கடிதங்கள்

This entry is part of 36 in the series 20030911_Issue

செப்டம்பர் 11, 2003


=== மஞ்சுளா நவநீதனின் கட்டுரை பற்றி

‘தி ஹிந்து ‘ நாளேடு பற்றி மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரையில் பல குழப்பங்கள் நிறைந்துள்ளன.

தி ஹிந்து பற்றி பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பல பேசுகிறார்.

1. திமுக பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்தது என்கிறார், ஆனால் இன்று திமுகவிற்கு நேரிடையாக ஆதரவு தராவிட்டாலும் ஜெயலலிதாவின் ஒவ்வொரு எதேச்சாதிகாரப் போக்கையும் கண்டித்து இதே நாளிதழ்தான் தீவிரமாகப் பேசி வருகிறது. அதன் பலனாக 10க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

2. பெரியாரை இருட்டடிப்பு செய்தது என்ற குற்றச்சாட்டோடு, காஞ்சா அய்லய்யா மற்றும் கெயில் ஓம்வேத் ஆகியோருக்கு விடாது இடம் கொடுத்தும் வருகிறார்கள் என்றால் என்ன பொருள் ? பிராமணீயத்தை ஆதரிக்கிறார்களா இல்லை எதிர்க்கிறார்களா ? நாட்டில் உள்ள மதக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் பாரதீய ஜனதாவும், சங்கப் பரிவாரங்களுமே என்று தோலுரித்துக் காண்பிக்கும் தி ஹிந்து வை பெரியார் அபிமானிகள் பாராட்டத்தானே வேண்டும் ?

3. குழிமாற்றுத் திருவிழாவினைக் கண்டித்து எழுதினார்கள் என்னும்போது அத்துடன் கூட MSS பாண்டியனின் மாற்றுக் கருத்தையும் வெளியிட்டார்கள் (அந்த மாற்றுக் கருத்துக்கு மாற்றுக் கருத்தாக முகுந்த் பத்மநாபன் கருத்தையும் வெளியிட்டார்கள்) என்பதை மஞ்சுளா அவர்கள் அறிந்திருக்கவில்லை. (

http://www.thehindu.com/thehindu/2003/03/09/stories/2003030901590900.htm,

http://www.hindu.com/thehindu/2003/03/11/stories/2003031101671300.htm

).

நல்ல விவாதம் நடக்குமாறு ஒரு மேடையைத் தருவதில் தி ஹிந்துவை விட சிறந்த இந்திய ஆங்கில நாளிதழை நான் பார்த்ததில்லை.

சென்னையிலிருந்து வெளியான ‘தி மெயில் ‘ என்னும் ஆங்கிலேயர் வசமிருந்த, ஆங்கிலேயர்களின் கருத்தை மட்டுமே சொல்லும் நாளிதழுக்கு எதிர்ப்பாக, தேசியத்தை முன்னிறுத்தும் விதமாகத் துவங்கியது ‘தி ஹிந்து ‘ ஆங்கில நாளிதழ். அதை ஏன் தமிழில் துவங்கவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்பது அறியாமையால் மட்டுமே. தமிழ் என்ற வார்த்தையே அந்த நாளிதழில் வராது என்கிறார். எந்தத் தமிழ் நாளிதழும் செய்யாத ‘literary review ‘ வில் தமிழ்ப் புத்தகங்களை நன்கு அறிமுகம் செய்துகொண்டு வருவது தி ஹிந்து மட்டுமே. மஞ்சுளா அவர்கள் தி ஹிந்துவைப் படிக்கிறாரா என்ற சந்தேகமே நமக்கு வருகிறது.

பாக்கிஸ்தான், இந்தியா, சீனா, என்.ராமின் கம்யூனிச ஆதரவு, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது அபாண்டம், எமர்ஜென்சி ஆதரவு என்று பல கருத்துக்களைக் கூறுகிறார். தி ஹிந்துவின் ஒவ்வொரு காலகட்ட ஆசிரியர்களும் செய்த எல்லாமே சரி என்று யாரும் வாதிட முடியாது. ஆனால் மொத்தத்தில், அந்தக் குறைபாடுகளையெல்லாம் தவிர்த்துப் பார்க்கையில் தி ஹிந்து வின் 150 வருட வரலாற்றில் நிறையே மிஞ்சுகிறது.

