வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

மத்தளராயன்


அது என்னமோ தெரியவில்லை சமயத்தில் பாலக்காட்டுத் தமிழ் பிரச்சனையில் கொண்டு விட்டுவிடும்.

ராத்திரி முச்சூடும் தெரு முழுக்கக் கேட்கிறது போல் இருமி இருமி இளைத்துப் போன பக்கத்து வீட்டு போஸ்ட் மாஸ்டர் நாயுடுவுக்காகப் பரிதாபப்பட்டு, காலையில் வாசல் தெளித்துக் கொண்டிருந்த அவர் வீட்டம்மாவிடம் பாட்டி சொன்னது இது –

‘உங்களவர் பாவம், ராத்திரி பூராக் கொரைக்கறாரே .. வைத்யர் கிட்டே கூட்டிப் போகப்படாதா ? ‘

என் வீட்டுக்காரர் என்ன நாயா என்று அந்தம்மா கையில் துடைப்பத்தோடு எகிற, மொழி விசேஷங்களை அவளுக்குப் புரியவைத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஒரு கஷ்டம்.

இது நடந்து எத்தனையோ காலம் ஆகிவிட்டது. இதை அசை போடும் போது இந்த வருடம் லண்டன் கோர்ட்டில் மார்ச் – ஏப்ரலில் பரபரப்பாக நடந்து முடிந்த குரைப்பு கேஸ் நினைவுக்கு வருகிறது. வெள்ளைக்காரி சொல்லி, வெள்ளைக்காரன் குரைத்து, வெள்ளைக்காரன் கெலித்து, வெள்ளைக்காரர்கள் கம்பி எண்ணுகிற விவகாரம். சும்மா இல்லை. ஒரு மில்லியன் பவுண்ட். கிட்டத்தட்ட எண்பது லட்சம் ரூபாய் பெறுமானம் அதுக்கு.

எல்லாம் டி.வி பொது அறிவுப் போட்டியில் ஆரம்பித்தது. நம்ம ஊரில் அமிதாப் பச்சன் ‘அஃப்சோஸ் ஹை. கலத் ஜவாப் ‘ என்று கம்பீரமாக வருத்தப்பட்டு, சரத்குமார் ‘நான் ரெடி நீங்க ரெடியா ‘ என்று உசரமான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உற்சாகமாக விசாரித்து, அப்புறம் ஓசைப்படாமல் நின்றுபோன ‘கோன் பனேகா கரோட்பதி ‘, ‘கோடாஸ்வரன் ‘ போட்டிகளின் பாட்டனான ‘ஹூ வாண்ட்ஸ் டு பி எ மில்லியனர் ‘ தான் இந்தப் போட்டி. வழித் தோன்றல்கள் எல்லாம் ஒரு வருடம், இரண்டு வருடம் தாக்குப் பிடித்து ஜகா வாங்கிவிட்டாலும், இங்கிலாந்து ஐ.டிவியில், ஒரிஜினல் இங்கிலீஷ் பாட்டன் தொடர்ந்து வெற்றி நடைதான்.

இந்தப் போட்டியில் கெலிப்பது இங்கிலீஷ்காரர்கள் பலருடைய கனவு. இவர்களில் டயானா என்று ஒரு பெண். நிறையப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார். நான் ரெடி என்று கோடாஸ்வரி ஆக ஆர்வத்தோடு கலந்து கொண்டு கால்வாசி தூரம் வெற்றிகரமாக முன்னேறியும் வந்தார். யார் கண் பட்டதோ, முப்பத்திரெண்டாயிரம் பவுண்ட் சம்பாதித்து, அப்புறம் அடுத்த கேள்வியில் ஃபெயிலாகி ஏகப்பட்ட வருத்தத்தோடு வீீடு போய்ச் சேர்ந்தார். அது மூன்று வருடம் முன்னால். வீட்டில் சும்மா இருந்த தம்பியையும் இந்தக் கோடாஸ்வரன் வியாதி பிடிக்க, அவனும் நாலு கிணறு தாண்டி அப்பாலே தொபீல்.

