ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

நூல் மதிப்பீடு: பேராசிரியர்.ரிச்சர்ட்.எம்.ஈபிலிங்


1947 இல் ஆஸ்திரிய பொருளியலாளர் லுட்விக் வான் மைஸஸ் ‘திட்டமிடப்பட்ட குழப்பங்கள் ‘ எனும் சிறிய நூலை வெளியிட்டார். முதல் உலகப் போரின் பின் மேற்கத்திய உலகில் உருவாகி இயங்கி இரண்டாம் உலகப் போரினை உருவாக்கிய அறிவுலக சித்தாந்த சக்திகளினை ஆராய்ந்து பார்வைக்கு கொண்டு வர அவர் அந்நூலில் முயன்றார். ‘பாசிஸமும் சரி நாசியிஸமும் சரி சோஷலிஸ சர்வாதிகார அரசுகள் என்பதனை அறிந்து கொள்வது முக்கியமானது ‘ என்பதனை சுட்டிக்காட்டும் மைஸஸ் அவை இரண்டுமே ‘சோவியத் முறை சர்வாதிகாரத்தில் எழும்பியவை. மேலும் சோவியத் முறையிலேயே தம் சித்தாந்த விரோதிகளை வன்முறையாக அழித்தவை ‘ எனவும் கூறினார். மேலும் முதல் உலகப்போருக்கு முன் பெனிட்டோ முஸோலினி இத்தாலியின் முன்னணி சோஷலிஸ்ட்களில் ஒருவர் என்பதை அவர் நினைவுபடுத்தினார். மார்க்சியத்திலிருந்து முஸோலினியின் முக்கிய திரிபு என்னவென்றால் முதல் உலகப்போரில் நேசநாடுகளுக்கு ஆதரவாக இத்தாலி களமிறங்கி ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் பகுதியின் ‘இத்தாலிய; பிரதேசங்களை வெல்ல முற்பட்டதுதான். யுத்தம் முடிந்ததும் முஸோலினி இத்தாலிய தேசியவாதிகள், கூட்டுப்பொருளாதாரவாதிகள் ஆகிய வைதீக மார்க்சிய சோஷலிஸத்திலிருந்து வெளிவந்தவர்களை இணைத்துதான் பாசிச இயக்கத்தை ஆரம்பித்தது. முஸோலினியின் பொருளாதார கோட்பாடு ‘சிண்டிக்கலிஸம் ‘ எனும் தொழில்வினைஞர்களை கூட்டமைப்புகள் மூலம் சேர்த்து ஒரு மைய அரசின் வழிகாட்டுதலுக்கும் கட்டுப்பாட்டுக்கும் கீழ் தேசிய உற்பத்தியை கொண்டுவருவதாகும். ‘பாசிஸம் மார்க்சிய சோஷலிஸ்ட்களிடையேயான ஒரு பிளவில் உருவாகி தன் பொருளாதார செயல்திட்டத்தை ஜெர்மானிய சோஷலிஸ்ட்களிடமிருந்தும், தம் அரசதிகார முறையை லெனினிடமிருந்தும் பெற்றுக்கொண்டது ‘என மைஸஸ் குறிப்பிட்டார். ‘நமது காலகட்டத்தில் முழுமையான தூய்மையான முதலாளித்துவ எதிர்ப்பும் சோஷலிச உயிர்த்துடிப்பும் கொண்ட தத்துவமாக விளங்கியது நாசியிஸம் தான் ‘ எனவும் அவர் வாதிட்டார். ஆக நாசி திட்டம் மார்க்சியத்தைக் காட்டிலும் மிகவும் முழுமையானது எனவே மிகுந்த நாசத்தன்மை கொண்டது. அது சுதந்திரமான அமைப்புகளின் செயல்படுதலை பொருட்களின் உற்பத்தியில் மாத்திரமல்ல மானுடர்களின் பிறப்பிலும் கூட அனுமதிக்கவில்லை. பூரர் அனைத்து தொழிற்சாலைகளின் பொது மேலாண்மையாளர் மாத்திரமல்ல மனிதர்களை உற்பத்தி செய்யும் பண்ணைகளுக்கும் அவரே, கீழ்த்தர பிறப்புகளை அழிக்கவும் மேன்மையான இனத்தை உருவாக்கவுமான பணியினை மேற்கொண்டிருக்கும் பொது மேலாண்மையாளர். மேலும் மைஸஸ் கூறினார், ‘லெனினுக்கும், ட்ராட்ஸ்கிக்கும் ஸ்டாலினுக்கும் கிடைத்த சீடர்களிலேயே நாசிகளைப் போல அவர்களை அருமையாக பின்பற்றியவர்கள் வேறு யாருமில்லை…ஒரு-கட்சி அமைப்பு; அரசியல் வாழ்வில் அக்கட்சியின் மேதமை; இரகசிய காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்; கடும் உழைப்பு முகாம்கள்; முழுமையான களையெடுப்பு; அனைத்து எதிரிகளையும் சிறையிலிடுதல்; ஐயம் ஏற்படுத்தும் நபர்களின் குடும்பங்களை கருவறுத்தல்; பிரச்சார செயல் முறை- இவை அனைத்தையுமே நாசிகள் சோவியத் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தனர். ‘

