லாந்தல் விளக்கு

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

பரிமளம்


தமிழ்ச் சினிமாவுக்கும் தமிழ் வாழ்வுக்கும் உள்ள இடைவெளி அல்லது தமிழ்ச் சினிமாவுக்கும் தர்க்கரீதிக்கும் உள்ள இடைவெளி இரண்டில் எது அதிகம் என்னும் கேள்விக்கு எளிதில் விடை கிடைத்துவிடாது. இந்தத் தமிழ்ச் சினிமாக்களைப் பார்த்த பயத்தில் உலகின் வேறெந்த நாட்டுப் படத்தைப் பார்த்தாலும் அந்தப் படத்துக்கும் அந்த இடத்து வாழ்வுக்குமான நெருக்கத்தைப் பற்றி எந்த முடிவுக்கும் வருவதற்குத் தயக்கமாகவே இருக்கிறது. எனவே ஒரு அயல்நாட்டுப் படத்தைப் பார்க்கும் போது அந்தப் படம் தன்னளவில் சிறப்பாக இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Johnny Belinda (1948) உதாசீனப்படுத்தப்படும் ஒரு செவிட்டூமையான இளம்பெண்ணைப் பற்றிய படம். இவள் தாயற்றவள்; வறிய குடும்பம்; அன்பில்லாத் தந்தையோடும் ஆதரவான அத்தையோடும் வாழ்கிறாள். அவள் வாழும் ஒரு சிற்றூருக்குப் புதிதாக வந்திருக்கும் மருத்துவர் ஒரு நாள் அவளைக் காண்கிறார். வீடு திரும்பியதும் ‘சைகை மொழி’ப் புத்தகம் ஒன்றைத் தேடியெடுத்துப் படிக்கிறார். மறுநாளிலிருந்து அந்தப் பெண்ணுடைய வீட்டுக்குச் சென்று அவளுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்குகிறார். பிறகு மெதுமெதுவாக அந்தப் பெண் தன் கூட்டுக்குள்ளிருந்து வெளிவருவது, வேறு சிக்கல்கள் என்று போகிறது இந்தப்படம்.

A Patch of Blue (1965) ஒரு பார்வையற்ற இளம்பெண்ணைப் பற்றிய படம். இந்தப் பெண் தந்தையை இழந்தவள்; வறுமை; இரக்கமற்ற தாயோடும் ஆதரவான (ஆனால் குடிகார) தாத்தாவோடும் வாழ்கிறாள். நகரத்துப் பூங்காவின் மர நிழலில் பகல் முழுவதும் உட்கார்ந்து மணிகளைக் கோர்த்து மாலையில் அதை ஒப்படைக்க வேண்டும். ஒரு நாள் வழக்கம்போல் பூங்கா/அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டும்/தாத்தாவோ எங்கோ போய்த் தொலைந்துவிட்டார். இந்த நிலையில் அவளுக்கு ஒரு கறுப்பின இளைஞன் (Sidney Poitier) உதவுகிறான். யாருடைய உதவியும் இல்லாமல் மரத்தடியிலிருந்து கழிப்பிடத்துக்கு எவ்வாறு போய் வருவது என்று அவளுக்குக் கற்றுக் கொடுப்பது அவன் செய்யும் அடுத்த உதவி. பிறகு இருவருக்குமிடையே ஏற்படும் நட்பு, நிற வேற்றுமை பற்றி வளர்கிறது இந்தப்படம்.

உடற்குறையுள்ளவர்கள் கையற்றுக் கடவுளை நோக்கிப் பாடிப் பிச்சையெடுக்க வேண்டியவர்கள் அல்லது நகைச்சுவைக்குரிய பொருள்கள் என்று இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சினிமாவின் வக்கிரம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

****

வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கும் முன்பே நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டனர் என்று சிலரால் எப்படித்தான் கூற முடிகிறதோ தெரியவில்லை. எட்ஸ்க்கு மருந்திருக்கிறது, சார்ஸ்க்கு மருந்திருக்கிறது என்று மந்திரவாதியைப் போலச் சொல்வதோடு சரி; மாங்காயை இவர்கள் கண்ணில் காட்டுவதில்லை.

****

மின்விளக்கைப் பற்றியும் அதைக் கண்டுபிடித்தவர் பட்ட பாடுகளைப் பற்றியும் பள்ளியில் படித்திருந்ததால் மின் விளக்கும் மின்சாரமும் நம் நாட்டுக் கண்டுபிடிப்புகளல்ல என்பது ஒரு சாதாரண செய்தியாகவே இருந்தது. (எடிசனின் ஆய்வு நெறியையும், தொழில் நெறியையும் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் நிறைய உள்ளன) ஆனால் ஏழைகளுக்கே சொந்தமானது, அவர்களுக்ககாகவே தயாரித்து விற்கப்படுவது என்று நான் பலகாலம் எண்ணிக் கொண்டிருந்த லாந்தல் விளக்கும் அரிக்கேன் விளக்கும்கூட நம் நாட்டுக் கண்டுபிடிப்புகளல்ல என்பதையும் அவை ஆங்கிலச் சொற்கள் என்பதையும் அறிந்தபோது நான் அடைந்த வியப்புக்கும் வேதனைக்கும் அளவில்லை.

