அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

ஞாநி


உங்கள் கடிதத்தைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் உங்களை ஓரளவு புத்திக் கூர்மை உள்ள ஒருவராகவே இதுவரை நம்பியிருந்தேன். தன்னைத்தானே இந்த அளவுக்கு அம்பலப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.

நான் என் கட்டுரையில் உயிர்மை தொடர்பாக முன்வைத்த பிரச்சினை ஒன்றே ஒன்றுதான். வெகுஜன ஊடகங்கள் சிற்றிதழ் மதிப்பீடுகளை நீர்க்கச் செய்து சீரழிப்பது பற்றி ஆதங்கத்துடன் முதல் இதழில் தலையங்கம் எழுதிய உயிர்மை ஏடு பாய்ஸ் பற்றி ஒரு மாத காலத்துக்கு மேல் மெளனம் சாதித்து இரண்டாவது இதழில் எழுதாமல் இருந்ததற்குக் காரணம் தன் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவின் மனம் கோணக்கூடாது என்பதற்காகத் தானா ? மதிப்பீடுகள் தலையங்ககங்களுக்கு மட்டும்தானா ? இவ்வளவுதான் என் கேள்வி.

அதற்கு நேரடியாக நேர்மையாக பதில் சொல்லாமல், என்னை அவதூறு செய்கிறீர்கள். அப்படிச் செய்ததுதான் உண்மையில் நீங்கள் யார் என்பதை இப்போது காட்டிக் கொடுத்துவிட்டது.

கவிஞரே, நீங்கள் இதழியல் மாணவனாக இருந்தபோது பல்கலைக்கழக வெளியீட்டுக்கு என்னுடைய படைப்பு வேண்டும் என்று கேட்டு எழுதிய கடிதத்தில், என் படைப்பு இருந்தால்தான் வெளியீடு முழுமையும் மதிப்பும் பெறும் என்று எழுதியது நினைவிருக்கிறதா ?

நீங்கள் காலச்சுவடு இதழில் பணியாற்றியபோது என்னுடைய நேர்காணலுக்கு நேரம் கேட்டு தொலைபேசிய போதெல்லாம் நான் எவ்வளவு சிறந்த பத்திரிகையாளன் என்று நான் வெட்கப்படும் அளவுக்குக் குழைவான குரலில் நீங்கள் கொஞ்சிப் பேசியது நினைவிருக்கிறதா ?

எனக்கு எதிராக இப்போது நீங்கள் முன்வைக்கும் “முகத்தை மறைத்துக் கொண்டு நான் குஷ்புவை தொலைக்காட்சியில் பேட்டி எடுத்த” சம்பவம் நடந்தது 1992ல்.

நான் ‘அசட்டுத்தனமான இலக்கியப் பிரதிகள் “ எழுதுவதும், “இலக்கிய அபிப்ராயம் என்ற பெயரில் வறட்டுத்தனமான முற்போக்குக் கருத்துக்களை “ வெளிப்படுத்துவதும் 1974லிருந்து நடந்து வருகிறது. என்னிடம் படைப்பு கேட்டு கடிதம் எழுதியபோது ஏன் இது உங்களுக்குத் தெரியவில்லை ? காலச்சுவடு நேர்காணலில் மணிக்கணக்காக என்னிடம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றபோது ஏன் இதைப் பற்றியெல்லாம் ஒரு கேள்வி கூட நீங்கள் எழுப்பவில்லை ? என்னைப் போன்று “ ஒளிந்து வேலைசெய்யும் அசட்டு” எழுத்தாளனிடம் காலச்சுவடு நேர்காணல் செய்யக் கூடாது என்று சக ஆசிரியர் கண்ணனுக்கு ஏன் அறிவுறுத்தவில்லை ?

அப்போதும் உங்களுக்கு என்னைப் பற்றிய அபிப்ராயம் இதேதான் என்றால், அதை வெளிப்படுத்தாமல் அதற்கு நேர் எதிராக என்னிடம் குழைந்ததும் என்னைப் புகழ்ந்ததும் கலப்பிடமில்லாத கயமை அல்லவா ?

