சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

மஞ்சுளா நவநீதன்


பெண்களுக்கு எங்கே 33 சதவீதம் ?

http://us.rediff.com/election/2004/mar/23kbkres.htm

இந்தியாவின் பாராளுமன்றத்தின் மொத்தத் தொகுதிகள் 543. இதில் தனித் தொகுதிகள். தாழ்த்தப்பட்டவர்கள் 79 பேர்கள், பழங்குடியினர் 41 பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் கட்டாயம் 120 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இருப்பார்கள். தனித் தொகுதிகளால் விளைந்த பயன்.

http://us.rediff.com/election/2004/mar/24kbkmin.htm

மொத்தம் 543 தொகுதிகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெறும் 31 மட்டுமே இன்று. (மிகக்குறைவு 24/500 1957இல். மிக அதிகம் 1980இல் 46/544). இந்தியாவில் முஸ்லீம்களின் சதவீதம் சுமார் 10இலிருந்து 12வரை இருக்கலாம். ஆகவே அவர்களது 12 சதவீதம் கேட்டால் கூட அவர்களது எண்னிக்கை சுமார் 65ஆக இருக்கவேண்டும். ஆனால் முஸ்லீம்கள் எந்த தொகுதியிலும் அறுதிப்பெரும்பான்மை இல்லாதபோதும், அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் போல பங்கீடு இல்லாதபோதும், அவர்கள் இருக்க வேண்டிய பிரதிநிதிகள் எண்ணிக்கையில் பாதி அளவாவது இருப்பது ஒரு விதத்தில் ஆறுதலானதே, என்றாலும் 65 பேர் கூட இல்லாதது வருத்தம் தருவது.

ஆனால் பெண்கள் இதுவரை எவ்வளவு இருந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியுமே வருகிறது.

சமீபத்திய (1999) வருடத்திய பாராளுமன்றத்தில் பெண் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 51. இதுதான் இதுவரை நடந்த பாராளுமன்றங்களிலேயே அதிக எண்ணிக்கையுள்ள பெண்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை. (மிகவும் குறைச்சல் 1977இல் 19 பெண்கள் பிரதிநிதிகளாக இருந்தது) 33 சதவீதம் பெண்களின் பங்காக இருந்தால் அவர்களின் எண்ணிக்கை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதிகளில் 27 பேர்களாகவும், பழங்குடியினர் பிரதிநிதிகளில் 14 பேர்களாகவும், மொத்த 543 தொகுதிகளில் 181 பேர்களாகவும் இருக்க வேண்டும்.

http://in.rediff.com/election/2004/mar/18kbkwom.htm

பெண்களின் பங்கு 33 சதவீதம் என்று பேசிய ஒரு கட்சிகூட தங்கள் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினராக பெண்களை அடையாளம் கண்டு சொல்லவில்லை. தலைமைபீடத்தில் இருக்கும் ஜெயலலிதா , சோனியா காந்தி, மமதா பானர்ஜி, மாயாவதி போன்ற பெண்களும் கூட இதைப் பற்றிக் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.

இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை பாதிக்குப் பாதி. அவர்கள் மக்கள்தொகைப் படி பிரதிநிதித்துவம் பெற வேண்டியது 271 இடங்களில். ஆனால் அவர்கள் இருப்பதோ 51 இடங்கள். அதாவது அவர்களுக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய இடங்களில் ஐந்தில் ஒரு பகுதிதான்.

வெட்டிப்பேச்சும், வீராவேசமும் தான் இந்த அரசியல் கட்சிகளின் சொத்தே ஒழிய உண்மையான பெண்கள் முன்னேற்றம் அல்ல என்பது தான் இதன் அர்த்தம்.

****

எங்கே பெண் அரசியல்வாதிகள் ?

