கடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue


(திண்ணையின் தொல்லையால்) பாய்ஸ் படத்தைப் பார்த்தேன்.

படத்துக்கு A சான்றிதழ் வாங்கியிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. A பெற்றிருக்க வேண்டியமைக்குக் காரணமாக இருக்கும் மிகச்சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கிவிட்டு வேறு சிலவற்றை மாற்றி அமைத்திருந்தால் படத்தின் கதைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்பட்டிருக்காது. ஆனால் என்ன செய்ய! தங்களுடையது வலுவான கதை இல்லை என்பதை நன்கு அறிந்த வியாபாரிகள் இப்படிப்பட்ட குறுக்கு வழியையும் கணினி மென்பொருள்களையும் நம்ப வேண்டியிருக்கிறது. விலங்குகளை நம்பி தேவர் படம் தயாரித்தது போலச் சங்கருக்குக் கணினியும் வயதுக்கோளாறும் துணை அவ்வளவுதான்.

திண்ணையில் பலரும் சீறிப்பாயும் அளவுக்கு இது மோசமான ஆபாசப்படமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்ப்படங்களுக்கும் தமிழ் வாழ்வுக்கும் எந்தக் காலத்திலும் தொடர்பு இருந்ததில்லை என்னும் நியதியைப் பின்பற்றி வந்திருக்கும் மற்றொரு மட்டமான, அரைத்த மாவை அரைக்கிற, மிகச் சாதாரண, கதையில் எந்த விதத்திலும் தனித்துவமற்ற, பத்தோடு பதினொன்றாக மறக்கப்படும் ஒரு படம் இது.

பழைய படங்களில் சாவித்திரி, தேவிகா, பத்மினி போன்ற நடிகைகள் தங்கள் ஒரு மார்பின் நுனியில் நிற்கும்படி வெகு கவனமாகச் சேலை அணிந்திருப்பதை இப்போது பார்த்தாலும் அருவருப்பாக இருக்கிறது. எம்ஜியாரின் பிற்காலப் படங்களில் உள்ள ஆபாசத்துக்கு இணையே இல்லை. இக்காலப் படங்களின் பாடற்காட்சிகளில் காதலன் காதலியின் மார்புக்கு நடுவில் தன் முகத்தை வைத்துத் தேய்ப்பதையும், கைகளை உள்ளே நுழைப்பதைப் போலப் பாவனை காட்டுவதையும், வளியிடை நுழையாத அளவுக்கு இருவரும் இறுக அணைப்பதையும், மோதிக்கொள்வதையும் ஒப்பு நோக்க பாய்ஸ் படத்துக்குக் ‘குழந்தைகள்’ என்ற பெயர்தான் பொருத்தமானது.

***

ஐந்து பெண்களுடனும் பயணம் செல்ல எங்கிருந்து கிடைத்தன மோட்டார் சைக்கிள்கள் ?

தங்கள் மகன் காவல்நிலையத்தில் ஓரிவைக் கழித்தது (உதை வாங்கியது); நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது; பிறகு சிறையில் ஒரு நாளைக் கழித்தது எதுவும் பெற்றோருக்குத் தெரியாது.

பத்துப் பெற்றோரும் தம் (ஒரே!) பிள்ளைகளுடன் ஒன்றாகக் கூடி விவாதிக்கிறார்கள். ஆனால் எதற்காகக் கூடுகிறோம் என்பது அரிணியின் பெற்றோருக்குத் தெரியவே தெரியவில்லை. கூடிப் பேச்சை ஆரம்பிக்கும் போதுதான் விவரம் தெரிகிறது. முன்பின் தெரியாத ஒரு ஒன்பது பெற்றோர் நம் வீட்டுக்கு வந்து கலந்துரையாடுவதெல்லாம் சாதாரணம் பாருங்கள்!

கூடிப் பேசும்போது காதலர்கள் படிப்பே முக்கியம் என்று முடிவு செய்கிறார்கள். பிறகு ஏன் சந்திக்க முயல்கிறார்கள் ? அமெரிக்கக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்கும் இவர்கள் தொடர்புகொள்ள மின்னஞ்சல், கைத்தொலைபேசி, குறுந்தகவல், தோழியர், அல்லது பழைய அஞ்சலட்டை எதையுமே முயன்று பார்க்க மாட்டார்களா ?

தன் மகள் வகுப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வருவாள், அப்போது முன்னாவும் வந்து நிற்பான் என்பது அரிணியின் அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தயாராக வந்து நிற்கிறார். இதுபோலவே முன்னா வகுப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வருவான் என்பதும் தீவிரவாதிகளுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. தயாராக நிற்கிறார்கள்.

வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மற்ற நான்கு பெண்களும் இவர்களுடன் தொடர்புகொள்ள முயலவில்லையே ஏன் ?

செந்திலின் ‘இன்பர்மேசன்’ ஒரு பூச்சுற்றல் என்றால் விளையாட்டரங்கில் பாடுவது பார்வையாளர்களை முட்டாள்களாகக் கருதும் அசட்டுத் தனத்தின் உச்சம்.

கோயில் சாப்பாடு பற்றிய வசனங்கள் சுஜாதாவின் கிரீடத்தில் சூட்டப்பட்ட வைரக்கற்கள்.

ஐம்பதாயிரம் கொடுத்துப் பாட்டெழுதச் சொல்லும் அளவுக்குத் தெரு நாடகம் போடும் தீவிரவாதிகளிடம் பணம் விளையாடுகிறது.

போராட்டங்களைப் பற்றி அறியாத ஒருவனால் அதைப்பற்றி உணர்ச்சிகரமாகப் பாட்டெழுத இயலுமா ?

இறுதியில் வரும் நீதிமன்றக் காட்சிகள் கணேஷ், வசந்தைப் படைத்த சுஜாதாவுக்கு மேலும் புகழ் சேர்ப்பவை.

சோகத்துக்கு ஒரு மரணம், விவேக் சிவாஜியைப் போல் பாவனை காட்டுவதற்கென்று இரண்டு காட்சிகள் இவையும் உண்டு.

***

அரிணியின் பின்னணிக்குரல் வழக்கமான குரல் இல்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். வாய்தாவுக்கான விளக்கத்தைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

இவ்வளவு கவனத்தை ஈர்ப்பதற்கான தகுதி இந்தப் படத்துக்கில்லை. கவனம் கிடைத்ததால் வெற்றிபெற்றவர்கள் சுஜாதாவும், சங்கருமே.

janaparimalam@yahoo.com


ஷங்கர நாராயணனின் கவிதையில் இருந்த கிண்டல் அருமை. மொழியின் நார்களை உருவி உருவி கவிதைக்கூடு கட்டும் புகாரிக்கு என் வாழ்த்துக்கள். கவிதையே ஆசான். சரி. யாருடைய கவிதைகள் ?

