பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1

This entry is part of 39 in the series 20031016_Issue

வின் டெலோரியா


இந்த உலகம் மூன்று அடுக்கு கொண்ட மாடிக்கட்டடமாக இருந்திருந்தால், வரலாறு பற்றிய கிறிஸ்தவ கொள்கை உண்மையாக இருந்திருக்கும். நவீன மக்கள் நம்பியும் இருந்திருக்கலாம். மனித குலம், ஏடன் தோட்டத்திலிருந்து வளர்ந்து இந்த உலகத்தில் நிரம்பியது எல்லா மக்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், மூதாதைய தீர்க்கதரிசிகள் சொன்னது போல உலகம் அப்படியே இருந்துவிடவில்லை. அலெக்ஸாண்டர் 300 b.c இல் இந்தியாவின் அற்புதங்களை ஐரோப்பாவின் கிழக்குப்பக்கத்தில் இருந்தவர்களிடம் காண்பித்தார். அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் செய்த உலகத்தைச் சுற்றிய பிரயாணங்கள் விவிலியத்தின் ஜெனஸிஸ் எழுதியவர் கற்பனை செய்த அளவைவிட உலகம் மிகமிகப்பெரியது என்பதை காட்டியது. கொலம்பஸ் உண்மையிலேயே உலகம் ஒரு உருண்டை என்பதை காட்டினார்.

புதிய உலகம் (அமெரிக்கா) கண்டுபிடிப்பு, கிரிஸ்துவ கொள்கையாளர்களுக்கு கொடுத்த வேதனை மிகப்பெரியது. சொல்லப்போனால் அதனை முழுமையாக புரிந்துகொள்ளக்கூட இல்லை. கோடிக்கணக்கான மக்கள் ஐரோப்பாவை விட பெரிய நிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை எப்படி புரிந்து கொண்டார்கள் ? ‘ஒரே உண்மையான மதமான கிரிஸ்துவத்தின்படி ‘ இவர்களின் நிலை என்ன ? கடவுள் இவர்களுக்கென என்ன குறிக்கோளை வைத்திருந்தார் ? இத்தனை மக்களுக்கும் விவிலியம் சொல்லித்தரப்பட்டு முடியும் வரைக்கும் யேசு வராமல் இருப்பாரா ? ஏராளமான மக்களைக் கண்டறிந்த இந்த சமயத்தில், கடவுளின் தேர்ந்தெடுத்த தேசங்களின் பொறுப்பு என்ன ?

ஆனால், இந்த புது உலகத்தைக் கண்டறிந்ததும்,அதன் ஏராளமான செல்வங்களைக் கேள்விப்பட்டதும், கிரிஸ்துவ நாடுகளிடமிருந்து வந்த ஒரே எதிர்வினை, அளப்பறிய பேராசை மட்டுமே. மத்தியக்கிழக்கில் முஸ்லீம்களை அடக்கமுடியாமல் துரத்தப்பட்டபின்னர், முடியரசுகளின் தெய்வீகத்தை நிலைநிறுத்த பெரும்போர்களில் ஈடுபட்டு வலுவிழந்த பின்னால், தங்களை தொடர்ந்து காப்பாற்றிக்கொள்ள ஐரோப்பிய அரசர்களுக்கு, தீராத ஒரு வருமானம் தேவைப்பட்டது. முடியரசுக்கு பணஉதவி செய்வதன் காரணமாக அரசியல் உரிமைகளையும் பொருளாதார பயன்களையும் கோரும் வளர்ந்து வரும் வியாபார வர்க்கங்களுக்கு தொடர்ந்து உரிமைகளை மறுக்க, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘இந்தியா ‘விடமிருந்து தொடர்ந்த ஆறு போல வரும் வருமானத்தை கனவுகண்டன ஐரோப்பிய முடியரசுகள். கிரிஸ்துவ சர்ச்சும், இந்த புதிய நிலங்களை சுரண்ட ஆர்வமாக இருந்தது. கிரிஸ்துவ சர்ச்சின் அரசியல் சக்தி, வலிமையான ஐரோப்பிய அரசியல்வாதிகளால் குறைந்துகொண்டே வந்தது. ஆகவே, கிரிஸ்துவ சர்ச், இந்த புதிய நிலங்களைச் சுரண்ட தெய்வீக அனுமதி அளிப்பதன் மூலம், இந்த சுரண்டலில் ஒரு பங்கை அபகரிக்க இதனை ஒரு சாதனமாகவும் கண்டது. 1493இல் போப் அலெக்ஸாண்டர் VI, புதிய உலகத்தை எந்த கிரிஸ்துவ அணுகுமுறையோடு அணுகவேண்டும் என்பதை குறிக்க இண்டர் காடேரா புல் என்னும் அறிவிப்பை வெளியிட்டார். ‘ நமது கத்தோலிக்க மதமும், கிரிஸ்துவ நம்பிக்கையும், எல்லா இடங்கலிலும் கொண்டாடப்படவேண்டும் என்பதும், அது இன்னும் பரவவேண்டும் என்பதும், ஆத்மாக்களின் ஆரோக்கியம் கவனிக்கப்படவேண்டும் என்பதும், காட்டுமிராண்டி நாடுகள் தூக்கி எறியப்பட்டு அவை நம் கடவுள் நம்பிக்கை கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்பதும், தெய்வீக மேன்மை தங்கியவரும், நம் இதயத்தில் கொண்டாடப்படுபவருமான கடவுளுக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்று – அதிலும் அவரது ஆசைகளில் முதலாவதாக இருப்பது, ‘

