ஜங் அவுர் அமான்!

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

நரேந்திரன்


சமீபத்தில் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவரான ஆனந்த் பட்வர்தனின் ‘ஜங் அவுர் அமான் (போரும் சமாதானமும்) ‘ என்ற ஒரு இரண்டு மணிநேர டாகுமெண்டரி படத்தை Sundance சேனலில் பார்க்க நேரிட்டது. மிக அற்புதமான வகையில் தயாரிக்கப்பட்ட அந்த டாகுமெண்டரியை இந்தியாவில் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஹிப்பாக்ரஸித்தனமான இந்தியாவில் இந்த மாதிரியான ஒரு அரசாங்க விமரிசனப்படம் எந்த சேனலிலும் ஒளிபரப்பப் பட்டிருக்காது என்றே நினைக்கிறேன். அப்படியே தப்பித்தவறி ஒளிபரப்பி இருந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் அதனை ஒரு பொருட்டாக மதித்துப் பார்த்திருக்கவே மாட்டார்கள். அழுகுணி சீரியல்களையும், அரை நிர்வாண ஆட்டங்களையும் பார்த்துப் பார்த்து மூளை மழுங்கிப் போனவர்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரமேது ?

‘ஜங் அவுர் அமான் ‘ இந்தியாவும், பாகிஸ்தானும் அணுகுண்டுகளை வெடித்த பிறகு, அவ்விரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள விளைவுகளை நேரடியாக, போலித்தனமின்றி விளக்குகிறது. இரு நாடுகளிலும் உள்ள அணுகுண்டு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள், மாணவர்கள் என்று பல தரப்பட்டவர்களின் கருத்துக்களையும் தொகுத்து தந்திருக்கிறார் ஆனந்த் பட்வர்தன். இரு நாட்டில் வாழும் சாதாரண மக்கள் போரினை விரும்பவில்லை, சமாதானத்துடனேயே வாழ விரும்புகிறார்கள் என்பது தெளிவாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளும், மதவாதிகளும், ஆயுத வியாபாரிகளும் தங்கள் சுய நலத்திற்காக எவ்வாறு இரு நாட்டு மக்களையும் தூண்டி விடுகிறார்கள், வெறி கொள்ள வைக்கிறார்கள், இதனால் வீணாகும் பணம் எவ்வளவு என்பதைத் துல்லியமாக எடுத்து வைக்கிறார் ( ‘இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் மூன்றில் இரண்டு பங்கு ராணுவத்திற்காக செலவு செய்யப்படுகிறது ‘).

ஒரு யுத்த டாங்க் வாங்கும் பணத்தில் எத்தனை பள்ளிக்கூடம் கட்ட முடியும் போன்ற கணக்கிற்கெல்லாம் நான் போகத் தயாரில்லை. இரண்டு நாடுகளும் தேவையற்ற வகையில் ஏராளமான பணத்தை வீணாக ஆயுதம் வாங்குவதற்குச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. பெரிய பொருளாதார அடிப்படையைக் கொண்ட இந்தியாவை விட, பாகிஸ்தானுக்குத்தான் இதனால் பாதிப்பு அதிகம். பெரும்பாலும் வெளிநாட்டு உதவியையே நம்பி இருக்கும் பாகிஸ்தான் வருமானத்தின் பெரும்பகுதி ஆயுதம் வாங்குவதற்கே செலவிடப்படுகிறது. கல்வி போன்ற சமுதாய முன்னேற்றப் பணிகளூக்கான செலவு ஏறக்குறைய பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று சொல்லலாம். வேறு வழியில்லாத ஏழைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதரஸாக்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். மதபோதனையுடன், தீவிரவாதச் சிந்தனையும் அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது அங்கே. தேவையற்ற ஆயுதப் போட்டியைக் குறைக்கும் வரை இரண்டு நாடுகளுக்கும் சுபிட்சம் என்பது வெறும் கனவே.

பீஹாரில் இருக்கும் ஒரு கிராமத்தில் அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம் தோண்டி எடுக்கப்பட்டு, அருகிலிருக்கும் ஒரு தொழிற்சாலையில் பிரித்தெடுக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் அணுக்கதிர் வீச்சு காரணமாக அக்கிராமத்தில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள். ஒற்றைக் கண்ணுடைய, மூளை வளர்ச்சியில்லாத, கை கால்கள் பாதிக்கப்பட்டு ஏறாக்குறைய ‘வெஜிடபிள் ‘ நிலையில் இருக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது மனம் அதிர்ந்து போகிறது. சாதாரணமாக 42க்கு கீழ் என்ற அளவில் இருக்க வேண்டிய கதிர் வீச்சு அளவு (பட்வர்தனின் டாகுமெண்டரிப்படி), அக் கிராமத்தின் பல பகுதிகளில் 200க்கும் மேலாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். முக்கியமாக அந்த கிராமத்துப் பள்ளியில் நம்பவே முடியாத வகையில் 230ஐத் தொடுகிறது அணுக்கதிரை அளக்கும் கருவியின் முள்.