தான் கோட்டை விட்டாலும், மில்லியனும் ஸ்டெர்லிங் பவுண்டாச்சே சொக்கா என்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன் புருஷன் இன்கிராமைத் தட்டி எழுப்பினார் டயானா. யோவ், நீ சரியான ஆம்பிளன்னா மில்லியன் பவுண்டோட வந்து சேர் என்று அத்தானை அரைத் தூக்கத்தில் உசுப்பிவிட, வினையே அங்கே தான் ஆரம்பம்.

இன்கிராம் பிரிட்டாஷ் படையில் ராயல் என்ஞினியர் பிரிவில் மேஜர். மாட்டை மேய்த்தோமா, கோலைப் போட்டோமா என்று நல்ல பிள்ளையாகக் காலையில் லெதர்ப்பையும் டிபன் காரியருமாகப் போய்ப் பேப்பர்க் கட்டுகளை நகர்த்திவிட்டு சாயந்திரம் ஆறு மணிக்குக் கிளம்பி மதுக்கடையில் நுழைந்து பியர் குடித்து ஏப்பம் விட்டபடி திரும்புகிறதான உபத்திரவமில்லாத வேலை.

பிரிட்டாஷ் படை போன நூற்றாண்டிலும் அதற்கு முந்தியும் உலகம் முழுக்க ஆடி அடங்கி பாக்லாண்ட் யுத்தத்தில் கொஞ்சம் அர்ஜண்டினாவோடு மோதி, அப்புறம் புஷ் கேட்டாரே என்று ஈராக்குக்கும் படையெடுத்துப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டது தவிர மற்றபடி தீயணைப்பு வீரர்கள் வேலைநிறுத்தம் செய்யும்போது ஹோஸ்பைப் வைத்துத் தண்ணீர் அடிக்க மட்டும் பழைய பச்சை மோட்டாரில் வந்து போவார்கள். தீயணைப்பு ஊழியர்கள் கிரமமாக அவ்வப்போது வேலை நிறுத்தம் செய்வதால் அவர்களுக்குக் கொஞ்சம் இன்கிரிமெண்டும், இவங்களுக்கு ஆளில்லாத கட்டிடத்தில் (யார்க்ஷையரில் விக்டோரியா ராணி காலத்துக் கட்டிடம் நிறைய இப்படி திடார் திடாரென்று பற்றிக் கொள்ளும்) தீயை அணைக்கவுமாகப் பொழுது போகும்.

தண்ணிக் குழாயை அன்னாண்டை வச்சுட்டுப் பொது அறிவுப் புத்தகத்தை நெட்டுருப் போடய்யா என்று பெண்டாட்டி விரட்ட, மேஜர் மைனராகி சர்ச்சில் என்ன பிராண்ட் சுருட்டுப் பிடித்தார், எலிசபெத் ராணியம்மா புஷ்பவதியானது எப்போது, மவுண்ட்பேட்டன் துரையின் உசரம் துல்லியமாக எத்தனை அடி, எத்தனை அங்குலம் என்கிற மாதிரி விஷயங்களை எல்லாம் கர்ம சிரத்தையாக மூளைக்குள் திணித்துக் கொள்ள உட்கார்ந்தார். அது ஏகத்துக்குக் குழம்பி சர்ச்சில் புஷ்பவதியாகி ஆறேகால் அடி சுருட்டுக் குடிப்பதில் முடிந்தது.

நீ தேற மாட்டேய்யா. மில்லியனர் என்ன, மில்லி வாங்கக் கூட உன் பொது அறிவால பிரயோஜனம் இல்லை ‘ என்று வீட்டம்மா ஒரு எகிறு எகிறி மாற்று ஏற்பாடு பற்றி யோசிக்க ஆரம்பித்தார். கணவரை மாற்ற ஏற்பாடு இல்லை அது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

