அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

மஞ்சுளா நவநீதன்


கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது என்னைப் பொறுத்த மட்டில் திரு கருணாநிதிதான். சாணக்கிய தேர்தல் கூட்டு தாண்டி, ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அணி வெற்றி பெற்றிருக்கிறது.

மதிமுகவும் திமுகவும் இணைந்தால் திமுகவின் மொத்த எண்ணிக்கை 20 ஆகிறது. ஆனால், மொத்த 39 தொகுதி வெற்றிகளுமே அவருக்குக் கடன் பட்டவையே. கருணாநிதி பிரதமராக ஆனால் மொத்த தமிழக எம் பிக்களுமே அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்பது நிச்சயம்.

தற்போதைய கூட்டணியாக இருக்கும் காங்கிரஸிடமும் முந்தைய கூட்டணியாக இருந்த பாஜகவிடமும் கருணாநிதிக்கு நல்ல பெயரும் அனுபவம் பொருந்திய மூத்த தலைவர் என்ற மரியாதையும் இருக்கிறது. ஆகவே இரண்டு கட்சிகளுமே கருணாநிதி பிரதமரானால் ஆதரவும் அளிக்கலாம்.

இடதுசாரிகளிடமும் கருணாநிதிக்கு நல்ல பெயரே இருக்கிறது. கருணாநிதி அவர்களை வெறுக்கும் ஒரே கட்சியான அதிமுக இன்று பூஜ்யமாகவே இந்த பாராளுமன்றத்தில் நிற்கிறது.

தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பு வகிக்கும் ஆசையை தற்காலிகமாக விட்டுவிட்டு இந்தியாவின் தலைமைப்பொறுப்பை ஏற்க கருணாநிதி விழையுமாறு கோருகிறேன்.

இது நடக்க முடியாததல்ல.

திமுக தலைவருக்கு இன்றைக்கு இருக்கும் ஆதரவை கணக்கிலெடுங்கள்

திமுக – 16

மதிமுக 4

பாமக 6

முஸ்லீம் லீக் 1

மொத்தம் 27

ஆதரவு தெரிவிக்கக்கூடியவர்கள்

இடதுசாரிக் கூட்டணியின் எண்ணிக்கை 59

பகுஜன் சமாஜ் கட்சி 19

ஜனதாதளம் (தேவகவுடா) 4

தெலுங்குதேசம் 5

அகாலிதளம் 8

லல்லுபிரசாத் யாதவ் 20

சமாஜ்வாதி (முலயாம் சிங் யாதவ்) 36

ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஜனதாதளம் 8

பரூக் அப்துல்லாவின் தேசிய கான்பரஸ் 2

சரத்பவார் கட்சியின் எண்ணிக்கை 9. சோனியா பிரதமராகக் கூடாது என்று விரும்பி வெளியேறிய காரணத்தால் அவர் கூட கருணாநிதி பிரதமராக ஆதரவு தெரிவிக்கலாம். திமுகவின் இந்தியக் கூட்டணி அரசில் பங்கும் பெறலாம்.

மொத்தம் 197

இந்தக் கூட்டணிக்கு காங்கிரஸோ அல்லது பாரதிய ஜனதாவோ வெளியிலிருந்து ஆதரவு தருவதாகக் கூறினால், 272க்கும் மேல் எளிதாக வந்துவிட்டது.

எப்போதாவது பாரதிய ஜனதாவோ அல்லது காங்கிரஸோ ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதாகத் தெரிவித்தால், உடனே அடுத்து காங்கிரஸையோ அல்லது பாரதிய ஜனதாவையோ அணுகி ஆதரவு பெற்று ஐந்து வருடத்தை எளிதாக முடித்துவிடலாம்.

தமிழர் பிரதமராக இது ஒன்றே இன்றைய இனிய வாய்ப்பு.

இன்றைக்கு இருக்கும் மூத்த தலைவர்களிலேயே மிகவும் அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற இரண்டு தலைவர்கள் சிறப்பானவர்கள். முதலாமர் கருணாநிதி. அடுத்தவர் ஜோதிபாசு. ஜோதிபாசு அரசியலிலிருந்து விலகி இருக்கின்றமையால், கருணாநிதியே சிறப்பான தகுதி பெற்றவர்.