பத்ரி சேஷாத்ரி

சென்னை

=== Badri Seshadri


திரு. அக்னி புத்திரன் அவர்களுக்கு,

தங்களின் ‘பாய்ஸ் ‘ விமர்சனக் கட்டுறை பார்த்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. தங்களின் கட்டுறையை படித்தபோது எனது கல்லூரி நினைவுகள் வந்து போயின. தாங்கள் குறிப்பிட்டது போன்று படத்தில் இச்சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பின், எமது வாழ்வின் குறிப்பிடத்தக்க ஒரு காலகட்டத்தை இயக்குனர் சங்கர் பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன், மகிழ்கிறேன்.

தாங்கள் குறிப்பிட்டிருந்தது போல் ‘அந்தக்காலத்தில் ‘ இவை இலை மறை காய் மறையாக வைக்கப்படவில்லை. மாறாக சமூகத்திலும், பல்வேறு குழுக்களிலும் இத்தகு விஷயங்கள் தாராளமாக பரிமாரிக்கொள்ளப்பட்டன. இவ்வளவு ஏன், எங்கள் கோவில்களில் எம் முன்னோர் இத்தகு விஷயங்களை பாமரர்களுக்கு சிற்பங்கள் வாயிலாக வடித்து எம் மனதில் இருந்த ‘sex related guilt conscious ‘ ஐ நீக்க முயன்றனர்.

சமீப காலமாக,இவ்விஷயங்கள் இலை மறை காய் மறையாக வைக்கப்பட்டதன் விளைவு, இன்று தமிழகம் ‘AIDS ‘ நோயின் தலைமை இடமாக திகழ்கிறது ! இதுதான் நீங்கள் கட்டிக் காத்திட நினைக்கும் ‘இலைமறை காய்மறை ‘ யின் மகிமை!!

நான், என்னளவில் கண்டிருக்கிறேன், என் நண்பர்கள் விலைமாதுக்களிடம் விலை பேசி, பணம் பகிர்ந்து , வரிசை வைத்து புணர்ந்து மகிழ்வதை ( மகிழ்வது மட்டுமல்லாது, சற்றே வித்தியாசமான ‘expressions of guilt ‘ ஐயும் கண்டதுண்டு – தற்போது ஒரு ஆன்மீக-தேசீய கட்சியில் இருக்கும் தமிழ்கத்தில் பிரபலமான நண்பன் ஒருவன் பக்கத்தறையில் புணர்ந்து முடிந்ததும் ஓவென்று கதறி அழுதான் என்று மற்றொரு நண்பன் ஒரு முறை கூறினான்).

அது போல, கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு விலைமாதுவுக்கு இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டதை (வென்ற குழு மாதுவை இட்டுச்சென்றதாம் – சங்கத்தமிழர்கள் அல்லவா ? ?). விலைமாதென்று வீடு திரும்பும் மகளிரை தொந்தரவு செய்த நிகழ்வுகள் அனேகமாக அனைத்து தமிழ் நாட்டு இல்லங்களிலும் ஒரு முறையாவது விவாதிக்கப்பட்டிருக்கும், வேதனையை உண்டாக்கியிருக்கும்.

இவ்வாறு நடைமுறைத் தமிழகம் இருக்கும்போது (we remain the most sexually suppressed society in India – in my view), இவற்றை வெளிக்கொணர்ந்த ஒரு மகத்தான இயக்குனரை பணத்திற்க்காக இவற்றை காட்டியுள்ளார் என்று விமர்சிப்பது நியாயம் அல்ல என்பது எனது கருத்து. Let these things be brought to the notice of all , let there be debates into the forbidden, suppressed areas of our society. புழக்கடையில் முடை நாற்றம் என்றால், ஊதுபத்தி ஏற்றி அதை மூடிமறைக்கும் மனப்பாங்கு இனியாவது மாறட்டும்.

நண்றி. வணக்கம்.

