பெண்கள் சொத்துரிமை

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

தந்தை பெரியார்


இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம்.

3, 4 வாரங்களுக்கு முன் நாம் ‘இனியாவது புத்தி வருமா ‘ என்னும் தலைப்பின் கீழ் பெண்கள் சொத்துரிமையைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்கள் கவனித்திருக்கக்கூடும். அதற்கு அனுகூலமாக இவ்வாரம் சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. கட்டடத்தில் நடந்த ஒரு மீட்டிங்கின் நடவடிக்கையானது நமக்குச் சிறிது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது.

அதாவது பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்பதைப் பற்றி இரு கனவான்கள் தங்கள் அபிப்பிராயத்தை மிக வலிமையாய் வற்புறுத்திப் பேசி இருக்கின்றார்கள். அவர்கள் பேசியிருப்பவைகளில் முக்கியமானவை எவையெனில்,

மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாசமில்லை என்பதும்,

ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும்,

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துகள் அநுபவிப்பதென்பது சர்வ சுதந்திரமாய் இருக்க வேண்டும் என்பதும்,

இதைப் பற்றி இதுவரை யாரும் எவ்வித கிளர்ச்சியும் செய்யவில்லை என்பதைப் பற்றியும், கணவன் அயோக்கியனாக இருந்தாலும், கெட்ட வியாதிக்காரனாய் இருந்தாலும் மனைவிகள் அவனை விட்டு விலகி வாழலாம் என்றும்,

இப்படி விலகி வாழ்ந்தாலும் புருஷன் ஜீவனாம்சமும் அவன் சொத்தில் பாத்தியதையும் இருக்கவேண்டும் என்றும்,

விதவைகள் மறுமணம் செய்துகொண்டாலும் முதல் புருஷன் சொத்தில் பங்குபெற பாத்தியம் இருக்கவேண்டும் என்றும் உபந்நியாசகராகிய திரு. நாராயண குருப் அவர்கள் பேசி இருக்கிறார்.

அக்கூட்டத்திற்கு தலைமை வகித்த திரு. டி.ஆர். வெங்கிடராம சாஸ்த்திரியார் என்பவர் மாஜி அட்வொகேட் ஜெனரலும் சென்னை அரசாங்க மாஜி சட்ட மெம்பரும் ஆவார்.

இவரும் இந்தியாவில் எல்லா ஜாதி மதஸ்தர்களுக்கும் பொதுவாக ஒரு சட்டம் செய்யவேண்டுமென்று பேசியிருப்பதோடு சீர்திருத்த விஷயத்தில் முஸ்லீம்கள் ஒத்துவரமாட்டார்கள் என்று பயப்பட்டதாகவும், அதற்காதாரமாய் சாரதா சட்டத்தைப் பற்றிய முஸ்லீம்களின் ஆக்ஷேபனையும் எடுத்துக்காட்டிவிட்டு, மேலும் பெண்கள் இப்போது ஆண்களைப் போலவே எல்லா வழிகளிலும் முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு, அவர்களுக்கு சகல உரிமையும் கொடுக்கவேண்டும் என்பதை மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட அவர் பேசி இருப்பதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால், ‘ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் பெரியோர்கள் செய்த ஏற்பாடு என்பதற்காக கண்மூடித்தனமாய் ஒன்றை பின்பற்ற வேண்டுமென்பது அறிவுடைமையாகாது ‘ என்பதும், இந்த நாகரீக காலத்தில் அதாவது 20-ஆவது நூற்றாண்டில் இருந்துகொண்டு 13-ஆவது நூற்றாண்டு கதைகளைப் பற்றி பேசி அவற்றை மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக்குவது மிகவும் பரிகசிக்கத்தக்கதாகுமென்று பேசியிருப்பதுமாகும்.

இதை மற்ற பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத பழமை விரும்பிகளும் கவனிக்கவேண்டுமாய் விரும்புகின்றோம்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்லவென்றும் அவர்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமாய் இருக்கத் தகுந்தவர்கள் என்றும் நாம் முதலில் தீர்மானம் செய்து கொண்டோமேயானால் பிறகு மேல்கண்ட சீர்திருத்த விஷயங்களும் மற்றும் ஒழுக்க சம்மந்தமான தென்றும் கட்டுப்பாட்டுக்காக இருக்கவேண்டும் என்று சொல்லப்படும் கொள்கைகளின் யோக்கியதைகள் எல்லாம் தானாகவே விளங்கிவிடும். அந்த எண்ணம் ஆண்களுக்குச் சரியாக உண்டாகாததினாலேயே பெண்கள் சுதந்திரம் என்னும் விஷயங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்கள் பெண்களுக்குத் தயவு செய்து பிச்சை கொடுப்பது போலவே கருதுகின்றார்கள். உண்மையான சுதந்திரம் பெண்களுக்கு ஏற்படவேண்டுமானால் வாழ்வில் அதாவது ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கைத் துணைகளாய் வாழும் வாழ்க்கையில், இருவருக்கும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகளிலும் ஒரே மாதிரியான ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருக்கும்படி வாழ்க்கையையும் அது சம்மந்தமான அரசியல் சட்டங்களையும் திருத்திக்கொண்டாலொழிய உண்மையான சுதந்திரம் ஏற்படவே முடியாது. மக்கள் மனதிலும் ‘இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்பாஷணையிலும் இருக்கும்படியாக படைக்கப்பட்டிருக்கின்றார்கள் ‘ என்கின்ற உணர்ச்சி அடியோடு மாறியுமாக வேண்டும். அந்த உணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல் இன்றைய நிலை பெண்களுக்கே பெரிதும் முதலில் மாறவேண்டியதாக இருக்கின்றது.

ஏனெனில், அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலாளர்கள் என்றும், ஏதாவது ஒரு ஆணின் காப்பில் இருக்கவேண்டியவர்களென்றும், தங்களையே கருதிக்கொள்ளும்படி செய்துவிட்டது. ஆதலால் அது முதலில் மாறவேண்டியது அவசியமாகின்றது.

ஆகவே அவர்களது சுதந்திரத்திற்கு சொத்துரிமை இல்லாததோடு தங்களின் அடிமையுணர்ச்சியும் பயமும் காரணமாயிருப்பதால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அவ்வடிமை உணர்ச்சியும் பயமும் அடியோடு மறையும்படியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுபவர்களின் முக்கிய கடமை என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.

அக்டோபர் 16, 1930 ‘குடிஅரசு ‘ இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய துணைத் தலையங்கத்தின் ஒரு பகுதி. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஐந்தாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.50) வெளிவந்துள்ள கட்டுரை இது.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன் aacharakeen@yahoo.com)

பெரியாரின் பிற பெண் விடுதலை சிந்தனைகள்:

கோஷா முறை

கண்ணகி கதை இலக்கியமா ?

திருவள்ளுவரின் பெண்ணுரிமை

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

கல்யாண ரத்து தீர்மானம்

Series Navigation

தந்தை பெரியார்

தந்தை பெரியார்