தேசபக்தியின் தேவை

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

சின்னக்கருப்பன்


சிறந்த நாவலாசிரியரும், நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி அவர்களும், சிறந்த நாவலாசிரியரான பி ஏ கிருஷ்ணன் அவர்களும் சமாச்சார் தளத்தில் தேசபக்தி பற்றி எழுதியிருக்கிறார்கள்.

http://samachar.com/tamil/features/030204-Ipa.html

http://samachar.com/tamil/features/090204-contribution1.html

இருவருமே பாரம்பரிய பார்வைகளிலிருந்தே இதனை அணுகியிருக்கிறார்கள். இந்திரா பார்த்தசாரதி இதனை மேற்கத்திய லிபரல் பாரம்பரியத்திலிருந்தும், பி ஏ கிருஷ்ணன் இந்திய பழமைவாத அல்லது கன்சர்வேடிவ் பார்வையிலிருந்தும் இதனை அணுகியிருக்கிறார்கள். பி ஏ கிருஷ்ணன் எழுதிய அஸ்ஸாம் நிகழ்ச்சி போன்ற ஒரு விஷயம் கரிகால் சோழன் காலத்தில் கூட உண்மையாகத்தான் இருந்திருக்கும். பிறகு ஏன், கரிகால் சோழனுக்காக வீரர்கள் அருகாமையில் இருக்கும் பாண்டிய நாட்டின் மீது எடுத்த படையெடுப்பில் உயிர் துறக்க வேண்டும் ? ஒரே கலாச்சாரம் இருக்கிறது என்பது கூட இரு வேறு அரசுகள் என்ற நிதர்சனத்தின் போது மறக்கப்பட்டு நாட்டுப்பற்று என்ற கருத்துருவம் மூலம் (அல்லது ராஜவிசுவாசம் என்ற கருத்துருவம் மூலம்) இன்னொரு மனிதனை மனசாட்சியின் இடையூறு இல்லாமல் கொல்வதற்கு ஏதுவாகிவிடுகிறது என்பதுதானே உண்மையாக இருக்கும்.

பாகிஸ்தானுக்குச் சென்றுவரும் ஏராளமான அறிவுஜீவிகளும் பத்திரிக்கையாளர்களும், பாகிஸ்தானில் இருக்கும் கலாச்சாரமும் மொழியும் வட இந்திய கலாச்சார மொழி இன மதத்தோடு நெருங்கிய தொடர்புடையவை என்றே சொல்லிவருகிறார்கள். பின்னர் ஏன் இரண்டுக்கும் இடையில் இப்படிப்பட்ட வெட்டுக்குத்து ? ஏன் இரண்டு போர்ப்படைகளும் ஒன்றை ஒன்று உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றன ? இவற்றுக்கு பி ஏ கிருஷ்ணன் பதில் கூறவில்லை.

நாட்டுப்பற்று என்ற உபாயம் கொண்டு, மேற்கத்திய அரசுகள் நடத்திய முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் ஆகிய ஊழித்தாண்டவ அழிவின் அனுபவத்திலிருந்து, ‘அரசு ‘ என்பதனையே அவநம்பிக்கையோடு நோக்கும் அறிவுஜீவிப்பாரம்பரியத்திலிருந்து மேற்கத்திய லிபரல் பாரம்பரியம் வந்திருக்கிறது.

இதனையே ஹென்றி டேவிட் தோரோ தன்னுடைய கட்டுரைகளில் முக்கியமாக சிவில் டிஸ்ஒபீடியன்ஸ் கட்டுரையில் தீவிரமாக விமர்சிக்கிறார். மெக்ஸிகோ மீது அமெரிக்க அரசு தொடுத்த போரையும் அடிமைத்தனத்துக்கு எதிராகவும் தோரோ கொண்டிருந்த விமர்சனம், அவரை அமெரிக்க அரசு மீதும், பொதுவாக எல்லா அரசுகள் மீதும் அவநம்பிக்கையோடு பார்க்க வைத்தது. (இந்திய அரசியல்வாதிகளின் ஊழல், இந்திரா பார்த்தசாரதியையும் இந்திய அரசியல்வாதிகளை அவநம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.)

