பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

ஞாநி


(பாய்ஸ், விடலைப்பையன்கள்,சுஜாதா, ஷங்கர், கட்டப் பஞ்சாயத்துகள், ஆடு, கோழி, சுகந்திகள், அரசாங்க புல்டோசர், ஜெயலலிதா , திராவிடக் கலாசாரக் காவலர்கள், தலித் அரசியல் விஞ்ஞானிகள், இடதுசார்ிப் பூசாரிகள் நிறைந்த தமிழ்ச் சூழலை முன்வைத்து அயோக்கியர்களையும் முட்டாள்களையும் தேடும் ஓர் முயற்சி)

மவுண்ட் ரோட் மகாவிஷ்ணு என்று குத்தூசி குருசாமியால் வர்ணிக்கப்பட்ட ‘தி ஹிந்து’ ஆங்கில நாளேட்டுக்கும் , அதன் எதிர்ப்புள்ளிியில் இயங்கி வந்த சிந்தனையாளர்- போராளி பெரியார் ஈ.வே.ராமசாம்ிக்கும் ஒரே நேரத்தில் 125வது ஆண்டு வ்ிழா அமைந்திருப்பது சரித்த்ிரத்தின் விசித்திரங்கள்ில் ஒன்று.

ஹிந்து நாளிதழைத் தொடங்கிய ஜி.சுப்பிரமணிய அய்யர் சமூக மாற்றங்களிலும் சீர்திருத்தங்களிலும் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தவ்ர்தான். அதனால்தான் தன் இளம் வ்ிதவை மகளுக்கு நூறாண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்யும் துண்ிச்சல் அவருக்கு இருந்தது. ஆனால் அவரால் ஹிந்துவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. கஸ்தூரிரங்க அய்யங்காரிட்ம் கொடுத்துவிட்டு தமிழில் ‘சுதேசமித்திரன்’ இதழை நடத்தப் போய்விட்டார். ஆங்கில ஏடு 125 வயதை 20 வயது இளைஞரின் வலிமையுடன் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் ஏடு 50 வயதைக் கடந்த பிறகு தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுவிட்டது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பு, இந்திய விடுதலை என்ற அரசியல் லட்ச்ியங்களுக்கு முன்னுரிமையா, ஜாதி மத மூடத்தனங்களினால் பாழ்பட்டுக் கிடந்த

இந்திய சமூகத்தின் அடிப்படைகளை சீர்திருத்துவதற்கு முன்னுரிமையா என்ற கேள்வி 1800களிலிருந்து 1950கள் வரை சமூக அக்கறையுள்ள பலரையும் வாட்டியிருக்கிறது. புரட்சிகர அரச்ியலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களில் பலர் சமூகப் பிற்போக்குத்தனங்களுடன் சமரசம் செய்ததும், சமூக மாற்றமே முதன்மையானது என்று கருதியவர்களில் பலர் அரசியல் பிற்போக்கு சக்திகளுடன் சமரசம் செய்ததும் நடந்தது.

ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து விடுதலைக்கு முன்னுரிமை கொடுத்தது ஹிந்து. எனவே ஏறத்தாழ தொண்ணூறுகள் வரை சமூக சனாதனத்தைக் கண்டு கொள்ளாமல் பெரியாருக்கு எதிர் நிலையிலேயே ஹிந்து இருந்து வந்திருக்கிறது. குடி அரசிலும் விடுதலையிலும் தன் உதவி ஆசிரியர்கள் தலையங்கம் எதைப் பற்றி எழுதலாம் என்று பெரியாரிடம் ஆலோசனை கேட்கும்போது அன்றைய ஹிந்து எதை ஆதரித்திருக்கிறதோ அதை எதிர்த்து எழுதினாலே நமது இன ந்லன்களுக்கு உகந்ததாகத்தான் இருக்கும் என்று பெரியார் சொல்லும் அளவுக்கு அந்த நிலை இருந்திருக்கிறது.

இன்று தலித் உரிமைகள் , மதவெறி பிரச்சினைகள், பெண்ணியம், சுற்றுச் சூழல் அக்கறை என்று பெரியாரிய ஆதரவாளர்கள் அக்கறை காட்டும் பல விஷயங்கள் பற்றி விரிவான, ஆழமான கட்டுரைகளை, விவாதங்களை வெளியிடும் ஒரே வெகுஜன ஆங்கில ஏடாக ஹிந்து இருக்கிறது. இந்த மாற்றத்துக்குப் பல காரணங்கள் உண்டு. ஹிந்துவை நடத்தும் குடும்பத்துக்குள் ஏற்படும் அதிகார மாற்றங்களும் ஒரு காரனம். ஆனால் முக்கியமான காரணம் பெரியார்தான்.

