வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

மத்தளராயன்


தேர்தல் – 2004 நிறைய விநோதங்களை வாராவாரம் அள்ளிக் கொடுத்தபடி இருக்கிறது. வாக்களிக்கப் போகிற பெருமக்களையும், எலக்ஷன் தினப் பொது விடுமுறையை ஏழு காய்கறிக் கூட்டு, வெங்காய சாம்பார் அல்லது ஆம்பூர் பிரியாணி, தால்ச்சா, மதியத் தூக்கம், டெலிவிஷனில் சினிமா என்று கிரமமாகக் கழித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றப் போகிற மேலதிகம் இடைத்தட்டு, மேல்தட்டு மக்களையும், நீங்க ஓட்டுப் போடப் போகாட்ட என்ன, உங்க சார்பிலே நாங்க போட்டுடறோம் என்று உதவ நீண்ட ஆட்காட்டி விரலும், மை அழிப்புத் திரவமுமாகக் கிளம்பும் புற்றீசல் படைகளையும் உற்சாகப் படுத்தும் இவை சீக்கிரமே செய்திகளை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது வழக்கமான கிரிக்கெட், சினிமா, வாஸ்து போன்ற சமாச்சாரங்கள் மீதான ஈடுபாட்டை இச்செய்திகள் வெகுவாகப் பின்னுக்குத் தள்ளிவிடலாம்.

தேர்தல் கொஞ்சம் முன்னால் வந்திருந்தால், செளரப் கங்குலியும் இன்ஸமாம் உல் ஹக்கும், ‘பார்ட்னர், நாளைக்கு மேட்ச் வேணாம். அதை ரெண்டு நாள் தள்ளி வச்சுட்டு நாம எல்லோருமா சேர்ந்து உக்கார்ந்து இந்திய எலக்ஷன்லே எங்கே யார் கெலிக்கறாங்கன்னு டிவி ரன்னிங் கமெண்ட்ரியும் செய்தியும் நாள் முழுக்க, ராத்திரி முழுக்கப் பார்க்கலாம். வேணுமானா, முஷாரப் அங்கிளையும் கூப்பிட்டுக்கலாம். பரபரப்பாகப் பொழுது போகும் ‘ என்று முடிவெடுத்து டிராட் பியரோ, உஷ்ணம் தணிக்கும் ரூஃப் அஃப்ஸாவோ குடித்தபடி டெலிவிஷனில் மூழ்கிக் கிடந்திருக்க வாய்ப்பு உண்டு. பர்வேஸ் முஷாரபுக்குக் கூட, அல்க்வய்தா தொல்லை, இம்ரன்கான் இம்சை எல்லாம் இல்லாமல் இத்தனை சுவாரசியமான இந்தியாவுக்குக் கட்சி – நாடு மாறினால் என்ன என்று சபலம் ஏற்படலாம். அதெற்கெல்லாம் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது!

தேர்தல் களைகட்ட ஆரம்பித்து விட்டது என்பதற்கு முதல் அத்தாட்சி கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சியில் அரங்கேறும் நகைச்சுவையா, சோகமா என்று புரியாமல் சிண்டைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் காட்சிகள். மக்களை அவதிக்குள்ளாக்கும் தண்ணீர்க் கஷ்டத்தைக் கொஞ்சம் போலவாவது மறக்க வைக்கின்றன இவை. சாதாரணமாகக் கட்சிகளுக்கு நடுவே அடிபிடி இருக்கும் – எதிர் எதிர்க் கட்சிகள் என்றால் கொஞ்சம் அடிதடி. நட்புக் கட்சிகள் என்றால் நிறைய அடிதடி என்பது வளமுறை. காங்கிரசில் குரூப்புகளுக்கு இடையே அடிபிடி வழக்கமான விஷயம். நூற்றாண்டு சரித்திரமுள்ள காங்கிரஸ் கோஷ்டிப் பிரச்சனை தற்போது அலுத்துப் போய் ஒரு சேஞ்சுக்காக, கேரளத்தில் மூத்த தலைவர் கருணாகரனின் காங்கிரஸ் (ஐ) குரூப்புக்குள்ளேயே அடிதடி.

