முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1

This entry is part of 61 in the series 20040318_Issue

மைக்கேல் ஸ்காட் டொரான் (தமிழில்: ஆசாரகீனன்)


இரட்டை மன்னராட்சி

ரியாத் நகரில், 2003ம் வருடம் நவம்பர் மாத ஆரம்பத்தில் ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 122 பேர் காயமடைந்தனர். அமெரிக்க அதிகாரிகள் இச் சம்பவத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் விட்டு விட்டதற்குச் சவுதி அரேபியாவின் அரசியலே காரணம். ரியாத் நகருக்கு அலுவல் காரணமாக வந்திருந்த அமெரிக்க உள்துறை துணைச் செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், இது பற்றிச் சொன்னது – ‘இந் நாட்டிற்கான [சவுதியின்] வழிகளாகப் பட்டத்து இளவரசர் அப்துல்லா தேர்ந்தெடுத்திருக்கும் அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களின் மேல் நாங்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இது போன்ற கொடூரச் செயல்கள் மூலம் பயங்கரவாதிகள் எங்களை ஏதும் அசைத்து விட முடியாது. ‘

இப்படி ஒரு நம்பிக்கை உண்மையிலே இருந்திருக்குமானால், அது இடம் தவறி வைக்கப்பட்ட நம்பிக்கையாகி விட்டது. ஏற்கனவே அப்துல்லாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டு விட்டன. ஆறு மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட இது போன்ற ஒரு தாக்குதலை ஒட்டியே இந்த பின்னடைவு தொடங்கி விட்டது. அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாவது எதுவானாலும், சரியாகச் சொன்னால், தாக்குதல் நடத்துபவர்கள், அவர்களைக் கொள்கை ரீதியாக ஆதரிப்பவர்களின் நோக்கம் இந்தச் சீர்திருத்தங்களை நிறுத்துவதுதான். வாஷிங்டனின் நம்பிக்கைக்குரிய துணை நாடுகளுள் ஒன்று, இத்தகைய கொலை வெறி மிக்க அமெரிக்க எதிர்ப்பைத் தன்னுள் ஏன் அடைகாத்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள, சவுதி அரேபியாவின் கடும் குழப்பமான உள்நாட்டு அரசியலில் முக்குளித்து, அதன் ஆழங்களுக்குச் செல்வது அவசியம்.

சவுதி அரசு சில்லுகளாகப் பிளவுபட்ட அமைப்பு. இதை அரச குடும்பத்தினர் தமக்குள் பல குறுநில மானியங்களாகப் பிரித்துக் கொண்டுள்ளார்கள். இருக்கும் நான்கு அல்லது ஐந்து வலிமை பொருந்திய இளவரசர்களுள் உயர்ந்து நிற்பவர்கள் பட்டத்து இளவரசர் அப்துல்லாவும், அவரது சகோதரரும் (மறு தாய் மகன்) உள்துறை அமைச்சருமான இளவரசர் நயெஃப். இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவின் கடுமை வெளிப்படையானதே. அமெரிக்காவிடம் செல்வாக்குள்ளவர் அப்துல்லா. ஆனால் சவுதியில் உளவுத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நயெஃப்பின் உள்நாட்டுச் செல்வாக்கு பெரியதும் கரும்-நிழல் போன்றதுமானது. 1995-லிருந்தே மூளை ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டு நோயுற்றிருக்கும் மன்னர் ஃபாஹ்த்-துக்குப் பின்னர் ஆளப்போவது யார் என்ற கேள்வி ஒட்டு மொத்த சவுதி அமைப்பிலும் கவிந்திருந்தாலும், இரு இளவரசர்களுமே அதிகாரத்தைக் கைப்பற்றுமளவு பக்கபலம் பெறவில்லை.

ஒரு இக்கட்டான நிலையில் இப்போது சவுதி அரேபியா இருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பொருளாதார வளர்ச்சி இல்லை. அரசு மக்கள் நலனைப் போஷிக்கும் விதம் மிக வேகமாக நலிவடைகிறது. வட்டார மற்றும் குழுக் குரோதங்கள் பெருகி மேலெழுகின்றன. இப் பிரச்சினைகள் எல்லாம் பெருகி வரும் தீவிரவாத இஸ்லாமிய நடவடிக்கைகளால் கசப்பான சிக்கல்களாகின்றன. எப்படியோ சவுதி அரசியல் அமைப்பு பரிணாம வளர்ச்சி பெற வேண்டும் என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டாலும், கட்டுச் சிதைவினால் (schizophrenia) பண்பாட்டில் நிலவும் ஆழமான மனப் பிராந்தி அதிகார வர்க்கத்தினரை, குறிப்பாக என்ன சீர்திருத்தங்கள் தேவை என்று எந்த ஒரு உடன்பாட்டிற்கும் வரவிடாமல் தடுக்கிறது.