பா.சத்தியமோகவின் ‘அயர்ன்பாக்ஸ் எறும்புகள் ‘ இந்த வார திண்ணையின் சிறந்த சின்ன கவிதை என்று சொல்லலாம். ஒரு அற்புதமான படிமத்தில் ஒரு நாட்டின் துயரமே தரப்பட்டுவிட்டது.

அருண்பிரசாத்தின் ‘திறவி ‘ கவிதை ஒரு கவிதா அழகுடன் இருக்கிறது. ‘துக்கக் கழுகு ‘ என்பதுபோன்ற படிமங்கள் மனதில் நிற்கின்றன. திறவி என்றால் என்ன ?

சிங்கப்பூர் நெப்போலியனின் ‘மனித வெடிகுண்டு ‘ கவிதையின் கடைசிவரிகளில் உள்ள உண்மையை மனிதவெடிகுண்டுகள் சிந்திக்க வேண்டும். ஆனால் அது கவிதை படிக்கின்ற மனித வெடிகுண்டாகவும் இருக்க வேண்டுமே ?

அன்னை தெரசா பற்றிய நீண்ட கவிதை அற்புதமாக இருந்தது. தாமரை, பங்கு, புதிய, பழைய ஏற்பாடு போன்ற சொற்கள் கவிதையில் கையாளப்பட்டிருக்கும் விதம் இலக்கியத்தின் வெற்றிக்கு அடையாளம். சாத்தானுக்கும் பணிவிடை செய்வது என்ற கருத்தாக்கத்தில் அன்னையின் முழுபரிமாணம் விளங்கிவிடுகிறது.

இவ்வளவு திறமைகளை வெளிக்கொண்டுவரும் திண்ணைக்கு என் மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும்.

அன்புடன்

நாகூர் ரூமி

ruminagore@yahoo.com


ஆசிரியருக்கு,

திண்ணையில் வரும் பெரும்பாலான கட்டுரைகள் ஏதேனும் ஒரு சார்பு சார்பாக ஆதரித்தும், அதற்கு எதிர்வினையாக கட்டுரையாளரின் குறைகள் தாக்கியும் வருகின்றன. நடுநிலைமையுடன் யாராக இருந்தாலும் (பெரியார், அண்ணா, சங்கராச்சாரியார்,லெனின்,Sடாலின்,fார்f பு ?,ரfினி,பாய்S … ) சரியான செயலாக இரு ந்தால் பாராட்டி, தவறாக இருந்தால் தாராளமாகத் திட்டட்டும். ஆனால் தான் சொல்ல வரும் கருத்துக்கள் ெfயிக்க வேண்டும், கவரப்பட வேண்டும் என்பது போன்றே பெரும்பாலோரின் கட்டுரைகள் அமைகின்றன.

கட்டுரைகள் நேர்மையுடனும்,ஆதாரபூர்வமாகவும், தனிமனித தாக்குதல்கள் இன்றியும் இருந்தால் வாசிப்பவருக்கு பயன் கிடைக்கும். இல்லையெனில்

கிடைப்பதென்னவோ குழப்பமும், தேவையற்ற சண்டைக் காட்சிகளும் தான்…. கட்டுரையாளர்கள் உணர்வார்களா ?

வசீகர் நாகராfன்

vasikar@yahoo.com


அன்பு நண்பர் நரேந்திரன் அவர்களுக்கு, உங்கள் ‘பேரறிஞரும் புரியாத விஷயங்களும் ‘ கட்டுரை சற்றுமுன் படித்தேன். ரொம்ப சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அண்ணாதுரை அவர்கள் செய்தது என்ன, செய்யாமல் விட்டது என்ன, அவருடைய இலக்கியப் பங்களிப்பு என்ன என்றெல்லாம் எனக்கு எதுவும் தெரியாததால், உங்கள் கட்டுரை அவற்றைப் பற்றி எதாவது தெளிவை ஏற்படுத்தும் என்று எண்ணினேன். ஆனால் நீங்களும் ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லி விலகிவிட்டார்கள். எழுத்தைப் பொறுத்தவரை ஒரு சோறு பத்தாது என்பதே என் அனுபவம். கட்டுரை கிண்டலாக உள்ளது. ஆனால் அண்ணாத்துரை அவர்களைப்பற்றி எந்த ஒரு முடிவுக்கும் அதிலிருந்து வரமுடியவில்லை. உங்கள் வெறுப்புக்கான ஆதாரம் எதுவும் காட்டப்படவில்லை. அவரை தூக்கிவைத்துகொண்டு கூத்தாடுவது அபத்தமாக, அல்லது அயோக்கியத்தனமாகக்கூட இருக்கலாம். அது எப்படி அண்ணாவின் தவறாகும் ?

ஆனால் சமாதி கலாச்சாரம் பற்றிய உங்கள் கருத்துக்களோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

அன்புடன்

நாகூர் ரூமி

ruminagore@yahoo.com


சங்கரபாண்டியின் கட்டுரை ஆச்சரியமளித்தது. ஜெயகாந்தன் வாஷிங்டன் வந்திருந்த போது பெரும்பாலும் அவருடன் நான் உடன் இருந்தேன். என் வீட்டில் தான் தங்கியிருந்தார்; சங்கரபாண்டி உட்பட பல நண்பர்கள் வந்து சந்தித்தனர். அவர் தனது சாதியைக் குறிப்பிட்டதாகக் கூட நினைவில்லை; கண்டிப்பாக சங்கரபாண்டி கூறியது போல் ‘பிரகடனம் ‘ எல்லாம் செய்யவில்லை.

இப்படி ஒரு முக்கியமான், தீவிரமான குற்றச்சாட்டை கடைசி பத்தியில், மேம்போக்காக, யாரோ சொன்னதைத் திருப்பிச் சொல்வது போல் அசிரத்தையாக எழுதியிருப்பது, ஒரு ஆழமான, தர்க்க ரீதியான சிந்தனையாளராக நான் அடையாளம் காணும் சங்கரபாண்டி போன்ற எழுத்தாளருக்கு அழகல்ல.

