வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

மத்தளராயன்


வெள்ளிக்கிழமை அந்தி சாய்ந்து தொடங்குகிற கான்பரன்ஸ் தொலைபேசி அழைப்புகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக அணுக வேண்டியவை. ஒலிப் பாலம் அமைத்து (bridge call) அழைப்பு எண் கொடுத்து பத்து இருபது பேர் – தொழில் முறை பந்து மித்திரர்கள் – உலகில் எங்கேயெல்லாமோ உட்கார்ந்து கொண்டு ஹலோ சொல்லி சாதுவாக ஆரம்பாகும் இதெல்லாம். அப்புறம் தான் வேடிக்கை. பெங்களூரில் சாயந்திரம் ஆறரை மணி. வார இறுதியைக் கொண்டாட அவனவன் ஏறக் கட்டி விட்டு எழுந்து போகிற மூடில் இருப்பான். சிங்கப்பூர் நண்பர்களுக்கு ராத்திரி ஒன்பது மணி. எல்லோரையும் சபித்துக் கொண்டு கொட்டாவி விட்டபடி மேஜையைக் குத்திக் கொண்டிருப்பார்கள் இவர்கள். நியூயார்க் மித்ரர்களோ காலை நேரத்தில் வேலை ஆரம்பிக்க வேண்டிய அவசரத்தில் முடிச்சுடலாமா முடிச்சுடலாமா என்று நொடிக்கொரு தடவை துடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் என்ன, நம்ம ஐரோப்பிய மகாஜனங்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு அது வெள்ளிக்கிழமை பிற்பகல். லண்டனிலும், பெர்லினிலும், ப்ராங்க்ஃபர்ட்டிலும், ஸூரிக்கிலும் மதியச் சாப்பாடு கழிந்து, இன்னும் இருக்கும் மூணு நாலு மணி நேரத்தை பேசியே தீர்த்தால், அப்புறம் மதுக்கடையில் நேரே போய் இறங்கி விடலாம். இழுக்க இழுக்க இன்பம் என்பதே நோக்கமாக இவர்கள் இழுத்துப் பிடிக்க, மற்றவர்கள் மறிக்க ஏகத் தமாஷாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை ராத்திரி ப்ளைட்டில் சென்னைக்குப் போக முடிவு செய்தது, ஐரோப்பிய முத்துக் கருப்பன்கள் மனதில் சூயிங்க் கம்மோடு வந்து நிற்க, கடைசி விமானம் கிளம்புகிற நேரத்தில் ஹோல்ட் ஆன் என்று ஓட வேண்டி இருக்கும் என உறைத்த மாத்திரத்தில் ராத்திரி கிளம்பும் ரயிலில் பயண ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

எதிர்பார்த்தது போலவே எட்டு மணிக்கு முடித்து, கிட்டத்தட்ட சாய்மான நிலையில் பெங்களூர் ரயில் நிலையத்தை அடைய – ஏறிப் படுத்தா சென்னை – ஊரிலிருக்கும் நூறு பூங்காவோடு நூற்று ஒண்ணு போல் ஸ்டேஷன்.

எழும்பூரின் துரைத்தன மிடுக்கும், சென்னை செண்ட்ரலின் தேசிய வாடையும் – குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற சுபதினங்களில் வானொலியில் ஒலிபரப்பாகிற தேசபக்தி கானங்களைக் கேட்கும் பாக்கியமுடையவர்களுக்கு இந்த வாடை சுளுவாக மூக்கில் ஏறும் – இல்லாத அசல் பெங்களூர் மார்க் அசமஞ்சத்தனத்தோடு இயங்கும் ஸ்டேஷன். ஐந்து நிமிடம் முன்னால் மைசூரிலிருந்து வந்த காவேரி எக்ஸ்பிரஸ் அசதி மூச்சு விட்டுக் கொண்டு கர்ப்பிணி ஸ்திரி போல் சிரம பரிகாரமாற்றியபடி கிடந்தது.

ஏறிப் படுக்க ஏசி டூ டயர் கம்பார்ட்மெண்ட். இப்போதைக்குத் தாரக மந்திரம் அதுதான்.