பெரியாரின் சமூக மாற்ற இயக்கம், அரசியல் அதிகாரத்தை ஹிந்து ஆதரித்து வந்த சக்திகளிடமிருந்து இடம் பெயர்த்து வைத்தது. இந்த அதிகார மாற்றம் ஒரு பக்கம் தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் ஊழலுக்கும் சுரண்டலுக்கும் சீரழிவுக்கும் பயன்பட்டபோதிலும், இன்னொரு பக்கம், ஒட்டு மொத்த சமூகத்தை முன் எப்போதையும் விட ஜனநாயகப்படுத்தியிருக்கிறது.

இட ஒதுக்கீடும், கல்வி பரவலாக்கப்பட்டதும், சமூகத்தின் பொதுவெளியை ஜனநாயகமாக்கியதன் விளைவாக ஹிந்து போன்ற இதழ்களும் இந்த மாற்றத்துக்கு ஏற்ப ஓரளவேனும் தங்களையும் மாற்றிக் கொண்டாக வேண்டி வந்திருக்கிறது.

பெரியார் இந்த மாற்றத்தை தன்னுடைய நேரடி அரசியல் பங்கேற்பின் மூலம் சாதிக்க வில்லை. தன்னுடைய சமூக சீர்திருத்தப் பகுத்தறிவு, சமூக நீதிப் போராட்டங்களின் மூலமாக ஆட்சியாளரகளை நிர்ப்பந்தித்தும், சம்மதிக்க வைத்தும் பல மாற்றங்களுக்குக் காரணமாயிருந்திருக்கிறார்.

பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, மனித சமத்துவம் இவையே பெரியாரின் எல்லா செயல்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன.

இந்த சமூகம் இரண்டே விதமாகப் பிரிந்து கிடப்பதாகப் பெரியார் தெளிவாகப் புரிந்துகொண்டார். ஒரு பக்கம் அயோக்கியர்கள். மறுபக்கம் முட்டாள்கள். அயோக்கியர்களிடமிருந்து முட்டாள்கள் விடுதலை பெற வேண்டுமானால், முட்டாள்களுக்குத் தேவைப்படுவது பகுத்தறிவு. அதை முட்டாள்கள் அடைய விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பதைத்தான் அயோக்கியர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். முட்டாள்கள் பக்கம் நிற்பதாக நினைத்துக் கொண்டு அயோக்கியர்களுக்கு சாதகமாக செயல்படும் முட்டாள்களும் உண்டு. அயோக்கியர்களை முட்டாள்களின் காவலர்களாக நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள்களும் உண்டு.

இப்படி எல்லாவிதமான அயோக்கியத்தனத்தையும் எல்லாவிதமான முட்டாள்தனத்தையும் எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருந்ததுதான் பெரியாரின் வரலாறு; வாழ்க்கை.

சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்விலும், யார் முட்டாள்கள், யார் அயோக்கியர்கள் என்று பகுத்தறிவின் துணையுடன் ஆராய்ந்து கொண்டே இருப்பதுதான் பெரியாருக்கு செலுத்தும் மெய்யான மரியாதையாக இருக்க முடியும்.

சில சமீப நிகழ்வுகளைப் பார்ப்போம். தமிழ்ச் சமூகத்தினை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இரு பெரும் சக்திகளான செக்ஸ், பக்தி இரண்டின் அடையாளங்கள் இந்த நிகழ்வுகள். ஒன்று பாய்ஸ் சினிமா . இன்னொன்று கிடாவெட்டு அரசு ஆணை.