அந்தம்மாவுக்கு எப்படியோ ஒரு புரபசர் பழக்கமானார். சராசரிப் பேராசிரியருக்கே மண்டை எல்லாம் மூளை இருக்கும் என்றாலும் (சரி, இந்தியாவில் இல்லை. சரவண பவான் இருக்கப்பட்ட வேறு நாடுகளில்) சராசரிக்கு மேற்பட்ட மனுஷர் இவர். முதுகில் ஒரு தட்டுத் தட்டினால், ராபர்ட் கிளைவ் இந்தியா போன வருடம், பென்சீன் அமைப்பு, எலிசபெத் டெய்லரின் நாலாவது கணவன், எறும்பு தின்னும் பிராணியின் எடை என்று ஆரம்பித்து விடுவார். அப்படி ஒரு சாம்பிராணி புத்தி. இந்த மாதிரி ஆசாமிகளுக்கே உரிய குடாக்குத் தனமும் கொஞ்சம் உண்டு. எந்த விஷயமாக என்ன கேள்வி கேட்டாலும் இந்தா பிடிச்சுக்கோ என்று பொழியும் இந்த விடையவர் பெயர் டெக்வின் விட்டக். தெற்கு யேல் பிரதேசத்தில் நிர்வாகக் கல்லூரியில் உத்தியோகம்.

டயானாப் பொண்ணு, கவலைப் படாதே. நான் இருக்கேன். உன் வீட்டுக்காரனைக் கோடாஸ்வரனாக்கிக் காட்டுறேன்.

புரபசரும் டயானாவும் வகுத்த திட்டம் கொஞ்சம் ‘அடுத்த வீட்டுப் பெண் ‘ ணில் காதலியைக் கைப்பிடிக்க டி.ஆர். ராமச்சந்திரன் வாயசைக்க, பின்னால் டணால் தங்கவேலு ‘வனிதாமணியே ‘ என்று பிபி சீனுவாஸ் குரலில் பாடியது போல – அல்லது படோஸனில், கிஷோர் குமார் பின்னால் இருந்து ‘மேரி சாம்னே வாலி கிட்கி மே ஏக் சாந்த் கா துக்டா ரஹ்தா ஹை ‘ ‘ பாட, சுனில்தத் வாயசைத்தது போல.

இந்தப் பொது அறிவுப் போட்டியின் இந்திய வடிவங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் – ஃபாஸ்டஸ்ட் ஃபிங்கர்ஸ் ஃபர்ஸ்ட் என்று முதல் சுற்றில் ஒரு கேள்வி கேட்டு, சரியான விடைக்கான பொத்தானை மின்னல் வேகத்தில் அழுத்துகிறவர்களை உசர நாற்காலியில் தூக்கி விட்டு ஏற்றி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க மீட்டர் போடுவார்கள்.

இன்கிராம் புள்ளாண்டனை எப்படியாவது அந்த ரவுண்ட் வரைக்கும் கொண்டாந்துடு ஆத்தா. அப்புறம் ரவுண்ட் கட்டி அடிக்கலாம். நான் கியாராண்டி.

புரபசர் சூளுரைக்க, மேஜர் ஆர்மி ஆப்பீசுக்கு லீவு சொல்லி விட்டுப் பியர்கடைப் பக்கம் தலைகாட்டாமல், ஆள்காட்டி விரலைச் சூப்பிக்கொண்டு வீட்டில் உட்கார, அதை நீட்டுய்யா என்று சொல்லி புரபசர் பொறுமையாக வகுப்பு எடுத்தார். இன்கிராமுக்கு நகச் சுற்று வந்த மாதிரி விரல் வீங்க, விரல் சுற்றில் கெலிக்கத் தக்க அளவு கொஞ்சூண்டு புத்திசாலியானார் இந்தக் கடுமையான பயிற்சியால்.

இனிச் சதியின் அடுத்த கட்டம். மேஜர் இன்கிராம் மகா அங்குலி யோகியாக, விரைவான விரல் சுற்றில் தேர்வு பெற்று ஒளிவிளக்குகள் வழிகாட்டிச் சுழல நிதானமாக, நிதானத்தில் நடந்து வந்து உசர நாற்காலியில் ஆரோகணிக்க, அவங்க ஊர் அமிதாப் பச்சன் கிரிஸ் டர்ரண்ட் மெஷின் கன் தட்டியது போல் கேள்வி மழை பொழிய வாய்ப்பு கூடியிருக்கும் தருணம் இது.

தஞ்சைப் பெரிய கோவில் எந்த ஊரில் இருக்கு என்று சித்தப்பா கேட்கிற கேள்வி போல் இல்லாமல் டர்ரண்ட் கேட்கிற கேள்வியெல்லாம் கிடுக்கிப்பிடித் தாக்குதல் தான். மேஜர் இந்த யுத்தத்தில் கையை உயர்த்தி விடு ஜூட் என்று வெற்றிகரமாக வாபஸ் வாங்கி விடுவார் என்பதால், புரபசர் அவருக்கு ஹை டெக் தொழில் நுட்ப உதவி வழங்கத் திட்டம் வகுத்தார்.

வேறு ஒண்ணுமில்லை. ஒவ்வொரு கேள்விக்கும் நாலு பதில். கேள்வியின் நாயகர் கிரிஸ் டர்ரண்ட் கேள்வியை உரக்கச் சொல்வார். நாலு பதிலும் திரையில் ஒளிரும். மேஜர் தேமேன்னு உட்கார்ந்திருக்க, பார்வையாளர்களின் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருக்கும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரப் ப்ரொபசர் சரியான விடையை நொடியில் கண்டுபிடித்து.

கண்டுபிடித்து ? எழுந்து நின்று சட்டசபை மாதிரி சத்தம் போட்டா விஷயத்தை வெளிப்படுத்த முடியும் ? எடு பேஜரை என்றார்கள் டயானாவும் ப்ரபசரும். என்னய்யா பேஜாரு என்று மேஜர் பார்க்க, அம்மணி விளக்கினார்.

மேஜர் வைப்ரேட்டர் மோடில், யாராவது தகவல் அனுப்பினால் அதிர்கிறது போல் தயார் செய்த ஒரு பேஜரை ஜேபியில் போட்டுக் கொண்டு நானும் ரெடி என்று கேள்விகளைச் சந்திக்க உட்கார வேண்டும். கேள்விக்கான நாலு பதிலையும் நிறுத்தி நிதானமாக மேஜர் உரக்கப் படிக்க வேண்டும். மனதில் யோசித்தபடி ஒவ்வொன்றாகச் சொல்லிப் பார்க்கிற மாதிரி இது இருக்கணும். அவர் படித்ததில் சரியான பதில் வரும்போது, கூட்டத்தில் உட்கார்ந்து இருக்கிற புரபசர் தன் பேஜரில் இருந்து சும்மாங்காச்சிக்கு பேஜர் மேஜருக்கு ஒரு செய்தி அனுப்புவார். பேஜர் அதிர்வதை வைத்து அவர் மூளையில் பொறிதட்ட, சரியான பதிலைக் கெம்பீரமாகச் சொல்வார் மேஜர் இன்கிராம்.

இதை வீட்டில் வைத்தே ஒத்திகை பார்க்க, சின்னச் சிக்கல். பேஜர் தகவல் பேஜர் சேவைக் கம்பெனிக்குப் போய் அங்கே இருந்து செய்தி போய்ச் சேர வேண்டிய பேஜரை அடையக் கிட்டத்தட்ட முக்கால் நிமிடம் பிடித்தது. ஒவ்வொரு பதிலையும் உரக்கச் சொல்வதற்கு இடையில் மேஜர் இப்படி முக்கால் நிமிடம் பொதுக்கூட்டத்தில் மைக் பிடித்ததுபோல் அருமை அண்ணன் அவர்களே, அன்புத் தம்பி அவர்களே ஸ்டைலில் இழுத்தால், ஏறக்கட்டி விட்டு எழுந்து போகச் சொல்லி விடுவார்கள்.

இது வேலைக்காகாது என்று தீர்மானமாகத் தோன்ற, டயானாம்மா புரபசரைப் பார்த்து இருமுங்க சார் என்றார்.

அவர் விஷயம் புரியாவிட்டாலும், தொண்டையில் கிச்கிச் வந்ததுபோல் நாலு தடவை இருமி வைக்க, அது போதும் என்று சொல்லி, தூரத்தில் உட்கார வைத்த இன்கிராமிடம் யோவ், வாத்தியாரு இருமினது கேக்குதா என்று விசாரிக்க, அவரும் ஓகே என்று தலையசைத்தார். பொது அறிவு வளர்ந்த காரணத்தால் அவருக்கும் திட்டம் புரிபட்டுப் போனது.

