மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

நா.இரா.குழலினி


‘குவரானி மொழி அழிந்து விட்டால், உலகம் அழிந்து விடக்கூடாதென்று பின் யார் போய் கடவுளிடம் வேண்டுவதாம் ‘

– பராகுவேயிலுள்ள குவரானி மொழி பேசும் பழங்குடியினர்

மொழியைக் கொல்வதும் அம்மொழி மக்களைக கொல்வதும் ஒன்றே. அதற்குப் பின் மீதமிருப்பது அரசின் ஒற்றைச் சாளர தேசிய நோக்கம் ஒன்றே

– டேனியல் நெட்டில் ‘மறையும் குரல்கள் ‘ நூலாசிரியர்

‘மொழி மனித இனத்தின் வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது அந்த இனத்தின் கலாச்சாரம், இயற்கை, இயற்கையோடியைந்த வாழ்வு, வரலாறு, மனிதம் மற்றும் பல்வேறு வாழ்வின் விழுமியங்களை உள்ளடக்கியது. ‘

– யுனெஸ்கோவின் அழிவபாயத்திலுள்ள மொழிகளின் நுழைவுப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரணம்.

மொழிகள் கொலை செய்யப் படுகின்றன இதே நிலை தொடர்ந்தால் 90 சத மொழிகள் அடுத்து வரும் நூற்றாண்டில் அழிந்து விடும்

– மைக்கேல் கிரெளன் அலாஸ்கா மொழியியலாளர்

எம் மொழியைப் போல

வேறெதும் எம் ஆன்மாவை

நிரப்பவில்லை

அது எம் மனதை

விரிவாக்குகிறது

வாழ்வை மென்மையாக்குகிறது

சிந்தனையை விடியலாக்குகிறது

– ஸ்வீடன்நாட்டின் தொல்குடியின சாஆமி மொழிக் கவிதை

பல்லுயிர்ச்சூழல் (Biodiversity) என்பதற்கு எம் மொழியில் சொற்கள் இல்லை ஆனால் இதை எம் மொழிக்கு மொழிபெயர்த்தால் அதற்கு உலகில் உள்ள அனைத்தும் அதற்கு மேலும் என்று பொருள் வரும்

-பேட்ரிக் செங்குண்டாட் மலேசியாவின் கடாசண்டுசூன் மொழியினர்

வடமேற்கு கசாகசில் பேசப்பட்டு வந்த மொழி உபைக். ‘என் மூன்று மகன்களுக்கும் உபைக் பேசத் தெரியவில்லை அவர்கள் டர்க்கிஷ் மொழி மட்டுமே அறிவார்கள். தயவுசெய்து எனது கல்லறையில் பதிப்பியுங்கள் இங்கே உறங்குகிறான் டெஃபிக், உபைக் என்று அறியப்பட்ட மொழியின் கடைசிச் சொற்களை உதிர்த்தவன் ‘ 1992-ல் உபைக் மொழியைப் பேசிய டெஃபிக் எசெங்கை சந்தித்துப் பேசிய மொழியியலாளர்களிடம் பேசிய டெஃபிக் கூறிய கடைசி வாக்கியம் இது.

பிரபல மொழியியலாளர் ? புரூஸ் கானல் இங்கிலாந்தின் அழிவபாயத்திலுள்ள மொழிகளுக்கான அறக்கட்டளையின் செய்திக்கடிதத்தில் நீத்தார் நினைவஞ்சலி என்ற தலைப்பில் ஒரு கொடூரத்தைப் பதிவு செய்கிறார், ‘1994-95 -ல் காமரூன் நாட்டின் அடவானா பிராந்தியத்தில் நான் பல்வேறு மொழிகளைக கடந்து வந்தேன். அவற்றில் ஒன்று கஸாபே. கடைசியாக மிச்சமிருந்தவர் போகோன் என்ற ஒரே ஒருவர் மட்டுமே. அவருடைய சகோதரிக்கு அந்த மொழியை யாரேனும் பேசினால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் பேச முடியாது. அவருடைய குழந்தைகளுக்கோ அன்றி பேரக் குழந்தைகளுக்கோ அம்மொழி குறித்த எந்த ஒரு தகவலும் தெரியாது, இது போன்ற ஒரு கொடூர சூழலில் 5-11-1995 அன்று போகோன் இறந்து விட்டார் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றது கஸாபே என்ற மொழியையும் அந்த மொழிக்கான கலாச்சாரத்தையும் அம்மக்களின் நாகரிகத்தையும் சேர்த்து ‘.

என் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி அன்றொருநாள் அதிகாலை எனக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் பெண்ணுக்கென எனக்கு சமூகத்தால் பயிற்றுவிக்கப்பட்ட கதறல்கள் தாண்டிய இறுக்கத்துடன் துடிக்கும் கீழுதடுகளை மேற்பற்களால் இறுகக் கடித்தபடி அமைதி காத்தேன். ஆனால் உறவினர்களுக்கான விடைபெறல் நிகழ்ந்த பின்னான சூழலில் எனக்கும் என் தந்தைக்குமான உறவும் அதன் புரிதலும் ஒவ்வொரு மணித்துளியிலும் அவரைச் சார்ந்திருந்ததான கணங்களும், புரிதலுக்கப்பாற்பட்ட மனித உணர்வுத் தளங்களிலான இரத்தக் கசிவுகளும் ஒரு தனிஉயிரியாய் நான் மட்டுமே அறிந்தவை. எனக்கு மீண்டும் நிகழ்ந்தது அந்தக் கணங்கள். யாரோ முகமறியா டெஃபிக்கும் போகானும் என்னுடைய பல இரவுகளை வெகுநாட்களுக்குப் பின் உதயம் வரை நீட்டித்தனர். ஏனிது நிகழ்ந்தது என்ற கேள்வியுடன் உறங்கிப்போனேன்.