பாய்ஸ் சினிமா வர்த்தக வெற்றியை தொடர்ந்து குவித்துக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் படம். வசனம் மதன் முதல் மனுஷ்யபுத்திரன் வரை கொண்டாடும் சுஜாதா. ஒரு பெண் “ போடாங்கோத்தா “ என்று சொல்வதில் தொடங்கி சுஜாதாவின் வசனம் இந்தப் படத்தின் முக்கிய அம்சம். பெண்கள் மார்பகங்களை பெரித்ாக்க, கெட்டியாக்க என்னென்ன பயிற்சி செய்கிறார்கள் என்று பாய்ஸ் கேட்டுத் தெரிந்து கொள்வது, பஸ்சிலும் ஜவுளி, நகைக்கடைகளிலும் சுரணையற்ற பெண்களை எப்படி குண்டியில் இடிக்கலாம் என்று வசனமாகவும் காட்சியாகவும் காட்டுவது, பாலியல் தொழிலாளியிடம் உடல் உறவு கொள்ளாமலே உடல் உறவின் ஒலிகளை எழுப்பி சக நண்பர்களை ஏமாற்றுவது, காதலை நிரூப்ிப்பதற்காக அண்ணா சாலையில் நிர்வாண ஓட்டம் ஓடுவது என்று படத்தில் தொடர்ந்து சுஜாதா-ஷங்கர் கூட்டணியின் வக்கிரமான, விரசங்கள் அடுக்கடுக்காக வருகின்றன.

படத்தின் முதல் பிரத்யேகக் காட்சியின்போது வசனகர்த்தா சுஜாதா (ரங்கராஜனின்) மனைவி அசல் சுஜாதா சுமார் 20 நிமிடங்களிலேயே, மீதி படத்தைப் பார்க்கப் பிடிக்காமல் ரங்கராஜனின் கெஞ்சல்களையும் மீறி வெளியேறினார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிகிறது. ஷங்கரின் ஆதர்சமான அவரது டாச்சர் அக்கா என்ன சொன்னார் என்று தெரியவில்லை.

எதற்காக இந்தப் படம் இப்படி எடுக்கப்பட்டது ? இன்றைய தமிழ்ச் சமூகத்தில் சராசரி இளைஞனுக்கு செக்ஸ் பெரிய புதிராகவும் ஏக்கமாகவும் இருக்கிறது எனப்து உண்மைதான். ஆனால் அது மற்ற பெண்களை சீண்டவும் துன்புறுத்தவும் அவனுக்கு லைசன்சாகிவிடாது. இன்றைய இளைஞர்களின் செக்ஸ் பிரச்சினைகள் படமாக்கக்கூடாது என்று யாரும் சொல்லபோவதில்லை. எந்த பார்வையிலிருந்து என்பதுதான் முக்கியமான கேள்வி. ஒரு இளைஞன் பஸ்சில் தன் இடுப்பில் கிள்ளிவிட்டுப் போகும்போது அந்தப் பெண் படுகிர வேதனை, வலி, அவமானம் பற்றிய பார்வையிலிருந்தா ? அல்லது கிள்ளிய இளைஞனின் குதூகலத்திலிருந்தா ? சுஜாதாவும் ஷங்கரும் கிள்ளிய இளைஞனின் சந்தோஷத்தோடு ஒவ்வொரு காட்சியையும் சித்திரிக்கிறார்கள். மற்ற இளைஞர்களுக்கு இப்படி யெல்லாம் நீ ‘இன்பம்’ அனுபவிக்கலாம் என்று ‘மாமா’ வேலை பார்த்திருக்கிறார்கள்.

நல்லவர்கள் முட்டாள்களாகவும், அயோக்கியர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கும் நமது சமூகத்தில், புத்திசாலிகளான சுஜாதாவும் ஷங்கரும் இந்தப் படத்தை இளைஞர்கள் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு உழைத்து நேர்மையாக முன்னேறுவதைப் பற்றிய படமாக வர்ணித்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். படத்தின் இறுதியில் நேர்மைதான் வெற்றியின் ரகசியம் என்று பாடி எம்.டி.வி விருது பெற்று இளைஞர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். படம் முழுக்க அந்த நேர்மையான இளைஞர்கள் செயததெல்லாம் பாதி வரையில் பெண் சீண்டல். அதன் பிறகு பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது – ஐயப்பன் சீசனில் அய்யப்பன் கேசட் போடலாம். தெரு நாடகக் குழுவுக்காக தீவிரவாதப் பாட்டு போட்டுத்தரலாம். எம்.டி.வி விருதுக்காக மார்பகங்களை ஆட்டிக் கொண்டு நேர்மை பற்றி பாடலாம்.

