கற்றதனாலாய பயனென்கொல்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

பரிமளம்


மாணவர்கள் சிலரால் சிறப்பாகக் கல்வி கற்க முடிவதற்கும் வேறு சிலரால் இயலாமல் போவதற்கும் காரணம் என்னவென்று உறுதியாகக் கூற முடியாது. பெற்றோர் படித்திருந்தால் பிள்ளைகளும் நன்றாகப் படிப்பார்கள் என்று ஒரு காரணத்தைக் கூறினால் உடனே அதை எளிதாக மறுத்து விடலாம். படிக்காத பெற்றோரின் பிள்ளைகளும் நன்றாகப் படிக்கிறார்கள் என்பதோடு, படித்த சில பெற்றோரின் பிள்ளைகள் அவ்வளவு சிறப்பாகப் படிக்காமல் இருப்பதையும் காணலாம். ஒரே குடும்பத்தில் ஒருவர் நன்றாகப் படிப்பதும் இன்னொருவர் படிக்காமல் இருப்பதும் உண்டு.

ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள் என்னும் கருத்தும் உண்டு. கிட்டத்தட்ட ஏற்றுக் கொள்ளலாம் போல இருக்கும் இதுவும் முழுமையானதல்ல. நன்றாகப் படிப்பதால் ஒழுக்கமாக இருக்கிறார்களா அல்லது ஒழுக்கமாக இருப்பதால் படிக்கிறார்களா என்னும் முட்டை, கோழி எது முதல் சுழலுக்குள் இது சிக்கிவிடும். குடும்பச் சூழல், பெற்றோரின் அன்பு, பிறக்கும் போதே அமைந்துள்ள ற்றல், நல்ல ஆசிரியர்கள் என்று எத்தனைக் காரணங்களைக் கூறினாலும் அவை அனைத்தையும் மறுக்கக் கூடிய விதிமீறல்கள் கைவசம் தயாராகவே உள்ளன. ஆகையால் விடையில்லாத கேள்வியாகவே இது இருக்கிறது.

திறமையுள்ள மாணவர்கள் சிலர் சோம்பேறித்தனம் போன்ற பல காரணங்களால் படிப்பில் பின் தங்குவது உண்டு. இதைச் சுட்டிக் காட்டியதும் உணர்ந்து சிலர் தம்மை மாற்றிக் கொள்வர். சிலரோ எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டார்கள்.

இரக்கத்துக்குரிய இன்னொரு வகை மாணவர்கள் உள்ளனர். ஒழுக்கத்தில் சிறந்தவர்கள், கடின உழைப்பாளிகள். படித்து முன்னேற வேண்டும் என்னும் ஆர்வமும் உடையவர்கள். மனவளர்ச்சி குன்றியவர்களல்லர்; ஆனாலும் பாடம் மண்டையில் ஏறாமல் தேர்வில் கோட்டை விட்டு விடுவார்கள். இதற்குக் காரணம்தான் என்ன ? உடல் ஊனங்களைப் போல் படிக்க இயலாததும் ஒரு ஊனமா ?

தங்கள் மீது எந்தத் தவறும் இல்லாத இவர்களுடைய எதிர்காலம் ஒளிமயமானதல்ல. (‘எல்லாருமே படித்துவிட்டால் பிறகு மூட்டை தூக்குவது யார் ?’ என்னும் சமாதானத்தை ஏற்க மனம் மறுக்கிறது.)

படித்துப் பட்டம் பெறுபவர்களுக்கே வேலை என்னும் ஒரு நிலை சந்தைப் பொருளாதார அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளுள் ஒன்றாகும்.

_____________

பள்ளி மாணவர்கள் சிலர் படிப்பைப் பாதியிலேயே விட்டு விடுவதற்கு வீட்டின் பொருளாதார நிலை ஒரு காரணம் என்பது உண்மையே. இதைவிடவும் முக்கியமான, ஆனால் அறவே கவனத்தைப் பெறாத இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

அவற்றுள் முதலிடத்தில் இருப்பது ஆங்கிலம். ஆங்கிலவழிப் பயிலும் மாணவர்கள் படும் சிரமங்கள் கொஞ்சமல்ல. இருந்தாலும் தட்டுத் தடுமாறி மனப்பாடம் செய்து பலர் எப்படியோ தேர்ச்சி அடைந்துவிடுகின்றனர். தமிழ் வழிப் பயிலும் மாணவர்களுக்கு இந்த இடர்பாடு இல்லை என்றாலும் பலருக்கு ஆங்கிலப் பாடம் பெருஞ்சுமையாகவே இருக்கிறது. S.S.L.C யில் (ஆரம்பப் பள்ளியிலிந்து +2 வரை கூட) ஆங்கிலப் பாடத்தில் தோல்வியடையும் ஒரே ஒரு காரணத்தால் பல மாணவர்கள் மேல்படிப்பைத் தொடர இயலாமல் போகிறது. ஏழைகளும் கிராமத்து மாணவர்களும் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். தம்முடைய தாய்மொழியல்லாத வேறு ஒரு மொழியில் கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்துவது மிக மிக மோசமான ஒரு மனித உரிமை மீறலாகும்.

