ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பி.கே.சிவகுமார்


AIMSIndia இசைக் கச்சேரி:

அமெரிக்காவில் 1998-ல் நண்பர்களுடன் இணைந்து AIMSIndia என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கிய விஜய் ஆனந்தை நான் அறிவேன். என் நண்பர்கள் மூலம் நண்பரானவர். மேலும், இந்தியாவில் உள்ள நலிவுற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிற மக்களுக்கான திட்டங்கள் எதுவென்றாலும் விருப்பமுடன் முன்வந்து தன்னார்வப் பணிகள் செய்கிற நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க நிறுவனர் டாக்டர் சுந்தரம், நான் அதிகம் அறிந்திராவிட்டாலும் மதிக்கிற நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி போன்றோர் AIMSIndiaவில் இருப்பது AIMSIndia குறித்த நல்லெண்ணத்தை என்னிடம் ஏற்கனவே ஊன்றியிருந்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவில் சமூக சேவை செய்வதற்கு நிறைய திட்டமிடலும், ஒருங்கிணைப்பும், உழைப்பும், அலுப்பும் சலிப்பும் அண்டவிடாத உற்சாகமும் வேண்டும். ஆனால், AIMSIndia இந்த வருடங்களில் தன் இருப்பை உணர்த்துகிற நல்ல காரியங்களைச் செய்ததுடன் அல்லாமல், அமைப்பு ரீதியாக ஆரோக்கியமான அளவில் வளர்ந்தும் இருக்கிறது என்பதை அதன் இணையதளத்தைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். சில ஆண்டுகளாக AIMSIndia அது தொடங்கப்பட்ட வாஷிங்டன் டி.சி. – பால்டிமோர் பகுதியைவிட்டு விரிந்து பிற இடங்களிலும் கிளை பரப்பி வருவதையும் அறியலாம்.

AIMSIndiaவின் அழைப்பின்பேரில் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்த திரு.ப.சிதம்பரம் அவர்கள் நியூ ஜெர்ஸியில் உரையாற்றிய கூட்டமொன்றில் கலந்து கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. AIMSIndiaவை நடத்துபவர்கள் நண்பர்கள் என்றாலும், அவர்கள் செய்கிற காரியங்களை நேரிடையாக அறிந்திராததால் அது குறித்து எந்தவிதமான கருத்தும் கொண்டிராத எனக்கு, அந்தக் கூட்டம் AIMSIndiaவின் செயல்பாடுகளை ஆதரித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

திரு.சிதம்பரம் அந்தக் கூட்டத்தில் ஆற்றிய உரையானது அரசியல்வாதிகளிடையே நான் கேட்ட மிகவும் ஆரோக்கியமான, கருத்துச் செறிவுள்ள, எளிமையான ஆனால் அறிவுபூர்வமான உரையாகும். மக்களின் உணர்வுகளைத் தூண்டாமல் சிந்தனையைத் தூண்டுகிற இந்த மாதிரியான நடையையும் மொழியையும் அரசியல்வாதிகள் தேர்ந்தெடுத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தோன்றியது. சிதம்பரம் என்கிற அரசியல்வாதியைவிடவும் சிதம்பரம் என்கிற பண்பட்ட மனிதரையும், சிதம்பரம் என்கிற இலக்கிய ஆர்வலரையும், சிதம்பரம் என்கிற இந்தியத் தமிழ்க் குடிமகனையும் அறிந்து கொள்கிற வாய்ப்பாக நியூ ஜெர்ஸியில் AIMSIndia ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டம் அமைந்தது. அதற்கு அடுத்தபடியாக, திரு.M.S.உதயமூர்த்தியும் AIMSIndiaவின் அழைப்பின்பேரில் அமெரிக்காவுக்கு வந்தார். நியூ ஜெர்ஸியில் AIMSIndia ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் பேசினார். என்னால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திரு.வை.கோ.வைப் பேச வைத்து அழகு பார்க்கும் அமெரிக்கத் தமிழ் அமைப்புகளிடையே இப்படி பலதரப்பட்ட அறிவுஜீவிகளை அழைத்த AIMSIndiaவின் பன்முகத்தன்மையும் சமூக அக்கறையும் எனக்குப் பிடித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் என்ற கிராமத்தில் ஏழை மக்கள் பயனடையும் வகையில் மருத்துவமனை ஒன்றைக் கட்ட AIMSIndia திட்டமிட்டிருக்கிறது என்றும், அதற்கு நிதி திரட்டும் பொருட்டு ஜீலை 11, 2004 ஞாயிறு மாலை 4 மணிக்கு நியூ ஜெர்ஸியில் திரைப்படப் பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் லஷ்மண் – சுருதி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது என்றும் நண்பர்கள் மூலம் அறிந்தவுடனேயே அதில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்திருந்தேன். ஞாயிறு காலை நண்பர் விஜய் ஆனந்திடம் இருந்து தொலைபேசி. கலந்து கொள்ளச் சொல்லி நினைவூட்டி. கட்டாயம் வருகிறோம். மற்றவர்களை அழையுங்கள் என்று சொன்னேன்.

பொதுவாகவே, இங்கே எந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருந்தாலும், இணையதளம், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல், இப்படி தெரிந்தவர்களை எல்லாம் தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்லியே அழைக்க வேண்டியிருக்கிறது என்பது விழா நிர்வாகிகளுக்கு உள்ள சங்கடம் ஆகும். இல்லையென்றால் என்னதான் விளம்பரம் செய்தாலும் பல நேரங்களில் பலருக்கு விவரங்கள் தெரியாமல் போகிறது அல்லது தொலைபேசியில் தனிப்பட அழைத்தால் மட்டுமே வருவது பற்றி யோசிப்பவர்களும் இருக்கக் கூடும். எனவே, எந்த விழா நடத்துபவர்களூம் இந்த மாதிரியான working the phones என்கிற காரியத்தில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. இந்த மாதிரியான பிரயத்தனங்கள் செய்து நல்ல நிகழ்ச்சிக்குக் கூட நம் மக்களைக் கூட்டுகிற மாதிரி இல்லாமல் (அப்படியெல்லாம் செய்தும் பல நேரங்களில் கூட்டம் வருவதில்லை என்பது சோகம்), தமிழர்கள் அவர்களாகவே நல்ல நிகழ்ச்சிகளை அறிந்தவுடன் கலந்து கொள்ள முன்வருவது எந்நாளோ என்று தோன்றுகிறது. தொலைபேசியில் இப்படித் தெரிந்தவர்களை எல்லாம் கூப்பிட்டு அழைப்பது பொருள் மற்றும் கால விரயமும் ஆகும். எனவே, இதற்கு ஏதேனும் ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டும்.

லஷ்மண் சுருதி குழுவினருக்கு முந்தைய நாள் இரவு ஹூஸ்டன், டெக்ஸாஸில் கச்சேரி இருந்தது. பின்னர் நியூ ஜெர்ஸிக்கு வருவதில் விமானத் தாமதம். எனவே, நான்கு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி மாலை 5:10க்குத்தான் தொடங்கியது. விழா தொடங்கத் தாமதம் ஆனதும், வழக்கமாக இந்தியர்/தமிழர் நடத்தும் விழாக்களுக்கு பழகிப்போன தாமதமோ என்று நினைத்திருந்தேன். தொடக்கத்திலேயே, தாமதத்துக்கான காரணம் சொல்லி விழா அறிவிப்பாளர் (master of the ceremony) திருமதி.ராணி தேவராஜனிலிருந்து ஹரீஷ் ராகவேந்திரா, லஷ்மண் என்று பலரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். குறித்த காலத்தில் தொடங்க வேண்டும் என்கிற உள்ளுணர்வு இப்போது பலருக்கும் இங்கே வந்திருப்பதை இது காட்டுகிறது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மன்மத ராசா புகழ் மாலதி, தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாரதிதாசனின் பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். அடுத்ததாக ஹரீஷ் ராகவேந்திரா வந்தார். மகாகவி பாரதிக்குத் தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகவும், தன் வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி என்றும் சொன்னார். பாரதி படத்தில் இளையராஜா இசையில் தான் பாடிய நிற்பதுவே நடப்பதுவே பாடலே தன்னை உலகுக்குக் காட்டியதாகவும் சொன்னார். பின்னர், அந்தப் பாடலைப் பாடினார். அடுத்தபடியாக, மனோ வந்தார். பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் என்று யேசுதாஸ் ஐயப்பன் மீது பாடிய பாடலைப் பாடினார். நிகழ்ச்சி களை கட்டிச் செல்ல ஆரம்பித்தது. மனோ நிகழ்ச்சியின் போது இளையராஜா வாய்ப்பு அளித்ததாலேயே தான் இந்த அளவுக்கு வர முடிந்தது என்று இளையராஜாவுக்கு நன்றி சொன்னார். பொதுவாகவே, ஒருவர் இருக்கும்போது முகஸ்துதி செய்வது திரைப்படத் துறையில் பழகிப்போன ஒன்று. எனவே, அப்படி ஏதும் காரணங்கள் இல்லாமல், மகாகவி பாரதி பற்றியும், இளையராஜா பற்றியும் முறையே ஹரீஷ் ராகவேந்திரா மற்றும் மனோ அவர்கள் பாராட்டிச் சொன்னதைப் பார்க்கும்போது உள்ளத்து உணர்வுகளை உண்மையாகச் சொல்கிறார்கள் என்று தோன்றியது.

ஒலிபெருக்கி அமைப்புதான் இடையிடையே தொந்தரவு தந்த வண்ணம் இருந்தது. விழா அமைப்பாளர்கள் தங்களால் முடிந்த அளவு சரிப்படுத்தப் பார்த்தார்கள். இடைஞ்சல்களூக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இசை நிகழ்ச்சி நடைபெறுவதன் நோக்கம் சமூக சேவை என்பதால் இத்தகைய இடைஞ்சல்கள் குறித்து பார்வையாளர்கள் எவரும் பெரிதாகக் குற்றம் சொல்லவில்லை. ஆடத் தோன்றும் பாடல்கள் நிறைய பாடப்பட்டன. இளைஞர் குழாம் பாடி, ஓடி, குரலெழுப்பி மகிழ்ந்தவண்ணம் இருந்தது. ஆட்டோகிராப் படத்தில் வரும் ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ‘ என்ற பாட்டை அரங்கில் விளக்குகளை அணைத்துவிட்டுப் பாடினார்கள். பின்னர், கண்பார்வை இழந்தவர்கள் முழு இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், கொஞ்ச நேர இருட்டுக்கு நாம் அவஸ்தைப்படுகிறோம் என்பதையும் உணர்த்த அப்படிச் செய்ததாக லஷ்மண் தெரிவித்தார். கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும், இயல்பாகத் தெரிந்த அந்த நிகழ்வு பார்வையாளர்கள் லஷ்மண் சொன்னதை ஆமோதிக்க வைத்தது.

ஆண்டார்குளத்தில் மருத்துவமனை கட்ட 19,000 அமெரிக்க டாலர்கள் செலாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன் வேறு வழிகளில் 11,000 டாலர்கள் வசூலித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 750 பேர் அமரக் கூடிய அரங்கில் நடைபெற்றது. 375 பேர் வந்திருந்தார்கள். ஏறக்குறைய 9,000 அமெரிக்க டாலர்கள் வசூலாகியது. நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ஏறக்குறைய 8,000 டாலர்கள். நிகழ்ச்சியிலிருந்து ஏறக்குறைய 1,000 டாலர்கள் நிதியாகக் கிடைத்திருக்கிறது என்று AIMSIndia நியூஜெர்ஸி பிரிவின் பொறுப்பாளர்களுள் ஒருவரான சுப்பு என்னிடம் தெரிவித்தார். அமெரிக்காவில் நிதி திரட்டுகிற எந்த அமைப்பும் இப்படி தங்கள் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக அறிவிப்பது மக்களிடையே நம்பகத்தன்மையை வளர்க்க உதவும். அதேபோல, Tamil Nadu Foundation அது நடத்துகிற வருடாந்திர விழாக்களில் இப்படி மேடையிலேயே திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. எனவே, இந்த மாதிரியான முன்மாதிரிகளைப் பின்பற்றிப் பிற அமைப்புகளும் செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்குத் தமிழர்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளிப்பது, இன்னும் நிறைய நிதியைச் சேர்க்க உதவும். உதாரணமாக, இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு பேர் வந்தாலும் இந்த 8,000 டாலர்கள் செலவு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். ஆனால், நிறைய பேர் வந்திருக்கும்போது கையில் நிற்கிற நிதி சற்று அதிகமாகும். ஆனால், இங்கே நல்ல நிகழ்ச்சிகளுக்கு எதிர்பார்க்கிற கூட்டத்தை எப்படி வரவழைப்பது என்கிற மந்திரத்தை யாரும் சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. நியூ ஜெர்ஸியில் மிகக் குறைந்தது 2500 தமிழர்களாவது இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.

இடைவேளையில் நண்பர் அருண் வைத்யநாதன் பலகுரலில் பேசிப் பார்வையாளர்களை மகிழ்வித்தார். நேரமின்மையால் சற்று சுருக்கமாக முடித்துக் கொண்டதுபோல தோன்றினாலும், சரியான நேரத்தில் முத்தாய்ப்பு வைத்தார் என்று நான் நினைத்தேன். பார்வையாளர்கள் வெகுவாக ரசித்துக் கொண்டிருக்கும்போதே, நிறுத்திக் கொள்வது தேர்ந்த கலைஞர்கள் செய்வது. அதை நண்பர் அருண் அறிந்திருக்கிறார். இடைவேளையில் AIMSIndiaவின் செயற்பாடுகள் பற்றிய ஒரு விளக்கப்படம் காட்டப்பட்டது. AIMSIndiaவின் நியூ ஜெர்ஸி பொறுப்பாளர்கள் இருவரும் பேசினர். விழா அரங்கத்தை இரவு 8:30 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால் எட்டு மணியளவில் விழா நிறைவுற்றது.

இசைக்குழுவினரும் பாடகர்கள் அனைவரும், விமானத் தாமதத்தால் இப்படித் தாமதமாக ஆரம்பித்து எட்டு மணியளவில் முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று என்றும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்போது அதிக நேரம் செலவிடுகிறோம் என்றும் மீண்டும் வருத்தம் தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படுகிற நிகழ்ச்சிகளில் நான் எவ்வளவு நேரம் நடக்கிறது, எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஓர் இனிய மாலைப் பொழுதை நல்ல நோக்கத்துக்காகச் செலவிட்ட நிறைவே அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது எனக்கு இருந்தது. என்னைப் போலவே பிறரும் உணர்ந்திருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை நடத்திய AIMSIndia இயக்கத்தைச் சார்ந்த விஜய் ஆனந்த் குழுவினர், அதன் நியூ ஜெர்ஸி பிரிவைச் சார்ந்த சுப்பு, பார்த்தசாரதி, ராணி, பூர்ணா, அமுதா ஆறுமுகம், டாக்டர் சுந்தரம் (பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்) மற்றும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அயர்வுறாமல் தொடர்ந்து இத்தகைய சமூகப் பணிகளில் ஈடுபட இறையருள் கிடைக்கட்டும்.

**** **** ****

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

பி.கே.சிவகுமார்


Dick மொழி:

நாகரீகமற்ற அல்லது ஆபாசமான வார்த்தைகளை (மனித குறி சார்ந்த அல்லது புணர்ச்சி சார்ந்த வட்டார அல்லது எதிர்மறை வார்த்தைகளை அல்லது சுருக்கமாகச் சொன்னால் ‘பச்சை பச்சையாகப் பேசுவதை ‘) ‘கெட்ட வார்த்தைகள் ‘ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அப்படி சொல்லிக் கொடுக்கிற ஆனால் அதையே தேவை ஏற்படும்போது பயன்படுத்துகிற சமூகத்தால் வளர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இத்தகைய வார்த்தைகளை என்ன பெயரிட்டு அழைப்பது என்பது ஒரு கேள்விக் குறி. வார்த்தைகளில் என்ன புனிதம் இருக்கிறது. எல்லாமே வார்த்தைதானே. நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்றெல்லாம் ஏதும் உண்டா ? ஒரு வார்த்தை கெட்ட வார்த்தை என்றால் அதை அனுமதித்திருக்கிற மொழிக்கு அதில் பங்கில்லையா, மொழியின் ஒரு பகுதியும் அப்போது கெட்ட மொழியா என்றெல்லாம் எனக்கும் தீர்மானமான விடைகள் தெரியாத கேள்விகள் இருக்கின்றன. இத்தகைய வார்த்தைகளை வசைச் சொற்கள் என்று அழைப்பது எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனென்றால், ஒரு மொழியில் தரமான வசைச் சொற்களும், இப்படிப்பட்ட வார்த்தைகளின் வகைப்பாட்டுக்குள் வராத வசைச் சொற்களூம் இருக்கும். அதனாலேயே, எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட விதத்தில் இவற்றைக் ‘கெட்ட வார்த்தைகள் ‘ என்றே இப்போதைக்கு வசதிக்காக அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.

இவற்றை ஆங்கிலத்தில் Indecent words, Unparliamentary words, obscene words, vulgar words என்று பலபெயர்களில் அழைக்கிறார்கள்.. சென்னை பல்கலைக்கழகப் பேரகராதி Vulgar என்ற வார்த்தைக்கு இழிவழக்கு என்றும் ஒரு பொருள் சொல்கிறது. எனவே, இவ்வார்த்தைகளை இழிவழக்கு என்று அழைக்கலாமா என்றும் யோசிக்கலாம். புன்மொழி என்று இன்னொரு பெயரும் தோன்றுகிறது. வேர்ச்சொல் ஆராய்ச்சியும் மொழியியலும் என் cup of tea அல்ல. ஆனால், பயன்படுத்துகிற சொற்கள் பிறருக்கும் சுலபமாகப் புரிகிறவையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனாலும் இந்தக் கட்டுரையில் கெட்ட வார்த்தை என்ற சொல்லையே பிடித்துக் கொள்கிறேன்.

சில கெட்ட வார்த்தைகள் காலப்போக்கில் அவற்றின் பொருளையும் வீரியத்தையும் இழந்து விடுகின்றன. அவை பலரும் உபயோகிப்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களாகி விட்டனவா, அவற்றைக் குறித்த மதிப்பீடுகள் காலப்போக்கில் மாறிவருவதால் இது நிகழ்கிறதா, கலாசாரமும் நாகரீகமும் நவீனமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து புணர்வதால் ஏற்படுகிற பக்கவிளைவுகள் இதற்கு காரணமா, கெட்ட வார்த்தை என்று ஒதுக்கி வைக்கப்படுவதாலேயே மக்களுக்கு அதன்மீது வருகிற கவர்ச்சியினாலா, கோபம், இயலாமை, எரிச்சல், விரக்தி, வெறுப்பு, ஆவேசம், வக்கிரம் ஆகியவற்றை உடல்ரீதியான செயல்களால் (வன்முறை முதலியன) வெளிப்படுத்த இயலாத சூழல்/வெளிப்படுத்த விரும்பாமை இச்சொற்களுக்கான தேவைகளை உண்டாக்குகின்றனவா என்று ஓர் ஆராய்ச்சியாளர் இதற்கு மானுடவியல், உளவியல், மொழியியல் ரீதியாக பலமுகமாகக் காரணங்களைத் தேடக் கூடும். இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா தவறா என்ற விவாதத்தில் இறங்காமல், இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றும் சொல்லாமல் இவ்வார்த்தைகள் சமூகத்தில் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரை பேசப் போகிறது.

அடித்தள மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட இச்சொற்கள் அவர்களுக்கிடையே புழங்கும்போது கோபாவேசத்தின் கணநேர வெளிப்பாடாக வெளிப்பட்டுப் பின் அர்த்தம் இழந்து போகின்றன. தன் வீட்டுச் சோற்றைத் திருடி தின்றுவிட்டான் என்பதற்காக ‘தேவடியா பெத்த பயலே ‘ என்று மண்ணாங்கட்டிச் சிறுவனைத் திட்டுகிற மாரியாயி, அவன் தாய் இறந்துபோன பிறகு அவனுக்குச் சோறுபோட்டு அவனை ‘மவனே ‘ என்று உச்சிமோந்து அழுகிற ஜெயகாந்தனின் ‘ஒரு பிடி சோறு ‘ இதற்கு நல்ல உதாரணம். பாமாவின் ‘கருக்கு ‘வைப் படிக்கும்போது இத்தகைய பல வார்த்தைகள் வாழ்வில் எவ்வளவு யதார்த்தமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அறிய முயலும். அவற்றைப் படிக்கும்போது வாசகர்க்கு அருவருப்போ அவை ஆபாசம் என்கிற எண்ணமோ தோன்றுவதில்லை. கெட்ட வார்த்தைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து வாங்கித் தந்த எழுத்தாளர்களைப் பார்த்துவிட்டு, அவற்றைப் போட்டு எழுதினாலேயே யதார்த்தம் என்றும் இலக்கியம் என்றும் அந்தஸ்து வந்துவிடும் என்று முயன்றவர்களும் உண்டு. சினிமா இயக்குனர்களும் நடிகர்களும் சினிமாவையும் இதில் விட்டுவைக்கவில்லை. கல்லூரி மாணவர்களூக்கிடையே கூட ஆத்தா, அம்மா தொடர்பான பிரயோகங்களூம் இன்ன பிற வார்த்தைகளூம் நட்பின் அடிப்படையில் மிக சகஜமாகப் பயன்படுத்தப்படுவதை 80களின் பின்பகுதியிலும் 90களின் ஆரம்பங்களிலும் நான் மாணவனாக இருந்த காலத்திலேயே பார்த்திருக்கிறேன்.

எனவே, கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பது சரியா தவறா என்கிற பட்டிமன்றம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அச்சொற்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நிஜமாக இருக்கிறது. இத்தகைய சொற்களைப் பிறர் பேசக் கேட்டாலே காதைப் பொத்திக் கொள்கிற மேல்தரத்தினரும் அறிவுஜீவிகளும்கூட அவற்றை ரகசியமாகவோ மனதுக்குள்ளாகவோ வேறுவழியின்றியோ சில நேரங்களிலாவது பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகக் கூடும். அத்தகைய நேரங்களில் மற்றவர்கள் பேசுவதைத்தானே நாமும் பேசுகிறோம் என்ற சமாதானங்களை அவர்கள் தமக்குள் சொல்லிக் கொள்ளக் கூடும். சில நேரங்களில் இத்தகைய வார்த்தைகளைவிடப் பொருத்தமான இயல்பான பதில் இல்லை என்று சொல்லத்தக்க கணங்களும் வாழ்வில் ஏற்படுவதுண்டு. ஒரு குறிப்பிட்ட இனம் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும்போது சரியென்று நினைக்கிற வார்த்தைகளைப் பிறர் தம்மீது பயன்படுத்தும்போது கோபப்படுவதும் அவமானம் என்று உணர்வதும் உண்டு. எனவே, இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிற காரணம், சூழல், அவசியம், இவற்றுக்குப் பதில் பொருத்தமான வேறு என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம், எந்த சபையில் (தனிப்பட்ட பேச்சிலா, பொது சபையிலா மற்றும் who is the audience) பயன்படுத்தப்படுகிறது ஆகிய பல காரணிகளைக் கொண்டு இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியென்றும் சரியில்லை என்று அவரவர் தீர்மானிக்கலாம்.