அதே நேரத்தில் ஜான் ஸ்டூவர்ட் மில், லாக் போன்றவர்கள் அரசு என்ற கருத்துருவத்தை அவ்வளவு அவநம்பிக்கையோடு பார்க்கவில்லை என்றாலும், மார்க்ஸ் எங்கல்ஸ் போன்ற அதிதீவிர இடதுசாரி சிந்தனையாளர்களின் பார்வையில் அரசு என்பதே மேல்வர்க்கம் கீழ்வர்க்கத்தை அடக்குமுறை செய்ய உற்பத்தி செய்யப்பட்ட கருவி என்ற கருத்துருவாக்கம் மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கும் இந்திய அறிவுஜீவிகள், அரசு என்பதனை அந்த பார்வையிலேயே பார்க்கிறார்கள்.

மார்க்ஸிய பார்வை அரசினை முதலாளித்துவ வர்க்கத்தின் கருவியாகவும், பாட்டாளி வர்க்கத்தை அடக்குமுறை செய்ய உருவான கருவி என்றும் கருதுகிறது. ஆனால், ( இந்திய அரசினை அப்படிப்பார்க்கும் இந்திய இடதுசாரிகள், பாகிஸ்தான் அரசினை அப்படிப்பார்ப்பதில்லை. ) இருப்பினும், மார்க்ஸியப் பார்வையில், இந்தியாவின் முதலாளி வர்க்கமும், பாகிஸ்தானின் முதலாளி வர்க்கமும் சேர்ந்து ஆடும் ஒரு நாடகமே இப்படிப்பட்ட வெட்டுக்குத்து, போர்முனை மிரட்டல்கள், என்றும் பலர் எழுதியிருக்கிறார்கள். இந்த நாடகத்தை காட்டி மக்களின் கவலைகளை திசை திருப்பிவிட்டு, பாட்டாளி மக்களின் மீதான அடக்குமுறையை மறக்கடிக்கிறது இந்திய அரசு (அல்லது பாகிஸ்தானிய அரசு) என்பது ஒரு வழமையான வாதம்.

இதன் மீட்சியே இந்திரா பார்த்தசாரதியின் நாட்டுப்பற்றை விமர்சிக்கும் கட்டுரை. அதாவது வெளிநாட்டுக் காரர் நம்மை சுரண்ட வேண்டாம் நம் நாட்டுக்காரர்களே சுரண்டலாம் என்ற இந்திய அரசியல்வாதியின் உள்ளுறை நோக்கமாகப் பார்க்கிறார் இந்திரா பார்த்தசாரதி. சோனியா ஆண்டாலும் மார்க்ஸியப்பார்வையில் அரசின் முதலாளித்துவ வர்க்க குணாம்சம் மாறிவிடாதே!

ஏன் போலந்துக் கவிஞரான மிட்ச்கேவிக் அவர்களிடம் செல்லவேண்டும் ? சாரே ஜஹான் சே அச்சா கவிஞரான இக்பால் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பாகிஸ்தானுக்குப் (உண்மைதான்) போய்விட்டார். ரபீந்திர நாத் டாகூர் பங்களாதேஷின் இடத்தைச் சார்ந்தவர். ஆனால் இந்தியக் கவியாகவும் பார்க்கப்படுகிறார் பங்களாதேஷின் தேசிய கீதமும் அவரது கவிதையே. ஆரம்பம் முதலாகவே இந்தியாவின் இரண்டு தேசிய கீதங்களும் இந்தியாவின் அரசாங்க எல்லை நிலத்துக்குள் இருந்தவர்களின் கவிதைகள் அல்ல. (எஸ்விஆர் போல இதனையும் அகண்டபாரத கனவாகவும் பார்க்கலாம், அல்லது அரசாங்கம் நியமித்த எல்லைக்குள் குறுகிவிடாத நாட்டுப்பற்று வெறியற்ற மக்கள் உணர்வாகவும் பார்க்கலாம்!)