படத்தில் ஆபாசம் மட்டும் இல்லை. அரசியலும் இருக்கிறது. வாழ்க்கையில் ஜெயிக்க எதை வேண்டுமானாலும் செய் என்பதுதான் உபதேசம். ஜெயிப்பது என்பது தனிப்பட்ட பணம், பெண் சுகங்களை அடைவது. அதற்காக நிர்வாணமாக ஓடலாம். பக்திக்கும் பாடலாம்; புரட்சிக்கும் பாடலாம். அதே சமயம் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களை ஏய்க்கும் அரசியல் வாதிகளுக்கு எதிராக கோபம் கொள்ளும் இளைஞர்கள் ஆபத்தானவர்கள். தீவிரவாதிகள். அவர்களோடு சேர்ந்தால் பொடாவில் உள்ளே போக வேண்டி வரும். ஒழுங்காக மார்பை ஆட்டிக் கொண்டு பாட்டு பாடி மல்டிநேஷனல் கம்பெனிகளின் வியாபாரத்துக்கு உழைத்துக் கொண்டு சமத்தாகப் பிழை. கல்லாவில் காசு நிரம்பும். முதலில் வருத்தப்பட்ட பெற்றோர்கள் இப்போது கொஞ்சுவார்கள். சுஜாதாவும் ஷங்கரும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றிவரும் அவலமான பிழைப்பு மந்திரத்தை இளைஞர்களுக்கு உபதேசிக்கிறார்கள்.

இந்த நேர்மையாளர்கள் சென்னையில் படத்தை தணிக்கைக்கு கொடுத்தால் அதிக வெட்டு விழும் என்பதற்காக ஹைதராபாதுக்கு எடுத்துச் செல்கிறார்கள். படம் பெண்களின் அருவெறுப்பை சம்பாதிக்கிறது என்று தெரிந்ததும் காட்சிகளை திருத்தி அமைத்திருக்கிறோம் என்று பொய் சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். திருத்திய ப்ிறகும் படம் விரசமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. அடடா, மக்கள் விமர்சனத்தைக் கேட்டு இப்படி திருத்திக் கொள்ளும் பெருந்தன்மை ஷங்கர் தவிர வேறு யாருக்கு வரும் என்று விஜய் டி.வியில் பாராட்டி மகிழ்கிறார் மதன். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆனந்த்விகடன் குழும இதழ்களில் விடலைத்தனத்தை முக்கிய அம்சமாக ஆக்கிய ‘பெருமை ‘க்குரியவர் அல்லவா.

பாய்ஸ் படத்துக்கு முன்னால் ஆபாசமான படங்கள் வரவில்லையா ? மோசமான அரசியலை போற்றும் படங்கள் வரவில்லையா ? ஏன் பாய்ஸை மட்டும் கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். துள்ளுவதோ இளமை, சாக்லெட், காதல் கொண்டேன், என்று சமீபத்தில் கூட பல படங்கள் இளைஞர்களை காமாந்தகாரர்களாகக் காட்டி வரவில்லையா என்கிறார்கள்.

பாய்ஸ் படத்தை குறிப்பாக எடுத்துக் கொள்ளக் காரணம் ஷங்கரும் சுஜாதாவும்தான். இருவரும் ஏற்கனவே ப்ணமும் புகழும் சம்பாதித்தவர்கள். இருவரும் கோடாஸ்வரர்கள் என்றே சொல்லலாம். ஷங்கர் படங்கள் தொடர்ந்து வணிக வெற்றி பெற்றிருப்பதால் மக்கள் ஆதரவு இருப்பவர் என்றும் சொலலாம். சுஜாதாவின் புகழ் ஷங்கருடையதை விட பல நூறு மடங்கு பெரியது. குமுதம் முதல் உயிர்மை வரை எதிரெதிர் தளங்களில் பெயர் சம்பாதித்திருப்பவர். இத்தகைய்வர்கள் சமூகத்துக்கும் தத்தம் துறைகளிலும் முன்மாதிரியாகக் கருதப்படக் கூடியவர்கள். ( கருதலாமா என்பது வேறு. கருதப்படுகிறார்கள் என்ப்து யதார்த்தம்) எனவே இவர்கள் ஒரு கேவலத்தில் ஈடுபடும்போது அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

ஏன் இவர்கள் இப்படி செய்ய வேண்டும் ? சுஜாதாவுக்கு வயது எழுபதை நெருங்கிவிட்டது. தன்னுடைய ஐம்பதாண்டு கால துணைவி கூட அருவெறுப்படையக் கூடிய அளவுக்கு ஏன் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் ?

ஒரே காரணம் இவர்கள் புத்திசாலிகளே தவிர நேர்மையானவர்கள் அல்ல என்பதுதான். புத்திசாலித்தனம் சுய நலத்துக்கானது என்ற சித்தாந்தத்தில் திளைப்பவர்கள். நேர்மையாளனுக்குதான் எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்ற தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் வரும். புத்திசாலிக்கு அதை நிர்ணயிப்பது பனம் அல்லது புகழ் மட்டும்தான்.