ஒரு புறம் அரசியல் வளர்ச்சிக்கு ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் முன்னோடியாகக் கொள்ளும் மேலை நாகரிகச் சாய்வுள்ள அறிவு ஜீவிகள், மறுபுறம் [பண்டை] இஸ்லாத்தின் பொற்காலத்தைப் பற்றிய தனது விளக்கங்களையே வழிகாட்டியாய் முன் வைக்க விரும்பும் வஹாபிய மத நிறுவனங்கள் என்ற மாறுபட்ட இரு தனி வழி செல்லும் அரசியல் சமுகங்களிடையே ஒரு தரகராகவே சவுதி மன்னராட்சி செயல்படுகிறது. வஹாபியர் அல்லாத எவருக்கும் அளிக்கப்படும் எந்த ஒரு உரிமையையும் ‘உருவ வழிபாட்டு ‘ப் பாதையாக மதத் தலைவர்கள்[1] கருதுகின்றனர். அதிகார வலிமை மிகுந்த இரு சவுதி அரேபிய இளவரசர்களும் இந்த சர்ச்சையில் எதிரெதிர் நிலைபாட்டை எடுத்துள்ளனர். தாராளப் போக்குள்ள சீர்திருத்தங்களையும், அமெரிக்காவுடனான நல்லுறவையும் நாடுபவர் அப்துல்லா. மதகுருமார்களின் தரப்பில் இருப்பதோடு, அல்-கய்தாவின் குறிக்கோள்களில் பெருவாரியானவற்றுடன் உடன்பட்டு அமெரிக்காவுக்கு எதிராக இயங்கும் மத நிறுவனங்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுபவர் நயெஃப்.

தவ்ஹீத் (TAWHID)-இன் வலிமை

அரசாங்கம், ஆதார மத அமைப்புகளின் அதிகாரத்தை குறைக்கலாமா கூடாதா என்ற பிரச்சினையில் இந்த இரண்டு குழுக்களும் முற்றிலும் வேறுபடுகின்றன. இந்த அரசியல் விரிபரப்பில் மத குருக்களும், நயெஃப்பும் வலது சாரி நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நிறுவனரான முகமது இபின் அப்த் அல்-வஹாப்-இன் பெயராலேயே அழைக்கப்படும் வஹாபியம் வரையறுக்கும் தவ்ஹீதின், அல்லது ஒரே கடவுள் (Monotheism) என்ற மையக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவர்கள் இந்த நிலைப்பாடை எடுத்துள்ளனர். இவர்கள் கருத்துப்படி, ஒரே கடவுள் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் பலரும் உண்மையில் பல கடவுளர் கொள்கையையும் உருவ வழிபாட்டையும் பின்பற்றுபவர்களே. பெரும்பாலான சவுதி தீவிரவாத மதத் தலைவர்கள் போடும் இத்தகைய எதிரிகளின் பட்டியலில் கிருஸ்தவர்கள், யூதர்கள், ஷியாக்கள், போதுமான மார்க்கப் பற்று இல்லாத சுன்னி முஸ்லீம்கள் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். தவ்ஹீதியப் பார்வையில், இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் குழுக்களே ஒரு மாபெரும் சதித்திட்டத்தால் உண்மையான இஸ்லாத்தை அழிக்க முற்பட்டிருக்கிறார்கள். இந்தச் சதித் திட்டத்துக்கு தலைமை தாங்குவது, ‘இக் கால கட்டத்தின் பெரும் உருவச் சிலையான ‘ அமெரிக்க ஐக்கிய நாடுகளே. இந்தப் பார்வையின்படி – அமெரிக்கா இரு முறை ஷியாக்களுடன் சேர்ந்து கொண்டு, ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் சுன்னி முஸ்லிம்களைத் தாக்கியது; பாலஸ்தினிய சுன்னி முஸ்லிம்களுக்கெதிராக யூதர்களை ஆதரிக்கிறது; இராக்கில் ஷியாக்களின் நலன்களை முன்னேற்றுகிறது; சவுதி அரேபியாவின் கல்வித் திட்டத்திலிருந்து வஹாபியத்தை அகற்றச் சொல்லி சவுதி அரசாங்கத்தை நச்சரிக்கிறது. இதற்கிடையே கேபிள் தொலைக்காட்சியும், உலக இணையமும் உருவ வழிபாட்டை மடை திறந்த வெள்ளமாக எங்கும் ஓட விடுகின்றன. பாலுறவைத் தாராளமாக்கும் போக்கு, எங்கும் எதிலும் கிருஸ்தவத்தைப் பின்புலனில் வைப்பது, கட்டற்றுப் பெண்கள் விடுதலைக்கு ஆதரவு தருவது ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கலாச்சாரம், சவுதி சமூகத்தை அடுத்துக் கெடுக்கிறது[2].