உலகம் இன்று கிராமமாகி விட்டது என்றும், தேச பக்தி, தேசிய உணர்வு என்பவற்றை வைத்து ‘சாதாரண மக்கள் ‘ ஏமாறிவிடக்கூடாது என்றும் இந்திரா பார்த்தசாரதி கூறுகிறார்.

இந்திரா பார்த்தசாரதி ஆரம்பிக்கும் இடம் சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராகலாமா கூடாதா என்ற விவாதத்தில்தான். இறுதியில் முடிப்பது சாதாரண மக்கள் ஏமாறிவிடக்கூடாது என்பதில்.

ஆனால் சாதாரண மக்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்லர் என்பதே என்னுடைய கருத்து.

**

மக்கள் ரியல் பொலிடிக் என்னும் நடப்பு அரசியலை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். சோனியாவின் சொந்த நாடான இத்தாலியில் இத்தாலியப் பெற்றோருக்குப் பிறக்காத ஒரு இத்தாலியில் பிறக்காத பிரஜை நாடாளுமன்றத்துக்கு நிற்கக்கூட முடியாது. அவர் பிரதமராக ஆவது இத்தாலி மக்களால் சிந்திக்கக்கூட இயலாத காரியம். ஜான் கெர்ரி என்ற அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மாணவனாக இருந்த போது அமெரிக்கப் படைகளை ஐக்கிய நாடுகள் சபை நிர்வகிக்க வேண்டும் என்று கொடுத்த பேட்டி அவர் ஜனாதிபதியாக ஆவதற்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை எடுத்துவிடும் என்று பேசுகிறார்கள். முன்னேறிய ஜப்பானில் கொரிய வம்சாவளியினராக இருக்கும் ஜப்பானியப் பிரஜைகள் எந்த நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்திரா பார்த்தசாரதி படிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

**

உலகம் கிராமமாக இன்னும் ஆகவில்லை.

உலகத்தின் நாடுகளின் எல்லைக்கோடுகள் அப்படியே இருக்கின்றன. ஓரளவுக்கு அவை இளகியிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அவை மறைந்துவிடவில்லை. அவை மறைய வேண்டும் என்பதும் என் கருத்தே. ஆனால், இன்னும் மறையவில்லை என்பதும், மறைய வேண்டுமெனில், உலக மக்களின் பொதுக்கருத்தில் பெரும் மாற்றம் வேண்டும் என்பதுமே இன்றைய உண்மைகள்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இன்னும் தங்கள் காலனியாதிக்கத்தையும், மறைமுக நவகாலனியாதிக்கத்தையும் கைவிடவில்லை. அவை இந்த மேலாதிக்கத்தை கைவிட்டுவிடும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஐந்து நாடுகள் அணு ஆயுதம் வைத்துகொள்ளலாம், மற்றவர்கள் வைத்தால் கெளபாய் சுட்டுவிடுவான் என்ற அடாவடிதான் இன்று நடைமுறை அரசியலாக இருக்கிறது. அணு ஆயுதம் வைத்திராத ஈராக், அணு ஆயுதம் வைத்திருக்கும் என்ற ஹேஷ்யத்தின் மூலம் இன்று அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அடிமைப்பட்ட பாகிஸ்தானின் அணுஆயுதமும் அணு ஆயுதப்பரவலும் உள்நாட்டு விவகாரம் என்று மொழுகப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதி காணும் கனவு அருமையானது. ஒரே கிராமமாகும் உலகத்தில் இந்தியாவின் வறுமை நிச்சயம் ஒழிந்துவிடும். ஒரு இந்தியன் (அல்லது தமிழன், அல்லது சோழநாட்டான், அல்லது திருச்சிக்காரன்) மங்கோலியாவில் சுதந்திரமாக அமெரிக்கப்பொருட்களை சீனர்களுக்கு விற்று ரஷ்யப் பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளுக்கு டார்டர் மொழி கற்றுத்தர இயலும்.

