துக்ளக் ‘சோ ‘வின் கனவு!

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

சோதிப் பிரகாசம்


அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த துக்ளக் சோவின் முகத்தில் ஒரு மலர்ச்சி! உதடுகளில் ஒரு புன்னகை! இனிமையான கனவு ஒன்றினை அவர் கண்டு கொண்டு இருந்தார்.

வைகறையில் எழுந்து நீராடி விட்டு, காலை வேளைப் பூசைகளையும் முடித்துக் கொண்டு விட்டுத் தெருவில் இறங்கி சோ நடக்கிறார்.

அவரது இடுப்பில் தாறுபாய்ச்சிக் கட்டப் பட்டு இருந்த ஒரு வேட்டி! தோள்களைச் சுற்றி ஒரு துண்டு! மார்பில் பூணூல்! தலையிலோ உச்சிக் குடுமி!

வீதியின் ஓரங்களில் ஆங்காங்கே அமர்ந்து சம்ஸ்க்ருத மந்திரங்களை உச்சிக் குடுமிச் சிறுவர்கள் உச்சாடனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுவது போல தலையைப் பல முறை அசைத்து, ஆசி வழங்குவது போல கைகளை உயர்த்திக் கொண்டு அவர் நடக்கிறார்.

இடுப்பில் ஒரு கோவணமும் வெற்று உடம்புமாக வீதியில் நின்று கொண்டு இருந்த ஒரு பெரியவர், தண்டன் இட்டுச் சோவின் கால்களில் விழுந்து வணங்குகிறார்.

‘சீச்சீ! ஒத்திப் போ, ஒத்திப் போ! ‘

பெரியவரை அருவருப்பாகப் பார்த்து விட்டு அங்கு இருந்து அகலுகிறார் சோ.

அழுக்கு அடைந்த துண்டு ஒன்றினை இடுப்பில் கட்டி இருந்த ஒரு பெரியவர், முழங்கால் இட்டு அவரை வணங்குகிறார்.

‘ம். . .ம். . . சரி, சரி. . ., போ. . .போ. . .! ‘

மேலும் நடக்கிறார் சோ.

அவருக்கு எதிராக வந்து கொண்டு இருந்த ஒருவர் அவருக்கு வணக்கம் கூறுகிறார். பட்டு வேட்டியும் பட்டுத் துண்டும் அணிந்து இருந்த அவர், ஒரு பண்ணையக் கிழாராக இருக்க வேண்டும்.

‘சவுக்கியம்தானே! ‘

சோவை அவர் நலம் விசாரிக்கிறார்.

‘நன்னா இருக்கேன். நீங்க நன்னா இருக்கீங்களோன்னோ ? ‘

அவரைப் பார்த்துப் புன்னகைத்தவாறே சோ நடந்து கொண்டு இருக்கிறார்.

சோவைக் குறி வைத்துக் கொண்டு இருந்த கொசுவுக்கு இந்தக் கனவு பிடிக்க வில்லை போலும்! அவரது முகத்தைத் தாக்கி அரத்தத்தை அது உறிஞ்சத் தொடங்கியது.

கனவு கலைந்து போன சோ, புரண்டு புரண்டு படுக்கிறார். அரை-குறையான அந்த உறக்கத்தில் மீண்டும் ஒரு கனவு!

மேல் நாட்டுப் பாணியில் பச்சை நிற உடை அணிந்து சாலையில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார் சோ.

தண்டன் இட்டு அவர் கால்களில் முன்னர் விழுந்து கிடந்து இருந்த பெரியவரின் பல-தலைமுறைப் பேரன் ஒருவன் அவரைப் பார்க்கிறான்; சோவின் காதில் விழும் படி சத்தமாகத் தனது நண்பனிடம் கூறுகிறான்:

‘டேய்! துக்ளக் சோ போறார்டா, அந்தக் காலத்தில இவர்தான்டா பெரிய சிரிப்பு நடிகரு! ‘

கொஞ்சம் வேகமாக நடக்கத் தொடங்குகிறார் சோ.

