கல்யாண ரத்து தீர்மானம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

தந்தை பெரியார்


ஆந்திர மாகாண பெண்கள் மாநாட்டில் விவாகரத்து செய்து கொள்வதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்று போலவே உரிமை இருக்கும்படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாக தெரியவருகிறது.

அன்றியும் 3 மணி நேரம் அத்தீர்மானத்தின் மீது பல பெண்கள் கூடி பலமான வாதப்பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்றுவிட்டாலும் கூட இந்தச் சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையும் கொடுக்கின்றது.

ஏனெனில் கல்யாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளைக் காதினால் கேட்கவே நடுங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆண்களுக்கு அடங்கி அடிமையாய்க் கிடந்து வந்த, பெண்கள் கை தொட்டு தாலி கட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிறருக்குத் தன்னைக் கூட்டிவிட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் ‘கடவுள் ‘ போலவே பாவிக்கவேண்டுமென்றும், கணவன் குஷ்டரோகியாய் இருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய் அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லட்சணமென்றும், பெண்களுக்குக் கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில் ரத்து என்பதும், ஆண்களைப்போலவே பெண்களுக்கு சுதந்திரம் என்றும் சொல்லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும் அதுவும் பெண்களாலேயே கொண்டு வருவதும் அதைப் பற்றி பலர் பேசி வாதப்பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படுவதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல.

அதுமாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும் படி அதற்கு ஓட்டு கிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்தே கூடிய சீக்கிரம் பெண்ணுக்கு விடுதலை பெற்றுவிடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக்கின்றோம்.

– டிசம்பர் 21, 1930 ‘குடிஅரசு ‘ இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய துணைத் தலையங்கம். ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஐந்தாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.50) வெளிவந்துள்ள கட்டுரை இது.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன் aacharakeen@yahoo.com)

பெரியாரின் பிற பெண் விடுதலை சிந்தனைகள்:

கோஷா முறை

கண்ணகி கதை இலக்கியமா ?

திருவள்ளுவரின் பெண்ணுரிமை

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

Series Navigation

தந்தை பெரியார்

தந்தை பெரியார்