பாதியில் எழுப்பப் பட்ட கனவுக்காரியாகவே (காரியும் காரனும் தமிழா ?) உணர்ந்தேன் ஒரு பெரிய சவக்கிடங்கை ஒட்டிய சுடுகாடு அல்லது இடுகாடு, ஒவ்வொரு எலும்பும் காலில் தட்டுப்படும்போதான பயத்துடனும் நடு முதுகுத்தண்டின் மீது கீழிருந்து மேலாகவோ அன்றி மேலிருந்து கீழாகவோவான மயிர்கூச்சத்துடனும் அடுத்த அடியை தயக்கத்துடன் எடுத்து வைக்கிறேன். இடுகாட்டின் ஒரு பகுதியில் ஏறக்குறைய ஆயிரமாயிரமான ஆண்டுகளின் முழுப்பரிமாணத்துடனான ஒரு கல்லறை., நெருங்கி வாசிக்கிறேன் அந்தக் கல்லறையின் மேல் பதிக்கப்பட்ட சொற்களை, எனக்கு என் தலைமுறைகளின் பழக்கத்திலான வட்டெழுத்துக்களுடன் துவங்கியது அந்தக் கல்வெட்டு ‘நேற்று தமிழ் இங்கு இறந்தது ‘. திடுக்கிட்டு விழித்தேன்.

காட்சி எண் 1 திரு. தமிழண்ணல் அவர்களிடமிருந்து துவங்கியது இந்த விவாதம், இன்னும் சில 100 வருடங்களில் தமிழ் மொழி அழிவபாயத்தில் இருக்கிறது என்று யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது எனத்துவங்கியது அந்த அறிக்கை.

காட்சி எண் 2 ‘ இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறதாமே ‘, தமிழக முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்கள் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது 300 ஆண்டுகள் என்று கேள்விப்பட்டேன் 100 ஆனது எப்போது ? ஆனாலும் நாம் இதுகுறித்து கவலைப்படவும் அக்கறை எடுக்கவுமான தேவையிருக்கிறது என்பதாக பதில் சொன்னார்.

காட்சி எண் 3 ‘இன்னும் 50 வருடங்களில் தமிழ் அழிந்து விடும் அபாயத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறதே இது குறித்து தங்கள் கருத்தென்ன ‘ என்ற ஒரு பத்திரிக்கையின் கேள்விக்கு கவிஞர் கனிமொழி அவர்கள் இது கவலைக்குரிய ஒன்று எனவும், அறிவியல் தொழில்நுட்பம் முதலிய துறைகளில் தமிழை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் தமிழில் தமிழர் அனைவரும் பேசவேண்டிய கட்டாயம் குறித்தும் பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து காட்சி எண் 4 என முதலில் சொன்ன என் கனவு ஒரு பத்திரிக்கைக் கேள்வியாக வராது என்பதற்கு எந்த உறுதிமொழியும் இல்லை.

ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரையிருக்கலாம் என்று அறியப் படுகின்றன உலகின் மொத்த மொழிகள். அவற்றுள் 6703 மொழிகள் இதுவரை அறியப்பட்டுள்ளன. வல்லுநர்கள் கூறுகிறார்கள் ஒரு லட்சம் பேர் பேசுகிற நிலை இருந்தால் மட்டுமே எம்மொழியும் உயிரோடிருக்க முடியும் என (இது குறிப்பாக ஆதிவாசி மொழிகளுக்கான வரைவிலக்கணம்). ஆனால் மேற்குறிப்பிட்ட மொழிகளுள் 52 சதம் வெறும் பத்தாயிரம் நபர்களால் மட்டுமே பேசப்படுபவை. அவற்றிலும் பாதி அதாவது 28 சதவிகிதம் மொழிகள் ஆயிரம் நபர்களுக்குட்பட்டு பேசப்படுபவை மட்டுமே. 10 சத மொழிகள் வெறும் 100 நபர்களால் பேசப்படுபவை. மொத்தமுள்ளவற்றில் 83 சதம் ஒரு பகுதிக்குள் அல்லது ஒரு நாட்டுக்குள் மட்டுமே பேசப்படுபவை மட்டுமே. குறைந்தது ஒரு வருடத்திற்கு 10 மொழிகளாவது இறந்து விடுகின்றன என்கிறார் ஃபிரான்சிலுள்ள பாய்டியர்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் திறனாய்வாளருமான திரு ரன்கா ஜெல்ஜாக் பாபிக் (Ranka Bjeljac-Babic, lecturer in the psychology of language at the University of Poitiers, France.) மேலும் அவர் குறிப்பிடுகையில் மொழிகள் அழிவதொன்றும் புதிதல்ல குறைந்தது 30,000 மொழிகளாவது பிறந்து அழிந்திருக்கின்றன தாம் வாழ்ந்ததிற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இறந்திருக்கின்றன. இவை போலான சிறுபான்மையின மொழிகளின் பிறப்பு இறப்பு சதவிகிதம் மிக அதிகம். ஒரு சில மொழிகள் குறிப்பாக தமிழ், சைனம், எகிப்து, பெர்சியன், பாஸ்கு, லத்தீன், ?ீப்ரூ, சமஸ்கிருதம் மற்றும் கிரீக் போன்றவை மட்டுமே 2000 வருடங்கள் தாண்டியும் உயிர் வாழ்ந்திருக்கின்றன என்கிறார் அவர். எங்கே துவங்குகிறது இந்த மொழி அரசியல். உயிர் வாழ்வதும் வாழாமல் போவதும் ஒரு தனி நபராய் எனக்கே எனக்கான உரிமை, எங்கோ என்னை யாரேனும் கொல்ல முற்பட்டால் மறுதலித்துத் தற்காத்துக் கொள்வதும் எனது உரிமை மட்டுமே. இது குறித்த பல்வேறு வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு தொடர்வதே ‘நமக்கு ‘ நலம்.