முழங்கால் இட்டு முன்னர் அவரை வணங்கி நின்று இருந்த பெரியவரின் பல-தலைமுறைப் பேரன் ஒருவன் அவர் போவதைக் கவனிக்கிறான்; மிகவும் சத்தமாகத் தனது நண்பனிடம் கூறுகிறான்:

‘சோவைப் பார்த்தியாடா ? இவ்வளவு வேகமாக எங்கே போய்க்கிட்டு இருக்காரு ? ‘

‘எங்கே போய்டப் போறாரு ? யாராவது தலைவர், நடிகர்ன்னு ஆலோசனை சொல்லப் போய்க்கிட்டு இருப்பாரு! ‘

‘இவருக்குதான் ஒரு கொள்கையும் கிடையாதேடா! இவர் போய் என்ன ஆலோசனை சொல்லப் போறாரு ? ‘

சற்றுத் திரும்பிப் பார்க்கிறார் சோ; ‘கேள்வி-பதில் ‘ பகுதியில் கவனிக்கப் பட வேண்டியவர் என்று எண்ணியவாறே முன் நகர்கிறார்.

முன்னர் வணக்கம் கூறி நின்று இருந்த பெரியவரின் பல-தலைமுறைப் பேரன் ஒருவன் அவர் எதிரில் வருகிறான்.

‘கொஞ்சம் நில்லுங்க, சார்! வயசு ஆக ஆக மனுசனுக்கு ஒரு பக்குவம் வரும்னு நான் கேள்விப் பட்டு இருக்கேன். உங்க தலையில என்னன்னா மத வெறி ஏறிக் கிட்டு இருக்கு! நாளைய சமுதாயத்தை மனசில வச்சி எழுதுங்க, சார்! ‘

திடுக்கிட்டுக் கண் விழித்தார் சோ.

கோவத்தில் அவரது உடம்பு நடுங்கிக் கொண்டு இருந்தது. தம்மை அறியாமலே அவர் கத்தத் தொடங்கினார்:

‘ஹிந்து மத துவேஷம் ஒழிக!

ஹிந்து மத துவேஷம் ஒழிக!

ஹிந்து மத துவேஷம் ஒழிக! ‘

வானத்து மேகங்கள் இடையே உலகை வலம் வந்து கொண்டு இருந்த சிவ பெருமானின் காதுகளில் இந்தக் கூக்குரல் விழுந்தது.

‘என்ன ஆயிற்று இவனுக்கு ? சிரிக்கச் சிரிக்க எழுதுகின்ற இவனது நெஞ்சில் இப்படி ஒரு கூக்குரலா ? ‘

தரை இறங்கிய சிவ பெருமான் சோவின் முன்னால் வந்து நின்றார்.

புலித் தோல் உடையும் கழுத்தில் ஒரு பாம்பும் கையில் ஒரு சூலமுமாகத் தம் முன்னால் நின்று கொண்டு இருந்த சிவ பெருமானைக் கண்டதும் சோவிற்கு உடல் எங்கும் வியர்த்துக் கொட்டியது.

தம்மைக் கடத்திச் செல்வதற்காகக் காட்டில் இருந்து வீரப்பன்தான் மாறு வேடத்தில் வந்து விட்டானோ ? என்று அஞ்சிய சோ சத்தமாகக் கத்தினார்:

‘ஓடி வாங்க. . . ஓடி வாங்க. . . எல்லோரும் வாங்க. . . என்னைப் பிடிக்கிறதுக்கு வீரப்பன் வந்துட்டான்! ஓடி வாங்க. . . ஓடி வாங்க. . .! ‘

சோவைப் பரிதாபமாகப் பார்த்தார் சிவ பெருமான்.

‘அஞ்சாதே, மகனே! நான்தான்! சிவன்! ‘

‘இல்லை. . . இல்லை. . . நான் நம்ப மாட்டேன். என்னை ஏன் நீ பார்க்க வர வேண்டும் ? ‘

‘நானாக உன்னிடம் வந்தால் அது வாழ்வு! நீயாக என்னிடம் வந்தால் அது சாவு! ‘

‘என்ன இது, வாழ்வு-சாவுன்னுட்டு! நீ யார் என்று சொல்!

‘நான்தான் சொன்னேனே, சிவன் என்று! ‘

‘அட, கடவுளே! சிவ பெருமானா ? என்னைத் தேடி நீ ஏன் வந்தாய் ? ‘

‘ ‘ஹிந்து மத துவேஷம் ‘ பற்றி நீ கூக்குரல் எழுப்பினாயே, அதனால் வந்தேன்! ‘

பதற்றம் குறைந்து கொஞ்சம் அமைதி ஆனார் சோ!