கருணாகரனின் வலது கையும், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டிச் செயலாளருமான ராஜ்மோகன் உண்ணித்தான் கருணாகரனையும், அவர் மகன் முரளீதரனையும் எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். காங்கிரஸ்காரனான முரளி, கேரளத்தில் பிரபல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வீட்டில் காங்கிரஸ்கார கேரள முதலமைச்சர் ஏ.கே.ஆன்றணி சர்க்காரைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாக உண்ணித்தான் குற்றம் சாட்டுகிறார்.

‘ஆயிரம் உண்டிங்கு கோஷ்டி; எனில் அந்நியர் வந்து உலர்த்தலாமோ வேஷ்டி ‘ என்று கொதித்த அவரை சமாதானம் பேசப் பெரியவர் கருணாகரன் அழைத்திருந்தார். பேச்சு வார்த்தை நடந்தது வீட்டிலோ, ஓட்டலிலோ இல்லை. நெம்பர் இருபது திருவனந்தபுரம் – சென்னை மெயிலில் ஏசி ஒண்ணாங்கிளாஸ் பெட்டியில் வைத்து. திருவனந்தபுரத்தில் வண்டி ஏறிய இருவரும் கொல்லம் வரும்வரை பேசியும் சமாதானமாகாமல், கொல்லத்தில் உண்ணித்தான் பையைத் தூக்கிக் கொண்டு இறங்கி விட்டார். ரயில்வே ஷ்டேஷன் வெயிட்டிங் ரூமில் வைத்தே பத்திரிகையாளர் சந்திப்பை அவர் நடத்தி அறிவித்தது கட்சியை விட்டு ராஜினாமா செய்ய மாட்டேன் என்றல்ல. கட்சியில் இன்னொரு குரூப் ஆரம்பிக்க மாட்டேன் என்றுதான்.

தேசிய நீரோட்டத்தில் தானும் ஒரு சின்ன வாய்க்காலாக ஓடிவர உத்தேசித்த உண்ணித்தானைக் கட்சியிலிருந்து விலக்கியதாகச் செய்தி வந்ததும், அவருடைய ஆதரவாளரான சரத் சந்திர பிரசாத் திருவனந்தபுரத்தில் கேரள பிரதேச காங்கிரஸ் கட்சி ஆப்பீஸ் முன்னால் கட்டில் போட்டுக் கொண்டு தலையில் கதர்க் குல்லாவோடு படுத்து சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.

உண்ணித்தான் ? அவர் வில்லனாகி விட்டார். கருணாகரனுக்கும் காங்கிரசுக்கும் இல்லை. மம்மூட்டிக்கு. ஷாஜி கைலாஸ் எடுக்கும் ‘பிராண்ட் ‘ என்ற திரைப்படத்தில் மம்மூட்டி கதாநாயகன். பிரதான வில்லனாக நடிப்பது ராஜ்மோகன் உண்ணித்தான்.

கதை அதோடு முடிந்ததா என்றால் இல்லை. இப்படி அரசியலிலிருந்து சினிமாவுக்கு வில்லன் வேஷம் கட்ட வந்த உண்ணித்தானுக்குப் பதிலடியாக மலையாள மற்றும் தென்னிந்திய மொழிகளில் வில்லனாக நடித்துப் பிரபலமான நடிகர் தேவன் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்.

காந்தி, நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட் ஆகியோரின் கொள்கையில் அடிப்படையில் கட்சி தொடங்கியதாகச் சொல்லும் தேவன் திருவனந்தபுரத்தில் கட்சி தொடங்கியதற்குப் பதில் நெம்பர் இருபது – திருவனந்தபுரம் சென்னை மெயிலைப் பிடித்து சென்னை செண்ட்ரலுக்கு வந்து சேர்ந்திருக்கலாம். போகட்டும்.