அமெரிக்காவில் இத்தகைய வார்த்தைகளை மத நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள், ஜனநாயகக் கட்சியினர், குடியரசு கட்சியினர், வெள்ளைக் காலர் உத்தியோகம் பார்ப்பவர்கள், ப்ளூகாலர் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்று பெரும்பாலோர் சரளமாகவும் சகஜமாகவும் பயன்படுத்துகின்றனர். ‘One man ‘s vulgarity is another man ‘s lyric ‘ என்று சொல்லி 1971-ல் ‘F— the draft ‘ என்று டாஷர்ட்டில் எழுதிக் கொண்டு வந்தவர் மீது தொடரப்பட்ட வழக்கில், – பேச்சுரிமை வழங்குகிற முதல் சட்டத் திருத்தத்தை (First Amendment) அடிப்படையாகக் கொண்டு, – கலிபோர்னியா நீதிபதி குற்றம் சாட்டபட்டவரை விடுவித்தார். (First Amendment in US Constitution: Congress shall make no law respecting an establishment of religion, or prohibiting the free exercise thereof; or abridging the freedom of speech, or of the press; or the right of the people peaceably to assemble, and to petition the government for a redress of grievances. )

Federal Communications Commission என்ற அமைப்பு ஊடகங்களில் (பத்திரிகைகள், தொலைகாட்சிகள் முதலியன) ஆபாசமான வார்த்தைகளோ, காட்சிகளோ வராமல் நெறிப்படுத்துகிற காரியத்தையும் செய்கிறது. இந்த ஆண்டு அமெரிக்கக் கால்பந்து லீகான NFLன் இறுதி ஆட்டம் (Finals) நடந்தபோது இடைவேளையின் போது நடைபெற்ற ஜானட் ஜாக்சனின் (மைக்கேல் ஜாக்சனின் சகோதரி இவர்) ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் அவருடன் பாடியவர் அவர் மேலாக்கைப் பிடித்திழுக்கத் தவறுதலாக அது பிய்ந்துபோய் அவர் மார்பகம் வெளியே தெரிந்துவிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அது பற்றி பல கண்டனங்கள் சொல்லப்பட்டன. பின்னர் அந்நிகழ்ச்சியைத் தயாரித்தளித்த Viacom நிறுவனமும் ஒளிபரப்பிய CBS TVயும் மன்னிப்பு கேட்டுக் கொண்டன. அமெரிக்க காங்கிரஸில் இது குறித்த விவாதமும் விசாரணையும் நடைபெற்றன. இந்நிறுவனங்களூக்கு அபராதமும் விதிக்கப்பட்டன. அனைவரும் பார்க்கக் கூடியவை என்று வகைப்படுத்தப்பட்ட பொதுநிகழ்ச்சியில் இது நடைபெற்றது குழந்தைகளையும் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்ற வாதம் சரியாக இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே R rated சேனல்களும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. அவற்றில் இத்தகைய காட்சிகளூம் வார்த்தைகளும் சகஜமாக வருவதை அமெரிக்கர்கள் முகம் சுளிக்காமல் கண்டு களிக்கவே செய்கின்றனர். Late Night show, Jey Leno, David Letterman, Jerry Springer, Howard Stein போன்றவர்கள் நிகழ்ச்சியில் பட்டவர்த்தனமாகவோ மறைமுகமாகவோ இவை வெளிப்படுகின்றன. பணம் பண்ணுவதை நோக்கமாகக் கொண்ட சமுதாயத்தில் எவையும் நியாயப்படுத்தப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும், தொலைகாட்சி மற்றும் ஊடகங்களில் ஆபாசம் என்பது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதை அது உள்ளடக்கினாலும், தனிப்பட்ட தலைப்பாக ஆராயப்படக் கூடியது. வாழ்வின் ஒரு அங்கமாகக் கெட்ட வார்த்தைகள் இங்கே மாறிவிட்டதற்கு உதாரணமாகவே இந்த உதாரணங்களைத் தருகிறேன். மற்றபடிக்கு ‘ஊடகத்தில் ஆபாசம் ‘ என்ற பொருள் குறித்து பேசுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

நகைச்சுவையாகவும் ரசனையாகவும் கெட்ட வார்த்தைகளை ரசிப்பதோடு மட்டுமில்லாமல், தங்களின் கோபம், இயலாமை, விரக்தி, எரிச்சல் முதலான உணர்வுகளை வெளிப்படுத்தவும் அமெரிக்கர்கள் அத்தகைய வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். ரிச்சர்ட் கிளார்க் எழுதிய அகென்ய்ன்ஸ்ட் ஆல் எனிமிஸ் என்ற புத்தகத்திலே வருகிற உரையாடல்களிலிருந்து அமெரிக்க அரசாங்கத்தை நிர்வகிக்கிற பிற துறைகளின் தலைமைப் பதவியிலே இருக்கிற பலரும் F… you, F…. up என்பது மாதிரியான வார்த்தைகளை எவ்வளவு சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியலாம். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன்னாளில் டெக்ஸாஸ் மாநில கவர்னராக இருந்தபோது, எந்தச் சட்டத்தை நிறைவேற்றவும் ஜனநாயகக் கட்சியுடன் அடிக்கடி உறவாட வேண்டியிருந்தது. அந்த விதத்தில் அவருக்குப் பழக்கமான ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒருவர் ஒரு பிரச்னையில் ‘I am going to f… you on this ‘ என்று புஷ்ஷிடம் சொன்னார். அப்போது சிரித்தபடி ஜார்ஜ் புஷ் ‘You have to first kiss me for that ‘ என்று சொன்ன பதில் நினைவுகூரத் தக்கது. அமெரிக்க சாலைகளில் எரிச்சலைடைந்து போன வாகன ஓட்டுனர்கள் எரிச்சலூட்டிய ஓட்டுனரைப் பார்த்து கோபத்தில் நடுவிரலை உயர்த்திக் காட்டுவதும், F… you என்று கத்துவதும் சகஜம். பெண்களும்கூட இயல்பாக இதைச் செய்கிறார்கள்.

அலுவலகத்தில் என் மேலாளர் ஒருவர் கோபமும் இயலாமையும் வரும்போது ‘F…. him/her ‘ , ‘S…. up ‘ போன்ற வார்த்தைகளைப் பிறரைக் குறித்து சாதாரணமாகப் பெண் ஊழியர்கள் முன்னிலையிலும் பயன்படுத்துவார். சொல்லிவிட்டு ‘ஸாரி ‘ என்று அவர் ஒப்புக்காகச் சொல்லும்போது பெண்ஊழியர்கள் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதையும், ‘Not a problem ‘ என்று சிலநேரங்களில் சொல்வதையும் பார்த்திருக்கிறேன். ஒரு முறை ஒரு பெண் ஊழியர் தமாஷாக ‘என்னைச் சொல்லாதவரை எனக்குப் பிரச்னையில்லை ‘ என்றார் சிரித்தபடி. மேலாளர் இப்படி ஒவ்வொருமுறையும் சொல்லி முடித்தபின் ‘நான் இப்போது நிம்மதியாக உணர்கிறேன். என் மனத்திலிருந்து பாரத்தை இறக்கிவிட்ட உணர்வு வருகிறது ‘ என்றும் சொல்லிக் கொள்வார். உடலியல் ரீதியான வன்முறையில் இறங்காமல் இப்படி வார்த்தைகளுடன் நின்றுவிடுகிறார்களே என்று கலாசார சீரழிவுக்கும் நியாயம் தேட வேண்டிய நிஜம் இப்படி எல்லா இடங்களிலும் இங்கே இருக்கிறது. இத்தகைய லெட்-அவுட் செய்கிற முறையிருந்தும் அதையும் மீறி வன்முறையும் துப்பாக்கி கலாசாரமும் குற்றங்களும் இங்கே ஏன் அதிகமாயின என்பதும் ஆராயப்படக் கூடியது.

அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் சேனி (Dick Cheney) ஹாலிபர்ட்டன் என்கிற நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் (போர்டில்) முன்னர் இருந்தார். இராக்கை மறு கட்டுமானம் செய்கிற பணிகளுக்கான பல காண்ட்ராக்ட்கள் தன்னிச்சையாகவும், போட்டி நிறுவனங்களைப் பரிசீலிக்காமலும், ஹாலிபர்ட்டன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதுபற்றி ஜனநாயகக் கட்சியினரும், ஒரு சில பத்திரிகையாளர்களும் எழுப்பிய குரல்கள் ஒன்றையும் செய்ய இயலவில்லை. அதுபற்றி டிக் சேனியை கேள்வி கேட்டு கடுப்பேற்றியவர் வெர்மாண்ட் மாநிலத்தைச் சார்ந்த ஜனநாயகக் கட்சியின் செனட்டரான பேட்ரிக் லேஹி. சென்றவாரம் செனட் கூட்டத்தொடர் முடிந்து செனட்டர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள நின்று கொண்டிருந்தபோது, டிக் சேனி பேட்ரிக் லேஹியைப் பார்த்து கோபத்தில் சொல்லிய திருவாசகம் – F…. youself. பின்னர் டிக் சேனி இதைப் பற்றிப் பின்னர் பேசும்போது தான் பேட்ரிக் லேஹியைச் சபித்ததை ஒத்துக் கொண்டாலும், அப்படிச் செய்தபின் நிம்மதியாக உணர்ந்தேன் என்றும் பதில் சொன்னார்.

இத்தகைய வார்த்தைகளை வாழ்வின் ஓர் அங்கமாகப் பார்த்துப் பார்த்து பழகிப் போன அமெரிக்கர்களுக்கு டிக் சேனி இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆச்சரியம் தந்திருக்காது. பேட்ரிக் லேஹி இதற்கு என்ன பதில் சொன்னார் என்பதும் தெரியவில்லை. ஆனால், ஈராக் மீதான போர் பற்றிய கேள்விகளுக்கும், ஹாலிபர்ட்டன் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட கான்ட்ராக்டுகள் பற்றிய கேள்விகளுக்கும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கும் உலகத்துக்கும் அலட்சியமாகவும் ஆணவமாகவும் சொன்ன பதில் F… yourself என்பதை அறியாமல் பெரும்பாலான அமெரிக்கர்கள் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதைப் பார்த்தால்தான் ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது இது குறித்து அறிந்திருந்தும் ஒன்றும் செய்ய இயலாமல்/விரும்பாமல் இருக்கிறார்களா அல்லது வருகிற நவம்பர் முதல் வாரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா என்பதும் போகப்போகத் தெரியும்.

பி.கு.: ரிச்சர்ட் என்கிற பெயரை அமெரிக்கர்கள் சுருக்கி டிக் (Dick) என்று அழைக்கிறார்கள். டிக் (dick) என்கிற வார்த்தைக்கு அமெரிக்க பேச்சு வழக்கில் ஆண்குறி என்கிற பொருளும் உண்டு.

**** **** ****

திண்ணை களஞ்சியம் – இந்த வாரக் கவிதை:

ஜெயகாந்தன் ‘நண்பர்களின் மனைவிமார்கள் ‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் வருவது இது. ஜெயகாந்தனின் தெருவில் குடியிருக்கிற அவர் நண்பர் ஒருவர் ஷாப்பிங் செண்டரும் பூங்காவும் உருவாக்க வரைபடத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில், குடிசை மாற்று வாரியத்தால் பலமாடிக் கட்டிடங்கள் கட்டப்படுவதை எதிர்த்துத் தயாரிக்கப்பட்ட மனுவில் ஜெயகாந்தனிடம் கையெழுத்து வாங்க வருகிறார். ‘வரைபடமும் வாக்குறுதியும் இருக்கட்டும். குடிசையில் வாழ்கிற மக்களுக்கு வீடுகட்டித் தருகிற காரியத்த்தை நாம் தடுக்கவும் முடியாது; தடுக்கவும் கூடாது ‘ என்று சொல்லி ஜெயகாந்தன் கையெழுத்திட மறுத்து விடுகிறார். ஜெயகாந்தனை அறிந்தவர்களுக்கு அவரின் இந்தச் செய்கை ஆச்சரியம் தராது. முக்கியமான விஷயம் இங்கே வருகிறது. ஜெயகாந்தன் பதிலைக் கேட்ட நண்பர் அட்டகாசமாகச் சிரித்தபடி பிரகடனம் செய்தார். ‘என் மனைவி அப்போதே சொன்னாள். அவர் எப்போதும் குடிசைவாழ் மக்களின் சார்பாகத்தான் நிற்பார். நீங்கள் கையெழுத்து வாங்கப் போய் ஏமாறப் போகிறீர்கள் ‘ என்று. அப்போது ஜெயகாந்தன் நினைத்துக் கொண்டாராம். ‘என் நண்பர்களை விடவும் அவர்களால் முகமறியாமல் அறிமுகம் செய்யப்படுகிற என்னை அந்த நண்பர்களின் மனைவிமார்கள் சிறப்பாகப் புரிந்து கொள்வார்கள் ‘ என்று.

ஏறக்குறைய 1988 வாக்கில் நான் படித்த இந்தக் கட்டுரை என் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. இந்தக் கட்டுரை என் மனத்தில் ஆழப் பதிந்துவிட என்ன காரணம் இருக்க முடியும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். நம்முடன் பழகியவர்கள், நம்மை நன்றாக அறிந்தவர்கள் என்று நாம் நம்புபவர்கள்கூட நம்மைப் புரிந்து கொள்ளாமல் போகிற வாய்ப்புகள் நிறைய இருக்கிற சகஜத்தை இந்தக் கட்டுரை காட்சியுடன் விவரிக்கிறது. புரிந்து கொள்ளாமல் போவதைவிடவும் நாம் சொல்வதால் அவர்கள் காயமடைந்துவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதையும் இது காட்டுகிறது. அது மட்டுமில்லை, நம்மை நேரடியாக அறிந்திராதவர்களில் சிலர் கூட நம்மை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கலாம் என்கிற நிஜத்தையும் சொல்கிறது. நம்மை அறிந்திராமல் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பவர்களை விடவும், நம்மை அறிந்தபின் நம்மைப் புரிந்து கொள்ளாமல் காயப்பட்டுப் போகிறவர்கள் அதிகம் என்பதையும் உணர முடிந்தது.

எனவே, வாழ்வின் முக்கியப் பிரச்சினை இதுதான். நாம் அன்பு செலுத்துபவர்கள்கூட நம்மைப் புரிந்து கொள்ளாமல் போகிற வாய்ப்பிருக்கிற உலகத்திலே, நம் உணர்வுகளைக், கருத்துகளை அவர்களிடம் எப்படித் தெரிவிப்பது. ஜெயகாந்தனுக்கு இந்தச் சங்கடம் எல்லாம் இல்லை. அன்பின் பொருட்டு கூட கருத்துகள் சொல்லாமல் அவரை இருக்கச் செய்ய முடியாது. போற்றுவார் போற்றினும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றினும், தன் சுதர்மத்துக்குச் சரியென்று படுவதைச் சொல்லிவிட்டுப் போய்விடுபவர் அவர். இந்த விஷயத்தில் அவரைப் போல இருப்பவர்கள் உண்டு. ஆனால், எல்லாராலும் அப்படி இருக்க முடியாது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக, இணையத்திலே எழுதுகிறவர்களில் சிலரைப் பார்த்தீர்களேயானால் எல்லா மடல்களிலும் பின்வரும் பொருள் வரும்படி எழுதியிருப்பார்கள். ‘நான் ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் ‘ அல்லது ‘என் கருத்துகளின் பிழைக்கு பெரியவர்கள் மன்னிக்கவும். பெரியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். அவர்கள் தலையில் குட்டி சொல்லித் தந்தால் மாணவனாக/மாணவியாக என்றும் ஏற்றுக் கொள்வேன் ‘. எல்லார்க்கும் கருத்துகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. எனவே, இக்கூத்துகளைப் படிக்கும்போது, தன் கருத்தைச் சொல்வதில்கூட பிறரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எனக்குப் பிறக்கும். அப்படியே தவறு செய்தாலோ, பிடிக்காதது எழுதினாலோ இதமாக எடுத்துச் சொல்லப்பட்டோ அல்லது கருத்து வேறுபாடு என்ற ஆரோக்கியத்துடனோ விஷயம் எடுத்துக் கொள்ளப்படும் என்கிற நம்பிக்கையோ அவர்களுக்கு இல்லாத சூழல் நிலவுகிறது என்றும் அவர்கள் நினைக்கக் கூடுமோ என்று சொல்லிக் கொள்வேன். இதற்கு அடிப்படைக் காரணம், யார் என்ன தவறு செய்கிறார்கள் என்று காத்திருந்து பார்த்து அவர்கள் மீது பாய்ந்து பிராண்ட யாரும் இருப்பதாக அவர்கள் நினைக்கலாம் அல்லது அப்படி இருப்பவர்களை அவர்கள் அறிந்திருக்கலாம். மேலும், இந்த மன்னிப்பு கோருகிற அல்லது பொறுத்துக் கொள்ளச் சொல்லக் கோருகிற விஷயம் திரும்பத் திரும்பச் செய்யப்படும்போது அது நிஜமான உணர்வுடன் செய்யப்பட்டாலும் படிப்பவர்க்கு அலுப்பூட்டி பாசாங்கு மாதிரி தெரிந்து விடுகிறது. ஆனாலும், ‘நலம். நலமறிய ஆவல் ‘ ஆகிய மடல்களைக் கூட – பிழையிருந்தால் மன்னிக்கவும் என்கிற முன்னுரையுடனோ பின்னுரையுடனோ எழுதுபவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைவிடவும், தம்முடைய எழுத்து புரிந்து கொள்ளாமல் போகிற வாய்ப்பு இருக்கிற நிதர்சனத்தை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதற்காகவாவது அப்படி எழுதுபவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது; பொறுத்துக் கொள்ளவும் முடிகிறது.

நான் பணிபுரிந்த இடத்தில் மேலாளர் ஒருவர் அலுவல் தொடர்பாக யார் எந்த மின்மடல் எழுதினாலும் Politically Correct ஆக எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதன் பொருள் மற்றவர்கள் மீதுள்ள அன்பு அல்ல. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது. இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, பிழையிருப்பின் மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் கருத்துகளை முன்வைப்பவர்கள் பிறர் மீதுள்ள பரிவினால் அவ்வாறு செய்கிறார்கள் என்பதைவிட தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கும் அப்படிச் செய்கிறார்கள் என்றும் சொல்லலாம். காலப்போக்கில் அவர்கள் இதன்மூலம் தங்கள் தனித்தன்மையை இழந்துவிடக் கூடிய அபாயமிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. அல்லது, இதையே அவர்கள் தங்கள் தனித்தன்மை என்று நினைக்கிறார்கள் என்றால் என்னிடம் அதற்கு பதில் இல்லை. வாழ்த்துகள் மட்டும் உண்டு. ஆனால், இதற்கு அவர்களைக் குறை சொல்வது சரியில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில், வாழ்வில் பெரிய பிரச்னை எதிரிகளுக்குப் பதில் சொல்வது இல்லை. சுற்றத்திடமும் நட்பிடமும்கூட எப்படி உறவாடுவது என்பதே. மற்றவர் மனம் கோணாமலும் சொல்ல வேண்டும் தன் கருத்தையும் சொல்ல வேண்டும் என்பது மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்படுவது மாதிரிதான். இதனாலேயே பல நேரங்களில் நாம் மவுனமாகவும் அல்லது வார்த்தைகளின் வீரியத்தையோ கருத்தின் வீரியத்தையோ குறைத்துப் பேசியும் சமரசம் செய்து கொள்கிறோம். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நம்புவதைத் தைரியமாகச் சொல்லிவிட்டுப் போகிறவர்கள் சொற்பமாக இருந்தாலும் அந்தக் குணத்துக்காகப் பாராட்டத்தக்கவர்கள். அவர்களும்கூட எல்லா நேரங்களிலும் அப்படி இருப்பதில்லை என்கிற புள்ளிவிவரத்துடன் யாரும் வரக்கூடும்.

ஆனால், இதையெல்லாம் மீறி, நாம் நினைக்கிற கருத்தை நாம் நினைக்கிற விதமாக அதே நேரத்தில் நாம் நம்முடைய கருத்தைச் சொல்கிறோம் என்று மற்றவர் நினைக்கிற அளவுக்கு இதமாக எடுத்துச் சொல்கிற ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. இது முடியாத காரியம்தான். ஏனெனில், மெத்தப் படித்த சான்றோரும் சாதனைகள் புரிந்த கலைஞர்களில் பலருமேகூட விமர்சனங்களையும் கருத்துகளையும் தனிப்பட்டவிதமாக எடுத்துக் கொண்டு சுருங்கிப் போகிற அல்லது எதிர்வினை புரிகிற சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் சுற்றத்திடமும் நட்பிடமும் அன்பு என்கிற பெயரிலும் நட்பு என்கிற பெயரிலும் நாம் மாட்டிக் கொள்கிற விலங்குகள் சொல்ல விரும்புவதைச் சொல்லவிடாமல் செய்துவிடுகின்றன. அதையும் மீறி நாசூக்காகக் கோடிகாட்ட இயலுமென்றால், அந்த நாசூக்கு புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்யப்படுகிற வாய்ப்பு இருக்கிறது. நம் கருத்துகளை நாம் அன்பு செலுத்துவோர் உட்பட நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளாதபடிக்கு எடுத்துச் சொல்வது எப்படி என்கிற கேள்வியை எழுப்புவதன் மூலம், அப்படி எடுத்துச் சொல்கிற சாத்தியங்கள் குறைந்துபோன வாழ்க்கையை நாம் கைகொண்டிருக்கிறோம் என்பதை அடித்துச் சொல்கிறது இந்தப் பக்கத்தில் உள்ள ஜெயந்தனின் மூன்றாவது கவிதை. அது மட்டுமில்லாமல், இதமாக எப்படிப் பேசுவது என்கிற தலைப்பினூடே இந்தக் கவிதை மனைவி, மகன், நண்பன், தியாகி உள்ளிட்டோர் பற்றிய விமர்சனங்களையே முக்கியமாக முன்வைக்கிறது. ஒன்றைப் பேசுவதுபோல இன்னொன்றைச் சுட்டுவது உதவக்கூடும் என்கிற பதிலையும் இக்கவிதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

இதமாய்

பதமாய்

எப்படிச் சொல்வது ?

நம் வாழ்க்கை இதற்கு மேலும்

சுலபமாய் இருக்க முடியுமென்று

எப்படி நினைக்கிறாய் நீயென்று

மனைவியுடமும்..

இந்த வாழ்க்கை இவ்வளவு சுலபமாய்

கழிந்தால் போதும்

கழியுமென்று

எப்படி நினைக்கிறான் இவனென்று

பிள்ளையிடமும்..

ஏழில் தனக்கு ஊட்டப் பட்டதை

அப்படியே அப்படியே

எழுபதில் பிறன் மேல்

வாந்தி எடுக்கும்

மத போதகன் மாதிரி

முப்பதாண்டு காலம்

மறு பரிசீலனை இல்லாத

உனது தத்துவத்தை

எப்படிச் சுமக்கிறாய் நீயென

நண்பனிடமும்…

சுதந்திரம் சமத்துவம்

அன்பு அகிம்ஸை

பாசம் பாவமன்னிப்பு

ஒரு குடும்பம் ஒரே ரத்தம்

என்று என்று….

ஓட்டு வாங்கி எஜமானர்களிடம்

ஆட்சி வாங்கிய

ஜன நாயகத் தலைவனே

பாஸிஸ்ட் ஆக முடியுமென்றால்,

(உனது கணக்குப் படியே)

வரும் போது வெட்டும் குத்தும்

கொலையும் ரத்தத் தெறிப்பும்,

நண்பன் நல்லாசிரியன்

சோதரன் சொந்தப்படை வீரன்,

யாராயிருந்தாலும் யாராயிருந்தாலும்

ஏ கே நாற்பத்தேழு பொரிகளை

அள்ளித் தெளிக்கும் நீ,

நாளை என் சந்ததிக்கு

முத்தம் மட்டும் கொடுப்பாய் என்பது

என்ன நிச்சயம் என்று

ஆயுதம் தாங்கிய தியாகியிடமும்…

இதமாய்

பதமாய்

ஏற்கும்படி

எப்படிச் சொல்வது ?

எப்படிச் சொல்வது ?