சுஜாதாவிடம் தலித் மலம் தின்ன வைக்கப்பட்ட கொடுமையைப் பற்றி எழுதித் தரச் சொன்னால், தலித் எழுத்தாளரை விட சிறப்பாகவே எழுதுவார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுதச் சொன்னாலும் அவரால் முடியும். விரசமாகவா ? ஓகே. க்வாண்ட்டம் பிசிக்ஸை பிளஸ் டூ மாணவருக்கு சொல்லித் தர வேண்டுமா ? பிரமாதமாக செய்வார். உயிர்மையில் யாப்பு வகுப்பு நடத்துகிறார். பாய்சில் ஒருதலைக்காமப் புணர்ச்சி இலக்கணம் சொல்லித் .தருகிறார்.

இந்த புத்திசாலித்தனம் நிச்சயம் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதிலிருந்து வெளியே வர மிகுந்த விழிப்பும் உழைப்பும் வேண்டும். நகரம், அன்று உன்னருகில், பூக்குட்டி, நிலா நிழல்,ஏன்,எதற்கு எப்படி மாதிரியான சுஜாதாவின் எழுத்துகள் என் போன்ற சமூக அக்கறை உள்ளவர்களுக்கும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தக் கூடியவைதான். அந்தப் பங்களிப்பு சமூகத்துக்குப் பயனுள்ளது என்று நாம் கருதும் அதே வேளையில் அவர் அதற்கு நேர் எதிரான எழுத்துக்களையும் அதே உற்சாகம், உழைப்புடன் செய்து கொண்டிருக்க கூடியவர். காரணம் தாம்ரை இலைத்தண்ணீர் போன்ற அவருடைய வைணவ சித்தாந்தமாக இருக்கலாம். ரொம்பத் தப்பு செய்து விட்டோம் என்று நினைத்தால் நல்ல வைஷ்ணவணாக கடைசியில் பெருமாளிடமோ, பெருமாளின் அப்போதைய பூலோகப் பிரதிநிதியிடமோ சரணாகதி அடைந்துவிடலாம். ஆனால் சுஜாதா போன்றவர்களின் சமூக நேர்மை, பொறுப்பு அற்ற புத்திசாலித்தனம் சமூகத்துக்கு ஆபத்தானது.

ஆனால் அந்த புத்திசாலித்தனத்தை நமது சமூகம் கொண்டாடுகிறது. அதற்கு புத்திசாலித்தனமாக தன்னை கிச்சு கிச்சு மூட்டினால் போதும். பேச்சு, எழுத்து சாதுர்யத்தால் பிரமிப்பூட்டினால் போதும். கொண்டாடத்தயாராக இருக்கிறது. இந்த ரகசியம் புத்திசாலிகளுக்குத் தெரியும். எங்களைக் கொண்டாடுகிறார்கள் என்று உங்களுக்குப் பொறாமை என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள்.

சமூகத்தின் இந்த முட்டாள்தனம்ான கொண்டாட்டத்தைத்தான் பெரியார் தொடர்ந்து தனக்கே உரிய வசவுகளால் திட்டிக் கொண்டே இருந்தார். புத்திசாலியாக இருக்கிறவன் நேர்மையாக இருக்கிறானா என்று பார் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே இருந்தார். நேர்மையாக இருக்கிற முட்டாள்களை புத்திசாலிகளாகவும் ஆக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

முட்டாள்களை புத்திசாலிகள் மட்டும் தான் ஏமாற்ற வேண்டும் என்பதில்லை. தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களும் உண்டு. அந்த வகையை அதிகமாக நாம் பக்தி மார்க்கத்தில்தான் சந்திக்க முடியும்.

கோவிலுக்கு நேர்ந்துகொண்டு கோவில் வ்ளாகங்களில் ஆடு, கோழி போன்ற உயிர்களை பலி கொடுப்பது பற்றிய சட்டத்தை கடுமையாக செயல்படுத்தும்படி ஜெயலலிதா அரசு ஆணை பிறப்பித்ததும்தான், நாம் முற்போக்கு என்று நினனத்துக் கொண்டிருப்பவர்களிடமும் இத்த்னை முட்டாள்தனம் இருக்க முடியும் என்பதுஅம்பலமாயிற்று.