உருவ வழிபாட்டுக்கு எதிராக, சில நேரங்களில் ஆயுதங்களைக் கொண்டோ அல்லது கடுமையான நம்பிக்கைகளைக் கொண்டோ நடத்தப்படும் ஜிஹாத் எனப்படும் புனிதப்போருடன் நெருங்கிய தொடர்புடையது தவ்ஹீத். உள்நாட்டிலிருந்து உருவ வழிபாடு, கேளிக்கையில் மூழ்குதல் போன்ற பண்பாடுகளையும், அவை சார்ந்த அரசியல் நடைமுறைகளை ஒழித்துக் கட்டுவதும், அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் நடக்கும் போரை ஆதரிப்பதும் மத குருமார்களைப் பொறுத்தவரை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே. உண்மையான ஒரே கடவுள் வழிபாட்டுத் தத்துவம், பல கடவுள் வழிபாட்டுத் தத்துவத்தை அறுதியாக வெற்றி கொள்ளும் நாளான ‘இறுதி நீதி வழங்கும் நாள் ‘ வரை, உருவ வழிபாட்டுக்கு எதிரான ஜிஹாத்தானது நீடித்து நடத்தப்பட வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சளைப்பில்லாமல் வலியுறுத்துபவர்கள் இந்த மத குருமார்கள்.

தவ்ஹீத் என்ற இந்தக் கருத்தாக்கத்தின் காரணமாக சவுதி அரேபிய மத குருமார்கள் பெறும் அரசியல் அந்தஸ்து அலாதியானது. உருவ வழிபாட்டைத் துப்புத்துலக்கி அதை வேரோடு கெல்லி எறிந்து அழிப்பதன் மூலம் நாட்டின் தூய்மையைக் காப்பதற்குப் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள் மட்டும்தானே. ஆகவே, தவ்ஹீத் என்பது சகிப்புத்தன்மை இல்லாத மதக் கொள்கையாக மட்டுமில்லாமல், சவுதி அரசின் அடக்குமுறையை நியாயப் படுத்தும் அரசியல் கொள்கையாகவும் இருப்பதும்கூட. எனவே, ரகசியக் காவல் துறைக்குத் தலைமை வகிக்கும் நயெஃப், தவ்ஹீதைத் தீவிரமாக ஆதரிப்பதில் வியப்படைய ஏதுமில்லைதான். தம் தனி வாழ்வில் மத நம்பிக்கை மிக்கவராகக் கருதப்படாவிட்டாலும், கண் கொட்டாத கவனத்துடன் நயெஃப் வஹாபி தூய்மைவாதத்தை ஆதரிப்பதன் காரணம், தனது ரொட்டிக்கு எந்தப் பக்கத்தில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கிறது என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதே. இவரைப் போலத்தான் வேறு பலரும் அடக்குமுறை என்பது மாறாத தொடர் நிலையாக இருப்பதில் சில வசதிகள் கிட்டுவதால் அதை ஆதரிக்கிறார்கள்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை, தவ்ஹீதிற்கு நயெஃபின் ஆதரவு என்பது ஜிஹாத்துக்கான ஆதரவே. எனவேதான் பாலஸ்தினரின் இன்டிஃபாதாவிற்கு (ஜயோனிய [யூத தேசியவாதம்] ஆக்ரமிப்பாளர் கூட்டணிக்கெதிரான தற்காப்புப் போரான ஜிஹாத் என்று மதகுருமார்களால் கருதப்படுவது) – ஆதரவு தரும் சவுதி நிதியத்திற்குத் தலைமை தாங்குவது அப்துல்லா அல்ல, நயெஃப்பே. உள்நாட்டில் சர்ச்சைக்குரிய ‘நல்லொழுக்க முன்னேற்றம் மற்றும் தீயொழுக்கத் தடுப்புக்கான ஆணையம் ‘ (Commission for the Promotion of Virtue and Prevention of Vice – CPVPV அல்லது ந.மு.தீ.த.ஆ.) என்கிற மதக் காவல் துறையைக் கையில் வைத்திருப்பதும் நயெஃப்பே. இந்த ந.மு.தீ.த. ஆணையக் காவலர்கள், மார்ச் 2002ல் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பித்து வெளியேற முயன்ற பள்ளி மாணவிகளைக் கம்புகளால் அடித்து வெளியேற விடாமல் தடுத்ததற்காக மிகப் பெரிய கண்டனத்துக்கு உள்ளாயினர். நெருப்பிலிருந்து தப்பும் அவசரத்தில் இஸ்லாமிய முறைப்படி உடை அணியாமல் வெளியே வர முயன்ற அப் பெண்களின் மீது, மதக் காவல் துறையினர் அறிவற்ற விதத்தில் பொது ஒழுக்கச் சட்டங்களை அச் சூழ்நிலையிலும் திணிக்க முயன்றது இந்த சம்பவத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 12-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்தக் குழப்பத்தில் மிதிபட்டு இறந்தனர். இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் பற்றிய செய்தி முற்றிலும் உண்மையானதா என்பதை நிறுவுவது கடினம் என்றாலும், ந.மு.தீ.த. ஆணையச் செயலர் செயல்பட்ட விதம் மீட்பு நடவடிக்கைகளைப் பாழாக்கும் விதத்தில் இருந்தது என்பதை நிறுவப் போதுமான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நயெஃப்போ, மதக் காவல்துறையினர் தவறு செய்ததை அடியோடு மறுக்கிறார்.