– ஜெயந்தன்

**** **** ****

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பி.கே.சிவகுமார்


கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ?

கறை படிந்த அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தன. ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடையதாகக் கருதப்பட்டு நீதிமன்றங்களில் தம் பேரில் வழக்குகள் நிலுவையில் உள்ள அமைச்சர்களைக் கறை படிந்த அமைச்சர்கள் என்று பொதுவாக வரையறுக்கலாம். எந்தக் கட்சிக்கும் இன்னொரு கட்சியை இவ்விஷயத்தில் குறை சொல்கிற அருகதை இல்லை. பொதுவாகப் பார்க்கும்போது இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சிகளில் பொதுவாழ்வில் நேர்மையானவர்கள் அதிகமாகவும், பிற கட்சிகளில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலும் இருக்கிறார்கள். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த பலர் மீது இப்படி வழக்குகள் நிலுவையில் இருந்த போதும் அவ்வழக்குகளில் தொடர்புடையவர்கள் அரசாங்க பதவி வகித்தவர்கள்தான் என்பது ஊரறிந்த ரகசியம். முக்கியமாக, பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய அத்வானி போன்றவர்களும், குஜராத் கலவரங்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி அதன் முடிவுகள் வரும்வரை, அக்கலவரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய, மைனாரிட்டிகளுக்கெதிரான கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்த என்று குற்றம் சாட்டப்படும் நரேந்திர மோடியும் பதவி வகிக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிற அறச்சீற்றம் பா.ஜ.க.வுக்கு வராமல் போனது நாம் பார்த்த விஷயமே. அப்போது வாஜ்பாயிலிருந்து பா.ஜ.க.வின் எல்லாப் பரிவாரங்களும் அத்வானி, மோடிக்கு எதிராக எதுவும் பேசவில்லை. எனவே, இப்போது பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இப்படிக் கூக்குரலிடுவது நல்ல தமாஷாக இருக்கிறது. அதேபோல, காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அப்போது கூச்சலிட்டுவிட்டு இப்போது அதே காரியத்தைச் செய்திருக்கின்றன.

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடனே அதை எதிர்ப்பதற்குக் கிடைத்த ஆயுதமாகவே இப்பிரச்னையை பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பயன்படுத்துகின்றன என்பது வெளிப்படை. அந்தக் காலத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றவுடன், அதற்கு கொஞ்ச காலம் கொடுத்தபின்னர், அதன் குறைகளை விமர்சிக்கிற முதிர்ச்சி அந்தக் கால அரசியல் தலைவர்களுக்கு இருந்தது. அதை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்து ஜெண்டில்மேன் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு ஆனால் தன் சொந்தக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தெரியாத முன்னாள் பிரதமர் திருமிகு.வாஜ்பாய் போன்றவர்கள் தங்கள் கட்சிக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும், கறை படிந்தவர்கள் அமைச்சர் பதவிகளை வகிக்கலாமா என்கிற கேள்வி பொதுமக்கள் எழுப்பக்கூடிய தார்மீகக் கேள்வியே.

இந்தப் பிரச்னையை எப்படி அணுகலாம் ? தார்மீக ரீதியாக ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவ்வழக்குகள் தீர்ப்பாகும்வரை அரசாங்க பதவி வகிக்கக் கூடாது என்று சொல்வது நிஜத்துக்கு உதவாது. எல்லாக் கட்சிகளும் இந்தத் தார்மீகத்தை அடுத்த கட்சி பின்பற்ற வேண்டும் என்று போராடும். தனக்கென்று வரும்போது வாயடைத்த ஊமையாகி, தான் விரும்பியதைச் செய்யும். அரசியல் கட்சிகளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. பொதுமக்களில் கணிசமானோர் மனப்பான்மையே அப்படித்தான் இருக்கிறது. எனவே, தார்மீக ரீதியாகவோ விழுமியங்கள் வழியாகவோ இதை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று போராடுவது சரியாக இருக்காது.

ஆனால், ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவ்வழக்குகள் தீர்ப்பாகித் தாங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை அரசாங்கப் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தலாம். அப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் கொண்டு வரலாம். இதில் பிரச்னை என்னவென்றால், முதலில் இப்படிப்பட்டவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வகை செய்ய வேண்டும். இப்போது நடப்பது என்னவென்றால், இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு வசதியான தொகுதிகளில் போட்டியிட்டு வென்று விடுகிறார்கள். அவர்கள் வென்ற பின்னே, அவர்கள் மந்திரியாகக் கூடாது என்று சொல்வது ஹிப்போகிரஸி. அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதே தடை செய்யப்பட வேண்டும். எனவே, எவர் தேர்தலில் நிற்கலாம் என்கிற விதிகள் கடுமையாக்கப்பட்டு அங்கேயே ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் தடுக்கப்பட்டால் இந்தப் பிரச்சினையை சரி செய்ய முடியும் என்று தோன்றுகிறது.

இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்பட்டால், பழிவாங்கும் நடவடிக்கையாகவும், எதிர்கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்கிற நினைப்புடனும் ஆளும் கட்சி பிடிக்காதவர்கள் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்து அவர்களைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்துவிட்டால் என்ன செய்வது என்பது நல்ல கேள்வி. ஆனால், சட்ட வல்லுனர்கள் இந்த மாதிரியான ஓட்டைகள் இப்படிப்பட்ட சட்டத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், அப்படி யாரும் பாதிக்கப்படுவதாக நினைக்கப்பட்டால் விரைவில் நிவாரணம் காண வழி செய்யும் வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, முதல் தகவல் அறிக்கை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். பின்னர், ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் அவ்வழக்கில் முகாந்திரம் இருக்கிறது இல்லை என்று சொல்ல வேண்டும். வழக்கில் தொடர்புடையவர் தேர்தலில் நின்றால் அவ்வழக்கின் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். தேர்தல் ஆணையமும் விவரங்களையும் ஆவணங்களையும் ஆராய்ந்து தொடர்புடையவர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லலாம். நான் சட்ட நிபுணன் இல்லை. ஆனால், எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் ஆனபின்னே ஒருவரை நீ மந்திரியாகக் கூடாது என்று சொல்வதை விட, நீ எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தேர்தலிலேயே நிற்க முடியாது என்று சொல்வது சரியான வழி என்று நம்புகிறேன். மேலும் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. அது இவ்விஷயத்தில் எழுகிற கேள்விகளையும் பிரச்னைகளையும் ஓரளவுக்கு (தன்னாட்சியுடன் இயங்குகிற அமைப்பைக் கூட ஓரளவுக்கு என்ற அடைமொழியுடனேயே எழுத வேண்டியிருக்கிற துரதிர்ஷ்டத்துக்கு மன்னிக்கவும்) நேர்மையுடன் அணுகித் தீர்ப்பளிக்கும் என்று நம்பலாம்.

இந்த விஷயத்தில் எழுகிற இன்னொரு கேள்வி. ஒருவர் எம்.பி அல்லது எம்.எல்.ஏ ஆனபின்னர் அல்லது அமைச்சராக இருக்கும்போது இத்தகைய புகார்களில் சிக்கிக் கொண்டால் என்ன செய்யலாம் என்பது. அந்த நேரங்களில் அத்தகைய புகார்களை ஆராய்ந்து அவர்கள் பதவியில் நீடிக்கலாமா வேண்டாமா என்று சொல்கிற அதிகாரம் எம்.பி. என்றால் குடியரசுத் தலைவரிடமும் எம்.எல்.ஏ./எம்.எல்.சி என்றால் மாநில ஆளுநரிடமும் இருக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் கட்சிகளின் ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சொல்லி ஆளுநர் அளிக்கிற தீர்ப்பில் நம்பிக்கை இல்லையென்று யாரேனும் நினைத்தால் குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்கிற வழிமுறை இருக்க வேண்டும். ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீதான பதிலை கிடப்பிலே போட்டு வைத்திருந்த ஆளுநர்(கள்) மாதிரி இல்லாமல், இந்த மாதிரியான பிரச்னைகளில் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் ஒரு மாதத்துக்குள் தங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கொண்டு வரலாம்.

இவ்விஷயத்தில் சரியான சட்டமும் நடைமுறையும் கொண்டுவர ஆழ்ந்த விவாதம் தேவை. அதன் பொருட்டே என் கருத்துகளைச் சொல்லியுள்ளேன். இவற்றை ஒட்டியும், வெட்டியும், மேற்கொண்டு பதப்படுத்தியும் தொடர்ந்து உரையாடல்கள் நடைபெறுமானால் கறை படிந்தவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் செயல்படுத்திப் பார்க்க இயலலாம்.

**** **** ****

ரொனால்டு ரீகனும் அவர் ஆக்சிஜன் கொடுத்த குடியரசு கட்சியும்

வாட்டர் கேட் ஊழல் காரணமாக நிக்சன் அமெரிக்க ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தபோது அமெரிக்காவில் குடியரசு கட்சியை ஆதரிப்பவர்கள் 20 சதவீதமாகக் குறைந்து போனது. குடியரசு கட்சி பிழைத்து எழுந்து வருமா என்ற நிலை இருந்தது. நிக்சனுக்குப் பதில் வந்த போர்டும் நிக்சனுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வழங்கி பொதுமக்களின் எரிச்சலையும் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் போர்டை சுலபமாகத் தோற்கடித்து ஜனாதிபதியாக அது உதவியது. ஜனநாயகக் கட்சியின் குறையாக எனக்குக் கடந்த காலங்களில் தெரிந்து வருவது, அது தனக்குச் சாதகமான சூழ்நிலைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதே. உதாரணமாக, மரணப் படுக்கையில் இருந்த குடியரசு கட்சியை மீண்டும் எழவிடாமல் பார்த்து கொண்டிருந்தாலே போதும். வேறு ஒன்று விசேடமாக செய்ய வேண்டியதில்லை. ஆனால், ஈரான் பிணைக் கைதிகள் விவகாரத்தில் ஜிம்மி கார்ட்டர் தன் பெயரோடு தன் கட்சியின் பெயரையும் கெடுத்துக் கொண்டார். ‘கடந்த நான்கு வருடங்களில் உங்கள் வாழ்க்கை மேம்பட்டதா ? ‘ என்பது போன்ற கவர்ச்சிகரமான எளிய கோஷங்களுடன் ரீகன் 1980ல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

ரீகனின் கடந்த கால வரலாறை அறிந்தவர்கள் அவர் எளிமையான ஆனால் கவர்ச்சிகரமான கோஷங்கள் மூலம் மக்களை கவர்பவர் என்று உணர்வார்கள். அவரை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவார்கள். அந்த ஒப்பீடு ஓரளவுக்குச் சரியானது என்றே தோன்றுகிறது. தனக்குப் பிடிக்காதவர்களைக் கூட கவர்கிற தனிமனித குணங்களும் அம்சங்களும் நிறைந்த இனிமையானவர்களாக எம்.ஜி.ஆரும் ரீகனும் இருந்தார்கள் என்று சொல்லலாம். எம்.ஜி.ஆரைப் போலவே எளிமையான குடும்பத்தில் பிறந்து உயர்ந்தவர் ரீகன். ரீகனின் தந்தை காலணிகள் விற்கிற தொழிலில் ஈடுபட்டிருந்தவர். குடித்தே இறந்து போனவர். கருக்கலைப்பை எதிர்க்கிற கட்சியைச் சார்ந்தவரயினும் அந்த எதிர்ப்பை உதட்டளவில் சொல்பவராக மட்டுமே ரீகன் இருந்தார் என்கிறார்கள். அப்படியே, சர்ச், வழிபாடு ஆகிய விஷயங்களில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாரம்தோறும் சர்ச்சுக்குச் செல்பவர் அல்லர் என்றும் சொல்கிறார்கள். இவை குடியரசு கட்சியில் சிலருக்கு மிதவாதமாகத் தோன்றினாலும், பல முக்கிய பிரச்னைகளில் ரீகன் பழமைவாதியாகவே (Conservative) இருந்தார் என்பது நிஜம். தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியில் அவர் இருந்தது அவருடைய மிதவாதப் போக்கிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் 1962ல் அவர் குடியரசு கட்சிக்கு மாறியவுடன் அதன் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக ஆகிப் போனார். தொழிற்சங்கவாதியாக ஆரம்பத்தில் இருந்தபோதும், தொழிற்சங்க வாதிகள் மீது – அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கக் கூடும் என்பதால் – அவர் கொண்ட வெறுப்பினால் அவர் குடியரசு கட்சிக்குச் சென்றார். கடைசிவரை கம்யூனிஸ்டுகள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் அவருக்கு இருந்த வெறுப்பை சோவியத் யூனியனை Evil Empire என்று அவர் அழைத்ததிலிருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் ஹாலிவுட்டில் படங்கள் இல்லாமல் இருந்தபோது அவருக்கு வாழ்க்கை கொடுத்தது ஜெனரல் எலக்ட்ரிக் தியேட்டர். ஜெனரல் எலக்ட்ரிக் என்னும் நிறுவனத்துடன் அவர் கொண்ட இந்த உறவு அவரை முதலாளித்துவ பாதைக்குத் திருப்பியது எனலாம். பின்னர் அவர் குடியரசு கட்சியில் சேர்ந்தது இயல்பான நிகழ்வாகி விட்டது.

திரைப்படத்துறை சார்ந்த தொழிலாளர் சங்கங்களில் கம்யூனிஸ்ட்டுகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் பற்றி எப்.பி.ஐ.க்கு தகவர் சொல்கிற இன்பார்மர் வேலை செய்தவர் ரீகன். கலிபோர்னியாவின் ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டபோது, கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்க்லி பல்கலைக் கழகத்தின் ப்ரீ ஸ்பீச் மூவ்மெண்டை எதிர்த்து அங்கிருக்கிற அசுத்தத்தைச் சுத்தம் செய்யப் போவதாக அறிவித்தவர் ரீகன். கலிபோர்னியாவின் கவர்னராக இருந்தபோது பெர்க்லி பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் எதிர்ப்பை நேஷனல் கார்ட்ஸ் என்று சொல்லப்படுகிற துணைநிலை ராணுவம் கொண்டு அடக்கிய புகழ் பெற்றவர்.

குடியரசு கட்சிக்கு புத்துயிர் அளித்தவர் ரீகனே. முக்கியமாக, அவர் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைந்தன. அதற்கெதிராக ஆப்கன் கொரில்லாப் படைகளுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஆரம்பித்தது இவர் காலத்தில்தான். இப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை உலக கருத்துகளுக்கெதிராக தன்னிச்சையாக போர் தொடுக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ரொனால்டு ரீகன் காலத்தில் அமெரிக்கப் பிணை கைதிகளை விடுவிக்கிறேன் என்று அமெரிக்க காங்கிரஸூக்குக் கூட தெரியாமல் ஈரான் மூலமாக நிகராகுவா வலதுசாரி கொரில்லாக்களுக்குப் நிதியுதவி செய்த ஈரான்-கான்ட்ரா விஷயம் நடைபெற்றது. எனவே, ஜார்ஜ் புஷ்ஷாவது தன் நாட்டு மக்களுக்குச் சொல்லிவிட்டு ஈராக் மேல் படையெடுத்தார். ஆனால் ரீகன் தன் நாட்டு காங்கிரஸூக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் செயல்படுகிற துணிச்சல் மிக்கவர்களைத் தன்னருகில் வைத்திருந்தார். அவ்விஷயம் வெளியில் வந்தபோது இது தனக்குத் தெரியவே தெரியாது என்று ரீகன் சொல்லிவிட, மற்றவர்கள் பலிகடாக்களாக்கப் பட்டார்கள். இப்போது சில நாள்களுக்கு முன்னர் சி.ஐ.ஏ. டைரக்டர் ஜார்ஜ் டெனட் ராஜினாமா செய்தது போல. ஹாரி ட்ரூமேன் சொல்லியது எனப்படும் புகழ்பெற்ற வசனம் ஒன்றுண்டு. அது – The buck stops here. அதன் பொருள் ஜனாதிபதி தன் அரசாங்கத்தின் செயல்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்பது. ஆனால், ரீகன் ஈரான் – கான்ட்ரா பிரச்னையில் தாமதமாக சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று ஒத்துக் கொண்ட போதும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அதேபோல இப்போது ஈராக் மீதான போர், ஈராக் சிறைச்சாலைகளில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து ஜார்ஜ் புஷ் பேசி வருகிறார். ரீகன் காலத்திலாவது அவர் கேபினட்டில் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பதவி விலகினர். இங்கே ஜார்ஜ் புஷ் ரம்ஸ்பீல்டுக்கு சான்றிதழ் மேல் சான்றிதழ் வழங்கி வருகிறார். மேலும் ராணுவத்துக்குச் செலவிடுகிற தொகையையும் ராணுவ பலத்தையும் அதிகப்படுத்த பெருமளவு நிதி ஒதுக்கியவர் ரீகன். அதே முறையைத்தான் குடியரசு கட்சியினரிடம் அவருக்கு அப்புறம் தொடர்ந்து பார்க்கிறோம். இப்படி இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். ரீகனைப் பற்றிப் பேச வந்து இப்போதைய ஜனாதிபதியுடன் ஒப்பிட நேர்ந்ததற்குக் காரணம், ரீகன் ஆரம்பித்து விட்டுச் சென்றதை குடியரசு கட்சியினர் தவறாது பின்பற்றி வருவதாலேயே ரீகன் அவர்களுக்கு ஒரு ஐகான் ஆகிவிட்டார் என்று சொல்வதற்காகவே.

ரீகன் ஆரம்பித்து வைத்த ஸ்டார் வார்ஸ் என்கிற தற்காப்புப் போர் திட்டமும், அவர் காலத்தில் சோவியத் யூனியன் சிதறுண்டு போனதும் ரீகனின் மகத்தான வெற்றிகளாக குடியரசு கட்சியினராலும், அரசியல் தெளிவு இல்லாத அமெரிக்க பொதுஜனத்தாலும் கருதப்படுகிறது. ஈரான் – கான்ட்ரா பிரச்னைக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு, ரீகன் பதவி முடிந்தபோது அவருக்கான ஆதரவு 63 சதவீதமாக இருந்தது மக்கள் அரசியலில் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்பவர்கள் அல்லது சீக்கிரம் மறந்து போகிறவர்கள் என்பதற்கு உதாரணம். எனவே, ரீகனின் அமெரிக்க லெகஸி என்று நான் படித்த வரையில் ஒன்றும் தெரியவில்லை. குடியரசு கட்சிக்கு ரீகன் புத்துயிர் கொடுத்த லெகஸியாகவே அது எனக்குத் தெரிகிறது. இப்போதைய ஜனாதிபதியும் குடியரசு கட்சியும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கும் இவ்வருடத்தில் ரீகன் புகழ் பாடி அவருக்கு அரசாங்க இறுதி மரியாதை செய்ததன் பின்னே, ரீகன் வழியிலேயே குடியரசு கட்சி மேலும் தொடர்ந்து செயல்படும் என்கிற அறிவிப்பு இருக்கிறது.

பி.கு.: இக்கட்டுரையின் சில புள்ளி விவரங்கள், தகவல்கள் டைம், என்பிஆர், தி நேஷன் போன்ற இணைய தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இக்கட்டுரை ரீகனைப் பற்றிய முழுமையான விமர்சனமும் அல்ல. அவரின் சில செயல்பாடுகள், சில கொள்கைகள் பற்றிய என் பார்வையே. நான் வரலாற்றாசிரியன் அல்ல. எனவே, நான் படித்தவற்றின் அடிப்படையிலேயே இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், நான் அமெரிக்காவில் வசிக்கவில்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

**** **** ****

திண்ணை களஞ்சியம்

படித்து முடித்துவிட்டு வெளியூர்களில் பணிபுரிந்த காலங்களில் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறேன். மாநகரங்களில் வாடகை வீட்டுக்காரனாக இருப்பதற்கு அசாத்திய பொறுமை வேண்டும். வீட்டு சொந்தக்காரர் கீழ் போர்ஷனில் இருக்க நீங்கள் மாடியில் குடித்தனம் இருக்கிறீர்கள் என்றால் பொறுமையுடன் நிறைய பெருந்தன்மையும் வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் வந்து கேட்டைத் திறக்கக் கூடாது என்பது உட்பட நிறைய நிபந்தனைகள் இருக்கும். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் பிரச்னை சொல்லி மாளாது. வீட்டில் கிணறு இருந்தாலும், கிணற்றில் தண்ணீர் வந்தாலும், வீட்டுக்காரர் மோட்டர் போட மாட்டார். நாளுக்கொரு முறை காலையில் அரைமணி நேரம் பாத்ரூம் குழாய்களில் தண்ணீர் வரும். அப்போது குடங்கள் முதல் கிண்ணங்கள் வரை பிடித்து வைத்துக் கொண்டு பின்னர் நாளெல்லாம் அதை யோசித்து யோசித்து செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டுக்காரர் சில விஷயங்களில் மேம்போக்காகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்ளக் கூடும். அவர் மனைவி எல்லாவற்றிலும் கணக்காகவும், குற்றம் கண்டுபிடிப்பவராகவும் இருப்பது சகஜம். குடித்தனக்காரர்களுக்கு நிறைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற உளவியல் அது. காலையில் நன்றாகப் பேசுகிற வீட்டுக்காரர் அவர் மனைவி நாள்பொழுதில் அவரிடம் ஏதோ சொல்லிவைக்க மாலையில் முகம் கொடுத்துப் பேச மாட்டார். அல்லது, உங்கள் இரண்டு சக்கர வாகனத்திலிருந்து ஆயில் இரண்டு சொட்டுகள் ஒழுகி வீட்டின் முன்புறத் தரையைப் பாழ்படுத்திவிட்டது என்று குற்றம் கண்டுபிடிப்பார். அவர் வைத்திருக்கிற பழைய காலத்து வண்டியிலிருந்து தினமும் ஆயில் ஒழுகுவது பற்றி அவருக்குக் கவலை இருக்காது. அந்த மாதிரி சமயங்களைப் புன்சிரிப்புடனும், உன்னை நான் புரிந்து கொள்கிறேன் என்பது மாதிரியான் பெருந்தன்மையுடனும் சமாளிக்கக் கற்றுக் கொண்டேன். ஆயில் ஒழுகியது தெரியாமல் சுத்தம் செய்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் செய்து விடுவேன்.

கல்யாணமான புதிதில் இப்படிப்பட்ட ஒரு குடித்தனக்காரனாக சென்னையில் நான் வசித்திருக்கிறேன். ஒரு வருடம் முடிந்ததும் வாடகையில் 50 சதவீதம் ஏற்றி விட்டார். என்ன காரணமென்றால், மார்க்கெட்டிற்கு ஏற்ப என்று சொன்னார். உயர்த்தப்பட்ட வாடகை கொடுத்தும் ஒன்றும் மேம்படவில்லை. எனவே, அதற்கப்புறம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு அபார்ட்மென்டைத் தேடிப் பிடித்துக் கொண்டு காலி செய்துவிட்டேன். ஆனாலும், அந்த ஒன்றரை வருடங்கள் அந்த வீடு எங்களூக்கு வீடாகவே இருந்தது. வீட்டின் பின்புறம் விசாலமான மொட்டை மாடி. மொட்டை மாடிக்குப் பின்னர் மரங்கள். இரவுகளில் உட்கார்ந்து பேசவும், வானம் பார்க்கவும் என்று அந்த மொட்டை மாடியும் அதன் பின்னர் இருந்த மரங்கள் தருகிற காற்றும் அம்மரங்களின் அணில்களும் என்று அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. ஆனாலும், சென்ற முறை இந்தியா சென்றிருந்தபோது தூரத்திலிருந்து அந்த வீட்டைப் பார்த்துவிட்டு வந்தேன். வீட்டுக்காரர் கொடுத்த பிரச்னைகள் கொணர்ந்த காயங்கள் ஆறிப்போய் அந்த வீடு எனக்குள் நல்ல நினைவுகளையே மீட்டித் தந்தது.

