சன்மார்க்கம் – துன்மார்க்கம்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

தந்தை பெரியார்


அன்பர்களே! இந்தச் சமயத்தில் சமரச சன்மார்க்க சங்கம் என்பதைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். அது ஒரு சமயம் உங்கள் மனதிற்கு கசப்பாயிருந்தாலும் இருக்கலாம். அன்றியும், ‘என்னடா இவன் நம்மிடத்தில் உபச்சாரப் பத்திரம் பெற்றுக்கொண்டு நம்மையே உளைச்சலில் விடுகிறான். ஏன் இவனுக்கு உபச்சாரபத்திரம் கொடுத்தோம் ‘ என்பதாகத் தோன்றினாலும் தோன்றலாம். ஆனபோதிலும் சிலர் சமரச சன்மார்க்க சங்கம் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டே சமரசத்திற்குப் பதிலாக துன்மார்க்கமுமே விளையத்தக்க முறையில் நடந்து வருகிறார்கள். சுருங்கக் கூறில் சமரச சன்மார்க்கமென்பது அனுபவத்தில் பிறரை ஏமாற்றித் தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்வதற்கும், தங்கள் சமயத்தை உயர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்துகின்ற ஆயுதமே ஒழிய வேறில்லையென்றே சொல்லலாம்.

பொதுவாக ஒவ்வொரு மதக்காரரும், உட்சமயக்காரரும் தங்கள் தங்கள் மதம் – சமயம் ஆகியவைகளை சமரச சன்மார்க்கக் கொள்கை கொண்டதென்றும்தான் சொல்லுகின்றார்கள். ஆனால், அவரவர்கள் நடை, உடை, பாவனை, உணர்ச்சி முதலியவைகள் வேறாகவே இருந்து வருகின்றன. ஒவ்வொரு மார்க்கக்காரரும் தமது கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஒருவனை துன்மார்க்கியாகவே கருதுகிறார்.

மகமதிய மதம் சமரச சன்மார்க்கத் தன்மை பொருந்தியதானாலும் மற்ற சமயக் கடவுள்களும், கொள்கைகளும் அவர்களுக்குச் சிறிதும் சகிக்க முடியாததாகவே இருக்கின்றது. கிறிஸ்தவ மதம் சமரச சன்மார்க்கக் கொள்கையுடையது தான் என்று சொல்லப்பட்டாலும் அது வேறெந்த மதத்திலும் மோக்ஷமடைய வழி கிடையாது என்றும், மற்ற மதஸ்தர்கள் எல்லாம் அஞ்ஞானிகள் என்றும் சொல்லக்கூடியதாக இருக்கின்றது. இந்து மதமும் அதன் ஒவ்வொரு உட்பிரிவும் சமரச சன்மார்க்கம் கொண்டதென்றே பறையடிக்கப் படுகின்றது. இதைப்போல ஏற்றத் தாழ்வுகளும் துன்மார்க்கங்களும் கொண்ட மதம் இது சமயம் உலகில் வேறு ஒன்றும் இருப்பதாகச் சொல்ல முடியாது.

