அடைப்புகளூக்கு அப்பால்….

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

PS நரேந்திரன்.


ஆனந்த விகடன் 75வது ஆண்டு மலரில், அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ‘அடைப்புகள் ‘ சிறுகதையைப் படித்ததிலிருந்து ஏற்பட்ட பதற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. எதனால் இந்தப் பதற்றம் என்று விளக்குவதற்கு முன், அந்தக் கதையைப் பற்றி சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

கதையானது, கனடாவில் வளர்ந்த, வசிக்கும் ஒரு தெற்காசிய இளம் பெண்ணைப் பற்றியது. தாய் கேரளத்தவர். தகப்பன் இலங்கையைச் சேர்ந்தவர். எல்லா முதல் தலைமுறை வெளிநாடு வாழ் ஆசியர்களின் குழந்தைகளைப் போலவே குழப்பமான மனநிலையில் வளர்க்கப் பட்டவள். இரு வேறு கலாச்சாரங்கள் மோதும் அவளின் அன்றாட வாழ்க்கை மற்றும் மனநிலைப் போராட்டமே கதையின் கரு. முத்துலிங்கம், இந்தக் கதையினை மிக அருமையாகக் கையாண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் இப்படிப் பட்டவர்களை A..B..C..D (American Born Confused Desi) என்று சொல்வார்கள். அவர்களால் அமெரிக்கர்களைப் போல சுதந்திரமாகவும் இருக்க முடியாது. அதே நேரத்தில் இந்தியர்களைப் போல கட்டுப் பெட்டியாகவும் வாழ மனம் இணங்காது. ஒருவிதமான அவஸ்தையான வாழ்க்கை ABCDகளுடையது. இந்தியில் Desi என்பது தேசத்தவர் என்று பொருள்படும் ஒரு சொல். இந்தியர், பாகிஸ்தானியர், பங்களாதேசிகள் போன்றவர்கள் Desi என்ற பதத்திற்குள் வருவார்கள். அமெரிக்காவில் பிறக்காவிட்டாலும் ஒரு ABCDக்குரிய அனைத்து குணாம்சங்களூம் கொண்டவள்தான் மேற்படிக் கதையின் நாயகியான மீனுக் குட்டி.

இந்தியாவில் வசிப்பவர்கள் மேம்போக்காக இந்தக் கதையைப் படிக்கும் போது சாதாரணமான ஒன்றாகத்தான் தோன்றும். அதே சமயம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் வசிக்கும், பெண் குழந்தைகளை உடைய என்னைப் போன்ற முதல் தலைமுறை Desiக்களுக்கு message இருக்கிறது இந்தக் கதையில். வீட்டில் பெற்றோரின் சொந்த நாட்டுக் கலாச்சாரத் திணிப்பும், வெளியே அதற்கு எள்ளளவும் சம்பந்தமில்லாத வாழ்க்கை முறையும், வெளிநாடுகளில் வளரும் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன. முரண்பாடுகளின் தாக்கம், பெற்றோர்களை விடக் குழந்தைகளை ஒரு வித குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்றால் மிகையில்லை. இந்தக் கருத்து ‘அடைப்புகள் ‘ கதையில் இழையோடியிருக்கிறது.

தங்கள் கட்டுப்பாடுகளைத் திணிக்க முயலும் பெரும்பாலான ஆசிய வம்சா வழிப் பெற்றோர்கள் பெரும்பாலும் தோல்வியடைகிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்தியா வேறு. அமெரிக்கா வேறு. சிந்தனை, செயல்பாடு அனைத்துக் வெவ்வேறானவை. இங்கு வளரும் குழந்தைகள் சுதந்திரச் சிந்தனையுடன் வளர்கிறார்கள். அவர்களைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம்.

இப்படித்தான் கொஞ்ச நாட்களூக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் அரக்கப் பரக்க ஒடிவந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு பெண். ஒரு ஆண். பெண் குழந்தைக்கு ஒன்பது வயதாகிறது. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் (அமெரிக்காவில் 6 வயதில்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்கள்). My Secret Diary என்று கையால் தயாரிக்கப் பட்டு, staple செய்யப்பட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தை என்னிடம் காட்டினார் நண்பர். அதில், I like boys. They are cute என்று குழந்தைத்தனமான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

‘என்னுடைய மகளின் தலையணைக்கு அடியில் இருந்து இதை எடுத்தேன் ‘ என்றார் நண்பர் கவலையுடன்.

இதில் கவலைப் பட என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு ஒன்பது வயது பெண் குழந்தை எழுதியதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ற நினைப்புடன், ‘இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்…அவள் இன்னும் சிறு பெண்தான்… ‘ என்று சிரித்துக் கொண்டே சொல்லி அனுப்பினேன். இருப்பினும் மனதிற்குள் சிறிது சஞ்சலம் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை.

யோசனையுடன் என் மகளின் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கையை கன்னத்திற்கு அடியில் கொடுத்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் தூங்கும் போது பார்த்து ரசிப்பது போல மனதிற்கு மகிழ்ச்சி தருவது எதுவும் இல்லை. எந்தக் கவலையும் இல்லாத, ஏழு வயதுக் குழந்தையின் முகத்தில் இருக்கும் நிம்மதி கோடிப் பணம் கொடுத்தாலும் காணக் கிடைக்காதது. அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.

‘சே..சே…என் மகள் நான் சொல்வதைத்தான் கேட்பாள். என்னை மீறி எதுவும் செய்யது விடமாட்டாள் ‘ என்றேன் மனதிற்குள்.