எங்கே அந்த ஏசி டூ டயர் ? தோ இருக்கு ஏசி மூணு டயர். குளிரும்டி. கம்பளியைப் போத்திக்கோ. காதை நன்னா மூடிக்கோ. இன்னொரு மூணு டயர். ரிச்சி, கோக் எல்லாம் ராத்திரியிலே சாப்பிட்டா ஃபீவர் வரும். பீ எ குட் பாய். பிரஷ் பண்ணிட்டுத் தூங்கு. சாதா மூணு டயர். நாளைக்கு ஙொப்பனாண மண்ணடியிலே ராஜாபாதர் கையிலே பேசி ஜாமான் அனுப்பி வைக்கச் சொல்றேன். நம்புய்யா. நம்பிக்கையிலே தான் உலகமே நகருது.

ஏசி டூ டயர் இந்த வண்டியிலே இருக்கும் என்று நானும் நம்பி. பிரியாணி, சாம்பார் சாத, ஆரஞ்சுப் பழ வாடை சூழ நீள நடக்கிறேன். இது இஞ்சின். இன்னும் நடந்தால் சென்னை வந்து விடும்.

ஏசி ரெண்டு டயர் எங்கே சார் ?

கருப்பு கோட்டு அணிந்த ஒருத்தரை மடக்கி விசாரிக்கிறேன். டிக்கட் பரிசோதகர் என்று என் ஊகம். பெங்களூரில் பனிப் பிரதேசம் போல் ராத்திரி ஆனால் கருப்புக் கோட்டும், மப்ளருமாக சகலரும் தான் நடக்கிறார்கள். ஆனாலும் இவர் கையில் அட்டையும் அதில் செருகிய க்ளிப்புமாக இருப்பதால் ரயில்வே அதிகாரிதான்.

கொத்தில்லா ஸ்வாமி.

ஏசி ரெண்டு டயரைக் கொத்திக்கிட்டுப் போனது அண்டங்காக்கையா ? அரசுத் துறை மறதியா ?

ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கும்போது, என்னைப் போலவே இன்னும் இருபது சொச்சம் பேர் முகத்தில் கவலையோடு ப்ளாட்பாரத்தில். போர்ட்டர் ஒருத்தர் வந்து அருள்வாக்கு சொன்னார் – அந்த கோச் இனிமே தான் அட்டாச் ஆகப் போவுது.

அவருக்கும் கர்த்தருக்கும் ஸ்தோத்ரம்.

தே குட் ஹேவ் அனவ்ன்ஸ்ட் இன் த பப்ளிக் எட்ரஸ் சிஸ்டம்.

நான் உதவிக் கரம் நீட்ட ஏறி உள்ளே வந்த ஆங்கிலோ இந்தியன் பாட்டியம்மாவுக்கும் ஸ்தோத்ரம். லோயர் பர்த்தில் படுத்துறங்கி, நிம்மதியான கனவுகளோடு சென்னை அடைவீராக.

சமயமாம் ரதத்தில் ஞான்

சொர்க்க யாத்ர செய்யுன்னு.

நேரம் கெட்ட நேரத்தில் விவிலிய கானம் நினைவில் சுழல, நித்திரை போகிறேன்.

****

இந்த முப்பது நாளில் வந்தது.

ஒரு மூட்டையைக் கொட்டிக் கவிழ்த்தாள் மனைவி. எல்லாம் கடிதங்கள். இண்ட்ரஸ்ட் வாரண்ட், மேனேஜ்மெண்ட் இன்ஸ்றிற்யூற் பத்திரிகைகள், இலக்கிய இதழ்கள், சந்தா அனுப்பவும், திருச்செந்தூர் இலைவிபூதிப் பிரசாதம், டா மேட் ஷேர் ஸ்டேட்மெண்ட் என்று வழக்கமானவற்றுக்கு இடையே ஒரு அஞ்சல் அட்டை.

‘2003-2004 சந்தா பெற்றுக் கொண்டோம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பி வைக்கவும். இப்படிக்குச் செயலர், தமிழ்நாடு வல்லம்பர் சங்கம்.

அவசரத்தில் வம்பர் சங்கம் என்று படித்து அப்புறம் இன்னொரு முறை படிக்க, வல்லம்பர் சங்கம். நான் எப்போது அங்கே சேர்ந்தேன் ? சந்தா அனுப்பி (உலக மகா பிசுக்கன்மாரில் நானும் ஒருத்தன் – காசு லேசில் பெயராது) அதுக்கு நன்றி வேறே. போஸ்ட் கார்டைத் திருப்பி முகவரியைப் படித்தேன். சரியாகத் தான் இருக்கிறது. பெயர் மட்டும் சுப்பையா ராமன் என்பதன் மேல் அக்கறையுள்ள யாரோ கட்டைப் பேனாவால் கோடு இழுத்து என் பெயரை மேலே எழுதியிருக்கிறார்கள்.