அணுக்கதிர் வீச்சு காரணமாக அந்த பிஹார் கிராமத்து மக்களில் பெரும்பாலானோருக்கு கான்சரிலிருந்து, காச நோய் வரையான நோய் பாதிப்பு இருக்கிறது. ஒரு யுரேனிய சுரங்கம் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது எனும்போது, அணுகுண்டு வீச்சின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே மனம் அஞ்சுகிறது.

அடுத்த காட்சியில் பட்வர்தன் ஒரு முக்கியமான அணு விஞ்ஞானியைப் பேட்டி காண்கிறார். அப்படி எல்லாம் இல்லவே இல்லை. ஏதோ ஒன்றிரண்டு பேர்களுக்கு வேண்டுமானால் அப்படி ஆகி இருக்கலாமே தவிர, கிராமம் முழுமைக்கும் பாதிப்பு என்பது நடக்கவே இல்லை என்கிறார் அந்த விஞ்ஞானி. காமிரா மெல்ல கீழிறங்கி, அவருக்குப் பின்னே சுவற்றில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கும் ‘பத்மபூஷண் ‘ விருதைக் காட்டுகிறது.

அது சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம்!

இந்த டாகுமெண்டரியின் இன்னொரு கோணமாக, அணுகுண்டு வீச்சினால் முற்றிலும் அழிந்து போன ஜப்பானின் நாகசாகி நகரத்தில், தப்பிப் பிழைத்த அணுகுண்டு எதிர்ப்பாளரான முதியவர் ஒருவரின் வரலாறும் ஊடாகச் சொல்லப்படுகிறது. அணுகுண்டு வீச்சினால் ஏற்பட்ட விளைவுகள், நாசங்கள் பற்றி விளக்க இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் பயணம் செய்யும் அந்த ஜப்பானியப் பெரியவரின் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு கூட நமக்கு இல்லை என்பதுதான் உண்மை. முற்றும் துறந்தவர்களாக, பற்றற்றவர்களாக, அன்பை வளர்க்க வேண்டியவர்களாக இருக்க வேண்டிய காவியுடைச் சன்யாசிகளின் ‘அணுகுண்டு அறைகூவல் ‘ கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. மொட்டையடித்த சன்யாசியாக இருந்தாலும் சரி. குல்லா போட்டு தாடி வளர்த்தவர்களாக இருந்தாலும் சரி. ஆன்மிக சேவையுடன் மட்டுமே இவர்களின் அறைகூவல் நிற்பதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது.

இந்தியா அணுகுண்டு வெடித்த பிறகு, மும்பையில் நடக்கும் ஒரு கூட்டத்தில் காஞ்சி ஜெயேந்திரர், அப்துல் கலாமைப் பார்த்து, ‘கலாம் அப்னா ஆத்மி ஹே! ‘ என்கிறார் வாய் நிறைந்த சிரிப்புடன். பதிலுக்கு, கலாமின் மூக்கு மட்டும் சிரிக்கிற அதிசயத்தை ( ?!) பார்த்து ரசிக்க இன்றே பார்த்திடுவீர் ‘ஜங் அவுர் அமான்! ‘.

ஒரு சுமாரான அரசியல்வாதி என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வாஜ்பேயியின் மதிப்பு ‘சொரேல் ‘ என்று சரிந்து போகக் காரணமாக இருந்ததும் மேற்படி டாகுமெண்டரிப் படம்தான். வேறென்ன, தெஹல்கா விவகாரம்தான். ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை ‘ என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஒரு மூத்த அரசியல்வாதியான வாஜ்பாய் முயல்வது சரியான ஒரு முன்னுதாரணமே அல்ல. ‘புகழ்பெற்ற ‘ தெஹல்கா ‘டேப் ‘புகளை பார்க்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம்தான் எனக்குக் கிட்டியது. இதுவரை பார்க்காதவர்களுக்காக ஒரு சிறிய உதாரணம் இங்கே,

இந்திய ராணுவத்தின் பெரிய அதிகாரி ஒருவரும், இடைத்தரகர் ஒருவரும் தெஹல்கா நிருபருடன் ‘மனம் விட்டு ‘ பேசுகிறார்கள். எவ்வளவு ஆயுதங்கள் வாங்கினால் எவ்வளவு ‘சம்பாதிக்க ‘ முடியும், இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு ( ‘கமிஷனை இங்கு கொடுத்தாலும் கொடுக்கலாம் அல்லது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீட்டில் வைத்துக் கூட, நோ ப்ராப்ளம் ‘) என்பதை சர்வசாதாரணமாக சொல்கிறார்கள். அத்தனையும் யு.எஸ் டாலர்களில். மில்லியன் டாலர் கமிஷன் என்பதெல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட் ‘ வெளியே வருகிறது.