இந்தியர்கள் எதைத்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் ? இந்தியா என்ற நாடும் அதன் ஊழலும் முதற்கொண்டு இப்போது நம் பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான பொருள்கள் வரை அனைத்தும் வெளிநாட்டினரின் கொடைகளே. நாம் காலனி நாடாக இருந்ததால் அறிவியல் வளர்ச்சி நம்மிடம் இல்லாது போயிற்று என்பதைவிடக் காலனியாக இருந்ததால்தான் நம் நாட்டுக்கு நவீன அறிவியல் அறிமுகமானது என்பதை ஏற்றுக்கொள்வதே சரி என்று கருதுகிறேன்.

ஏனெனில் அறிவியல் சிந்தனைக்கும் நம் நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நம் சமூகம் தேக்கமடைந்த ஒரு சமூகம்; தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளல் என்பதை அறியாத சமூகம்; மாற்றங்களை ஏற்கத் தயங்கும் ஒரு சமூகம். நம்மிடம் ஆராய்ச்சி நோக்கோ அறிவியல் மனப்பான்மையோ இல்லை. சுருக்கமாகச் சொன்னால் நவீன அறிவியலின் உருவாக்கத்தில் நம் பங்களிப்பு ஏதுமில்லை. பண்டைக்கால இந்தியக் கணித வளர்ச்சி தற்செயலாக நிகழ்ந்த விதிமீறலேயன்றி விதியன்று.

நம்மிடம் எதிரதாக் காக்கும் தொலைநோக்கும் இல்லை; கடந்து போனவற்றிலிருந்து பாடங்கற்கும் குணமும் இல்லை. இன்னும் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகள் அல்லது அதற்கும் அப்பால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம், எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று வளர்ந்த நாடுகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நாமோ நம்மிடம் எப்படியோ ஏற்பட்டுவிட்ட மாற்றங்களில் உள்ள குறைகளைச் சரி செய்வதற்குக்கூட வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நெறிப்படுத்துவதில் உள்ள குழப்பங்களை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

****

நவீன அறிவியலை விட்டு விடுவோம்; லாந்தல் விளக்கு நம்முடையதாக இல்லாமல் இருந்து தொலையட்டும். உடற்குறையோடு பிறந்தவர்களுக்கு உதவி செய்யலாம் என்னும் ஒரு சிறு எண்ணமாவது நம் மரபில் இருந்ததுண்டா ? ஒரு சைகை மொழியையோ, ஒரு பிரெய்லி போன்ற முறையையோ கூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே எனக்கு அதிக வருத்தத்தைத் தருகிறது.

அனாதைகள், ஆதரவற்றவர்கள், திசைமாறிப்போனவர்கள் என்று வாழ்வின் கடைநிலையில் உள்ளவர்களுக்குத் தொண்டு செய்ய ஒரு முறையான அமைப்பை ஏற்படுத்தலாம் என்னும் எண்ணமும் வெளியிலிருந்தே வந்திருக்கிறது.

****

நாம் முன்பே எல்லாவற்றையும் கண்டுபிடுத்துவிட்டோம் என்று சொல்பவர்கள் எதிர்காலத்திலும் இப்படியேதான் சொல்லப்போகிறார்கள். மற்றவர்கள் கண்டுபிடித்த பிறகு பெருமையடிப்பதற்குப் பதிலாக எதிர்காலக் கண்டுபிடிப்புகளை நம் பழைய குறிப்புகளிலிருந்து இப்போதே தேடிக் கொடுத்தால் அடுத்தவர் கண்டுபிடிப்பதற்கு முன் நாமே அவற்றைக் கண்டுபிடித்துவிடலாமே. (எ.டு: சார்ஸ் போன்ற ஒரு புதிய நோய் வருவதற்கு முன்பே நாம் அதற்குரிய மருந்தோடு இருந்தால் நல்லதுதானே!) செய்வார்களா ?

****

முதலில் பார்த்த அந்த இரண்டு படங்களிலும் அந்த இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களையும் காதலிக்கவோ கைப்பிடிக்கவோ இல்லை.

ஆண்கள் இப்படிச் செவிட்டூமையாகவோ அல்லது பார்வையில்லாமலோ இருந்தால் படம் பார்ப்பவர்களுக்கு இரக்கம் ஏற்படுமா ?

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்