தகாரப்பின் (Taqarub) அழைப்பு

சவுதி அரசியல் அமைப்பின் வலது பக்கத் தூண் தவ்ஹீத் என்று கருதுவோமானால், தகாரப் எனப்படும் முஸ்லீம்களுக்கும், முஸ்லீம் அல்லாதவர்களும் இடையிலான நல்லுறவுத் தத்துவத்தை இடது பக்கத் தூண் எனலாம். நம்பிக்கையற்றவர்களுடன் அமைதியாக இணைந்து வாழ்தல் என்ற கருத்தைப் பரப்புவது தகாரப். முஸ்லீம் அல்லாதவர்கள் என்று வஹாபியர்கள் கருதும் ஷியாக்கள், மதசார்பற்றவர்கள், பெண்ணியவாதிகள் போன்றவர்களின் அரசியல் பங்கெடுப்பை அங்கீகரித்து, அரசியல் சமூகத்தைப் பரந்ததாக்க விரும்புகிறது தகாரப். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரை, ஜிஹாத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கிருஸ்தவ அமெரிக்கருடனும், யூத இஸ்ரேலியருடனும், ஷியா இரானியருடன் கூட இணக்கமாக வாழ விரும்புவது தகாரப். சுருக்கமாக சொன்னால், தவ்ஹீதின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரானது தகாரப்.

வெளிப்படையாகவே தகாரப்புடன் தன்னை இணைத்துக் கொள்பவர் அப்துல்லா. பொது விவாதங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை ஆதரிப்பதோடு, ஜனநாயக ரீதியிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது மற்றும் மத குருமார்களின் அதிகாரத்தைக் குறைப்பது ஆகியவற்றையும் ஆதரிப்பவர் அவர். 2003-ம் ஆண்டு ஜனவரிக்கும், மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரபல சவுதி தாராளவாதிகளுடன் (liberals) நடத்தப்பட்ட மிக அரியதானதும் வெளிப்படையானதுமான ‘தேசிய உரையாடலு ‘க்குத் தலைமை வகித்தார் அப்துல்லா. இந்த உரையாடலின் சாரத்தைத் தெரிவிக்கும் இரு முக்கிய ஆவணங்களுள் ஒன்று ‘தேசிய சீர்திருத்த ஆவணம் ‘. இது சவுதி ஜனநாயகத்துக்கான வரை படமாகும். ‘உள்நாட்டிலிருக்கும் கூட்டாளிகள் ‘ என்பது இரண்டாவது ஆவணம். இது ஒடுக்கப்பட்ட ஷியாக்கள் அதிக சுதந்திரங்களைக் கோரியது பற்றியது. முதல் ஆவணமானது நேரடித் தேர்தல்கள், ஆள்வோரின் கட்டுப்பாடுகள் ஏதுமற்ற நீதி நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவது, பொது வாழ்வில் பெண்களின் பங்கை அதிகரிப்பது போன்றவற்றை ஆதரிக்கிறது. இந்த ஆவணத்தை உருவாக்கியவர்கள் இஸ்லாமியச் சட்டங்கள் மீது தாம் கொண்ட மதிபைத் தெளிவாகவே வெளிப்படுத்தினர். மத குருமார்களுக்கு இதில் ஆறுதல் ஏற்படவில்லை. ஆனாலும், அவர்களின் உணர்வுகளை ஷியாக்களின் கோரிக்கை உரசிய அளவோடு ஒப்பிட்டால் இந்த முதல் ஆவணம் அவர்களைத் துணுக்குறச் செய்து விடவில்லை. ஷியாக்களின் ஆவணம் நரகத்தின் மையப் பகுதியிலிருந்தே வெளியிடப் பட்டிருப்பதாக இம் மதத் தலைவர்கள் கருதுகிறார்கள்.