ஸ்ரீகாந்த் மீனாட்சி

srikanthmeenakshi@yahoo.com


‘யூத, கிறிஸ்தவ நியமங்களின் பாதிப்புக்குள்ளானவர்களின் சட்டம் ‘ என்று விலங்கு பலித் தடைச் சட்டத்தை விவரிக்கும் அதீதமான கற்பனை வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, திசைதிருப்பும் உத்தியாகவும் தெரிகிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் தொட்டவற்றிலெல்லாம் ‘foriegn hand ‘, ‘foriegn agent ‘ கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது போல, இப்போது ‘வெள்ளைக்காரன் ‘, ‘மார்க்ஸியன் ‘, ‘யூத-கிறிஸ்தவன் ‘, ‘சீனாக்காரன் ‘ இத்தியாதிகளின் சதிகளை கண்டுபிடித்துக் காட்ட ஏராளமான புதிய பூதக்கண்ணாடிகள் புறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விலங்கு பலிச் சட்டத்தை தூசு தட்டி எடுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தச் சொல்லியுள்ளவர், மதமாற்றத் தடையைப் பற்றி கருத்து தெரிவித்த கத்தோலிக்க மதத் தலைவருக்கு கண்டனம் தெரிவித்ததையும், காஞ்சி மடாதிபதியிடம் ஆலோசனைகள் பெறுவதையும் ஒன்றாக வைத்துச் சிந்திப்பவர்களுக்கு, இது ‘யூத-கிறிஸ்தவ பாதிப்பா, பிராமணிய இந்துமத பாதிப்பா! ‘ என்று கண்டுபிடிக்க நீண்ட நேரம் ஆகாது.

விசுவாமித்திராவின் பார்வையில் ‘விலங்கு பலியிட்டு வழிபடுபவர்கள் நாகரிகமில்லாத காட்டுமிராண்டிகள். அதைத் தடுக்கப் புறப்பட்டிருப்பவர்கள் நவநாகரிகச் சீர்த்திருத்தவாதிகளாக்கும் ‘. என்னைப் போன்றவர்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதற்கு, இதைப் போன்ற சாதிய மனங்களிலிருந்து பொங்கி வழியும் ஆணவமும் ஒரு முக்கியக் காரணம். அரசு வழக்கறிஞர் அள்ளி வீசிய காரணங்களை விசுவாமித்திரா இன்னொரு முறை அடுக்கியிருக்கிறார். இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்த விபரங்களை அறிந்திருந்தும் பாரபட்சமானக் கண்ணோட்டத்துடன் எழுதுகிறார்கள் என்று வேறு ஆதங்கப்பட்டிருக்கிறார்.

அரசாங்க ஆணைகள் பொது நலத்தை முன்னிட்டு செயல்படுத்தபடுவன. சீர்த்திருத்தம் என்பது ஏதாவது ஒரு மக்கட்பிரிவினருக்கு இழைக்கப்படும் அநீதியைக் களையும் முயற்சி.

உடன்கட்டை ஏற்றியது, தேவதாசி முறையை கடைபிடித்தது, ‘தீண்டத்தகாதவர் ‘களை(sic) கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறியது, நரபலி கொடுத்தது–இவையெல்லாம் ஏதாவது ஒரு மக்கட்பிரினரை நேரடியாக பாதித்திருக்கிறது. பலியிட்டு வழிபடுவது எந்த மக்கட்பிரிவினரை நேரடியாக பாதித்திருக்கிறது என்பதை கொஞ்சம் விளக்கினால் மேற்கொண்டு விவாதிக்கலாம். அதைவிட்டு, வெறுமனே ‘சிறுபிள்ளைத்தனமானது ‘, ‘காட்டுமிராண்டித்தனமானது ‘, ‘நாகரிகமில்லாதது ‘ என்றெல்லாம் துள்ளி குதிப்பது தேவையில்லாதது.

பலியிட்டு வழிபடும் தலங்களில் சில ‘பொது இடங்கள் ‘ என்பது உண்மைதான். ஆனால் எல்லா ‘பொது இடங்களுக்கும் ‘ பொதுவான விதிகள் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விதிகள் உண்டு. அந்த விதிகளை ஏற்றுக்கொண்டு அங்கு செல்பவர்களுக்கே அது பொது இடம். உங்களுக்குப் பொருந்தி வரவில்லை என்பதற்காக எங்கள் பொது இடங்களின் விதிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவது அராஜகம்.

மு. சுந்தரமூர்த்தி

munirathinam_ayyasamy@yahoo.com


நான் ஜெயகாந்தனை நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி அவர்களின் இல்லத்தில் ஒரு கலந்துரையாடலில் அனைவர் முன்னிலையிலும் சந்தித்தேன். அந்தக் கூட்டத்தில் அவர் தன்னுடைய சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தவில்லைதான். ஆனால் அன்றும், அதற்கு முந்தைய தினமும் தனிப்பட்ட முறையில் பல நண்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். அவர்களில் சிலர் பின்னால் தமிழ்ச்சங்க கூட்டங்கள், கோயில் நிகழ்ச்சிகள் போன்ற சில சந்தர்ப்பங்களில் நடந்த திண்ணைப் பேச்சுகளின் போது இது பற்றிக் குறிப்பிடக் கேட்டிருக்கிறேன். அது வரை தாம் அவரை பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றுதான் நினைத்திருந்ததாகவும் அவர்கள் மிகவும் வியப்பாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். தன்னை பிராமணர் என்று அங்குள்ளவர்கள் தவறாகக் கருதி தன்னுடைய திராவிட இயக்க விமர்சனத்தை ஒதுக்கி விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் கூட அவர் தன்னுடைய சாதி அடையாளத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் சாதிய அடையாளம் வேறு எதையும் விட அமெரிக்கத் தமிழ்ச் சமூகத்தில் தீ போல பரவக்கூடியது என்பதை ஜெயகாந்தன் அறியாவிட்டாலும் நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஜெயகாந்தன் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தினார் என்பதை பிரகடணப் படுத்தினார் என்று நான் சொல்லியிருந்தது மிகைப்படுத்தப் பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது அவருடைய சாதிய அடையாளத்தை அவர் துறந்தவரல்லர் என்பதை வலியுறுத்திச் சொல்லப்பட்டதே. அதற்காக நான் ஜெயகாந்தன் சாதிப்பற்றுள்ளவர் என்று கூடக் குறிப்பிட மாட்டேன். தன்னுடைய சாதி அடையாளத்தைத் துறக்காத வரை, சாதி அரசியல் தொடர்பாக ஒருவர் கூறும் எந்த ஒரு விமர்சனமும் பாரபட்சமற்றதாக இராது என்பது என் கருத்து. அதனால் தான், பாட்டாளி மக்கள் கட்சி பற்றியும், தலித் அமைப்புக்கள் பற்றியும் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவ்வியக்கங்களைப் பற்றி தான் கருத்துச் சொல்லக் கூட அவை தகுதியற்ற சாக்கடைகள் என்ற பொருளில் அவர் பதிலளித்தார்.

சொ.சங்கரபாண்டி

sankarpost@hotmail.com


அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

என் கருத்துக்கள் குறித்தான சிலரின் விமர்சனத்துக்குப் பதில் இந்த கடிதம்.

