ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

பி.கே. சிவகுமார்


1.) ‘அவர் தன்னுடைய வேளாளச்சாதிய அடையாளத்தை வாஷிங்டன் வந்த பொழுது வெளிப்படையாக பிரகடணப் படுத்தியிருக்கிறார். ‘ என்று ஜெயகாந்தனைப் பற்றிய பொய்யான தகவலை எழுதிவிட்டு, பின்னர் ஜெயகாந்தன் அப்படியெல்லாம் பேசவில்லை என்று வாஷிங்டனில் ஜெயகாந்தனுடன் இருந்த ஸ்ரீகாந்த் மீனாட்சி எழுதியதும், தான் அப்படி எழுதியது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று ஒப்புக்கொள்கிற சங்கரபாண்டி அவர்கள் நான் எழுதுவதை விஷமத்தனம் என்று சொல்வது விந்தை. அவர் எழுதிய பொய்யான தகவல் குறித்து சங்கரபாண்டி வருத்தம் தெரிவிக்கிற நாகரீகம் கூட கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் நீங்கள் பிராமணரா என்று கேட்ட கேள்விக்கு இல்லை என்று ஜெயகாந்தன் அளித்த பதில் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. எனவே, நான் பிராமணர் இல்லை என்று ஜெயகாந்தன் பிறிதொரு நேரத்தில் சொன்னதை வைத்து அவரை ஜாதி வட்டத்துக்குள் அடைக்கிற முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை. இன்னும் சிலர் கேட்பதுபோல் உங்களுடைய ஜாதி என்னவென்று கேட்பவருக்கு அதைக் கேட்பது கேவலமாகத் தெரியாதபோது, அதற்கு நேர்மையான மற்றும் உண்மையான பதிலை கேட்கப்பட்டவர் அளிக்கக் கூடுமென்று வைத்துக் கொண்டாலும் அது எப்படித் தவறாகும் ?

2.) சங்கரபாண்டியின் கவிதையை மேற்கோள் காட்டியபோதும், ‘சோனியாகாந்திக்கெல்லாம் ‘ என்று பேசுகிற போக்கு எத்தகைய மனோபாவம் என்று கேள்வி கேட்டபோதும் நான் அவற்றைத் தக்க உதாரணங்களோடும், ஆதாரம் காட்டக்கூடிய மேற்கோள்களுடனும், தர்க்கரீதியான காரணங்களுடனுமே செய்தேன். ஆனால், ரப்ரிதேவி முதல்வராய் ஆனபோது நான் எப்படி எதிர்த்து துள்ளி குதித்திருப்பேன் என்று தன் கற்பனை வளத்தை அள்ளிவிடுகிறார் அவர். ஜெயகாந்தன் என்ற முகமூடி அணிந்திருந்ததாகவும், பெண்ணாதிக்கத்தை ( ? ஆமாம். சங்கரபாண்டி ‘பெண்ணாதிக்கம் ‘ என்றே எழுதியிருக்கிறார்!) ஒழிக்க வந்த மகாத்மா என்றும் நான் பெருமையாகச் சொல்லிக் கொள்வதாகவும் வேறு எழுதியுள்ளார். கற்பனையின் அடிப்படையில் மற்றவர்களின் யோக்கியதையை கேள்விக்குரிதாக்குபவர்தான் சங்கரபாண்டி என்பதை அவரின் ஜெயகாந்தனின் ஜாதிய அடையாளம் என்கிற கருத்தின் மூலமே தெளிவாக அறிந்திருக்கிறபடியால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துகிறேன்.