அப்படி ஒவ்வொரு குடித்தனக்காரருக்கும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளும், அவ்வீடும் அதன் சுற்றமும் அவர்களுக்குக் கொடுத்த சந்தோஷமான நினைவுகளும் பந்தமும் இருக்கும். இந்தப் பக்கத்தில் உள்ள பாவண்ணனின் ‘வாடகை வீட்டில் வளர்த்த மரம் ‘ என்கிற கவிதை அப்பிரச்னைகளையும் அவற்றை மீறிய பந்தத்தையும் சொல்வதால் எவருடனும் உடனடியாக ஒன்றிவிடக் கூடியது.

விட்டுச் சென்றதும் குடிவைத்துக் கொள்ள

ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்

நாள்கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள்

அன்புக்குரிய உரிமையாளரே

பெட்டிகள் படுக்கை மின்விசிறி

தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு

முட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம்

வாடகை வண்டி வந்ததும்

ஏற்றிக் கொண்டு கிளம்புகிறோம்

கொண்டுசெல்ல முடியாத சொத்தாக

பின்புறத்தில் நிற்கிறது ஒருமரம்

எங்களை நினைவூட்டினாலும்

எங்களைப் போலிருக்காது அது

குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்

என்று ஒருபோதும் கேட்காது

மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி

முற்றத்தை மறித்துக் குழையாது

மழை புயல் கஷடங்களை முன்வைத்து

பழுது பார்க்கவும் வேண்டாது

நேருக்குநேர் பார்த்தாலும்

எவ்வித சங்கடமும் தராது

வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்

மரத்துக்காவது கருணை காட்டுங்கள்

– பாவண்ணன்

**** **** ****

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

பி.கே.சிவகுமார்


மனித நேயம்:

குழந்தைகள் வாழ்வு உணர்வுமயமானது. மொழிமயமானதும் கூட. கொஞ்ச நேரம் குழந்தைகள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் எவ்வளவு உற்சாகமாகவும், அலுப்பின்றியும், விளையாட்டு நோக்குடனும் ஆனால் முழுமையான ஈடுபாட்டுடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். அவர்கள் மொழியிலும் உணர்வுகள் வெளிப்பாட்டிலும் சப்-டெக்ஸ்ட் தேடுகிற இலக்கியவாதிகள் ஏமாந்து போவார்கள். அன்பு, அழுகை, பிடிவாதம், மகிழ்ச்சி, தோழமை என்று பலதரப்பட்ட உணர்வுகளைக் குழந்தைகள் வெளிப்படுத்துகிற விதம் அதீதமானதாகத் தோன்றினாலும் செயற்கையாக யாருக்கும் தோன்றாது. ஏனென்றால், குழந்தைகள் இயற்கையின் வெளிப்பாடுகள். வரப்பிரசாதங்கள். குழந்தைகள் பேசிக் கொள்வதை யாரும் பிரசங்கம் என்றோ வயதுக்கு மீறிய முதிர்ச்சி என்றோ அழைப்பதில்லை. மாறாகக் குழந்தையின் சூட்டிகை என்றும், ‘அட, இந்த வயசிலேயே இவ்வளவு வியாக்கியானமா ‘ என்றும் வியந்து பாராட்டுகிறோம். மற்றவர்கள் பாராட்டுகிறார்களா இல்லையா என்பது பற்றியும்கூட குழந்தைகள் ஆரம்பத்தில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மனதுக்குப் பிடித்ததைத் தங்களுக்குத் தெரிந்த மாதிரி செய்து கொண்டு ஆனந்தமயமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் தான் இது நல்லது, இது கெட்டது, இது சூட்டிகைத்தனம், இது ஏமாளித்தனம், இது பாதுகாப்பானது, இப்படி வாழ வேண்டும் என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் குழந்தைகளின் மேல் பாரமேற்றி அவர்களுக்கு நல்வழி காட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை குறித்தெல்லாம் பிரக்ஞை உள்ள பெற்றோர் கூட இதைச் செய்வதில் இருந்து முழுவதுமாகத் தப்பித்துவிட முடியாது என்பது வாழ்வின் விசித்திரம். குழந்தைகள் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலுமே அதைப் பெற்றோர்கள் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும், குழந்தைகளின் குழந்தைமையைப் போக்குவதில் பெற்றோர் ஆற்றுகிற கடமை குறித்து வருந்துகிற பெற்றோர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

குழந்தைகள் அன்பு மயமானவர்கள். தோழமைக்கும் மனிதநேயத்துக்கும் அவர்களை மிகச் சிறந்த உதாரணமாகக் காட்ட முடியும். என் பக்கத்து வீட்டில் என் பால்ய காலம் முதற்கொண்டு வசிக்கிற தோழர் ஒருவர் எனக்குண்டு. எங்கள் குடும்பங்களுக்குள் உறவொன்றும் அவ்வளவு சிலாகிக்கத் தக்கதாய் இல்லை. எங்கள் பாட்டனார் காலம் முதற்கொண்டே கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள், விஷயங்களை அணுகுவதில் கருத்து மாறுபாடுகள், வாழ்க்கைத் தர வேறுபாடுகள் என்று இரண்டு குடும்பத்துக்கும் இடையே வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், அதை எல்லாம் மீறி மூன்றாம் வகுப்பிலிருந்து என் வகுப்புத் தோழராய் இருந்து வந்தவர் அவர். எங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நட்பினிடையே பழம்பிரச்சினைகளைக் கொண்டுவரக் கூடாது என்கிற முதிர்ச்சி இருந்தது எங்கள் பாக்கியம். இன்றைக்கும் ஊருக்குப் போனால் அதே நெருக்கத்துடன் பேசவும் சண்டை போடவும் அந்த நண்பருக்கும் எனக்கும் முடிகிறது. வாழ்க்கை உண்டாக்குகிற பிளவுகளைத் தாண்டிய உறவுகளைச் சிறுவயது நட்பும் நேசமும் உருவாக்க முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்தான். அவரவர் வாழ்விலிருந்து இப்படி ஆயிரம் உதாரணங்களைத் தோண்டி எடுக்க முடியும்.

இன்னொரு நிகழ்ச்சி. ஒரு மூன்றரை வயது குழந்தை. தாயாரிடம் சாப்பிட ஒரு ப்ளம் பழம் கேட்கிறது. தாயார் தருகிறார். பழத்தை ருசித்துச் சாப்பிடுகிறது. சாப்பிடுவதற்குப் பொதுவாக அடம் பிடிக்கிற குழந்தை ஒரு ப்ளம் பழத்தை முழுமையாகச் சாப்பிட்டு விட்டதைப் பார்த்த சந்தோஷம் தாயாருக்கு. குழந்தையிடம் ‘இன்னொரு பழம் சாப்பிடுகிறாயா ‘ என்று கேட்கிறார். ‘சரி, கொடும்மா ‘ என்கிறது குழந்தை. இரண்டாவது ப்ளம் பழத்தைத் தாயாரிடமிருந்து கையில் வாங்கிக் கொண்டது. சாப்பிடாமல் ஒரு நிமிடம் தயங்கியது. பின்னர் தாயாரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. ‘அப்பாவுக்குப் பழம் இருக்கிறதா, அவர் சாப்பிடுவதற்கு. ‘ தாயார் பதில் சொல்கிறார். ‘ம்ம். அப்பாவுக்கு இருக்கு. நீ சாப்பிடு. ‘ ‘அண்ணாவுக்கு இருக்கிறதா ‘ ‘ம்ம். அண்ணாவுக்கும் இருக்கிறது. நீ சாப்பிடு ‘ என்கிறார் தாயார். ‘உனக்கு இருக்கிறதா அம்மா ‘ என்றும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்கிறது குழந்தை. அதன் பின்னரே அந்த இரண்டாவது ப்ளம் பழத்தைச் சாப்பிடுகிறது. சில நேரங்களில் தன் மூடு சரியில்லை என்றால் தன் விளையாட்டுச் சாமான்களைக் கூட தன் சகோதரனிடம் பகிர்ந்து கொள்ள மறுக்கிற அதே குழந்தைதான் இயற்கையாக இவ்வளவு பகிர்தலுடனும் நேசத்துடனும் இருக்கிறது. சொல்லிக் கொடுப்பதால் வருகிற விஷயம் இல்லை இது. குழந்தைகளின் இயற்கை சுபாவமே இதுதான் என்று அறியலாம். இந்தக் குழந்தைபோல எல்லாக் குடும்பங்களிலும் ஒரு குழந்தை இருக்கும் என்பதே குழந்தைகள் வெளிப்படுத்துகிற இயற்கையான நேசத்துக்கு கட்டியம்.

மூன்றாவது நிகழ்ச்சி. ஓர் இரண்டரை வயது குழந்தை. தந்தையார் காலையில் அலுவலகம் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார். குழந்தையிடம் ‘ஆபிஸீக்குப் போய்விட்டு வருகிறேன். ஐ லவ் யூ. பை பை ‘ என்று சொல்கிறார். குழந்தை ஓடி வந்து அணைத்துக் கொண்டு பதிலுக்கு ஐ லவ் யூவும் பை பையும் சொல்கிறது. தந்தையாரும் குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு தட்டிக் கொடுக்கிறார். பின்னர் மனைவியிடம் ‘போயிட்டு வரேன்மா ‘ என்று கிளம்புகிறார். தந்தையின் கையைப் பிடித்து நிறுத்திக் குழந்தை சொல்கிறது. ‘அப்பா, அம்மாவையும் ஹக் பண்ணி முத்தா கொடுத்துட்டுப் போ. ‘

மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்தவை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்கிற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பழக்கமான நிகழ்வுகளாகவும் இருக்கலாம். இதே நிகழ்வுகளாக இல்லாவிட்டாலும், இதே பொருளோ அல்லது இதே போன்று குழந்தைகளின் விசாலமான மனப்பான்மையையும் பிறருக்காகக் கவலைப்படும் இருதயத்தையும் வெளிக்காட்டுகிற நிகழ்ச்சிகளைப் பிறநாட்டுக் குழந்தைகளிடமும் காண முடியும். அவற்றைப் பார்க்கிற யாரும் குழந்தைகள் காட்டுகிற நேசத்திலும் முதிர்ச்சியிலும் நெக்குருகிப் போவார்கள். குழந்தைகளின் அச்செய்கையை செயற்கை என்றோ, அதீதம் என்றோ, பிரசாரம் போல் இருக்கிறது என்றோ சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், குழந்தைகள் தெய்வீகக் குணங்கள் கொண்ட பாக்கியவான்கள் என்கிற நம்பிக்கை எனக்கு.

தமிழ்நாடு. ஒரு பள்ளிக் கூடம். மாலை வகுப்புகள் முடியப் போகின்றன. மாணவர்கள் புத்தக மூட்டைகளைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள். வெளியே தின்பண்டம் விற்பவர்கள் தயாராகி விட்டார்கள். ஆசிரியர் வீட்டுப் பாடத்தைக் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பாக இருக்கலாம். வகுப்பிலேயே பெரிய மாணவன் எழுந்து ‘சார் நான் போக வேண்டும் ‘ என்கிறான். எதற்காகப் போக வேண்டும் என்று கேட்கிறார் ஆசிரியர். ‘நான் போக வேண்டும் ‘ என்கிற பதிலே வருகிறது. ‘உடம்பு சரியில்லையா ‘ என்று கேட்கிறார் ஆசிரியர். ‘சார், நான் போக வேண்டும். ‘ ‘உங்க அப்பா அம்மா யாரும் வந்திருக்கிறார்களா ‘ என்று கேட்கிறார் ஆசிரியர். ‘சார் நான் போக வேண்டும் ‘. ‘என்னலே, சும்மா சும்மா போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். என்ன காரணம் ‘ என்று கேட்கிறார் ஆசிரியர். மாணவன் சொல்கிறான். ‘சார், பள்ளி இறுதி மணி அடித்ததும் ஓடிச் சென்று பள்ளிக் கூடத்தின் கேட்டை யார் முதலில் தொடுவது என்று எங்களுக்குள் ஒரு போட்டி இருக்கிறது. அதில் எல்லாரும் ஜெயித்திருக்கிறோம். நான் கூட ஜெயித்திருக்கிறேன். ஆனால் ஒருவனால் முடியாது ‘ என்று சொல்கிறான். ‘ஏன் ‘ என்று ஆசிரியர் கேட்கிறார். இரு கால்களும் செயலிழந்து போய் ஊன்று கோல் உதவியுடன் வேறொரு இளைய வகுப்பைச் சார்ந்த ஒரு மாணவன் நடப்பதைப் பற்றிய காட்சி திரையை நிறைக்கிறது. பின்புலமாய் ஒரு பாடல். பின்னர், இந்தப் பெரிய மாணவன் அந்த மாணவனைத் தூக்கித் தோளில் அமர்த்திக் கொண்டு மணியடித்ததும் ஓட, மாணவர் கூட்டம் பின்தொடர்ந்து ஓடுகிறது. தோளில் அமர்ந்தபடி கேட்டைத் திறந்த மாணவன், கட்டை விரலை உயர்த்தி வெற்றி என்று காட்டுகிறார். மனித நேயம் மலரட்டும் என்ற வாசகத்துடன் மனித நேயம் என்கிற இந்த ஐந்து நிமிட குறும்படம் நிறைவுறுகிறது. சரவணன் சொக்கலிங்கம் தயாரித்து சேகர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். வேறொரு இடத்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் பார்வையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது என்று அறிகிறேன். இப்படத்தை ஜீன் 5, 2004 அன்று நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய தமிழ்க் கலைப்பட விழாவில் பார்த்தேன். தாமதமாக வந்தவர்களுக்காக நியூ ஜெர்ஸியிலும் இரண்டாவது முறையாகத் திரையிடப்பட்டது.

சொல்கிற விஷயத்தைச் சத்தமாகச் சொல்கிறது, சப்-டெக்ஸ்ட்வுடனும் இன்னும் மென்மையாகவும் சொல்லியிருக்க வேண்டும் என்று இப்படத்தைப் பற்றிச் சில விமர்சனங்களைப் படித்தேன். குழந்தைகளைப் பற்றி நான் விவரித்த உதாரணங்களைக் கொண்டு பார்க்கும்போது எனக்கென்னவோ இப்படம் இயல்பாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. நம்முடைய புத்திசாலித்தனத்தையும் மேதாவித்தனத்தையும் குழந்தைகள் மேல் கொட்டுவதில் நிறையவே யோசிக்க வேண்டும். ஒரு குழந்தையின் மனநிலையோடு இப்படத்தைப் பார்த்தால் இதன் செய்தியில் செயற்கையோ அதீதமோ இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. வர்த்தகத் தமிழ்ச் சினிமாவைப் பார்த்தோமேயானால், குழந்தைகளை வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடையவர்களாகவும், பிஞ்சிலே பழுத்தவர்களாகவும் காட்டி ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அவ்வாறெல்லாம் இருக்குமேயானால் அதையே நான் செயற்கையென்று சொல்லுவேன்.

இப்பட விழாவில் மரத்தடி இணையக் குழுவைச் சார்ந்த நண்பர்கள் பலரை முதன்முறையாகச் சந்தித்தேன். திண்ணையில் எழுதிய திரு.டெக்ஸன், திரு.ராஜன் குறை ஆகியோரையும் முதன்முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அமெரிக்கா வந்தும் தப்பிக்க முடியாது ‘ என்று கணையாழியில் எழுதி வந்தவர் டெக்ஸன் என்று அறிந்தேன். கணையாழியில் அவற்றைப் படிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அக்கட்டுரைகளின் மென்பிரதி இருந்தால் டெக்ஸன் அவற்றைத் திண்ணையில் இட்டு என்னைப் போன்ற வாசகர்களுக்கு உதவ வேண்டுமென்று வேண்டுகிறேன். நேரமும் இறையருளும் இருப்பின் இப்பட விழாவில் நான் பார்த்த படங்கள் எழுப்பிய சிந்தனைகளைக் குறித்து அவ்வப்போது பகிர்ந்து கொள்வதாக உத்தேசம்.

**** **** ****

திண்ணை களஞ்சியம்:

ஒன்று: பலபேர் கேட்கிற கச்சேரிகளில் வாசிக்கிற வாய்ப்பை வேண்டாமென்று சொல்லிவிட்டுக் கடற்கரையில் மணிக்கணக்கில் தனியாக வாசித்துக் கொண்டிருப்பார் மாலி என்று சிறுவயதில் யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம்.

இரண்டு: ‘முதலில் எழுதுகிறவன் என்கிற முறையில் எதை எழுதுவது என்று தீர்மானிப்பது நானே தவிர வேறு எவரும் இல்லை. பெரியார் அவர்களின் கட்டளைக்கேற்ப என்னால் எழுத முடியாது ‘ என்று பெரியார் முன்னிலையில் பேசினார் ஜெயகாந்தன்.

மூன்று: இரா.முருகன் கட்டுரையொன்றில் படித்தது. மாலனும் அவரும் ஒரு சந்திப்பில் பிறமொழி எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது இரா.முருகன் அந்த எழுத்தாளரிடம் வேறு ஓர் எழுத்தாளர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். கிடைத்த பதில் ‘அவரைப் பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும் ‘.

நான்கு: ‘ஒரு படைப்பாளி என்ற முறையில், will you not give me the freedom to choose what I want to write ? ‘ இது பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. திசைகள் இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியது.

ஐந்து: சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய கலைப்பட விழாவில் பார்த்த குறும்படம் ‘தப்புக்கட்டை ‘. நிறப்பிரிகையில் வந்த தய்.கந்தசாமியின் நல்ல சிறுகதையொன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அதிலே மேல்ஜாதிக்காரர் ஒருவர் பறையடிக்கிற ஒரு தலித் இசைக் கலைஞரை அவமானப்படுத்துகிறார், தாக்குகிறார். மற்றவர்களின் விருப்பப்படி வாசிக்கிற இசைக் கலைஞர், மற்றவர்கள் தருகிற கூலியை மற்றவர்கள் விருப்பபடியே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மேல்ஜாதிக்காரரால் வலியுறுத்தப்படுகிறார். அதற்கு உடன்பட மறுக்கும்போது தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதால், பறையடிக்கிற தொழிலையே விட்டு விடுகிறார் இசைக் கலைஞர். சிறுவயதில் இசைக் கலைஞரின் இசை ஆர்வத்தைக் கண்டு உற்சாகப்படுத்திய அவரின் தாயார் இறந்து விடுகிறார். இசைக் கலைஞருக்கு மனதில் குழப்பம். தாயின் மரணத்துக்கு விட்டுவிட்ட பறையை அடிப்பதா கூடாதா என்று. முடிவில் தாயின் எரிகிற சிதையின் முன்னே ஓயாது அவர் பறையடிக்கிற காட்சியுடன் படம் நிறைவுறுகிறது. இசைக்கும் கலைக்கும் ஜாதிகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென்பதையும் கலைஞர்கள் எது நேர்ந்தபோதும் தாங்கள் நேசிக்கிற கலையைத் தாங்கள் விரும்பும் வண்ணம் செய்வதை விட்டுவிடக் கூடாது என்பதையும் மனதைத் தொடும் விதமாகச் சொல்லிய படம் இது.

நிஜ வாழ்வில் நாம் அடிக்கடி சந்திக்கிற எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அது மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு கலைஞர்கள் எழுத வேண்டும் என்பது. ‘இந்த எழுத்தாளர் இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதவில்லை. எனவே அவர் என் மதிப்பில் வீழ்ந்து விட்டார் ‘ என்று எழுதுகிற சக எழுத்தாளர்களே இருப்பது சகஜம். ஓர் எழுத்தாளரையோ கலைஞரையோ மதிப்பிடுகிற அளவீடுகள் அகவயப்பட்ட அபிப்ராயங்களின் சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பிறப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. இன்னும் சிலர் கொஞ்சம் மேலே போய் எழுதுபவர்களுக்குக் கட்டளைகள் தருகிற ப்ரீ அட்வைஸ் சர்வீஸ் செய்கிறார்கள்.

சில வெகுஜனப் பத்திரிகைகளில் பார்த்தீர்களேயானால் அதில் வேலை செய்கிற சப்-எடிட்டர்களின் நிலைமை மிகவும் அனுதாபத்துக்குரியதாக இருக்கும். சர்க்குலேஷன் அதிகமாக வேண்டுமென்று விரும்புகிற முதலாளியின் விருப்பங்களை சிரமேற்கொண்டு செயல்பட வேண்டிய கிளார்க்குகளாக கலை ஆர்வம் மிக்க சப்-எடிட்டர்கள் மாறிப்போவது வாழ்வின் விபத்துதான். ஆனால், சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிற மாதிரியான இயந்திர இலக்கியப் படைப்புகளை வாசிக்கிற அத்தகைய சப்-எடிட்டர்கள் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் தாங்கள் செய்கிற வேலையைச் சிறப்பாகச் செய்கிற திறமை படைத்தவர்கள். அடுத்தவர் என்ன எழுத வேண்டும் என்ன எழுதக் கூடாது என்று சொல்லுகிற பட்டியலில் தன்னை இலக்கியவாதியாக உருவகப்படுத்திக் கொண்டு உள்ளுக்குள் வெகுஜனப் பத்திரிகையின் சப்-எடிட்டர் மனப்பான்மையை விட்டு வெளிவர இயலாதவர்களும் அடங்கிப் போகிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். அதற்குக் காரணம் வெகுஜன ரசனைக்கேற்பவும் பத்திரிகைகளின் தரத்துக்கேற்பவும் அவர்கள் தங்கள் எழுத்தின் பொருளையும் நடையையும் மாற்றி சமரசம் செய்து கொள்வதாக இருக்கலாம். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் மற்றவர்களிடமும் அதையே அவர்கள் எதிர்பார்ப்பது இயல்பான நிகழ்வுதான்.

மனித மனம் நுட்பமானது, அதன் ஆசைகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எழுத்துகளுக்கும் காரணங்கள் பல உண்டு. அதனாலேயே, எழுத்தாளர்களின் மீது தங்கள் எதிர்பார்ப்புகளைச் சுமத்துபவர்களின் வாதங்களைப் படிக்கும்போது, அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசிக்கவும் அதற்கானக் காரணங்களைத் தேடி அவர்கள்பால் அனுதாபமும்பட நம்மால் முடிகிறது.

ஆனால், கலைஞர்கள் கம்பீரமானவர்கள். சுதந்திரமானவர்கள். நான் மேற்சொன்ன ஐந்து உதாரணங்களையும் பார்ப்பீர்களேயானால், அதிலே வருகிற கலைஞர்களின் விருப்பங்களும், கொள்கைகளும், ரசனைகளும், வெளிப்பாடுகளும் வேறு வேறானவையாக இருக்கும். ஆனால், அடிப்படையில் கலைஞர்களுக்கேயுரிய கம்பீரத்தையும், சுதந்திரத்தையும் உணர்ந்தவர்கள் அவர்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆணித்தரமாக அவற்றை நிலைநாட்டுபவர்களும் கலைஞர்கள். நேயர் விருப்பம் போல கலைஞர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களை அவமானப்படுத்துகிற விஷயம் இருக்க முடியாது. அதற்காகக் கலைஞர்கள் கோபம் கொண்டால் அதன் தார்மீகத்தின் உண்மையொளி மற்றவர்களை நெளியவைத்து பதிலுக்குக் கோபப்பட வைக்கிறவையாக இருக்கும். அத்தகையக் கலைஞரின் கோபமொன்றை இந்தப் பக்கத்தில் உள்ள பசுவைய்யாவின் உன் கவிதையை நீ எழுது என்கிற பின்வரும் கவிதை காட்டுகிறது. கலைஞர்கள் அனைவரும் இக்கவிதையைத் தங்களின் பிரகடனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிற அளவுக்கு என்னைக் கவர்ந்த கவிதை இது.

உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி

நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று

என்னைக் கேட்காமலேனும் இரு.

– பசுவைய்யா

**** **** ****

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

பி.கே. சிவகுமார்


மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்:

மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிற புதிய கூட்டணி அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. கலவரங்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கெதிராக அரசாங்கங்களே கண்டும் காணாமல் நடத்துகிற கலவரங்களைத் தடுக்கவும், அதற்குத் துணைபுரிபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தரவும், அக்கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கவும் உதவும் வகையில் இச்சட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுவோம். கலவரங்களை நடத்துவோரும் தூண்டுவோரும் எவராக இருந்தாலும் பாரபட்சம் காட்டாத சட்டமாக இது அமைய வேண்டும். அதே நேரத்தில் ‘பொடா ‘விலிருந்த ஓட்டைகள் போன்று எதுவும் இல்லாமலும், மாநில அரசுகள் துஷ்பிரயோகம் செய்து பழிதீர்த்துக் கொள்ள உதவாத வகையிலும் இச்சட்டம் வடிவமைக்கப்படும் என்று நம்புவோம்.

ஒருகாலத்தில் தமிழ்நாட்டை மொழிவெறி பிடித்து உலுக்கியது போல இந்தியாவை மதவெறி பிடித்து உலுக்காமல் இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு இத்தகைய சட்டங்கள் உதவுமானால் அவற்றை வரவேற்க வேண்டும். மொழிவெறியானது தமிழ்நாட்டுக்கு இழைத்த பாதகங்களிலிருந்து தமிழ்நாடு இன்னமும் முழுமையாக வெளியேற முடியாமல் நின்று கொண்டிருக்கிறது. அதனால், மதத்தின் பெயரால் கிளப்பப்படும் குறுகிய உணர்வுகளும் பாதகங்களையே இந்தியாவுக்கு விளைவிக்கும் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. எந்தப் பற்றுமே வெறியாகாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை.

சல்மான் ருஷ்டி போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கிடையேயான தவறுகளை மட்டும் கண்டிக்கவில்லை. குஜராத்தில் நடந்த படுகொலைகளையும் கண்டிக்கிறார்கள். எழுதுகோல் எடுத்த எவரும் மதம், மொழி, நாடு, இனம் போன்ற குறுகிய உணர்வுகளுக்கு அப்பால் மனிதநேய அடிப்படையுடன் பிரச்னைகளை அணுக முடியுமானால், அடுத்தவர் புண்ணைப் பார்த்து அழுகிற அதே நேரத்தில் நம்முடைய அழுக்குகளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; அழுக்குகளைப் பற்றி விமர்சித்து எழுதவும் முடியும்.

அதே நேரத்தில் – மதவாத இயக்கங்களை தடை செய்வது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். காமராஜர் தி.மு.க. விஷயத்தில் சொன்னதுபோல் அவற்றை அரசியல் ரீதியாகவே மதச்சார்பற்ற அமைப்புகள் சந்திக்க வேண்டும். மதம் சார்ந்த தேசீயம் என்கிற பெயரில் பா.ஜ.க செய்து வருகிற காரியங்கள் எப்படி இந்து மதத்தின் தொன்மைக்கும் கொள்கைகளுக்கும் எதிரும் முரணுமானவை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். மதம் பற்றிய சரியான அறிவும் அணுகுமுறையும் இல்லாதவர்களே மதம் சார்ந்த தீவிரப் போக்கை அனுஷ்டிக்கிறார்கள் என்பதால், மதம் குறித்த சரியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். மதவாத இயக்கங்களை தீண்டத்தகாத இயக்கங்கள் என்று தள்ளி வைப்பதைவிட அவர்கள் வைக்கிற வாதங்களுக்கு அறிவுபூர்வமான எதிர்வாதங்கள் வைப்பதும், இந்து மதம் என்றால் என்ன, அதன் சிறப்புகளும் குறைகளும் யாவை என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதும் உதவும். எந்த மதமும் – ஏன் எந்த – வரலாறும் ஆராதிக்கத்தக்க அம்சங்கள் மட்டுமே நிரம்பியது அல்ல. கடுமையான விமர்சனங்கள் முன்வைக்க வேண்டிய அம்சங்கள், அவசியங்கள் நிறைந்தவையே அனைத்தும். அவற்றை அறிந்து – பொதுவான மனிதகுல வளர்ச்சிக்கு உதவுகிற, சிந்தனையை முன்னெடுத்துச் செல்கிற விமர்சனங்களும் அலசல்களும் மதம் உள்ளிட்ட நிறுவன மற்றும அரசியல்மயமாகி வரும் கூறுகளின் மீது வைக்கப்படுவது குறுகிய உணர்வுகளில் அரசியல் கட்சிகள் குளிர் காயாமல் தடுக்க உதவும்.

**** **** ****

அமெரிக்க இந்தியர்களும் பா.ஜ.க.வும்:

குஜராத் படுகொலைகளுக்குக் காரணமாக கோத்ரா ரயில் தீவைப்பைக் காட்டிப் படுகொலைகளை நியாயப்படுத்துவது இந்திய அமெரிக்க அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருக்கிறது. கோத்ரா ரயில் தீவைப்பு கண்டிக்கப்படக் கூடியது. அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதைக் காரணமாக வைத்து – மாநில அரசாங்கம் உடந்தையாக இருக்க – குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையும் அராஜகமும் கட்டவிழ்த்து விடப்பட்டதாலேயே அதை அரசாங்கம் ஏற்பாடு செய்த பயங்கரவாதம் என்று எழுதுகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதுவது எவ்வளவு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஈராக்கில் அபு காரிப் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். புஷ்ஷீம் ரம்ஸ்பீல்டும் மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டு நடந்தவற்றுக்கு வருந்துகிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கென்னவோ தேர்தல் சமயத்தில் குஜராத் படுகொலைகளுக்காக வருந்திய வாஜ்பாய் மற்றும் அத்வானி முகங்கள் நினைவுக்கு வருகின்றன.

புஷ்ஷீக்கு எதிராக தேர்தலில் நிற்கும் ஜான் கெர்ரி கூட இதை ஒரு முக்கியப் பிரச்னையாகப் பார்த்து கேள்வி எழுப்பாமல், பட்டும் படாமலும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டுப் போகிறார். அது குறித்து எழுதிய பத்திரிகைகள், ஜான் கெர்ரியின் சுபாவமும் வியூகமுமே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்கின்றன. எந்தப் பிரச்னையும் அது முற்றுப் பெறும்வரை காத்திருந்து, பொதுமக்கள் ஒட்டுமொத்த கருத்து அதற்கு எதிராகத் திரும்பியபின் அதைப் பயன்படுத்திக் கொள்கிற தேர்ந்த அரசியல்வாதியாக கெர்ரி இருந்து வந்திருக்கிறார் என்று எழுதுகின்றன. ரம்ஸ்பீல்டு பதவி விலக வேண்டும் என்று யாரும் மல்லுக்கட்டுவதாகத் தெரியவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் பேசுகிறார்களோ இல்லையோ இங்கே பொதுமக்களிடையே ஈராக் மீதான போர் ஒரு முக்கிய விவாதமாக ஆகிவருகிறது. அதற்குச் சார்பாகப் பேசுபவர்கள், எதிர்ப்பாகப் பேசுபவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் என்று அலசுபவர்கள் என்று மக்கள் இவ்விஷயத்தில் காட்டுகிற ஆர்வத்தைப் பார்க்கும்போது நவம்பர் தேர்தலில் மக்களின் முடிவை நிர்ணயிக்கிற ஒரு விஷயமாக இது வளர்ந்து வருகிறது என்று எண்ணுகிறேன். அலுவலகக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்னரும், மதிய உணவின் போதும், சகஜமான சம்பாஷணைகளிலும் பேஸ்கட்பால், பேஸ்பால் அல்லது புட்பால் என்று இம்மூன்றில் ஒன்றைப் பற்றிப் பேசுவார்கள் என்று அறியப்பட்ட அமெரிக்கர்கள் ஈராக்கைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் குடியரசு கட்சி நிகழ்த்துகிற அரசியல், செய்கிற பிரசாரங்கள், பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் செய்கிற உரிமை மீறல்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது அந்தக் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால், அமெரிக்காவில் இருக்கிற இந்தியர்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சியைச் சாராமல் ஜனநாயகக் கட்சி கொள்கைகளை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் தவறுகளை தைரியமாக விமர்சிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் கணிசமானவர்கள் இந்தியா என்று வந்துவிட்டால் பா.ஜ.க.வுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ கொடி பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆராயத்தக்க முரண்பாடு இது.

ஈராக் சிறை அட்டூழியங்கள் பற்றி சீமோர் ரஷ் நியூயார்க்கரில் எழுதிய கட்டுரையை இங்கே படிக்கலாம். இந்தக் கட்டுரையை மறுத்து அமெரிக்க அரசாங்கம் அறிக்கை விட்டிருக்கிறது.

**** **** ****

திண்ணை களஞ்சியம்:

நல்ல படைப்பானது ஒரு படைப்பாளி குறித்து வருகிற தனிப்பட்ட விமர்சனங்கள், எதிர்மறை கருத்துகள் யாவற்றையும் தள்ளி வைக்கச் செய்துவிடும். யார் எழுதியிருந்தாலும் ‘ஆஹா ‘ என்று படைப்பை வியந்து அனுபவிக்கச் சொல்லும். எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கையோ, குணாதிசயங்களோ, அவர் கைகொள்கிற கொள்கைகளோ படைப்பின்முன் அடையாளமிழந்து போய்விடுகின்றன. விக்ரமாதித்யனைப் பற்றிய பல விமர்சனங்களைப் படித்திருக்கிறேன். சமீபகாலமாக இலக்கியச் சண்டைகளில் கூட அவர் பெயர் அடிபடுவதைப் பார்த்திருக்கிறேன். அவர் கவிதைத் தொகுதி ஒன்றையும் முன்னர் படித்திருக்கிறேன். அவருக்கென்று ஒரு விசேடமான – சொல்லப்போனால் இயல்பற்ற என்பதனால் விசேடமாகிவிட்ட – மனக்கூறு இருக்கிறது. அது அவர் கவிதைகளை தனித்துக் காட்டுகிறது என்று தோன்றியது. இணைய இலக்கியக் குழுமங்களில் அவ்வப்போது யாராவது ஒருவர் குற்றாலத்தில் கண்டெடுத்த ஒற்றைச் சிலம்பு வரைந்த பொற்பாத சித்திரம் பற்றி அவர் எழுதிய கவிதையைச் சிலாகித்து எழுதி வருகிறார்கள். நல்ல படைப்பின் சிறப்பு அதுதான். இந்தப் பக்கத்தில் உள்ள அருவி பற்றிய கவிதையைப் பாருங்கள். கடைசி இரண்டு வரிகளில் சட்டையைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் அறைந்து நிற்கிறது. அருவியையும், மனித வாழ்க்கைக்கும் அருவிக்கும் உள்ள வித்தியாசங்கைளையும் விவரிப்பதுபோல தோன்றுகிற கவிதை, அருவிபோல விழ வேண்டிய மனித வாழ்வின் அவலம் சொல்வதாக உணர வைப்பது இதன் சிறப்பு. அதுமட்டுமில்லை – சுதந்திரம், அறிவு, உரிமை, மதிப்பீடுகள் என்று நாம் விரும்பி பூட்டிக் கொள்ளூம் பல தளைகளைப் பற்றிய கேள்விகளை உணர்த்தி நிற்கிறது.

அருவி

யாருக்கும் சொந்தமில்லை

அதனால்

அருவி யாருக்கும் அன்னியமுமில்லை

விழுவது தவிர்த்து

வேறு லட்சியமென்ன உண்டு அருவிக்கு

குளிர்ச்சியும் தெளிவும் அதன்

குணங்களல்ல இயற்கை

அரசுகள் மாறுவதும் ஆட்சியாளர்கள் புதிது புதிதாக வருவதும்

அதற்கொரு விஷயமேயில்லை

அருவியின் எல்லைக்குள் யாரும் செய்தித்தாள் மேய்வதோ

அரசியல் பேசுவதோ இல்லை

அருவியிடம் கோபம் கொள்வோர் யாருமில்லை

அவசியமென்ன இருக்கிறது அதற்கு

அருவி

வாழ்தல் பயமறியாதது

அதனால்

சுரண்டல் தெரியாதது

அருவி

இரை தேடியோ புணர்ச்சிக்கோ அலைவதில்லை

கேள்வி கேட்பதும் குழம்பித்தவிப்பதும்

கிடையவே கிடையாது

பொறுப்பு அலட்சியம்

மகிழ்ச்சி வருத்தம்

பேறு இழப்பு

எல்லாம் கடந்தது அருவி

அத்வைதம் மார்க்ஸீயம் ஸ்டக்சுரலிஸம்

எதுவும் தெரிந்து கொள்ளவேண்டிய ஹிம்சையற்றது அது

ஆயிரம் தடவை அருவியில் குளித்தாலும்

யாருக்கும் ஏன் புத்தி வருவதில்லை

**** **** ****

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

பி.கே.சிவகுமார்


காலச்சுவடில் ராஜ் கெளதமன் நேர்காணல்:

காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கெளதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்தேன். ராஜ் கெளதமனின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரை மேற்கொண்டு படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை அந்த நேர்காணல் ஏற்படுத்தியது. விவாதத்தையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் கிளப்புகிற கருத்துகள் வைக்கப்படும்போதுதான் மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படும்போது மனிதவாழ்வு சிறப்படைகிறது. அந்தவிதத்தில் தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் சிந்தனைகளும் கருத்தாக்கங்களும் உற்று கவனிக்கப்பட வேண்டும். இன்னமும் பரிபூரண விடுதலை அடையாத தலித் சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல தலித்துகளின் குரலையும் அவர்கள் தரப்பு சிந்தனைகளையும் கேட்க வேண்டும். இத்தகைய நேர்காணல்கள் எனக்குத் தலித்துகள், அவர்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றை அவர்கள் பார்வையில் புரிந்து கொள்ள உதவுகின்றன. ‘எதிர்ப்பக்கம் இருப்பவற்றில் புனிதம், உயர்ந்தவை என்று சொல்லப்படுபவற்றைக் கட்டுடைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்தப் பக்கத்தில் தலித்துகளுக்குச் சாதகமாக எவை இருக்கின்றனவோ அவற்றைச் சரியாக இனம்கண்டு அதை முன்வைப்பதும் முக்கியமானதுதான் ‘ என்றும், ‘நீங்கள் சொன்னது போன்ற படிப்பு, அது மாதிரியான முன்மாதிரிகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. காலச்சுவடில் வெளிவந்திருந்த அம்பேத்கர் பற்றிய கட்டுரையில்கூட பக்ஷி அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அம்பேத்கரின் பிற விஷயங்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் அளவிற்கு அவரது படிப்பு, கடுமையான உழைப்பு போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. கலகம் செய்வது போன்றவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது போல் இருக்கிறது ‘ என்றும் என் சிந்தனையைத் தூண்டிய பல கருத்துகளை இந்த நேர்காணலில் ராஜ் கெளதமன் சொல்லியிருக்கிறார். (நன்றி: காலச்சுவடு, தமிழ்.சிபி.காம்)

சுஷ்மா சுவராஜ் செய்த அசிங்கம்:

சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று சொல்பவர்களின் தரப்பை என்னால் அங்கீகரிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எத்தகைய மனப்பான்மையை சுதேசி மனப்பான்மை என்று தவறாக உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இருக்கட்டும். சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்றும் இப்போது சொல்லிவிட்டார். அதற்காக அவரை எல்லாரும் பாராட்டி விட்டனர். நானும் பாராட்டுகிறேன். நேரு குடும்பத்தினரின் சுயநலமற்ற தன்மையை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் சோனியாகாந்தி. உள்ளூரில் பிறந்துவிட்டு பதவிமோகம் எடுத்து அலைகிற சுதேசிகள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்று சொன்னதிலும் குறை காண ஆரம்பித்திருக்கிறார்கள். எமர்ஜென்ஸியை எதிர்த்தவர் என்றும், அப்பழுக்கற்ற நேர்மையாளர் என்றும் பெயர் பெற்ற ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அடுத்தடுத்த ஊழல்களில் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டது இருக்கட்டும். ஒரு அரசியல் புரோக்கராக தன்னை மனமுவந்து தாழ்த்திக் கொண்டு கட்சிகளிடம் பேரம் பேச விமானமெடுத்து ஓடியதும் இருக்கட்டும். அவரும் வாஜ்பாய் அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் கூட, சோனியாகாந்தி பிரதமரானால் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை கட்டிக் கொள்வேன் என்றெல்லாம் உளறிய சுஷ்மா சுவராஜைப் பார்த்து உன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு நாகரீகமான வழிகள் இல்லையா என்று கேட்காதது மிகப்பெரிய அசிங்கம். அப்படியெல்லாம் சொல்லியதன் மூலம் சுஷ்மா சுவராஜ் தன்னை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை; தன் கட்சியை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை, பெண்களை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை. அவற்றையெல்லாம் மீறி – மனித குணத்தையே தாழ்த்தி விட்டார் என்றே சொல்லுவேன். ஒருகாலத்தில் பா.ஜ.க.வின் ஆவேசமானக் குழந்தையாக இருந்த மகாஜன் போன்றவர்கள் இத்தேர்தல் முடிவின்போது பேசிய பேச்சில் இருந்த முதிர்ச்சி கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற பிரசாரம் எடுபடவில்லை என்று ஒத்துக் கொண்ட மகாஜனைப் பார்த்து அவர் கட்சியினர் கற்றுக் கொள்ள வேண்டும். வாஜ்பாய் கவிதை எழுதுவதைவிட முக்கியமானது, தன் கட்சித் தொண்டர்களை மனிதர்களாக வைத்திருப்பது.

கம்யூனிஸ்ட்டுகள் செய்கிற தவறு:

மத்தியில் அமையப் போகிற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் மீண்டும் தவறிழைக்கிறார்கள் என்றே சொல்லுவேன். வலது கம்யூனிஸ்ட் கட்சி அரசில் பங்கேற்க விரும்பியதாகவும், இடது கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாததால், ஒருமித்த முடிவாக இரண்டுமே அரசில் பங்கேற்கப் போவதில்லை என்றும் செய்திகள் சொல்கின்றன. இதற்கு முன்னர் கம்யூனிஸ்ட்டுகள் செய்த தவறுகளையும், செய்யத் தவறியவற்றையும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோர் மிகவும் தாமதமாக இப்போது ஒத்துக் கொண்டு வருவதை அவர்களின் கட்டுரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம் இப்போது அறிய முடிகிறது. அதுபோல் – இந்த அரசாங்கத்தில் பங்கேற்காததன் தவறைக் கம்யூனிஸ்ட்டுகள் பின்னாடி உணர்ந்து வருந்தக் கூடும். வறட்டுத் தத்துவவாதிகளாகவும், வறட்டுப் பிடிவாதக்காரர்களாகவும் இருப்பது நம் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புதிதில்லையே. எந்தக் காரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை என்பதைக் கம்யூனிஸ்ட்டுகள் வெளியே சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. சொல்லியிருந்தால் அவற்றின் சாதக பாதகங்களை ஆராயலாம். மத்திய அரசில் பங்கேற்று ஆக்கபூர்வமாக ஒத்துழைத்துத் தங்கள் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று, தங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை இந்தியா முழுவதுமும் ஏற்படுத்தக் கூடிய அற்புதமான வாய்ப்பை ஆட்சியில் பங்கேற்காததன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் இழக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பங்கேற்கும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.

ஜெயலலிதாவின் அறிக்கை:

காட்சி ஒன்று. அமெரிக்காவில் கூடைப்பந்து பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. அதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். அதற்கென்று நேஷனல் பாஸ்கட்பால் அசோசியேஷன் (NBA) என்ற புகழ்பெற்ற லீக் இருக்கிறது. மற்றும் பல சிறுசிறு லீகுகளும் உள்ளன. என்.பி.ஏ.வில் பல அணிகள் – வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவை – இருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிற லேக்கர்ஸ் என்ற அணி புகழ்பெற்றது. அதன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடைய விளையாட்டு வீரர்களில் கோபி பிரையண்ட் (Kobe Bryant) ஒருவர். அவர் சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். விடுமுறைக்காகக் கொலராடோ மாநிலம் சென்றபோது அங்கே ஒரு இளவயது பெண்ணை அவர் அனுமதியின்றி பாலியன் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்பது அவர் மீதான புகார். அதுபற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இடையில் என்.பி.ஏ.வின் ரெகுலர் சீசன் போட்டிகள் முடிந்தன. ரெகுலர் சீசனில் என்.பி.ஏ.வின் 29 அணிகளும் தமக்குள் தலா 82 முறை விளையாடும். பின் அவற்றில் இருந்து முதல் 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு (என்.பி.ஏ.வின் இரு முக்கிய பிரிவுகளிலிருந்து – கிழக்கு மற்றும் மேற்கு – தலா 8 அணிகள்) ப்ளேஆப்ஸ் (Playoffs) என்கிற யார் சாம்பியன் என்பதை நிர்ணயிக்கிற அடுத்த கட்ட ஆட்டங்கள் தொடங்கும். அப்படி இப்போது ப்ளேஆப்ஸ் நடந்து கொண்டிருக்கிறது. கோப் பிரையண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்கு ஆட்டம் இருக்கிற நாள்களில் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சிலமுறை நேர்ந்துவிட்டது. நீதிமன்றத்தில் அன்றைக்கு ஆஜராகிவிட்டுப் பின்னர் விமானம் பிடித்து வந்து, ஆட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறைகள் அவர் மிகச்சிறப்பாக ஆடினார். உடனடியாகப் பத்திரிகைகள் அவரைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டன. பாருங்கள், எவ்வளவு சிரமத்திற்கிடையே எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் எழுதித் தள்ளின. ஒரு சிலர் மட்டுமே ‘கோப் பிரையண்டை இதில் எதற்காகப் பாரட்ட வேண்டும் என்று தெரியவில்லை. இந்தச் சிக்கல் அவராகவே சென்று சிக்கிக் கொண்டது. அதில் அவர் சிக்கிக் கொண்டபின் வெளிவர போராடிக் கொண்டிருக்கிறார். அதனூடே நன்றாகவும் ஆடினார். அவர் எப்போதும் நன்றாக ஆடவேண்டும் என்பது அவரிடம் அனைவரும் எதிர்பார்க்கிற ஒன்றுதானே. அந்தச் சிக்கலில் அவர் சிக்கிக் கொண்ட தவறை அவரின் சிறப்பான ஆட்டம் ஈடுசெய்துவிட முடியாது ‘ என்ற ரீதியில் எழுதினர்.

காட்சி இரண்டு: பாராளுமன்றத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டில் அடைந்த தோல்விகளுக்குப் பின் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பல நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிகைகள் மீது தொடர்ந்த வழக்குகளை விலக்கிக் கொள்வது, மதமாற்ற தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது, அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பித் தருவது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது ஆகியன அவற்றுள் சில. இதற்காகப் பத்திரிகைகளும் நண்பர்களும் தமிழக முதல்வரைப் பாராட்டக் கூடும். எனக்கென்னவோ தானாகச் சென்று சிக்கிக் கொண்ட சிக்கல்களிலிருந்து தமிழக முதல்வர் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதற்கு உதவியதற்காக அவர் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வாக்காளர்களையே இதற்காகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் அவரிடம் முதலிலேயே அவருக்கு ஓட்டு போட்ட வாக்காளர்கள் எதிர்பார்த்தனர். தமிழக முதல்வர் இப்படி நடவடிக்கைகளைத் திரும்ப பெற்றுக் கொண்டதைவிட முக்கியமானது, இத்தகைய தவறுகள் இனி நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வது என்பதை அவர் உணர வேண்டும்.