‘சரி, மகனே! என்னைக் கண்டு நீ ஏன் அஞ்சுகிறாய் ? ‘

‘அஞ்ச வில்லை, அஞ்ச வில்லை! யாரைக் கண்டும் நான் அஞ்ச மாட்டேன். அவ்வையைத் தேடி முருகன் செல்வான் என்றுதான் நான் கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால், நீயோ என்னைத் தேடி வந்து இருக்கிறாய்! அதனால்தான் கொஞ்சம் பதற்றம்! ‘

கடகட வென்று சிரித்தார் சிவ பெருமான்.

‘எனது மகன் முருகன் இருக்கிறானே, அவனுக்கு அறிஞர்களைத்தான் பிடிக்கும். ஆனால் எனக்கோ உன் போன்றவர்களைத்தான் பிடிக்கும்! ‘

‘அப்படி என்றால், நான் அறிஞன் இல்லை என்கிறாயா ? ‘

மீண்டும் சிரித்தார் சிவ பெருமான்.

‘உன்னை எனக்கு நன்றாகத் தெரியும். ‘

‘அது சரிதான்! படைத்தவன் நீ! உனக்கு எதுதான் தெரியாது! ‘

சிவ பெருமான் அமைதி ஆனார்.

‘என்ன பேசாமல் இருக்கிறாய்! என்னை நீ படைக்க வில்லையா ? ‘

சிரிப்பை அடக்கிக் கொள்ள முடிய வில்லை சிவ பெருமானுக்கு! சிறிது அடக்கிக் கொண்டு அவர் கூறினார்:

‘உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், மகனே! ஒரு கோமாளியாக நீ பேசுகின்ற பொழுது ஓர் அறிஞனாக நீ தெரிகிறாய்; ஓர் அறிஞனாக நீ பேசுகின்ற பொழுது ஒரு கோமாளியாக நீ தெரிகிறாய்! ‘

‘அப்படி என்றால், நீயும் ஒரு கோமாளிதான் என்று சொல்! ‘

பலமாகச் சிரித்தார் சிவ பெருமான்.

‘சரி, உனக்கு என்ன வேண்டும் என்று சொல். என்னைத் தேடி எதற்காக நீ வந்தாய் ? ‘

‘எனக்குத் தருவதற்கு நீ என்ன வைத்து இருக்கிறாய், மகனே ? ‘

‘என்னிடம் என்ன இருக்கிறது! தலையில் ஒரு முடி கூட இல்லை. அதையும் நீ பிடுங்கிக் கொண்டாய். ‘

‘சரி, மகனே, கவலைப் படாதே, உனக்கு என்ன வேண்டும் என்று சொல். நான் தருகிறேன். ஆனால், முடியை மட்டும் கேட்டு விடாதே! ‘

‘நீ மட்டும் தலையில் சடை முடி வைத்துக் கொள்ளலாமா ? கடவுளுக்குக் கூட இவ்வளவு கஞ்சத் தனமா ? ‘

‘நான் கஞ்சன்தான்! பசி-பட்டினியால் செத்து மடிகின்ற மனிதர்களுக்கு ஒரு வேளை சோறு கூட போட முடியாத கஞ்சன்! ‘

‘அவரவர் தலை-விதி அது! ‘

‘என் தலையை நீ தடவாமல் இருந்தால் சரி! உனக்கு என்ன வேண்டும் ? முதலில் அதைச் சொல்! ‘

‘ஹிந்து மத துவேஷம் ஒழிய வேண்டும்! ‘

‘என்னை மறந்து விட்டாயே, மகனே! ‘

‘உன்னை வணங்குவதற்காகத்தான் ஒரு ஹிந்துவாக நான் இருக்கிறேன். ‘

‘நான் ஹிந்து அல்லவே! ‘

‘நீ ஹிந்து இல்லையா ? என்ன சொல்லுகிறாய் நீ ? அப்படி என்றால், நீ முஸ்லிமா ? கிறிஸ்தவனா ? ‘

‘எனக்கு மதங்கள் இல்லை, மகனே! நான் கடவுள்! ஒரே கடவுள்! ‘

‘யாருடைய கடவுள் ? ‘

‘எல்லோருக்கும் கடவுள்! ‘

‘நீ சிவ பெருமான் என்பதை மறந்து விட்டு நீ பேசுகிறாய்! ‘

‘சிவனும் நானே! விண்ணவனும் நானே! அல்லாவும் நானே! ஏசுவின் தந்தையும் நானே! ‘

‘இல்லை, இல்லை, ஹிந்துக்களுக்கு மட்டும்தான் நீ கடவுள்! ‘

‘நான் ஒருவன்தானே, மகனே! அல்லா என்றும் என்னை அழைக்கலாம்; பகவன் என்றும் அழைக்கலாம்; தந்தை என்றும் அழைக்கலாம். எந்தப் பெயரில் நீ அழைத்தாலும் அந்தப் பெயருக்குள் இருப்பது நான்தான் என்பது உனக்குப் புரிய வில்லையா ? ‘

