தண்டனை போதும்!

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

– அடியார்


பிராமணர்களைப் பொறுத்தவரை நமக்கு மறுபரிசீலனை தேவை!

பிராமணர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க பிராணிகள், பச்சை விஷம் கொண்டோர், பரம சண்டாளர்கள் என்ற கருத்திலிருந்து…

‘பிராமணர்களை எதிர்க்கவில்லை; பிராமணியத்தை எதிர்க்கிறோம் ‘ – என்று அந்தக் கருத்தை வளப்படுத்தியவர் அறிஞர் அண்ணா!

ஆகவே, நாமும் ‘பிராமணர் ‘ பற்றி மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.

இதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உண்டு! ‘ஆரிய மாயை ‘ நூல் எழுதினார் அறிஞர் அண்ணா அவர்கள்! அதே தலைப்பில் ‘ஆரிய மாயை ‘ என்ற நாடகம் எழுதியவன் நான்!

எனது நாடகத்தைப் பார்த்துப் புகழ்கிறபோது பெரியார் அவர்கள் சிதம்பரத்தில் ‘அறிஞர் அடியார் ‘ என்று கூறினார்.

நான் பேசுகிறபோது அந்தப் பட்டத்துக்கு தகுதியற்றவன் என்று பெரியார் முன்னிலையிலேயே கூறினேன்.

ஆரிய மாயை இருந்தது உண்மை! சமுதாய ஏற்றத் தாழ்வு ‘ஆழப்பட்டதற்கு ‘ ஆரியமே முதல் காரணம் என்பதும் உண்மை.

ஆனால் அதெல்லாம் பழைய காலம்; பெரியாரின் கடுமையான உழைப்புக்குப் பின்னர் ஆரியமும் – வர்ணாசிரமத் திமிரும் தவிடு பொடியாகி விட்டன.

‘இல்லை; இல்லை! அது இன்னமும் இருக்கிறது என்றால் பெரியார் தொண்டு வீண்; திராவிடர் இயக்கம் – கையாலாகாத இயக்கம் ‘ என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நேற்று ஒரு பிராமணன் – மற்றவர்களைப் பார்த்து ‘டேய்! இங்கே வாடா! ‘ என்று அழைத்ததுண்டு.

இன்று பிராமணத் தோழனை நமது பிள்ளைகளே வாடா போடா என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

நேற்று புனிதமாகக் கருதப்பட்ட தொழில்களையே பிராமணர்கள் செய்து வந்தார்கள்! இன்று… தோல் பதனிடும் தொழிற்சாலையிலும் அவர்களைக் காணலாம்! ‘பாட்டா ஷீ ‘ கடையில் நமது காலுக்கு செருப்பு மாட்டுகிற தொழிலை ‘தொழிலே தெய்வம் ‘ என நினைத்துச் செய்கிறார்கள்!

பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்!

பிராமணர்கள் என்றதுமே பழமைவாதிகள், தமிழருக்கு எதிரானவர்கள்; வீரமற்றவர்கள் என்றெல்லாம் நினைப்பது தவறு!

‘கடவுள் இல்லை ‘ என்று வேத காலத்திலேயே கூறியவர் சார்வாக மகரிஷி.

தென்னாட்டில் நாத்திகம் பேசிய பிராமணப் புலவர் கபிலர்! மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!

வேதக் கருத்துக்களை மறுத்த சமணம் புத்தம் போன்ற மதங்களில் முதன்மையான சீடர்களாய் விளங்கியவர்கள் பிராமணர்களே!

கருத்துப் புரட்சிகளை முதலில் வரவேற்று நடந்தவர்களும் பிராமணர்களே!

உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவா விவாகம் போன்றவற்றை ஆதரித்துப் போர் நடத்தியவர்களூம் அவர்களே!

வேதத்திற்கு நிகராக தமிழ் மொழியில் ‘திராவிட வேதம் ‘ என்ற திவ்யப் பிரபந்தத்தை உருவாக்கியவர்களும் அவர்களே!

வேதத்தை வெளியே சொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி உடைத்து திருக்கோட்டியூர் மதில் மீதி நின்று வேதகீதம் கிளப்பிய புரட்சிக்காரர் ராமானுஜர்.

நாய்களோடு திரிந்த சண்டாளனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட இன்னொரு புரட்சிக்காரர் ஆதிசங்கரர் என்ற பகவத் பாதாள்.

ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் அவர்களே!

மேலை நாட்டவரே வியக்கும் சித்தாந்த வேதாந்தங்களையும் ஆக்கியவர்களும் அவர்களே.

வான சாத்திரத்தில் பலநூறு ஆண்டுகளூக்கு முன்பு சீரிய சிந்தனையைப் படைத்தது ஆரியப் பட்டரே! கலைகளில் இலக்கணங்களை வகுத்ததும் பிராமணர்களே! அரசியலில் சாத்திரங்களை இயற்றியதும் அவர்களே! சர்.சி.வி ராமனும் பிராமணனே. கணக்கு மேதை ராமானுஜமும் பிராமணனே!

(செக்ஸி) பால் உறவுகளையும் இலக்கணமாக்கிச் சொன்னதும் வாத்ச்யாயனர் என்ற பிராமணரே!

அண்மைக் காலத்தில் – கம்யூனிசத்தை இந்தியாவில் பரப்பியவர்களும் அவர்களே!

காந்தியாருடன் பணியாற்றிக் கொண்டே நாத்திகம் பேசிய ‘கோரா ‘வும் பிராமணரே!

பி.ஆர்.அம்பேத்கார் என்ற புரட்சிக்காரரின் பெயரிலுள்ள ‘அம்பேத்கார் ‘ அவரை ஆதரித்து வளர்த்த பிராமணரின் பெயரே!

காந்தியார் என்ற வைசியரின் மகனுக்குத் தனது திருமகளைத் தந்த பிராமணர்தான் மூதறிஞர் ராஜாஜி.

அந்தப் புரட்சி வழியில் இப்போதுகூட இதயம் பேசுகிறது மணியன் தனது மனைவியின் சகோதரிக்கு மனோரமா வீட்டில் மணம் முடித்தார்!

ஆதி திராவிட வீரர்களை மணந்த பிராமணப் பெண்கள் தங்கப்பதக்கம் பெற்ற நிகழ்ச்சிகளை நாம் படங்களாகவே பார்த்திருக்கிறோம்.

ஆகவே புரட்சிக் கருத்துக்களுக்கு ஊற்றுக் காலாக ஊன்றுகோலாக முன்னோடும் பிள்ளைகளாக இருந்தவர்களும் இருப்பவர்களும் அவர்களே!

தமிழைப் பேணிக் காப்பதிலும் அவர்கள் முன்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்!

தமிழின் முதல் முனியான அகத்தியனே பிராமணன்தான்! தொல்காப்பியரைக் கூட அப்படிக் கூறுவதுண்டு! தமிழின் அழகிய பனுவல்கள் அவர்களால் ஆக்கப்பட்டதுண்டு! வடமொழிக்கு நிகரான தமிழ் இலக்கணங்களை – இலக்கியங்களை ஆக்கிட முனைந்து நின்றவர்களும் அவர்களே!

ஆரியர்கள்தான்! உலகத்தில் முதன்முதலாகத் தோன்றிய இனம்! உலகை ஆண்ட இனம் என்று கூறி வந்த கருத்துக்கு எதிராக…

தமிழனே முதலில் தோன்றிய இனம்; குமரிக் கண்டத்து நாகரீகமே – முதல் நாகரீகம் என்று ஆதாரத்தோடு பேசியவர்கள் ராகவ ஐயங்காரும் சீனிவாச ஐயங்காரும்.

அழிந்துபட்ட தமிழ் நூல்களைத் தேடி எடுத்து அச்சேற்றிக் காத்த உ.வே.சுவாமிநாத ஐயருக்கு தமிழகமே கடமைப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் இயக்கத்தின் தூண் பரிதிமாற் கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி.

தமிழ்க் கவிதையுலகில் புரட்சி செய்த பாரதியாரும் பிராமணரே! இன்றைக்கும் புதுக்கவிதை என்ற புரட்சியைச் செய்யும் சி.சு.செல்லப்பாவும் பிராமணரே!

காண்டேகரைத் தமிழுக்குத் தந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், சகல கலா வல்லவராய் இருந்து அகில இந்தியப் பத்திரிகையுலகில் சாதனை புரிந்த கல்கியும் வாசனும் பிராமணர்களே!

வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைக் காத்து நிற்பவர்களூம் அவர்களே!

வெளிநாட்டுக்குச் சென்றால் அந்த நாகரீகத்தை ஏற்காமல்… நமது நாகரீகம் காத்து, விடாப்பிடியாக வீடுகளில் தமிழ்பேசும் குடும்பங்களும் பிராமணக் குடும்பங்களே!

தமிழில் புரட்சி செய்து – விஞ்ஞானக் கருத்துகளை – புதுமைக் கருத்துகளைத் துணிவுடன் சொல்லிவரும் சுஜாதா போன்றவர்களும் பிராமணர்களே!

வீரமற்றவர்கள், பேடிகள் பிராமணர்கள் என்ற கருத்தும் பிழையானதே! எப்படி ?

கண்களை இழந்தபோதும் ஏற்றுக்கொண்ட கொள்கையை உரக்கக் கூவியவன் கூரத்தாழ்வான்!

முகலாய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தென்னாட்டில் நுழைய விடாமல் ஹரிஅரபுக்கர்களை உருவாக்கிய வித்யாதரரும் பிராமணரே!

தென்னாட்டுப் போர்க்களங்களில் வீரசாகசம் நிகழ்த்தி – மைசூர் அரசை நடுநடுங்க வைத்த திருமலை நாயக்கரின் படைத் தளபதியே ராமப்பையர்தான்!

வெள்ளையனை எதிர்த்த சுதந்திரப் போரில் (வட நாட்டில்) பிராமண மன்னர்களூம், தளபதிகளும் இருந்தார்கள்.

தென்னாட்டில்… பகத்சிங்குக்கு முன்பு மணியாச்சி ஸ்டேஷனில் வெள்ளைக்காரனைத் துப்பாக்கியால் சுட்ட வீரனான வாஞ்சிநாதன் – பிராமணனே!

வெள்ளையரை கிடுகிடுக்க வைத்த ஆயுதப் புரட்சியைத் தமிழகத்தில் நிகழ்த்தியவர் வ.வே.சு. அய்யர்.

திருப்பூர் குமரனின் குருவாய் இருந்து போலீஸ் தடியடிக்கு ஆளாகி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகளில் முறிவு ஏற்பட்ட திருப்பூர் பி.எஸ். சுந்தரம் பிராமணரே.

1938 இந்தி எதிர்ப்புப் போரில் துணிவாக ஈடுபட்டவர் சி.வி.ராஜகோபாலாச்சாரியார்!

1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமது போலீஸ் வேலையைத் தூக்கி எறிந்த போலீஸ் வெ.கண்ணனும் பிராமணரே!

இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்து வீரப்பதக்கம் பெற்ற தமிழர்களில் பலர் – செங்கற்பட்டு சென்னை மாவட்டங்களைச் சார்ந்த பிராமணர்களே!

இப்போதும் மார்வாடிகளை எதிர்த்து – வட்டி வாங்குவதை எதிர்த்து சிறை புகுந்து கடுமையான வீரப்போர் நிகழ்த்துகின்ற மாவீரன் எம்.கே. சீனிவாசனும் பிராமணரே!

இதுமட்டுமில்லை; நவீன – மார்டன் துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். புதிய பாஷன்களை, புதிய டிசைன்களை விரும்பி ஏற்பதும் அவர்களே!

முன்பு இருந்த உச்சிக்குடுமியில்லை; ‘ஸ்டெப்கட் ‘தான்! மழுங்கச் சிரைப்பது இல்லை; கிருதாதான்; சைட் பர்ன்தான்!

மீசை வைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதம்; ஆனால் மீசையோடு தாடியும் வைத்து அழகாகப் பவனி வருபவர்கள் பிராமணர்கள்!

மடிசார் அதிகமாக இல்லை; மேக்சி – பெல்பாட்டம் – ஜீன்ஸ்தான் அதிகம்!

உடையில் – உணவில் – பழக்கவழக்கத்தில் மட்டுமில்லாமல் மன ஒப்பனையிலும் (மெண்டல் மேக்கப்) அவர்களுக்கு பழைய பஞ்சாங்கத் திமிர்த்தனம் கிடையாது! மேல்மதிப்பு என்ற மமதை இல்லை!

இந்த நிலையில் அந்தப் பிராமணர்களை என்ன செய்தோம் ?

அரசியலில் – சமுதாயத்தில் – அரசுப் பணிகளில் பல்வேறு குறுக்கு வழிகளில் தள்ளி வைத்தோம் ?

அரசுப் பணிகளை விட்டு அவர்கள் தனியார் நிறுவனங்களில் – அயல்நாடுகளில் பிழைப்பைத் தேடி அலைந்து வாழ்கிறார்கள்.

கர்நாடகமான நிலையிலிருந்து பிராமண சமுதாயம் காஸ்மாபாலிட்டன் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இனியும் நாம் கர்நாடகத்தனமான வெறுப்பிலும் – ஒதுக்குதலிலும் இருக்கத் தேவை இல்லை!