திண்ணை களஞ்சியம்:

திண்ணை களஞ்சியத்திலே தேடினால் சிலநேரங்களில் மாணிக்கங்கள் அகப்படக் கூடும். முக்கியமாக திண்ணை கவிதைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நிறைய கவிதைகள் பிரசுரமாவதால் நிறைய பேர் நிறைய நேரங்களில் கவிதைகளைப் பொறுமையுடன் படிப்பதில்லையோ என்று எனக்குத் தோன்றும். எனவே, திண்ணை கவிதைக் களஞ்சியத்துள் நுழைந்து அங்கிருக்கிற எனக்குப் பிடித்த கவிதைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பேசலாம் என்று நினைக்கிறேன். என் தேர்வு என் தனிமனித அறிவு மற்றும் ரசனையின் அடிப்படையிலானது. என்னால் குறிப்பிடப்படாத கவிதைகள் சிறப்பானவை அல்ல என்பது இதற்கு அர்த்தமல்ல. ஒரு விமர்சகனாக அல்லாமல், வாசகனாகவே இதைச் செய்ய முயல்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். கவிதை தவிர மற்ற படைப்புகளிலும் இப்படிப் பிடித்தவற்றை எடுத்துக்காட்ட ஆசைதான். இன்ஷா அல்லாஹ். முதலில் கவிதைகளைப் பார்ப்போம்.

பசுவய்யா கவிதைகள் பக்கத்தில் வருத்தம் என்கிற தலைப்பின் கீழுள்ள இந்தக் கவிதையைப் பாருங்கள்:

வேட்டையாடத்தான் வந்தேன்

வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை

தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்

பின் வில் வித்தை

பின் வாள் வீச்சு

பின் குதிரை ஏற்றம்

பின் மற்போர்

நாளை நாளை என வேட்டை பின்னகர

ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்

திறந்து வைத்த கற்பூரம் போல்

ஆயுளின் கடைசித் தேசல் இப்போது

இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை

பின்னும் உயிர்வாழும் கானல்

அவரவர் அறிவு, அனுபவம், ரசனை, திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பலவிதமான தளங்களில் இக்கவிதைக்குப் பொருள் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட பிரபஞ்சத்தன்மை கவிதைக்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்வதுபோல தோற்றமளிக்கும் இந்தக் கவிதை அதனூடே பிரபஞ்சம் முழுமையும் உணருகிற ஒரு குணாதிசயத்தைக் கோடுபோட்டுக் காட்டிவிடுவது இக்கவிதையின் வெற்றி என்று நான் நம்புகிறேன்.

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

பி.கே. சிவகுமார்


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் – 2004:

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இப்பாராளுமன்றத் தேர்தலில் சரிவைக் கண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கெதிரான கொள்கைகள் உடைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக, சரத்பவாரின் நேஷனலிஸ்டிக் காங்கிரஸ் பார்ட்டி இன்னபிற ஆகியன வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை, பா.ஜ.க கூட்டணி வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, மக்கள் பா.ஜ.க கூட்டணிக்கெதிராக தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் எனத் தெரிகிறது. சோனியா காந்தி பிரதமராகக் கூடும். அவர் வெளிநாட்டவர் என்கிற வாதம் இனிமேல் பா.ஜ.க தொண்டர்கள் அல்லது காங்கிரஸைப் பிடிக்காதவர்கள் நடுவில் மட்டுமே எடுபடக் கூடும். பொதுமக்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே கூட இவ்வாதம் பொதுமக்களிடம் எடுபடாததாலேயே பா.ஜ.க இதுவரை தனியாக அறுதிப் பெரும்பான்மை பெற இயலாமல் இருந்தது. சொல்லப் போனால், 1999 தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனலாம். கூட்டணிக் கட்சிகளின் வலிமையாலேயே 1999-ல் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இப்போது அதேபோன்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடும். இந்தியாவுக்கு கூட்டணி ஆட்சிதான் இன்றைய தேவை. அறுதிப் பெரும்பான்மை பெற்று நடத்தப்படும் தனிக்கட்சி ஆட்சிகளைவிட கூட்டணி ஆட்சி நல்ல விளைவுகளைத் தரும்.

சோனியா காந்தி ஒருமுறைப் பிரதமராகிவிட்டால், பின்னர் அவர் வெளிநாட்டவர் என்ற வாதம் அவரை அப்படிச் சொல்பவர்களிடமேகூட மதிப்பிழந்துவிடக் கூடும். என்னைப் பொறுத்தவரை சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற கருத்து உப்புச் சப்பில்லாதது. சோனியா காந்தி இந்தியக் குடிமகள். அவர் கூட்டணிக்கு வாக்களித்தப் பொதுமக்களுக்கு அவர் பிரதமராவதில் ஆட்சேபணை இல்லை. எனவே, அவர் பிரதமராக வேண்டும். பின்னர், பிரதமராய் அவர் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லையென்றால், வாக்காளர்களுக்கு வேறுவழிகள் உள்ளன. அனுபவம் இல்லை என்று சோனியாகாந்தியைப் பற்றிச் சொல்கிறார்கள். அனுபவத்துடன் யாரும் பிறப்பதில்லை. அவர் திறமையான பிரதமரா என்பதைக் காலம் சொல்லும். சோனியா காந்தி இன்னொரு நரேந்திர மோடியாக இருக்க மாட்டார் என்பதால் அவர் பிரதமராவதை வரவேற்கிறேன்.

காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்காமல், கூட்டணி ஆட்சி அமைப்பது நாட்டுக்கு நல்லது. அந்தக் கூட்டணி அமைச்சரவையில் திமுக, பாமக, மதிமுக, சரத்பவாரின் கட்சி என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளூம், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கட்சிகளும் பங்கேற்க வேண்டும். இது பிரச்னைகளில் ஒத்த கருத்தை அடையவும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் காக்கவும் உதவும். திமுக மத்திய அரசில் பங்கேற்காது என்று சொன்னதைக் கருணாநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது தி.மு.க.வுக்கும் உதவிகரமாகவே அமையும் என்பதை அறியாதவர் அல்ல அவர். எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாத ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தங்கள் கட்சியினரைக் காப்பாற்றிக் கொள்ள தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது உதவும். பா.ஜ.க. தோற்றிருந்தாலும் அதன் செல்வாக்கு கணிசமாக உள்ளது. எனவே, காங்கிரஸீம் அதன் கூட்டணி கட்சிகளும் அதைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல், ஊழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நாட்டு நலன், பொதுமக்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முக்கியப் பிரச்னைகளில் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்கள் நினைத்துவிடக் கூடும்.

சோனியா வெளிநாட்டவர், ராமர் கோவில் விவகாரம், போபர்ஸ் ஊழல், பரம்பரை ஆட்சி என்று உதவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்காமல், பா.ஜ.க. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், ஜீவாதாரப் பிரச்னைகள் ஆகியவற்றுள் கவனம் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து வியூகங்கள் வகுத்தாலோ பத்திரிகைகள் பாராட்டினாலோ வென்றுவிட முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அருண் ஜெட்லியும், பிரமோத் மகாஜனும் படித்தவர்களைக் கவர்ந்த அளவுக்குப் பாமரர்களைக் கவரவில்லை. அதற்குக் காரணம் – பாமரர்களைக் கணக்கில் கொள்ளாமல் – இந்தியா ஒளிர்கிறது என்கிற பிரமையில் பாமரனும் விழுந்துவிடுவான் என்று நினைத்ததே.

மாநிலத்தில் 50,638 கோடி கடனை வைத்துக் கொண்டு, விவசாயிகளின் தேவைகள், மக்களின் பிற பிரச்னைகள் ஆகியவற்றுக்குச் சமமாக நிதியும் கவனமும் ஒதுக்காமல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை மக்களுக்கேற்றவாறும் மக்களைப் பாதிக்காதவாறும் கொண்டுவராமல் செய்தித்தாள்களிலும் இணையத்திலும் தொழில்நுட்ப ஆட்சியாளர் என்று பெயர் வாங்க முனைபவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் சந்திரபாபு நாயுடுக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இலவசமாக மின்சாரம் முதலியன தருவது சரியில்லை என்று படித்தோரில் சிலர் நினைக்கிறார்கள். ப.சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசிய கூட்டம் ஒன்றில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட விவசாயம் போன்றவற்றுக்கு அரசாங்கம் கொடுக்கிற சலுகைகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி, இந்தியா போன்ற நாடுகளின் விவசாயிகளூக்கு இத்தகைய சலுகைகள் எவ்வளவு அத்யாவசியமானவை என்று விளக்கியது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் அரசாங்கம் தருகிற சலுகைகளின் அளவு ஆராயப்பட்டபின் குறைக்கப்படலாமே ஒழிய, அவற்றை முழுமையாக நீக்க வேண்டும் என்று சொல்வதை பொருளாதார நிபுணர்கள்கூட அங்கீகரிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களின்பால் அக்கறை காட்டுகிற பொதுஅறிவுடையக் கொள்கைகள் நிறைந்த பொருளாதார சீர்திருத்தங்களை (Economic reforms with human face and common sense) வரப்போகும் ஆட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புவோம்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தோற்றிருக்கிறார். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவராக இருந்தால், 1996 தேர்தல் தோல்விக்குப் பின்னரே அவர் அதைக் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் இன்னமும் அதீதமான தன்னம்பிக்கை, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதைக் கேட்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் – அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. காணாமல் போய்விடும். கொள்கைகள் ஏதுமின்றித் தனிநபர் கவர்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இத்தகைய அதிர்ச்சி வைத்தியங்கள் அவசியம் தேவை.

பா.ஜ.க. போன்ற கட்சிகளின் குறுகிய மதவாத நோக்கங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கும் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஏற்படக் கூடிய நீண்டகாலப் பிரச்னைகள் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியின் அவசியம் குறித்து போர்க்கால அடிப்படையில் குரல் கொடுத்து வந்த ஹர்கிஷண்சிங் சுர்ஜித் போன்ற தலைவர்களுக்கு – மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து சகமனிதரை நேசிக்கிற ஒவ்வொரு இந்தியரும் சொல்கிற நன்றியாகவே இத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்தியாவின் வாக்காளர்கள் அதிபுத்திசாலிகள் என்பதையும், கத்தியின்றி ரத்தமின்றி மாறுதல்களைக் கொண்டுவருவதில் ஜனநாயகத்துக்கு இணையில்லை என்பதையும் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பதைவிட – மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற ஜனநாயகம் ஜெயித்திருக்கிறது. வாக்களித்துத் தங்கள் வலிமையைக் காட்டிய இந்தியாவின் கோடானுகோடி வாக்காளர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.

**** **** ****

எழுத்தாளர்களைப் பற்றிய குறும்படங்கள்:

சாகித்திய அக்காதெமி எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடும் விவரணப் படங்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களுக்கு ஒரு சமூகம் திருப்பிக் கொடுக்க வேண்டிய மரியாதையின் ஓர் அடையாளமாகவும், எழுத்தாளர்களை விஷீவல் மீடியம் வழியே அவர்களின் வாசகர்களுக்குக் காட்டுகிற வரலாற்று ஆவணமாகவும் இப்படங்கள் அமைகின்றன.

ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் சா.கந்தசாமி இயக்கிய ஜெயகாந்தன் விவரணப் படத்தைப் பார்த்தேன். சமீபத்தில் அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனையும், ரவி சுப்ரமணியன் இயக்கிய இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞனையும் பார்க்க நேர்ந்தது. இவ்விரண்டுப் படங்களையும் பார்த்தபின் மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் விவரணப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. இம்மூன்றையும் இங்கே ஒப்பிடவோ மதிப்பிடவோ போவதில்லை. இம்மூன்றைப் பற்றியும் எனக்குத் தனித்தனியே கருத்துகள் உள்ளன என்பது இருக்கட்டும்.

எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைப் பற்றிய என் பொதுவான கருத்துகளை முன்வைப்பது மட்டுமே நான் இப்போது செய்யப்போவது.

எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்கள் பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. எழுத்தாளரின் குழந்தைப் பருவம், அவர் படைப்புகளின் சில பகுதிகளை எழுத்தாளரோ பிறரோ வாசித்துக் காட்டுவது, எழுத்தாளரின் குடும்ப விவரங்கள், எழுத்தாளரே தன்னைப் பற்றிப் பேசுவது, தமிழின் பிற முக்கியமான படைப்பாளிகள் எழுத்தாளர் பற்றிய தன் கருத்துகளைச் சொல்வது ஆகியவை அவற்றுள் சில.

ஓர் எழுத்தாளரைப் பற்றியக் குறும்படத்தில் இவையெல்லாம் அவசியமே. ஆனாலும், நான் பார்த்த மூன்று படங்களுமே எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. இயக்குனர்கள் மூன்று பேருமே கலைஞர்கள். தங்களுக்கே உரித்தான வகையில் படத்தை அணுகியும் இயக்கியும் இருக்கிறார்கள். எனவே, என் திருப்தியின்மைக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால், இயக்குனர்களுக்குக் கிடைத்திருக்கிற சொற்ப நேரத்தைச் சொல்லத் தோன்றுகிறது. முப்பது நிமிடங்களுக்குள் ஓர் எழுத்தாளரின் ஆளுமையை, சமூகத்தில் அவர் படைப்புகளும் அவரும் ஏற்படுத்தியிருக்கிற பிம்பத்தை, சலனங்களை முழுமையாக வெளிக்கொண்டு வந்துவிட முடியாது.

எனவே, சாகித்திய அக்காதெமி இனிமேல் இப்படங்களுக்கான நேரத்தை குறைந்தபட்சம் ஒருமணி நேரமாக மாற்ற முன்வரவேண்டும். ஒருமணி நேரமாவது கிடைத்தால்தான் இயக்குனர்கள் ஓர் எழுத்தாளரின் பல்வேறு ஆளுமைகளில் சிலவற்றையாவது முழுமையாக வெளிக்கொணர முடியும். உதாரணமாக, இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞன் படம், அவரின் நாடகப் படைப்புகள், அதுசார்ந்த கருத்துகள் என்று முக்கால்வாசி நேரம் அதிலேயே சுற்றி வருகிறது. ஆனால், சிறுகதை, நாவல் ஆகியவற்றில் இ.பா செய்த சாதனைகளின் பக்கம் சரியாகக் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போயிருக்கலாம். இ.பா. நாவலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பு நாடகத்தைப் பற்றியதாக இருக்கிறது என்பதால், இ.பா.வின் நாடகப் பங்களிப்பு பற்றியே இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கக் கூடும். இத்தகைய படங்களின் நோக்கம் முடிந்த அளவு ஓர் எழுத்தாளரின் எல்லாத் துறைகளையும் அவற்றில் அவர் செய்த பங்களிப்புகளையும் விவரமாக வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்று நான் நம்புகிறேன். அதற்கு இயக்குனருக்கு அதிக நேரம் தேவை. அது கொடுக்கப்படவும் வேண்டும். இங்கே இ.பா. பற்றிய படத்தை ஓர் உதாரணத்துக்காகவே எடுத்துக் கொண்டுள்ளேன். குறை சொல்வதற்காக அல்ல. இதையே மற்ற படங்களிலும் நான் உணர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் தாங்கள் சொல்ல விரும்பிய கருத்துகளைத் தாங்கள் சொல்ல விரும்பிய வண்ணம் இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதால் இது இயக்குனர்களின் குறையல்ல.

வாழ்நாள் முழுவதும் தம் எழுத்துகளால் தமிழ்ச் சமூகத்திடையே கருத்தாக்கங்களையும், எதிர்விளைவுகளையும், சலனங்களையும், மாற்றங்களையும், விவாதங்களையும் கொண்டுவந்த எழுத்தாளர்கள் பற்றி முப்பது நிமிடங்களில் சொல் என்று இயக்குனர்களைச் சொல்வது, அந்த எழுத்தாளருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய முயற்சிகள் எவருக்கும் திருப்தியற்றவையாகவும், குறைபட்டுப் போனவையாகவும் உணரப்பட வாய்ப்புகளும் தருவதாக இருக்கும்.

எனவே, சாகித்திய அக்காதெமி இப்படங்களுக்கான நேரத்தை உயர்த்தி அதற்கேற்றவாறு உதவித்தொகையையும் உயர்த்துவது இன்றியமையாதது. சாகித்திய அக்காதெமியின் குழுவில் இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் அதற்காக ஆவன செய்ய வேண்டும்.

—-

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பி.கே.சிவகுமார்


திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:

திரு.கருணாநிதி சன் டிவி மூலம் நேயர்கள் கேள்விகளுக்குச் சமீபத்தில் பதிலளித்தார். அப்போது அவருக்கு திரு.மாலன் உடன் இருந்து உதவினார். அப்போது மாலன் சொன்ன கருத்துகள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மாலன் இப்படிப் பேசலாமா என்று கேட்கப்படுகிறது. எதற்காகத் திரு.கருணாநிதி சொல்வதை விளக்குவதுபோல ஜெயலலிதாமீது காட்டமான விமர்சனம் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப் படுகிறது.

ஏன் வைக்கக் கூடாதா என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மாலன் செய்தது தவறில்லை என்றே படுகிறது. மாலனுக்கென்று தனியே அப்படிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. அதை அவர் சொன்னார் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். திரு. கருணாநிதியின் கருத்துகளும் மாலனின் கருத்துகளும் ஒத்துப் போவதாலேயே மாலனை விமர்சிப்பது சரியில்லை. தி.மு.க.வின் சில பல கொள்கைகளுடன் ஒத்துப் போகிற தனிப்பட்ட கருத்தாக்கங்கள் இருப்பதாலேயே மாலன் சன் டிவியில் பணிபுரியக் கூடும். அப்படி இருக்கக் கூடுமானால், அதில் தவறு இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. ஒத்துபோகாத இடத்திலும் மனம் உடன்படாதக் கொள்கைகளிலும் யாரும் பணிபுரிய இயலாது என்று நான் நம்புகிறேன்.

நமது எம்ஜிஆரில் திமுகவைப் புகழ்ந்தோ முரசொலியில் அதிமுகவைப் புகழ்ந்தோ எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், அவற்றில் வருவன பற்றி விமர்சிக்கலாம். அப்படி, மாலன் ஏன் இப்படிச் சொன்னார் என்று கேட்பதைவிட, அவர் கருத்துகள் குறித்து யாருக்கேனும் எதிர்வினை இருந்தால் செய்வது நன்றாக இருக்கும். வரலாற்றை எடுத்துக் கொண்டால், அறிஞர்களும் கலைஞர்களும் தேவை ஏற்படும்போது அரசியலில் இறங்கியும் கருத்துகள் சொல்லியும் இருக்கிறார்கள். அப்படி மாலனும் அரசியல் கருத்துகளைச் சொல்வதாக எடுத்துக் கொண்டு, அவர் கருத்து பற்றிய எண்ணங்களை வேண்டுமானால் சொல்லலாம். எழுத்தாளர்களூம் அறிஞர்களும் இப்படி அரசியலில் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்வது சமுதாயத்துக்கு நல்லது.

மாறன் மறைவிற்குப் பின் திமுகவில் நவீன மற்றும் அறிவுபூர்வமான சிந்தனையில் விழுந்திருக்கிற இடைவெளியை, மாலன் போன்றவர்கள் நிரப்ப முடியும். திமுகவின் உதவாதக் கொள்கைகளை மிதப்படுத்தி, காலத்துக்கேற்றவாறு ஓரளவுக்கு மாற்றியமைத்து, அதன் குறிப்பிடத்தக்க நவீனக் கொள்கை மாறுதல்களுக்கு அடித்தளமிட்டவர் மாறன் என்று நான் நம்புகிறேன். மாலன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் ஆலோசனைகளாலும் உலகளாவியப் பார்வையாலும் வாசிப்பு அனுபவத்தால் பெற்றிருக்கிற பரந்தபட்ட மனோபாவத்தாலும் அவர் விரும்புகிற கட்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்ய இயலும்.

உதாரணமாக, அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்கள் எவ்வளவுதான் பொடாவை எதிர்த்து ஆரம்பம் முதலே எழுதி வந்தாலும், திமுக, மதிமுக போன்ற கட்சிகள் பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆதரித்தன. பின்னர், அந்தச் சட்டத்தாலேயே வை.கோபால்சாமி பாதிக்கப்பட்ட பின்னரே, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. எழுத்தாளர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டால் இத்தகைய தவறுகளைக் கட்சிகள் களைந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு மாலன் போன்றவர்கள் உதவ முடியும்.

மற்றபடிக்கு, சன் டிவியில் கருணாநிதி பொறுமையாகவும் நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் பதிலளித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வென்றதும் அதையே தொடர்வார் என்று எதிர்பார்ப்போம். அமங்கலமான வார்த்தை கூடாது என்றும், ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை பிடித்திருப்பதாக என்றும் கருணாநிதி பேசியது மகிழ்ச்சி அளித்தது. அவர் கட்சியின் சில பேச்சாளர்களும் அதைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாகத் தங்கள் கட்சி திகழ உதவ வேண்டும்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பதில் சொல்கிற நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டும். பிற நாடுகளிலும் மாநிலங்களிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராயர் காப்பி கிளப் யா ?ீ குழுமத்தில் சில மாதங்களுக்கு முன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிற இடங்களில் நடப்பது பற்றி எழுதப்பட்டிருந்ததைப் படித்த ஞாபகம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிற ஆலோசனையையே கூட மாலன் கொடுத்திருக்கலாம். திரு. கருணாநிதியைப் பின்பற்றி ஜெயலலிதா மற்றும் பிற தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முன்வர வேண்டும்.

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

பி.கே. சிவகுமார்


பதில்களும் பார்வைகளும்:

என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. வாரம் இரண்டு நாள் நாளுக்கு இரண்டரை மணி வீதம் Pre-school போகிறார். அங்கே பெரிதாக ஒன்றும் சொல்லித் தந்துவிடுவதில்லை. விளையாட்டுகளிலும், வண்ணம் தீட்டுவதிலும் மகிழ்கிறார். ஆனாலும், பகிர்தல், பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல், கூடி விளையாடுதல், மரியாதையும் பண்புகளும் கற்றல் என்று சமூகப் பழக்கங்களைப் பயில்வதற்கு அது மிகவும் உதவுகிறது. ஆனாலும், வீட்டில் அண்ணா, அம்மா உதவியோடு ABCD, One Two Three எல்லாம் கற்றுக் கொண்டாயிற்று. நான் ?ன்ட்ரட் என்று சொன்னபோது, அவர் ‘ ?ன்ட்ரட் இல்லை டாடி, சே ஒன் அன்ட்ரட் ‘ என்று திருத்தியதைக் கவிதையிலும் சொல்லியிருக்கிறேன். பேனா எடுத்தவர் கை சும்மா இருக்காது என்பதுபோல கற்றுக் கொள்கிற மனம் சும்மா இருக்குமா ? வீடுகளின் சுவர்களிலிருந்து பார்க்கிற இடமெல்லாம் என் மகள் தன் கைவண்ணத்தைக் காட்டுவார். ABCD, எண்கள், சித்திரம் என்று மனம்போன போக்கில் எழுதுவார். என் மகன் சிறுவயதில் இதையே செய்து வாடகை வீட்டைக் காலி செய்யும்போது வெள்ளையடிக்க தண்டம் ஏதும் அழ வேண்டுமோ என்று என் மனைவி வருந்தியதுண்டு. நான் பொதுவாக எதுவும் சொல்வதில்லை. எழுதப் படிக்க மாட்டேன் என்று சொல்லாமல், ஏதோ ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறார்களே என்று விட்டுவிடுவதுண்டு. ஆனாலும், பழைய வீட்டைக் காலி செய்யும்போது பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை என்பதால், இப்போது தைரியத்தில் என் மகள் வீட்டுச் சுவர்களில் வரைந்து விளையாடுவதை அதிகம் கண்டு கொள்வதில்லை. அப்படியே என் மனைவி எவ்வளவு முறை சொன்னாலும், அவர் கவனிக்காத சில நிமிடங்களில் என் மகள் எங்காவது எழுதிவைத்து விடுவார். அம்மா பேப்பரில் எழுத வேண்டும் என்று சொல்கிறார் என்பதும், வேறு இடங்களில் எழுதக் கூடாது என்பதும் என் மகளுக்குத் தெரிந்ததுதான். ஆனாலும் ஆர்வமும் விருப்பமும் அவரை எழுத வைக்கிறது போலும்.