‘என்னை நீ குழப்புகிறாய்! ஒரு குழப்ப வாதி நீ! ஒரு நாத்திகனாக நீ இருந்தாலும் வியப்பு இல்லை! ‘

கடகட வென்று சிரித்தார் சிவ பெருமான்.

‘இல்லை என்று சொல்பவனும் உள்ளடக்கமாகக் கொண்டு இருப்பது என்னைத்தானே! ஆனால், நீதான் என்னை மறந்து விட்டாய் ? ‘

‘மறந்து விட்டேனா ? உன்னை வணங்குவதற்காகத்தானே ஒரு ஹிந்துவாக நான் இருக்கிறேன்! ‘

‘மதங்களுக்கு எல்லாம் அப்பால் பட்டவன் நான் என்பது உனக்குத் தெரியாதா ? ஆதி சங்கரரைக் கேள்! அவருக்குள் நான் அடக்கம் என்று அவர் கூறுவார். சிந்தனையின் வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்: நான் ‘ஒருவனே ‘ என்று எல்லோரும் கூறுவார்கள். ஞானக் கண்களுக்கு மட்டும்தான் நான் அகப் படுவேன்; மதக் கண்களுக்கு அல்ல! முதலில் மனிதனாக இருக்க நீ கற்றுக் கொள்! ‘

‘என்ன நீ, புரட்சிக் காரனா ? மாறு வேடமிட்டு வந்து இருக்கிறாயா ? ‘

‘எப்படி நீ புனைந்தாலும் அப்படி எல்லாம் நான் வருவேன். நான் இன்றி நீ இல்லை; ஆனால், நீ இன்றி நான் இல்லவே இல்லை. ‘

‘நீ சிவன்தானா என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது. ‘

‘வேடிக்கையைப் பார்த்தாயா, மகனே! நீயே ஒரு மறுப்பு வாதியாக மாறிக் கொண்டு வருகிறாயே! ‘

‘என்ன அது, மறுப்பு வாதி! ‘

ஒரு நாத்திகனாக நீ மாறிக் கொண்டு வருகிறாய் என்று நான் கூறுகிறேன். ‘

‘நான் மறுப்பு வாதியும் இல்லை; கறுப்பு வாதியும் இல்லை! நான் ஒரு ஹிந்து! அவ்வளவுதான்! ‘

‘ஒரு ஹிந்து என்கிறாய் நீ! ஒரு முஸ்லிம் என்கிறான் இன்னொருவன்; ஒரு கிறிஸ்தவன் என்கிறான் வேறு ஒருவன்; ஆனால், நீங்கள் எல்லோரும் வழிபடுவதோ என் ஒருவனைத்தான்! ‘

‘இந்தக் குழப்பம்தான் வேண்டாம் என்கிறேன். ‘

‘உனக்குள் இருப்பது குழப்பம் இல்லை மகனே, மத வெறி! கொலை வெறியில்தான் இது முடிவு அடைய முடியும்! ‘

‘எனக்குக் கொலை வெறி எதுவும் கிடையாது. ‘

‘உன் மனச் சான்றை நீ அடகு வைத்து விட்டாயா, மகனே ? மதங்களின் பெயரால் ஒருவரை ஒருவர் நீங்கள் கொன்று குவித்துக் கொண்டு வருகிறீர்களே, இது கொலை வெறி இல்லையா ? இதற்காக நீ வெட்கப் பட வேண்டாமா ? ‘

தலையைக் குனிந்து கொண்டார் சோ.

‘கொலை வெறி கூடாது என்றுதான் நான் எழுதிக் கொண்டு வருகிறேன். ‘

‘ஒரு பக்கம் மத வெறியை நீ வளர்க்கிறாய்; அது கொலையில் போய் முடிந்து விடுகிறது! இன்னொரு பக்கம் மனித நேயத்தை நீ பேசுகிறாய்; அதுவோ மத வெறிக்குள் மடிந்து போய் விடுகிறது! ‘

தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது சோவுக்கு! தலையை நோக்கிக் கைகளை அவர் உயர்த்தினார்.

