கடிதங்கள்

This entry is part of 48 in the series 20031010_Issue

அக்டோபர் 10, 2003ஜெயபாரதன் கட்டுரைக்கு ஞாநி பதில் அளிக்காததன் காரணம் புரியவில்லையெனினும் ஒரளவு ஊகிக்க முடிகிறது. அணுசக்தி மின்சாரம் குறித்து அக்கறையுள்ளவர்கள் மற்றும் நிபுணர்கள் சிலரின் கருத்துகளை கேட்டிருக்கிறேன். ஜெயபாரதனின் கட்டுரையை படித்த பின்னும் எனக்கு அணுசக்திக்கு எதிரான கருத்து பக்கமே சாய்வு இருக்கிறது. இது என் துறையில்லை என்பதால் ஜெயபாரதனுடன் விரிவாக விவாதிப்பது எனக்கு சாத்தியமில்லை. ஓரளவு நிபுணனாகாமல் எழுதவேண்டாம் என்றுதான் இருந்தேன். எனக்கு கிடைத்த மிக நம்பகமான செய்தியை(அதன் ஒரு பகுதியை) மட்டுமிங்கே, காலம் தாழ்துவது சரியல்ல என்பதால் இங்கே முன்வைக்கிறென், நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

கல்பாக்கத்தில் வேலைபார்க்கும் ஒரு விஞ்ஞானி எனது நண்பனுக்கு எழுதியது அது. நான் அவரிடமிருந்து கிடைத்த செய்தியை (பெயர் குறிப்பிடாமல்) எழுத அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார். இப்போது ஜெயபாரதன்-அரசாங்கம் புளுகாது என்ற நம்பிக்கையில் தந்த விவரத்தாலும், ஞாநியை புழுகுகிறர் என்று குற்றம் சாட்டியதாலும் மட்டும் ஒரு (ஒரு நம்பிக்கை துரோகமாய்) சொல்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே கல்பாக்கத்தில் மின்சாரம் என்று எதுவும் உற்பத்தி செய்யபடவில்லை. முழுக்க (அணு ஆயுதத்திற்க்கு தேவைப்படும்) ப்ளுட்டொனியம் தயரிக்க மட்டுமே பயன்படுத்தப்டுகிறது. இந்த தகவல் (இன்னும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உண்டு) ஜெயபாரதன் தரும் புள்ளி விவரங்களுக்கு எதிரானது. சொன்னவர் யார் என்று ஆதாரத்தை நான் காட்ட முனைந்தால் அவருக்கு வேலை தங்காது. ஏற்கனவே அணு ஆயுதத்திற்க்கு எதிராக கருத்து சொன்ன ஒருவருக்கு வேலை நீட்டிப்பு மறுத்து வெளியே அனுப்பியுள்ளது. அதே போல் அணு ஆயுதத்திற்க்கு எதிராக கட்டுரை எழுதிய (சென்னை) விஞ்ஞானி ஒருவரை வேலை நீக்கம் வரை இழுத்து கொண்டு போய் மற்ற விஞ்ஞானிகளின் எதிர்பால் அது கைவிடபட்டது. அரசு அராஜகம் இருக்கும் இந்நிலையில் வெளிபடையாக ஆதாரங்களை வைப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாகவே (இதில் தன்னளவில் நிபுணரில்லாத) ஞாநி தயங்குகிறாரோ என்று தோன்றுகிறது. எனக்கு என்னவோ ஞாநி சரியான விவரங்களுடன் எழுதுவதாகவே தோன்றுகிறது.

ஜெயபாரதன் முக்கியமாய் பதில் சொல்லாமல் தவிர்க்கும் விஷயம் கழிவுகள் பற்றியது. `பூமியின் ஆழத்தில் புதைக்கபட்டாலும் ‘ கழிவுகள் ஆபத்தானவை எனபதுதான் பலர் மீண்டும் மீண்டும் வலியுருத்துவது. கூகுளில் தேடினால் பல கட்டுரைகள் கிடைக்கும். ஜெயபாரதன் நான் எழுதியதற்க்கு கோபபட்டு ஏதேனும் எழுதகூடும், அதற்க்கும் சேர்த்து பதில் சொல்ல எனக்கு அதிக நாட்கள் பிடிக்கலாம்.