ஐரோப்பாவின் காலனியாதிக்க வெறி மொழிகளின் பன்முகத்தன்மையை 15 சதத்திற்கும் மேல் அழித்தது. ஐரோப்பாவில் மட்டுமே 12 மொழிகளுக்கும் மேல் அழிந்தன. ஆஸ்திரேலியா 20 மொழிகளை இழந்தது. பிரேசில் நாட்டில் மொத்தம் வழங்கின மொழிகளில் 540 மொழிகள் (ஏறத்தாழ முக்கால் வாசி மொழிகள்) 1530 ஆம் ஆண்டு நிகழ்ந்த போர்த்துக்கீசிய காலனியாதிக்கத்தில் அழிந்தன.

புதிய ஒற்றைக் கலாச்சாரத்திற்கும் ஒட்டுமொத்தமான தகவல் தொடர்பு எளிமைக்குமாக இந்தக் காலனியாதிக்க நாடுகள் ஒற்றைச் சாளரக் கலாச்சார பார்வைக்கும் ஒரு அல்லது இரு மொழித் தொடர்பு ஒட்டிய சிந்தனைகளையும் வளர்த்தன. இதற்கு இடையூறு செய்த சிறுபான்மை மொழிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் செயலை எந்தக் கூச்சமுமின்றித் தொடர்ந்தன.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீனமயமாதலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பில் புதிய தேவைகளை வடிவமைத்தன. பன்மொழி சார்ந்த கலாச்சாரம் மேற்குறிப்பிட்ட சூழலுக்கு ஒரு தடைக்கல்லாக விளங்கியதாகவே கருதப்பட்டது. உலகம் முழுவதற்குமான பொது மொழி ஒன்றை வடிவமைத்து ஒரு மொழிக் கலாச்சாரமாக அதை முன்னிருத்துவது என்பது தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கருத்திற்கு வடிவம் தரும் வகையில் பொது மொழி வடிவமைப்பிற்கான வேலைகள் துவங்கப்பட்டன. லத்தீன் மொழி கூட பொது மொழியாகப் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் செயற்கையாக ஒரு மொழியை வடிவமைக்க வேண்டும் என்ற கருத்தே வெற்றி பெற வாலேபூக் எனும் மொழி முதலில் வடிவமைக்கப்பட்டது தொடந்து வாழ முடியாத அந்த மொழியை அடுத்து எஸ்பிரேண்டோ என்ற மொழி தொடர்ந்து வடிவமைக்கப் பட்டு அம்மெழியும் சில காலம் புழக்கத்திலிருந்தது. பொதுவாக வடிவமைக்கப்பட்ட மொழிகள் எல்லாம் வழக்கத்திலிருக்கும் மொழிகளுக்கு எதிரான மேலாண்மை நிலையை எடுக்க முயற்சித்து தோல்வியடைந்தன. (வடிவமைக்கப்பட்ட மொழி என்பதிலிருந்து ‘நன்றாக வடிவமைக்கப் பட்டது ‘ என்கிற பொருள் தரும் சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கான மொழிபெயர்ப்பை நீங்கள்புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல).

உலகத்தில் ஒவ்வொரு வருடமும் 10 மொழிகள் அழிகிறதென்கிறார்கள் ஆய்வாளர்கள். சிலர் 50 முதல் 90 சத மொழிகள் இந்த நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக அழிந்து விடும் என்கிறார்கள். பன்மொழிச்சூழல் என்பது பல்வகைக் கலாச்சாரங்களின் வெளிப்பாடு. ஒரு மொழி அழியும் போது உடனடியாக அதனுடைய கலாச்சாரமும் அழிகிறதென்பது அனைவரும் அறிந்த தகவல். ஆனால் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையின் மொழியியல் பேராசிரியர் ராஜேஸ்வரி பந்தாரிபாண்டே மொழி அழிவதால் கலாச்சாரம் அழிவதில்லை உதாரணமாக நாடு பெயர்ந்து இந்தியா வந்த பெர்ஷிய மக்கள் தங்கள் மொழி பேசுவதை விட்டுவிட்டாலும் தங்களின் மதச்சடங்குகளை இன்னமும் தொடர்கிறார்கள் என்கிறார். மதம் ஒன்றுதானா கலாச்சாரம் ? இவர் போன்ற ஒருசில திருவள்ளுவர் போல மேற்துண்டால் மறைத்துக்கொள்ள வேண்டிய அபாக்கியசாலிகள் மாற்றிக் கூறுவார்கள். எந்தவொரு மக்கள் தொகுதி மீதும் ஒரு மொழியைத் திணிக்கின்ற போது அந்த மக்களின் மூச்சுத்திணறல் தம் சொந்த அனுபவங்களின் வாயிலாகக் கற்றறிந்ததை தம் அனுபவ மேதமையை வெளிப்படுத்த முடியாமையே ஏற்படுத்தும். ஏனெனில் மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமல்ல அது அம்மக்களின் உலகத்தைக் குறித்த பார்வையை, வாழ்வு குறித்த புரிதலை அடுத்த தலைமுறைக்கான வாழ்வியல் நியதிகளை எடுத்துச்செல்லும் நுட்பமான கருவி. உதாரணமாக பின்லாந்து நாட்டின் மீனின ஆய்வாளர்கள் சல்மான் எனும் மீன் டெனோ நதிக்கு வரும் சிறு சிறு நீர்த்தாரைகளை தம் முட்டையிடலுக்குப் பயன்படுத்தி வருகின்றன என்று ‘கண்டுபிடித்தனர் ‘. ஆனல் சாஆமி மொழியில் இவை போன்ற நீர்த்தாரைகளுக்கு சல்மானின் முட்டைப்படுகை என்றே ஒரு சொல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் சக்கரங்களை மறுபடியும் கண்டுபிடிக்கும் வேலை. தமிழ் இலக்கியத்தில் தாம் கடந்து வந்த பல்வேறு பகுதிகளின் தன்மையை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்லும் பத்துப்பாட்டு இலக்கியத்தின் பாடல்களையும் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிக் கூறும் குறிஞ்சிப்பாட்டையும் நாம் இத்துடன் ஒப்புநோக்கலாம்.

