ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

மஞ்சுளா நவநீதன்


பெரியார் பற்றிய ஞாநியின் கட்டுரையில் இரண்டு சந்தேகங்கள் : ஒன்று தி மு க , அ தி மு க இரண்டும் பெரியாரின் வாரிசுகள் என்று காணப்படலாகாது என்றால் பெரியாரின் இயக்கத்தின் வாரிசுகள் இன்று யார் ? பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் , பெரியாரின் அறிவு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் யாருடைய இயக்கத்தில் சேர்ந்து பணி புரிய வேண்டும் ? அப்படி எந்த அறிவு இயக்கமும் இல்லை என்றால், பெரியாருடன் பெரியாரின் பணி முடிவு பெற்று விட்டதா ? தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் எனில் பெரியாரின் சமூக இயக்க எச்சம் எது ?

***

ஞாநியின் இந்த வாதம் ஒரு வினோதமான வாதம். காங்கிரஸில் இன்று சோனியா இருந்தாலும், இந்திரா காந்தி இருந்தாலும், அது காங்கிரஸ் இயக்கம்தான். அதனைத் தாண்டி செல்ல அதனால் இயலாது. காந்தி, நேரு, நேதாஜி, காமராஜ், ராஜாஜி, பட்டேல் போன்றவர்கள் இருந்தபோதே கூட அதனுள் பலதரப்பட்ட கருத்துக்கள் சார்புகள் நடந்திருக்கின்றன. இருப்பினும் அதற்கு காங்கிரஸ் என்ற ஒருமை உண்டு. காங்கிரஸ் இன்று சோனியாவின் தலைமையின் கீழ் இருந்தாலும் அது காங்கிரஸ் வழியில்தான் இருக்கிறது. அது நாளை ராகுல் காந்தி தலைமையின் கீழ் இருந்தாலும் அது காங்கிரஸ் வழியில்தான் இருக்கிறது. அது கம்யூனிஸ்ட் ஆகிவிடாது. அதே போல அது இந்து மகா சபாவாகவும் ஆகிவிடாது. காந்தி காங்கிரஸை கலைக்க விரும்பியதைச் சொல்லிக்கூட பார்க்கலாம். இருப்பினும் அது காங்கிரஸ்தான்.

அதே போல, திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல்கள்தான் அண்ணாவும், கருணாநிதியும், எம்ஜியாரும் ஜெயலலிதாவும். என்னதான் ஜெயலலிதா இந்துத்வ சார்பு எடுத்தாலும், அவரால் இட ஒதுக்கீட்டை வலுப்பெறச் செய்வது, அண்ணாவை குறை சொன்னார் என்று சேஷன் மீது ஆட்களை ஏவி விடுவது, சொல்லக் கூசும் மேடைப் பேச்சுக்காக ஆட்களைத் தயார் செய்து தாக்குவது, தமிழ் வளர்ச்சி என்று கூவுவது (கூவிவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பது) போன்றவைகளைத் தாண்டமுடியவில்லையே.

பெரியார் இவர்களை கண்ணீர்துளிகள் என்று கேலி செய்து எழுதியிருந்தாலும், அண்ணாவும் கருணாநிதியும் தங்களை பெரியாரின் வழித்தோன்றல்களாகத்தானே பார்க்கிறார்கள். அதுதான் முக்கியம். அவ்வாறு இல்லாமல் அண்ணாவும் கருணாநிதியும் தங்களது தத்துவச் சார்புகளை எங்கிருந்து பெற்றார்கள் ? 1967 வரையில் கண்ணீர்த்துளிகள் என்று தி மு க – வினை ஏசி வந்த பெரியார், தம்முடைய ஆட்சியை அண்ணா பெரியாருக்குச் சமர்ப்பித்தவுடன் , அது தவறு எனக்கும் உங்கள் ஆட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எங்காவது பதிவு செய்திருக்கிறாரா ?