பேசக்கூடாத விஷயம்:

சோவியத் கம்யூனிஸம், இத்தாலிய பாசிஸம் மற்றும் ஜெர்மானிய நாசியிஸம் ஆகிய மூன்றுமே ஒரு பொதுப்புள்ளியிலிருந்து கிளைவிட்டவை என வாதிடுவது 20-ஆம் நூற்றாண்டின் பேசக்கூடாத விஷயம். அறிவுஜீவிகளிடையே, அரசியல் இடதுசாரிகளில்லாதவர்களிடமும் கூட, சோவியத் கம்யூனிஸம் யதார்த்தத்தில் என்னதான் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் கூட அது என்னவோ மானுட சமுதாயம் அனைத்திற் குமாக அரசியல் சுமுக இசைவு, சமுதாய நீதி, பொருளாதார சமத்துவம் ஆகியவற்றை கொணர்வதற்கான ஒரு முற்போக்கு முயற்சி என்பதாகவும், அதற்கு மாறாக பாசிஸம் மற்றும் நாசியிஸம் ஆகியவை பிற்போக்கு முதலாளித்துவ சக்திகள் தம் சமுதாய நீதியற்ற பொருளாதார சுரண்டலை, சர்வாதிகாரம், வன்முறை மற்றும் போர் மூலம் தக்க வைத்துக் கொள்ள உருவாக்கிய அமைப்புகள் என்பதாகவும் ஒரு சித்திரம் உள்ளது. இச்சித்திரம் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வரலாற்றறிஞர் ரிச்சர்ட் பைப்ஸ் சோவியத் சர்வாதிகாரம் பாசிஸ மற்றும் நாசி அரசுகளின் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து தம் நூலான ‘ Russia under the Bolshevik Regime ‘ (1994) இல் விவரித்துள்ளார். அவரது கூற்றின் படி முஸோலினியும் ஹிட்லரும் ‘ஒரு கட்சியினை தன்னைச் சுற்றியே வளர்த்து அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றி பின் ஒரு கட்சி ஆட்சிமுறையை அமைப்பது எப்படி என்பதை போல்ஷ்விக்குகளிடமிருந்தே கற்றனர் ‘. மேலும் சோவியத் மற்றும் நாசி சர்வாதிகாரங்களின் கீழிருந்த பொருளாதார அமைப்பின் ஒற்றுமையினையும் பைப்ஸ் தனது மற்றொரு நூலான ‘ Property and Freedom ‘ (1999) இல் காட்டியுள்ளார்.