உலகின் அநேக மொழிகள் அடுத்த தலைமுறையால் பேசப்படாமலே அழிந்து விடும் அபாயத்திலிருக்கின்றன. நாமும் நம் குழந்தைகளுமான இரு தலைமுறைகளும் மனித வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையில் இருக்கிறோம் ஏனெனில் இரு தலைமுறைகளுக்குள்தான் அநேக மொழிகள் அழிந்து விடலாம் என உலகின் மொழியியலாளர்கள் கருதுகிறார்கள். (Manifesto of the Foundation for Endangered Languages; Iatiku #2, p.2.)

1992 ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாடு உயிர்களின் பன்முகத் தன்மையைக் காக்க வேண்டிய முக்கியத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இன்று ரியோ மாநாட்டின் முக்கிய நோக்கம் மொழிகளின் பன்முகத் தன்மையைக் காக்கவேண்டியதாக மாற்றியமைக்கப் பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே இந்தக் குரல் அனைத்துத் தரப்பிலும் ஒலிக்கத் துவங்கியது. தனிமனித மொழி உரிமை என்பது மனித உரிமைக்கான உலகப் பிரகடனத்தில் இணைக்கப் பட்டது.(Universal Declaration of Human Rights – article 2). இதை ஒட்டியே பல்வேறு கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டன. பன்மொழிச் சூழலும் எந்தவொரு தனி மொழியையும் அழிவபாயத்திலிருந்து காப்பதற்கென்றே சட்டங்களும் வரையறைகளும் வகுக்கப் பட வேண்டிய தேவையை இவை வலியுறுத்தின.

இது குறித்து 2002 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய நாடுகள் அவையின் க்ரோனிக்கில் இதழ் கூறுகிறது, ‘அழிவபாயத்தில் உள்ள மொழிகள் குறித்த உலக வரைபடம் ஒன்று வடிவமைக்கப் பட்டது. இதில் ஐரோப்பாவில் 50க்கும் மேற்பட்ட மொழிகள் குறிப்பாக பிரான்சில் 14 மொழிகளும் சைபீரியாவில் 40 மொழிகளும் அழிவபாயத்தில் உள்ளதாக அறியப்பட்டன. ஆப்பிரிக்காவைப் பொறுத்த வரை அறியப்பட்ட 1400 மொழிகளில் 500 க்கும் மேற்பட்டவை அழிவுப்பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் 250 க்கும் மேற்பட்ட மொழிகளின் ஒலிகள் காற்றோடு கலந்து மறைந்தழிந்து விடும் நிலையில் இருப்பதாகவும் அறியப்பட்டன. குறிப்பாக நைஜீரியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் சிக்கலான பகுதிகளாக அடையாளஹ் காணப்பட்டன. இதற்கான காரணமாக ஆப்பிரிக்க அரசுகளின் ஸ்வாகிலி போன்ற மொழியையோ அன்றி ஐரோப்பாவின் காலனி மொழிகளையோ மட்டும் பயன்படுத்த ஊக்கப்படுத்தும் போக்கும் காரணம் என்று விளக்கப்படுகிறது. வடஅமெரிக்காவின் கனடாவில் ஆங்கில பிரெஞ்ச் மொழிகளின் மேலாதிக்கத்தையும் மீறி உயிர்த்திருக்கும் சில எஸ்கிமோ மொழிகளையும் 104 செவ்விந்திய மொழிகளையும் குறிப்பிடுகிறார்கள். கிழக்கு பிரேசில் அர்ஜெண்டினா மற்றும் உருகுவே போன்ற நாடுகளில் முன்பே பல்வேறு தொல்குடிகள் ‘மறைந்து விட்டதால் ‘ அங்கு பெரும் மொழி அபாயம் இல்லை அமெரிக்காவில் ஐரோப்பியக் காலனி நாடுகள் வருகைக்கு முன்பிருந்த பல நூறு செவ்விந்திய தொல் மொழிகள் முன்பே முடித்து வைக்கப் பட்டதால் 150 மொழிகளுக்கும் குறைவானவையே தற்போது உயிருடனிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் ‘வாழ்ந்து வரும் ‘ தொல்குடிகளின் மொழிகளில் 1970 வரை பேசப்பட்ட 400க்கும் மேற்பட்ட மொழிகளுள் கரைந்து மறைந்தன பல. சில இன்னும் சில காலத்துக்குள் மறைந்து விடும் அபாயத்தில் இருக்கின்றன. வெறும் 25 மொழிகள் மட்டுமே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஆசியாவைப் பொறுத்தவரை சைனாவில் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. தைவானில் 23 மொழிகளுள் 14 க்கும் மேற்பட்டவை சீன மொழிக்குள் கரைந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன. புது கலெடோனியாவில் உள்ள 60000 உள்ளூர் வாசிகளுள் 40000 க்கும் மேற்பட்டோர் தம் மொழியை முற்றிலும் மறந்து விட்டனர். பசிபிக் பகுதிகளில் மொழிகள் உயிரோட்டமான சூழலில் இருப்பதாகவும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் யுனெஸ்கோ கருதுகிறது. ஆசியாவில் இந்தியாவைப் பொறுத்த வரை மொழிகள் நன்கு ‘பேணப்படுகின்றன ‘, அதற்கு அந்த அரசின் ‘மொழிக் கொள்கைகளே ‘ காரணம் என்கிறது யுனெஸ்கோ. சர்வதேச அரசியலுக்குள்ளான மொழி அரசியலையும் நன்கு பேணப்படும் மொழிக்கொள்கைகளையும் பின்னொரு கட்டுரையில் விவாதிப்போம்.

