மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

இறுதிநாள் : பிப்ரவரி 15, 2004


மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹூ குழுமமும் (http://groups.yahoo.com/group/maraththadi) திண்ணை வாசகர்கள் அறிந்ததே. திண்ணை இணையதளத்தில் மரத்தடி இணையதளத்திற்கான முகவரியை இட்டு எங்களை வாழ்த்திய திண்ணை ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள். வாழ்வின்பாலும், வாழ்கின்ற சமூகத்தின்பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் குழுமம் மரத்தடியாகும். மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓர் ஆரோக்கியமான இணையக் குடும்பமாக ஆனால் விதவிதமான வண்ணங்களைப் போன்ற எண்ணங்களுடன் நாங்கள் மரத்தடியில் வாழ்ந்து வருகிறோம்.

வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, மரத்தடியில் ‘குளிர்கால சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகளை ‘ அறிவித்திருக்கிறோம். முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கும், புதுக்கவிதைக்கும் தலா இரண்டு பரிசுகள் வழங்க இருக்கிறோம். முதல் பரிசாக இந்திய ரூபாய் 5000-ம், இரண்டாம் பரிசாக இந்திய ரூபாய் 2500-ம் வழங்க உள்ளோம். திண்ணை ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம் அவர்கள் பரிசுக்குரிய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும், எழுத்தாளர் திருமதி. காஞ்சனா தாமோதரன் அவர்கள் பரிசுக்குரிய புதுக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும் பணிபுரிய அன்புடன் இசைந்துள்ளார்கள்.

ஆறுதல் பரிசுகளும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும் கவிதைகளும் ‘கணையாழி ‘ இலக்கிய இதழிலும் முக்கிய இணைய இதழ்களிலும் முதல் பிரசுரம் பெறும். காப்புரிமையும் மறுபிரசுர உரிமையும் எழுத்தாளருக்கே.

இலக்கியத்தின் மீது ஆர்வம் உடைய புதுமுக மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களை இந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். போட்டிக்கான விதிகளை மரத்தடி யாஹூ குழுமச் செய்திகளில் காணலாம். திண்ணை வாசகர்களுக்காக அவற்றை மீண்டும் கீழே தந்திருக்கிறோம்.

1. மரத்தடி யாஹூ குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்களே போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியும். மரத்தடி யாஹூ குழுமத்தில் இதுவரை உறுப்பினராக இல்லாதவர்களூம்கூட, போட்டியின் இறுதிநாளுக்குள் (பிப்ரவரி 15, 2004 EST) உறுப்பினராகிப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தரத் தயாராக இருக்கவேண்டும். தனிப்பட்ட விவரங்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளத் தயக்கமென்றால் அவற்றை குழுமத்தின் மட்டுறுத்துனரிடமோ போட்டியின் ஒருங்கிணைப்பாளருடனோ பகிர்ந்து கொள்ளலாம்.

3. போட்டிக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படைப்பையும் போட்டியின் முடிவுகள் தெரியும்வரை அவற்றின் ஆசிரியர்கள் வேறெங்கும் (இணையக் குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) பிரசுரிக்க அனுப்பக்கூடாது. பரிசுக்குத் தெரிவான படைப்புகள் மரத்தடி இணையதளத்தில் பிரசுரிக்கப்படும். போட்டியில் வெல்கின்ற படைப்புகளை போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னரே வேறிடங்களில் அவற்றின் ஆசிரியர்கள் பிரசுரிக்க விரும்பினால் அனுப்பலாம்.

4. பி.கே.சிவகுமார் இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். ஒருங்கிணைப்பாளரோ அவர் குடும்பத்தினரோ இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாது.

5. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

6. போட்டியில் பங்குபெறும் படைப்புகளை ‘மரத்தடி குளிர்கால சிறுகதைப் போட்டி – <<கதையின் தலைப்பு>> ‘, ‘மரத்தடி குளிர்கால புதுக்கவிதைப் போட்டி – << புதுக்கவிதையின் தலைப்பு (தலைப்பு இருக்குமானால்)>> என்கிற ‘Subject ‘ உடன் மரத்தடி குழுமத்தில் பொதுவில் மடலிடுங்கள்.

7. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் போட்டிக்காகவென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்; அதாவது, வேறெங்கும் (இணையக்குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) முன்னமே பிரசுரமாகியிருக்கக் கூடாது.

8. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும்.

9. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே முடிவானவை; உறுதியானவை. போட்டிக்கு உதவலாம் என்கிற எண்ணத்துடனும், முரண்களையும் சர்ச்சைகளையும் தவிர்க்கும் நோக்குடனும், இந்தப் போட்டியின் விதிகளை மாற்றவோ, தளர்த்தவோ, கூட்டவோ ஒருங்கிணைப்பாளருக்கு உரிமை உண்டு.

10. போட்டிக்கான படைப்பு என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.

11. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15, 2004 11:59 PM EST.

12. போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 29, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.

13. ஒருவர் அதிகப்பட்சமாய் ஒரு சிறுகதையும், ஒரு புதுக்கவிதையும் மட்டுமே போட்டிக்கு அனுப்ப இயலும்.

14. மேலும் விவரங்களுக்கு mathygrps@yahoo.com அல்லது pksivakumar@att.net ஆகிய மின்னஞ்சல்களுக்கு மடலிடுங்கள்.

வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

– சந்திரமதி கந்தசாமி

(மரத்தடி யாஹூ குழும மட்டுறுத்துனர்கள் சார்பாக)

http://groups.yahoo.com/group/maraththadi

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்