இப்போது இத்தாலிய பாசிஸத்தின் வரலாறு மற்றும் சித்தாந்த கோட்பாடுகள் குறித்த உலகின் முதன்மையான ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஏ.ஜேம்ஸ் க்ரிகோர் (மார்க்சிய-பாசிச-நாசி தொடர்புகள்/உறவுகள் குறித்த) முந்தைய ஆய்வுகளில் மற்றொரு படி முன் சென்றுள்ளார். அவர் முதல் உலகப் போருக்கு பின் முளைத்த பாசிஸ நாசி இயக்கங்கள் மற்றும் சித்தாந்தங்களின் சோஷலிச மற்றும் மார்க்சிஸ வேர்களை காட்டுவதோடு நில்லாமல் லெனின், ஸ்டாலின் மற்றும் மாசேதுங் ஆகியோரது கம்யூனிஸ இயக்கங்களிலும், அரசுகளிலும் பாசிஸத்தின் தாக்கத்தையும் காட்டுகிறார்.

முதல் உலகப்போருக்கு பிறகான காலகட்டத்தில் ஆசார மார்க்சியத்தின் ‘உழைப்பாளிகள் புரட்சி ‘ இத்தாலி போன்றதோர் முதலாளித்துவம் பூரண வளர்ச்சி அடையாத பொருளாதார பிற்போக்கு நாட்டில் ஏற்பட முடியாதென சித்தாந்தவாதிகள் உணர்ந்தனர்.எனவே இத்தாலி மார்க்சியத் சோஷலிஸத்தன்மை அடைய முழுமையாக தொழில்மயமாக்கப்பட வேண்டும் என்றும் இதனை அடைய தேசியவாத ஒருமைப்பாட்டின் கீழ் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் கூட்டுத்தன்மையுடன் (collectivist) நவீனப்படுத்தப்பட அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு திட்டமிடலின் அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும் இத்தாலியின் மார்க்சிய சித்தாந்தவாதிகளில் பெரும்பாலானோர் தீர்மானித்தனர்.

(இத்தீர்வை ஏற்காத) இத்தாலிய ஆச்சார மார்க்சிய வாதிகளும்,சோவியத் போல்ஷ்விக்குகளும் பாசிஸத்தின் மக்கள் ஈர்ப்பு சக்தியால் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக பாசிஸத்திற்கு உழைக்கும் வர்க்கத்திடம் இருந்த செல்வாக்கு அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனவே 1920 களிலும் 1930களிலும் மார்க்சிய மற்றும் சோவியத் அரசு பாசிஸம் குறித்த அதிகார பூர்வமான நிலைபாடு என்னவென்றால்: ‘பாசிஸம் ஒரு முற்போக்கு புரட்சிகர மக்கள் இயக்கம் அல்ல. மாறாக நடுத்தர முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளின், நில உடைமை வர்க்கத்தின் இயக்கம் ‘. ஆனால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.அடிப்படை பொருளாதார தரவுகளின் மேல் நிற்காத பிரச்சார வசைபாடலே இது. இந்த வசையகராதி சித்தரிப்பான ‘தீய ‘ வலதுசாரி பாசிஸ்ட்கள் vs ‘நல்ல ‘ இடதுசாரி சோஷலிஸ்ட்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் என்பதே இக்காலகட்டத்திற்கு பின்னான 20-ஆம் நூற்றாண்டின் ‘அறிவுஜீவிகளின் ‘ பவ்லோவிய எதிர்வினைகளுக்கான சட்டகமாயிற்று.

இதிலுள்ள பிரத்யேக வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே லெனினின் அதிகாரத்தின் கீழும் பின்னர் இன்னமும் ‘சிறப்பாக ‘ ஸ்டாலினின் காலத்திலும் சோவியத் யூனியனே மேலும் மேலும் பாசிஸ தன்மைகளை அடைந்த வண்ணமே இருந்தது என்பதுதான். ஸ்டாலினின் ‘ஒரு தேசத்தில் சோஷலிசத்தை உருவாக்குவோம் ‘ எனும் கோஷம் சோவியத் ‘தேசியவாதத்திற்கும் ‘ தேச பக்திக்கும் புதிய இடத்தை ஆச்சார மார்க்சியத்தின் ‘சோஷலிச சர்வதேசியத்தின் ‘ இடத்தில் உருவாக்கியது.