சவுதியின் மத அதிகாரக் கட்டமைப்பு, ஷியா பாதையின் மேல் ஆழ்ந்த வெளிப்படையான வெறுப்பு கொண்டது. மக்கள் தொகையில் 10 முதல் 15 சதவீதத்தினர் ஷியாக்கள் என்றாலும் மத சுதந்திரத்துக்கான மிகவும் எளிய, அடிப்படையான உரிமைகள் கூட அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இருந்த போதும், இதுவரை நடந்திராத சம்பவமாக, பட்டத்து இளவரசர் அப்துல்லா ஷியாக்களின் தலைவர்களைச் சந்தித்ததோடு அவர்களது கோரிக்கை விண்ணப்பத்தையும் பெற்றுக் கொண்டார். மிகவும் கட்டுப்ப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் சவுதி பத்திரிக்கைகள் இந்தக் கோரிக்கை மனு பற்றிய எந்த செய்தியையோ, அல்லது அதன் விவரங்களையோ வெளியிடவில்லை. ஆனால், அப்துல்லாவின் இச் செய்கை, சவுதியின் மத அமைப்பிடையே கடும் அதிருப்தி அலைகளை எழுப்பியுள்ளது.

ஏப்ரல் 2003-ல் டெக்ஸாஸ் மாநிலம் க்ராபர்டில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் கலந்து ஆலோசித்து, அரபு-இஸ்ரேலிய அமைதிக்கான ‘சவுதி திட்டத்தை ‘ வெளியிட்டது, ஷியாக்களின் ‘இழிவுபட்ட ‘ கோரிக்கை விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டது போன்ற செயல்களால் பட்டத்து இளவரசர் அப்துல்லா தகாரப் வழியை முன்வைப்பவர்களுக்குத் தன் ஆதரவைக் காட்டி, தீவிரவாத மதத் தலைவர்களுக்கு எதிரான தம் நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலை நாடுகளின் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு அப்துல்லாவின் உள்நாட்டுச் சீர்திருத்த முயற்சிக்கும், முஸ்லிம் அல்லாத நாடுகள், மற்றும் ‘மார்க்கத்திலிருந்து வழி தவறி விட்ட ‘ ஷியாக்களுடன் சுமுகமான உறவை விரும்பும் தன்மைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகப் புலப்படாது. வஹாபிகளால் அடக்கி ஆளப்படும் அரசியல் கலாச்சாரத்தில், இவையிரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே பார்க்கப் படுகின்றன.

தக்ஃபிர் (TAKFIR) என்னும் அபாயம்

அப்துல்லா மேலை நாடுகளுடன் நட்புக் கொள்ள விழைந்திருக்கும் அதே நேரத்தில் நயெஃப், அல்-கய்தாவுக்கு மறைமுக ஆதரவு தரும் அளவுக்கு ஜிஹாத்தின் ஆதரவாளராக விளங்குபவர். குறிப்பாக, செப்டம்பர் 11, 2001 தீவிரவாதிகள் தாக்குதலில் சவுதி விமானக் கடத்தல்காரர்கள் தொடர்புபடுத்தப் படுவதை நவம்பர் 2002-ல் நயெஃப் மறுத்தார். சவுதி அரேபியாவில் வெளியான நேர்காணல் ஒன்றில், அளவில் பெரிய அத்தகைய தாக்குதலுக்கு அல் கய்தா திட்டமிட்டு இருக்க முடியாது என்றும் அவர் சொன்னார். அது ஓர் இஸ்ரேலிய சதி என்றும், முஸ்லிம்களுக்கு எதிராகப் பெரிய அளவிலான கசப்புணர்வை ஏற்படுத்திய அத்தகைய தாக்குதலை இஸ்லாத்தின் எதிரிகளே திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் நயெஃப். இந்த அறிக்கை, இஸ்லாமிய மதத் தலைவர்களின் மனப் பிராந்தியில் எழும் சதித் திட்டம் பற்றிய பிரச்சாரக் கருத்துகளை ஆமோதிப்பதோடு, சவுதி ரகசிய காவல் துறையினரின் பார்வையில் அல் கய்தாவைத் தேடிப் பிடிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏதும் இல்லை என்ற கருத்தையும் வெளியாக்கியது.