இப்போதுதான் இந்த அபிப்ராயம் என்றால் திடாரென்று எப்படி இந்த ஞானோதயம் ஏற்பட்டது ? உங்களுடைய அறச் சிக்கலை, முரண்பாட்டை நான் சுட்டிக் காட்டாமலிருந்திருந்தால், இப்போதும் கூட உங்களுக்கு என்னைப் பற்றி இந்த ஞானம் வந்திருக்காது என்பதுதானே உண்மை ? தொடர்ந்து குழைவும் புகழ்ச்சியுமாக நடித்து வந்திருப்பீர்கள்தானே ?

இனி சுஜாதா விஷயத்துக்குப் போவோம். உங்கள் சமாதானங்களில் முதல் அம்சம் – நீங்கள் பிரசுரிக்கும் எல்லா எழுத்தாளர்களின் எல்லா செயல்பாடுகள் குறித்தும் நீங்கள் கருத்து தெரிவித்துத்தான் ஆக வேண்டுமா என்பது. நான் பணியாற்றிய ஊடக நிறுவனங்களில் நான் உடன்படாத அவற்றின் செயல்பாடுகள் குறித்து நான் விமர்சனம் செய்தேனா என்பது உங்களுடைய கிளைக்கேள்வி.

நம்முடன் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள முக்கியமானவர்களின் தவறுகள் பற்றி கருத்து தெரிவிப்பது பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவரின் குறிப்பாக பத்திரிகையாளரின் கடமை. அதிலும் மதிப்பீடுகளை வலியுறுத்தி தலையயங்கம் எழுதிய நீங்கள் அதைச் செய்ய தவறியதற்குக் காரணம் பிழைப்பு வாதம்தானா என்பதே என் விமர்சனக் கேள்வி.

இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தமட்டில், நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் விகடன், தினமணி என்று பணியாற்றிய எந்த இடத்திலும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய என் விமர்சனங்களை உள்ளேயும் வைத்தவன்; பணியாற்றும் காலத்திலேயே வெளியேவும் பொது அரங்குகளில் பேசியும் எழுதியும் வந்தவன் என்பது பலரும் பரவலாக அறிந்ததுதான். அதனால் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட வேலை இழப்பு, பொருளாதார இழப்புகளைப் பொருட்படுத்தாமலே என் வாழ்க்கை இயங்கிவருகிறது என்பதையும் பலரும் அறிவர்.

கட்டப்பஞ்சாயத்துகளை ஆதரித்து தலையங்கம் எழுதியிருக்கும் நீங்கள் இப்போது கிண்டலாக கட்டப் பஞ்சாயத்து என்று வர்ணித்த ‘கதையல்ல நிஜம் ‘ நிகழ்ச்சியில் நான் ஆலோசகராக அழைக்கப்பட்டதே என் விமர்சனப்பார்வை அவர்களுக்குத் தேவை என்று கருதியதால்தான். ஓராண்டு ஒப்பந்தத்தை ஆறு மாதங்களில் முறித்து என்னை முன்கூட்டியே வேலையிலிருந்து வெளியேற்றியதும், அந்த விமர்சனப்பார்வை சேனல் நிர்வாகத்துக்கு உகப்பானதாக இருக்கவில்லை என்பதனால்தான்.

என் வாழ்க்கை திறந்த புத்தகம் என்பதையும் பலரும் அறிவர். என்னை மறைத்துக் கொண்டு, ஒளித்துக் கொண்டு ஒரு காரியத்தையும் நான் செய்ததில்லை. தொலைக்காட்சி நேர்காணல்களில் நான் பதிலளிப்பவனாக இருக்கும்போது மட்டுமே தோன்றுவேன். கேள்வி கேட்பவனாக இருக்கும்போது காமிரா முன்னால் தோன்றுவதில்லை என்பது என் முப்பதாண்டு கால நடைமுறை ; கொள்கை.

குஷ்பு மட்டுமல்ல, அசோகமித்திரன், பிரபஞ்சன் என்று பல துறையினரை பேட்டி கண்ட போதும் அப்படித்தான். நேயர்கள் நன்கு அறிந்த என் குரல் மட்டுமே ஒலிக்கும். டைட்டில் கார்டுகளில் பேட்டி கண்டவர் யார் என்பது பகிரங்கமாக அறிவிக்கப்படும். பத்திரிகையில் ஒருவரின் பேட்டியை பிரசுரிக்கும்போது எப்படி அவருடைய படத்தை வெளியிட்டு கேள்வி கேட்டவர் பெயரை அச்சில் மட்டும் வெளியிடுகிறேனோ அது போலத்தான் இதுவும்.