காந்தியின் பாதிப்பு காங்கிரஸ் மட்டுமல்லாமல், நெல்சன் மண்டேலா தொடங்கி, மார்ட்டின் லூதர் கிங் வரையில், பசுமை இயக்கம் தொடங்கி , சுற்றுப்புறச் சூழல் இயக்கங்கள் வரையில் , புதுயுகம் (New Age) என்று மாற்றுக் கலாசார இயக்கமாக உலகு தழுவி உருவாகியிருக்கிறது. பெரியாரின் எச்சம் எது ? இனவாத தமிழ்த் தேசிய இயக்கங்கள், ஆளுயர மாலை ஆடம்பர இயக்கங்கள், கண்ணகி சிலை ஆதரவு இயக்கங்கள், கொள்ளையன் வீரப்பன் ஆதரவு இயக்கங்கள், நவீனத்துவ மறுப்பு தமிழ் இயக்கங்கள் , இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் இருமொழித் திட்டத்தை மேற்கொண்டு தமிழைக் குழிதோண்டிப் புதைத்தது – இவை தானே ?

***

கேள்வி இரண்டு : உங்கள் கட்டுரையிலிருந்து

‘எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா மிகுந்த உழைப்புடன் ஆய்வு செய்து திரட்டி எழுதிய ‘பெரியார்- சுயமரியாதை-சமதர்மம் ‘ ( விடியல் வெளியீடு) நூலிலிருந்து இது தொடர்பாக இதோ ஒரு பகுதி :

மணிக்கொடி மரபை இருட்டடிப்பு செய்தார்கள் திராவிட இயக்கத்தினர் என்று குற்றஞ்சாட்டுகிறார் ஜெயமோகன். உண்மையில் இருட்டடிப்பு செய்யப்பட்டது சுயமரியாதை இயக்க, திராவிட இயக்கப் படைப்பாளிகள்தான். ஐம்பதுகள் தொடங்கி எண்பதுகள் வரை வந்த கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கான தமிழ் இலக்கிய வரலாறு நூல்களில் மணிக்கொடி, புதுமைப்பித்தன் பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் அவற்றில் திராவிட, சு.ம இயக்கப் படைப்பாளிகள் பற்றி விரிவாக எதுவும் இல்லை. இருந்தாலும் அண்ணா, கருணாநிதி, தென்னரசு என்று ஒரு சில பெயர்கள் கூறப்பட்டிருக்கும். அவ்வளவுதான்.

உலக விஷயங்களை, அரசியல் தத்துவங்களை எளிய தமிழில் சிறப்பாக எழுதியதற்காக ( நியாயமாகவே ) கொண்டாடப்படுகிற வெ.சாமிநாத சர்மாவின் பெயர் அளவுக்கு ஏன் எஸ்.ராமநாதன், ராகவன், குத்தூசி குருசாமி பெயர்கள் பரவலாக இன்று அறியப்படவில்லை ? இருட்டடிப்பு யாருக்கு நிகழ்ந்திருக்கிறது ? ‘

உண்மைதான் இஇருட்டடிப்பு நடந்திருக்கிறது. அயோத்திதாசரை திராவிட இஇயக்கத்தினர் இஇருட்டடிப்புச் செய்தது போல தேசிய எழுத்தாளர்களால் இஇந்த இஇருட்டடிப்பு நடந்ததாய் வைத்துக் கொள்வோம். 67-லிருந்து கழக ஆட்சி நடைபெறுகிறது. ஏன் அவர்கள் குத்தூசி குருசாமி, எஸ் ராமநாதன் போன்றோருக்கு உரிய இஇடத்தை அளிக்கவில்லை ? கருணாநிதியுடன் நெருக்கமாய் இஇருந்த காலகட்டத்தில் உங்கள் இஇந்தப் புகாரை கருணாநிதி, கலாநிதி போன்றோரிடம் தெரிவித்திருக்கிறீர்களா ? அதற்கு கருணாநிதி, கலாநிதியின் பதில் என்னவாக இருந்தது ?

உங்கள் பட்டியலில் ஏன் படைப்பிலக்கியவாதிகள் என்ற முறையில் திராவிட இயக்கத்தின் ஒரு ஆளைக் கூடச் சுட்டிக் காட்ட முடியவில்லை ? உங்கள் பார்வையில் கருணாநிதி, தென்னரசு போன்றவர்கள் பெரும் படைப்பிலக்கிய வாதிகளா ? அண்ணா , கருணாநிதி, தென்னரசு ஆகியோரை ஜெயகாந்தன், புதுமைப் பித்தன், தி ஜானகிராமன் ஆகியோருக்கு இணையான படைப்பிலக்கியவாதிகளாய்ச் சொல்ல முடியுமா ? 1967-க்குப் பிறகு பல்கலைக்கழக வளாகங்களில் தி மு கவினர் தானே பதவி பெற்று கல்வி, மற்றும் பாடத்திட்டங்களை அமைப்பதில் அதிகாரம் பெற்றார்கள் அவர்களில் யார் எங்கே திராவிட இயக்கத்தினரின் படைப்பாற்றல் பற்றி விரிவாக ஆய்வு செய்து நிறுவியிருக்கிறார்கள் என்று உங்களால் உதாரணம் தர முடியுமா ?

***

எஸ் வி ராஜதுரை – வ கீதாவினால் எழுதப்பட்ட பெரியார் பற்றிய ஆய்வு நூலைக் குறிப்பிடுகிறீர்கள். ஒரு மாற்று வரலாற்றுப் பார்வையை அளிக்க முன்வந்த முயற்சி இது என்ற அளவில் மட்டுமே இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதில் உள்ள இடைவெளிகளும் சார்புகளும் பல விதங்களில் விமர்சனத்துக்கு ஆளாக வேண்டியவை. திராவிட இயக்கம் எப்படி தற்சார்பு இல்லாத ஆய்வை உருவாக்கத் திறனற்றது என்பதையே இந்த ஆய்வு நிரூபிக்கிறது. அது பற்றி விவரமாய் எழுத இது இடம் அல்ல. ஆனால் ஒரே ஒரு நிகழ்வையும் அதன் பதிவையும் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

வைக்கம் வீரர் என்று பெரியார் அழைக்கப் படுகிறார் என்று உங்களுக்குத் தெரியும். அவருடைய இந்தப் போராட்டம் பற்றி உங்கள் படத்திலும் பதிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் நீங்களும் சரி, எஸ் வி ராஜதுரையும் சரி ‘இருட்டடிப்பு ‘ செய்த மிக முக்கியமான உண்மை ஒன்று உண்டு. பெரியார் காங்கிரஸில் இருக்கும்போது, காங்கிரஸின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் போராட்டம் நடந்தது என்பது. அதில் பங்கேற்று சிறை சென்ற பெரியார், காங்கிரஸின் தொண்டனாய்த்தான் இருந்தார். அதுவும் இந்து என்ற அடையாளத்துடன் தான் இதில் பங்கேற்றார். காங்கிரஸைச் சார்ந்த மற்ற தொண்டர்களுடன் இணைந்து தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, பெரியாரின் தனிப்பட்ட போராட்டம் போன்ற ஒரு பிரமையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. இந்து அல்லாதவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளலாகாது என்று காந்தி ஆணை இட்டிருந்தார் என்பதையும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெரியார் ஆதரவாளர்கள் எல்லோருமே பெரியாரைத் தவிர வேறு எவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற தொனியில் தான் எழுதுகிறார்கள். இது ஏன் ? (பெரியாரின் ஈடுபாட்டைக் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கமல்ல.)

சரி, சில வருடங்கள் கழித்து மதுரையில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்தது. அதை முன்னின்று நடத்தியவர் வைத்தியநாத அய்யர். பெரியார் இந்தப் போராட்டத்தின் போது என்ன செய்து கொண்டிருந்தார் ? ஒரு பிராமணரால் நடத்தப்பட்டது என்ற காரணத்தாலேயே இதிலிருந்து விலகி இருந்தாரா ? திராவிட இயக்கம் தொடங்கியதன் பின்பு எத்தனை ஆலயப் பிரவேசங்களும், இரட்டை கிளாஸ் ஒழிப்புப் போராட்டங்களும், தலித் மக்கள் இயக்கங்களையும் திராவிடர் கழகம் நடத்தியது ? பிராமண எதிர்ப்பில் பெரியாருக்கும் திராவிடர் கழகத்திற்கும் இருந்த தீவிரம் தலித் ஆதரவில் என்றேனும் இருந்ததுண்டா ?