நான் மாமிசம் சாப்பிடுவதையே தடை செய்துவிட்டாற்போல கூக்குரல் இடுவது விசுவாமித்திரா அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.

மாமிசம் சாப்பிடுவதற்கு எதிராக ஒரு சிலருக்கு இருக்கும் எதிர்ப்புணர்வு தானே இன்று அதனை கோவிலில் விலங்கு பலி கொடுப்பதை தடை செய்வதில் ஆரம்பிக்கிறது ? என்னுடைய வாதம் மாமிசம் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை என்று ஆரம்பிக்கிறது. அதன் பின்னர், கோவில் யார் சொத்து என்று கேட்கிறது ? அரசாங்கச் சொத்தாக இருந்தால் அதனை தடை செய்ய அரசாங்கம் முயலலாம். கிராமக் கோவிலும், ஒரு தனி மனிதர் அல்லது ஒரு ஜாதி கட்டும் கோவிலும் எப்படி அரசாங்கத்துக்குச் சொந்தமானதாக இருக்க முடியும் ?

ஞாநியைப் போலவே, உடன் கட்டை ஏறுவது. நரபலி கொடுப்பது, தலித்துகளை கோவிலுக்குள் விடாதது ஆகியவற்றை இந்த மாமிசப் படையலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். உடன் கட்டை ஏறுவது, நரபலி, தலித்துகளை உள்ளே விடாதது போன்றவை ஒரு தனி மனிதனின் மனித உரிமைகளை மதிக்காத பழக்க வழக்கங்கள். மாமிசப்படையல் எப்படி தனி மனித உரிமைகளை மதிக்காமல் செய்யப்படுகிறது என்று விசுவாமித்திரா, ஞாநி போன்றவர் விளக்கலாம். (தெருவில் நடந்து போகும் ஒரு சிலருக்கு அந்த தெருவில் ஆட்டுக்கறி கடை இருப்பதே இவர்களது மனித உரிமை மீறலாக இருக்கலாம். அதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் பண்ண முடியாது. வேறு தெரு பாருங்கள் அல்லது வேறு கோவிலுக்குப் போங்கள்)

ஒரு புறம் ஒரு ஜாதியின் பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்த இந்து மதத்தின் மீது திணிக்கும் முயற்சி. இன்னொரு புறம், எல்லா இந்து மதப் பழக்க வழக்கங்களையும் இந்துத்துவா என்று திட்டி ‘சீர்திருத்தும் ‘ முயற்சி.

**

அடுத்து யமுனா ராஜேந்திரன் அவர்கள் நான் பாய்ஸ் படத்தைப் பற்றி எழுதியதை வைத்து விமர்சனம் செய்திருந்தார்கள். அவர் குறிப்பிட்டது உண்மைதான். பாய்ஸ் படம் மட்டுமல்ல, இதுவரை வரும் எல்லாப் படங்களிலும் பெண்களை கிண்டல் செய்யும் கதாநாயகர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அதனை கதாநாயகிகள் சினிமாவில் ரசிக்கவும் செய்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ஈவ் டாஸிங்குக்கு ஆளான பெண்கள் தற்கொலை வரைக்கும் செல்கிறார்கள். ஆனால், இவைகள் எல்லா தமிழ் சினிமாக்களுக்கும் பொதுவானவை (பாய்ஸ் உட்பட) ஆகவே, அந்த காட்சிகள் இருக்கின்ற காரணத்தால், மற்ற படங்களை எல்லாம் விட்டுவிட்டு இந்தப்படத்தை மட்டும் திட்டுவது பொருந்தாது. இந்தப்படத்தில் மற்றபடங்களில் இல்லாத காட்சிகள் மட்டுமே இந்தப்படத்தின் விமர்சனத்துக்குள் அடக்கமாகும். அதனாலேயே, மற்ற படங்களில் சொல்லப்படாத, சிறுவயதில் தோன்றும் உணர்ச்சிகளையும், சிறு வயதில் செய்யும் தவறுகளையும் வெளிப்படையாக பேசும் இந்தப் படம் பரவாயில்லை என்று சொன்னேன். முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து இந்தப்படம் வெளிவரவில்லை என்று கட்டுரையிலேயே எழுதியிருக்கிறேன். மேலும் இந்தப்படம் ஒரு குப்பைப்படம். என்னால் உண்மையிலேயே சில காட்சிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தப்படத்துக்கு எதிராக வந்த எதிர்வினைகளில் நான் கண்டது ஆனந்தவிகடனின் ‘சீசீ செக்ஸ் ‘ என்னும் புரூடிஸம். அதற்கான எதிர்வினையே என் கட்டுரை. கடைசிக் காட்சியில் கதாநாயகனின் உறுப்பை தெளிவாக கிள்ளுகிறாள் கதாநாயகி. இருக்கட்டுமே. வரும் ஆயிரக்கணக்கான குப்பைப் படங்களில் ஒன்றுதான் பாய்ஸ். ஆனால், ஏ படத்து குப்பை என்று வந்தால் ஒரு பிரச்னையும் இல்லை என்பதுதான் நான் சொல்வது. மற்றபடி மஞ்சுளா நவநீதன் அவர்கள் இந்தப்படத்தைப் பற்றி எழுதியதை முழுக்க ஆமோதிக்கிறேன்.

சின்னக்கருப்பன்

karuppanchinna@yahoo.com


திண்ணை ஆசிரியர் குழுவுக்கு,

வணக்கம். இரண்டு வாரங்களுக்கு முந்தைய திண்ணையிலும் விகடனிலும், பதிப்பாளர் இளையபாரதியினால் என் பெயருக்கு அவதூறு கற்பிக்கும் வகையில் ஒரு கருத்துச் சொல்லப்பட்டிருந்தது. எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளை விட என் விஞ்ஞானச் சிறுகதைகள் சிறந்தவை என்று எழுத்தாளர் ஜெயமோகன் புகழ்ந்ததாகவும், என் ‘அமெரிக்கத் தயவு ‘ வேண்டி அவர் அவ்வாறு செய்தார் என்றும் இளையபாரதி சொல்லியிருக்கிறார். இதன் மறுபக்கம் என் மீதுள்ள நேரடி அவதூறாகிறது. இதே அவதூறு தாயகத்திலிருந்து அச்சேறுவது இது நான்காவது தடவை.

