கடிதங்கள்

This entry is part of 42 in the series 20030828_Issue

ஆகஸ்ட் 28, 2003ஆசிரியருக்கு,

geological survey of india,zoological survey of india,botanical survey of india போன்ற அமைப்புகளுக்கு போதுமான நிதியும்,வசதிகளும் செய்து கொடுத்தால் National Geographic போன்றவற்றின் நிதி உதவி தேவைப்பட்டிராது.இதை செய்யாதது யார்- மத்திய அரசு.இந்த உண்மையை மறைத்து விட்டு எழுதுகிறார் அ.நீலகண்டன். அபத்தங்கள் திரைப்படங்களில் மட்டும்தான் உள்ளனவா- இணைய இதழ்களில் உள்ள கட்டுரைகள்,லட்சக்கணக்கில்/ஆயிரக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகள்,கதைகள்,நகைச்சுவைத் துணுக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவற்றை உதாரணம் காட்டலாம்.திரைப்படங்கள் அரசுக்கு பல வழிகளில் வருவாய் ஈட்டித்தருகின்றன,அரசிடமிருந்து பெறும் வருவாய் அதோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.அரசு தன் வருவாயிலிருந்து அறிவியல் ஆய்விற்கு நிதி ஒதுக்கத் தவறினால் அதற்கு திரைப்படத்துறை என்ன செய்ய முடியும்.திரைப்படங்கள் மூலம் திரட்டப்படும் வருவாயின் ஒரு பகுதியை அரசு அறிவியல் ஆய்விற்க்கு ஒதுக்கலாம், அறிவியல் நூல்கள் வெளியிட, அறிவியல் ஆர்வத்தினை வளர்க்கும் குறும்படங்கள் தயாரிக்க பயன்படுத்தலாம்.

ஜெயகாந்தன், அவரது படைப்புகள் குறித்து கோவை ஞானியின் கட்டுரை ஒன்று இணையத்தில் உள்ளது.

http://www.webulagam.com/literature/longstories/2000_11/29_story1.htm

இது தவிர ஜெயகாந்தன், அவரது படைப்புகள் குறித்து பல கட்டுரைகள்,பேட்டிகள் இணையத்தில் உள்ளன.

http://www.tamil.net/people/pksivakumar/

இவற்றையும் கவனத்தில் கொள்ளுமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்

இந்த வாரக் குறிப்புகளை அனுப்பியபின் சில செய்திகளைப் படித்தேன் – குளிர்பானங்களில் பூச்சிகொல்லி எச்சங்கள் குறித்தவை அவை.அடுத்த வாரக் குறிப்புகளில் தகவல்களை update செய்து எழுதுகிறேன் (அ) ஒரு கட்டுரை எழுதி அனுப்புகிறேன். harmonisation என்பதற்கு பொருத்தமான/ சரியான தமிழ்ச்சொல் என்ன என்பதையும் அறிய விரும்புகிறேன்.இது போல் கீழ்கண்டவற்றிற்கு பொருத்தமான தமிழ்ச்சொற்களையும்,புழக்கத்தில் உள்ளவற்றையும் அறிய விரும்புகிறேன்.

regulatory mechanism,oversight,risk,endocrine disrupting effect,immune system,tolerance level,

post normal,meta theory,transboundary,persistent organic pollutant(POP),

இது போன்ற பல சொற்களை தினமும் சந்திக்கும் போது தமிழில் ஒரு கலைச்சொல் அகராதி தேவை என்பதை உணர்கிறேன்.

risk என்பது danger என்பதிலிருந்து வேறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.எனவே அதை ஆபத்து/அபாயம் என்று மொழிபெயர்ப்பது மிகப்பொருத்தமாக இராது. பெக் என்ற சமூகவியலாளர் risk society குறித்து விரிவாக எழுதியுள்ளார்.இது குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ளதா ?. Journal of Risk Research என்ற journal க்கு Transboundary Risk குறித்த ஒரு நூலின் மதிப்புரை எழுதினேன்.அப்போது நான் எதிர்கொண்ட பல கலைச்சொற்களுக்கு பொருத்தமான தமிழ்ச்சொற்கள் என்ன என யோசித்த போது இத்தகைய ஒரு அகராதி இருந்தால் அந்த நூலின் அடிப்படையில் ஒரு கட்டுரையை தமிழில் எழுதுவது எளிதாயிருக்கும் என்பதை உணர்ந்தேன்.