நான் இதுவரை பல தொழில்களில் ஈடுபட்டது போல, உங்களுடைய தொழில் பதிப்பு – பத்திரிகைத் தொழில் என்றும் அதில் எஸ். ராமகிருஷ்ணனும் சுஜாதாவும் நீங்கள் சமமாக மதிக்கும் எழுத்தாளர்கள் என்றும் சொல்லுகிறீர்கள். ( விரைவில் உயிர்மை வெளியீடாக பாபா, பாய்ஸ் திரைக்கதை வசனத்தை எதிர்பார்க்கலாமா ?)

உங்களுக்கும் எனக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் நான் ஈடுபட்டிருக்கும் எழுத்து, வீடியோ தொழில்களில் எனக்கு சம்மதமில்லாத மதிப்பீடு எதையும் நான் முன் வைப்பதில்லை ; ஆதரித்ததில்லை. எனக்கு தொழில் வேறு; மதிப்பீடுகள் வெறும் பொழுது போக்குதான் என்ற நிலை கிடையாது.

சுஜாதாவின் பாய்சும் ராமகிருஷ்னனின் பாபாவும் சமமானவை என்றால் இருவரின் ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனால் சுஜாதாவின் யவனிகாவும் ராமகிருஷ்ணனின் உப பாண்டவமும் சமமானவை என்று சுஜாதாவின் நண்பரும், ராமகிருஷ்ணனின் எதிரியும் கூட ஏற்க மாட்டார்கள். நாளைக்கு நீங்கள் புதுமைப்பித்தனை பிரசுரித்தால், அப்போது அவரும் சுஜாதாவுக்கு சமமாக நீங்கள் மதிக்கும் எழுத்தாளராக இருப்பார் என்று உணர்த்தியிருப்பதற்கு நன்றி.

தாமதமாக பாய்ஸ் பற்றி உயிர்மை எழுதியபோதும் அப்போதும் ஆதரித்துதான் எழுதியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்கூட்டி முறியடிப்பதற்காக, காலச்சுவடு இதழில் ஆசிரியர் அரவிந்தனின் கட்டுரையும் அதே போன்றதுதான் என்று அபிப்ராயம் அருளியிருக்கிறீர்கள். பாவம் கவிஞரே. ஒரே கடிதத்தில் உங்களை நீங்களே இப்படி தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.

காலச்சுவடு கட்டுரை உயிர்மைக் கட்டுரைக்கு நேர் மாறான கருத்தை உடையது என்று —- நான் சொல்லவில்லை. அதன் ஆசிரியர் அரவிந்தன் திண்ணை. காமில் எழுதிய பதிலில் மிகத் தெளிவாக தெரிவித்திருக்கிறார். உங்களுடையது பாய்ஸ் ஆதரவு நிலையில் எழுதப்பட்டது. அவருடையது எதிர்ப்பு நிிலையிலிருந்து வெகுஜன ஊடகங்களின் தார்மிக தகுதியை விமர்சித்தது.

இலக்கிய வரலாறில் எனக்கு இடம் உண்டா கிடையாதா, நான் பணியாற்ற வேண்டிய அலுவலகம் எது என்றெல்லாம் தீர்மானிக்கும் செல்ஃப் அப்பாய்ண்ட்டட் அலாட்மெண்ட் ஆஃபீசரான உங்களுக்கு, இத்தனை காலம் நீங்கள் பணியாற்றிய, உங்களுக்கு ஒரு முகவரி கொடுத்த இதழில் வந்த கட்டுரை, உங்களுக்கு நேர் எதிரான அர்த்தம் உள்ளதாகப் பட்டிருக்கிறது!

நேர் மாறான கட்டுரையை உங்களுக்கு சாதகமானதாகக் காட்ட நீங்கள் முற்பட்டார்கள் என்றால், அதை எப்படி வர்ணிப்பது ? துணிச்சலான கயமையா ? அல்லது கடைந்தெடுத்த முட்டாள்தனமா ? கட்டுரையைப் புரிந்து கொள்ளாமல் அறியாமையால் அப்படி சொல்லியிருந்தீர்களானால், அய்யோ கவிஞரே, உங்களுடைய கடைசி பிம்பமும் காலியாகிவிடுகிறதே. ஓரளவு புத்திக் கூர்மை உள்ளவர் என்ற கருத்தும் அல்லவா தவறாகிவிடும். அரவிந்தன் கட்டுரை ஒன்றும் பின் நவீனத்துவக் கட்டுரை அல்ல. என் போன்ற எளிய ‘அசட்டு ‘ எழுத்தாளர்களுக்கே புரியக்கூடியதுதான்.