யுனெஸ்கோவும் ஐக்கிய நாடுகள் அவையும் டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து மொழிகளின் பன்முகத்தன்மையைக் காக்கவேண்டியது குறித்தும் அழிவபாயத்திலுள்ள மொழிகள் குறித்த விழிப்புணர்வை உலக முழுவதும் வளர்த்தெடுப்பது குறித்தும் இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தன. இதையொட்டி பல்வேறு வல்லுநர் குழுவின் பரிந்துரையின் பேரில் மிகவும் அழிவபாயத்திலுள்ள உடனடி பாதுகாப்பு தேவைப்படும் ஒன்பது மொழிகள் இனங்காணப்பட்டன. அக்டோபர் 2002 முதல் இவை குறித்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உலகத் தாய்மொழி தினமான 21 ஃபிப்ரவரி 2003 முதல் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. அவையாவன, ஐரோப்பாவில் ஸ்காட்ஸ் கேலிக் எனும் மொழி ஸ்காட்லாந்தில் 55,000 நபர்களால் பேசப்படுவது, சாஆமி எனும் மொழி ஸ்வீடன் நாட்டில் 15,000 நபர்களால் பேசப்படுவது அடுத்து வடஅமெரிக்காவின் கனடா நாட்டில் 165 நபர்களால் பேசப்படும் ெ ?ய்டா, அடுத்து லத்தீன் அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில் 178 நபர்களால் பேசப்படும் குக்காப்பா மொழி, அர்ஜெண்டினா நாட்டில் 36,000 நபர்களால் பேசப்படும் தோபாஸ் மொழி, அடுத்து ஆசியாவில் மலேசிய நாட்டில் 3,00,000 நபர்களால் பேசப்படும் கடாசண்டுசூன் எனப்படும் மொழி, அடுத்து ஜப்பானில் 150 நபர்களால் பேசப்படும் அய்னு எனும் மொழி, அடுத்ததாக இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் 489 நபர்களால் மட்டும் பேசப்படும் சார்தா மொழி, ஐதுமிஷிமி எனும் 8569 நபர்களால் பேசப்படும் அருணாச்சலப் பிரதேச மொழி ஆகிய மொழிகள் உடனடி அழிவபாயத்தில் உள்ள மொழிகள் என்பதாக அறியப்பட்டுள்ளன. இந்த வரிசையைத் தாண்டியும் மொழிகள் அழிவபாயத்தில் உள்ளன ஆனால் உடனடி பாதுகாப்பு தேவைப்படும் அளவில் அவை இல்லை.

‘உலகின் பல்வேறு மொழிகள் அழிவபாயத்தில் உள்ளன என்பதையும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதையும் நாம் அறிவோம், அழிவபாயத்தின் அளவுகோலை கணக்கிடுவதென்பது மிகச் சிக்கலானது, அதற்கு மாற்றாக அம்மொழி பேசும் மக்கள் தொகையைக் கணக்கெடுத்துக் கொள்வதென்பது வெகு சமயங்களில் சரியானதாக இருக்கும், ஆனால் 500 முதல் 1000 நபர்களால் பேசப்படும் பசிபிக் மொழிகள் அழிவபாயத்தில் இல்லை. ஆனால் கடாசண்டுசூன் என்று 30000 மக்களால் பேசப்படும் மொழி அழிவபாயத்தில் இருக்கிறது. வேறு சில மொழிகளைஸ் பொறுத்த வரை அம்மொழிகள் அழிவபாயத்தில் உள்ளன என்றாலும் அம்மக்கள் தம் மொழி அழிவபாயத்தில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றர் அது ஒரு உளவியல் சிக்கல். ‘ என்று சர்வதேச அழிவபாயத்திலுள்ள மொழிகளுக்கான தகவல் தொகுப்பாய்வு மையத்தின் மாநாட்டில் பேராசிரியர் ஷிகெரு சுசித்தா தம் தொகுப்புரையில் கூறுகிறார்.

சரி நேரடியான கேள்விக்கு வருவோம். தமிழ் அழிவபாயத்திலுள்ள மொழியா ? ஒரு சில கூடுதல் தகவல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு இந்தச் சிக்கலை எதிர்கொள்வோம்.

எந்தவொரு மொழியையும் அதன் எதிர்காலத்தையும் நான்கு விதமான சமூக ரீதியிலான அடிப்படைக் கூறுகளை வைத்து நாம் வகைப்படுத்தலாம்.

1. அந்த மொழிக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு இயந்திரங்கள் கொடுத்துவரும் முக்கியத்துவம்

2. அவற்றின் சமூக அந்தஸ்து

3. அந்த மொழி பேசுபவர்களின் தாய்மொழி குறித்த மனோபாவம்

4. அந்த மொழி வாழ்வதற்கு அல்லது அழிவதற்கு காரணமான பல்வேறு புறக் காரணிகள்

இது மட்டுமன்றி மொழியியல் ரீதியாக நாம் மேலும் இரண்டு வகையில் விளக்கமளிக்கலாம். முதலாவதாக எந்த மொழிக்கும் வாய்த்துள்ள பயன்பாட்டுச் சுமை (Functional Load) இரண்டாவதாக சமூகத்தின் பல்வேறு தளங்களில் அந்த மொழிக்கான பயன்வெளிப்பாடு (Functional Transperany).

இந்த இரண்டு காரணிகளும் எந்தளவு கூடுதலாக இருக்கிறதோ அந்த அளவு அவை மேலும் செழிக்கவும் எந்தளவு குறைகிறதோ அந்த அளவு அவை அழியவும் காரணமாகின்றன.

இங்கே பயன்பாட்டுச்சுமை என்பது சமூகத்தின் பல்வேறு தளங்களில் ஒரு மொழி எந்த அளவு வெற்றிகரமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதைப் பொறுத்த விஷயம். எத்தனை தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறதோ அந்தளவிற்கு பயன்பாட்டுச்சுமை அதிகரிக்கிறது அன்றி குறைவாகப் பயன்படுத்தப் படும்போது பயன்பாட்டுச்சுமை குறைகிறது. பயன்பாட்டுச்சுமை அதிகரித்தலே அம்மொழி ஆக்கப்பூர்வமான வழியில் வளர்கிறது என்பதற்கான குறியீடு. உதாரணமாக இந்தியாவில் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் அரசுகள் வழங்கியுள்ள பயன்பாட்டுச்சுமை மிக அதிகம்

வணிகம், கல்வி (துவக்கக் கல்வி மற்றும் உயர்கல்வி), அறிவியல், தொழில்நுட்பம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்குள்ளுமான தகவல் தொடர்பு, வெகுமக்களின் சமூக ரீதியிலான தொடர்பு, சட்டம், அரசு. வழிபாடு, மதம், கலை, கலாச்சார மதிப்பீடுகள், வீட்டுமொழி, வெகுமக்கள் தகவல் தொடர்பு. மற்றும் அரசியல் ஆகிய தளங்களில் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக மேற்சொன்ன மொழிகள் விளங்குகின்றன. ஆனால் அதே நேரத்தில் பிராந்திய மொழிகள் மக்கள் தங்களுக்குள்ளான சமூகத் தகவல் தொடர்பு, வீட்டுக்குள்ளான தகவல் தொடர்பு, மாநிலத்துக்குட்பட்ட தகவல் தொடர்பு. கல்வி மற்றும் அரசு ஆகிய தளங்களுக்குள்ளாகவே பயன்படுத்தப் படுகின்றன. எத்தனை சதவிகிதப் பயன்பாடு என்பது தனிக்கேள்வி. ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினருக்கான மொழிகளோ வீட்டுக்குள்ளான மற்றும் அவர்களுக்குள்ளான சமூகத் தகவல் தொடர்பு ஆகிய மட்டங்களிலே உள்ளன.

அதே நேரத்தில் பயன்வெளிப்பாடு என்பது எத்தனை சதம் அந்தந்த குறிப்பிட்ட தளங்களில் ஒரு மொழி பயன்படுத்தப் பட்டு வருகிறது என்பதாகும். எந்தவொரு மொழியும் ஒரு குறிப்பிட்ட தளத்தின் பயன்பாட்டை எந்தளவு தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதைக் பொருத்து நாம் அந்தத் தளத்தில் அம்மொழியின் பயன்பாட்டுச்சுமையை அறுதியிடலாம். வேறு மொழிகளுடன் அந்தத் குறிப்பிட்ட தளத்தில் ஒரு மொழி பயன்பாட்டை பங்கிட்டுக் கொண்டால் அதனுடைய பயன்பாட்டுச்சுமை குறைகிறது. எனவே எவ்வளவு அதிகம் அம்மொழி முழுமையாகப் பயன்படுத்தப் படுகிறதோ அந்த அளவு அம்மொழி அதிக வெளிப்பாடு உடையதாக இருக்கிறது. உதாரணமாக மொழி அரசியலின் விழைவாக இந்தியாவில் இன்றைக்கு மதம் வழிபாடு போன்றவற்றில் சமஸ்கிருதம் அதிகப் பயன்வெளிப்பாட்டுடன் திகழ்கிறது. அதே நேரம் ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகள் இக்குறிப்பிட்ட தளத்தில் பயன்பாடே இல்லாமல் இருக்கின்றன. ஆதியில் முழுமையாக இந்தத் தளத்தில் பிராந்திய அளவில் பயன்படுத்தப் பட்டு வந்த தமிழ் மொழி பின்னர் தன் பயன்பாட்டு அளவை பெருமளவில் இழந்து விட்டது. அதே போல தமிழகம் உட்பட்ட நிறைய மாநிலங்களில் கல்வி சார்ந்த தளங்களில் ஆங்கிலம் மாநில மொழிகளுடன் பகிர்ந்து கொள்ளப் பட்டதால் அந்த மாநில மொழிகளுக்கு இத்தளத்திலான பயன்பாட்டு வெளிப்பாட்டு அளவு குறைகின்றது.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் நாம் புரிந்துகொண்டோமேயானால் நமக்கு மொழிகள் குறித்த கொள்கை வடிவமைப்புகள், திட்டமிடல், மொழிவளர்ச்சி குறித்த சார்பு மற்றும் ஒரு மொழி பேசும் மக்களின் தாய்மொழி குறித்த மனோபாவம் முதலியவையும் குறிப்பிட்ட ஆதிக்க மொழிகளின் பால் மக்கள் வெகுவாக நகர்ந்து செல்லும் போக்கிற்கான மொழி அரசியலும் புரியும்.

எனவே இந்த அம்சங்கள் எல்லாம் சேர்த்தே இந்தியா போன்ற பன்மொழிப் பயன்பாட்டுச் சூழலில் மொழிகளின் ஆளுமை வரிசையை தீர்மானிக்கின்றன. இந்த ஆளுமை வரிசையே மொழிகளின் வளமைக்கோ அன்றி வீழ்ச்சிக்கோ காரணமாகிறது.

மீண்டும் கேள்விக்கு வருவோம் யுனெஸ்கோ தமிழ் அழியும் என்று கூறியதா என்றால் இல்லை என்பதே உண்மை. சில வருடங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் நடந்த உலக மொழியியலாளர்களின் தாய்மொழிகள் குறித்த மாநாட்டில், அடுத்த நூற்றாண்டிலும் உயிர் வாழ வாய்ப்புள்ள மொழிகள் எவை என்பது குறித்த ஆய்வறிக்கையில் 14 வெவ்வேறு காரணிகளை வரிசைப்படுத்தினர். உதாரணமாக எந்த மொழி கல்வி மொழியாக இருக்கின்றதோ எந்த மொழி ஆட்சி மொழியாக இருக்கின்றதோ எந்த மொழி வளர் இளம் தலைமுறையினரின் தொடர்பு மொழியாக இருக்கின்றதோ போன்ற காரணிகளை வகைப்படுத்தி அந்த 14 காரணிகளும் சரியாக நிறைவேற்றப் பட்டால் அம்மொழி உயிர்வாழும் வாய்ப்பு அதிகமுள்ளது என்றனர். இதையே நம் முன்சொன்ன விளக்கங்களின்படி பார்த்தால் வெவ்வேறு பயன்பாட்டுத் தளங்களில் அதிகப் பயன்பாட்டுச் சுமையுடன் எந்த மொழிகள் இருக்கின்றனவோ அவை வாழும் எனப்புரிந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டு முடிவுகள் சில பத்திரிக்கைகளில் யுனெஸ்கோ அறிஞர்கள் கருத்தாகவே வெளியிடப்பட்டன. அந்த வகையில் மேற்சொன்ன காரணிகள் அனைத்தும் தமிழுக்கு மிகவும் பொருந்தியுள்ளதாகத் தெரிய வரவே திரு தமிழண்ணல் அவர்கள் இது குறித்த விவாதத்தை பொது அரங்கில் துவக்கி வைத்தார் எனவும் பொது எச்சரிக்கைக் குரலாகவும் தமிழ் மொழியின் நிலை குறித்த ஒரு மீள்பார்வையின் முக்கியத்தையும் அவர் எடுத்துரைத்தார் என்றே நாம் கருதலாம்.