இதிலும் பெண்களின் முறையான அரசியல் ஆர்வத்தினால் தனித்தன்மையுடன் எத்தனை பேர்கள் அரசியலில் முன்னுக்கு வர முடிந்திருக்கிறது என்று யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. செத்துப் போன கணவனின் நினைவை முன்வைத்து வாக்குகள் யாசிக்கும் பெண்கள், முதல்வரின் பால்யகால சிநேகிதி, சின்னத்திரை புகழினால் அரசியலுக்கு வந்தவர்கள், அப்பா தயவில் முன்னுக்கு வந்தவர்கள் என்று ஒரு விரும்பத்தகாத பட்டியல் தான் முன் நிற்கிறது. சமூக சேவை அல்லது சில சமூகப் பிரசினைகளுக்காக முன்வந்து போராடி அதனால் அரசியல் செல்வாக்குப் பெற்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

நேருவின் மகள், இந்திராவின் மருமகள், கன்ஸிராமின் தயவில் முன்னுக்கு வந்த மாயாவதி, லாலுப்ரசாதின் மனைவி, எம் ஜி ஆரின் துணைவி என்று இந்த வரிசை மிக ஏமாற்றம் தருவது.

****

பதிபக்தி பற்றி சதியேறாத ஜெயலலிதா

தேர்தல் நேரத்தில் சிரிப்புத் துணுக்குகளுக்குக் குறைவே இல்லை. எம் ஜி ஆர் இறந்தபின் சதி ஏற ஆசைப்பட்டதாய்த் தம்பட்டம் அடித்தவர் ஜெயலலிதா. கண்ணீரும் கம்பலையுமாக போட்டோ எடுத்து அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்ட இவர் இப்போது சோனியாவின் பதிபக்தியைக் குறை கூறுகிறார். கருணாநிதியுடன் சோனியாகூட்டணி சேர்ந்தது குற்றமாம். ராஜீவ் மரணம் மீண்டும் விவாதிக்கப் படுகிறது. சவ ஊர்வலத்தை பயன்படுத்திக் கொள்வதில் சோனியாவும், ஜெயலலிதாவும் ஒன்றல்லவா ?

இத்தாலியின் மகள் இந்தியாவின் மருமகள் என்று சோனியாவை வியந்த கருணாநிதி ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டுக் கண்ணீர் வடிக்கிறார். மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று குஜராத்தின் துயரத்திற்குக் கண்ணீர் வடிக்கிறார். தன்னைப் போலவே மகனை அரசியலுக்குக் கொண்டு வந்ததனால் சோனியா மீது தனிப் பாசம் இருக்கலாமோ என்னவோ ?

பொற்காலத்தைக் கொண்டுவருவோம் என்று அப்துல்கலாமைத் துணைக்கு அழைக்கிறது பா ஜ க. 2020 க்குள் வல்லரசாய் மாற்றிக் காட்டுவோம் என்கிறார்கள். ஐந்து வருடங்களில் பொதுத்துறையைக் கூறு போட்டு விற்றாகிவிட்டது. குஜராத்தின் கறை என்றும் மறையாத கறையாக நிற்கிறது. எந்த விதத்திலும் முக்கியம் பெற்றிருக்க முடியாத ஆர் எஸ் எஸ் பின்னால் நின்று இயக்கும் நச்சு சக்தியாக மாறி வருகிறது. மதச்சார்பின்மையையும், நேருவின் அரசியல் தரிசனத்தையும் புதைத்துவிட்டு, பிளவு சக்திகளைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். வல்லரசா புல்லரசா ?

ரஜினி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று பின்வாங்குகிறார் ராமதாஸ். பா ம கவின் சாதிய அரசியலுக்கு ஒரு விதத்தில் வெற்றி என்று தான் சொல்லவேண்டும். கிருஷ்ணசாமியும், திருமாவளவனும் ஓரங்கட்டப் பட்டுவிட்டார்கள். கூட்டணி வைக்கிறீர்களா இல்லை சகோதரியிடம் போகட்டுமா என்ற கேள்வியைப் பின்னணியில் வைத்து ராம்தாஸ் கருணாநிதியுடன் கூட்டணி சேர்ந்ததன் விலை இது.

வைகோ சும்மா பேச்சுக்குத் துணை , ஸ்டாலின் தான் வாரிசு என்பதில் குறியாக இருக்கிறார் கருணாநிதி.

மக்கள் ?

****

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்