உயிர்வதை தடுப்பை எதிர்க்கும் முற்போக்குகளில், திராவிடஅரசியல்வாதிகள், தலித் அரசியல்வாதிகள், இடதுசாரி தேர்தல் அரசியல்வாதிகள், இடதுசாரி தேர்தல் மறுப்பு அரசியல்வாதிகள் என்று பல வகையினர் திரண்டார்கள். இவர்கள் முன்வைக்கும் காரணங்கள் இரண்டு. ஒன்று ஜெயலலிதா அரசின் உள் நோக்கம் கிராமத்து மக்கள் தெய்வ வழிபாட்டையெல்லாம் பார்ப்பன-சமஸ்கிருத- ஆகம மயமாக்குவது. இரண்டாவது காலம் காலமாக மக்கள் பின்பற்றிவரும் மரபான வழிபாட்டு உரிமைகளில் அரசு தலலயிடக் கூடாது.

ஜெயலலிதா இப்போது பயன்படுத்தும் உயிர்வதை சட்டம் 1951ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தது. ஓமந்தூரார் பார்ப்பனீய பாதுகாவலர் அல்ல. அவர் பார்ப்பனீய எதிர்ப்பாளர்தான். அவருடைய மகன்தான் 1923ல் வ.வே.சு.அய்யர் குருகுலத்தில் தங்கிப் படிக்கையில் அங்கே பார்ப்பன சிறுவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உணவு முதல் வழிபாடு வரை வேறுபாடு காட்டப்படுவதை தன் தந்தையிடம் வந்து சொன்னான். பெரியாரிடம் போய் சொல்லும்படி அனுப்பி வைத்தார் ஓமந்தூரார். பெரியார் அந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்த்பிறகு அது பெரும் போராட்டமாக மாறி கடைசியில் பெரியார் காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்க காரணமாக அமைந்தது.

ஓமந்தூரார் உயிர்வதை தடுப்பை ஆதரிக்கக் காரணம் அவர் பார்ப்பனீயத்தை எதிர்த்த வள்ளலாரின் சீடர் என்பதுதான். முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு ஓமந்தூரார் தன் வாழ்க்கையை வடலூரில் வள்ளலார் அமைப்புகளை நிர்வகித்துப் பராமரிப்பதில் செலவிட்டார்.

வாஜ்பாய்-சங்கப் பரிவாரங்களுடன் கூட்டு சேர்ந்தபிறகு பகுத்தறிவு, நாத்திகம் என்பதற்கெல்லாம் புது வியாக்கியானங்கள் அருளி வரும் கலைஞர் கருணாநிதி தற்போதைய உயிர்வதை தடுப்பு ஆணை திராவிட கலாசாரத்தை அகற்றி ஆகம் கலாசாரத்தைப் புகுத்தும் சூழ்ச்சி என்று சொல்லியிருக்கிறார். இந்த சூழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துத்தந்தவர் அவர்தான்.

கடைசியாக முதலமைச்சர் பதவியிலிருந்து தேர்தல் தோல்வியினால் விலகுவதற்கு ஒரு மாதம் முன்பு கிராம பூசாரிகளின் மாநில மாநாட்டில் சிறப்புரையாற்றினார். இந்த சங்கமே ஆர்.எஸ்.எஸ்சால் கிராமப்பூசாரிகளுக்கு ஆகமப் பயிற்சி வகுப்புகள் தருவதற்காக நடத்தப்படுவதுதான். அந்த சங்க மாநாட்டில் கருணாநிதி கிராமப் பூசாரிகள் நல வாரியத்தை அமைப்பதாக அறிவித்தார். அந்த வாரியத்துக்கு அரசு சார்பு உறுப்பினர்களாக அவர் எந்த சூத்திரனையும், தலித்தையும் நியமிக்க வில்லை. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பார்ப்பனர் ஆர்.பி.வி.எஸ் மணியனையும் வேதாந்தத்தையும் தான் நியமித்தார். அரசு செலவில் வாரியத்தில் இருந்து கொண்டு கிராமப் பூசாரிகளை ஆகமப்படுத்த வழி வகுத்தவர் கலைஞர்தான். (பராசக்தி படத்தில் கூட அவர் பார்ப்பன அர்ச்சகரை வில்லனாகக் காட்டவில்லை. காளி கோவில் பூசாரிதான் வில்லன்)

திடார் திடாரென்று பகல் தூக்கத்தின் போது கனவில் பெரியார் வந்து மிரட்டுவாரோ என்னவோ தெரியாது.. அப்போது மட்டும் கலைஞருக்கு பகுத்தறிவு வேகம் வரும். நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்த கட்சிக்காரரைக் கண்டிப்பார். தீமிதிக்குச் சென்ற கட்சி அமைச்சரை திட்டுவார். அந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் பார்த்தால் கடவுள் பெயரால் பலியிடுவதைக் கண்டிக்கத்தானே வேண்டும் ?