தமிழ்நாட்டின் கட்சி அரசியல், இலக்கியக் குழு அரசியல், பத்திரிகை அரசியல் முதலியவற்றிலிருந்து விலகியே வாழ்கிறேன். என் பெயரை இழுத்திருப்பதால், அது சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்:

1. அக்டோபர் 2000-இல் சென்னையில் என் முதல் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஜெயகாந்தன் தலைமையில் அசோகமித்திரன், சா.கந்தசாமி, பிரபஞ்சன், ஜெயமோகன், மலேசியா பீர் முகம்மது, டிராட்ஸ்கி மருது முதலியோர் பேசினார்கள். அதில் மேற்கத்திய விஞ்ஞானக் கதைகள் பற்றி நீ…..ண்ட உரையாற்றி விட்டு, அவற்றுடன் தமிழ் விஞ்ஞானக் கதைகளை ஒப்பிட்டு ஜெயமோகன் சொன்னதன் சாராம்சம்: ‘சுஜாதா தமிழ் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடி. அவர் கதைகள் ஒரு தளத்தில் இயங்குகின்றன. காஞ்சனா தாமோதரனின் கதைகள் இன்னொரு தளத்து விஞ்ஞானக் கதைகளுக்கான துவக்கப் புள்ளி. ஆனாலும், காஞ்சனா தாமோதரனின் விஞ்ஞானக் கதைகளில் புனைவு ஒருமை சிதறிப் போகிறது, வடிவம் கைகூடவில்லை. ‘ ஜெயமோகனின் உரை ‘சதங்கை ‘ என்ற சிறுபத்திரிகையில் பிரசுரமானது. (எனது இரண்டாவது புத்தகம் வெளியீட்டு விழா இல்லாமல் வெளிவந்தது.)

2. தமிழ்நாட்டுக் கிராமப்புறத்து-சமூக அடிமட்டக் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான பணிகள் பலவற்றில் கடந்த பன்னிரெண்டு வருடங்களாகப் பங்கு பெற்று வருகிறேன்; அவ்வகையில் என்னையும் என் கணவரையும் சிலர் அணுகுவது எங்களுக்குப் புதிதல்ல; தாயகத்துக்குத் திரும்பச் செய்வது பற்றி வெளியே சொல்லிக் கொள்ளும் அவசியம் எங்களுக்கு இது வரை இருந்ததில்லை. தமிழ்நாட்டு எழுத்துலகத்திலிருந்தும் உதவி கேட்டுச் சிலர் என்னை அணுகியிருக்கிறார்கள்; காலச்சுவடு இதழுக்காகக் கண்ணன் என்கிற எஸ்.ஆர். சுந்தரம் (1999-2001), கவிஞர் ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் பங்குபெற்ற ந. பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழாவுக்காக எழுத்தாளர் அழகியசிங்கர் (2001), கவிஞர் கலாப்ரியா கூட்டிய குற்றால இலக்கியக் கூட்டத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் (2001), மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்பத்துக்காக நாடக அறிஞர் வெளி ரங்கராஜன்-எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் (2003) முதலியோர் இவர்களுள் அடக்கம். என்னாலான சிறிய உதவியைப் பிந்தைய மூவருக்கும் செய்தேன்.

என்னிடம் கணிசமான உதவி பெற்றது ‘காலச்சுவடு ‘ இதழ் மட்டுமே; ஒன்றரை வருடங்களில் அதுவுமே திருப்பப்பட்டது. அந்த இதழில் நான் எழுதுவதில்லை, எனது புத்தகங்களை அவர்களுக்கு விமரிசனத்துக்காக அனுப்பி வைப்பதில்லை, அவர்கள் தம் ‘பன்னாட்டு ஆலோசகக் குழு ‘வின் அங்கத்தினராகும்படி என்னைக் கேட்டபோது மறுக்கவும் செய்திருக்கிறேன் (உதவி செய்வதற்கு முன்னால் ‘காலச்சுவடில் ‘ பிரசுரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதையைப் பின்னால் நானே வாபஸ் வாங்கியிருக்கிறேன்). என்னிடம் பணக் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொண்ட பத்திரிகையில் எழுதக்கூடாது என்னும் தனிப்பட்ட அறவியல்/ ‘எத்திக்ஸ் ‘ சார்ந்த, என் சொந்தத் தேர்வு இது. ‘காலச்சுவடு ‘ இதழின் மீது எனக்குப் பல விமரிசனங்கள் இருந்தாலும், என் தேர்வை மதித்ததற்காக அவர்களுக்கு நன்றி.

பெரும் தொகைகளை அள்ளி வீசி எல்லாத் துறையிலும் சிலரை விலைக்கு வாங்கி வைத்திருக்கும் அதிகார வர்க்கம் தமிழ்நாட்டிலும் உண்டு, உலகம் பூராவும் உண்டு என்பதை நானும் அறிவேன். புரிகிறது. அந்த அளவுகோலால் என்னையும் அளப்பது சரியா ? அமெரிக்காவில் வரி கட்டுபவர்கள் என்றாலே ‘அப்படித்தான் ‘ என்கிற சப்பையான ‘நெகடிவ் ஸ்டாரியோடைப் ‘பை எத்தனை காலம்தான் திணித்து வளர்க்கப் போகிறார்கள் தாயகத்து எழுத்தாளர்கள் ?

3. சிறுபத்திரிகை பெரும்பத்திரிகை என்று வேறுபடுத்தும் குணம் என்றுமே எனக்கு இருந்ததில்லை; தினமணியில் எழுதி அது சாமானிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததாய் அவர்கள் கடிதம் எழுதும் போது வரும் மனநிறைவு வேறெதிலும் இருக்க முடியாது. எனது முதல் கதை பிரசுரமானது ‘அவள் விகடன் ‘ இதழில். அதற்குப் பின் குங்குமம், கல்கி, இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், திண்ணை.காம், குமுதம் தீராநதி, சதங்கை, அம்பலம்.காம் முதலான பல இதழ்களில் கதைகளும், தினமணி, கணையாழி, உயிர்மை, திண்ணை.காம், குமுதம் தீராநதி, டெல்லி ‘புக் ரிவ்யூ ‘, அமெரிக்காவின் தென்றல் முதலான இதழ்களில் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. விமரிசனங்கள் வெளியானது சதங்கை, இந்தியா டுடே, ‘த ஹிந்து ‘, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘, ‘தினமணி ‘ முதலான வேறுபட்ட இதழ்களில். குழந்தைகளுக்கான நாவலொன்றைத் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். கதைக்கருவையும் ‘மாதிரி ‘ அத்தியாயங்களையும் படித்த பின் என் எழுத்தை அங்கீகரித்த அமெரிக்கப் பதிப்பகத்தின் மூலம் எனது ஆங்கில நாவல் சில வருடங்களில் வெளியாகும். அதாவது, என் படைப்புகள் எல்லாமும் மகாவிருது பெறும் மாமணிகள் இல்லைதான் என்றாலும், பணத்தைக் காட்டி அங்கீகாரம் தேட வேண்டிய நிலையில் என் எழுத்து இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை.