இது இப்படி இருக்க, பாலிவுட்டிலிருந்து பா.ஜ.காவுக்குப் போன தர்மேந்திரா, இவருடைய தர்ம பத்தினி ஹேமமாலினி, மிஸ்டர் பாரத் மனோஜ் குமார் ஆகியோர் பாலிவுட் தூதுக் குழுவாக நல்லெண்ண விஜயம் நடத்தி அத்வானியைச் சந்தித்திருக்கிறார்கள். வேறென்ன ? எல்லோருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வேணும். எல்லா சினிமாக் காரங்களையும் நிக்க வைக்க தொகுதிகளை இனிமேல்கொண்டு புதுசா உண்டாக்கினாத்தான் உண்டு. ஒண்ணு ரெண்டு சீட்டு வேணும்னா பார்க்கலாம். இதுக்காகக் கவலைப்படாம ஜோரா தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்புங்க என்று உற்சாக டானிக் கொடுத்து அத்வானி தன் ஸ்வராஜ் மாஸ்டா ரத யாத்திரையைத் தொடர்ந்திருக்கிறார். அடிக்கடி நின்று போகிற அந்த ரதத்தால், நாடெங்கிலுமுள்ள காரேஜ் – கார் ரிப்பேர் மெக்கானிக்குகளுக்கு நல்ல வருமானம் என்ற வகையில் பழைய கார் ஹெட்லைட் போல் இந்தியா மங்கலாகப் பிரகாசிக்கிறது.

இங்கே கர்னாடகத்தில் பரபரப்பான அரசியல் சினிமா. கதாநாயகன் குமார் பங்காரப்பா. இரண்டு வாரம் முன்னால் தான் கன்னட திரைப்பட நடிகரும், கிருஷ்ணா அமைச்சரவையில் மந்திரியுமான இவர் காங்கிரசையும், மந்திரி பதவியையும் துறந்து, தந்தை சொல் மீறாத தனையனாக, அந்தக்கால காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பாவோடு பா.ஜ.கவில் இணைந்ததைக் குறிப்பிட்டிருந்தேன். பதினைந்து நாள் முன்னால் காங்கிரசால் நாட்டுக்குச் சல்லிக்காசு பிரயோஜனமில்லை, பா.ஜ.கவே இந்தியாவுக்குக் கதி என்று முழங்கிய குமார் பங்காரப்பா தேர்தல் கிளைமாக்சுக்கு முந்திய ரீல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாரத்தில் பா.ஜ.கவுக்கு டாட்டா சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டார். ‘மதச் சார்பான கட்சிங்க அது. உருப்படவே உருப்படாது ‘. குமாரின் புத்தம்புதிய கண்டுபிடிப்பு இது.

விஷயம் வேறொன்றுமில்லை. ஷிமோகா பிரதேசத்தில், குமார் காங்கிஸ்காரராகக் கெலித்த சொரப் நாடாளுமன்றத் தொகுதிக்குத் தன்னை பா.ஜ.க வேட்பாளராக நியமிக்கமவில்லை என்பதே அவருடைய கோபத்துக்குக் காரணம். மாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தவர் வேறு யாருமில்லை. அப்பா பங்காரப்பா தான். அந்த மாற்று வேட்பாளரும் குமாருக்கு வேண்டியவர் தான். அவருடைய சொந்தத் தம்பி மது பங்காரப்பா தான் அது.