கலைச்சொற்கள் குறித்து நான் எழுதயுள்ள கட்டுரையில் இது பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


நண்பர் இரா முருகன் எழுதிய ஒரு கருத்தைப்பற்றி என் அறிதல்கள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் பாணியில் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கேரளத்தில் காணலாம் என்று அவரது ஒருவரியைப்பற்றி

விஷ்ணுபுரம் நாவலுக்காக சிற்பவியல் குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தபோது ஒரு சிற்பியிடம் ஓர் ஐயம் கேட்டேன். பெரும்பாலான சிற்பங்களில் மழுங்கலான ஆங்கில எஸ் [S] வடிவம் இருப்பதைப்பற்றி. அவர் சொன்னார் கற்சிற்பங்களின் மூலம் மரச்சிற்பங்களே என்று . மரத்தடியின் உருளைவடிவுக்குள் நிற்கும்படியே சிற்பங்களின் அடிப்படை லட்சணம் உருவாக்கப்பட்டுள்ளது. பற்பல கைகள் கொண்ட சிலைகளை பிற்பாடு செதுக்க ஆரம்பித்தபோது பலவகையான மாறுதல்கள் வந்தாலும் மரச்சிற்பங்களின் பல இயல்புகள் கற்சிற்பங்களில் தொடர்கின்றன என்று.

அது ஆச்சரயமாக இருந்தது . ஆனால் பிறகு பலகோவில்களில் மரக்கட்டிடங்களின் அமைப்புகள் அப்படியே கல்லிலும் பின்பற்றப்பட்ட்டிருப்பதைக் கண்டேன். உத்தரங்கள் , கழுக்கோல்கள், விளிம்பு வளைவுகள் போன்ற பல அமைப்புகள் நம் கோவில்களில் மரக்கட்டங்களில் இருப்பனபோலவே கல்லில் உருவாக்கப்பிருக்கின்றன. ஆமலகம் என்ற அமைப்பு முற்றிலும் மரத்தின் செதுக்குத் தன்மைகொண்டது. இதை பலர் கவனித்திருக்கலாம். தாராசுரம் [கும்பகோணம் அருகே] இதை அவதானிக்க மிகச்சிறந்த இடம். அங்கே மென்மையான வெண்கல்லிலும் மணல்கல்லிலும் கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே மரத்தில் மட்டுமே சாத்தியமான எல்லா வேலைப்பாடுகளையும் மரம் என்று எண்ணும்படியாகவே கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இன்னொரு முக்கிய இடம் அஜந்தா. நமது சிற்பக்கலையும் கட்டிடக் கலையும் உருவாகி வந்த விதத்தை கிட்டத்தட்ட வரிசையாகவே அங்கே காணலாம். அஜந்தாகுகைக் கோவில்களில் தூண்களுக்கு அவசியமே இல்லை, அவை குடைவரை அமைப்புகள். ஆனால் மரத்தூண்கள்போலவே தூண்கள் உள்ளன. அதைவிட மேலே பார்த்தால் வளைவாக உத்தரங்களும் கழுக்கோல்களும் பட்டியல்களும் செதுக்கப்பட்டுள்ளன என்பது நம்மை வியப்பிலாழ்த்தும்!

அஜந்தா சிற்பங்களைக் காணும்போது கற்சிற்பங்களுக்கு முன்மாதிரியாக மண் சிற்பங்கள் இருந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அமர்ந்த படுத்த புத்தர் சிலைகள் மண்ணில் சாதாரணமாக செய்யப்பட்ட காலம் இருந்திருக்கும். குஷிநகரில் உள்ள படுத்த வாக்கிலான புத்தரின் பரிநிர்வாண சிற்பம் புத்தரின் சிற்பங்களில் பழைமையான ஒன்று . அது ஒரு சுதைச்சிற்பம்தான்.

இன்னொரு முக்கியமான உதாரணம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது . அது ஒரு பன்னிரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அதாவது கற்சிற்ப மரபு வேரூன்றியபிறகு உள்ளது . அது இப்பகுதியில் பிரபலமாக உள்ள சுடுமண் சிற்ப அமைப்பை அப்படியே கல்லில் கொண்டுவரப்பட்ட கள்ளியங்காட்டு நீலியின்[ நாட்டார் தெய்வம் ] சிற்பம் .

ஆக, கல்லில் உள்ளவை மரத்திலும் மண்ணிலும் உள்ளவற்றின் மேம்படுத்தப்பட்ட செம்மையான வடிவங்கள் . ஃபோக்கிலிருந்து கிளாசிக்குகள் போல உருவாகி வந்தவை. அழியக்கூடியனவற்றில் இருந்து அழியாதவை வந்தன . நாம் இன்று காணும் மிகச் செம்மையான கற்சிற்பங்கள் மிகப்பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவையே. கல்சிற்பங்களில் இருந்து மரச்சிற்பங்களும் மண்சிற்பங்களும் உருவாகவில்லை. செவ்வியலில் இருந்து நாட்டாரியல் பிறக்கமுடியாது. ஆனால் கம்பராமாயணத்தின் பாதிப்பு வில்லுப்பாட்டுகளில் இருப்பதுபோல பிற்கால மரச்சிற்பங்களில் கல்சிற்பங்களில் சில இயல்புகள் கலந்திருக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை.