சவுதியின் மதத் தலைவர்களுள் ஒருவரான அலி பின் அல்-குதாயர் (al-Khudayr) தொடர்பான ஒரு சம்பவம் நயெஃப்பின் நிலையை விளக்க உதவுகிறது. அல்-கய்தாவுடன் நெருங்கிய தொடர்புடையவரான அல்-குதாயர், தக்ஃபிரி-ஜிஹாதி வகை இஸ்லாமிய தீவிரவாதப் பிரிவின் தலைவர். அதாவது, தக்ஃபிரைப் [2] பயன்படுத்தி, சக சுன்னி பிரிவிவைச் சார்ந்தவர்களையே, ‘நம்பிக்கையைக் கைவிட்டவர்கள் ‘ (இது மரண தண்டனைக்கு உரிய குற்றம்)* என்று அறிவிக்கக் கூடியவர். செப்டம்பர் 11 தாக்குதலைக் கொண்டாடி மகிழ தன் ஆதரவாளர்களுக்கு இவர் ஃபத்வா விட்டார் [3]. இஸ்லாம் சந்தித்த எதிரிகளிலேயே மிக மோசமான எதிரியாக அமெரிக்காவைச் சித்தரித்த இவர், தாக்குதலில் உயிரிழந்த பல அப்பாவிகளுக்காக வருந்தியவர்களையும் கண்டிக்கத் தவறவில்லை. முஸ்லிம்களைக் கொன்றது மற்றும் இடம் பெயரச் செய்தது, முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவியது, மத சார்பின்மையைப் பரப்புவது, மக்கள் மீதும், அரசாங்கத்தின் மீதும் வலுக்கட்டாயமாக [இஸ்லாத்திற்கு எதிராக, இஸ்லாத்தை மறுக்கும் விதமாக] அவதூறைத் திணிப்பது, முஜாஹிதின்களைக் கொடுமைப்படுத்துவது என்று அமெரிக்காவின் ‘குற்றங்களை ‘ப் பட்டியலிட்டு அத் தாக்குதலை நியாயப்படுத்தினார் அல்-குதாயர்.

பின்னர் இவர் நயெஃப்பின் பாதுகாப்பு அமைப்பால் கைது செய்யப்பட்டார் என்றாலும், அந்த நடவடிக்கை 2003-ஆம் ஆண்டு மே மாதம் ரியாதில் 34 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னரே, அதாவது, இவரது பாணியிலான தீவிரவாதம் அரசியல் சம நிலையைக் குலைக்க முயன்ற பின்னரே நிகழ்ந்தது. அதுவரை இவர் சுதந்திரமாகச் செயல்பட்டு, அமெரிக்காவுக்கு எதிரான தனது வன்முறைப் பிரச்சாரங்களை எவ்விதத் தடையுமின்றி நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏன் ? காரணம், அதே நேரத்தில் மத அதிகார அமைப்பை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தவும் இவர் பயன்பட்டதுதான். நயெஃபைப் பொறுத்தவரை வஹாபிய அச்சுறுத்தல் முறைகள், சீர்திருத்தவாதிகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருந்தது. உதாரணமாக, சவுதி பத்திரிகையாளர் மன்ஸுர் அல்-நுக்கய்தன் என்பவர் அடிப்படைவாத மதத் தலைவர்களை வெளிப்படையாக விமர்சிப்பவர். இவரும் முன்னாளில் ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக இருந்தவர்தான். அப்போது உருவ வழிபாட்டை வேரோடு கெல்லி எறிவதற்காக, அதைத் தூண்டுவதாக அவர் கருதிய விடியோ கடையை குண்டு வீசித் தகர்க்க முயன்ற குற்றத்துக்காகத் தன் வாலிபப் பருவத்தில் சிறை சென்றவர். இத்தகைய பின்னணியும், மதத் தலைவர்களின் உரையாற்று முறையில் இவருக்குள்ள தேர்ச்சியும், தகாரப்பிற்கு இவர் காட்டும் தெளிவான மற்றும் தளராத ஆதரவும், இவரை மத அதிகார அமைப்புகளுக்கு அச்சமூட்டுபவராக ஆக்குகின்றன. அதனாலேயே தீவிரவாதிகள் இவரைத் தனிப்பட்ட முறையில் ‘கவனிக்க ‘ ப்பட வேண்டியவர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

தன் சகாக்கள் சிலருடன் சேர்ந்து கொண்டு, அல்-குதாயர் இவரை மத விரோதி (மார்க்கத்தைக் கைவிட்டவர்) எனக் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளரான அல்-நுக்கய்தன் ஒரு நேர்காணலில் ‘மதசார்பற்ற மனிதாபிமானத்தைப் ‘ பற்றிப் பேசியதையும் ‘மதம், சடங்குகள், விசுவாசிகள் ‘ மீது வெறுப்பு தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டி அவற்றைக் குற்றங்கள் என அறிவித்தார். ‘மற்றவருடன் இணக்கமாக வாழ வழிவகை செய்யும் இஸ்லாமே நமக்குத் தேவை, பிறரின் நம்பிக்கைகள் அல்லது சாய்வுகளின் காரணமாக அவர்களை வெறுக்காத இஸ்லாமே நமக்குத் தேவை. நமக்கு வேண்டியது ஒரு புதிய சீர்திருத்தம், உலகில் உள்ள பிறரோடு இணக்கமாக வாழும் விதத்தில் மத நூல்களை மறு வாசிப்புச் செய்யும் துணிச்சல் ‘, என்ற அல்-நுக்கய்தனின் கருத்துகள் மாபெரும் குற்றமாகும் என்றும் மதத் தலைவர்கள் கருதினர். தகாரப்பை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கருத்துகள் காரணமாக, அவருக்கு மரண தண்டனை விதிக்கும் அறிவிப்பு அல்-குதாயரின் இணைய தளத்தில் ஒளிவு மறைவின்றி வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைப் பற்றி ஐந்து மாதங்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஷியா வழியை வெளிப்படையாகக் கடைபிடித்தாலே பல ஆண்டுகள் சிறைத் தண்டனை நிச்சயம் என்றிருக்கும் ஒரு ஆட்சியில், அல்-குதாயரின் சுதந்திரமான ஆண்டுகள் ஒரு பெரும் கதையே. அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவது, சீர்திருத்தவாதிகளை அச்சுறுத்துவது ஆகிய இரண்டோடு தமது விளையாடல்களை நிறுத்திக் கொண்டிருக்கும் வரை மதத் தலைவர்களோடு நயெஃப்புக்கு எந்த சச்சரவும் இல்லை.