‘என் குடும்பத்தையும், நாட்டையும் பா.ஜ.க நாசம் செய்து கொண்டிருக்கிறது ‘ என்று குமார் குமுற, இரண்டு வாரத்துக்கு முந்தி குமார் தோளில் கைபோட்டுப் பிரியத்தோடு பேசிய அத்வானியும், இப்போதெல்லாம் வாயைத் திறந்தால் இந்தி மட்டும் பேசுகிற அசல் தெலுங்கர் வெங்கையா நாயுடுவும் ஹே திருப்பத்தீ கா பக்வான் பாலாஜி – ஏடுகொண்ட்ல வாடா என்று தலையில் கைவைத்து நிற்க, அப்பா பங்காரப்பா தன் பந்து மித்திரர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து ஷிமோகா பக்கத்துத் தொகுதிகள் எல்லாவற்றிலும் மும்முரமாக வேட்பாளர்களாக்கிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.கவில் வருடக் கணக்காக இருக்கிற மற்றவர்கள் பொருமித் தீர்த்து இஞ்சி சூர்ணத்தைத் தேனில் குழைத்து விழுங்கி விட்டு கட்டை விரலைச் சூப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இருபது நாள் காணாமல் போயிருந்தாலும் பரவாயில்லை, சிக் லீவாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு குமார் பங்காரப்பாவைத் திரும்பக் காங்கிரஸ்காரனாக்கிக் கதர்ச் சட்டை போடவைத்து ஷிமோகாவில் சோனியா காந்தியின் அன்புத் தளபதியாக நிற்க வைத்து வெற்றியடைய வைக்கக் கர்னாடக முதலமைச்சர் கிருஷ்ணா கைச்சின்னம் காட்டி விட நேற்றுக் காலையில் அவர் காந்தியவாதியாகி விட்டார்.

‘அரசியல்லே இதெல்லாம் சகஜம்ப்பா ‘ என்று சொல்ல விரும்புகிறவர்கள் எழுந்து நின்று உடனே உரக்கச் சொல்லி விடவும். கவுண்டமணி அந்த வாக்கியத்துக்கு காப்பிரைட் வாங்கிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

***

மலையாளிக்கு இரண்டு விஷயங்கள் வளரெ இஷ்டமானவை – மிமிக்ரி ஷோ, கான மேளா.

தமிழில் விகடக் கச்சேரி என்ற மிமிக்ரி ஷோக்கள் ஒரு ஐம்பது, எழுபது வருடம் முன்னால் பிரசித்தமாக இருந்ததாகக் கேட்டிருக்கிறேன். நாய் போல் குரைத்தும், யானை போல் பிளிறியும், குரலிலேயே சகல வாத்தியங்களையும் ஒலித்தும் நடந்த இந்த விகடக் கச்சேரிகளில் அந்தக் கால நேயர் விருப்பம் பல ஜாதிக்காரர்களின் பேச்சு மொழியாம். சினிமா பிரபலமானதற்கு அப்புறம் இந்த விகடக் கச்சேரிகள் நடத்தவும் பார்க்கவும் ஆளில்லாமல் போய்விட்டது. சென்னையில் துணுக்குத் தோரண நாடகங்கள் விகடக் கச்சேரிகள் இல்லாத குறையை இன்னும் அதிகமாக நிறைவு செய்தன. இருந்த நாலைந்து மிமிக்ரிக்காரர்களும் திரும்பத் திரும்ப க் கிருபானந்த வாரியார் குரலையே வம்புக்கிழுக்க – அவர் இறந்து எத்தனையோ வருடம் ஆன பின்பும் – போரடித்துப் போன பொதுமக்கள் போதும்யா நிறுத்து என்று ஒரே குரலில் சொல்லிவிட்டு எழுந்து விட்டார்கள்.

ஆனால் கேரளத்தில் இன்னும் சக்கைப் போடு போடுகிற நிகழ்ச்சி மிமிக்ரி ஷோ. சினிமா நடிகர்கள் போல் குரலை மாற்றிப் பேசிப் பிரபலமான பல மிமிக்ரி கலைஞர்கள் சினிமா நடிகர்களாகவும் ஆகிவிட்டார்கள். ஜெயராம், கலாபவன் மணி, திலீப் என்று இந்தப் பட்டியல் நீளும்.