தாமதமாக எழுதுவதற்க்கு மன்னிக்கவும். கடந்த இதழில் கார்திக் என்பவர் ஞாநிக்கு என் எதிர்வினை குறித்து எழுதியிருந்தார். பாய்ஸ் படம் குறித்து விவரமான கருத்துகள் பதிவுகள் விவாதகளத்தில் தரமான திரைப்பட அலசலில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் போய் பார்கலாம். சிலகாலம் முன்பு நாயேன் பேயேன் என்ற பெயரில் எழுதும் ஒரு கார்திக் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதி, அவரிடமிருந்த வந்த பதிலை அருள்வாக்கு கிடைத்த்துபோல் திண்ணையில் பதிப்பித்தார். (ஜெயமொகன் நான் எழுதவே தொடங்கும் முன்பு, என் எழுத்தில் வெளிப்படும் மூர்க்கம் குறித்து பேசும் மேஜிக்கல் ரியலிஸ கட்டுரை அது.) இது அதே கார்த்திக்தான் என்றால், நான் எழுதிய சொற்பமான விஷயங்களை `காட்டுகூச்சல் ‘ என்று சொல்வதில் ஆச்சரியபட ஏதுமில்லை. கார்திக்குடன் விவாதிக்க எனக்கு ஏதுமில்லை(ரோட்டில் முத்திமிட்டால் உள்ளெ போடுவதை-போட்டதை- நியாயபடுத்திய தமிழ் கலாச்சார காவலர் பித்தனுடனும்). சில தகவல் பிழைகள் குறித்தும், மற்று சில குறிப்புகள் மட்டும் கீழே தருகிறேன்.

முதலில் எனக்கு தெரிந்தவரை பாய்ஸ் படத்தில் (மெளனமாக) வரும் வார்த்தை `ங்கோத்தா ‘ அல்ல, ஓத்தா. `ங்கோத்தா ‘ என்பது தென்மிழ் மாவட்டங்களில் புழங்கும் ஒரு மரியாதையான வார்த்தை. `ஓத்தா ‘ என்பது சென்னையில் சகஜமாக பயன்படுத்தபடும் ஒரு வார்த்தை. இந்த இரண்டு வார்தைக்ளையுமே யார் யாரை நோக்கி சொன்னாலும், (அல்லது என்னை நோக்கி என் உடன் வாழும் பெண்) சொன்னாலும் எனக்கு கோபம் வராது. என் மகளை இல்லை, மனைவியை யாரும் `இழுத்துகொண்டு ஓடினாலும் ‘ -அதில் வன்முறை எதுவும் இல்லாதபட்சத்தில்-என்க்கு பொறுத்துகொள்ளாமலிருக்க ஏதுமில்லை. பாய்ஸ் படம் எதார்தத்தை காட்டுகிறதா, என்று காலாவதியான யதார்தததை வைத்துகொண்டு யதார்த வாதிகள் கேட்கிறார்கள். டேட்டிங் இன்று சென்னை மட்டுமில்லாது தமிழகமெங்கும் மாபெரும் யதார்தம். இன்னும் சுயமைதுனம் காலம்காலமான யதார்த்தம். கடைசியாக `பரத்தை ‘ என்ற tamil male chauvinist வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரை வன்மையாக கண்டிக்கிறென். தட்ஸ் ஆல்.

அதற்க்கு அடுத்த இதழில் சூர்யா எழுதிய தத்துவ கட்டுரையை படித்தேன். இதைவிட கேவலமான ஒரு கிசுகிசு டைப் ஆபாச கட்டுரையை அவரால்தான் மீண்டும் எழுதமுடியும் என்று நினைக்கிறேன். இவர்கள் முன் வைக்கும் தரத்திற்க்கும், எழுதும் எழுத்திற்க்கும் உள்ள உறவை புரிந்து கொள்ள நல்ல உதாரணம். அதுவும் நல்லதிற்க்குதான், எதிர்காலத்தில் எதற்காவது பதில் சொல்ல உதவும். ஒரு கேனத்தனமான கருத்தை மாபெரும் தத்துவத்தை சொல்ல வருவதுபோல் எழுத இவரகளால்தான் எழுதமுடியும். அதற்க்கு இசைமேதை இளையராஜாதான் கிடைத்தாரா ? ஜெயெமோகனின் எழுத்தாற்றல் மீது இன்னும் கூட எனக்கு மரியாதை உண்டு. ஆனாலும் உலக எழுத்தாளார்களொடு, இன்னும் பல தமிழ் எழுத்தாளார்களொடு ஒப்பிடும்போது இவர் ஒன்றுமே இல்லை. ஆனால் ஆணவம்தான் இன்றைய எழுத்தாளனுக்கு தேவை என்று அவரும் மற்ற பொடிசுகளும் எழுதுவார்கள். இளையராஜாவின் இசை, உலகின் மற்ற அற்புத இசைகளுடன் ஒப்பிடதகுந்தது. இன்னும் காலகாலத்திற்க்கும் வாழபோவது. அவர் காலத்திற்க்கு ஏற்றார்போல் தன்னை மாற்றீ கொள்ளாமல் இர்ந்திருக்கலாம். அவர் இசையும் அதிகம் பயணபடாமல் வெறும் துணுக்குகளாவே அமைந்திருக்கலாம். ஆனால் அந்த துணுக்குகள் உலக இசை பலவற்றை அறிந்தவரகளை ஸ்தம்பிக்கவைக்ககூடியது. இன்னும் பல காலத்திற்க்கும் ஏதோ ஒரு விதத்தில் மறு அவதாரமாய் வரபோகிறது.