3.) யார் எந்தக் கருத்துச் சொன்னாலும், கருத்து சொல்பவரின் தகுதியைக் கேள்வி கேட்கிற மனப்பான்மை ஜாதிய மேலாதிக்க மனப்பான்மையேயாகும். இதுதான் காலங்காலமாக இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களை பேசக்கூடாது என்றும், கேள்வி கேட்க அவர்களுக்கு யோக்கியதை இல்லை என்றும் சொல்லி அழுத்தி வைத்திருந்தது; இன்னமும் பரவலாக அழுத்தி வைத்திருக்கிறது. எனவே, அண்ணாதுரை பற்றி ஜெயகாந்தன் பேசியபோது, அந்தக் கருத்துகள் உண்மையா இல்லையா என்று எதிர்வினை புரியாமல், ஜெயகாந்தன் யார் தெரியுமா என்று ஜெயகாந்தனைப் பற்றிய பொய்யான தகவல் தந்து பெயிண்ட் அடிக்கிற வேலையில் சங்கரபாண்டி இறங்கியதால், அவர் கருத்துப்படி, அவர்மீது உண்மையான ஆதாரங்களுடன் மற்றவர்களும் பெயிண்ட் அடிக்கிற வாய்ப்பிருக்கிறது என்பதையே நான் சுட்டிக் காட்டினேன். அந்தச் சுட்டிக்காட்டலையே நான் அவரை தேசத்துரோகி என்று சொன்னதாக அர்த்தப்படுத்திக் கொள்கிற உரிமை அவருக்கு இருக்குமானால், ஜெயகாந்தன் பற்றி வேண்டுமென்றே பொய்யை எழுதுகிறார் என்று நானும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா ?

4.) எதையெடுத்தாலும் ஏன் சாதீய அடிப்படையில் அலசுகிறீர்கள் என்று சங்கரபாண்டியிடம் அவர் நண்பர் கேட்டதில் இருந்து பிறருக்கும் சங்கரபாண்டியிடம் என்னைப்போலவே கேள்விகள் இருக்கின்றன என்பதும் தெரிகிறது. நண்பரின் அந்தக் கேள்வியை அப்படியே பகிர்ந்து கொண்ட சங்கரபாண்டியின் நேர்மையைப் பாராட்டுவோம். எல்லாப் பிரச்னைகளையும் ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணத்தால் அளக்க முயல்வது சங்கரபாண்டியே. அதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவர் புதிய மனு அவதாரம் எடுத்து ‘வர்ணாசிரம தர அளவுகோல் வைத்திருக்கிறேன் ‘ என்று எனக்குப் பூணூல் போட்டுப் பார்க்க விரும்புவது வேடிக்கை. பிராமணீயத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இப்படி மற்றவர்க்குப் பூணூல் போட்டு அழகு பார்க்கும் வாய்ப்பிற்குக் காத்திருப்பது எத்தகைய பகுத்தறிவு வாதமோ ?

5.) சங்கரபாண்டியின் கவிதை தமிழோவியம் இணையதளத்தில் ஏற்கனவே உள்ளது. அதை மறைக்கிற அவசியம் ஏதும் எனக்கு இல்லை. திண்ணை அதை மறுபிரசுரம் செய்ய விரும்பினால் எனக்கு பிரச்னையும் இல்லை.. என் கடந்த வாரக் கடிதத்தின் இறுதியில் கூட, பின்குறிப்பாக இக்கடிதத்தில் வரும் கவிதை வரிகள் தமிழோவியம் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்றே சேர்த்திருந்தேன். திண்ணை ஆசிரியர் குழுவுக்கு என்னுடைய பின் குறிப்பையும், சங்கரபாண்டியின் முழுக்கவிதையையும் பிரசுரிக்காமல் போக தகுதியான காரணங்கள் இருந்திருக்குமேயானால், அதையும் சங்கரபாண்டி விஷமத்தனம் என்று அழைப்பாரா என்று அறிய ஆவல்.