வைணவத்திற்கும், சைவத்திற்கும் அதனதன் கடவுள்களுக்கும் உள்ள பேதங்களும் விரோதங்களும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் இதில் உள்ள உயிர்க் கொலைகள் கணக்கிலடங்காது. குடியும், விவகாரமும் ஏட்டிலடங்காது. நிற்க, சகலருக்கும் பொதுவாகவே சன்மார்க்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையை உடையது அல்லவென்றே சொல்லுவேன். ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்றொருவருக்குத் துன்மார்க்கவே காணப்படுகிறது. சிலருக்கு, குழந்தைகளுக்கு கலியாணம் செய்வது சன்மார்க்கம், சிலருக்கு பக்குவமான ஆண்கள் – பெண்கள் இருவருக்கும் அவரவர்கள் சம்மதப்படி கலியாணம் செய்விப்பது சன்மார்க்கம்! சிலருக்கு மனிதனை மனிதன் தொடுவது துன்மார்க்கம்; சிலருக்கு மனிதனுக்கு மனிதன் தொடுவதினால் குற்றமில்லை என்று சொல்வது சன்மார்க்கம்; சிற்றப்பன் மகளை மணந்துகொள்வது சிலருக்குச் சன்மார்க்கம்; சிலருக்கு துன்மார்க்கம்; மாடு தின்பது சிலருக்குச் சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். கடவுளுக்குக் கண், மூக்கு, கை, கால், பெயர், பெண்டு, பிள்ளை முதலியவைகள் வைத்து வணங்குவது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம்; காலும் கையும் கெட்டியாயிருந்து நன்றாய் உழைத்துச் சாப்பிடக்கூடிய வரத்தடியர்களுக்குச் சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம்; சிலருக்கு துன்மார்க்கம். ஏழை எளியவர்கள், சரீர ஊனமுள்ளவர்கள், உழைத்துச் சாப்பிட சக்தியற்றவர்கள் ஆகியோருக்கு சாப்பாடு போடுவது சிலருக்குச் சன்மார்க்கம்; சிலருக்கு துன்மார்க்கம்.

எனவே, இம்மாதிரி ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்றவருக்குத் துன்மார்க்கமாயிருப்பதை நித்திய வாழ்வில் தினம் தினம் எத்தனையோ காண்கிறோம். ஒரு மார்க்கத்தின் முட்டாள்தனத்தையும் புரட்டுகளையும் வெளியில் எடுத்துச்சொன்னால் எப்பேர்ப்பட்ட சமரச சன்மார்க்கி என்கிறவனும் பதில் சொல்ல முடியாவிட்டாலும் காய்ந்து விழுந்து மக்களை ஏய்க்கப் பார்க்கிறானேயொழிய தனது மார்க்கம் உண்மையில் யோக்கியமானதா என்பதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. எனவே, உலகத்தில் உள்ள எத்தனையோ புரட்டு மதங்களில் சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றேயொழிய உண்மையில் எல்லோருக்கும் ஏற்ற சமரசத்தையும், சன்மார்க்கத்தையும் கொண்டது எதுவுமில்லை என்றே சொல்வேன். உங்கள் சமரச சன்மார்க்க சங்கம் இம்மாதிரியான குற்றங்களில் சிக்காமலும் மூடநம்பிக்கை, குருட்டு பழக்க வழக்கங்களாகியவைகளுக்கு அடிமையாகாமலும் புராணக் குப்பைகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஆளாகாமலும் மக்களிடத்தில் காட்டும் அன்பும் கருணையுமே பிரதானமாகக் கொண்டு மனிதத் தன்மையுடன் நடைபெறுமென்று நினைப்பதுடன் அம்மாதிரியே நீடூழி காலம் நடைபெற்று வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஏப்ரல் 8, 1928 அன்று அம்பலூரில் நடந்த பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்க விழாவின் போது, அவ்வூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரால் அளிக்கப்பட்ட வரவேற்பு உபசார பத்திரத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் பதிலளித்துப் பேசியது. ‘குடி அரசு ‘ ஏப்ரல் 22, 1928. ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் மூன்றாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.70) வெளிவந்துள்ள கட்டுரை இது.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன் aacharakeen@yahoo.com)

பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்:

கோஷா முறை

கண்ணகி கதை இலக்கியமா ?

திருவள்ளுவரின் பெண்ணுரிமை

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

கல்யாண ரத்து தீர்மானம்

பெண்கள் சொத்துரிமை

மதம் பற்றிய சிந்தனைகள்:

மத மாற்றமா ? மத ஒழிப்பா ?

மதங்கள் அழிக்கப்படவேண்டும்

Series Navigation

தந்தை பெரியார்

தந்தை பெரியார்