அல்-குதாயர் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில், மற்றொரு பக்கம் சீர்திருத்த இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறையும் முடுக்கி விடப்பட்டது. இதனால், அல்-நுக்கய்தனின் வேலை பறி போயிற்று. அதன்பின் உடனேயே அவர் எழுதுவதும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதும் தடை செய்யப்பட்டது. இருக்கும் அமைப்பை மாற்றமேதும் இல்லாமல் வைத்துக் கொள்வதையே குறியாகக் கொண்ட நயெஃப்புக்கு, இப்படி ஒரே நேரம் எதிரும் புதிருமாக நடவடிக்கை எடுப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. சவுதி முடியரசைக் குறி வைத்த குண்டுகள் வெடிக்கத் தொடங்கியதால் அல்-குதாயர் நயெஃப்பின் எதிரியானதைப் போலவே, அல்-நுக்கய்தனும் மேல் தட்டினருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு போக்குக்குக் குறியீடாகவே கருதப்படுகிறார். சீர்திருத்தவாதிகளுக்குத் தொல்லை கொடுப்பதை தன் பொறுப்பாக வெளிப்படையாக நயெஃப் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ரகசிய போலிஸார் வெளிப்படையாகவே அதைச் செய்து வருகின்றனர்.

நடந்த சம்பவங்களின் வரிசை இதுதான். முன் அறிவிப்பு இன்றியோ அல்லது ஒரு பிரபல மதத் தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலோ, மத அதிகார அமைப்பை விமர்சிக்கும் ஒருவர் பதவி இழப்பார். அவரைப் பணியில் அமர்த்தியிருப்பவரோ, அதைப் பற்றிப் பேச மறுப்பார். பின்னர் வேலையின்றி இருக்கும் அந்த மனிதரைக் கொலை செய்யப் போவதாக இஸ்லாமிய தீவிரவாதிகள் தொலைபேசி மூலமும், இணையத்தின் மூலமும் மிரட்டுவார்கள். இதைப் போலவே 1999-ஆம் ஆண்டில், அல்-குதாயரின் சகா ஒருவர், சவுதி புதின எழுத்தாளரான துர்க்கி அல்-ஹமத்துக்கு எதிராக ஒரு ஃபத்வா வழி மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டார். பின்னாளில் இந்த எழுத்தாளர் தேசிய சீரமைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டவர். இதன் காரணமாகவும், அல்-ஹமதுக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தன. அவரும், அவருடைய குடும்பத்தினரும் ந.மு.தீ.த. ஆணையத்தால் துன்புறுத்தப்பட்டனர். உதவி கேட்டு அப்துல்லாவை அணுகியபோது, இவரை அனுதாபத்துடன் நடத்திய அப்துல்லா, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தார். மெய்காப்பாளர்களை மட்டும் அனுப்பியதன் மூலம், தன் சகோதரரிடம் இருக்கும் அரசாங்கத்தின் பல இருண்ட பகுதிகள் மீது தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை அப்துல்லா மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றி: Foreign Affairs, ஜனவரி/பிப்ரவரி 2004

மொழி பெயர்ப்பாளரின் குறிப்புகள்:

Michael Scott Doran, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் அண்மைக் கிழக்கு நாடுகள் துறையில் துணைப் பேராசியர், (அமெரிக்க) அயல் நாட்டு உறவுகள் மீதான ஆலோசனைக் குழுவில் மூத்த ஆய்வாளர்.

http://www.princeton.edu/~nes/profiles/faculty.html

[1] clergy அல்லது clerics என்பதற்கு இணையானதாக ‘மதத் தலைவர் ‘ என்ற சொல் இக்கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது.