6.) எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாததால் சோனியாகாந்தி பிரதமராகத் தகுதியில்லை என்று சொல்வதும் மேலாதிக்க மனப்பான்மையே. படிப்பறிவோ பட்டறிவோ இல்லை என்பதற்காக ஜனநாயகத்தில் ஒருவரின் உரிமைகளை மறுப்பது எப்படிச் சரியாகும் ? எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதே சமத்துவமாகும். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட ‘அனுபவம் இல்லை ‘ என்கிற விமர்சனம் அரசாங்கப் பதவிக்கு வருபவர்கள்மீது வைக்கப்படும்போது அது எடுபடுவதில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷீக்கு வெளிவிவகாரத்துறையில் அறிவு இல்லை என்றும், வெளிநாட்டுத் தலைவர்களின் பெயரைக் கூட அவருக்குச் சரியாக உச்சரிக்கத் தெரியாது என்றும் எழுந்த விமர்சனங்களை மீறி அவர் வென்றார். இப்போது கலிபோர்னியாவில் வெற்றிபெற்று கவர்னராயிருக்கும் ஆர்னால்ட் ஷிவர்ச்சநேகர் எந்த வித மக்கள் பதவியும் முன்னர் வகிக்காமல் ஹாலிவுட்டிலிருந்து வந்து தேர்தலில் வெற்றி பெற்று கவர்னராயிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், இத்தகைய பதவிகளுக்கு வருகிற எவருக்கும் எதுவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே. பதவிக்கு வந்தபின், அவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்க உதவ அத்துறை நிபுணர்களை நிரந்தர அல்லது அவ்வப்போதைய ஆலோசகர்களாக வைத்துக் கொள்ள முடியும். இத்தகைய ஆலோசகர்களாக அரசுப் பணியில் இருப்பவர்கள் (இந்தியாவில் இந்திய ஆட்சி பணித்துறை முதலிய அலுவலர்கள்) மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனாலேயே, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு வாக்குரிமை இருப்பதுபோல, அரசு உயர்பதவிகளையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு அப்பால் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் அனுபவிக்கிற உரிமையையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆதலால், படித்தவர்க்கு மட்டும் வோட்டுரிமை, அனுபவம் உள்ளவர்க்கே அரசாளும் திறமை என்கிற கோஷங்கள் எல்லாம் சுரண்டலும் ஆதிக்கமும் செலுத்தும் மனப்பான்மையுமேயாகும். ‘அவர் கொள்கைகள் சரியில்லை, அவர் ஊழல் செய்பவர், நேர்மையானவர் இல்லை, அவர் கட்சி சரியில்லை ‘ என்ற ரீதியில் ஒருவரை எதிர்க்கலாம். ஆனால், ‘அவருக்கு அனுபவம் இல்லை ‘ என்கிற வாதத்தை ‘தலித்திய ஆதரவாளரென ‘ சொல்லிக் கொள்ளும் சங்கரபாண்டி வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

7.) சங்கரபாண்டியின் நண்பர் என்று நான் சுந்தரமூர்த்தி பற்றிப் பொய் சொல்லியிருந்தால் மட்டுமே அவர் என்னைக் கோபிக்க இயலும். அறிவியல் கட்டுரையையொன்றை அவர்கள் இருவரும் இணைந்து எழுதியதால் நான் அதைச் சொன்னேன். வேறெந்த நோக்கமும் அதற்கு இல்லை. இந்திராவின் மரணத்தை அண்ணாதுரையின் மரணத்துடன் ஒப்பிடுவது தவறு என்று மட்டுமே நான் எழுதினேன். ஆனால், இந்திராவின் மரணத்தை மகாத்மா காந்தியின் மரணத்துடன் ஒப்பிட்டு என் கருத்தை மறந்துவிட்டு பதில் எழுதியிருக்கிறார் சுந்தரமூர்த்தி. அதைப் படிக்கும்போது, சில வாசகர்களுக்கு உண்டாகக்கூடிய இயல்பான ஞாபக மறதி புலப்படுவதால், சங்கரபாண்டியின் நண்பர் என்று நான் நினைவுபடுத்தியது சரியே என்று நினைக்கிறேன். மேலும் அன்பர் சுந்தரமூர்த்தி எழுப்பிய இந்திரா மரணத்திற்குப் பின்னான வன்முறை அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது; ஜெயகாந்தனும் அதையே சொல்வார் என்பதை நான் சென்றவாரமே தெளிவுபடுத்திவிட்டேன். மேலும், அந்த வன்முறையை காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சொல்லப் போனால், அந்த வன்முறை ஒரு சாபமாக, கறையாக காங்கிரஸை உறுத்தியே வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