சிவ பெருமானுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

‘நிறுத்து, மகனே! பிய்த்துக் கொள்வதற்கு அதில் எதுவும் இல்லை. ‘

‘இந்தக் கிண்டலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை! ‘

கொஞ்சம் அமைதி ஆன சிவ பெருமான் மீண்டும் தொடர்ந்தார்.

‘எல்லா மதங்களுக்கு உள்ளும் ஒரே இறைவனாக இருப்பது நான்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால், ஹிந்துவுக்கு ஒரு கடவுள்; கிறிஸ்தவனுக்கு ஒரு கடவுள்; முஸ்லிமுக்கு ஒரு கடவுள்; இன்னும் எத்தனை மதங்கள் உண்டோ அத்தனைக்கும் வெவ்வேறு கடவுள்கள்; என்று பல கடவுள்களை நீ படைத்து வைத்துக் கொண்டு இருக்கிறாய்! ‘

‘நான் படைத்தேனா, பல கடவுள்களையா! கொஞ்சம் புரியும் படியாகப் பேசுகிறாயா ? ‘

‘தமிழில்தான் அப்பா நான் பேசுகிறேன்; இது கூடவா உனக்குப் புரிய வில்லை! ‘

‘நல்ல வேளையாக நீ ஞாபகப் படுத்தினாய். சம்ஸ்க்ருதத்தில்தானே நீ பேச வேண்டும்! அதுதானே உனது மொழி! ‘

‘மொழிகளுக்கு எல்லாம் அப்பால் பட்டவன் நான், மகனே! ஆனாலும், தமிழ்தான் எனது தாய் மொழி! ‘

‘என்ன நீ, மீண்டும் குழப்புகிறாய்! என்னைப் பைத்தியம் ஆக்குவது என்று முடிவு செய்து விட்டாயா ? ‘

‘உன் பைத்தியம் தெளிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்து இருக்கிறேன். ‘

‘என்ன உளறுகிறாய் நீ! சம்ஸ்க்ருதம் மட்டும்தான் உனக்குப் புரிய வேண்டும். அப் பொழுதுதான் நீ கடவுள்! ‘

‘எல்லா மொழிகளுக்கு உள்ளும் நான்தான் இருக்கிறேன். ஆனால், தமிழ்தான் எனது தாய் மொழி! ‘

‘அப்படி என்றால், சம்ஸ்க்ருதம் ? ‘

‘தமிழின் குழந்தை அது! ‘

‘தமிழின் குழந்தையா சம்ஸ்க்ருதம் ? என்ன! விளையாடுகிறாயா ? ‘

‘திரு நாராயணனார் என்று ஒருவர் இருந்தாரே, உனக்குத் தெரியுமா ? பி.:டி.சீனிவாசனார், :டி. ஆர்.சேஷனார். . . ? ‘

‘யார் அவர்கள். . . ? எங்கோ கேள்விப் பட்ட பெயர்கள் போல. . ., ஆம். இப் பொழுது புரிந்து விட்டது! அவர்கள் அய்யங்கார்கள்! ‘

‘சாதிப் பெயர் இல்லாமல் யாரையும் உன்னால் புரிந்து கொள்ள முடியாதா ? ‘

‘சரி, சரி! சொல்ல வந்ததைச் சொல்! ‘

‘சொல்கிறேன், கேள்! இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் பேசப் பட்டு வந்தது தமிழ் மொழிதான் என்று எழுதி இருக்கிறார் திரு நாராயணனார்! விண் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபுதான் ‘விஷ்ணு ‘ என்று பி.:டி. சீனிவாசனார் கூறி இருக்கிறார்; தமிழ் நாகரிகம்தான் உலக நாகரிகத்திற்கே அடிப்படை என்று :டி. ஆர்.சேஷனார் கூறி இருக்கிறார்! சிவன் என்னும் என் பெயரும் ஒரு தமிழ்ப் பெயர்தான்! ‘

‘என்ன, நீ! தமிழ் தமிழ் என்று அடம் பிடிக்கிறாய்! ‘

‘தமிழில் மட்டும்தான் அப்பா, நான் சிவன்; மற்ற மொழிகளில் எனக்கு வேறு வேறு பெயர்கள் — அந்தந்த மொழிகளின் பெயர்கள்! எந்த மொழியில் நீ பேசினாலும் நான் புரிந்து கொள்வேன்! உனக்குத் தெரிந்த மொழியில் நீ பேசினால் போதும்! ‘