நேற்று காலை, படுக்கையின் மீது விரித்திருந்த அழகான வெளிர்நிற படுக்கை விரிப்பில் ABCD, அப்புறம் மாடர்ன் ஆர்ட் போல கோடுகள் நிறைந்த சித்திரங்களைப் பார்த்தேன். ஒரு நிமிடம் சிரிப்பு வந்துவிட்டது. என் மகளை அழைத்து அவற்றைக் காட்டியபடி கேட்டேன்.

‘இது என்னமா ? ‘

என் மகளுக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர் அங்கே எழுதியிருப்பதை நான் விரும்பவில்லை என்று. ஆனால், இங்கெல்லாம் எழுதக் கூடாது என்று பொதுவாக நான் சொல்வதில்லை என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமாளிக்கிறார். ‘தட் இஸ் ABCD டாடி ‘

‘அது சரிம்மா, அது எப்படி படுக்கை விரிப்பில் வந்தது ‘

சற்றும் தளராமல் சிரித்தபடி, ‘தட் இஸ் ABCD டாடி ‘

‘ஆமாம்மா, ABCDயுடன் நான் இன்னும் டிராயிங்கும் பார்க்கிறேன். ‘

சிரிப்பைச் சற்றுக் குறைத்தபடி, ‘தட் இஸ் ABCD டாடி ‘

‘அது எப்படி இங்கு வந்தது ‘

சற்று இறுகிய குரலில் – ‘தட் இஸ் ABCD டாடி ‘

‘ஆமாம்மா, இதை யார் வரைந்தது ‘

உடைந்துபோய் அழுகை எந்நேரமும் வந்துவிடக் கூடும் என்று தெரிகின்ற குரலில் ‘தட் இஸ் ABCD டாடி ‘

இதற்குமேல் நான் ஒன்றும் கேட்கவில்லை. ‘சரிம்மா, போய் விளையாடு ‘ என்று சொல்லிவிட்டேன்.

என் மகளின் பதிலைப் பார்த்தீர்களேயானால் – அதில் பொய் என்று எதுவும் இல்லை. அவர் சொன்னது உண்மைதான். ஆனால், கேள்விக்கேற்ற சரியான பதிலா என்றால் இல்லை. திரும்பத் திரும்ப பிரச்னை இல்லை என்று தெரிகிற ஓர் உண்மையைப் பதிலாக வைப்பதனால், மேற்கொண்டு தர்மசங்கடமானக் கேள்விகள் வருவதைத் தடுக்க இயலும் என்பதையும், தனக்கு பலவீனமாய்ப் போய்விடக் கூடிய பதில்களைத் தவிர்க்க முடியும் என்பதையும் அந்தக் குழந்தை மனம் மூன்று வயதிலேயே அறிந்திருக்கிறது.

எனக்கு ஏனோ என் மகளுடனான இந்த உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஞாபகம் வந்தது. ஈராக் மீதான போர் பற்றிய தர்மசங்கடம் அளிக்கிற கேள்விகளுக்கெல்லாம் புஷ் ‘இன்று அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கிறது. இது பயங்கரவாதத்துக்கு எதிரான போர். ‘ என்கிற ஒரே பதிலின் பல்வேறு வடிவங்களை உபயோகப்படுத்தி பதிலளிப்பார். அமெரிக்கர்களும் ஒரு கேள்விக்கு அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லையென்றால், ஓரிரண்டு முறைக்கு மேல் துருவித் துருவிக் கேட்காமல், அப்படியே விட்டுவிடுவர். இது அமெரிக்கர்களின் பழக்கம். இன்றைக்கு புஷ் மட்டுமில்லை அவர் கட்சியினர் அனைவருமே ஈராக் போர் பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் இந்த முறையைப் பயன்படுத்தியே பதிலளித்து வருகின்றனர். இதற்கு ‘ஒருவரின் வலிமையானக் கருத்துகளை உபயோகப்படுத்தி வெல்வது ‘ (Playing to one ‘s strength) என்றுவேறு பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே, வெல்வதுதான் முக்கியம். உண்மை முக்கியமில்லை. வெல்வதற்கான வியூகங்களும் உபகரணங்களுமே பதில்களும் செயல்பாடுகளும் என்று வாழ்க்கை ஆகிவிட்டது. இந்த இடத்தில் உண்மையைத் தேடுவது உண்மைக்கும் தேடுபவர்க்கும் இடைஞ்சல் ஊட்டுகிற விஷயமாகவே முடியும்.

சற்று இதையே யோசித்துப் பார்க்கும்போது, இதைச் செய்வது புஷ் மட்டுமில்லை, மனிதர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. தமிழ்ப் பத்திரிகைகளிலும் இணையத்திலும் இன்னும் நம்மைச் சுற்றிலும் நடக்கிற விவாதங்களைப் பாருங்கள். கேள்வி கேட்பவர்களும் பதில் சொல்பவர்களும் இருவேறு அலைவரிசைகளில் பேசிக் கொண்டிருப்பார்கள். இடையில் கிடைக்கிற வார்த்தைகள், வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு சமாளிப்புகள், திசைதிருப்பல்கள் ஆகியவை நிறைய நேரங்களில் நடைபெறும். இப்படிப் பேசுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்க ஜனாதிபதி போல சமூக மதிப்பிலும் பதவியிலும் அந்தஸ்திலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களாக இருக்கிறார்கள் அல்லது நமக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு பின்பாட்டு பாடுபவர்கள்தான் இருக்கிறார்களே யொழிய, பதில்களின் உண்மையை, பதில் சொல்பவரின் அறிவொழுக்கத்தை, அந்தப் பதில் நேர்மையானதா என்று காணுகிற பார்வையைப் பெரும்பாலோர் கொண்டிருப்பதில்லை. அல்லது பிடிக்காத ஆளா, நிறைய தொந்தரவு செய்கிற கேள்விகள் கேட்பவரா, நம்மைவிட வேறு நம்பிக்கைகள், வேறு சித்தாந்தங்கள் உடையவரா, அவர் சொல்வதற்கெல்லாம் விவரமான அல்லது அறிவுபூர்வமான பதில்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு சார்பானவர் என்று மேம்போக்கில் சொல்லிவிட்டுப் போனாலே போதுமென்று நினைக்கிறோம். தமிழில் மட்டுமில்லை எந்த இடத்திலும் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை நடத்த விரும்புபவர்களும், கருத்தைச் சொல்ல விரும்புபவர்களும் சந்திக்கிற பிரச்னைதான் இது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிற நான் – என் மகள் அவர் செய்த தவறை ஒத்துக் கொள்ளவில்லை என்று கோபித்துக் கொள்வதற்கோ கேள்விகளுக்குச் சரியான பதில் தரவில்லை என்று வருந்துவதற்கோ என்ன நியாயம் இருக்க முடியும் ? அவரைப் பற்றியாவது நிறைய நம்பிக்கை இருக்கிறது. மூன்று வயதுதான் ஆகிறது. அவருக்கென்று அறிவும் புரிதலும் வருகிறபோது அவர் மாறிவிடக் கூடுமென்று.

**** **** ****

பார்ன்ஸ் & நோபள் பரவசம்:

என் குழந்தைகளின் ஆர்வத்திற்கிணங்க நான் இப்போது அடிக்கடி செல்கிற இடம் பார்ன்ஸ் & நோபள் (Barnes & Noble) புத்தகக் கடை. இங்கே புத்தகக் கடைகள் இன்னுமோர் நூல் நிலையமாக (library) செயல்பட்டு உதவி புரிகின்றன. கடைக்குள் சென்று உங்களுக்குப் பிடித்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து -எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் தேடி எடுத்துத் தந்து உதவுகிறார்கள் – எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கேயே படித்துவிட்டு வரலாம். நேற்றுப் புதிதாய் வந்த புத்தகத்திலிருந்து எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் இப்படிப் படிக்கலாம். குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களும் ஆய்வாளர்களும் நோட்டுப் புத்தகத்துடனும் லாப் டாப் கம்ப்யூட்டர்களுடனும் உட்கார்ந்து மும்முரமாய்ப் படித்துக் கொண்டிருப்பதை எந்நேரமும் காணலாம். எந்தத் துறையிலும் புதிதாக வந்திருக்கிற புத்தகங்கள் பொது நூல் நிலையங்களுக்கு வர சில நாள்கள், வாரங்கள் ஆகும். ஆனால், அத்தகைய புத்தகங்களைக் கூட இங்கே அமர்ந்து இலவசமாகப் படிக்க இயலும் என்பதால் இது நூல் நிலையத்தைவிட சிறந்தது.

உள்ளேயே காபி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் பிரபலமான Starbucks காபிக் கடை இருக்கிறது. காபியையும் ஸ்நாக்ஸையும் படிக்கிற இடத்திற்கே எடுத்துச் சென்றும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவும் இருக்கிறது. அங்கே குழந்தைகள் அமர்ந்து படிக்கலாம். பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டலாம். இந்தப் புத்தகக் கடையில் உறுப்பினர் ஆனால், வாங்குகிற புத்தகங்களில் பத்து சதவீதம் கழிவும், காபி கடையில் வாங்குகிற பதார்த்தங்களுக்குப் பத்து சதவீதம் கழிவும் உண்டு. மேலும் அவ்வப்போது சிறப்புச் சலுகைகளும் உண்டு. உறுப்பினர் கட்டணம் என்று வருடத்திற்கு 25 டாலர்கள் வசூலிக்கிறார்கள். உறுப்பினர் அல்லாதவரும் தாராளமாக எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். அதிலே பேதங்கள் ஏதுமில்லை. வசந்த கோடைக்காலங்களில் ஏழுநாள்களும் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் சற்று சீக்கிரம் மூடிவிடுகிறார்கள். எவ்வளவு நேரம் கடை திறந்திருக்கும் என்கிற விவரம் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று நம்புகிறேன். தேவையானப் புத்தகங்களைத் தேடி எடுத்துத் தரவும், படித்துவிட்டு வைத்துவிடுகிற புத்தகங்களை எடுத்து மீண்டும் அடுக்கவும் முகம் சுளிக்காத பணியாளர்கள் இருக்கிறார்கள். நடக்க ஆரம்பித்திருக்கிற கைக்குழந்தைக்குப் படித்துக் காட்டுகிற புத்தகத்திலிருந்து எல்லா வயதினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும், எல்லாத் துறையினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் துறைவாரியாகப் பெயர் போட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள் மட்டுமில்லாமல் ஆடியோ கேசட்டுகள், சிடிக்கள் முதலியவையும் கிடைக்கும்.

அடிக்கடி குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த வெள்ளியன்று இரவு கூட ‘Indo American Poetic Society ‘ சார்பில் தேசியக் கவிதை மாதம் எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பார்ன்ஸ் & நோபள் புத்தகக் கடையில் கொண்டாடப்பட்டது. ‘சர்வபாஷா சரஸ்வதி ‘ என்று ?ிந்தியில் எழுதிய வாசகத்தினை மேடையில் வைத்து, சரஸ்வதி தேவியும் நியூயார்க் சுதந்திரத் தேவி சிலையும் இருக்கிற புகைப்படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்து அவரவர் மொழியில் கவிதை வாசித்தார்கள். குஜராத்தில் இருந்து வந்திருந்த ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சிறப்புரையாற்றினார்; அவர் கவிதையை வாசித்தும் காட்டினார். கவிஞர்கள் தம் கவிதைகளை எந்த இந்திய மொழியில் அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்று சொன்னார்கள். வந்தவர்கள் பெரும்பாலும் குஜராத்திக் கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் வாசித்தார்கள். நானும் ஆசாரகீனனும் அடுத்தமுறை வரும்போது தமிழை அறிமுகப்படுத்தி AK ராமானுஜத்தின் Hyms for the Drowning-ல் இருந்து சில கவிதைகளையோ அல்லது ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களின் சில கவிதைகளை மொழிபெயர்த்தோ, வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகக் கடையினுள் நுழைந்து அங்கிருக்கிறப் புத்தகங்களைப் பார்க்கிற பரவசத்துக்கும் ஆனந்தத்துக்கும் எல்லையில்லை. பரவசத்துடன் நமக்குள் இனம்புரியாத எளிமையும் ஊடுருவும். நயாகரா நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும் சத்தத்தையும் அருகில் நின்றுப் பார்த்துக் கேட்ட போதும், அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் நடுவில் கையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு நின்று ஆழ்கடலின் அமைதியை உள்வாங்கிக் கொண்ட போதும் என்னுள் நான் கண்டுகொண்ட பரவசமும் எளிமையும் அவை. எத்தனை வகைகள், எவ்வளவு புத்தகங்கள். இன்னும் படிக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் எவ்வளவு எவ்வளவு!

வாரவிடுமுறை வந்துவிட்டாலே இப்போதெல்லாம் குழந்தைகள் பார்ன்ஸ் & நோபள் என்று ராகமாகப் பாடிக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் பெரும்பாலும் வார விடுமுறையின் ஒரு நாளில் பாதியையாவது இங்கே பயனுள்ள முறையில் செலவிடுகிறோம். குடும்பமே சேர்ந்து படிப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.

அமெரிக்காவை முதலாளித்துவ நாடு என்றும் மோசமான நாடு என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனாலும், இங்கேயும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. இந்தப் புத்தகக் கடை நடத்துபவர்கள் இலவசமாக அனைவரையும் படிக்க அனுமதிப்பதால், புத்தகம் வியாபாரமாகாமல் தேங்கி விடும் என்று நினைக்காமல், யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் எடுத்து எவ்வளவு நேரமானாலும் படிக்கலாம் என்று அனுமதித்திருப்பது முதலாளித்துவ தொழில்முனைவோரின் சிறப்பே.

உதாரணமாக, என்னையே எடுத்துக் கொண்டால் – நான் இங்கே ஆண்டு உறுப்பினன். இங்கே இலவசமாகப் படிக்கக் கிடைப்பதனால் உண்டாகியிருக்கிற அபிமானத்தால் என் புத்தகங்களை முடிந்தவரை இங்கேயே வாங்குகிறேன் – சில நேரங்களில் ஓரிரு டாலர்கள் போட்டியாளர்களை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று உவந்து தருகிறேன். கெண்டையைப் போட்டு விறால் மீன் (நண்பர் ராஜா, அவர்கள் ஊர்ப் பக்கம் கொடுவா மீன் என்று சொல்வார்கள் என்கிறார்) பிடிப்பது என்று எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அந்த மாதிரி, தன் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் அனைவரையும் இலவசமாகப் படிக்க அழைத்து இத்தகைய வியாபாரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.

இந்த வாசிப்பு அனுபவத்தை நண்பர்களுடனும் செய்யலாம். என்ன படிக்கிறோம் என்று நமக்குள் விவாதித்துக் கொள்ள இயலும். பெரும்பாலான நேரங்களில் நண்பர் ஆசாரகீனனும் நானும் அருகருகே அமர்ந்து படித்தும் பேசியும் கொண்டிருப்பது நல்ல அனுபவம். எந்தப் புத்தகம் எப்படி என்று பரஸ்பரம் உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. ஆசாரகீனன் அவர் தொழில் சார்ந்த ஒரு புத்தகம், அவர் ஆர்வம் சார்ந்த ஒரு புத்தகம் என்று மாற்றி மாற்றிப் படிப்பார். எனக்குத் தொழில் புரியும் இடத்தை விட்டு நீங்கியதுமே தொழில் மறந்துவிடும். அடுத்த முறை வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குத் தேவையென்றால் மட்டுமே தொழில் சார்ந்த புத்தகங்கள் பக்கம் பார்வை செலுத்துவேன். மற்ற நேரங்களில் ஆர்வம் சார்ந்த புத்தகங்கள்தான். ஒவ்வொரு முறையும் அந்தக் கடையை விட்டு வெளியே வரும்போதும் குழந்தைகள் தாங்கள் படித்தப் புத்தகங்கள் அல்லது பக்கங்களின் எண்ணிக்கையை உற்சாகமாகச் சொல்லும்போது என் மனமும் எவ்வளவு படித்தோம் என்று அசைபோட்டுக் கொள்ளும். அப்போது கிடைக்கிற மனதிருப்தி அபரிதமானது.

தற்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் Dan Brown எழுதிய The Da Vinci Code. ஏறக்குறைய 450 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் வரலாற்றுப் பின்புலம் எனக்கு மிகவும் ஆர்வமளிக்கிறது. கத்தோலிக்கர்களைப் பற்றியும், போப்பைப் பற்றியுமான எதிர்மறையான வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது. அடிப்படையில் வரலாற்றுப் புன்புலத்துடன் கூடிய திரில்லர்தான். இரண்டு முறை சென்று அங்கேயே படித்தும் 150 பக்கங்கள் வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான் மிகவும் மெதுவாகப் படிப்பவன். எனவே, புத்தகத்தை வாங்கி விட்டேன். படித்து முடித்ததும் எழுதுகிறேன். இந்த மாதிரி ஒரு புத்தகத்தை இந்து மதம் குறித்தோ, தமிழ்ச் சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றியது குறித்தோ எழுத இயலுமா என்பது படிக்கும்போதே என் மனதுள் ஓடிக் கொண்டிருக்கிற கேள்வி. சுஜாதாவின் கதை மாந்தர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர் என்கிற பொருள்பட்டதுமே, எதிர்ப்புகள் தெரிவித்து அந்தக் கதையை மேலும் தொடர விடாமல் நிறுத்திய சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதும் நினைவுக்கு வருகிறது. எந்தப் புத்தகத்தையும் தடை செய்வதிலோ எதிர்ப்பதிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. உணர்வுவயப்படாமல் விஷயங்களை எதிர்கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இந்தியர்களும் தமிழர்களும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம்தான்.

குறிப்பு: The Da Vinci Code புத்தகம் பற்றிய இரு கட்டுரைகளைப் பின்வரும் இடுகையில் காணலாம்.

http://www.nytimes.com/2004/04/27/books/27CODE.html ?hp

http://www.danbrown.com/novels/davinci_code/nytimes.html

**** **** ****

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

பி.கே. சிவகுமார்


காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – நான்காம் தொகுதி:

பாரதி தம்முடைய நூல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வரிசைக்கிரமமாய் வெளிக்கொணர விரும்பினார். அதன் பொருட்டு நிதி சேகரிப்புக்காக அவர் 28 ஜீன் 1920ல் எழுதிய ஆங்கிலச் சுற்றறிக்கை இன்று வரலாற்று ஆவணம். குறைந்தபட்சம் நூறு ரூபாயையாவது எதிர்பார்த்து பாரதி அன்று எழுதியக் கடிதத்துக்கு சரியான பதிலில்லாமல்போனது பாரதி போன்ற ஒரு கவிஞனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று அறிய நேரும்போது இன்றும் உண்டாகிற வருத்தத்துக்கு அளவில்லை. தன் படைப்புகள் மீதிருந்த நம்பிக்கையினாலும் அவை நிச்சயம் விற்று விடும் என்கிற ஆர்வத்திலும் 40 தனிப்புத்தகங்களாக அவற்றை வெளியிடவும், ஒவ்வொரு புத்தகத்திலும் முதல் பதிப்பாக 10,000 பிரதிகள் அடிக்கவும் பாரதி திட்டமிட்டிருந்தது அவன் பெருங்கனவைக் காட்டுகிறது. கிடைக்கும் நிதியைக் கடனாகக் கொண்டு ஸ்டாம்பு ஒட்டிப் புரோ-நோட்டு எழுதித் தரவும், மாதம் 2 சதவீதம் வட்டி தரவும் பாரதி முன்வந்திருந்தது கவிஞனின் தன்மானத்தையும் ஜனநாயகத் தன்மையையும் காட்டுகிறது. பாரதி போன்ற கவிஞனைத் தமிழ் கூறும் நல்லுலகம் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் எதிர்பார்த்தபடி கொண்டாடி இருந்தால்தான் அது ஆச்சரியப்படத்தக்க விஷயமாக இருந்திருக்குமோ என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது.

ஆனாலும், பாரதிக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழிலும், வரலாற்றிலும் பாரதியின் இடத்தைப் பெற்றுத் தரவும் நிலை நிறுத்தவும் அயராது உழைத்திருக்கிற கணக்கற்ற பாரதிப் பித்தர்களுக்குக் காலம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் வரிசை நீண்டு நெடிந்தது. வாழையடி வாழையாய் வளர்வது. பாரதிக்குப் பின் வந்த அனைவருமே பாரதியின் வாரிசுகள்தான் என்று ஜெயகாந்தன் சரியாகத்தான் சொன்னார். வ.ரா, ரா.அ. பத்மநாபன், ஜீவா, இளசை மணியன், பாரதிதாசன், ஜெயகாந்தன், தொ.மு.சி.ரகுநாதன், சீனி விசுவநாதன், பெ.சு.மணி என்று பலப்பலர் அவர்களுள் அடங்குவர். பாரதியை முன்னெடுத்துச் சென்றதிலும், தமிழில் அவனிடத்தை மீட்டுத் தந்ததிலும் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு சற்றும் குறைவானதும் அல்ல.

பாரதியைப் பற்றி இன்று தமிழில் கணக்கற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், பாரதி கனவு கண்ட விதமாக அவன் படைப்புகளை கால வரிசைப்படுத்தி வெளியிட்டவர்கள் யாருமில்லை என்ற பழி பாரதி தொண்டர் சீனி.விசுவநாதன் மூலம் கழிந்து வருகிறது. இதற்கு முன்னர் பாரதியைப் பற்றி ஏறக்குறைய 25 அரிய நூல்களை வெளியிட்டவர் சீனி.விசுவநாதன். தன் வாழ்க்கையையும் முயற்சிகளையும் பாரதிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர். கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளின் மூன்று தொகுதிகளை ஏற்கனவே சிறப்பாக வெளியிட்டவர். நான்காம் தொகுதி இப்போது வெளிவந்திருக்கிறது. தனிமனித முயற்சியாக இந்தப் பெரும் காரியத்தில் சீனி.விசுவநாதன் ஈடுபட்டுள்ளது, தொகுப்பில் காண நேரும் சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறது.

இத்தொகுப்பில் மொத்தம் 207 படைப்புகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னே இருக்கிற பதிப்பாசிரியரின் குறிப்பு வாசகருக்கு மிகவும் முக்கியமானது. கட்டுரை தொடர்பான வரலாற்றுத் தகவல்களையும், அதிலே குறிப்பிடப்பட்டிருக்கும் மாந்தர் தம் குறிப்புகளையும், இன்ன பிற விவரங்களையும் பதிப்பாசிரியர் குறிப்பு அளிக்கிறது. சீனி.விசுவநாதனின் அரிய பங்களிப்பு இது.

பாரதியை நேசிக்கிற ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய அரிய பெட்டகம் பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளின் தொகுதிகள். இதன் பிற தொகுதிகளையும் விரைவில் சீனி.விசுவநாதன் கொண்டுவர அவருக்கு இறையருள் புரிய வேண்டுகிறேன்.