மும்முடிச்சோழன்


I ‘m sorry there ‘s a minor mistake in my e-mail address appearing at the end

of my story. The correct address is: manivel7@hotmail.com

Mani Velupillai


மோகமுள் பற்றிய பரிமளம் அவர்களின் கருத்து ஏற்கத்தக்கதல்ல. மோகமுள்ளின் கரு எங்கிருந்து முளைத்தது என்பது ஊரறிந்த ரகசியம் . யமுனா வாழ்ந்த வீட்டை தஞ்சை பிரகாஷுடன் சேர்ந்துபோய் பார்த்திருப்பவர்கள் என்னைப்போல பலர். அதைவிட அதே கதை அப்படியே நிகழ்ந்த இரு கவிஞர்களை நான் அறிவேன்.[வெறுமொரு சொல்லின் அக்கரை இக்கரை நின்று நாம் ஜென்மத்தை வீணாக்கினோம் [மலையாளம்] என் ஏதோ நரம்பில் இறுகுகிறது நூற்றாண்டுப் பிசுக்கேறிய உன் தாலிக்கொடி முடிச்சு – [தமிழ் ]. ஆட்களைச் சொல்ல மாட்டேன்]

ஒரு படைப்பின் கருவை பொதுவாக ஒப்பிட்டு இம்மாதிரி முடிவுகளுக்கு வருவது பல சமயம் தவறான விளைவுகளை ஏற்படுத்தும். மனித உறவுகளின் சிக்கல்களை ஒட்டிய கதைக்கருக்கள் பெரும்பாலும் ஒருசில வடிவங்களுக்குள் அடங்கக் கூடியவையே . ஒதெல்லோவின் , மாக்பெத் , ஹாம்லெட் போன்ற கதைகளை பெரும்பாலான கதைச்சூழல்களில் மீண்டும் மீண்டும் காணமுடியும். மோகமுள்ளின் கருவில் எங்கேயும் பல கதைகள் இருக்கும். நான் இரு மலையாள நாவல்கள், ஒரு கன்னட நாவல், இரு வங்க நாவல்களை படித்திருக்கிரேன். கருவை காப்பியடிப்பது குறித்த குற்றச்சாட்டு நூதனமான கருக்களுக்கே பொருந்தும். அறிவியல்புனைகதைகள், துப்பறியும் கதைகள், விசித்திரக் கதைகள் முதலியவை. மனித உறவுகளைப்பற்றி முற்றிலும் புதிதாக ஏதும் சொல்ல எவராலும் முடியாது. உறவுகளைப்பற்றி மனிதன் பேச ஆரம்பித்து இரண்டாயிரம் வருடங்கள் ஆகின்றன.

சொல்லப்பட்ட விதத்தை வைத்துத்தான் அது நகலெடுப்பா இல்லையா என்று சொல்லமுடியும். சம்பவக்கோவைகளை நகலெடுப்பது , திருப்பங்களை நகலெடுப்பது , மொழிப்பிரயோகத்தினை அப்படியே பிரதிசெய்வது இதெல்லாம்தான் தழுவல்/ திருட்டு ஆகும்.

ஒரு காலகட்டப் படைப்புகளில் சில பொதுவான அமைப்புகள் இருக்கும். உதாரணமாக ‘ஒரு தூரதேச ஊருக்கு ஒரு கதாநாயகன் வருவது, சில அனுபவங்கள் ‘ என்ற அமைப்புள்ள கதை இந்தியச்சூழலில் பலநூறு உள்ளன. காரணம், இது இந்திய யதார்த்தம், ஆசிரியராக, கிராமசேவகராக, மருத்துவ ஊழியராக படித்த இளைஞன் விசித்திரமான ஊருக்கு செல்வது . எனக்கே அப்படிப்பட்ட அனுபவதளம் உண்டு. இதைவைத்து இரு படைப்புகளை நகல் என்று ஒப்பிடலாகாது . ‘பங்கர் வாடி ‘ என்ற மராட்டிய நாவலையும்[ வெங்கடேஷ் மாட்கூல்கர்] கசாக்கின் இதிகாசம் [ ஓ வி விஜயன் ] என்ற மலையாள நாவலையும் இப்படி ஒப்பிட்டு ‘இலக்கிய திருட்டு ‘ என்று எழுதிய சோட்டா விமரிசகனுக்கு பதிலாக நண்பர் கல்பற்றா நாராயணன் எழுதினார் ‘ அதேபோலவே இரு அட்டைகள், அச்சிட்டபக்கங்கள், இருநூறு பக்கம். அச்சாக அப்படியே இருக்கிறது , கண்டிப்பாக இலக்கிய திருட்டுதான் ‘ என்று .

ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பம் அல்லது வாழ்க்கைப்போக்கு உலகம் முழுக்கவே ஒரு காலகட்டத்தில் ஒரேவகையான படைப்புகளை உருவாக்கும். உதாரணமாக சினுவா ஆசிபியின் சிதைவுகள் [ என் கெ மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம்] போன்ற அதே கருக்களை பலர் பல சூழல்களில் எழுதியிருக்கிறார்கள். சமீபத்தில் மலியாளத்தில் பேசப்பட்ட நாவலான ‘மாவேலி மன்றம் ‘னென்ற நாவல் [கெ வி பேபி பளியர் என்ற மலைவாசிகளைப்பற்றி எழுதியது ] பலவகையிலும் சிதைவுகளேதான் . காரணம் இது மூன்றாம் உலகம் முழுக்க நிகழும் ஒரு விஷயம் . இனக்குழுப்பண்பாட்டின் அழிவு.

ஆக பொதுவான ஒற்றுமைகளை வைத்து இலக்கியப்படைப்புகளைப் பற்றி எளிதாக முடிவுகளுக்கு வந்துிவிடலாகாது. உண்மையில் வணிகரீதியான படைப்புகளுக்கு தான் பலவிதமான கருக்கள் சாத்தியம். தீவிர இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் சுய அனுபவம் சார்ந்தவை. ஆகவே அவை ஒரே/ சிறு உலகத்துக்குள் இயங்குவது இயல்பே.

இலக்கியத்தில் இன்னும் ஒன்று உண்டு. ஒரு படைப்பின் கரு இன்னொரு எழுத்தாளரில் ஆழமான பாதிப்பை உருவாக்கி இன்னொரு படைப்பை உருவாக்கலாம் . புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் அப்படிப்பட்ட எடுத்தாளப்பட்ட கருதான் என க நா சுப்ரமணியம் அடையாளம் கண்டிருக்கிறார். எனக்கே அப்படி பல நாவல்களை மீண்டும் எழுதும் நோக்கம் உண்டு. ஒரே கருவை இருவர் எழுதலாம் .[மெளனியின் மாறுதல் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் இருகதைகளுக்கும் இடையேயான ஒற்றுமையை கவனித்தது உண்டா ? நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் ]

ஒரு படைப்பின் சாரமான அனுபவதளம் எடுத்தாளப்பட்டது என்றால், அவ்வாசிரியனின் படைப்பு ரீதியான பங்களிப்பு மூலத்தைவிட பலவீனமானதென்றால் அதை தழுவலாகக் கொள்ளலாம் . அதற்கும் திட்டவட்டமான தகவல்களுடனான ஆய்வு தேவை

சற்று நிதானித்து, மேலும் கவனித்து பிறகு இம்மாதிரி கருத்துக்களை சொல்வதே முறை

ஜெயமோகன்


ஆசிரியருக்கு

பேராசிரியர் வேதசகாய குமார் என்னிடம் கோபித்துக் கொண்டு பயனில்லை.ஜெயமோகன்,ஒரு வாசகர் எழுதியிருந்த்தன் அடிப்படையில்தான் நான் எழுதினேன். ஜெயமோகன் ஏன் அப்படி எழுதினார் என்று அவரிடம்தான் பேராசிரியர் கேட்க வேண்டும், அது குறித்த தன் கருத்தை தெரிவிக்க வேண்டும்.சுந்தர ராமசாமிக்கு எதிரான இலக்கிய அரசியலின் ஒரு பகுதியாக ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரையைக் காணலாம்.அது ஜெயகாந்தன் எழுத்துக்கள் பற்றிய விமர்சனக்கட்டுரை மட்டுமல்ல.ஜெயமோகன் இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் செய்துவரும் இலக்கிய அரசியலின் ஒரு பகுதி அது.அதில் பேராசிரியரின் ஆய்வேட்டை,ஆய்வைப் பற்றி அவர் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியிருக்கலாம். ஆனால் சுந்தர ராமசாமியின் மீதான விமர்சனத்தாக்குதலுக்கு அவரது ஆய்வேடு,ஆய்வு அங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.இது போன்றவற்றை நான் சுட்டிக்காட்டினால் பேராசிரியருக்குக் கோபம் வருகிறது.ஒரு ஆய்வாளர் என்ற முறையில் அவர் இத்தகைய கீழ்த்தரமான இலக்கிய அரசியலை விமர்சிக்க வேண்டும். அவர் அதை விமர்சிப்போரை கண்டிக்கிறார், அத்தகைய அரசியலில் ஈடுபடுவோருக்கு வக்காலத்து வாங்குகிறார். ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையான பின்னும் அவருக்கு இது புரியவில்லையா.