அப்பேர்பட்ட ஒரு மேதை-அதுவும் இசை போன்ற ஒரு (அறிவுஆதிக்கம் செய்யாத) கலைத்துறையில் இருப்பவர், கொஞ்சம் ஆணவமாய், பயித்தியக்காரத்தனமாய் நடந்துகொண்டால் என்ன கெட்டு போயிற்று. அதுவும் ஒரு ஒடுக்கபட்ட வகுப்பில் இருந்து வந்த ஜீனியஸ் ஆணவமாய் இருப்பதில் என்ன பெரிய பிரச்சனை. இதே சூர்யா முன்பு விவாதகளத்தில் புவியரசு விவகாரத்தில் இளையராஜா `அசட்டுதனமாக ‘ நடந்து கொண்டது பற்றி எழுதியிருந்தார். எழுதட்டும், ஆனால் அதற்க்கு சொன்ன உதாரணத்தை பார்கவேண்டும். இந்தியாவில் நயவஞ்சக அரசியல்வாதிகளில் முக்கிய இடம் வகிப்பவர் கேரளத்து கருணாகரன். அந்த கருணாகரன் ஜனநாயகவாதியாம், இளையராஜாவிடம் ஜனநாயகம் இல்லையாம். சூர்யாவிற்க்கு தெரிந்திருக்கும், கிட்டதட்ட எல்லா மலையாளிகளுக்கும் தெரியும். ஒரு கல்லூரி மாணவன் கருணாகரனை மேடையில் வைத்துகொண்டு அவரை கிண்டலடிக்கும் ஒரு மலையாள திரைப்படபாடல் ஒன்றை (சரியாக நினைவில் இல்லை, `கனக சிம்ஹாஸனத்தில் இரிக்கும்.. ‘ என்று வரும் பாடல் என்று நினைவு, தேவையானால் விசாரித்து எழுதுகிறென்) பாடிய காரணத்திற்காக, நக்ஸலைட் என்று சந்தேக கேஸில் போலிஸால் அடித்தே கொல்லபட்டான். சூர்யாவிற்க்கு கருணாகரன் ஜனநாயகவாதியாக தெரிகிறார், இளையராஜா ஒரு அசட்டுதனம் செய்தால் ஜனநாயக எதிரியாய் தெரிகிறார். என்னே புத்திசாலித்தனம்! ஒரு டைரக்டர் அறைந்ததால் ஈகோ விலகி இளையராஜாவிற்க்கு சரிவு வந்ததாம். முட்டாள்தனமாய் என்னமும் ஒளரட்டும், அதை ஒரு மாபெரும் தத்துவம் போல் சொல்லட்டும். இன்று வரை உருப்படியாய் எதையும் எழுதாதவர் ஒரு இசை மேதை குறித்து ஆபாசமாய் எழுதும் முன் கைகள் கூசவேண்டாம் ? வெட்கமில்லை.

ரோஸாவசந்த்.


கருத்தும் சுதந்திரமும் கட்டுரை பற்றி…..

ஈராக்கிய ஆக்கிரமைப்பை எதிர்த்த Friedman ஐயும், புஷ்ஷை விடத் தீவிரமாக அவ்வாக்கிரமைப்பை ஆதரித்த Fox News ஐயும் (இந்நிறுவனத்தால் ஒரு பேராசிரியர் வேலையிழந்ததும், Lies and the Lying Liars Who Tell Them என்ற நூலும் என் நினைவுக்கு வருகின்றன) ஒரே கட்டுரையில் நரேந்திரன் அவர்கள் புகழ்வது வியப்பாக இருக்கிறது.