‘எனக்குப் பல மொழிகள் தெரியும். ‘

‘உன் தாய் மொழி என்ன, மகனே ? ‘

‘தாய் மொழி என்றால். . . அது தமிழ்தான்! ‘

‘அதனால்தான் உன்னிடம் தமிழில் நான் பேசுகிறேன். ‘

‘நான் ஒரு ஹிந்து. ‘

‘ஹிந்து என்றால் என்ன வென்று உனக்குத் தெரியுமா ? ‘சிந்து ‘வின் திரிபுதான் அது. ‘

‘அப்படி என்றால், மதமே வேண்டாம் என்கிறாயா ? ‘

‘என்னை வணங்குவதற்குதான் இவ்வளவு சண்டைகள் என்றால், என்னை யாரும் வணங்கவே வேண்டாம் என்கிறேன்! ‘

‘நீ ஒரு நாத்திகனாகி விட்டாய்! ஒரு தீவிர வாதி போலவும் நீ பேசுகிறாய்! ‘

‘எப்படி வேண்டும் என்றாலும் என்னை நீ ஆக்கிக் கொள்ளலாம். ஆனால், மறுப்பு வாதி என்று சொல்லி என்னை நீ மறுத்து விட முடியாது; தீவிர வாதி என்று சொல்லி சிறையில் என்னை நீ அடைத்து விட முடியாது! ‘

கொஞ்சம் நிறுத்தி விட்டுச் சிவ பெருமான் தொடர்ந்தார்.

‘சரி, அப்பனே, பிராமணனை நீ தேடிக் கொண்டு இருந்தாயே, உனக்கு அவன் கிடைத்து விட்டானா ? ‘

தலையைத் தடவிக் கொண்டார் சோ.

‘அவன்தான் இன்னும் கிடைக்க வில்லை. ‘

‘கவலைப் படாதே! அவன் கிடைக்க மாட்டான். கிடைக்கக் கூடியவனைத் தேடு! ‘

‘கிடைக்க மாட்டான் என்று ஏன் சொல்கிறாய் ? ‘

‘ஏனென்றால், பரமணன் என்பவன் ஒரு பரம் பொருள் வாதி; ஒரு சாதிக் காரன் அல்லன்! புத்தருக்குக் கூட அவனைத் தெரியும். ஆனால், நீயோ பரமணன் என்னும் ஒரு சாதிக் காரனைத் தேடிக் கொண்டு இருந்தாய்! ‘

‘மீண்டும் குழப்புகிறாய்! ஒரு மதம் எப்படிச் சாதியாக மாற முடியும் ? ‘

‘சொத்து-சுகம்தான் அப்பா, காரணம்! சொத்து-சுகத்திற்கு ஆசைப் படாத அந்தப் பரம் பொருள் வாதிகள், சொத்துகளைக் கைப் பற்றி ஆண்டைகளாக ஆன பிறகுதான் பரமணச் சாதிக் காரர்கள் ஆனார்கள்! ‘

தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார் சோ. அதைக் கவனித்த சிவ பெருமான் மேலும் தொடர்ந்தார்.

‘இப் பொழுதாவது நீ சிந்திக்கத் தொடங்கி இருக்கிறாயே! மிக்க மகிழ்ச்சி! பரமணச் சாதியைத் தேடுகின்ற வேலையை இனி நீ விட்டு விடு! ‘

‘அப்படி என்றால், யாரைத் தேடச் சொல்லுகிறாய் ? ‘

‘உன்னைத் தேடு! உன் இலக்குகளைத் தேடு! ‘

‘நான் ஒரு ஹிந்து; ஹிந்துவைத்தான் இப் பொழுது நான் தேடிக் கொண்டு இருக்கிறேன். ஓர் இந்தியனைத் தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று எடுத்துக் கொண்டாலும் சரிதான்! ‘

‘ஏன், மனிதனைத் தேட மாட்டாயா ? ‘

‘முதலில் நான் ஓர் இந்தியன்! ‘

கடகட வென்று சிரித்தார் சிவ பெருமான்.

‘ஏன், ஹிந்தியன் என்று சொல்வதுதானே! ‘

அமைதி ஆனார் சோ.