8.) ‘நான் ஒரு நாத்திகன். ஆனால் ஹிந்து. ஆத்திகர்களைப் பழிக்கிற நாத்திகன் இல்லை ‘ என்று தொடங்கி, ‘ஹிந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று யாரும் முன்வராதீர்கள். அதுதான் நம்மைக் காப்பாற்றுகிறது. ராமன், கிருஷ்ணன், பகவத் கீதையைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வது என்ன ஆன்மீகம் ‘ என்று கேள்வியெழுப்பி கவிஞர் வாலியின் புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன் பேசிய பேச்சின் சுருக்கம் தினமணியில் செப்டம்பர் 18, 2003 அன்று வெளியாகியிருக்கிறது. அதிலிருந்து கடைசி இரண்டு பத்திகளை மேற்கோள் காட்டி ஜெயகாந்தனுக்கு இந்துத்துவத்தை விமர்சிக்கத் தைரியம் இல்லையா என்று கேட்கிறார் சங்கரபாண்டி. துறவு, ஆன்மீகம் ஆகியவை பற்றியெல்லாம் ஜெயகாந்தனுக்கு இருக்கிற கருத்துகளை அவர் படைப்புகளின் மூலம் அறியவில்லை போலும். (இப்படி எடுத்துக் காட்டினால், உடனே எனக்கு மமதை என்ற பட்டம் கிடைக்கும். பரவாயில்லை!) ‘எப்போதும் துறவிகளின் பால் ஓர் ஈர்ப்பும், அதே சமயம் துறவு குறித்து ஒருவகைப் பயமும் வளர்ந்தே ‘ வந்துள்ளதாக ஜெயகாந்தன் அவர் எழுத்துகளில் ஆரம்பம் முதல் பதிவு செய்திருக்கிறார். அவரின் ஜயஜய சங்கர, விழுதுகள் போன்ற படைப்புகளில் அவர் துறவின் பாலும், ஆன்மீகத்தின் பாலும் கொண்டிருக்கிற அபிமானத்தை – ஆன்மீகம் மற்றும் துறவின் மூலம் சமூகம் எப்படி மேன்மையடைலாம் என்கிற அவரின் நம்பிக்கையை – அறியலாம். ‘ஆன்மீகம் இல்லாத அரசியல் என்னென்ன அவலங்களை உருவாக்கும் என்று காட்டுவதற்கு ஒருவன் கதை எழுத வேண்டியதில்லை. இந்தக் காலத்தின் நிகழ்ச்சிகளை மானுடக் கண் கொண்டு பார்த்தால் போதும் ‘ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ஜயஜய சங்கர நாவலின் பின்னுரையில் எழுதியவர் ஜெயகாந்தன். எனவே, ‘ஆன்மீகவாதிகள் அரசியலுக்கு வரவேண்டும் ‘ என்று அவர் சொன்னது எதுவும் புதிதில்லை. ஆனால், ஆன்மீகம் என்கிற பதத்தையே இந்துத்துவா என்று வரையறுக்கிற சங்கரபாண்டிக்கு இதை எப்படிப் புரியவைப்பது ? ஆன்மீகமும் துறவும் பா.ஜ.க. பேசுகிற இந்துத்துவ வாதமென்றால், பா.ஜ.க.வுடன் சேர்ந்து நாளைக்கு விவேகானந்தரைக் கூட சங்கரபாண்டி போன்றோர் இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