துணிச்சலான கயமைதான் காரணம் என்றால், இலக்கிய வரலாற்றில் அல்ல, மானிட வரலாற்றில் உங்கள் இடம் என்ன ?

நல்ல வேளையாக ஜெயமோகன் விவகாரத்தில் கலைஞரைக் கண்டிக்கும் தலையங்கம் எழுதிவிட்டதால் கனிமொழி நட்புக்காக கலைஞரை ஆதரித்த பழி வராமல் என்னிடமிருந்து தப்பிவிட்ட சந்தோஷத்தை தெரியப்படுத்திருக்கிறீர்கள். சாரி, கவிஞரே. உங்கள் தலையங்கம் சாமர்த்தியமானது. நவீன இலக்கியத்தில் கலைஞருக்கு இடம் கிடையாது என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லுகிரீர்கள். அதை கனிமொழி மட்டுமல்ல கலைஞரும் ஏற்றுக் கொள்வார். ஏனென்றால் நவீன இலக்கியம் பற்றி அவருக்கு பெரிதாக அபிப்ராயம் கிடையாது.

இலக்கியத்திலேயே இடம் உண்டா என்பதுதான் ஜெயமோகன் கேள்வி. அதற்கு பதில் சொல்லுவதானால், பிரசார எழுத்து பற்றிய உங்கள் அபிப்ராயத்தையும் சொல்ல வேண்டி வரும் என்பதால், புத்திசாலித்தனமாக நவீன இலக்கியம் என்று வார்த்தை விளையாட்டு செய்திருக்கிறீீர்கள். கலைஞரிடமும் கெட்ட பெயர் வராமல் ஜெயமோகனையும் திருப்திப்படுத்திவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உயிர்மையில் அவர் தொடர்ந்து எழுதவேண்டுமே. ஒவ்வொரு துறையிலும் ஏற்கனவே புகழ் பெற்ற பெயர்களைக் காட்டித்தானே உயிர்மையை விற்க வேண்டும். தீம்தரிகிட போல அதிகம் அறியப்படாதவர்களின் படைப்புகளை வெளியிட்டு விற்பது உங்கள் பதிப்புத்தொழில் உத்திக்கு உதவாதே. சுஜாதாவின் யவனிகாவின் காலடியில் உங்களைக் கொண்டு போய் சேர்த்திருப்பதே இந்த உத்திதானே.

சுந்தர ராமசாமி கமல்ஹாசன் சந்திப்பு பற்றிய தகவல் நீங்கள் சொல்லுவது போல என்னுடைய இலக்கிய விமர்சனக் கட்டுரை எதிலும் இடம் பெறவில்லை. கமலின் அன்பே சிவம் படத்திற்கான விமர்சனத்தையொட்டி, அவர் இலக்கியவாதிகளைத் தன்னுடன் பணியாற்ற அழைப்பது பற்றி கேள்விகளை எழுப்பிய கட்டுரையில்தான் அது குறிப்பிடப்பட்டது. அது தெரிவிக்கப்பட்டது பற்றியோ, அது தவறென்றோ இன்று வரை சம்பந்தப்பட்ட இருவருமே மறுக்கவில்லை.

பெரும் பத்திரிகை எழுத்தாளரும் சிறு பத்திரிகை எழுத்தாளரும், அரசியல் வாதியும், பதிப்பாளரும், சினிமா நடிகரும், இலக்கியவாதியும் யாரும் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் சொல்லுவது போல என் கவலை அது பற்றியல்ல. அந்தத் தொடர்புகளுக்குப் பின்னால் இருக்கும் மதிப்பீடுகள் என்ன, உறவின் அடிப்படைகள் என்ன என்பதையே நான் கேள்வி கேட்கிறேன். தொடர்ந்து கேட்பேன்.