‘ஒரு தமிழனாக இல்லாமல் — ஒரு மலையாளியாக, வங்காளியாக, ஹிந்திக் காரனாக மற்றும் பிற மொழிக் காரர்களாக இல்லாமல் — ஓர் இந்தியனாக யாரும் இருந்திட முடியாது என்பது உனக்குத் தெரியாதா ? ‘

‘என்ன நீ, புதுப் புது விளக்கங்கள் எல்லாம் கொடுக்கிறாய்! ‘

‘சட்டம் படித்து இருக்கிறாய் நீ; ஆனாலும், இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு-1 கூட உனக்குத் தெரிய வில்லை. இந்தியா என்பது ஓர் ஒன்றியம்தான் — மொழி வழி ராஜ்யங்களின் ஒன்றியம்! ‘

‘சட்டம் அதுதான். ‘

‘அப்படி என்றால், முதலில் நீ ஒரு தமிழன்; அதன் பின்தான் இந்தியன்! ‘

‘இல்லை! நான் ஓர் இந்தியன்! ‘

‘ஆனால், ஓர் இந்தியன் என்று நீ சொல்லுவது கூட பொய். ஏனென்றால், நீ ஒரு சாதிக் காரன்; ஒரு மதக் காரன்; எனவே துவேஷம் கொண்டவன்! ‘

‘எனக்கு எந்தத் துவேஷமும் கிடையாது. எந்தச் சாதிக் காரனும் ஒரு பிராமணனாக மாற முடியும் என்றுதான் நான் எழுதி இருக்கிறேன். ‘

மீண்டும் சிரித்தார் சிவ பெருமான்.

‘மத மாற்றம் போல சாதி-மாற்றமா ? அது முடியக் கூடியதுதானா ? ‘

‘மத மாற்றத்தை நான் எதிர்க்கிறேன். ‘

‘மதம் என்பது மனிதர்களின் நம்பிக்கைகளைப் பொறுத்தது. எதிர்ப்பதற்கும் ஆதரிப்பதற்கும் அதில் எதுவும் இல்லை. மனிதர்களின் தனிப் பட்ட விசயம் அது! அரசியலுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை! ‘

‘அப்படி என்றால், சாதியும் தனிப் பட்ட விசயம்தானா ? ‘

‘இல்லை! சாதிப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயப் பிரச்சனை; மனிதர்களின் சமன்மைப் பிரச்சனை; ஒரு தன்மானப் பிரச்சனை! ஒரு பொது நாயகச் சமுதாயத்தில், சாதி ஒழிவதுதான் அனைத்துக்கும் அடிப்படை! ‘

‘என்ன அது, பொது நாயகம்! ‘

‘ஜன நாயகம் என்று நீ சொல்கிறாயே, அதைத்தான் பொது நாயகம் என்று நான் சொல்கிறேன். சொற்களின் பொருள்களைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும், மகனே! ‘

‘இவ்வளவு பேசுகிறாயே, சாதியை நீதானே படைத்தாய்! ‘

சிரிப்பை அடக்கிக் கொள்ள முடிய வில்லை சிவ பெருமானுக்கு.

‘என்ன சிரிப்பு இது! பயங்கரமான சிரிப்பு! ‘

‘சாதியைப் படைத்தவன் நீ! ஆனால், பழியை மட்டும் என் மேல் போட்டு விடுகிறாயே! ‘

‘படைத்தவன் நீதானே! ‘

மீண்டும் சிரித்தார் சிவ பெருமான்.

‘ஒன்றைத் தெரிந்து கொள், மகனே! மனிதர்களுக்கு உள்ளேதான் நான் வாழ்கிறேன்; அவர்களோடு சேர்ந்துதான் வளர்கிறேன்; நீ வளராமல் நான் வளர்வது இல்லை! ‘

‘நன்றாகத்தான் பேசுகிறாய்! ஆனால் உன்னைப் பற்றி நான் கேட்டால் மட்டும் குழப்பி விடுகிறாய்! ‘

‘சரி, மகனே! அண்ணா துரையார் என்று ஒருவர் இருந்தாரே, அவரைத் தெரியுமா, உனக்கு! ‘

‘ஏன் தெரியாது ? ‘

‘பொது நாயகத்தைப் பற்றி அவர் என்ன கூறினார் தெரியுமா ? ‘

‘விடை தெரியாத வினாக்களை எழுப்பி என்னைக் குழப்பாதே! ‘

‘உனக்கு மட்டும் அல்ல, மகனே! அண்ணாவின் தம்பிகள் கூட செரித்துக் கொள்ளாத ஒரு கருத்து இது! ‘