****

உங்கள் வார்த்தையையே திருப்பி எழுதுகிறேன். ‘அறிவு மரபு என்பது அகாடமிக் ஸ்காலர்ஷிப், புத்தகம் எழுதுவது என்பது மட்டுமல்ல. மக்களிடையே யக்கம் நடத்தி மக்கள் மன நிலையில் மாற்றம் வர உழைக்கும் கூட்டு முயற்சிகளும் அறிவு மரபு வழி சார்ந்து அதை வளப்படுத்துபவைதான் ‘

அறிவு மரபு என்றால் என்ன என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்ப என்னைத் தூண்டியிருக்கிறீர்கள். ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். ஹிட்லர் மக்களிடையே யக்கம் நடத்தி மக்கள் மன நிலையில் மாற்றம் வர உழைக்கும் கூட்டு முயற்சியை மேற்கொண்டான். இன்னும் சொல்லப்போனால் ஒரு புத்தகம் கூட எழுதினான். அவன் அறிவு மரபைத் தோற்றுவித்தானா ஜெர்மனியில் ? ஆமாம், தோற்றுவிக்கத்தான் செய்தான். எல்லா பொதுமக்கள் இயக்கமுமே ஒரு குறுகிய அர்த்தத்தில் அறிவு இயக்கங்கள் தான் எனலாம். ஜெயலலிதாவும் சரி, சாய்பாபாவும் சரி, பா ஜ கவும் சரி, தாலிபானும் சரி ஒரு விதத்தில் அறிவு இயக்கங்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட கலாசார அடையாளங்களைத் தம்மைப் பின்பற்றுவோரிடையே ஸ்தாபிக்க விரும்புகிற , அதற்காக உழைக்கிற எல்லா இயக்கங்களுமே ஒரு விதத்தில் அறிவு இயக்கம் தான். ஆனால் அவை என்ன அறிவுப் பரவலைச் சாதிக்கின்றன அல்லது அறிவு மழுங்கலைச் சாதிக்கின்றன, என்ன ஜனநாயக உணர்வுகளை ஏற்படுத்துகின்றன, என்ன விதமான பின்பற்றுதலை எதிர்பார்க்கின்றன என்பதை வைத்துத்தான் இவற்றின் வீச்சையும், பயனையும் எடை போட முடியும்.

ஜனநாயகப்படுத்தலின் மூலமும், ஜனநாயகத்தின் அடிப்படையில் கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி பரிமாறவும், அதற்கான ஒரு தளம் அமைத்துக் கொடுத்தலிலுமே அறிவு மரபு வளர முடியும். ஒரு தரப்பட்ட கருத்துக்களை தூக்கிப்பிடித்து அதன் பின்னர் ஆட்டுமந்தை போல வரும் ஒரு கும்பலை உருவாக்குவது, எந்தப் பெயரில் வந்தாலும் அது அறிவு மரபாக இருக்கமுடியாது.

ஹிட்லர் யூதர்களைப் பற்றிச் சொல்லி தொடங்கிய இயக்கத்திலும் ‘பாதி ‘ உண்மைகள் ருந்தன. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் மேல் எல்லாக் குற்றங்களையும் சுமத்தி அவர்களை, விலக்கி வைத்துவிட்டு ஒரு ஜெர்மானிய தேசிய அடையாளத்தைக் கட்டுவிக்க ஹிட்லர் முயன்றான். பெரியார் பிராமணர்களை முன்னிறுத்தி இதையே செய்தார். ஆனால் பெரியார் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதும், திறந்த செயல்பாடுகளையே மேற்கொண்டார் என்பதும் பாராட்டத்தக்க விஷயங்கள்.