சரி யுனெஸ்கோ இது குறித்து நேரடியாகச் சொல்லவில்லை எனவே தமிழுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதாக நாம் இதைப் புரிந்து கொள்ள முடியுமா ? எந்த மொழி 30 சதவிகிதக் குழந்தைகளால் படிக்காமல் விடப்படுகிறதோ அந்த மொழி அழிவபாயத்தில் உள்ளது என்கிறது சர்வதேச அழிவபாயத்திலுள்ள மொழிகளுக்கான தகவல் தொகுப்பாய்வு மையம். அம்மையத்தின் அழிவபாய மொழிகளுக்கான சிவப்புக் குறியீட்டுக் கையேடு

1.அம்மொழியைப் பேசும்/படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

2.வளர் இளம் வயதிலுள்ள மொழி பேசும் நபர்களின் சராசரி வயது

3.மொழி பேசும் நபர்களுக்குள் பால் விகிதம்

4.மொத்தமாக அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை

5.அம்மொழி பேசுவோரின் மொழியறிவுத் திறம்

என்பன போன்ற கேள்விகளை முன்வைத்து தகவல் கோருகின்றது. இதிலுள்ள கேள்விகள் சுட்டும் தன்மைகள் மீண்டும் பயன்பாட்டுச் சுமை மற்றும் பயன் வெளிப்பாடு தொடர்புடையவையே. அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேசன் போன்ற ஆங்கில வழிக் கல்வி நிலையங்களுடன் 40000க்கும் மேற்பட்ட அங்கீகாரம் தேவைப்படாத 8 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயிற்றுவிக்கக் கூடிய நர்சரிப் பள்ளிகளைச் ? சுட்டிக் காட்டுகிறார் திரு.தமிழண்ணல். கர்நாடக மாநிலம் போலக் கட்டாயமாகக் கன்னடம் பயிலும் நிலை இங்கு நிலவாதது குறித்தும் திரு தமிழண்ணல் சுட்டிக் காட்டுகிறார். பெரு நகரங்களிலும் நகரங்களிலும் பொது இடங்களில் வளர் இளம் தலைமுறையினர் ஆங்கிலத்திலோ அன்றி பெரிதும் ஆங்கிலம் கலந்தோ பேசும் நிலையை நாம் கணக்கிலெடுத்து பார்க்க வேண்டியுள்ளது. செய்தித்தாட்களிலும் பல்வேறு இதழ்களிலும் தொடர்பு சாதனங்களிலும் பெரிதும் ஆங்கிலக் கலப்புடைய சொற்றொடர்கள் காணக்கிடைக்கின்றன. தொலைக்காட்சியிலும் வானொலியின் பண்பலை நிகழ்ச்சிகளிளும் தொகுப்பாளர்களின் தமிழோ மிக மிக ‘அருமை ‘.

இவை அனைத்தும் மக்களின் தம் தாய்மொழி குறித்த மனோபாவம் தொடர்புடையவை ஆதிக்கம் நிறைந்த மொழிகளைக்ககற்றுக்கொள்வதனால் கூடுதலாகக் கிடைக்கும் மொழி மூலதனத்தை நோக்கிய நகர்வின் வெளிப்பாடு இது. இவை தவிர்க்க இந்தியாவின் மொழிச்சிக்கல்கள் குறித்த விரிவான பார்வை தேவைப்படுகின்றது. ஆனால் அதுவே ஒரு தனியான நூல் வெளியிடும் அளவிற்கானது. ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இந்தத் தொடர்புச் சிக்கல்களை பின்னாட்களில் அதிகமாக நீக்கிவிடும் வாய்ப்புள்ளது.

இவையெல்லாம் மீறி ஒரு உண்மையிருக்கிறது. அது தமிழ் மொழியின் தாங்குதிறன். எத்தனை பெருவெள்ளம், பூகம்பம், எரிமலைச்சீற்றம், பேரூழி. எத்தனை முறை சவக்குழிக்குள் புதைத்து வைக்கும் பெருமுயற்சிகள், அத்தனையும் தாங்கி மீண்டும் எழுந்தது தமிழ். மணிப்பிரவாள நடையில் இருந்து மீண்டும் தன்னை அருமையாக மீட்டெடுத்தது. இதிலிருந்தும் தன்னை மீட்டெடுத்துச் செல்லும்.