மனந்திருந்திய மகனாக (பிராக்டிகல் சன்) மதித்து, ஏற்றுத் தரவேண்டியதைத் தந்தாக வேண்டும்.

1967-ம் ஆண்டு முதல் பிராமண சமுதாயத்துக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.

ஆட்சி பீடத்திலிருந்து அவர்கள் 13 ஆண்டு காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

13 ஆண்டு காலம் அவர்கள் ஆளப்படுபவராய் இருந்தது போதும். இனிவரும் அமைச்சரவையில் பிராமணர் ஒருவர் அமைச்சராக வரவேண்டும்.!

நூற்றுக்கு 3 சதவிகிதம் பிராமணர் என்பது உண்மைதான். ஆனால் நூற்றுக்கு அரை சதவிகிதம் கூட இல்லாத இசை வேளாளர்கள் முதலமைச்சராய் இருக்கலாம்; ஒரு சதவிகிதம் கூட இல்லாத சமுதாயத்தினர் அமைச்சர்களாக இருக்கலாம்.

மூன்று சதவிகித பிராமணர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி இல்லை இல்லை என்றால் இதுதான் சமூக நீதியா ?

ஆக இந்த முறை பிராமணர்களுக்கென்று அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும்.

சாதி அடிப்படையில் அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறபோது அவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு ?

இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்டால் சுயநலம். நாங்கள் கேட்கிறோம். பொதுநலத்தின் பெயரால் கேட்கிறோம்.

பிராமணரே அமைச்சரவையில் கூடாது என்றால் இந்தியாவின் பிரதம மந்திரியாக இந்திரா காந்தி எப்படி இருக்க முடியும் ? அவரும் பிராமண குலத்தைச் சார்ந்தவர் தானே ?

நிதி அமைச்சராக ஆர்.வெங்கறாமன் எப்படி இருக்க முடியும் ?

அந்தப் பிராமணத் தலைவர்களின் தலைமையில் நடக்கும் இந்திரா காங்கிரஸ் ஆட்சியை – கட்சியை எப்படி ஆதரிக்கிறார்கள் ?

பிராமண மந்திரிகள் தமிழ்நாட்டுக்குக் கூடாது என்றால் இந்தியாவுக்கும் கூடாது! அவர்களது கட்சியைத் தேர்தலில் ஆதரிக்கவும் கூடாது! செய்வார்களா ?

அத்தைக்கு மீசை முளைத்து – குதிரைக்குக் கொம்பு முளைத்து கருணாநிதி-இ.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால்…

ஆகவே, பிராமண மந்திரி தமிழகத்திற்கு வருவது தவிர்க்க முடியாதது. மனம் ஒப்பி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதி மெளனம் சாதிக்கலாம். நீதி தேவனான வள்ளல் – இதயம் பேசுகிறது இதழுக்குப் பேட்டி அளித்த போது –

‘அண்ணா நகரில் ஹண்டே வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் கிடைப்பார் ‘ எனக் கூறிவிட்டார்.

பிராமணர்கள் ஏற்ற 13 ஆண்டுகால தண்டனை போதும்! அவர்கள் அமைச்சர் பதவி கேட்க முன்வர வேண்டும்.

அவர்கள் அதைக் கேட்கிறார்களோ… இல்லையோ… அந்தக் கோரிக்கையை வலியுறுத்த இந்தப் பேனாவும்… நாவும் தொடர்ந்து வாதாடும், போராடும்.

வாதாடவும் – போராடவும் அவசியம் இல்லாமல் போக வேண்டுமானால் வள்ளலின் ஆட்சிவர வேண்டும். இரட்டை இலை வெற்றிபெற வேண்டும்.

பிராமணப் பெரியோர்களே! தோழர்களே இறுதியாகச் சொன்னதை உறுதியாக உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.

(தமிழகச் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது நீரோட்டம் இதழில் மே 24, 25 தேதிய இதழ்களில் அடியார் எழுதிய கட்டுரை இது! இந்தக் கட்டுரைக்கேற்ப புதிய அமைச்சரவையில் டாக்டர் ஹண்டே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

நன்றி: பிராமணர்களுக்காக நான் வாதாடுகிறேன் – இலக்கியத் தென்றல் அடியார் – முதற்பதிப்பு: 1980 – நீரோட்டம் வெளியீடு.

Series Navigation

- அடியார்

- அடியார்