ஆனால், இன்றைய நிலைமை வேறு. பாகிஸ்தானுடம் இந்தியா கொள்ளும் வர்த்தக உறவுகளை ‘அகண்டபாரதம் வருகிறது ‘ என்று எழுதும் இந்திய பாகிஸ்தான் அறிவுஜீவிகள் வாழும் நேரம் இன்று. ஐரோப்பாவில் கிரிஸ்துவப் பாரம்பரியம் என்பதை அழுத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதவேண்டும் என்று இன்றும் வாடிகனும். இத்தாலியும், போலந்தும் வலியுறுத்தும் நேரம் இன்று. இறுக்க மூடியக் கதவுகளைக் கொண்ட அமெரிக்கா பயப்பிராந்தியுடனும், அதிதீவிர கிரிஸ்துவ மதப்பரப்பலுக்கு ஈராக்கில் அறுவடை செய்ய நிலம் தேடும் நேரம் இன்று. உலகத்தை இஸ்லாமிய மயமாக்க எந்த உபாயத்தையும் எடுக்கலாம் என்ற கருத்துடன் சவூதி அரேபியாவிலிருந்தும் இன்னும் இதர இஸ்லாமிய தேசங்களிலிருந்தும் படை புறப்பட்டிருக்கும் நேரம் இன்று. இந்த சுற்றுச்சூறாவளிக்குள், இந்தியா இருக்கும் நிலையில், உலகம் கிராமமாகிவருகிறது; ஆகவே, உள்நாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடம் கொடுக்காமல் வெளிநாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடம் கொடுக்கலாம் என்று எழுதும் இந்திரா பார்த்தசாரதியை விட ‘சாதாரண மக்களில் ‘ ஒருவனான நான் தெளிவாகவே இருக்கிறேன்.

இதே சாதாரண மக்கள் கலாச்சாரம் மொழி இனம் மதம் வேறுபட்டிருக்கிறது என்பதற்காக சங்மா பிரதமராகக் கூடாது என்று பேசுவதில்லை. சங்மா பிரதமராக ஆனால் பிரச்னை ஏதுமில்லை என்று நானே கூறுகிறேன். ஏனெனில், சங்மா பிரதமராக இருந்து எடுக்கும் முடிவு சங்மாவின் மக்களையும் பாதிக்கும். ஆனால், இத்தாலிய சோனியா எடுக்கும் முடிவு இத்தாலி மக்களை பாதிக்காது. ஒருவேளை இத்தாலி மக்களின் நன்மைக்காக இந்தியாவின் மக்களின் நன்மை பாதிக்கப்படலாம். அது ஒன்றே போதும், அவரை நிராகரிக்க. இத்தாலியும் இந்தியாவும் ஒரே நாட்டின் அங்கங்களாக ஆகும்போது என் ஓட்டு நிச்சயம் சோனியாவுக்குப் போடுகிறேன் என்று இந்திரா பார்த்தசாரதிக்கு உறுதி கூறுகிறேன்.

மேலும் என் குடும்பம், என் குடும்பத்துக்குப் பிறகே என் ஜாதி, என் ஜாதிக்குப் பிறகே என் ஊர், என் ஊருக்குப் பிறகே என் நாடு, என் நாட்டுக்குப் பிறகே என் உலகம் என்பதுதான் இயல்பானது. அதுதான் தனிப்பட்ட வாழ்வில் சொந்தப் பணத்தை செலவு செய்யும் போது இயல்பானதும் கூட. அதுவே நம் வரலாறு. அதுவே அனைத்து உலகத்தவரின் வரலாறும் கூட. அது உலகம் கிராமமாக உண்மையிலேயே ஆனபின்னாலும் தொடரும்.