போர் முனையில் செய்தி சேகரிக்கும் நிருபர்களைவிட சவூதி அரேபிய அரச விருந்தினராகப் பட்டத்து இளவரசரைப் பேட்டி காண்பது எந்த விதத்திலும் ஆபத்தானதில்லை. ஒருவர் யூதராகவே இருந்தாலும் இஸ்ரேல் பற்றிய அவரது நிலைப்பாட்டை அறிந்துகொள்ளாமலேயே அரபியர்கள் அவரைத் தீர்த்துவிடுவார்கள் என்று கருதுவது பேதைமை.

*****

வட இந்தியாவில் உள்ள ‘அரசியல் செய்தி விமர்சகர்களாக’ நரேந்திரன் குறிப்பிடும் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள். அவர்களோடு தமிழில் எழுதும் விமர்சகர்களை ஒப்பிடுவது சரியா என்பது தெரியவில்லை. வட இந்திய வட்டார மொழிகளில் உள்ள நிலையைத் தமிழக நிலையோடு ஒப்பிடுவதே ஏற்றதாக இருக்கும்.

*****

நடுநிலையை வலியுறுத்தும் நரேந்திரனின் கட்டுரையில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது திராவிடக் கட்சிகளுக்கே உரிய இயல்பு என்னும் குற்றச்சாட்டு தூக்கலாகவே தெரிகிறது. மாற்றுக் கருத்துகளையும் அவற்றை வெளியிடுபவர்களையும் நசுக்கும் இயல்பு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தங்களுக்குப் பிடிக்காத கருத்துகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் அட்டூழியத்திலும் இறங்காத இந்தியக் கட்சிகள் எவையும் இல்லை. (தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது கழகங்கள் அரசின் தொல்லையைச் சந்தித்தே வளர்ந்தன) அம்மா டிவியும் அப்பா டிவியும் இப்போதுதான் வந்தன; இதுநாள் வரை இந்திய அரசின் டிவி என்ன செய்துகொண்டிருந்தது ? தடாவையும், பொடாவையும் சட்டமாக்கியது தமிழகமா ?

கருத்துச் சுதந்திரம் தமிழகத்தில் மட்டுமே அல்ல, இந்தியா முழுவதுமே பேச்சளவில்தான் இருக்கிறது. விஜயனைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுங்கூட. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் இறுதிக் கடமை யாரிடம் இருக்கிறது ? தமிழகத்திலா, டில்லியிலா ?

*****

‘சுய விமரிசனம் செய்து கொள்ளாத எந்தச் சமுதாயமும் முன்னேறியதாகச் சரித்திரம் இல்லை’ என்று கூறும் நரேந்திரன் அவர்களிடம் ஒரு கேள்வி, ‘காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி’ என்பதும் இந்தச் சுய விமரிசனத்துக்கு உட்பட்டதா ? அல்லது உங்களுக்குப் பிடிக்காதவை மட்டுமே சுய விமரிசனத்துக்கு ஏற்றனவா ?

பரிமளம்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

நியூ யார்க் இலக்கிய கூட்டம் பற்றிய கட்டுரை வாசித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

கவியரங்கம், கருத்தரங்குகளை நேரில் கண்டது, கேட்டது போல் இருந்தது காஞ்சனா அவர்களின் கட்டுரை.

உயிரெழுத்தின் சார்பில் திரு. வைரமுத்து, மற்றும் எழுத்தாளர் பாலசந்திரன் அவர்களுக்கு நாங்கள் அனுப்பிய மடல்களையும் மறவாமல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அயல் நாடு வந்து தமிழைப் போற்றிய வைரமுத்து, மற்றும் பாலசந்திரன் அவர்களுக்கு, அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் அனைவரின் சார்பிலும் நன்றி பாராட்டும் வகையில் கட்டுரை அமைந்துள்ளது சிறப்பு.

மற்ற மாநிலங்களின் படைப்பாளிகளையும் அருமையாக விவரித்து இருக்கிறார். அவர்கள் மத்தியில் இருந்து அளவளாவியது போன்ற உணர்வு தோன்றியது உண்மை.

சுவையாகவும், தெளிவாகவும் எழுதி இருக்கும் காஞ்சனாவுக்கும், அதனை வெளியிட்ட தங்களுக்கும் உயிரெழுத்து குழிவின் சார்பில் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள் பல.

அன்புடன்,

கற்பகம்.

http://groups.yahoo.com/group/uyirezuththu


Series Navigation