(சீனி விசுவநாதன் முகவரி : 2 மாடல் ஹவுஸ் லேன், சி ஐ டி நகர், சென்னை 600 035)

**** **** ****

கடத்தலும் கடத்தல் விளையாட்டு விளையாடுகிற குழந்தைகளும்:

ஒரு குழந்தை காணாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், ஓடிப்போனவர்கள், துரத்தப்பட்டவர்கள் என்று காணாமல் போகிற குழந்தைகளை வகைப்படுத்துகிறார்கள். 1999-ல் எடுக்கப்பட்டு 2002ல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி – 1999ல் 797,500 குழந்தைகள் அமெரிக்காவில் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 58,200 குழந்தைகள் குழந்தையின் குடும்பத்தைச் சாராதவர்களால் கடத்தப்பட்டனர். 203, 900 குழந்தைகள் குடும்பத்தினரால் கடத்தப்பட்டனர். கடத்தப்படுகிற குழந்தைகள் கொலை செய்யப்படுவது அரிதாக நிகழ்வது என்று 1997ல் வெளியான அறிக்கை ஒன்று சொல்கிறது. ஆனாலும், சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் காணாமல் போன குழந்தைகளைக் குறித்து மோசமான விளைவுகளை எதிர்பார்த்துக் கவலை கொள்ளச் செய்கிறது. கொலை செய்யப்படுகிற குழந்தைகளில் 74 சதவீதத்தினர் கடத்தப்பட்டு மூன்று மணிநேரங்களுக்குள் அத்தகுத் துயர முடிவை எதிர்கொள்கின்றனர் என்பதும் நெஞ்சை உறைய வைக்கிற நிஜம்.

கடத்தப்படும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு இரையாவது இங்கு வளர்ந்து வருகிற அதிர்ச்சியூட்டுகிற நிகழ்வாகிவிட்டது. இதைத் தடுக்கும் பொருட்டே மேகன்ஸ் லா (Megan ‘s Law) என்கிற சட்டம் அமுலுக்கு வந்தது. அச்சட்டத்தின்படி, சுற்றுவட்டாரத்தில் வாழ்கிற பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வரலாறுடைய நபர்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள இயலும். ஆனாலும், இவைகளை மீறிக் குழந்தைகள் கடத்தப்படுவதும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்தே வருகிறது. புளோரிடாவில் சார்லி புருசியா (Carlie Brucia) என்னும் 11 வயதுப் பெண் குழந்தை சமீபத்தில் பாலியல் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் கைப்பிடித்து நடத்தச் செல்லப்பட்டுக் காணாமல் போன காட்சி வீடியோவில் பதிவாகி வந்து அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரார்த்தனைகளும் போலிஸின் பிரயத்தனங்களும் பலிக்காமல்போய் சில நாள்களுக்குப் பின் அந்தக் குழந்தையின் உயிரற்ற உடலையே போலீஸார் மீட்க முடிந்தது. அந்தக் குழந்தையைக் கைப்பிடித்து கடைசியாக அழைத்துச் சென்ற நபர் இடையில் கைது செய்யப்பட்டும் குழந்தையைக் காப்பாற்ற இயலவில்லை. அதனாலேயே, குழந்தை காணவில்லை என்றாலே மனம் மோசமான ஒன்றையே நினைத்துக் கவலையுறுகிறது.

மரணதண்டனை கூடாது என்று நம்புகிறவர்களுள் நானும் ஒருவன். ஆனாலும், குழந்தைகளுக்கு இப்படி நேர்கிற கொடுமைகளைப் பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. ஒரு தந்தையாக அழுகையும், வேதனையும், கோபமும் பிறக்கின்றன. குழந்தைகளைச் சூறையாடிக் கொல்கிற பாதகர்களைத் தூக்கில் போட வேண்டும் என்கிற ஆவேசமும் சிலநேரங்களில் வருகிறது.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் பயிலும் ஆட்ரே ஸீலர் (Audrey Seiler) என்ற இருபது வயது இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி சமீபத்தில் காணாமல் போனது அமெரிக்கர்களைப் பதட்டம் கொள்ளச் செய்தது. ஆட்ரே உயர்நிலைப் பள்ளியில் வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் அணியின் தலைவியாக இருந்தவர். வகுப்பில் படிப்பில் மூன்றாவது இடம் பெற்றுக் கல்லூரியில் சேர்ந்தவர். மற்றவர்கள் ரோல் மாடல் என்று சொல்கிற அளவுக்குப் பள்ளியிலும் அவர் வாழ்ந்த சுற்றுப்புறத்திலும் பெயர் பெற்றவர். அவர் கல்லூரி டார்மிலிருந்து (dorm) அவர் கடைசியாக வெளியேறியக் காட்சியைத் தொலைகாட்சியில் பார்த்த அனைவருமே அவர் நல்லவிதமாக திரும்ப வேண்டும் என்று ஒரு கணமாவது வேண்டிக் கொண்டவர்கள்தான்.

நல்லவேளையாக இந்த முறை எதிர்பார்த்த எதிர்பாராதது எதுவும் நிகழ்வில்லை. ஆட்ரே சில நாள்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைத் தேடிய போலீஸீம், உள்ளூர் மக்களும், அவர் நண்பர்களும், அவர் ஓய்வு நேரச் சேவையாகப் பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி மாணவர்களும் மட்டுமில்லாமல் அமெரிக்காவே சந்தோஷப் பெருமூச்சு விட்டது. அவரைக் கடத்தியவரைத் தேடுகிற பணி நடந்தது. பின்னர், வெளிவந்த தகவல் ஆச்சரியமளித்தது. ஆட்ரேவை யாரும் கடத்தவில்லை. இந்த நாடகத்தை அவரே நடத்தியிருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்க ஆரம்பித்தனர். காணாமல் போன குழந்தைகளின் வகைகளில் ‘தன்னைத் தானே கடத்திக் கொண்டோர் ‘ என்று ஒரு புதிய வகையைச் சேர்க்க வேண்டுமோ ?

படிப்பிலும், சமூகத்திலும் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிற, அனைவராலும் விரும்பப்படுகிற ஆட்ரே தன்னைத்தானே கடத்திக் கொள்வதற்கான சமூக, உளவியல் காரணங்கள் என்னவென்று ஆராய வேண்டும். ‘தனிமையை வேண்டி ‘ அவர் இதைச் செய்ததாக முதலில் செய்திகள் வந்தன. அவர் பாய் பிரண்டின் கவனத்தைப் பெற அவர் இதைச் செய்தார் என்று இப்போது சொல்கிறார்கள். இந்தக் காலத்துக் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குப் பெற்றோராகவும் நண்பனாகவும் இருப்பதே இந்த உலகத்தில் கடினமான வேலை என்பேன். ஆட்ரே மீது போலீஸார் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக இரண்டு மென்மையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்ரேவுக்குத் தேவை தண்டனை அல்ல, ஆதரவே என்று சில பத்திரிகைகள் எழுதியுள்ளன. நானும் அவ்வாறே நினைக்கிறேன்.

தண்டனைகளால் குழந்தைகளை விட்டு நாம் தூரவே செல்கிறோம். அன்பும் ஆதரவுமே குழந்தைகளுடனான நம்முடைய நீண்ட கால உறவில் உதவும். ஆனால், ஆட்ரே போன்ற குழந்தைகள் இப்படி செய்வதால், இது ‘புலி வருகிறது ‘ கதையாக மாறி, தேவையான நேரத்தில் போலீஸ் மற்றும் நீதித்துறையினரை சரியாகச் செயல்படாமல் செய்துவிடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது. ஆனால், புலி வருகிறதோ இல்லையோ, புகார் வந்தால், காவல்துறையினர் அதைச் சிரமேற்கொண்டு விசாரிப்பவர்களாகவே இங்கே இருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.

குழந்தைகள் வீடு விட்டு வெளியே போய், படித்து, விளையாடி முடித்துவிட்டு, பத்திரமாக வீடு திரும்பும் வரை, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிற பெற்றோரில் நானும் ஒருவன். அந்த வகையில் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பத்திரத்துக்கும் உத்தரவாதமளிக்கக் கூடிய எந்தச் சட்டத்தையும் ஆதரிப்பவனாக நான் இருப்பேன். ஆனால், சட்டங்களை விடவும் குழந்தைகளிடையே நாம் வைத்திருக்கிற நல்லுறவு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. இந்த விஷயத்தில் என் குழந்தைகளின் உற்ற தோழன் என் மனைவிதான். அவர்களுடன் நான் செலவிடும் நேரம் மிகக் குறுகியது. என் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் சமீபகால உறுதிமொழி.

**** **** ****

pksivakumar@att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

பி.கே. சிவகுமார்


ஹார்வார்டில் கொடி நாட்டும் பெண்கள்:

பெண்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். வருகிற இலையுதிர்காலத்தில் ஹார்வார்டில் முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆண்களைவிட அதிகம் என்று டைம் எழுதியிருக்கிறது. வித்தியாசம் அதிகமில்லை. மூன்றுதான். இது என்ன ? நம்ம ஊரு எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் டூ முடிவுகளில் பெண்கள் ஆண்களை முந்திச் செய்கிற சாதனைகளைவிடவா என்று கேட்கிறீர்களா ? அதுவும் சரிதான்.

மேலும் இலையுதிர்காலத்தில் முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 18.9% மாணவ மாணவிகள் ஆசிய அமெரிக்கர்களாம். இதில் பெரும்பகுதி சீன மற்றும் இந்திய மூலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயம். 10.3% ஆப்பிரிக்க அமெரிக்கர்களும், 9.5% லத்தினோஸ் (ஸ்பானிய மொழி பேசுபவர்கள்) என்றும் டைம் எழுதுகிறது. இம்மூன்று சதவீதங்களுமே இக்குறிப்பிட்ட பிரிவுகளில் சாதனைகளாம்.

மற்றவர்களை ஒப்பிடும்போது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கல்வியில் அவ்வளவாகத் தொடர்வதில்லை என்று ஒரு பிம்பம் இங்கே நிலவுகிறது. நானும் கொஞ்ச நாள் அப்படி நினைத்திருந்தேன். ஆனால், லத்தினோஸ் என்கிற ஸ்பானிய மொழி பேசுபவர்கள்தான் ஒப்பிடும்போது குறைந்த அளவில் மேற்படிப்பு வரைச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறிய வந்தேன். உதாரணமாக, எத்தனை சதவீதம் பேர் உயர்நிலைக் கல்வி வரை முடிக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தில் லத்தினோஸ் கடைசி இடத்தில் இருப்பதாக கடந்த காலத்தில் புள்ளிவிவரங்கள் சொல்லின. வெள்ளைக்காரர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் இடையே எத்தனை சதவீதம் உயர்நிலைப் பள்ளியை முடிக்கிறார்கள் என்பதில் இருவருக்கும் அதிகப்பட்சம் 3 சதவீதத்துக்கு மேல் வித்தியாசம் இல்லை என்று படித்த ஞாபகம். பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவர்க்கும் அமெரிக்காவில் இலவசக் கல்வி என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நடத்தும் பள்ளிக்கூடங்கள் பெரும்கட்டணத்தை வசூலிக்கின்றன. கல்லூரிக்குப் போகும்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசமாகத் தந்ததற்கும் சேர்த்து வசூலித்து விடுகிறார்கள்.

**** **** ****

நதிகள் இணைப்பும் ரஜினி சால்ஜாப்பும்:

பா.ஜ.க.வுக்குத் தான் ஓட்டுப் போடப் போவதற்குக் காரணமாக நதிநீர் இணைப்பை அக்கட்சித் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ரஜினி. ரஜினி காரணமே சொல்லாமல் பா.ஜ.க.வுக்கு அவர் ஓட்டு என்று சொல்லியிருந்தாலும் அவர் ரசிகர்கள் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அவர் சொல்லியிருப்பது சால்ஜாப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ரஜினியின் அறிக்கையைப் படித்தவுடன் தேர்தலில் நிற்கிற பிற கட்சிகள் தாங்கள் எவ்வளவு ஆண்டுகளாய் நதிகளின் இணைப்புக்குக் குரல் கொடுத்து வருகிறோம் என்று பட்டியலிட ஆரம்பித்து விட்டன. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புப் பற்றிச் சொல்லியிருந்தால் ரஜினி தன் ஓட்டை அனைத்துக் கட்சிகளுக்கும் அளித்துச் செல்லாத ஓட்டாகியிருப்பாரா என்கிற கேள்வி குதர்க்கமானதோ யூகத்தின் அடிப்படையிலானதோ இல்லை. நதிகளின் இணைப்பை எதிர்க்கிற எந்தக் கட்சியும் இருக்க முடியாது. நதிகளின் இணைப்பு அனைத்துக் கட்சிகளின் கொள்கை என்கிற அரசியலாகி வருடங்கள் பல ஓடிவிட்டதை ரஜினி அறியவில்லை என்றும் சொல்ல இயலாது. தபசில் இருந்தாலும் எது நடக்கிறது எங்கே நடக்கிறது என்பதையும் எப்போது வரவேண்டும் என்பதையும் நன்கறிந்தவர் ரஜினி. ரஜினி ஒரு கோடி ரூபாயை நதிகளின் இணைப்புக்குத் தருகிறேன் என்று அறிவித்தபோதும் அதற்கடுத்த ஆண்டுகளிலும் பா.ஜ.க.தான் ஆட்சியிலிருந்தது. அடுத்தத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்காமல், பா.ஜ.க. உடனடியாகவே நதிகளின் இணைப்பைக் கடந்த ஆட்சியிலேயே செயல்படுத்தத் தொடங்கி இருக்கலாம். ஏன் செய்யவில்லை என்றெல்லாம் ரஜினி யோசிக்க மாட்டார். யோசிப்பார் என்று எதிர்பார்ப்பதும் கூடாது.

சொந்தக் காரணங்களுக்காக அல்லது காரணங்கள் இல்லாத அபிமானம் காரணமாக ரஜினி பா.ஜ.க.க்கு இத்தேர்தலில் ஓட்டளிக்க முடிவெடுத்து விட்டார். அதற்கு நியாயம் தேடி நதிநீர் இணைப்பை இழுக்கிறார் என்று தோன்றுகிறது.

நதிகளின் இணைப்பைப் பற்றி எடுத்துக் கொண்டால், தமிழில் அது குறித்து விரிவாகவும் அறிவுபூர்வமாகவும் உருப்படியாகவும் எழுதியிருப்பவர் பழ.நெடுமாறன் ஒருவர் மட்டுமே என்று எண்ணுகிறேன். அவர் புத்தகத்தின் சில பகுதிகளை ஞாநி சில மாதங்களுக்கு முன் தீம்தரிகிடவில் வெளியிட்டார். பழ.நெடுமாறன் தேர்தலில் நின்றால், நதிநீர் இணைப்புக் குறித்து உருப்படியாகப் பேசியதற்கும் எழுதியதற்கும் ரஜினியின் ஓட்டைக் கட்டாயப்படுத்திக் கேட்கலாம். அல்லது, அப்போது பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்க ரஜினி வேறு காரணங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்குமோ ?

ரஜினியும் அவர் ரசிகர்களும் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். தம்முடைய பலத்தை நிரூபிக்கட்டும். அதற்காக அடுத்தவர்களை முட்டாளாக்கும் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

**** **** ****

வார விடுமுறையில் வாசித்தது:

கடந்த வார விடுமுறையில் படித்த புத்தகம் ‘அகென்ய்ன்ஸ்ட் ஆல் எனிமிஸ் ‘. ரிச்சர்ட் கிளார்க் எழுதியது. அமெரிக்காவின் பயங்கரவாத சமாளிப்பு/எதிர்ப்புத் துறையின் தலைவராக இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியவர் கிளார்க். அவரை அரசியல்வாதியின் சாதூர்யம் கொண்டவர் என்று இங்கே பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், புத்தகத்தைப் படிக்கும்போது அரசியல் பேசுகிறார், தன் சொந்த நலன்களுக்காக எழுதியிருக்கிறார் என்கிற எந்த எண்ணமும் வாசகர் மனதில் தோன்றாமல், அவர் எழுதியிருப்பதைச் சராசரி வாசகர் பெருமளவு நம்பச் செய்கிற விவரங்களுடனும் நடையுடனும் புத்தகம் இருப்பது கிளார்க்கின் வெற்றி. சமீபத்தில் அவர் அளித்த வாக்குமூலமும் செப்டம்பர் 11-ல் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் கடமையில் தவறிவிட்டேனென்று மன்னிப்புக் கேட்டதும் நீங்கள் அறிந்ததே.

புத்தகம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. செப்டம்பர் 11, 2001 அன்று காலையில் வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுகிற முதல் அத்தியாயம் (ஏறக்குறைய 34 பக்கங்கள்) பல புதிய தகவல்களையும், அந்தத் துயர நாளின் பரபரப்பையும் அந்தச் சோகத்தை அமெரிக்க அரசாங்கம் எப்படி எதிர்கொண்டது என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒரு துப்பறியும் கதையின் அல்லது சுவாரஸ்யமான வரலாற்று நாவலின் வேகத்துடன் புத்தகம் பேசுவது அதை ஒரே மூச்சில் தொடர்ந்து படித்து முடித்துவிட உதவுகிறது. ஏறக்குறைய 275 பக்கங்கள். நான் நேரமின்மையால் முதல்நாள் 70 பக்கங்களும், இரண்டாம் நாள் மீதியும் படித்தேன். அமெரிக்கர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தார்களேயானால், புஷ் மீண்டும் ஜெயிப்பது கஷ்டம். இந்தப் புத்தகத்தைப் பற்றி நேரம் கிடைத்தால் விவரமாக எழுத வேண்டும். சுருக்கமாக வாசக அனுபவம் எழுதச் சொன்னால் ஒரு வார்த்தையில் சொல்லலாம். படியுங்கள்.

**** **** ****

குளோரியா ஸ்டேநெம்:

குளோரியா ஸ்டாநெம் (Gloria Steinem)ஐ நீங்கள் அறிந்திருக்கக் கூடும். A Thousand Indias என்கிற நூலின் ஆசிரியர். நியூயார்க் இதழைத் தொடங்கியவர்களுள் ஒருவர். அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுபதுகளில் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். Ms என்கிற இதழைத் தொடங்கியவர். சமீபத்திய டைம் இதழ் (ஏப்ரல் 5, 2004) ஒன்றில் 10 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். அவற்றுள் – பின்வரும் கேள்விகளுக்கு அவர் சொல்லிய பதில்கள் கவனத்துக்குரியவை. எழுபது வயதிலும் என்ன போடு போடுகிறார் என்று பாருங்கள். போகிற போக்கில் அவசரமாக நான் செய்திருக்கிற தமிழாக்கத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

‘காலம்காலமாகப் பெண்கள் செய்துவருவதை ஆண்கள் செய்வதற்கானக் காலம் வந்துவிட்டது என்று சொல்லும்போது நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் ? ‘ என்கிற கேள்விக்குப் பின்வருமாறு பதில் சொல்லியிருந்தார்.

‘வேலைக்குப் போகிற பெண்கள் குழந்தை கவனிப்பு, குடும்பத்தை நிர்வகித்தல் போன்ற வேலைகளைச் செய்யும் வரை, அவர்கள் ஒரு வேலையை அல்ல, இரண்டு வேலைகளைச் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், முக்கியமாக – பெண்கள் மட்டுமே அன்பு காட்டியும் சீராட்டி வளர்க்கவும் செய்கிறார்கள், ஆண்களால் அவற்றைச் செய்ய இயலாது என்கிற எண்ணத்துடன் குழந்தைகள் வளர்கிறார்கள். பெண்கள் எந்த அளவுக்கு அக்கறையுடன் குழந்தைகளை வளர்க்கிறார்களோ அதே அளவுக்கு அக்கறையுடன் ஆண்களும் குழந்தைகளை வளர்க்கிற சமூகத்தை அடைவது அத்யாவசியமானதாகும். ‘

‘சில இளம்பெண்கள் பெண்ணியவாதிகள் என்கிற அடையாளத்தை விட்டு ஓடுவதாகத் தெரிகிறது. பெண்களின் உரிமைகள் குறித்த தாகமுடையவர்களாக்க அவர்களை எப்படி உற்சாகப்படுத்துவீர்கள் ? ‘ என்கிற கேள்விக்கு அவர் சொல்லியிருக்கிற பதில் அமெரிக்காவிலும்கூட இன்னும் பெண்விடுதலை முழுமையாகச் சாத்தியப்படவில்லை என்பதை உணர்த்தும்.

‘இளம்பெண்களுக்கு இந்த அடையாளத்துடன் பிரச்னை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்பதே இன்னும் தெரியவில்லை என்று அர்த்தம். ஒரு வேலையை வாங்க முயற்சித்தபோது என் தலைமுறையைச் சார்ந்த பெண்களுக்கு உண்டான விழிப்புணர்வு, இளம்பெண்களுக்கு 10 அல்லது 15 ஆண்டுகள் வேலையில் இருந்த பிறகு, அவர்களுக்கு பதவி உயர்வுகள் மறுக்கப்படும்போது ஏற்படுகிறது. பெண்கள் இளமையில் பழமைவாதியாக இருக்கிறார்கள். வயதாக வயதாக அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறுகிறார்கள். ஏனென்றால், வயதாக அவர்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள். எனவே, ஓர் இளம்பெண் இன்னும் பெண்ணியவாதியாகவில்லை என்றால், கொஞ்சம் காத்திருங்கள் என்றே நான் சொல்வேன். ‘

‘ஓரினத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்குவதற்கானப் போராட்டம் முக்கியமானப் போராட்டமா அல்லது பிற முக்கியமான பெண்களின் பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதலா ? ‘ என்கிற கேள்விக்கு அவர் சொல்லியுள்ள பதில் அதைப் பெண்களின் பிரச்னை என்கிறது.

அவர் சொல்கிறார். ‘இது பெண்களின் பிரச்னை. பால்ரீதியான வித்தியாசம் பெண்கள் குழந்தை பெறுவதற்காக என்னும்போது மட்டுமே சரி என்கிற சித்தாந்தமே பெண்களை ஒடுக்குகிறது. பெண்களின் ஆரோக்கியம் பால்வித்தியாசத்தை இனப்பெருக்கத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதில் இருக்கிறது. இது ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் பொருந்தும். புஷ்ஷீம் வலதுசாரி அணியினரும் அளவுக்கு அதிகமாக இவ்விஷயத்தில் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், ஓரினத் திருமணங்களை எதிர்க்கிறவர்கள்கூட அரசியல் சட்டத் திருத்தம் வேண்டுமென்று கேட்கவில்லை. ‘

**** **** ****

மாணவர்களைப் பெயிலாக்குவது சரியா ?:

சரியாகப் படிக்காத மாணவர்களைப் பெயிலாக்குவது இந்தியக் கல்விமுறையில் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது மூன்றாம் வகுப்புவரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கக்கூடாது என்கிற வழிமுறையைக் கொண்டுவந்தார். அதற்காக – அந்தக் காலத்தில் அவர் விமர்சிக்கவும் பட்டார்.

சிகாகோ நகரத்தில் பெயிலாக்குகிற நடைமுறை இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் – மூன்றாம் வகுப்பில் பெயிலானவர்களுக்கு அடுத்த வருடம் நடந்த தேர்வில் அவர்களிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படவில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்பில் பெயிலானவர்களுக்கு அடுத்த வருடம் நடந்த தேர்வில், மாணவர்களின் தரம் முன்னைவிட மோசமாக இருக்க வாய்ப்பிருப்பதையும் அறிந்திருக்கிறார்கள். (ஆதாரம்: டைம் ஏப்ரல் 5, 2004)

எனவே, ஒரு குழந்தையை ஒரே வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்கள் இருத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

என்னைக் கேட்டால், எட்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. படிப்பில் மோசம் என்று தோன்றுகிற குழந்தைகளைப் பயிற்றுவிக்க பெயிலாக்குவது தவிர வேறு எத்தனையோ உருப்படியான வழிகள் உள்ளன.

**** **** ****

அனைவர்க்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

**** **** ****

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்