மிமிக்ரி ஷோவுக்கு அடுத்தபடியாக மலையாளிகளின் இதயம் கவர்ந்தது கானமேளா. கல்லூரி விழாவோ, கிராம அம்பலத்தில் பரணித் திருநாளோ, இல்லை, சிம்ப்ளி சும்மாவோ, பட்டி தொட்டி, சிறு நகரம், பெருநகரம் எல்லாம் மைக்கைப் பிடித்து லோக்கல் பாடகர்கள் ஏசுதாஸ் போல் ஜிப்பா போட்டு, ஏசுதாஸ் போல் தாடி வைத்து, ஏசுதாஸ் போல் பாடுவதாக நினைத்துக்கொண்டு இசை மழை பொழியும் இந்த நிகழ்ச்சிகள் எப்போதும் அரங்கு நிறைந்து வழிகிறவை. தாசேட்டனோடு, ஜெயச்சந்திரன், சித்ரா, எஸ்.பி.பி, எம்.ஜி.ஸ்ரீகுமார் போன்றோர் குரலும் இங்கே எல்லாம் எழுவது வாடிக்கை.

தற்போதைய ஹிட்டான ஜாஸி கிப்ற் பாடிய ‘லஜ்ஜாவதியே நிண்டெ கள்ளக் கடக் கண்ணில் ‘ முதல் ஐம்பது வருடத்துக்கு முந்திப் பிரபலமான கமுகரெ புருஷோத்தமனின் ‘காயலரிகத்து வலயெறிஞ்ஞப் போள் வள கிலுக்கிய சுந்தரி ‘ வரை உற்சாகமாகப் பாடும் இந்த கானமேளாக்களுக்கு இப்போது ஒரு இடைஞ்சல் வந்திருக்கிறது. ஐ.பி.யார்.எஸ் என்ற இண்டியன் பெர்பார்மன்ஸ் ரைற்ஸ் சொசைற்றி தான் கானமேளாவில் மைக்கைப் பிடுங்க வந்துள்ள சங்க(ட)ம்.

இனிமேல் கானமேளாவில் பாட்டுப் பாடவேண்டும் என்றால் லைசன்சு வாங்க வேண்டுமாம். என்னவாக்கும் அந்த லைசன்ஸ் ? ஒரு சிறு தொகை. அதைக் கட்டினால், சங்கத்தில் ரசீது தருவார்கள். பாட வேண்டிய பாட்டுக்கெல்லாம் ரசீது வாங்கிப் பத்திரமாக வைத்துக் கொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம். பாட்டுக்கு நடுவே யாராவது வந்து கேட்டால் பாடின படிக்கே, ஆடின படிக்கே ரசீதைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினால் போதும். ரசீது இல்லாவிட்டால் ? குரல்வளையைப் பிடித்து நிறுத்தி, கைது செய்து கொண்டு போக வாரண்டோ, வக்கீல் நோட்டாசோ நிச்சயம்.

லைசன்ஸ் தொகையில் இருபது விழுக்காடு பாட்டை எழுதிய கவிஞருக்கும், முப்பது சதவிகிதம் இசையமைப்பாளருக்கும், மீதி இசைத்தட்டுக் கம்பெனிக்கும் போகுமாம். மற்றப்படிக்கு இசைத்தட்டில் பாட்டைப் பாடிப் பிரபலமாக்கிய ஏசுதாசுக்கோ, ஜெயச்சந்திரனுக்கோ, சித்ராவுக்கோ ஒரு காசு கூடப் போகாது.

ஜெயச்சந்திரன், உண்ணிமேனோன் போன்ற பாடகர்கள் இதை எதிர்க்க, ஏசுதாஸ் லைசன்ஸ் முறையை ஆதரிக்கிறதாகச் செய்தி.

போகிற போக்கில், பாத்ரூமில் பாட வேண்டுமென்றால் கூட, ஷவரில் காற்றோடு கொஞ்சம் தண்ணீரும் வருகிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, சோப்பு டப்பாவை மறந்தாலும், பாடுவதற்கான லைசன்சை எடுத்துக் கொண்டு கிளம்பணும் போலிருக்கிறது.