முதலில் ‘திராவிடன் ‘ என்ற விஞ்ஞான பூர்வமற்ற ஒரு இனக்குழுவை அடையாளம் காட்டினார் பெரியார். இந்தக் கருத்தாக்கம், திராவிடர்கள் என்று இவர் அழைத்த மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் யாராலும் ஒப்புக் கொள்ளப் படவில்லை. மொழியின் அடிப்படையில் இன வரையறையே அடிப்படையில் தவறான ஒரு விஷயம். அதுவும் ஒரு மொழிக் குடும்பத்தின் அடிப்படையில் இன வரையறை செய்வது எந்தச் சமூக விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்ளாத ஒன்று. இந்த இனவாதத்தில் தமிழ்ப் பேரின வாதத்தை தெலுங்கர்களும், கன்னடர்களும் கண்டிருக்கலாம். அதில்லாமல் சம்ஸ்கிருதத்தின் ஆழமான பாதிப்புகள் உள்ள மொழிகளைக் கொண்டிருந்த தெலுங்கர்களும், மலையாளிகளும் பெரியாரின் சமஸ்கிருத எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்று சொல்லவேண்டியதில்லை. அவர்கள் இந்த வரையறையை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் உடனே பெரியார் ஒரு சுய அலசலுக்குத் தன் கருத்துகளை ஆளாக்கி மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும் . ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழர் தவிர்த்த மற்றவர்கள் பிராமணர்களுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்று ஒதுக்கி விட்டு தமிழர்களை மட்டும் திராவிடர்கள் ஆக்கினார். தம்முடைய இயக்கத்தின் பெயரை தமிழர் கழகம் என்று மாற்றவில்லை.

விஞ்ஞான ரீதியாக ஆரியப் படையெடுப்புக்கோ, ஆரியர் வருகைக்குப் பின்புதான் சாதி உருவாகியது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும் இந்தப் பொய்மையின் ஆதாரத்தில் ஓர் இயக்கத்தைக் கட்டி எழுப்பி ஒரு மக்கள் கூட்டத்தையே மந்தையாக்க முடிந்தது தான் பெரியாரின் சாதனை.

அவருடைய இந்து மதம் பற்றிய விமர்சனமும் கூட எப்படி மதம் காலப்போக்கில் பரிணாமம் பெறுகிறது என்பது பற்றிய விஞ்ஞானப் பார்வையற்ற பார்வை தான். சாதிய எதிர்ப்பு என்பது மிகத் தீவிரமாக அவரால் செய்யப் பட்டது என்றாலும். பகுத்தறிவு என்ற ஒன்றை முன்னிறுத்திய பெரியார், இந்து மதம் பற்றிய தம்முடைய விமர்சனங்களை, ‘அமானுஷம் ‘ தவிர்ப்பதே பகுத்தறிவு என்ற குறுகிய அர்த்தத்தில் புராணங்களையும், இந்துமதத்தின் கடவுளர்களையும் விமர்சித்தார். சமூகவியல் ரீதியாக எப்படி புராணங்கள் உருவாகின்றன, ஒரு மனிதக் குழுவின் உருவாக்கத்தில் இப்படிப்பட்ட புராணங்கள் என்ன பங்கு வகிக்கின்றன என்ற தெளிவு அவருக்கோ, அவரைப் பின்பற்றியவர்களுக்கோ இல்லை. இப்படிப் புராணங்களை எதிர்ப்பது என்றால் உலகில் எல்லா மதங்களும் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியவையே. கடவுள் மோசசுக்கு அளித்த பத்துக் கட்டளைகள், கடலைப் பிளந்து யூத மக்களைக் கரையேற்றுதல், ஏசு கிறுஸ்து உயிர்த்தெழுதல், இஸ்லாமிய இறைத்தூதுவருக்கு கடவுள் வாசகங்கள் அளித்தல் என்று மேலை நாட்டின் மதங்களிலும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத பல விஷயங்கள் உண்டு.

பெரியார் மற்ற மதங்களை விமர்சித்தாலும் கூட, இந்து மதத்தின் மீது வைத்த மூர்க்கமான வெறுப்பை மற்ற மதங்களைக் குறித்து வெளியிடவில்லை. இஸ்லாம் தான் தீர்வு என்றும் கூடச் சொல்லியிருக்கிறார்.