ஆக, ஹை டெக் பேஜார் சிக்னல் லொக் லொக் இருமலாக, மற்றப்படி அவர்கள் திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை. சரியான பதில் கேட்டால் புரபசர் உடனே இருமுவார். மேஜர் பதிலைத் துப்புவார். அவர் கணக்கில் வரவு ஏறும்.

டபுள் ஓகே என்று புரபசர் நாலு தடவை இருமி சம்மதம் தெரிவிக்க (ஒரு மில்லியன் கிடைத்தால் அவருக்கு இருபத்தைந்து சதவிகிதமாவது அதில் தள்ள மாட்டார்களா இன்கிராம் தம்பதியினர் ?) இன்கிராம் நாட்டில், வீட்டில், தெருவில், சந்து பொந்தில், கடை கண்ணியில் கேட்கும் ஓராயிரம் இருமலிலே உன் இருமலை நான் அறிவேன் என்று புரபசர் இருமலை மட்டும் உடனடியாகப் பிரித்தறியத் திறமை அடைந்தார்.

போட்டிக்கு அழைப்பு வந்து, மூவர் அணியில் நாலாவதாக இருமலும் ஒட்டிக் கொண்டு ஐ.டிவி தொலைக்காட்சி அரங்கில் நுழைந்தார்கள். விரல் வித்தையில் தேறிய மேஜர் மேஜைக்கு அழைக்கப்படப் பார்வையாளர்கள் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த டயானாவும், புரபசரும் ஒருத்தரை ஒருத்தர் வெற்றிப் பார்வை பார்த்தபடி கனைத்துக் கொண்டார்கள்.

டர்ரண்டின் கேள்வி மழை. ஒவ்வொன்றுக்குமான நாலு பதிலையும் எண்ணெய் தேய்த்துக் குளித்த நிதானத்தோடு மேஜர் இன்கிராம் உரக்கச் சொல்ல, சரியான நேரத்தில் புரபசரின் லொக் லொக். ஒரு தடவை புரபசருக்கே தடுமாற்றமாக, அவர் அக்கம்பக்கத்தில் கிசுகிசுத்த குரலில் விசாரித்து சரியான விடைக்காக இருமியதும் நடந்தேறியது.

மேஜர் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டே போனார் – வீட்டுக்குப் போனதும் நூறு லிட்டர் இருமல் மருந்து வாங்கி புரபசருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற நினைப்போடோ என்னமோ. பதினெட்டு கேள்வி, பதினெட்டு இருமல், பதினெட்டு சரியான பதில். மேஜர் கணக்கில் அறுபத்து நாலாயிரம் பவுண்ட் வரவு.

கடைசிக் கேள்வி – ஒண்ணு போட்டு, நூறு சைஃபர் அதற்கு அப்புறம் போட்டு வரும் எண்ணுக்கு என்ன பெயர் ?

சரியான பதில் தெரிந்த சந்தோஷத்தில் புரபசர் பாலக்காட்டானாகக் குரைக்க, இன்கிராம் ஓங்கி அடித்தார்.

இந்தா பிடி, ஒரு மில்லியன் பவுண்ட் செக்.

நிகழ்ச்சி நடத்திய டர்ரண்ட் சைஃபர் எண்ணி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த காசோலையோடு இன்கிராமும், டயானாவும் புரபசரும் கெத்தாக நடந்து வீட்டுக்குப் போக, இங்கே ஐ.டிவி ஸ்டூடியோவில் களேபரம்.

இன்னிக்கு என்ன, நிகழ்ச்சியின் போது நிறையப் பேர் மிளகாய் வத்தல் வறுக்கற மாதிரி கமறிக் கமறி இருமினாங்க என்று யாரோ கேட்க, ஆமா ஆமா என்று ரெண்டு காமராமேன் தும்ம, திரையில் எடுத்ததை ஓடவிட்டுப் பார்க்க, திடாரென்று பளிச் ஞானோதயம்.

எல்லோரும் இருமவில்லை. ஒருத்தர் மட்டும் தான் பார்வையாளர் இருக்கையில் உட்கார்ந்து உற்சாகமாக இருமித் தள்ளியிருக்கிறார். அதுவும் ஒவ்வொரு கேள்வி கேட்கப்பட்டதும். அதுவும் சரியான பதில் வரும்போது.

பார்வையாளர் பகுதியில் எடுத்த படப்பிடிப்பு பகுதியை மெல்ல நகரும்படி இன்னொரு தடவை போட்டுப் பார்க்க, இருமல் ராஜா புரபசர். கொஞ்ச தூரத்தில் அவர் சரியான நேரத்தில் இரும வேண்டுமே என்ற கவலையோடு அவரையே பார்த்தபடி நகத்தைக் கடிக்கும் டயானா.

ம்ம்மாட்டிக்கிட்டாங்க என்று ஐ.டிவி போலீசுக்குப் பிராது கொடுத்து, இன்கிராம் வீட்டுக்கு ஆளனுப்பிச் செக்கைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டது.

இந்த மார்ச் – ஏப்ரலில் கேஸ் நடந்தபோது இங்கிலாந்தே இருமிக்கொண்டும் தும்மிக் கொண்டும் வழக்கைத் தொடர்ந்து கவனித்தது.

எனக்கு தூசி அலர்ஜி. அதான் இருமினேன் என்றார் புரபசர். அது ஏன்யா ஒவ்வொரு சரியான பதிலுக்கும் அலர்ஜி என்று கேட்க தற்செயலா நடந்துச்சுப்பா என்றார் அவர். இந்தப் புத்திசாலி இன்னொரு அதிபுத்திசாலிக் காரியமும் செய்தார். இன்கிராம் பரிசு வென்றதற்கு அடுத்த ரவுண்ட் போட்டி திரும்ப ஆரம்பமானபோது புரபசர் விரைவு விரல் சுற்றில் கலந்து கொண்டு கெலித்து மேடைக்குப் போய் இருமல் இல்லாது நாலு பதில் சொல்லி ஐந்தாவதில் தோற்று வெளியே வந்தார்.

நீங்க பதில் சொல்லும்போது ஏன் இருமவே இல்லே என்று நீதிபதி கேட்க, நடுவிலே நெறையத் தண்ணி குடிச்சேன் சார். இருமல் போயே போச்சு என்றார் புரபசர். நீதிபதியோ, ஜூரர்களோ நம்பத் தயாரில்லை.

இரண்டு மாதம் நடந்தது வழக்கு. அதை ஒருதடவை ஒத்தி வைத்தார் நீதிபதி. நீதிமன்றத்தில் தொடர்ந்து இருமல் சதி பற்றிக் கேட்டுக் கேட்டோ அல்லது ஜலதோஷம், தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டோ நடுவர்களும் வக்கீல்களும் நீதிபதியும் கூட இருமத் தொடங்கிய நாள் அது.

இந்த ஏப்ரலில் வழக்கு முடிவு வெளியானது. இன்கிராம், அவருடைய கூட்டுக் களாவாணிகளான புரபசர், இன்கிராம் மனைவி டயானா எல்லோரும் அபராதம் கட்டிவிட்டுக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் தற்போது. புரபசருக்கும், இன்கிராமுக்கும் கல்லூரி வேலையும், ஆர்மி வேலையும் காலி.

இருமி வென்ற இந்த ஷோவை அது ஒளிப்பதிவான 2001ம் வருடம் செப்டம்பரில் ஐ.டிவி ஒளிபரப்பவில்லை. வழக்கு முடிவு வந்த ஏப்ரல் 2003ல் நேரம் பார்த்து ஏகப்பட்ட விளம்பரம் முன் கூட்டியே கிரமமாகச் செய்து ஒளிபரப்ப, கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் அதைப் பார்த்தார்கள் அன்றைக்கு – அப்போது மும்முரமாக நடைபெற்ற ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கூட மறந்து விட்டு. அந்த நிகழ்ச்சிக்கு விளம்பர இடைவேளை விற்ற வகையில் ஈ.டிவிக்கு பல மில்லியன் டாலர் லாபம்.