தலித் தலைவர் தொல்.திருமாவளவன் இத்தனை நாட்களாக நேமாலஜியில் ஈடுபட்டிருந்தவர் இந்தப் பிரச்சினை வந்ததும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியாகவே மாறிவிட்டார். சூழலில் எந்தெந்த் உயிரினங்கள் எந்த அளவுக்கு மிகாமல் இருந்தால் சூழல் சம்ன் கெடாமல் இருக்கும் என்று முன்னோர்கள் ஆராய்ந்து அறிவியல் அடிப்படையில், அவ்வப்போது கோழி, ஆடு, எருமை இனங்கள் அளவு மீறிப் பெருகிவிடாமல தடுக்கத்தான் கோவிலில் ப்லிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள் என்று கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்.

இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதல்லவா ? ஆம். முரளி மனோகர் ஜோஷி வகையறாக்களின் குரல்தான். வேதிக் சயன்ஸ், வேதிக் மேதமேடிக்ஸ், வேதிக் அஸ்ட்ராலஜி என்று ‘அவாள்’ சொல்லுவது போல இப்போது ‘இவாளும்’ கிடாவெட்டு ஈக்காலஜி, கிடாவெட்டு சோஷியாலஜி என்று ஆராய்ச்சியை அவிழ்த்துவிட்டிருக்கிறார். ஹோமம், யாகம், தர்ப்பை, கோமயம் எல்லாவற்றுக்கும் இந்துத்துவா விஞ்ஞானிகள் சயண்ட்டிஃபிக் வியாக்யானம் அருளுவது போல கடா வெட்டி சயன்சும் ஒரே நாணயத்தின் இன்னொரு பக்கம்தான். மூட நம்பிக்கைக்கு பார்ப்பன, சூத்திர தலித் வேறுபாடுகள் இல்லை. யாகத்தை ஒழிக்காமல் கடா வெட்டை மட்டும் எதிர்க்கலாமா என்ற கேள்வி இரண்டையும் நீடிக்க வைக்கவே பயன்படும். இரண்டையும் ஒழி என்ற முழக்கமே சரியான முழக்கமாக இருக்க முடியும். அசைவ உணவு சாப்பிடுவதற்கான உர்ிமை என்பது வேறு. அதை கடவுள் பெயரால் சடங்கு செய்துதான் சாப்பிடுவேன் என்று கோருவது வேறு.

அறிவியலை மதத்திலிருந்து பிரிக்காததால்தான் கலிலீயோவுக்கு பிரச்சினை வந்தது. பகுத்தறிவாளர்கள் எப்போதும் அறிவியலை மதத்தோடோ, சாதியோடோ, கடவுளோடோ சம்பந்தப்படுத்துவதை ஏற்க மாட்டார்கள்.

கடைசியாக இடதுசாரிகளிடம் எஞ்சி நிற்கும் ஒரே வாதம் மக்களின் பாரம்பரியமான வழிபாட்டு உரிமைகளில் தலையிடக் கூடாது என்பதுதான்.

பாரம்பரியம், மரபு , சம்பிரதாயம் என்ற பெயரில்தான் இந்த சமூகத்தின் எல்லா சாதி, மத, வர்க்கக் கொடுமைகளும் பெண்ணடிமைத்தனமும் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றன. இந்த முட்டாள்தனத்தைப் பற்றிதான் பாரதி சொன்னான்: “ முன்பிருந்ததோர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ ? நீர் பிறக்கு முன் பார் மிசை மூடர் நேர்ந்ததில்லை என நினைந்தீரோ ? ‘

“ எனது தந்தை ஷய நோயால் இறந்து போனான். எனக்கும் ஷய நோய் வந்திருக்கிறத். எங்கள் பாட்டனுக்கும் இந்த நோயுண்டு. ஆகையால், இந்த நோய் தீர்ப்பதற்கு நான் மருந்து தின்ன மாட்டேன் என்று ஒருமனிதன் சொல்லுவானானால் அவன் எவ்வளவு பெரிய மூடன் ?” என்று கேட்கிறான் பாரதி.