அப்படிக் கேட்காமல் இருந்தால் நீங்கள் தொடர்ந்து என்னை சிறந்த பத்திரிகையாளனாக அங்கீகரிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அப்போது நான் “ஒளிந்திருந்து “ பேட்டி காண்பவனாகவும் ‘அசட்டுத்தனமாகவும் வறட்டுத்தனமாகவும் “ எழுதுபவனாகவும் உங்களுக்குத் தோன்றவே தோன்றாது என்பதும் எனக்குத் தெரியும்.

ஆனால் , சாரி கவிஞரே. நான் அப்படி இருக்க முடியாது. ‘ அசட்டுத்தனமாக எழுதினாலும் அவன் ஒரு நல்ல மனிதன் “ என்று என்னை சரித்திரம் குறித்தாலே போதும். ஒன்றுமே குறிக்காவிட்டால் கூட பரவாயில்லை. “அருமையான கவிதைகள் எழுதினாலும் அவன் ஒரு அயோக்கியன்” என்ற பெயர் ஒரு போதும் எனக்கு வேண்டாம்.

இலக்கியவாதிகளுக்கு சேஸ்ட்டிடி பெல்ட் வேண்டாம் என்பதுதான் என் கருத்தும். சேஸ்ட்டிடியே வேண்டாம் என்ற நிலை உங்களுடையது. உங்கள் பிம்பங்களைக் கலைக்க நான் எதுவும் செய்யத்தேவையில்லை. மனுஷ்யபுத்திரன என்ற கவிஞன் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை மனுஷ்யபுத்திரன் என்ற பதிப்புத் தொழிலதிபர் தொடர்ந்து கலைத்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்டுவது மட்டுமே நான் செய்வது.

கடைசியாக ஒரு வேண்டுகோள். உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சன்ஸ்க்ருதி சம்மான் விருதை அடுத்த வாரம் பெறும்போது ஏற்புரையில் தயவுசெய்து அங்கேயும் மனித வாழ்வின் ஆழ்ந்த ரகசியங்களை, உன்னதங்களைஅவலங்களை மனிதனுக்கு உனர்த்தும் இலக்கியத்தின் நுட்பங்களைப் பற்றியும், அந்த நுட்பங்களுக்காக உழைப்பவர்களின் மதிப்பீடுகள் பற்றியும், அவற்றுக்கான ஊடகங்களின் கடமைகள், சிக்கல்கள் பற்றியும் கவித்துவமான நடையில் எதையும் பேசித் தொலைக்க வேண்டாம். மாறாக உங்கள் பதிப்புத் தொழில் ரகசியங்களை, உத்திகளை மேலும் விளக்கி விவரித்தீர்களானால் உங்களைப் போன்ற அடுத்த தலைமுறை இலக்கியப் போலிகளுக்கேனும் பயன்படும்.

ஏனென்றால் உங்களைப் போன்ற போலிகளும் இப்போது மதிப்பீடுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதல்ல. ஏனென்றால் உண்மையான அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் அதைப்பற்றி பேச வருபவர்களுக்கு அப்புறம் பேச சொற்களே இருக்காது. அய்யா மனுஷ்யபுத்திரரே, கொஞ்சம் சொற்களை மிச்சம் வையுங்கள்.

அன்புடன்

ஞாநி

பின்குறிப்பு: உங்களை இந்த வருட ஆரம்பத்தில் நான் மறைமுகமாக ஆதாரமும் கூச்சமும் இன்றி பினாமி என்று எழுதியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அது முற்றிலும் தவறு. இதுவரை நான் உங்களைப்பற்றி அப்படி எதுவும் எழுதியதில்லை. வேறு யாரையோ பற்றி எழுதியது உங்களுக்கு ஏன் குறுகுறுக்கிறது என்பது உளவியல் ஆய்வுக்குரிய விஷயம். உங்களை யாராவது பினாமி என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஏனென்றால் பினாமியாக இருப்பவருக்குக் கூட ஒரு ஆளுமை தேவை. அது இல்லாதவர் நீங்கள்.

(தீம்தரிகிட டிசம்பர் 2003)

(சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன – திண்ணை குழு)

Dhemtharikida@hotmail.com

தொடர்புடைய திண்ணை பக்கங்கள்

  • மனுஷ்ய புத்திரன்

    Series Navigation

  • ஞாநி

    ஞாநி