[2.] தக்ஃபிர் என்பது ஒரு முஸ்லிமை குஃபிர் [இஸ்லாத்திலிருந்து தவறியவர், நம்பிக்கை இழந்தவர்] என்று அறிவிப்பது அல்லது குற்றம் சாட்டுவது. இந்த வகையில் யாரையாவது பழிக்கு உள்ளாக்குவது குறித்து இஸ்லாமிய பத்திரிகைகளில் சென்ற நூற்றாண்டில் பல இடங்களில், பல கால கட்டங்களில் காரசாரமாக வாதங்கள் நடந்திருக்கின்றன. இணையத்தில் வாழும் இஸ்லாம் என்ற தலைப்பில் பல இஸ்லாமியப் பிரச்சினைகள் வாதிடப்படுகின்றன. மத நிபுணர்கள்தான் இது ஏற்புடையது, இது அல்லாதது என்று விளக்குகிறார்கள்.

http://www.abc.se/~m9783/n/absn_e1.html

[Excerpts from al-Sayyid Yusuf al-Rifa`i ‘s recent epistle, *Advice to Our Brothers the Ulema of Najd*]

மக்காவிலும், மதினாவிலும் சில பிரசாரகர்கள் ஏராளமான முஸ்லிம்களை, அதுவும் ஹஜ் யாத்திரைக்கு வந்த இடத்தில் வைத்து, குஃபிர்கள் என்றோ, சிலை வழிபாடு செய்பவர்கள் என்றோ, மார்க்கத்திலிருந்து தவறி இஸ்லாத்தை மறுத்தவர்கள் என்றெல்லாம் பழி சாட்டுகிறார்கள், இது தகாத செயல் என்று ஒரு பக்கத்தில் அறிவிக்கப்படுகிறது. அதே பக்கத்தில், இஸ்லாத்தை மறுத்து விலகிய முஸ்லிம்களைக் கொல்வது தகும் என்றும் சொல்லப்படுகிறது! இந்தப் பிரசாரகர்கள் சவுதிகள் என்பது தெளிவு. யாரெல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்று இவர்கள் அறிவிக்கிறார்கள் என்று பார்த்தால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கே சிரிப்பு வரும். ஜமாத்-அல்-தப்ளிக், அல்-இக்வான் அல்-முஸ்லிமின், தேவ்பந்தியினர், பரெல்வி குழுவினர் (இவர்களை மேற்சொன்ன நிபுணர், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலேயே முஸ்லிம்களில் மிகச் சிறந்த மதி நுட்பம் உடையவர்கள் என்று அழைக்கிறார்) இவர்களையெல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்று கூறுகிறீர்களே இது தகாத செயல், அல்லா உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து திருந்த வைக்கட்டும் என்று அறிவுறுத்துகிறார். ஆடிக்காற்றில் அம்மியே பறக்கிறதாம் என்பார்களே அது போல இருக்கிறது. தேவ்பந்தியினர், பரெல்வியினர், ஜமாத்-அல் தப்ளிக் இயக்கத்தினரையே முஸ்லிம்கள் அல்ல என்று இந்த வஹாபியிசத்துத் தீவிரவாதிகள் அறிவித்தால், சல்மான் ருஷ்டி, நம் கன்னியாகுமரி மாவட்டக் கவிஞர், ரஷீத் எல்லாம் எந்த மட்டும். இந்தப் பின்னணியில் திண்ணைக்கு வரும் முஸ்லிம்களின் கடிதங்களைப் பார்த்தால் ஏன் அப்படி எழுதுகிறார்கள் என்று நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது! ஆர்வெல்லிய உலகத்தில் வேறென்ன செய்ய ?

[3] போகிற போக்கில், ஃபத்வா விடுவது என்பது தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் புழங்கும் ஒரு வினைச் சொல்லாக மாறி விடும் என்று தோன்றுகிறது. ஃபத்வா என்பது இன்னொரு மிகப் பிரபலமான பெயர்ச் சொல்லாகி விடும். வேறேதும் ஆக்க பூர்வமாக சாதிக்கா விட்டாலும், இஸ்லாமியத் தீவிரவாதம் பல மொழிகளுக்கு ஒரு வினைச் சொல்லையும், பெயர்ச் சொல்லையும் கொடுத்தது என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் – ‘they are fatwaing this, of course! ‘ அல்லது ‘you can ‘t fatwa everything! ‘ தமிழில், ‘அதேன், இவுகதான் மூச்சுக்கு முப்பது வாட்டி ஃபத்வா உட்றாங்களே ? ‘ அல்லது ‘என்ன புள்ளெ ? இப்பல்லாம் கிளப்புக்கே வர்றதில்லே ? வீட்ல ஃபத்வாவா ? ‘

aacharakeen@yahoo.com

Series Navigation