ஆமா, வல்லம்பர் சங்கம் என்றால் என்ன ?

****

நாலைந்து மாதம் முன்னால் புலிநகக் கொன்றை பி.ஏ.கே கோரிக்கை எழுப்ப, தியோடர் பாஸ்கரன், மனுஷ்யபுத்ரன், நான், அப்புறம் இன்னும் ஒரு பத்து எழுத்தாளர்கள், விமர்சகர்கள் எல்லோரும் ஆளுக்கொரு ஆங்கிலக் கட்டுரை எழுதினோம் – தமிழ்ப் புத்தகங்கள் பற்றி.

தில்லிப் பத்திரிகையான ‘த புக் ரெவ்யூ ‘வில் அதெல்லாம் அச்சேற்றி, சுடச்சுட ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்கு எடுத்துப் போனார்கள். அந்தக் கண்காட்சி இருக்கட்டும், நாங்க எழுதி அச்சில் வந்ததைக் கண்ணிலே காட்டுங்க என்று பி.ஏ.கே எங்கள் எல்லார் சார்பாகவும் பல தடவை புக் ரெவ்யூ பத்திரிகை நடத்துகிறவர்களிடம் முறையிட அவர்களோ உலக்கையும் விழுங்கிச் சுக்குக் கஷாயம் சாப்பிட்டது போல் ஒரு அசைவும் இல்லாமல் இருந்தார்கள்.

இன்று காலை திறந்த மூட்டையில் ஒரு ‘ புக் ரிவ்யு ‘ இதழ். சரிதான், இப்போத்தான் முழிச்சுக்கிட்டு அனுப்பியிருக்காங்க என்று பிரித்துத் தேடினால், உள்ளே ஏகப்பட்ட பெங்காலி பாபு மோஷாய்கள். நாங்கல்லாம் எங்கம்மா ?

தில்லிவாலிகள் அனுப்பியிருப்பது பிப்ரவரி 2004 இதழ். நாங்கள் எழுதி வெளிவந்தது 2003 செப்டம்பரோ அக்டோபரோ. அவங்களுக்கு என்ன போச்சு ? ஒரு காப்பி அனுப்பணும். அது எதுவா இருந்தா என்ன ?

பத்திரிகையைப் பிரிக்க நிறையவே ஆசுவாசம்.

மறைந்த கவிஞர் நிஸ்ஸிம் எசிக்கியெல் பற்றிய கட்டுரையை முதலில் படித்து முடித்தேன். அதில் கண்ட நிஸ்ஸிமின் கவிதை வரிகள் :

I know I shall say it

gratefully, as persistent and poetic

as the grass that grows

between Bombay ‘s pavement tiles.

****

வெ.சபாநாயகம் என்ற சீனியர் எழுத்தாளர் பற்றி வியப்பாக இருக்கிறது. மலைப்பாகவும். அவர் கணையாழித் தொகுதியை உருவாக்கியவர். அதற்கு எத்தனை உழைத்திருப்பார் என்று எனக்குப் புரிகிறது. நானும் கணையாழித் தொகுதிக்கான பணியை ஒரு காலத்தில் மேற்கொண்டேன்.

கி.கஸ்தூரிரங்கன் சார் சொல்லி, அவர் வீட்டுக் கள்ளியம்பெட்டியில் வைத்திருந்த பழைய இதழ்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்து இந்த வேலையை 1996-ல் தொடங்கினேன். ‘இதிலே இல்லாததை எல்லாம் திலீப்குமார் கிட்டே கேட்டு வாங்கிக்குங்க ‘ என்று கி.க அன்புக் கட்டளை இட்டிருந்தார்.

எந்த இதழ் எல்லாம் இல்லை என்று பட்டியல் இட்டோம். அப்புறம் இல்லாத இதழ்களுக்காக திலீப்பைத் தேடிப் போக, அவர் அன்போடு உடனே அதில் பலதை, இன்னொரு மூட்டையாகக் கட்டிக் கொடுத்தார்.

ஒரு மாதம் உழைத்து ஒரு முதல் பட்டியல் (கதைகள் மட்டும் – நாற்பது சிறுகதைகள்) தேர்வு செய்தேன். அப்புறம் கி.கவிடம் புத்தக மூட்டையும், பட்டியலுமாகத் திரும்பப் போனேன்.