ஜெயமோகனின் எழுத்தின் மீதும் கருத்தின் மீதும் எந்த நடுநிலை வாசகருக்கும் இருக்க வேண்டிய காத்திரமான விமரிசனம் என்னிடமும் உண்டு. இன்னும் பல மூத்த எழுத்தாளர்கள் மேலும் இத்தகைய விமரிசனங்கள் உண்டு. திடமான தமிழ்நாட்டு நவீன இலக்கிய விமரிசன மரபு என்று ஒன்று உருவாகவே இல்லை என்பது என் தனிப்பட்ட பார்வை; ஒற்றைப்படையான அழகியல் ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு, இதுதான் இலக்கியம் என்று எல்லாரையும் பயமுறுத்துவதன் பெயர் இலக்கிய விமரிசனம் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டு காலமாய்க் கல்வியும் குரலுமின்றி ஒடுக்கப்பட்டவர்கள் உள்படச் சமூகத்தின் எல்லா அங்கத்தினரும் எழுதத் துவங்கியிருக்கும் இந்தக் காலத்தில்தான், பன்மையுள்ள தமிழ்நாட்டு இலக்கியம் துவங்குகிறது. அதற்கான விமரிசன மரபும் துவங்கும் சாத்தியப்பாடும் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பேசி விவாதிக்கும் இடம் இதுவல்ல.

என் மீதுள்ள அவதூறுக்கான என்னுடைய மறுப்புக் கடிதத்தின் ஒரு பகுதியை இந்த வாரம் வெளியிட்டுள்ள ‘ஆனந்த விகடன் ‘ இதழுக்கு நன்றி. அவதூறைப் பிரசுரித்த நீங்களும் என் மறுப்பை வெளியிடலாம். உங்கள் முடிவு.

சமூகத்துக்கும் இலக்கியத்துக்குமாய்ச் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் எத்தனையோ இருக்க, இப்படி உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கும் நிர்ப்பந்தத்தை உருவாக்கிய சூழலை நினைத்து வேதனைப்படுகிறேன்.

வணக்கத்துடன்,

காஞ்சனா தாமோதரன்

நவம்பர் 6, 2003


1. ‘காந்தியை மகாத்மா என்றும் நேருவை பண்டிதர் நேரு என்றும் அழைப்பது போலத்தான் இதுவும் ‘ [அண்ணாதுரையை அறிஞர் என்பதும்] என்று எழுதியதன் மூலம் மகாத்மாவையும் பண்டிட்டையும் தரம்தாழ்த்தியதற்காக முனைவர் சங்கரபாண்டி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மூன்றாம் வகுப்பு படிக்காதவர் கூட முனைவர் என்று போட்டுக் கொள்வது போலத்தான் முனைவர் பட்டமும் என்று யாரேனும் இவர் முனைவர் பட்டத்தைப் பொதுவாக்கினால் இவர் சும்மா இருப்பாரா என்று தெரியவில்லை. மகாத்மாவிற்கும் பண்டிட்டுக்கும் தகுதியுடையவர்களாய் காந்தியும், நேருவும் எப்படியானார்கள் என்பதை யாரும் சுலபமாக நிறுவ இயலும். அப்படி அண்ணாதுரை அறிஞர் பட்டத்துக்கு எப்படி தகுதியானவர் ஆகிறார் என்று சங்கரபாண்டி ஆதாரபூர்வமாக நிறுவாமல், வெறுமனே ஏன் இட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தென்னாட்டு காந்தி என்று அண்ணாதுரையை அழைத்த கொடுமை மாதிரிதான் இருக்கிறது சங்கரபாண்டி சொல்வதும்.

2. ‘இலக்கியத் திறமைகள் ஒருபக்கம் இருக்க, அவர்களது அரசியல் சார்பான பிதற்றல்கள் அவர்களின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வைக்கின்றன. ஜெயமோகன் நேரடியாக தன்னுடைய அரசியல் சார்பை வெளிக்காட்டாவிடினும், அவருடைய இந்துத்துவ நிலைப்பாடு மறைமுகமாக அவ்வப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. ‘ என்கிற சங்கரபாண்டிக்கு எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதை நினைவூட்டுவோம். சங்கரபாண்டி வாதப்படி பார்த்தால் – ‘பாகிஷ்தானின் பயங்கரவாதத்தை பாருக்குப் – பறைசாற்றும் பாரதத்தின் மனித நேயம் -பஞ்சாப்பிலும், காஷ்மீரத்திலும், குஜராத்திலும் அப்பாவி – மக்களைக் கொன்ற போது எங்கே போனது ? ‘ என்று சங்கரபாண்டி எழுதிய கவிதை வரிகளின் மூலம், அவரின் அரசியல் மற்றும் இயக்கச் சார்பான பிதற்றல்கள் தெரிவதால் – ஜெயகாந்தனைப் பற்றிய அவரின் கட்டுரையையும் தூக்கிப் போட்டுவிட வேண்டும் என்றும், சங்கரபாண்டியின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டும் என்றும் யாரேனும் சொன்னால் சங்கரபாண்டி என்ன சொல்வார் ?