‘இந்தியாவின் வளமான மரபுகளில் ஒன்று ஆன்மீகம். விவேகானந்தரையும் பாரதியையும் பலநூறுமுறை போற்றிக் கொண்டாடுபவர் ஜெயகாந்தன். எல்லா உயிர்களும் பிரம்மத்தின் வடிவங்கள் என்கிற அத்வைத தரிசனத்தைப் பொருளியலுக்குள் நகர்த்தும்போது அது சோஷலிஸ தரிசனமாகிறது. விவேகானந்தரும் பாரதியும் இத்தகைய சோஷலிஸ தரிசனம் கண்டவர்கள். இந்தியாவின் இந்த ஆன்மீகம் சோஷலிஸ உணர்வைக் கிளறுவதன் மூலம் மார்க்ஸியத்துக்கு மரபின் உரமாக வந்து சேரக் கூடியது. மரபின் செறிதலில்தான் மார்க்ஸியம் வளம்பெறும் என உண்மையைக் கண்டு சொன்னவர் லெனின் ‘ என்று மார்க்ஸிய திறனாய்வாளர் கோவை ஞானி எழுதியதை இங்கே குறிப்பிட வேண்டும். இதன் மூலம், மார்க்ஸியத்தைப் பற்றி நிஜமாக அறிந்தவர்களுக்கு ஆன்மீகம் இந்தியாவின் வளமான மரபு என்கிற ஞானம் இருப்பதையும், மரபின் மூலம் மார்க்ஸியம் வளம் பெற இயலும் என்று லெனினைப் போல் அவர்கள் நம்புவதையும் காண்கிறோம்.

9.) காந்தி மகாத்மாவிற்குத் தகுதி பெறுவதையும், நேரு பண்டிட்டிற்குத் தகுதி பெறுவதையும் சுலபமாக நிறுவ இயலும். அண்ணாதுரை பேரறிஞருக்கு எப்படித் தகுதி பெறுகிறார் என்று சொல்லமுடியுமா என்கிற கேள்விக்கு (PS நரேந்திரனும் அவர் கட்டுரையில் இதே கேள்வியை எனக்கு முன் எழுப்பியிருந்தார்.) இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை.

10.) இன்னொரு கோணம் காட்டுகிறது என்றும் விவாதத்திற்கு உரியது என்றும் நான் நம்புகிறவற்றை மட்டுமே நான் தட்டச்சு செய்துதரமுடியும் என்று எழுதினேன். என்னுடைய எதிர்வினை காட்டமாக இருப்பதாகவும் அதனால் என்னுடைய கோணம் தெரிகிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார் சுந்தரமூர்த்தி. நான் எதிர்வினை புரியமாட்டேன் என்று சொல்லவில்லையே. விவாதத்தில் அனல் பறக்கலாம்; ஆனால் அநாகரீகம் இருக்கக் கூடாது என்பது என் நிலை. என் எதிர்வினையில் எங்கேனும் அநாகரீகம் இருப்பதாக உணர்ந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். பதில் சொல்கிறேன்.

11.) அண்ணாதுரை அறிஞரா இல்லையா, தமிழ் இலக்கியத்தில் அவர் பங்களிப்பு இரவலா இல்லையா, அவர் கொள்கைகள் சரியா இல்லையா என்கிற ஜெயகாந்தனின் கேள்விகளுக்கு இருசாராரும் பதில் சொல்கிற கருத்துபூர்வமான விவாதமாக இது அமையும் என்கிற எதிர்பார்ப்பு முழுமையும் நிறைவேறாது போனது குறித்து வருத்தமே. அண்ணாதுரையைப் பற்றித் தொடர்ந்திருக்க வேண்டிய இவ்விவாதத்தை ஜெயகாந்தன், சிவகுமார் என்று திசைதிருப்பியது நிச்சயம் அன்பர்கள் சங்கரபாண்டி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு வெற்றியே. விவாதச் சூழல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் என்று தங்களின் எழுத்துகள் மூலம் எடுத்துக் காட்டி, அதை நான் அறிய உதவிய அவர்களுக்கு நன்றி.

pksivakumar@att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்