‘இதை யாராவது ஸ்பான்ஸர் செய்தால் பப்ளிஷ் பண்ணிடலாம் .. ‘

அப்புறம் நான் இங்கிலாந்துக்கும் தாய்லாந்துக்கும் போய்விட, கி.க தொடர்பு அறுந்து விட்டது.

கலிபோர்னியாவிலிருந்து திரும்பியதும் என்று நினைக்கிறேன் – சென்னை ஹிக்கின்பாதம்ஸின் ‘கணையாழி தொகுப்பு ‘ கண்ணில் பட்டது. மகிழ்ச்சியாக எடுத்து விரித்தேன். அது பெரு மகிழ்வானதற்கு இரண்டு காரணங்கள் – ஒன்று, கதை மட்டுமில்ல, மற்றதும் உண்டு. அடுத்தது – சபாநாயகம் என்ற கணையாழி வரலாற்றாளரின் முழு உழைப்பால் உருவானது அது.

கணையாழியில் இருபத்தைந்து வருட இதழ்களை வாசித்து, பிடித்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதே சிரமமான செயலாக இருக்கும்போது, அவருடைய உழைப்பும், வாசிப்பின் பரப்பும் புரிகிறது.

சபாநாயகம் தற்போது இணையத்தில் பல எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து அவருக்குப் பிடித்த வர்ணனைகளை ஒவ்வொன்றாக வழங்கி வருவதைப் படிக்கும்போது அது பிரமிப்பாக மாறுகிறது.

****

‘(1890களில், பம்மல் சம்பந்த முதலியார் தொடங்கிய நாடகக் குழுவான) சுகுண விலாஸ சபையின் நடிகர்கள் எல்லோரும் ஆண்கள். நிறையப் படித்து, உயர் பதவியும் சமூக அந்தஸ்துமாக இருந்தவர்கள். ஒரு நடிகை கூட இந்தக் குழுவில் நுழைய அனுமதி இல்லை. சபையில், சம்பந்த முதலியாரின் நெருங்கிய நண்பரான சி.ரெங்க வடிவேலு முதலியார் தான் கதாநாயகி பாத்திரங்களை அபிநயித்து வந்தார். அவர் ‘பெண்மை அழகு மிளிரும் ‘ ஆண்மகன். பெண்களின் அழகு அம்சங்களில் ஒன்றான ஆறடி நீளக் கூந்தல் அவருக்கு வாய்த்திருந்தது. ரங்க வடிவேலு நாடக மேடையில் வெற்றிகரமான கதாநாயகியாக உலா வந்தார். அவர் பெண்ணில்லை என்று தெரிந்தும், சென்னைப் பட்டிணத்தின் பல வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் அவர் மேல் ரகசியக் காதல் கொண்டிருந்தார்கள்.

‘ரங்கா டியருக்கு ‘த் தான் நூற்றுக் கணக்கான காதல் கடிதங்கள் எழுதியதாக, நான் நன்கறிந்த ஒரு வழக்கறிஞர் என்னிடம் பெருமையடித்துக் கொண்டார். அவர் பெயரைச் சொல்வதிற்கில்லை. மெரினா கடற்கரையில் அவரும், ரங்க வடிவேலுவும் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த நாட்கள் பற்றியும், அப்போதெல்லாம் ‘வடிவு டார்லிங் ‘கின் நீண்ட கூந்தலைத் தான் அளைந்தபடியே இருந்தது பற்றியும் கண்ணில் காதல் மின்ன விவரித்தார் அந்த வழக்கறிஞர்.

அவர் குறிப்பிட்ட காதல் கடிதங்களில் வரிகளுக்கு இடையில் படிக்க ஏதாவது இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ‘

(- மாம்பலம் டைம்ஸ் பத்திரிகை ஃபிப்ரவரி 21-27, 2004 இதழில் ‘ராண்டார் கை ‘ எழுதிய கட்டுரையிலிருந்து.)

பம்மல் சம்பந்த முதலியாரின், ‘நாடகமேடை நினைவுகள் ‘ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது எனக்கும் லேசாக இது பற்றி சந்தேகம் எழுந்தது. ராண்டார் கை உரக்கவே வெளியிட்டிருக்கிறார்.

ஒருபால் புணர்ச்சி என்பது மேற்கத்திய ஒழுக்கச் சிதைவின் வெளிப்பாடு. இந்திய சமூக அமைப்பில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தில் அதெல்லாம் கிடையவே கிடையாது என்று நாம் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மத்தளராயன்

—-

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்