ஜெயமோகன் பேராசிரியர், சுந்தர ராமசாமியின் கருத்துக்களை ஏற்று,ஆதரித்து எழுதினார் என்று எழுதியிருக்கலாம்,ஆய்வேட்டைக் குறிப்பிடாமல்.அவர் ஏன் அதைக்குறிப்பிட்டார், பின் கட்டுரையில் பேராசிரியரின் ஆய்வை ஏன் குறை கூறுகிறார் ,தான் சுந்தர ராமசாமிக்கு எதிராக செய்யும் இலக்கிய அரசியலுக்கு வலுச்சேர்க்கவே. இது ஜெயமோகன் கட்டுரைகளை படிப்பவர்களுக்கு எளிதில் புரியும். கு.ப.ரா படைப்புகள் குறித்த கட்டுரையில் இது ஐயர்,ஐயங்கார், மரபு என்ற பெயரில் கூறப்பட்டாலும் அதன் பிண்ணணிக்காரணம் தெளிவாகவே தெரிகிறது. இப்படி படைப்பாளிகளை ஜாதி ரீதியாக குறிப்பிட்டு, மரபு மீதான கண்ணோட்டம் என்ற வாதத்தின் மூலம் அவர்களை விமர்சிப்பது அவரது குதர்க்க புத்தியையும்,கீழத்தரமான சிந்தனையையும் காட்டுகிறது. இதை கண்டிக்க வேண்டிய பேராசிரியர் மெளனம் சாதிக்கிறார்.தான் தாக்கப்பட்டாலும் தற்சார்பாக எதையும் கூற மறுக்கிறார்.இத்தகைய கட்டுரைகளை அவர் சிபாரிசு செய்யலாம்- இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக.ஆனால் அவர் கண்ணோட்டமோ வேறுவிதமாக உள்ளது.

பேராசிரியர் நான் முன்வைத்த கேள்விகளை எதிர்கொள்ள மறுக்கிறார். அவர் சுந்தர ராமசாமியின் கருத்துகள் என் ஆய்வில் தாக்கததை ஒரளவே ஏற்படுத்தின, ஜெயமோகன் அதை மிகைப்படுத்தி எழுதியுள்ளார் என்றோ அல்லது ஜெயமோகன் எழுதியது சரியல்ல,என் ஆய்வேடு என் சிந்தனை, கருத்துகளின் அடிப்படையில் உருவானது, அதில் பிறர் கருத்துகள் வாதத்திற்கு வலுச்சேர்க்கவே பயன்படுத்தப்பட்டன என எழுதியிருந்தால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.அவ்வாறு எழுதாமல் மெளனம் சாதிப்பது வியப்பளிக்கிறது.அது அன்றைய நிலைப்பாடு, இன்று என் நிலைப்பாடு இது என்று தன் கருத்தை முன்வைத்திருந்தால் அல்லது என் ஆய்வில் குறையில்லை ஜெயமோகன் எழுதியதை நான் ஏற்க இயலாது என்று எழுதியிருந்தால் அவர் தரப்பு வாதம் நமக்கு தெரிந்திருக்கும்.பேராசிரியர் எழுதிய இரண்டு கட்டுரைகளின் பலவீனங்களை ஆய்வுத்துறை,அறிவுத்துறைகளில் ஒரளவு பரிச்சியமுடையவர்கள் கூட அறிவார்கள்.அவற்றிற்கு பதில் எழுதுவது அலுப்பூட்டும் செயல்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

Series Navigation