ஆனால் அதுவே, எல்லோர் பணத்தையும் எடுத்து, தனக்கும் தன் குடும்பத்துக்கும் செலவு செய்யும் நெபோடிஸமாகவும், தன் ஜாதிக்குச் செலவு செய்யும் ஜாதியமாகவும், தன் ஊருக்குச் செலவு செய்யும் இழி அரசியலாகவும் ஆகும்போது அது கண்டிக்கப்படவேண்டியது.

நெபோடிஸத்தின் தலைசிறந்த உதாரணமாக இருக்கும் சோனியாவின் அரசியலைக் கண்டிக்காமல் இருப்பது அல்லவா தவறு ?

என் குடும்பம், என் ஜாதி, என் நாடு என்ற பற்றுக்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது. அது இன விருத்தி.

பரிணாம உயிரியலின் விதிகள் தெளிவானவை. மரபணுக்களே நம் குணங்களை தீர்மானிக்கின்றன. சொல்லப்போனால், மற்றவருக்கு உதவிக்கரம் நீட்டும் குணமும் நம் மரபணுவின் ‘சுயநல ‘ குணத்தால் விளைவதுவே. நமது குழந்தைகள் நமது மரபணுவின் நீட்சியாக இருக்கின்றன. உன் குழந்தைகளைக் காப்பாற்றாதே என்று சொல்லும் மரபணு நம் உடலில் இருந்தால், அது அந்த மரபணுவின் அழிவைத்தானே கொண்டுவரும் ? உன் குழந்தைகளைக் காப்பாற்று என்று சொல்லும் மரபணு நம் முன்னோர் நம் உடலில் விட்டுச் சென்ற மரபணுக்கள். அதே போல நம் மரபணு யாரிடம் இருக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறதோ அவர்களை காப்பாற்றுவது, அந்த வாய்ப்பு இருக்கும் அளவுக்கேற்ப காப்பாற்றுவது என்பது நம் மரபணுவில் எழுதப்பட்ட விஷயங்கள். அதனாலேயே நாம் நம் குடும்பம், நம் ஜாதி, நம் ஊர், நம் நாடு, நம் இனம் (மனித இனம்) என்ற வழிமுறையைக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே, நமது வேர்ப்பற்று நமது வேரில் இணைந்த ஒரு விஷயம். இதனை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதுதான் தவறு..

ஆகவேதான் குழு உணர்வும், பின்னால் விரிந்து நாட்டுப் பற்றும் பின்னால் விரிந்து மனித இனமும் உலகமும் வாழ வேண்டும் என்ற கருத்துருவாக்கமாகவும் விரிகிறது. நாம் வரலாற்றின் அடிமைகள். நம் சுற்றுச்சூழலின் அடிமைகள். உலகளாவிய மனித இனம் ஒன்றுபடவேண்டும் என்ற கனவு சிறப்பானதுதான். அதற்காக நாம் தயாராக இருக்கலாம். ஆனால் உலகம் தயாராக இல்லை என்றால், நமது அழிவையே அது குறிக்கும்.

முன்பு சோழநாடும் பாண்டிநாடும் சேர நாடும் சண்டை போட வேண்டிய அவசியமில்லை என்று ஆயிரம் சங்கப்புலவர்கள் விரும்பியும், அதற்கான ஒரு காலமும் நேரமும் கூடி வரும்போதுதானே அது நடக்கிறது ? காலமும் நேரமும் கூடி வந்து இந்தியா இன்று இணைந்து சிக்கிம் மக்களும் கேரள மக்களும் ஒருவரால் ஒருவர் கொல்லப்படலாம் என்ற பயமின்றி இயங்கும் காலம் இப்போதுதானே வந்திருக்கிறது. இதனை முன்னெடுத்துச் செல்லவேண்டும்தான்.