இன்னொரு அரசியல்வாதியான பங்காரு லஷ்மண் என்பவர் இளித்துக் கொண்டே கட்டுக் கட்டாக பணத்தை வாங்கி மேசைக்குள் வைக்கிறார். சடாரென காட்சி மாறி, வாஜ்பாய் தொலைக்காட்சியில் பேசுகிறார், ‘இந்த டேப்புகள் அனைத்தும் போலியானவை. அப்படி யாரும் பணம் வாங்கவே இல்லை ‘. எப்படி இருக்கிறது பாருங்கள் ? ‘பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்! ‘ என்று சொல்லாமல் விட்டாரே என்று நினைத்துக் கொண்டேன்.

பலமுறை எழுதியிருக்கும் ஒரு விஷயத்தை மீண்டும் இங்கே வலியுறுத்துகிறேன். நான் எந்தவொரு அரசியல் கட்சியையோ, அரசியல் அமைப்பையோ சார்ந்தவன் இல்லை. ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கு உள்ள கவலையும், அக்கறையும் மட்டுமே இந்த கட்டுரைக்கு அடிப்படை.

இந்தியா ஒவ்வொரு வருடமும், பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள ஆயுதங்களை உலகச் சந்தையில் வாங்குகிறது. கமிஷன் விவகாரம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இவர்கள் வாங்கிக் குவிக்கும் ஆயுதங்கள் தரமானவைதானா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. சோவியத் யூனியன் இருக்கும் வரை, ஒன்றுக்கும் உதவாத ஓட்டை உடைசல்களை நமது தலையில் கட்டி வந்தார்கள். இன்னமும் கட்டி வருகிறார்கள். ஜவஹர்லால் நேருவிலிருந்து, இன்றைய ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வரை அதுதான் நடந்து கொண்டு வருகிறது. ( ‘நாங்கள் சுடவே வேண்டியதில்லை. அதுவே ‘தொப் தொப் ‘பென கீழே விழுந்து விடும் ‘ – ரஷ்ய தயாரிப்பான ‘flying coffins ‘ என்றழைக்கப்படும் MiG விமானங்கள் குறித்து ஒரு பாகிஸ்தானிய ஜெனரலின் நகைச்சுவை).

இந்த சந்தேகத்தை உறுதி செய்வது போல, பட்வர்தனின் டாகுமெண்டரியில் ஒரு காட்சி வருகிறது. ‘பழைய இரும்பு சாமான் ‘ கடைக்குப் போக வேண்டிய ஒரு சிறிய விமானந்தாங்கி கப்பலை(!) நிருபர்களுக்கு சுற்றிக் காட்டுகிறார் ஒரு கப்பலின் கேப்டன். கப்பலின் ஓரமாக இரண்டு, மூன்று ‘மியூசியம் குவாலிட்டி ‘ விமானங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ராணுவத்தைப் பற்றியோ, விமானம், கப்பல் பற்றியோ எந்த அறிவுமில்லாத நமக்கே அதன் seaworthiness பற்றி சந்தேகமாக இருக்கிறது. இந்த அழகில், ‘இந்திய அதிகாரிகளுடன் விலை விபரம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் ‘ என்கிறார் அந்த வெள்ளைத்தோல் கேப்டன், பெருமை பொங்க.

Long Live Indian Navy! பாரத் மாதாகீ ஜெய்!

ஆனந்த் பட்வர்தனின் ‘ஜங் அவுர் அமான் ‘ ஒரு முக்கியமான, பார்க்க வேண்டிய பதிவு. சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

****

பிரபல பொருளாதார நிபுணரும், இந்தியாவில் அமெரிக்க தூதராகப் பணிபுரிந்தவருமான ஜான் கென்னத் கால்பிரெய்த் (John Kenneth Galbraith) இந்தியாவைப் பற்றிக் கூறுகையில், ‘It ‘s a functioning anarchy ‘ என்றார். பெரும்பான்மையான, விவரமறிந்த இந்தியர்கள் இதனை மறுக்க மாட்டார்கள். மறுக்கும்படியாகவா இன்றைய நடப்பு இருக்கிறது ?