கடவுள் மறுப்பு இயக்கங்கள் எல்லாக் காலத்திலும் – மூர்க்கமாக ஜனநாயகத்தை ஒழித்து, கருத்துச் சுதந்திரத்தைத் தடை செய்த நாடுகள் தவிர்த்த -எல்லா நாடுகளிலும் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் கடவுள் மறுப்புச் சமூகங்கள் உலகில் எங்குமே இல்லை. கடவுள் மறுப்புச் சமூகத்தைக் கட்ட முயன்ற சோவியத் பரிசோதனை எப்படி முடிந்தது என்று நமக்கெல்லோருக்கும் தெரிந்தது தான்.

அதில்லாமல் சாதியம் ஒன்றே இந்து மதத்தின் அடையாளம், சாதியம் ஒழிய வேண்டும் என்றால் இந்து மதம் ஒழிய வேண்டும் , எல்லோரும் இஸ்லாமியர்களாகி விட வேண்டும் என்று அவர் கூறியது எப்படிப் பகுத்தறிவிற்கு ஒத்தது என்று யாரும் ஆய்வு செய்து சொல்லவில்லை. இஸ்லாமியராகிவிட்டால், சாதியம் ஒழிந்து விடும், உடனே சமத்துவம் வந்துவிடும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பெரியாரின் பகுத்தறிவின் எல்லைகள் இவை தான்.

சாதியத்திற்கு முழுமுதல் காரணம் பிராமணர்கள் என்று சொல்வதும் வரலாறு அறியாதவர்கள் பேச்சு. தீண்டாமையினாலும் சாதியமைப்பினாலும் பெரும்பயன் பெற்றவர்கள் சத்திரியர்களும், வணிகர்களுமே. கடைநிலைச் சாதியினர் தவிர்த்த மற்ற சாதியினருக்கு பிராமணர்கள் ஏதும் அநீதி இழைக்கவில்லை. சொல்லப்போனால் இவர்கள் ஒருங்கிணைந்து தான் கடைநிலைச் சாதியினரைத் தீண்டாதார் ஆக்கியிருந்தனர். பொருளாதாரப் பயன்களும் சமூகப் பயன்களும் இவர்களால் அடைந்தவர்கள் இடைநிலைச் சாதியினரே. ஆனால், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் பிராமணர்களுக்கும், மற்ற இடைநிலைச் சாதியினருக்கும் நிகழ்ந்த முரண்பாடு ,அரசாங்க வேலை மற்றும் அதிகாரம் பற்றியது. இதில் பெரியார் மற்ற இடைநிலைச் சாதியினர் பக்கம் நின்றார். இது சமூகச் சமநிலைக்குத் தேவையான ஒன்று தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் பிராமண எதிர்ப்பின் தீவிரவாத முனையில் நின்றுதான் இது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இன்று பிராமண எதிர்ப்பு ஒன்றைத்தான் பெரியாரின் ஆதரவாளர்களும் சரி, எதிர்ப்பாளர்களும் காண்கிறார்கள் என்றால் அதன் பொறுப்பு பெரியாரையே சார வேண்டும்.

நடு சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி தலித்-மேல்சாதிக் கூட்டணியை இந்துத்துவாவுக்குச் சார்பாக கட்டி எழுப்ப முயற்சிப்பதும் நடைபெற்று வரும் சூழல் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். தலித் நடுச்சாதிகளின் கூட்டணியை ஏற்பட விடாமல் தடுப்பது எது ? இந்துத்துவ சக்திகள் நடுசாதிகளை விரும்புவதில்லையா ? வெறும் மேல்சாதி-தலித் வாக்குகள் போதுமானவையா ? இன்றைய நிலையில் எந்த நடுச்சாதியினர் தலித்துகள் மீது மேலாண்மை செலுத்திவருகிறார்களோ அவர்களிடம் தலித்துகள் மீண்டும் மண்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா ? தலித்கள் மீது இடைநிலைச் சாதிகள் நடத்தும் தாக்குதல்களைச் சகித்துக் கொண்டு உங்களைப் போன்றவர்களின் பிராமண எதிர்ப்பைச் சிரமேற்கொண்டு , பெரியார் வழியில் போகவேண்டும் என்பது தான் உங்கள் எதிர்பார்ப்பா ?

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்