ஆக, கடைசியில் மல்ட்டி மில்லியனர் ஆனவர்கள் – அ) இன்கிராம். ஆ) டயானா. இ) புரபசர். ஈ) ஐ.டிவி.

இருமலோடு ஈஈஈஈஈஈஈஈ தான் இதற்கு பதில்.

அது இருக்கட்டும். இன்கிராம் சில மணி நேரக் கோடாசுவரன் ஆகக் காரணமாக இருந்த கேள்வி – ஒன்று போட்டு நூறு சைஃபர் அதற்குப் பின்னால் வரும் எண்ணுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் ?

சரியான விடையை முதலில் எழுதுகிறவர்களுக்கு ஒரு பாட்டில் கிளைகோடின் பரிசாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்.

******************************************************************8

‘உயிரெழுத்து ‘ இணையக்குழுவின் சார்பில் நடத்திய கலந்துரையாடலின்போது, எனக்கு ஏற்கனவே பரிச்சயமான கவிஞர் இலந்தை ராமசாமியைச் சந்தித்து உரையாட வாய்ப்புக் கிடைத்தது.

இலந்தையார் கவிதைச் சுரங்கம் என்பதோடு தகவல் சுரங்கமும் கூட. தொலைபேசித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவரோடு கூட்டம் நடப்பதற்கு முன்னால் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன சேதி இது –

சென்னை, தில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 1830-லேயே தந்தி சேவை வந்துவிட்டது. சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் போகும் வழியில் (பூந்தமல்லியில்) ஒரு பழைய கட்டிடம் இருக்கிறதாம். அதன் சுவரில் ஒரு பெரிய துளை ஒன்று காணப்படும். சென்னைக்கு வந்த முதல் தந்திக் கம்பி அது வழியாகத்தான் நீண்டு போயிருக்கிறது!

முதலாம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைத் தென்னிந்தியாவில் (குறிப்பாகத் தமிழ்நாடு) பரவாமல் நசுக்க ஆங்கிலேய அரசுக்குத் தந்திச் சேவை உறுதுணையாக இருந்ததாம்.

‘இந்தத் தந்திச் சேவை இல்லாவிட்டால், ஆங்கிலேயர்கள் முதல் சுதந்திரப் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது ‘ என்ற வகையில் ஒரு வெள்ளைக்காரன் எழுதியதாகச் சொன்னார் இலந்தையார்.

எந்தத் தொழில் நுட்பமும் அது தோன்றியதுமே இந்தியாவில் அறிமுகமாக வேண்டும் என்று விரும்புகிற நானும் அவரோடு சேர்ந்து நினைக்கிறேன் – தந்தி கொஞ்சம் லேட்டா வந்திருக்கக் கூடாதா ?

***************************************************************************

நரமாமிசம் சாப்பிடும் ஒரு ஜெர்மனிக்காரன் மனம் திருந்தி – வேறு என்ன – வாழ்க்கை வரலாறு எழுதப்

போகிறானாம்.

அவன் சாப்பிட வசதியாக இண்டர்நெட்டில் யாரோ பழக்கமாகி, நான் இருக்கேன்யா சாப்பிடு என்று வலிய

வந்து கட்டைவிரலைக் கடிக்கக் கொடுத்தார்களாம். (இணையத்தை எது எதுக்குத்தான் உபயோகிப்பதென்று வி

வஸ்தை இல்லாமல் போயிடுச்சு).

நன்றிங்க என்று சொல்லி அடித்துச் சாப்பிடும்போது வீடியோ எடுத்து வைத்த ஹை டெக் காட்டுமிராண்டி இந்த

ஆள். இவனைப் போல் ஜெர்மனியில் இன்னும் 800 பேர் இருக்கிறார்களாம். எத்தனை பேர் இதில்

இண்டெர்நெட்டில் விருந்துக்கு வாறீங்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ.

இந்து பத்திரிகையில் இது பற்றி வந்த கட்டுரை இப்படி முடிகிறது –

‘Technically, cannibalism itself is not illegal under German law ‘.

ஒவ்வொன்றுக்கும் பார்த்துப் பார்த்து சட்டம் இயற்றிக் கொண்டிருக்க முடியுமா என்ன ?

****************************************************************************

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்