****

உலகெங்கிலுமுள்ள பெரு நிறுவனங்கள் தங்களுக்கு சுக்ர தசை அடிக்கப் போகிறதா அல்லது அஷ்டமத்தில் சனியா என்று தீர்மானித்து ஜோசியக் குறிப்பு போல் பிசினஸ் பிளான் எழுதி வைப்பது மெக்கின்ஸி அறிக்கைகளின் அடிப்படையில் தான். எம்மாம் பெரிசு கப்பல் கம்பெனி என்றாலும், கப்பல் போக்குவரத்துப் பற்றிய லேட்டஸ்ட் மெக்கின்ஸி அறிக்கையைப் படித்துவிட்டுத்தான் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.

இந்த அறிக்கைகள் சும்மாக் கிடைக்கிற சமாச்சாரமில்லை. இவற்றில் சில அரை மில்லியன் டாலர் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியவை. வாங்குகிறார்கள். ஆனாலும் அவ்வப்போது மெக்கென்ஸி சொல்லும் ஆருடம் பலிப்பதில்லை என்று சுட்டிக் காட்டுகிறது எக்கனாமிக் டைம்ஸ்.

உதாரணமாக 2005ம் ஆண்டில் உலக உணவுப் பொருள் சந்தையில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கும், ஒவ்வொன்றும் முன்னூறு மில்லியன் டாலர் சாப்பாட்டு வர்த்தகம் செய்யும் பத்துக் கம்பெனிகளாவது இந்தியாவில் இருக்கும் என்று மக்கென்ஸி சொன்னது பொய்யாக, இன்னும் அப்பளமும், வடகமும், புளியோதரைப் பொடியும் தான் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம்.

தொழில்துறைப் போக்குகளும், தொழில்நுட்பமும் சடார் சடாரென்று மாறிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், எந்தத் துறை பற்றியும் மக்கென்ஸி போல் லீனியராக ஆருடம் சொல்ல முடியாது என்கிறார் போலாரிஸ் கம்ப்யூட்டர் கம்பெனித் தலைவர் அருண் ஜெயின்.

நாங்க என்ன பொய்யா சொல்றோம் ? இருக்கற தகவலை அலசி ஆராய்ந்து, இது இப்படிப் போகுமான்னு பலவிதமா மாடலிங் போட்டுச் சொல்றதுதான். சில சமயம் தப்பாயிடுது. என்ன பண்ணச் சொல்றீங்க இப்ப என்று எகிறுகிறார்கள் மக்கென்ஸிக்காரர்கள். தப்போ, ரைட்டோ அவர்கள் சொல்வதைக் கேட்க பணம் அடைத்து விட்டு அங்கங்கே நிறையக் கம்பெனிகள் காத்துக் கொண்டிருக்கும் மப்பு அவர்களுக்கு.

எக்கனாமிக்ஸ் டைம்ஸில் படித்த இன்னும் இரண்டு செய்திகள் –

இந்தத் தேர்தலில் வறுமை ஒரு பிரச்சனையே இல்லை. 1971ல் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தவர்கள் மொத்த ஜனத்தொகையில் 55 சதவிகிதம். 1984-ல் இது 44 சதவிகிதமானது. 1994ல் இன்னும் குறைந்து 36% விழுக்காடாகி, தற்போது 26 சதவிகிதம் பேர் தான் வறுமையில் வாடுகிறார்கள்.

உலக மயமாக்கல் மூலம் வறுமை இன்னும் குறையும் என்று திட்டக் கமிஷன் உறுப்பினர் என்.கே.சிங்க் லண்டன் ஸ்கூல் ஓஃப் எகனாமிக்ஸில் இந்த வாரம் பேசியிருக்கிறார். (அவர் ஏதாவது மக்கென்ஸி அறிக்கையைப் படித்திருப்பாரோ என்னவோ).