உதாரணமாக ஆங்கிலம் பெரிதும் கலந்த உரையாடல் தொகுதியைப் பார்ப்போம், அவ ரொம்ப ஷார்ப்பான பொண்ணு. ரொம்ப ஸ்பீடா கார டிரைவ் பண்ணுறா. இங்கே டிரைவ் என்கிற ஆங்கில வினைச்சொல் தமிழ் வினைச் சொல்லான பண்ணு என்கிற வடிவத்தை துணைவினைச் சொல்லாகவே எடுத்துக்கொள்கிறது ஷார்ப் எனும் ஆங்கிலச் சொல்லை பெயர்ச்சொல்லாகவே எடுத்து அதனுடன் ஆன எனும் பின்னொட்டைச் சேர்த்துப் பயன்படுத்துகிறது உதாரணமாக அழகு+ஆன அழகான என்பது போன்று அதைப் போன்றே ஸ்பீடு+ஆக என்பதாகவே பயன்பாடு வருகின்றது. என்கிறபோது அடிப்படை அடுக்குகளை உடைத்தெரியாமல் ஒரு கடன் சொல்லாகவே ஆங்கிலம் பெரிதும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் விடுதலைப் போராட்ட காலம் வரை பெரிதும் வழக்கிலிருந்த மணிப்பிரவாள நடையில் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் நான் பிரேரபிக்கிறேன். நான் இந்தப் பிரேரணையை ஆஅக்ஷபிக்கிறேன். இங்கே பிரேரணையும் ஆட்சேபணையும் தமிழ்ச் சொல்லைப் போலவே பயன்படுத்தப் பட்டன.

மொழியியல் ரீதியாகச் சொல்வதென்றால் ஒரு மொழி பேசும் இனம் அந்த மொழியின் மேல் தனக்குள்ள அதிகக் காதலால் தன்மொழியை நிலைநிறுத்துவதன் மூலம் தன் இழந்துபட்ட சமூக அரசியல் உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்தும். உதாரணமாக சோட்டா நாக்பூர் ஒட்டிய பகுதிகளில் வாழும் சாந்தலி மொழி பேசும் பழங்குடியினர் தங்கள் மொழியிலான கல்விக்கும் தாம் வாழும் பகுதியின் தனி மாவட்ட உரிமைக்கான போராட்டத்திலும் வெற்றி பெற்றதைச் சொல்லலாம்.( ‘Santali language movement in the context of many dominant languages ‘ By Prof. Mahapatra. International Journal of the Sociology of Language) 2003 ஆம் வருடம் சாந்தலி மொழி இந்திய மொழிகள் குறித்த எட்டாம் அட்டவணையில் இடம் பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இனி தமிழ் மேலும் தனது பரப்பெல்லைகளை விரிவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. சங்க காலத்தின் திறனை மட்டும் பேசிச் சென்ற காலங்கள் போதும். வளர்ந்து வரும் புத்தியல்களின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய சொற்களை வடிவமைப்பதும் அப்படிச் சொற்கள் வழக்கத்தில் வரும் வரை வேற்றுமொழிச் சொற்களை தற்காலிகமாகக் கடன்சொற்களாகத் தூய்மைவாதம் பேசாமல் பயன்படுத்துவதும் மிகவும் வளர்த்தெடுக்கப் பட வேண்டிய ஒன்று. (10,16,500 சொற்களுக்கும் அதிகமுள்ள இன்றைய ஆங்கில அகராதியில் தூய ஆங்கிலோ சாக்ஸன் சொற்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களே என்பதையும் ஒப்பு நோக்குக) அதைப் போலவே தமிழகத்தின் அனைத்து வட்டார வழக்குகளையும் பதிவு செய்வதும் தமிழகம் தாண்டிய அனைத்து நாடுகளிலும் உள்ள வட்டாரங்களின் வழக்கு அகராதிகளையும் புலம் பெயர்ந்தோரின் தனித்தப் பயன்பாட்டடைவுகளையும் பதிவு செய்திட வேண்டும். பரதவர் மற்றும் தலித்திய சொல்லடைவு அகராதி முயற்சிகளும் முக்கியத்துவமுடையவை. ஏனெனில் ஊழி எனும் மீனின் பெயரும் ஊர்த்தெரு போன்ற தலித்திய சொல்லடைவுகளை நான் இதுவரை கடந்து வந்த எந்தவொரு அகராதியிலும் பார்க்கவில்லை.

எனவே தமிழ் நிச்சயமாக அழிவபாயத்தில் இல்லை, ஆனால் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாகத்தான் இருக்கிறது. அதற்கு இந்தியாவின் மொழி குறித்த கொள்கைகளின் மாற்று வடிவமைப்பில்தான் விடை இருக்கிறது.

தான் பேசுவது காற்றில் கலந்து வெளியிலே அறியப்படுமுன்னரே கரைந்து போய்விடும் நிலையில் இந்தியாவிலேயே பல ஆதிவாசி தொல்குடிகளின் மொழிகள் அழிவபாயத்தில் உள்ளன. எனவே அவர்களுக்காகப் போரிடுவதுதான் புதிய மொழிக்கொள்கைகளை இந்தியாவில் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கும். அப்போது தமிழும் சேர்ந்து பயனடையும்.

அன்புடன்

நா.இரா.குழலினி

kuzhalini@rediffmail.com

(எவர் வேண்டுமானாலும் இந்தக் கட்டுரையை அதன் பகுதிகளை முன்னனுமதியின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.)

Reference:

1. Down To Earth December 2002

2. MAHAPATRA, B. P. 1979. ‘Santali language movement in the context of many

dominant languages ‘. International Journal of the Sociology of Language 75: 73-8.

3. UN Chronicle CultureWatch

4. http://www.unesco.org/courier/2000_04/uk/doss21.htm

5. Endangered Language Handout (The Akha Heritage Foundation Documents Section)

6. Foundation for Endangered Languages http://www.ogmios.org/

7. UNESCO Red Book of Endangered Languages http://www.tooyoo.l.u-tokyo.ac.jp/Redbook/

8. International Clearing House for Endangered Languages

http://www.tooyoo.l.u-tokyo.ac.jp/ichel/ichel.html

9. Study on the Rights of Persons belonging to Ethnic, Religious and Linguistic Minorities,

Francesco Capotorti

10. International Journal on Multicultural Societies, Vol. 4, No. 2 ISSN 1564-4901 © UNESCO

11. CHAKLADER, S. 1981. Linguistic Minority as a Cohesive Force in Indian Federal Process.

New Delhi: Associate Publishing House.

Series Navigation

நா.இரா. குழலினி

நா.இரா. குழலினி