‘ஹா…ஹா ‘ என்று யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது.

‘யாரது ? ‘ என்றேன் திகிலுடன்.

‘நான்தான் எதிர்காலம். உன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டே, எனக்கு அதுபோல் நடக்காது என்று நினைக்கிறாயே…அதை நினைத்துதான் சிரிக்கிறேன்…தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல பாசாங்கு செய்பவனை எப்படி எழுப்புவது ? ‘

‘என்ன சொல்கிறாய் நீ ? என் மகள் என் பேச்சைத் தட்டவே மாட்டாள். பார்க்கத்தானே போகிறாய் நீயும் ? ‘

‘கேட்காவிட்டால் ? ‘

‘அவளை இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டு போய் விடுவேன் ‘

‘அவள் வர மறுத்தால் ? ‘

‘மறுத்தால்….அவளை கயிறு கட்டி இழுத்துக் கொண்டு போவேன். உனக்கென்ன வந்தது ? ‘

‘தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டிலிருப்பதை மறந்துவிட்டு உளராதே…எவரையும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்பது உனக்கு நன்றாகவே தெரியும்…மறந்துவிட்டது போல நடிக்கிறாய்… ‘

‘வாயை மூடு. உன்னை யாரும் இங்கு அழைக்கவும் இல்லை. உன் அறிவுரை எனக்குத் தேவையுமில்லை ‘ என்றேன் எரிச்சலுடன்.

‘உள்ளதைச் சொல்பவனுக்கு உலகில் இடமில்லை ‘ என்று சத்தமிட்டுக் கொண்டே ஓடி மறைந்தது எதிர்காலம்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ‘அடைப்புகள் ‘ கதையால் ஏன் எனக்குப் பதற்றம் வந்தது என்று.

********

இங்ஙனம் எனது சிந்தனைச் சிதறலுக்குக் காரணமான எழுத்தாளர் முத்துலிங்கத்தை சும்மா விடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் வலுப் பெற்றுக் கொண்டு வருகிறது. என்ன செய்யலாம் அவரை ? என்பதே எனது தற்போதைய சிந்தனை.

அமெரிக்காவில்தான் எதெற்கெடுத்தாலும் வழக்குப் போடுகிறார்களே. விடாமல் சிகரெட் புகைத்து அதன் காரணமாக கேன்சர் வந்தவர்கள், எந்த பிராண்டு புகைத்தார்களோ அந்த பிராண்டு சிகரெட் கம்பெனி மீது வழக்கு போடலாம். உன்னுடைய சிகரெட்டால்தான் எனக்குக் கேன்சர் வந்ததென்று.

‘சிகரெட் குடித்தால் கேன்சர் வரும் என்று சின்னப் பயலுக்குக் கூடத் தெரியும். பிறகு நீயேன் அந்த கசமாலத்தைப் புகைக்க வேண்டும் ? ‘ என்று ஒரு நாயும் கேட்காது. பதிலாக, சிகரெட் கம்பெனி மில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு தரவேண்டும் எனத் தீர்ப்பு வரும். வந்ததே கொஞ்ச நாளைக்கு முன்பு கூட! அது மாதிரி, Causing unnessary stress to readers by writing truth என்று ஏதாவது அல்ப காரணம் சொல்லி அவர் மீது வழக்குப் போடலாமா என்று யோசித்தேன்.

அதில் ஒரு சிக்கல். அவரோ Canada-க்காரர். இந்த மாதிரி ஒரு வழக்குப் போட்டால், ஏற்கனவே கந்தலாகி இருக்கும் அமெரிக்க-கனேடிய உறவு மேலும் நைந்து போய்விடுமோ ? அதற்கு நான் காரணமாகி விடுவேனோ ? என்ற அச்சம் என்னை எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுக்கிறது. அதை விடுங்கள். இந்திய-இலங்கை உறவு என்னாவது ? அதை மறந்து விட்டேனே. இதை ஒரு international issue ஆக்க எனக்கு விருப்பமில்லாததால், வழக்குப் போடும் முடிவைக் கிடப்பில் போட்டுவிட்டேன் (தற்போதைக்கு).

ஏதாவது அமெரிக்க தொலைக்காட்சி சேனல் Talk show-வுக்கு இதைப் பற்றி எழுதிப் போடலாமா என்ற யோசனையும் இருந்தது. இந்த மாதிரி ஒரு பலான பலான எழுத்தாளர் எழுதிய கதையால் எனக்கு depression அதிகமாகி டாக்டரிடம் போக நேர்ந்தது. அதனால் அமெரிக்க tax payer களுக்கு அநாவசிய செலவு என்று ஏதாவது புருடா விட்டால் கண்டிப்பாக ஒளிபரப்புவார்கள். அதிலும் Tim O ‘reiley மாதிரியான ஆசாமிகளூக்கு இந்த மாதிரியான செய்தி என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. சும்மாவே ‘வெறுந் தண்ணீரைக் கடைந்து, வெண்ணெய் எடுக்கிற ‘ ஆசாமி அவர். கனடா, ஃபிரான்ஸ்காரர்களுக்கு எதிரானதென்றால் பட்டையைக் கிளப்பி விடுவார். கடைசியில் அந்த எண்ணமும் கைகூடவில்லை. மீண்டும் கனேடிய-அமெரிக்க, இந்திய-இலங்கை உறவு பற்றிய அச்சமே காரணம். ஆக இப்போதைக்கு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

********

மதிப்பிற்குரிய முத்துலிங்கம் மன்னிப்பாராக!

********

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்