அதானே, இந்தியாவில் வறுமையா ? அது வெளியேறிப் போய் எத்தினியோ வருசமாயாச்சே. கோகோ கோலா, பெப்ஸி இதெல்லாம் இங்கே வந்து உலக மயமானதுக்கு அப்புறம் வறுமைனா என்னாங்க அப்படித்தானே கேட்க வேண்டிப் போனது!

ஆந்திராவில் கடன் தொல்லை தாங்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட நெசவாளி, கேரளத்தில் விளைச்சல் பொய்த்த வயலைக் கண்ணீரோடு எரிக்கும் விவசாயி, காவிரித் தண்ணீர் கிட்டாமல் வரண்ட தஞ்சைத் தரணியின் பஞ்சைப் பராரிகளான விவசாயத் தொழிலாளர்கள் இவர்களெல்லாம் நிச்சயம் இந்தியாக்காரர்கள் இல்லை. வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களாக இருக்கும்.

****

கேரளத்தில் பிளாச்சிமடையில் கோகோ கோலா கம்பெனி நிலத்தடி நீரை எடுத்துக் கோலா தயாரிக்க ஆன்றணி அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆய்வறிக்கை பிளாச்சிமடைப் பகுதியில் தற்போது பிறக்கும் குழந்தைகள் பலவும் எடைக் குறைவோடு பிறப்பதாகவும், கோலா கம்பெனி வெளியேற்றும் கழிவுநீரில் உள்ள கேட்மியம் நிலத்தடி நீரைப் பாதிப்பதால் வருவது இந்த ஆரோக்கியக் குறை என்றும் சொல்கிறதாக மாத்ருபூமியில் செய்தி.

தண்ணீர் சுத்தமாக வற்றிய பிளாச்சிமடையிலும், பாலக்காட்டு பிரதேசங்களிலும் யாராவது இறந்து போனால் பிணம் கழுவக் கூடக் காசு கொட்டிக் கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டியிருப்பதாகத் தெரிகிறது. கோலாவை அதற்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கோலா விவகாரத்தில் காங்கிரஸ் அரசைச் சாட, ‘தமிழ்நாட்டுக்குப் போக இருந்த இந்தக் கோலா கம்பெனியை விருதுப்பட்டி சனியனை விலை கொடுத்து வாங்கினது போல் கேரளத்துக்குக் கொண்டு வந்தது நாயனார் முதன்மந்திரியாக இருந்த இடது முன்னணிதானே ‘ என்று கதர்ச்சட்டைக்காரர்கள் எதிர்க்குரல் கொடுக்கிறார்கள்.

இதெல்லாம் கிடக்க, கோகோ கோலா கம்பெனி நடிகர் மம்மூட்டியை பிராண்ட் அம்பாசடராக நியமித்திருப்பதாகச் செய்தி. போன மாதம் தான் அவர்கள் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியைத் தங்களுக்காக வாதாட நிறையப் பணம் கொடுத்துத் தில்லியிலிருந்து அழைத்து வந்தார்கள். அவரும் பிளாச்சிமடையில் கோகோ கோலா கம்பெனி நிலத்தடி நீரை எடுத்து உபயோகிப்பதால் அங்கே தண்ணீர் தட்டுப்பாடு நேரவில்லை என்றும் விவசாயிகள் நவீன முறைகளைப் பயன்படுத்திச் சாகுபடி பண்ணாமல் கண்டமேனிக்குத் தண்ணீரை வீணாக்குவதால் வந்த கேடு இதென்றும் திருவாய் மலர்ந்து போனார்.

அயல் பிரதேசக்காரரான அந்த வயசன் நீதிபதி விஷயம் தெரியாமல் ஏதோ சொல்கிறார் என்று கண்டுக்காமல் விட்ட சேட்டன்மார், அவர்களுக்குப் பிடித்த (இன்னும்) சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி கோலா கம்பெனிக்காக விளம்பரம் செய்யப் போவதை ஏற்பதாக இல்லை.