ஆங்கிலம் கட்டாயப் பாடம் என்ற நிலையை மாற்றுவதே இதற்குத் தீர்வாகும். (ஆங்கிலம் அவசியமென்பது வேறு; ஆங்கிலம் கட்டாயமென்பது வேறு.) ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்கலாம்; தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கலாம்; அந்த மதிப்பெண் மாணவரின் சராசரி மதிப்பெண்ணைக் கணிக்கவும் உதவலாம்; ஆனால் ஆங்கிலத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்னும் கட்டுப்பாட்டைக் கட்டாயம் நீக்கியே ஆக வேண்டும். (ஆங்கிலம் -மற்ற பாடங்களையும்- கற்பிக்கும் முறையையே மாற்ற வேண்டும் என்பது வேறு கட்டுரைக்கு உரியது)

ஆங்கிலத்தைப் போலவே கணக்கும் அறிவியலும் பல மாணவர்களுக்குக் கடினமாக உள்ளன. 10+2+3 என்னும் புதிய கல்வித்திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டபோது அதற்கு முன் ஆர்வமுள்ள சில மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்துப் படித்த உயர் கணிதமும் உயர் அறிவியலும் சாதாரண கணிதத்துடனும் அறிவியலுடனும் இணைக்கப்பட்டுக் கட்டாயப் பாடங்களாக்கப்பட்டன. இதனால், விரும்பிய பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவரின் சுதந்திரம் பறிபோயிற்று. இந்த இரண்டிலும் சுமாராகச் செய்யக் கூடிய மாணவர்கள் தோல்வியடைகிறார்கள். கல்லூரியில் கணிதமோ அறிவியலோ தேவைப்படாத ஒரு பாடத்தை எடுத்துப் படிக்க விரும்பும் ஒரு மாணவர் பள்ளியில் உயர் கணிதத்தையும் உயர் அறிவியலையும் படிக்க வேண்டிய தேவை என்ன ? அடிப்படைக் கணிதத்தையும் அறிவியலையும் அவர்களுக்குக் கற்பித்தால் போதுமே.

பள்ளியில் ஐந்தே ஐந்து பாடங்கள். அவை அனைத்தும் கட்டாயப் பாடங்கள் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் பாடத் திட்டங்களோடு ஒப்பிடுகையில் அதிர்ச்சியளிக்கக் கூடியது.

அங்கே ஏழாம் வகுப்பு முடிந்து எட்டாம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களுக்குச் சில பாடங்களே கட்டாய பாடங்களாகும். தங்கள் திறமைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப மற்ற சில பாடங்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எல்லாரும் எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும் என்னும் நடைமுறை இல்லை. அடிப்படைக் கணிதம், உயர் கணிதம் என்று இரண்டு தனித்தனிப் பாடங்கள் உள்ளன. அறிவியல் பாடமும் இவ்வாறே. ஓவியம், தொழிற்பாடம், சமையல் போன்ற விருப்பப் பாடங்களும் உள்ளன. மீத்திறமுள்ள மாணவர்களும், திறன் குறைந்த மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான எண்ணிக்கையில் பாடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலதிகத் திறன் வாய்ந்தவர்கள் 11 பாடங்களையும் (எல்லாப் பள்ளிகளிலும் இந்த வசதி இருக்காது), திறன் குறைந்தவர்கள் 5 பாடங்களையும் படிக்கிறார்கள். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைய வேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. ஆனால் தங்கள் தேர்ச்சி நிலைக்கேற்பவே மேற்படிப்புக்குள் நுழைய இயலும்.

____________

+2 வகுப்பில் தமிழ்மொழியைக் கற்கும் மாணவர்கள் நன்னூல், சங்க இலக்கியம் எல்லாம் கற்க வேண்டும்; ஆனால் பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளைப் படிக்கும் (நகரத்து) மாணவர்கள் இம்மொழிகளில் அ, ஆ, இ படித்தால் போதும் என்னும் நடைமுறை எந்த விதத்திலும் நியாயமற்றது.

சற்றுத் திறன் குறைந்த மாணவர்களை +1 லேயே உட்காரவைக்க பள்ளி நிர்வாகங்களுக்கு வசதி ஏற்படுத்தியிருக்கிறதே தவிர +1 வகுப்பால் மாணவர்களுக்கு ஏதும் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் +1 வகுப்புக்குரிய பாடங்கள் நடப்பதில்லை. அல்லது நடப்பதுபோன்ற பாவனை இருக்கும். +2 தான் கவனிக்கப்படுகிறது. இதைச் சரிசெய்ய +2 பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் 200 மதிப்பெண்கள் வழங்கும் தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக +1, +2 இரண்டாண்டுகளிலும் இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தி தலா 100 மதிப்பெண்கள் வழங்கலாம்.

______________

இந்தியா முழுவதும் பல்வேறு பாடத் திட்டங்கள், பல்வேறு தேர்வாணையங்கள், பல்வேறு தேர்வு முறைகள்! நினைத்தாலே மண்டை காய்ந்து போகிறது.

baalakumar@hotmail.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்