3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சோனியாகாந்தி பிரதமராவது அனுமதிக்கப்பட்ட ஒன்று. எனவே, எந்த இந்தியக் குடிமகனும் இவ்விஷயத்தில் அவரவர் விருப்பப்படி முடிவெடுக்கவும் தன் கருத்துக்களை முன்வைக்கவும் முடியும். எனவே, சோனியா பிரதமராக வேண்டும் என்று ஜெயகாந்தன் விரும்பினால் அது அவர் விருப்பம். அதில் என்ன தவறு ? ‘மனித நேயத்துக்குப் போராடிய நெடுமாறன் பயங்கரவாதியாம், மக்கள் மேடைகளில் எடுத்துரைத்த வைக்கோ பயங்கரவாதியாம், மாணவிகள் துடிதுடிக்க எரியக் காரணமானவர் சொல்கிறார் ‘ என்று சங்கரபாண்டி கவிதைகளில் தன் விருப்பத்தைச் சொல்வதுபோல் தானே அதுவும். மேலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டை உய்விக்கப் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட சோனியா பிரதமராவதில் பிரச்னை இல்லை என்றே சொல்லி வந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டப்படி மட்டுமல்லாமல், இந்திய மரபு மற்றும் பாரம்பரியத்தின்படியும் சோனியா இந்தியக் குடிமகளே. 1.) காங்கிரஸைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், 2.) பின்னர் அதன் தலைவராய் இருந்த அன்னிபெசண்ட்டும் பிறப்பால் இந்தியர் இல்லை. அன்னை தெரசாவும் சகோதரி நிவேதிதாவும் கூட அப்படித்தான். எனவே, இந்தியர் என்கிற உணர்வு பிறப்பால் வருவது இல்லை. சோனியா இந்தியர் இல்லை என்கிற விளையாட்டை பா.ஜ.க. அரசியல் ஆதாயங்களுக்காகச் செய்கிறது. ஆனால், வெளிநாட்டில் பிறந்தவர் பிரதமராவதைத் தடுக்கச் சட்டம் எதுவும் கொண்டுவரும் யோசனை இல்லை என்றும் அதன் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள். ஆனால், இந்தியராய் பிறந்துவிட்டு, இந்தியாவைத் துண்டாட வேண்டும் என்று விரும்புகிற சக்திகளிடம் கைகோர்த்துக் கொண்டிருப்பவர்கள் சோனியாவை இந்தியர் அல்ல என்று சர்டிபிகேட் கொடுப்பது எள்ளி நகையாட வேண்டிய விஷயம். எனவே, சோனியாவுக்குப் பிரதமர் ஆகிற தகுதி இல்லை என்று சொல்கிற எவரும் முதலில் முயற்சிசெய்து அரசியல் சட்டத்தை அப்படி மாற்றப் பார்க்கட்டும். இல்லையென்றால், அரசியல் அமைப்புச் சட்டம் சோனியா பிரதமராவதை அனுமதிக்கும் வரை, பெரும்பான்மையான மக்களுக்கும் கட்சிகளுக்கும் அதில் ஆட்சேபணை இல்லாதவரை – இத்தகைய கூக்குரல்கள் எல்லாம் கவைக்குதவாதவை. சோனியாகாந்தி பிரதமராகக் கூடாது என்று சொல்வதுதான் (சங்கரபாண்டியின் வார்த்தைகளில்) பச்சையான இந்துத்துவ வாதமாகும். பிறநாடுகளின் கைக்கூலியாக, மூன்றாந்தர மொழி அடிப்படை வாதமும் இனவாதமும் பேசி தமிழக அரசியலில் அறிமுகவானவர்களை உயர்த்திப் பிடிக்க, ஜெயகாந்தனை இந்திய தேசியத்தின் ஏஜெண்ட்டாக அடையாளம் காட்டுகிறார் சங்கரபாண்டி. இந்திய தேசியத்திற்கு ஏஜெண்ட்டாக இருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம்தானே. ஜெயகாந்தன் ‘சோனியா காந்திக்கெல்லாம் வக்காலத்து வாங்கியதைக் கண்டு கொள்ளாமல் விட்டால்தான் ஏற்றுக் கொள்ள முடிகிறது ‘ என்கிற வரியின்மூலம் தன்னுடைய ஆணாதிக்க மனோபாவத்தை மடைதிறந்து காட்டுகிறாரா சங்கரபாண்டி ? வெளிநாட்டுப் பயணங்களில்கூட இந்தியப் பிரதமர் புகழ்ந்து சொல்கிற பண்பு நிறைந்தவர், இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர், பன்னாட்டுத் தலைவர்களும் இந்திய விஜயத்தின்போது தவறாமல் சந்திக்க விரும்புகிற ஒருவர், நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலைத்து நிற்கிற ஒரு கட்சியின் தலைவர், பதினான்கு மாநிலங்களில் ஆட்சி செய்கிற, மற்றும் பல மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கிற தேசியக் கட்சி ஒன்றின் தலைவர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு ‘சோனியா காந்திக்கெல்லாம் ‘ என்று சங்கரபாண்டி எழுதும்போதுதான் அவரது மனோபாவம் ஆணாதிக்க மனோபாவமோ என்கிற கேள்வி பிறக்கிறது.

4. சங்கராச்சாரியாருடன் மேடையில் தோன்றுவது குற்றமா ? பெரியாருடனும் கருணாநிதியுடனும் கூட ஒரே மேடையில் ஜெயகாந்தன் உட்கார்ந்திருக்கிறாரே ? மனமாச்சரியங்களுக்கப்பாற்பட்டு சமூக நாகரீகம் பயில்கிற எல்லாரும் – கருணாநிதி உட்பட- மாற்றுக் கருத்துள்ளோருடன் மேடையில் அமர்ந்திருக்கின்றனரே. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று பயின்ற சங்கரபாண்டி, சங்கராச்சாரியாருடன் மேடையில் தோன்றிய காரணத்துக்காக பிறருக்கு இந்துத்துவா பெயிண்ட் அடிக்க ஆரம்பித்தால், அவர் வழியைப் பின்பற்றி, அவர் உடம்பில் யாரும் கோடுகள் வரைந்துவிடக்கூடாது என்று வேண்டுவோம். கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான குங்குமம் சங்கராச்சாரியாரை அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி, அவர்கள் அரசில் அங்கம் என்றெல்லாம் பெரியாரின் சீடர்கள் செய்துவருகிறார்கள். அதனாலேயே, பெரியார் மற்றும் அண்ணாதுரை தோற்றுவித்த இயக்கங்கள் – சங்கரபாண்டி பெரிதும் மதிக்கிற வை.கோ.வின் கட்சி உட்பட – இந்துத்துவாவுக்கு கொடிபிடிக்கின்றன என்று சொல்லிவிட முடியுமா என்ன ? கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சங்கர மடத்திலிருந்து வந்த சால்வையை ‘பண்பாடு ‘ என்று சொல்லிக் கருணாநிதி ஏற்றுக்கொண்டபோது புல்லரித்துப் போனவர்கள், மற்றவர்கள் அத்தகைய நாகரீகத்தைக் கடைபிடிக்கும்போது அவர்களை செல்லரித்தவர்களாய் சித்தரிப்பது ஏனோ ? சின்னக்குத்தூசியும் தீம்தரிகிட ஞாநியும் சங்கராச்சாரியாரைச் சந்தித்து உரையாடிய போது மரியாதையாக அவரைச் சுவாமிகள் என்றே விளித்ததையும், விடைபெறும்போது சங்கராச்சாரியார் கொடுத்த பிரசாதத்தையும் வாங்கிக் கொண்டு வந்த நாகரீகத்தையும் வைத்து அவர்களை இந்துத்துவவாதிகள் என்று எப்போது சங்கரபாண்டி சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

5. எல்லா ஜாதிகளிலும் ஒரு சமூகக்கேடு காணப்படுமேயானால், அதற்குப் பெயர் பிராமணீயமாக எப்படி இருக்க இயலும் என்று யாரேனும் சங்கரபாண்டி போன்றோருக்கு எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. நிலப்பிரபுத்துவத்திற்கும் பிராமணியத்திற்கும் உள்ள வேறுபாட்டை பல திராவிடத் தலைவர்கள்தான் புரிந்துகொள்ளவில்லை என்றால், சங்கரபாண்டி போன்றோர்க்கும் அந்த மயக்கம் இருக்கிறது. பாப்பாப்பட்டியிலும் கீரிப்பட்டியிலும் நடப்பதற்கு பிராமணர்களா காரணம் ? அமெரிக்கா வந்த பின்னும், சாதிகளற்ற சமூகத்தில் வாழ்ந்து வருகிற வாய்ப்பு பெற்றிருக்கும்போதும், தமிழர்கள் தமிழின் பெயரால் மட்டுமே சங்கமிக்கிற இடங்களில்கூட மற்றவர்களே மறந்துவிட்ட சாதியை மறக்காமல், ஒரு குறிப்பிட்ட மக்களுக்கெதிரான கோஷத்தை தூக்கிப் பிடிப்பதை சங்கரபாண்டி போன்றோர் தமிழ்த்தொண்டாக செய்துவருவது மிகவும் மனிதாபிமானம் மிக்க செயல். ஆனால், ஜெயகாந்தனையும் ஜாதி வட்டத்துக்குள் அடைக்க முயல்கிற அவரது அபிலாஷையை ஜெயகாந்தனைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ‘ஜாதிப் பற்றை மறைத்துக் கொள்ளவே பெரும்பாலும் இப்போது தமிழன் என்கிற அடையாளம் பயன்படுத்தப்படுகிறது ‘ என்று தலித் ரவிக்குமார் அவர்கள் காலச்சுவடு நேர்காணலில் ஒருமுறை சொன்னது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.

6. அண்ணாதுரை பற்றிய ஜெயகாந்தனின் பேச்சுக்கு ஆதாரபூர்வமான மறுப்போ விமர்சனமோ இருக்கும் என்று தலைப்பைப் பார்த்து சங்கரபாண்டியின் கட்டுரையை ஆவலுடன் படிக்க ஆரம்பித்தால், அது வழக்கம்போல – மாற்றுக்கருத்து சொல்பவரின் நோக்கங்கள், சார்புகள் பற்றியெல்லாம் சேறுவாரிப் பூசுவதைத் தவர வேறு எதையும் செய்யவில்லை.

7. பார்ப்பனீயம் பேசுகிற பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு ஏஜெண்ட்டாக ஜெயகாந்தனைச் சொல்கிற சங்கரபாண்டி வை.கோ.வை வசதியாக மறந்துவிட்டது ஏனோ. வை.கோ. மற்றும் நெடுமாறனுக்கு மாற்றுக்கருத்துள்ளோரும் அவர்களைப் பொடாவில் கைது செய்தது தவறு என்று சொல்லி நிற்க, வைகோவை பொடாவில் போட்டு ஒருவருடமாகியும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணியும், அவர்கள் மைய அரசில் அங்கமும் வகிப்பது தி.மு.க.வும், சங்கரபாண்டி பெரிதும் மதிக்கிற வை.கோ. கட்சியும் தானே. எனவே, ஜெயகாந்தனை அடையாளம் காட்டும் விமர்சனங்கள் இன்னும் வரவேண்டும் என்று சங்கரபாண்டி விரும்புவதுபோல, திராவிட கட்சிகளின் இத்தகைய கொள்கைப் பிடிப்புகளை அடையாளம் காட்டுகிற விமர்சனங்களும் சங்கரபாண்டி போன்றவர்களிடமிருந்து வெளிவரவேண்டும் என்று விரும்புவோம்.

8. சங்கரபாண்டியின் நண்பர் முனைவர் சுந்தரமூர்த்திக்கும் ஒரு நாட்டின் இறையாண்மைக்காக உயிர்விட்ட இந்திராவின் மரணத்தையும், திராவிடநாடு வேண்டும் என்று பிரிவினைவாதம் பேசி அரசியலில் உயர்ந்த அண்ணாதுரையின் மரணத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிற மயக்கம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, அவர் வளர்ந்த தொட்டிலான கம்யூனிஸ்ட் கட்சியைக் கூட ஜெயகாந்தன் அவற்றின் தவறுகளுக்காக கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜெயகாந்தனை முழுதும் படித்தவர்களூக்கு இது தெரியும். மேலும், ஓர் அரசியல் தலைவரின் இயல்பான மரணத்தை (காந்தியைப் போலவோ, இந்திராவைப் போலவோ நாட்டுக்காக அவர் உயிர்த்தியாகம் செய்யவில்லை) அரசியல் லாபங்களுக்காக, முதன்முதலில் பயன்படுத்திய கட்சி அண்ணாதுரை அவர்களின் கட்சிதான். அந்தக் கட்சியின் அந்தச் செயல் பிற கட்சிகள் வோட்டிற்காக அதே செயலைப் பின்பற்றச் சொல்கிற தவறான முன்மாதிரியாக அமைந்தது. நேரு குடும்பத்தின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிக்கிற அதே நேரத்தில் அது இந்தியாவிற்காகச் செய்துள்ள உயிர்த் தியாகங்களை தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல எல்லா நேரங்களிலும் ஜெயகாந்தன் போன்றோர் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் விருப்பம். இந்திராவின் மரணத்திற்குப் பின் மட்டுமல்ல, எவர் மரணத்திற்கும் பின் நடக்கிற வன்முறை நிகழ்ச்சியும் அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியவை. அதையே ஜெயகாந்தனும் சொல்வார். எனவே, அண்ணாதுரையின் மரணத்தோடு இந்திராவின் மரணத்தை ஒப்பிடுவது எந்தவிதத்திலும் பொருத்தமானதல்ல.

9. சுந்தரமூர்த்திக்கு பிடித்த/ஏதுவான கருத்துகளை – நான் கேட்டோ தேடியோ பெற்றுப் பின் தட்டச்சு செய்து போட்டால், மற்றவர் மனதில் இருப்பது அழுக்கா இல்லை டிட்டர்ஜெண்ட் போட்டுத் துவைத்த மின்னலடிக்கும் வெண்மையா என்று அவர் கண்டுபிடிப்பாராம். மற்றவர் மனதில் இருப்பது ஒரு சராசரி கட்சி ஊழியனின் மனதில் இறுகிய அரசியல் அழுக்கென்று அவர் நம்பினால், அதற்கான ஆதாரங்களை என்னைத் தேடிப்பிடிக்கச் சொல்லாமல் அவரே தேடிப்பிடித்து தட்டச்சு செய்து தரட்டும். நானும் மற்றவர்களும் அதைப் படிக்கவும், விருப்பமுள்ளவர்கள் ஆரோக்யமாக விவாதிக்கவும் அது வழிவகுக்கும். இன்னொரு கோணம் காட்டுகிறது என்றும் விவாதத்திற்குரியது என்றும் நான் நம்புகிறவற்றையே நான் தட்டச்சு செய்துதர இயலும்.

– பி.கே. சிவகுமார்

pksivakumar@att.net


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்