க்ரிகோர் இதே வளர்ச்சி கம்யூனிஸ சீனத்திலும் ஏற்பட்டதை காட்டுகிறார். மாசேதுங்கின் எண்ணங்கள் கேள்விக்குட்படுத்தப்படத்தகாத தலைவரின் தவறற்ற ஞான வெளிப்பாடாக கருதப்பட்டன. அவ்வாறு கேள்வி கேட்கும் எவரும் அக்காரணத்தாலேயே சித்தாந்த வரையறையின் படி ‘வர்க்க எதிரி ‘யாகி விடுவர்.மார்க்சிய பதப்பிரயோகத்துக்குள் சீன தேசியம் பொதியப்பட்டு அதன் அடிப்படையில் மக்களிடமிருந்து பொதுவுடமை சித்தாந்தத்திற்கு விசுவாசம் கோரிப்பெறப்பட்டது. கம்யூனிஸ பொற்கால உதயத்திற்கு மகா ‘ஹன் ‘ மக்களின் நடுநாயக முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு அதன் அடிப்படையில் இனவாதமும் வளர்க்கப்பட்டது. ‘ஹன் ‘ எனும் பேரின மக்களே திபெத்தியர் போன்ற சிற்றின மக்களை சீர்படுத்தி அறிவு கொடுத்து கட்டுப்படுத்தி வாழ வைக்க வேண்டும். இதே இனவாத கருத்தாக்கங்கள் சோவியத்திலும் உருவாகின என்பதை க்ரிகோர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக ஸ்டாலினிடமிருந்து சோவியத்தின் மற்ற இனத்தவரின் மொழியினரினை மேம்படுத்துவதில் ரஷ்ய மக்களின் வரலாற்று முக்கியத்துவம் பேசப்பட்டது.

க்ரிகோரின் ஆய்வின் படி பாசிஸம், நாசியிசம், கம்யூனிசம் ஆகியவற்றை இணைக்கும் பொதுச்சரடு தனிமனித எதிர்ப்பு, சந்தை பொருளாதார எதிர்ப்பு, அரசின் கட்டுப்பாடற்ற நிலையில் ஒரு பண்பட்ட சமுதாயம் இயங்க முடியும் என்பதில் நம்பிக்கையின்மை என்பதாகும். நவீனத்துவம், தேசிய ஒற்றைத்தன ஒருமை, சர்வதேச எதிரிகளை சிருஷ்டித்தல் ஆகியவை 20-ஆம் நூற்றாண்டின் சோஷலிஸ உருவாக்கங்கள். வருங்கால அபாயமாக க்ரிகோர் காண்பதெதனை ? சோஷலிஸத்தின் பாசிஸ உரு இன்னமும் அழிந்துவிடவில்லை. சோஷலிசத்திற்கு இன்னமும் பல மக்களிடம் இருக்கும் கவர்ச்சியை பயன்படுத்தி பாசிஸம் இனியும் கூட மானுட சமுதாயத்திற்கு ரணங்களை ஏற்படுத்தலாம் – தன் பெயரினை மாற்றிக்கொண்டு.

பேரா.ரிச்சர்ட் எம் ஈபிலிங், மிச்சிகனின் ஹில்ஸ்டேல் கல்லூரியில் ‘லுட்விக் வான் மைஸஸ் ‘ பொருளாதார பேராசிரியர். ‘The Future of Freedom Foundation ‘ மையத்தின் அறிவமைப்புகளுக்கு துணைத்தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.

தமிழில் : மண்ணாந்தை

Series Navigation

நூல் மதிப்பீடு: பேராசிரியர்.ரிச்சர்ட்.எம்.ஈபிலிங்

நூல் மதிப்பீடு: பேராசிரியர்.ரிச்சர்ட்.எம்.ஈபிலிங்