பொன்னு மம்மூட்டி சாரே, கோலா கம்பெனிக்கு நீங்க கொடி பிடிச்சா எம்புட்டுத் தருவாங்களோ அந்தப் பணத்தை நாங்க கேரளம் முழுக்க நம்ம மக்கள் கிட்டே ஒரு ரூபா, ரெண்டு ரூபாயா வசூலித்து மூட்டையாக் கட்டி கொச்சி கோட்டைப் பக்கத்துலே உங்க வீட்டுக்கு ஊர்வலமா வந்து கொடுத்துடறோம். கோலாவுக்கு பாய்லா பாடாதீங்க என்று வெகுண்டெழுந்து வேண்டுகோள் விடுக்க, ‘ஹேய், நானாவது, கோலா கம்பெனிக்கு அம்பாசடராகறதாவது.. பிராந்தா எனிக்கு ? அதெல்லாம் விஸ்வசிக்கண்டா ‘ என்று மம்மூட்டி அபயக் குரல் கொடுத்திருக்கிறார். இரண்டு மாதம் முன் மகள் கல்யாணத்தை நல்ல முறையில் நடத்தி இன்னும் பேத்தி பிறந்து கல்யாணம் ஆகும்வரை சூப்பர் ஸ்டார் ஆக இருப்பது மேலா, புதுப்படமான சேதுராமய்யர் சிபிஐ நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாற்றம் பிடித்த கோகோ கோலாவை உயர்த்திப் பிடித்து டிவியிலும், திரையிலும் விளம்பரம் தருவது உசிதமா என்று யோசித்தபோது கோலாவைத் தலையைச் சுற்றித் தூக்கி எறிந்திருப்பார் மம்மூட்டி. வெல்டன் சேட்டா.

***

ஞானபீட விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகப் படித்தேன்.

அனந்தமூர்த்திக்கு முன்னால் இந்த மாதிரித் தப்புத் தப்பாக சிந்தித்து அரசியல் அரங்கில் நுழைந்ததுமே க்ளீன் போல்ட் ஆன கன்னட எழுத்தாளர்கள் உண்டு. எண்பதுகளில், அனந்தமூர்த்தி போலவே ஞானபீட விருது பெற்ற இன்னொரு பிரசித்தமான கன்னட எழுத்தாளர் சிவராம கராந்த் உத்தர கன்னடத் தொகுதி ஒன்றில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார். கய்கா அணுமின்நிலையத்தை எதிர்த்து இவர் ஆவேசத்தோடு பேசிப் பிரசாரம் செய்ததைக் கேட்க மேடையிலேயே ஆட்கள் இல்லை. இன்னொரு பிரசித்தமான கன்னடக் கவிஞரான பேராசிரியர் கோபாலகிருஷ்ண அடிகாவும் மாநிலச் சட்டசபைக்குச் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜாமீன் இழந்தார்.

துரதிருஷ்ட வசமாக, அனந்தமூர்த்திக்கு அறிவுரை சொல்லித் தடுத்தாட்கொள்ள இந்த இருவரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனாலும் என்ன ? இவர்கள் சார்பில் மத்தளராயன் தரும் ஆலோசனை இதோ –

அனந்தமூர்த்தி சார், எழுத்தாளன் எழுதறதோடு நிறுத்திக்கறதே நல்லது. மிஞ்சிப் போனா, வருடம் ரெண்டு இலக்கிய விழாவுலே மைக்கைப் பிடிச்சு சோடா குடிச்சு ஏப்பம் விட்டு நாலு வார்த்தை பேசலாம். மத்தப்படி அரசியல், கலையிலக்கியப் பிரக்ஞையைக் காத்திரமாக்குவது, சகலரோடும் தோளோடு தோள் சேர்ந்து நின்று இலக்கிய ஊடாட்டம் வெண்டைக்காய் வெங்காயம் ஒரு எழவும் வேணாம்.

***

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்