இக்கருத்தை ஏழெட்டு சிற்பிகளிடமிருந்தாவது கேட்டிருப்பேன். கலைக் கல்வி முடித்தவர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்

ஜெயமோகன்


அரவிந்தநின் விமரிசனங்கள் அளிக்கும் சோர்வு சாதாரணமாக இல்லை. தமிழில் இன்றுவரை விமரிசனம் எழுதவந்தவர்கள் அதற்கான விரிவான பின்னணி படிப்புடன்தான் வந்திருக்கிறார்கள். இவருக்கு தன் அறியாமைசார்ந்தே ஒரு பெருமிதம் இருக்கிறது! என்ன சொல்ல! ஜெயகாந்தன் தன் விமரிசனத்துக்கே தகுதியற்ரவர் என்று தூக்கிபோடுகிறார் . ஆனால் தமிழிலும் சரி இந்திய சூழலிலும் சரி ஜெயகாந்தனின் இடம்பற்றி ஒரு மதிப்பீட்டை உருவாக்குமளவுக்கு இவருக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரியாமல் தன் அனுபவம் சார்ந்து கருத்து சொல்லலாமா என்றால் சொல்லலாம். ஆனால் அப்போது அதற்குரிய அடக்கம் தேவை. எனக்கு பிடிக்கவில்லை , புரியவில்லை என்பதுடன் நின்றுவிடவேண்டும். தமிழ்ல் க.நா.சுப்ரமணியம் , வெப்fகட் சாமிநாதன் ஆகியோர் முன்வைத்த பல விமரிசன கருத்துக்களை தர்க்கபூர்வமாக தகர்த்தவர் எம் வேதசகாயகுமார். உதாரணமாக கு.ப. ராஜகோபாலனை புதுமைப்பித்தனைவிட மேலேதூக்கி வைத்த க.நா.சுப்ர,மணியத்தின் கருத்தை அவர் தன் தமிழ் சிறுகதைவரலாற்றில் மறுத்தமை . சென்ற காலங்களில் மெளனி , தி.ஜானகிராமன் பற்றிய விவாதங்களில் ஆக்கபூர்வமான பங்கை ஆற்றியவர். தன்முன்னோடி விமரிசகனை படிக்கவேயில்லை, படிக்கும் பழக்கமும் இல்லை என்ற ‘தெளிவை ‘ முன்வைக்கிறார் இந்தவிமரிசகன். படிப்பின்பலத்தால்தான் விமரிச்கன் உருவாகிறான். தனிப்பட்டதொடர்புகளின் பலத்திலே அல்ல. பத்விகளினாலும் அல்ல. படிப்பின்மையை ஒரு தகுதியாக எண்ணக்கூடிய விமரிசகர்களின் ஒரு தலைமுறை உருவானால் அதற்கு இவரே முன்னோடி ஆவார்.

சூரியா

சென்னை


கரிச்சான் குஞ்சுவின் கதையும் கதையை ஒட்டிய பாவண்ணன் வாழ்க்கையில் சந்தித்த நண்பரும் கொண்டுவரும் பிரச்னையை அழகாகச் சொல்லியிருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். வாழ்வில் வெற்றி தோல்வி என்பது வெறும் சீட்டாட்டத்தில் கிடைக்கும் சீட்டு போன்றது என்பது கேள்விக்குறியது. ஆனால் நண்பரின் வாழ்விலோ அது தார்மீகக் கேள்வியாக இருக்கிறது. கரிச்சான் குஞ்சு எழுதிய கதையில் தார்மீக கேள்வி இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நண்பரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு சரியா தவறா என்ற கேள்வியோடு இணைந்தது.

பெண்ணிய நிலைபாடு பற்றிய இருதலை நிலைமை பற்றிய சிந்தனையை குட்டிரேவதி பற்றிய கட்டுரை என்னுள் எழுப்பிவிட்டது. முதலாவது பெண்ணிய நிலைபாடு பெண்ணின் உடலுறுப்பு பற்றிய குறிப்புகளை ஆணாதிக்க நிலைப்பாடாக பார்க்கிறது. இரண்டாவது பெண்ணிய நிலைப்பாடு அதனை உரத்து கூற முன்வந்து அதிர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொள்கிறது. இரண்டிலும் பெண் கலகக்காரியாக ஆகிறாள்.

நரேஷ்


Series Navigation