கொள்கைரீதியாகவும், மரபணு ரீதியாகவும் எந்தக் கருத்தாக்கத்துக்கான தேவை இருக்கிறதோ அந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து இருக்கும். இதுவே குடும்பம், ஜாதி, நாடு ஆகிய கருத்தாங்கங்கள் நம்மிடையே இருக்கக் காரணம். மேல்நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் காரணமாகவும், ஒரு தனிமனிதனுக்கு சமூகம் கொடுக்கும் பாதுகாப்பு காரணமாகவும் (தனி மனிதனைக் கொண்டாடும் சிந்தனை அமைப்பு காரணமாகவும்) குடும்ப அமைப்பு அழிகிறது. அதே நேரத்தில் அந்த நாடுகளுக்கான வளமையைத் தக்கவைத்துக்கொள்ள மூலப்பொருட்களின் தேவை அதிகமாவதால், அதன் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு தேவையாக இருப்பதால், கண்மூடித்தனமான நாட்டுப்பற்று அதிகரிக்கிறது. இந்தியாவில் சமூகப் பாதுகாப்பின்மை காரணமாக, இந்தியர்களுக்கு காலம் காலமாக ஊன்றிகொள்ள இருக்கும் தூண்களான குடும்பமும் ஜாதியும் வலிமையடைகின்றன. எதிர்காலப் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, குடும்ப ஜாதிப்பற்று அதிகரிக்கிறது. இது அதிகரிப்பதன் காரணமாக ஊழல் அதிகரிக்கிறது. ஊழல் அதிகரிப்பது இன்னும் பாதுகாப்பற்ற சூழலை சமூகத்தில் அதிகரிக்கிறது.

ஆனால், இந்திரா பார்த்தசாரதி இந்திய அரசியல்வாதிகளின் ஊழலின் காரணமாக கொண்டிருக்கும் அவநம்பிக்கை நீட்சிபெற்று, இந்திய அரசியல்வாதிகளுக்கு வெள்ளைக்காரனே தேவலை என்ற நிலைப்பாட்டுக்கு இட்டுச் சென்றுவிட்டது என்று கருதுகிறேன். ஆனால், இந்திய அரசியல்வாதிகள் என்றாலே ஊழல் என்ற பெயர் வரும் அளவுக்கு கடந்த 50 வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கலாச்சாரத்திடமே மீண்டும் ஆட்சி கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில், பாஜக நாட்டுப்பற்று என்று சொன்னால் ஏமாறாமல் சோனியாவுக்கே ஓட்டுப்போடு என்று சொல்வதன் முரணையும் அவர் அறிந்தே எழுதியிருப்பாரா என்று வியக்கிறேன்.

பாரதிய ஜனதாவை விமர்சிக்க ஏராளமான காரணிகள் இருக்கின்றன. ஆனால், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற கருதுகோளோடு, பாஜக எதைப் பேசினாலும் எதிர்க்க வேண்டும் எனக் கருதி அது பேசும் தேசப்பற்றையும் விமர்சிப்பதன் விளைவு, தேசப்பற்றாளர்களை பாஜகவில்தான் இணைக்கும்.

நம் தேசம் தவறு செய்யும்போது அதனை தெளிவாக விமர்சிக்கவும், நம் நாடு தேவையில்லாமல் இன்னொரு நாட்டை அழிக்கும்போது உரத்து குரல் கொடுக்கவும் வேண்டும். அப்போது நாட்டுப்பற்று என்ற போர்வையின் மூலம் எதிர்க்குரலை அமுக்க ஆளும் அரசாங்கம் முயலும்போது அதனை தெளிவாக வேறுபடுத்தி எதிர்க்குரல் கொடுப்பதே என் நாட்டுப்பற்றின் காரணமாகத்தான் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறவேண்டும். நம் நாட்டு மக்களிலிருந்து தலைவர்கள் வரை இதனை பல முறை செய்திருக்கிறார்கள். ஆனால், நாட்டுப்பற்றெல்லாம் வேண்டாம், நேருவின் பேரனின் இத்தாலிய மனைவியிடம், அவரது தகுதி எல்லாம் பார்க்காமல், 100 கோடி நாட்டு மக்களின் தலைவிதியை கொடு என்று சொல்வது தற்கொலைக்குச் சமானம்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்