‘என்ன அது ? ‘

‘பொது நாயகம் என்பது ஓர் அரசியல்-ஆட்சி முறை மட்டும் அல்ல; ஒரு வாழ்க்கை முறையும் ஆகும்; என்று அவர் கூறினார். ‘

‘அதனால் என்ன ? ‘

‘சமன்மை உரிமை, கருத்து உரிமை என்பன வெல்லாம் வாழ்க்கை முறைகளாக மாறிட வேண்டும் என்பது அவரது கருத்து. ‘

‘அதனால் என்ன ? ‘

‘அதனால் என்னவா! சமன்மை உரிமை என்பது மனிதர்கள் வாழ்க்கையில் வேண்டும்; ஒருவரோடு ஒருவர் மனிதர்கள் பழகுகின்ற முறையில் வேண்டும்! ‘

‘சரி, அதனால் என்ன ? ‘

‘சாதி ஒழியாமல் சமன்மை கிடையாது; சமன்மை இல்லாமல் பொது நாயகம் முடியாது! ‘

‘அதனால் என்ன ? ‘

‘அதனால் என்னவா! ‘

நெற்றிக் கண்ணைத் திறந்தார் சிவ பெருமான்!

‘பொது நாயக உரிமைகள் இல்லாமல் நீ எழுதிட முடியுமா ? ‘

அவசர நிலைக் காலத்தை நினைத்துக் கொண்டார் சோ; ஏறெடுத்துச் சிவ பெருமானைப் பார்த்தார்.

‘என்னை என்ன செய்யச் சொல்கிறாய் ? ‘

‘மதத்தின் பெயரால் மனிதர்களுக்குள் சிண்டு முடிந்து விடுகின்ற சில்லறை விளையாட்டுகளை நீ நிறுத்து! சாதிக் கொடுமைகளுக்கு முடிவு கட்டு! அருவருப்பான ஒரு சமுதாயமாக இந்தச் சாதிச் சமுதாயம் உனக்குத் தெரிய வில்லையா ? ‘

‘எனக்குத் தெரிந்தால் மட்டும் போதுமா ? எல்லோருக்கும் தெரிய வேண்டாமா ? ‘

சோவின் கண்களை உற்று நோக்கினார் சிவ பெருமான்!

‘பிராமணனை நீ தேடினாயே! நீ ஒரு பிராமணன் என்பதால்தானே! ‘

தலையைக் குனிந்து கொண்டார் சோ!

‘ஓர் ஆதித் திரவிடனாக நீ பிறந்து இருந்தால் அவனை நீ தேடி இருப்பாய் அல்லவா! ‘

இன்னும் சற்றுத் தலைகுனிந்தார் சோ!

‘நிமிர்ந்து என்னைப் பார்! ஆதித் திரவிடர் ஒருவரின் வாயில் மலத்தைத் திணித்தார்களே, வேற்றுச் சாதிக் காரர்கள்! கொதித்துப் போய் இருக்க வேண்டாமா, நீ! ‘

‘அது கொடுமைதான்! ‘

‘கொடுமை என்று நீ சொல்லி விட்டால் மட்டும் போதுமா ? உன்னை நான் கேட்கிறேன், உன் வாயில் யாராவது மலத்தைத் திணித்து இருந்தால் நீ என்ன செய்து இருப்பாய் ? ‘

சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப் பொறிகள் புறப்படத் தொடங்கின.

பயந்து போய் விட்ட சோ சிவ பெருமானின் கால்களைப் பற்றிக் கொண்டு மன்றாடினார்:

‘படைப்பவனே, காப்பவனே, என்னை நீ அழித்து விடாதே! சுட்டுப் பொசுக்கிச் சாம்பல் ஆக்கி விடாதே! ‘

‘ஆக்குவது நீ; அழிப்பதும் நீ; பழி மட்டும் என் மேல். . .! ‘

சிவ பெருமானின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. அவரது நெற்றிக் கண்ணில் இருந்து தீப் பொறிகள் விழுந்து கொண்டே இருந்தன. உலகையே அழித்து விடுவது போல பயங்கரமாக அவர் சிரித்தார். நற-நற வெனப் பற்களைக் கடித்துக் கொண்டே அவர் தாண்டவம் ஆடத் தொடங்கினார்.

சோவின் உடல் எங்கும் வியர்த்துக் கொட்டிக் கொண்டு இருந்தது.

(புதிய கோடாங்கியில் வெளியானது.)

sothipiragasam@lycos.com

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்