பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1

மூடநம்பிக்கைக்கள் குறித்த மூடநம்பிக்கைகள் என்று அஷிஸ் நந்தி ஒரு முறை எழுதினார்.பகுத்தறிவு குறித்தும் மூட நம்பிக்கை இருக்கலாம்.ஞாநி பெரியார் மீதும், அவர் முன்வைத்த பகுத்தறிவு மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார். பெரியாரின் பகுத்தறிவு குறைபாடு உடையது.பெரியாரின் கருத்துகளும்,அவர் முன்வைத்த பகுத்தறிவும் வளம் சேர்க்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.தனித்துவமான சிந்தனையாளர்கள் என்று சொல்லத்தக்க சிலர் கூட திராவிட இயக்கத்திலிருந்து தோன்றவில்லை. இட ஒதுக்கீடு என்பதற்கு அப்பால் சிந்திக்க தவறியது பெரியாரின் குறைபாடு என்றால் அதையே வெவ்வேறு வடிவங்களில் வலியுறுத்திக் கொண்டிருப்பது இன்றைய அரசியல் தலைவர்களின் கோட்பாட்டு சிந்தனை வரட்சியையே காட்டுகிறது. பெரியார் அறிவியல் தொழில்நுட்பம் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் நிகழ்த்திய கடைசிப் பேருரை இதற்கு சான்று. ஆனால் இன்று அறிவியல் தொழில்நுட்பம் குறித்த விமர்சனம் தவிர்க்கவியாலாத ஒன்று. பெரியாரின் பகுத்தறிவில் இதற்கு இடமிருக்கிறதா ? அறிவியல்-தொழில்நுட்பம்-சமூகம் குறித்த பெரியாரியப் புரிதல் என்ன ? கருத்தடை உரிமையை ஆதரித்தவர் பெரியார்.அது போல் பெண்கள் கருக்கலைப்பு செய்வதையும் அவர் ஆதரித்தார். ஆனால் கருத்தடை சாதனங்கள்-மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கை குறித்த பெரியாரியக் கண்ணோட்டம் என்ன ? திராவிட இயக்கங்கள் அல்லது பெரியாரை முன்னிறுத்தும் சிந்தனையாளர்கள் இது குறித்து பெரியாரின் சிந்தனைகளை அடிப்படையாக் கொண்டு இவற்றை விவாதித்துள்ளனரா ?. பெரியார் முன்வைத்த பகுத்தறிவும், அவரது கருத்துக்களும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துபவை அல்ல. உலகமயமாக்கல் குறித்து பெரியாரியம் என்ன சொல்கிறது. அதன் நுட்பமான அம்சங்களை விளக்க/புரிந்து கொள்ள பெரியாரின் கருத்துக்கள் போதுமா ? இது போல் பல கேள்விகளை எழுப்புவது கட்டாயமாகிறது. பெரியாரிய அழகியலின் பலவீனங்களை நான் விளக்க வேண்டியதில்ல. ஊடகங்கள் குறித்து பெரியாரியப் புரிதல் எத்தகையது ?

பகுத்தறிவு (rationality) குறித்தும் அதன் போதாமை குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் உள்ளன.

நவீனத்துவம்,பகுத்தறிவு குறித்த பின் நவீனத்துவ வாதிகளின் விமர்சனமும், இந்தியச் சூழலில் இது குறித்தும், வளர்ச்சி, சூழல் குறித்த விவாதங்களும் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளன. பெரியாரிய

பகுத்தறிவு பழங்குடி மக்களின் அறிவை, பாரம்பரிய கலைகளை, விவசாயத்தினை எப்படி மதிப்பீடு செய்யும்.

அறிவியலின் த்ததுவம் குறித்த விவாதங்களின் தாக்கம் பெரியாரிய பகுத்தறிவில் உள்ளதா ? பெரியாரும்,

அவரை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வோரும் அக்கறை செலுத்த்தாத ஆனால் தேவையான விஷயங்கள்

பல.பெரியாரிய பகுத்தறிவு இங்கர்சால் போன்றோரின் சிந்தனைகளை அடிப்படையாக் கொண்டது. ஆனல்

அது ஒரு கட்டத்தில் தேங்கிப் போய்விட்டது, அதில் சுய விமர்சனமும் இல்லை, புதிய சிந்தனைப் போக்குகளுடன் ஒரு உரையாடலும் இல்லை.

