற்றில் சில எந்த ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திலும், இடத்திலும் புரட்சிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மிக அவசியமானவை என்பதும் உண்மையானாலும், மக்கள் திரளிடையே பல தவறான கருத்துகளும் இருக்கின்றன என்பதும் உண்மையே, பொய் நம்பிக்கைகளும், அதீதக் கற்பனைகளும் இவற்றில் அடங்கும். இவை பின் தொடரப்பட்டால் புரட்சிக்கான போராட்டம் மோசமான தோல்விகளுக்கும், பயனற்ற முடிவுகளுக்கும் இட்டுச் செல்லப்படும் என்பதும் உண்மையே. ‘

ஆக, இரு வழிகளிடையே பெருத்த மாறுபாடுகள் உண்டு.

ஃபூகோ Practices என்று சொல்வது மாஓவின் வழியைப் போல வெறும் அரசியல் அல்லது பொருள் உற்பத்தியையும் பொருளரசியலையும் மட்டும் குறித்ததல்ல. மாஒ பண்பாடு பற்றி எல்லாம் பேசி இருக்கிறார் என்றாலும் அவரது மொத்த நோக்கும் நாடு, சமூகம், உலகம் என்ற பெரும் உருக்களோடுதான் இயக்கம் பெறுகிறது. மக்களைப் பற்றிப் பேசும் அவர் இன்னமும் அவர்களை ஒரு கூட்டமாகத்தான் பார்க்கிறார். ஆனால் ஃபூகோ ஒரே நேரம் அவர்களைக் கூட்டமாகவும், சமூகங்களாகவும், சிறு குழுக்களாகவும், குடும்பத்து உறுப்பினராகவும், தனி மனிதராகவும் பார்க்கிறார். ஒவ்வொரு தளத்திலும் மனிதர் எப்படி கட்டுப்படுத்தப்பட்டு, ஒழுங்காக்கப்பட்டு, வரையறுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு, வசதி தரப்பட்டு என்று பலவிதமாக உருமாற்றப் படுகிறார், இதிலிருந்து அவரது சுயம் என்பது எப்படி வெளிவருகிறது, பல தள இயக்கத்தில் ஆக்கம் பெறுகிறது என்றெல்லாம் பார்க்கிறார். அந்த விதத்தில் ஃபூகோவுடையது மிகப் பரந்த தளப்பார்வை என்றாலும் பெரும்தளம் – நுண்தளம் (macro and micro) ஆகியவற்றின் இணைவியக்கத்தைத் தொடர்ந்து கவனிக்கிறது. இத்தகைய பார்வை புள்ளியியல் அறிவும், தகவல் திரட்டு முறைகளும், அதன் வழி மக்களைக் கவனிக்கும் நடவடிக்கைகளும் பெருத்து விட்ட மக்கள் திரள் சமூகங்களாக, பல நாடுகளின் அமைப்புகளும் மாறிவிட்ட முதலாளியத்தின் ஒரு கட்டத்தின் அறிவியல் பார்வை என்று தோன்றுகிறது.

(தொடரும்)

[கு1] ஆனால், ஃபூகோவின் மாணவரும், ஒருபால் உறவின் வரலாறு குறித்து சில புத்தகங்களை எழுதியவருமான ஸ்டாவன் மர்ரே ஒரு நீண்ட உரையாடலில் தான் கண்டறிந்தவற்றை ஃபூகோவுடைய இரங்கல் கட்டுரையில் எழுதுகிறார். ஃபூகோ வரலாற்றாய்வில் சான்றுகளைப் பொறுக்கும் முறை தனக்குப் பிடித்தமில்லாதது என்றும், பன்முக, பலதளச் சான்றுகளில் ஃபூகோ எப்படித் தம் சான்றுகளை தேர்கிறார் என்றும், எப்படி ஒரு முடிவுக்கு வருகிறார் என்றும் தான் கேட்டதாகத் தெரிவிக்கிறார். ஃபூகோ எப்படித் தன் தேர்வுகளை அடைகிறார் என்று விளக்கிக் கொண்டு இருக்காமல், எளிமையாகத் தனக்கு ஒரு வாசிப்பு சாத்தியமாகிறது என்று மட்டும் தெரிவித்ததாகவும் சொல்கிறார். இது குறித்து மர்ரே தன் கருத்தாகச் சொல்வது – இது ஒரு நம்பிக்கைக்குச் சரணடைவதாகத் தனக்குத் தெரிந்தது, எதையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு முறையாகத் தெரியவில்லை என்கிறார். யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதானோ ?

[கு2] மக்கள் திரள் வழி அணியைச் சேர்ந்த ஒரு அமெரிக்கரின் கட்டுரையின் ஆங்கில வரிகள் இதோ:

The masses are a vast repository of correct ideas, of knowledge and wisdom, especially as concerns immediate questions of the day, precisely because the overwhelming proportion of all social practice is carried out by the masses. This is true in general, and it is also true in the revolutionary struggle in particular.

But having recognized this we must move to the other aspect of the dialectic involved here: the knowledge and wisdom of the masses, while great, is scattered and unsystematic. While it is true that among the masses there are many correct ideas, including some which are crucial to advancing the revolutionary struggle at any given time and place, it is also true that there are many incorrect ideas among the masses, including false hopes and fantasies which if followed would lead the revolutionary struggle into dead-ends and disastrous defeats.

aacharakeen@yahoo.com

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்