கருணாநிதி அவர்கள் பிரதமராக தலைமைப்பொறுப்பேற்க வேண்டும். காமராஜர் காலத்திலிருந்து கை நழுவிப் போய்க்கொண்டிருக்கும் பிரதமர் பதவி இன்று தமிழருக்குக் கிடைக்க வேண்டும் .

எல்லா தமிழர்களும் உன்னிப்பாக இருந்து முனைந்து செயலாற்ற வேண்டிய காலம் இது. கட்சி மற்றும் இதர பிரச்னைகள் காரணமாக அவர்கள் முதுகு குத்துவார்களேயானால் அவர்களை காலம் மன்னிக்காது.

சோனியா காந்தியின் இந்திய அரசியல் பணிகள் என்ன என்று கணக்கிட்டால் ஒரே ஒரு வரியில் சொல்லிவிட முடியும் – மூழ்கிக் கொண்டிருந்த காங்கிரசைத் தூக்கி நிறுத்தியது. மற்றபடிக்கு எந்த நிர்வாக அனுபவமும் அவருக்கு இல்லை. நரசிம்ம ராவின் அமைச்சரவையில் ஒரு இணை அமைச்சராய்க் கூட அவர் பணியாற்றவில்லை. (ஆணவம் காரணமாக மற்றவருக்குக் கீழ் பணி புரிவதை அவர் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.) இந்திரா காந்தி தான் பிரதமராக ஆவதன்முன்பு அமைச்சராய்ப் பணி புரிந்ததை இங்கு நினைவு கூரலாம்.

அரசியலில் அவர் பெற்ற வெற்றி காந்தி பெயரின் காரணமாகவும், விதவை என்ற அனுதாபம் காரணமாகவும், பொதுவாகவே வெள்ளைத் தோலின் மீதுள்ள மக்கள் அபிமானத்தினாலும், இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் விதமான ஒப்பனையாலும் கிடைத்த வெற்றி என்பது மிகச் சுலபமாய் அறியக் கூடிய ஒன்று. ராப்ரி தேவிக்கு இருக்கும் நிர்வாக அனுபவம் கூட அவரிடம் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரிடம் பிரதமர் பதவி அளிக்கப் படத்தான் வேண்டுமா ?

இந்திய அரசியல் எதேச்சதிகாரமாக நடத்தப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று இன்னொரு இந்திராகாந்தி ஆட்சி செய்ய இயலாது. அது இன்னும் அழிவுக்கே வழிவகுக்கும். இன்று எல்லோரிடமும் அனுசரித்துச் செல்லும் பக்குவமும், அதனைக் கொடுத்திருக்கும் நீண்ட அரசியல் அனுபவமுமே இன்று தேவை. அதனைப் புரிந்து கொண்டதால்தான் கருணாநிதி போன்ற அணுகுமுறை கொண்ட வாஜ்பாய் இத்தனை வருடம் ஆட்சி செய்ய முடிந்தது. இந்த இரு ஆளுமைகளும் இணைந்து பணியாற்றவும் முடிந்தது.

கருணாநிதியின் நிர்வாகத் திறன் புகழ்பெற்ற ஒன்று. அவருடைய அரசியல் சாணக்கியமும் திட்டமிடலும் நிச்சயம் பாராட்டத்தக்கவை.

அவர் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்த கல்விப் பரவல், சாலைவழிப் பயணங்களைச் சிறப்புறச் செய்யும் விதமாய் தமிழகத்தைத் தூக்கி நிறுத்தியது, காமராஜின் மதிய உணவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தியது, கண்ணொளித்திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் , குடிசை மாற்று வாரியம், சமத்துவபுரங்கள் என சமூகநலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தியதும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் படித்த மத்தியதரவர்க்கம் எழுச்சி பெற்றதும், அரசியல் உணர்வு பெற்றதும் அவரால் தான் என்று சொன்னால் மிகையல்ல.

அவர் பிரதமர் ஆவது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெருமை. அது வெறும் இன்றைய பெருமை மட்டுமல்ல, அது எதிர்கால சிறப்பான சமூகநீதி கொண்ட இந்தியா உருவாவதற்கு வழியும் கூட.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்