எனவே ஞாநி முன்வைக்கும் புரிதலும், பகுப்பும் சர்ச்சைக்குரியன. இந்து ஆதரித்தால் அதை நாம் எதிர்க்க வேண்டும் என்பது எத்தகைய பகுத்தறிவுச் சிந்தனை.இப்படிப்பட்ட எளிமைப்படுத்த்ப்பட்ட புரிதல்களின் அடிப்படையில் செயல்படுவதே பகுத்தறிவிற்க்கு புறம்பானது.இது போல்தான் அயோக்கியர்கள், மூடர்கள் என்று வகைப்படுத்துவதும். உச்சநீதி மன்ற நீதிபதி ராமசாமி விவகாரத்தில் அவர் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்ற வாதம் அவர் குறித்த தீர்மானத்தை விமர்சிக்க பயன்படுத்தப்பட்டது.திராவிட கழகமும், திராவிட கட்சிகளும் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தன. இங்கு ஜாதியவாதமும், ‘பகுத்தறிவு ‘ க் கண்ணோட்டமும் கைகோர்க்கின்றன.இதற்கு காரணம் பெரியாரிய பகுத்தறிவு ஊழல், நிர்வாகச் சீர்கேடு போன்றவை குறித்த ஒரு விமர்சனப் பார்வையை முன்னெடுத்துச் செல்லாதது.

அயோக்கியர்கள் யார் ? ஊழல் செய்வோர் அயோக்கியர்கள் என்றால் திமுக ஆட்சி மீது எம்.ஜி.ஆர்

முன்வைத்த ஊழல் புகார்கள் குறித்து பெரியார்/தி.க என்ன கூறினார், அதில் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதை ஞாநி விளக்குவாரா ?. 1973ல் பெரியார் இறக்கிறார். 1971ல் திமுக ஆட்சிக்கு வருகிறது. திமுக ஆட்சி மீது அதிமுக மட்டும் ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.பெரியார் அன்று என்ன நிலைப்பாடு

எடுத்தார் என்பதன் அடிப்படையில் நாம் ஊழல் குறித்த அவரது கண்ணோட்டம் என்ன என்று முடிவு செய்யலாமா ?

1977 ல் அவசர நிலை முடிவுற்ற பின், ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் சிவில் சமூகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.அவசர நிலை ஒரு கசப்பான அனுபவமாக, ஒரு பாடமாக அமைந்த்து. இதனால் நாடெங்கும்

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பல இயக்கங்கள். குழுக்கள் தோன்றின. பெண்கள் அமைப்புகள் புதிய

உத்வேகத்துடன் எழுந்தன. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் சிவில் உரிமைகள் குறித்தும், அரசின்

அதிகாரம் குறித்தும் புதிய விளக்கங்களை அளித்தன. 1984ல் இந்திரா கொலை செய்யப்பட்தை அடுத்த

நடந்த இனப்படுகொலை, போபால் விபத்து போன்ற பல நிகழ்வுகள் சிவில் சமூகத்தில் பல புதிய

இயக்கங்கள்/குழுக்கள் தோன்ற காரணமாயின. இது போன்ற பல காரணங்களின் விளைவுதான் இந்து

வில் வெளியாகும் கட்டுரைகளில் ஏற்பட்ட மாற்றங்கள். ஞாநி இதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.இதுதான் அவர் முன்வைப்பதை விட முக்கியமான காரணம்.

2

வழிபாட்டுத் தலங்களில் மிருகங்களை பலி கொடுப்பது வழிபாட்டின் ஒரு பகுதி, அது தடை செய்யப்படுகிறது. ஆனால் பக்ரீத், ரம்ஜான் பண்டிகைகளின் போது ஆடுகள் வெட்டப்படுவது அனுமதிக்கப்படுவது சரியா ?

ஜீவகாருண்யம் அரசின் கொள்கையா ? அப்படியெனில் கோழி வளர்ப்பு, இறைச்சி கூடங்களில், அறிவியல் சோதனைக்காக மிருகங்களை துன்புறுத்துவது ஏற்புடையதா ? பலி கொடுப்பது மூட நம்பிக்கை என்றால் யாகங்கள், பூசைகள், ஏன் வழிபாடு கூட் மூட நம்பபிக்கைதான். அரசின் அதிகாரம் எல்லையற்றதல்ல. அரசு

தலையிடக் கூடாத விஷயங்கள் உண்டு.புழுக்களைக் கொன்றுதான் பட்டுக் கிடைக்கிறது என்பதால் பட்டுத் தொழிலை தடை செய்யலாமா ? ஒரே சமயத்தில் ஒரே கோயிலில் பல நூற்றுக்கணக்கான கோழிகள்/ஆடுகள்/மாடுகள் வெட்டப்படுவதால் பிரச்சினைகள் ஏற்படுமெனில் அதை ஒழுங்கு செய்யலாம்.உணவிற்காக

வெட்டலாம், வழிபாட்டிற்காக வெட்டக்கூடாது என்பது முரண். மேலும் சதி, குழந்தைத்திருமணம் போன்றவை தடுக்கப்பட்டதன் அடிப்படை வேறு.இத்தடையின் அடிப்படை வேறு. ஜீவகாருண்யம் அரசின் கொள்கை என்று அறிவித்தாலும் கூட அது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தாத வகையில்தான் இருக்க வேண்டும். பலி கொடுப்பது வழிபாட்டின் ஒரு அம்சம், வழிபாட்டு உரிமையை அரசு கட்டுப்படுத்த முடியாது, அதில் பொது நன்மைக்கு இடையூறு இருந்தால் ஒழிய. திருமாவளவன் சொல்லும் காரணம் பொருத்தமானதல்ல. அதே சமயம் ஞாநியின் வாதம் வலுவற்றது. அரசின் அதிகாரம் குறித்த கேள்வியை அவர் எழுப்பவில்லை. சமூக மாற்றம்/சீர்திருத்தம் என்பது அரசின் எல்லையற்ற அதிகாரத்தினால் மட்டும் சாத்தியமாவதில்லை. சட்டங்களின் மூலம்தான் மாற்றங்கள் ஏற்பட்டன என்றில்லை. பல புறக்காரணிகளும் அதை சாத்தியமாக்கின. அரசு எல்லாப் பிரச்சினகளையும் ஒரே மாதிரியாகவாக பார்க்கிறது. கருவிலே ஆணா/பெண்ணா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகின்றது. அது தவறாக, பெண்ணினத்திற்கு எதிராக பயன்படுத்துவது தமிழ் நாட்டில் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விட்டதா ? அது குறித்த சட்டம் மிகச் சரியாக அமுல் செய்யப் படுகிறதா ? இதை விட கோயில்களில் பலி கொடுப்பது மிக முக்கியமான பிரச்சினையா ? அது பிரச்சினையே அல்ல.

3

ஞாநி பெரியாரை, பகுத்தறிவை டார்ச் என்கிறார். ஆனால் டார்சின் போதாமைகள் குறித்து தெரிந்து கொள்வதும் தேவை. தேவைப்படும்போது அதைவிட அதிக சக்தி வாய்ந்த டார்ச்சை அல்லது வேறு விளக்குகளை பயன்படுத்த வேண்டும். என் அப்பா காலத்தில் பெரியாரிய டார்ச் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கலாம்,அதற்காக என் காலத்தில் குன்றிய போதும் அதையேதான் பயன்படுத்துவேன் என்பது பகுத்தறிவல்ல.அந்த டார்ச்சின் சில பகுதிகள் இன்னும் பயனுள்ளதாக இருக்கலாம், அதை பயன்படுத்த முடியுமா,

எப்படி பயன்படுத்த முடியும் என்றுதான் யோசிக்க வேண்டும். பாட்டரி செல் வலுவிழந்த நிலையில் அதற்கு

பதிலாக வேறு செல்கள் போட்டுத்தான் டார்ச்சினைப்பயன்படுத்த முடியும்.தேவையானல் புது டார்ச் வாங்க வேண்டும். பெரியாரிய டார்ச் இன்று ஒரளவே பயன்படும்.பல நேரங்களில் மார்க்சிய டார்ச் அதைவிட பொருத்தமாக உள்ளது.

ravisrinivas@rediffmail.com

Series Navigation