ஒழுங்கும், கட்டுப்பாடும் நமது ரத்தத்திலேயே இல்லை. இந்திய சமூக அமைப்பில், ஒழுங்கீனமே வாழ்க்கை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. படித்த, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதுபற்றிய அக்கறையும் இல்லை. கவலையும் இல்லை. அதனை மாற்றுவதற்கு உரித்தான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவும் அவர்கள் தயாராக இல்லை. எவன் எக்கேடு கெட்டால் என்ன ? என்ற மனநிலமைதான் அவர்களுக்கு இருக்கிறது. அதே சமயம், அது சரியில்லை இது சரியில்லை என்று புலம்புவதில் மட்டும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை நடந்த தேர்தல்களில் நம்மில் எத்தனை பேர் ஓட்டு போட்டிருக்கிறோம் என்று பார்த்தால் நூற்றுக்கு பத்து பேர் கூடத் தேற மாட்டார்கள். படித்தவர்கள் இத்தனை பேர் இருந்தும், இந்திய/தமிழ்நாட்டின் எதிர்காலம் படிக்காத பாமரர்களால் தீர்மானிக்கப்படுகிறது. எந்தத் தகுதியும் அற்ற பேட்டை ரவுடிகளும், வன்முறையாளர்களும், சாதி வெறியர்களும் இவர்களால் உயர் பதவிகளுக்கு இம்மாதிரியான பாமர மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஓட்டுப் போடுவதற்கு வாக்குச் சாவடி பக்கமே போகாத மத்திய தர வர்க்கத்தினருக்கு, பாமரர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஊழல்வாதிகளைக் குறை சொல்லும் தகுதி இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

அதிலும், எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்று அறிய ஒரு சினிமா நடிகரின் உத்தரவை எதிர் நோக்கித் தவமிருக்கும் தமிழர்கள் பாவம் செய்தவர்கள். தமிழர்களின் சுய சிந்தனை மழுங்கிப் போய்விட்டதற்கு இதை விட என்ன ஆதரம் வேண்டும் ?

இந்திய அரசியல்வாதிகள் குரூரமானவர்கள். அதிலும் தமிழக அரசியல்வாதிகள் மிக மிகக் குரூரமானவர்கள். மனிதாபிமானவற்றவர்கள். சராசரி தமிழர்களின் ஏழ்மையுடன், இயலாமையுடன் விளையாடுவது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. கொஞ்ச காலத்திற்கு முன்னால் தமிழ்நாட்டின் பல பாகங்களில் ஒரு அரசியல் கட்சி ‘கஞ்சித் தொட்டி ‘ திறந்து வறுமையில் வாடும் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தியது. அதற்கு சற்றும் குறையாத ஆளும்கட்சியோ அவர்களுக்கு ‘முட்டை பிரியாணி ‘ போட்டு எள்ளி நகையாடியது. மன முதிர்ச்சி இல்லாத இரண்டு தமிழ்நாட்டுத் தலைவர்களின் அரசியல் சித்து விளையாட்டிற்கு ஏழைகள் பகடைக் காய்களாக பயன்படுத்தப் பட்டார்கள். இவர்களில் யாராவது ஒருவரைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை. விதியின் விளையாட்டு இது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

வடக்கத்திய அரசியல்வாதிகளும் இவர்களுக்குச் சற்றும் குறையாதவர்களே. சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் கொடுக்கும் இலவச சேலைகளை வாங்கப் போட்டி இட்டதில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்து விட்டதாக செய்தி. என்னே அவலம்! வக்கிரத்திற்கு வடக்கு என்ன, தெற்கு என்ன ? எல்லாம் ஒன்றுதான்.

இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய இந்திய அரசியலைப்புச் சட்டம் பல ஓட்டைகளைக் கொண்டது. பல சிக்கல்களுக்குத் தீர்வான, தெளிவான வரைமுறைகள் அதில் இல்லை. ஓட்டைகள் அதிகார வர்க்கத்தினருக்கே ஆதரவாக இருப்பதால் அவர்கள அதனை அடைக்க எந்த முயற்சியும் செய்வதில்லை. இந்திய ஜனநாயகம் ஒரு மிகச் சிக்கலான கால கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றே உறுதியாக நம்புகிறேன். சவலைக் குழந்தையான இந்திய ஜனநாயகம் பிழைப்பதும், பிழைக்காததும் கடவுளின் கையில் இருக்கிறது.

‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு குரூரமான சர்வாதிகாரிக்காக காத்துக் கொண்டிருக்கிறது ‘ என்பார் கவிஞர் மனுஷ்ய புத்திரன்.

அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

—-

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்