இஇந்த ஆன்மீக மொழிக்கு நடைமுறை பொருள் என்னவென்றால், செவ்விந்தியர்களின் நிலங்களைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுமதி அளிப்பதுதான். போப் மேற்கண்டவற்றை இன்னும் நடைமுறை வார்த்தைகளில், ‘உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும், அவரது வம்சாவளியினருக்கும், கேஸ்டில் மற்றும் லியோன் அரசர்களுக்கும், மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கும், தீவுகளுக்கும், இன்னும் கண்டுபிடிக்கப்படும் நாடுகளுக்கும், அதன் கீழ் இருக்கும் நகரங்களுக்கும், இடங்களுக்கும், கிராமங்களுக்கும் எல்லா உரிமைகளும் பாத்தியதைகளும் கொடுக்கப்படுவதாக ‘ கூறினார்.

உங்களுக்குத் தெரிந்ததுபோலவே, செவ்விந்தியர்களின் நிலங்களையும், கிராமங்களையும் கொடுக்க – அகிலம், வரலாறு மற்றும் நம் கிரகத்தின் வரலாறு பற்றி கிரிஸ்துவ மதம் சொல்லுபவை உண்மையாக இருந்தால் ஒழிய – போப்புக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. அப்படி ஒரு நிலை இருந்தால், இந்த முழு பூமியும் பரலோகத்தில் இருக்கும் பிதா, போப்புக்கு ஃப்ராண்ஸைஸாக கொடுத்துவிட்டுப் போனதை இவர் நினைக்கும் ஆட்களுக்கு வினியோகிக்கலாம். மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகள், செவ்விந்தர்களையும் அவரது நிலங்களையும் மதச்சார்பின்றி ஆக்கிரமித்துச் சுரண்டியதையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், 1493இன், இந்த போப்பாண்டவர் அறிக்கை, இதுவரை இருந்ததாகக் கருதப்படாத மக்களை எப்படி கிரிஸ்துவ மதம் அதிகாரப்பூர்வமாக அணுகியது என்பதை அறியலாம்.

இவ்வாறு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மக்களைப் பற்றிய கிரிஸ்துவ நிலைபாடு சம்பந்தமான விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்போதே, மேலும் மேலும் இந்த புது உலகம் பற்றிய செய்திகள் ஐரோப்பிய மக்களைச் சென்றடைந்தன. ஆனால், டோர்டெஸில்லாஸ் ஒப்பந்தம் Treaty of Tordesillas தெளிவாக தென்னமெரிக்காவை ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே பிரித்துக்கொடுத்தது. இந்த கண்டத்துக்கு பிரயாணமோ அல்லது அங்கிருக்கும் மக்களை வெற்றிகொள்ளவோ கூட செய்யவில்லை இவர்கள். அதற்குள்ளாகவே பிரித்துக்கொடுக்கும் ஒப்பந்தம். போப்பாண்டவர் ஒரு தெய்வீக ஒழுங்குடன் உலகத்தில் நிலங்களைப் பிரித்துக்கொடுக்கவில்லை. இது உண்மையில் கற்பழிப்புக்கும், கொள்ளைக்கும் தேசிய வேட்டையாடும் லைஸன்ஸ்.

Series Navigation