பாரம்பரிய வழக்கமாகத்தான் சதி உடன்கட்டை ஏறுதல் இருந்தது. பாரம்பரிய வழக்கமாகத்தான் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் வழக்கம் இருந்தது. ரெட்டை கிளாசும் பாரம்பரிய வழக்கம்தான். நாடு, சாதிப் பஞ்சாயத்து என்கிற கட்டப் பஞ்சாயத்துகள் எல்லாம் பாரம்பரிய வழக்கம்தான்.

இன்னமும் பெண்கள் படித்து உயர் வேலைகளுக்குச் சென்ற பிறகும் கூட கட்டப் பஞ்சாயத்து முன்னால் காலில் விழுந்து தண்டனை பெறும் அயோக்கியத்தனம் நடைபெறுவதற்குக் காரணம் பாரம்பரிய வழக்கத்தை மீற முடியாததுதான். டெலிகாம் அதிகாரி சுகந்தி படித்தவர். அவர் அம்மா பள்ளிக் கூட தலைமை ஆசிரியை. விவாகரத்து கோரப்பட்ட கணவர் நெய்வேலி எஞ்சினீயர். ஆனல் பாரம்பரிய வழக்கப்படி கணவர் படிக்காத் கட்டப் பஞ்சாயத்து முன்னால் வந்து நிற்கும்படி படித்த மனைவியையும் மாமியாரையும் நிர்ப்பந்திக்க முடிகிறது.

மரபில் இருந்த எந்த முட்டாள்தனத்தையும் அராஜகத்தையும் அரசாங்க தலையீடு இல்லாமல், சட்ட்த்தின் துணையில்லாமல் ஒழித்த வரலாறு நமக்குக் கிடையாது. சட்டம் இல்லாவிட்டால், உடன்கட்டை தொடரும்; குழந்தை மணம் தொடரும். சிசுக் கொலை தொடரும். சட்டத்தில் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், ‘கீழ் ‘ஜாதிகள் ஒருத்தரும் படித்திருக்கவே முடியாது.

மரபில் ஆரோக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சாதிப் பழக்கம், மதப் பழக்கம், கடவுள் பெயரால் சாங்கியம் என்பதிலிருந்து விடுதலை செய்ய் வேண்டும்.என்பதுதான் பகுத்தறிவு. சிறிது இடம் கொடுத்தாலும், பாரம்பரியம், மரபு என்ற விஷ வ்ிருட்சம் இடுக்கில் வேர் பரப்பி கட்டடத்தையே தகர்க்க கூடியது.

பெரியார் தொடங்கிய தகர்க்கும் பணி இன்னும் முடியவில்லை. காரணம் நமது சமூகத்தின் புத்திசாலிகள், பணத்துக்காக, புகழுக்காக, ஓட்டுக்காக நம்முடைய முட்டாள்தனங்களை சாமர்த்தியமாக நீடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய மாய்மாலங்களில் மயங்கி அவர்களுக்குத் துணை போவது முட்டாள்தனத்துக்கு எதிரானது என்று மயங்கும் முட்டாள்களுக்கும் நம்மிடையே குறைவில்லை.

சுஜாதாக்கள், ஷங்கர்கள், ஜெயலலிதாக்கள், கருணாநிதிகள், இல. கணேசன்கள், வேதாந்தங்கள் இத்யாதிகள் நமது சமூகத்தின் புத்திசாலிகள். சமயங்களில் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பது போன்ற மாயைகள் கூட நமக்கு ஏற்படலாம். அதுதான் அவர்களுடைய புத்திசாலித்தனம். இதை உணராமல் இருக்கும் நமது முட்டாள்தனம்தான் அவர்களுடைய மூலதனம்.

அதனால்தான் பெரியார் தகர்த்து காலி செய்த இடங்களில் புதிய கட்டடங்களாகவும் பழைய மூடத்தனங்களையே மறுபடியும் கட்டி விட புத்திசாலிகள் முயற்சி செய்கிறார்கள். மக்களுக்குக் கொண்டாட்டங்கள் தேவைதான். ஆனால் அவை கடவுள், சாதி, மதங்களின் பெயரால் வந்தால், ஏற்றுக் கொண்டால், மீண்டும் கடந்த கால இருட்டிலேயே நிற்போம். பெரியார் போன்ற டார்ச் கையில் இருந்தும் இருட்டை நீக்க ஸ்விட்ச்சை அழுத்த மறுப்பது/மறப்பது முட்டாள்தனம்.

(தீம்தரிகிட செப்டம்பர் 2003 )

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி