வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

மத்தளராயன்


ஈராக் மீது அமெரிக்காவும் இங்கிலாந்தும் தொடுத்த யுத்தத்தில் துப்பாக்கிக் குழாய்கள் புகைந்து அடங்கினாலும் போரைத் தொடர்ந்த உயிரிழப்புகள் இன்னும் நின்ற பாடில்லை.

அதி பயங்கரமான வேதியல் அடிப்படை ஆயுதங்கள். நாற்பத்தைந்தே நிமிடம் நேரம் எடுத்துக் கொண்டு சதாம் உசைன் பாக்தாத்தில் இருந்து ஏவிவிட்டால் உலகமே காலியாகி விடும். இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஈராக்கை முற்றுகையிட்டு அந்த ஆயுதக் கிடங்குகளை அழித்தொழிக்க வேண்டியதுதான்.

ஒரு பக்கம் திமிரும், தான் என்ன சொன்னாலும் சராசரி அமெரிக்கன் பிட்ஸாவைக் கடித்துக் கொண்டே கேட்பான் என்ற நம்பிக்கையுமாக அதிபர் புஷ். அவருடைய மெய்யடியார்களான டொனால்ட் ரம்ஸ்பெல்ட், காண்டலீசா ரைஸ்.

இன்னொரு பக்கம் புஷ்ஷின் இடுப்பில் பேண்ட் நழுவுகிறது என்று லண்டனில் டவுனிங்க் தெருவிலிருந்து எக்கிப் பார்த்து இதே வந்துட்டேண்ணா என்று ஓடோடி வந்து அவருக்குத் உதவிக் கரமும் குரலும் கொடுத்த (புஷ்ஷை விட இவர் நல்ல பேச்சாளர்) இங்கிலாந்துப் பிரதமர் டோனி ப்ளேர். அவருடைய பொய்க்காப்பாளரும் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான அலிஸ்டர் காம்பெல்.

போர் முடிந்தது. சதாம் உசைன் சிலையை நொறுக்கித் தெருத்தெருவாக இழுத்துப் போனதை தொலைக்காட்சியில் ஆக்ஷன் ரீ ப்ளே, ரீ ரீ ப்ளே என்று கணக்கே இல்லாத தடவை போட்டுப் போட்டுக் காட்டி உளமகிழ்ந்தார்கள். சதாம் படத்தை நோக்கித் தன் அரபு அங்கியை வழித்துக் கொண்டு நெருங்குகிற ஒரு நடுவயது அராபியனைப் பின் தொடர்ந்த டெலிவிஷன் காமிராக்கள், அந்த ஆள் அப்புறம் என்ன செய்தான் என்ற அமெரிக்க பாணி இன்ப ஊகங்களைப் பார்வையாளர்களுக்கே விட்டுவிட்டன.

‘லெனின் போல், ஸ்டாலின் போல் கொடும் சர்வாதிகாரியான உசைன் ஒழிஞ்சான் ‘ என்று சகுனிமாமா டொனால்ட் ரம்ஸ்பெல்ட் விஷமச் சிரிப்போடு சொன்னபோது ஒரு யுகப் புரட்சியைத் தோற்றுவித்த விளாதிமிர் இலியிச் லெனின் மேலும் படும்படி இன்னொரு தடவை எச்சில் உமிழ்ந்தார்.

இத்தனைக்கும் நடுவே ஈராக்கில் மக்கள் உயிர் இழப்பு. தண்ணீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. மின்சாரம் இல்லை. பாக்தாத் அருங்காட்சியகம் கொள்ளை.

அதெல்லாம் ஒற்றை வரிச் செய்தி. வெப்பன்ஸ் ஓஃப் மாஸ் டெஸ்ட்ரக்ஷன் தான் பிரதானம்.

இந்த நாசகார ஆயுதங்களைக் காரணம் காட்டி வல்லடி வழக்கடியாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஈராக்கை ஆக்கிரமித்தபோது அமெரிக்காவில் யாதொரு விதமான எதிர்ப்புக் குரலோ முணுமுணுப்போ எழாவிட்டாலும், க்ளேர் ஷார்ட் அம்மையார், ராபின் குக் போன்ற மூத்த தொழிற்கட்சிப் பிரமுகர்களும் (ப்ளேரின் இந்தப் போரை எதிர்த்துத் தன் மந்திரி பதவியையே துறந்து வெளியேறினார் குக்), டெய்லி மெயில், கார்டியன் போன்ற பத்திரிகைகளும், சேனல் நாலில் ஜான் ஸ்நோ போன்ற செய்தியாளர்களும் (இங்கிலாந்து மகராணி வருஷா வருஷம் வழங்கும் சர் பட்டம் வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டவர் இவர்) போரை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தார்கள்.

போர் முடிந்த பிறகு உலகமே எங்கேய்யா அந்த வெப்பன்ஸ் ஓஃப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன் என்று அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் பார்த்துக் கேட்க, புஷ்ஷும் பிளேரும் பேய்முழி முழிக்கிறார்கள்.

‘ஆயுதம் இருக்குன்னு எங்கே சொன்னோம், ஆயுதத் தயாரிப்புத் திட்டம் இருக்கலாம்னு சந்தேகப்படலாம்னு அமெரிக்க உளவு ஸ்தாபனம் சொன்ன மாதிரி இருந்ததாலெ என்னன்னு பார்க்கப் படை பட்டாளமாக் கிளம்பிப் போய்.. ‘

சொல்வது பொய் என்று உலகத்துக்கே நிரூபணமானாலும் தொடர்ந்து அதையே பேசிக்கொண்டிருந்த சதாம் உசைனின் தகவல் அமைச்சர் அலியை காமிக் அலி என்று வர்ணித்து மகிழ்ச்சி கொண்டவர்கள் காமிக் புஷ்ஷையும், க்ளவுன் ப்ளேரையும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட மதிள் மேல் பூனையாக யுத்தத்தின் போது இருந்த பி.பி.சி, திடாரென்று ப்ளேரின் குரல்வளையை நெறிக்க ஆரம்பித்தது யுத்தம் முடிந்து மூன்று மாதம் கழித்து.

நாற்பத்தைந்தே நிமிட அவகாசத்தில் ஏவி விடப்பட்டு உலகத்தின் எந்தக் கோடியிலும் போய்விழுந்து சர்வநாசத்தை உண்டாக்கும் ஆயுதங்கள் சதாம் உசைனிடம் இருப்பதாக இங்கிலாந்து அரசும் அமெரிக்க அரசும் திரும்பத் திரும்ப முழங்கியது ‘கவர்ச்சியாக்கப் பட்ட ‘ சமாச்சாரம் ( ‘செக்ஸ்ட் அப் ‘ என்ற இந்த அமெரிக்கச் சொல்லாடலைச் சாவகாசமாகக் கட்டுடைத்துப் பார்க்கலம்) என்று அறிவித்துப் பரபரப்பை உண்டாக்கியது பி.பி.சி.

‘நம்பகமாக வட்டாரங்கள் ‘ தெரிவித்ததாகச் சொன்ன இந்தச் செய்தி அமெரிக்காவைப் பாதித்ததோ இல்லையோ, யுத்தம் தொடங்க ஒரு மாதம் முன்னர், போர் வேண்டாம் என்று லட்சக் கணக்கில் அணிவகுத்துப் போன பிரிட்டாஷ் மக்களை ஒரு நிமிடம் நிலைதடுமாற வைத்தது.

ப்ளேர் அரசு பி.பி.சியை மறுத்து ஆதாரங்களோடு இன்னொரு அறிக்கை விட்டிருக்கலாம். வேண்டிய ஆதாரங்களை நாற்பத்தைந்து நிமிட அவகாசத்தில் உற்பத்தி செய்யவும் அறிக்கை விடவும் அலிஸ்டர் காம்பெல், கோடை வெய்யில் ஆரம்பமான லண்டன் மாநகரின் டெளனிங்க் தெரு ஓரம் தயாராக இருக்கிறார்.

ஆனால், டோனி ப்ளேருக்கு பி.பி.சியை அடித்து வீழ்த்துவதே தற்போது இலக்கு என்றாகிப் போனதால், அந்த தொலைக்காட்சிச் செய்தி நிறுவனத்துக்கு (இதுவும் அரசாங்க நிறுவனம் தான். ஆனால் சர்வ சுதந்திரமும் உடையது) யார் துப்புக் கொடுத்திருப்பார்கள் என்று புலன் விசாரணை நடத்திப் பிடித்தது டாக்டர் டேவிட் கெல்லி என்ற மூத்த விஞ்ஞானியை.

மைக்ரோபயலிஜ்ட்டாகிய கெல்லி, ஐ.நா சபையின் (இன்னும் இருக்கிறதா ?) ஆயுதப் பரிசோதகராகப் பத்து வருடம் முன்னால் ஈராக் போய் வந்தவர். ஈராக்கின் பழைய, போன வருடத்து, இன்றைய ரசாயன ஆயுத நிலவரம் எல்லாம் அத்துப்படியான கெல்லி, நடந்து முடிந்த ஈராக் ஆக்கிரமிப்பின் போது இங்கிலாந்து அரசின் முக்கிய ராணுவ ஆலோசகர்களில் ஒருவர்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் கெல்லி ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நம்ம ஊர் அரசியல் வாதிகளை விட பிரிட்டாஷ் அரசியல்வாதிகளுக்குப் புத்திசாலித்தனமும் அதிகம். நாவடக்கம் என்றால் என்ன விலை என்று கேட்பார்கள் அவர்களும்.

அரசியல்வாதிகள் நாவினால் என்ன சுட்டார்களோ, மூத்த அறிவியலாளர் கெல்லி மனமுடைந்து போனார்.

டோனி ப்ளேர் ஜம்பமாக அமெரிக்கப் பயணம் கிளம்பிப்போய் புஷ்ஷோடு ரெண்டு பெக் அடித்து ஈராக் வெற்றியைப் பற்றி ஒருத்தர் தோளில் ஒருத்தர் தட்டிப் பாராட்டிக் கொண்டிருந்துவிட்டு, அந்த நாட்டை இனியும் எப்படிச் சுரண்டலாம் என்று பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து அத்துப்படியாகி மரபணுக்களில் பதிந்து விட்ட காலனியாதிக்க நோக்கில் ஆலோசனை சொல்லிவிட்டு, நல்லெண்ண விஜயமாக ஜப்பான் கிளம்ப விமானம் ஏறிக் கொண்டிருக்கிறார். இங்கே இங்கிலாந்தில், எம்.பிக்கள் விசாரணை நடத்த இழுத்து வரப்பட்ட கெல்லி காணாமல் போனார்.

டோனி ப்ளேரின் விமானம் தோக்கியோவில் தரை இறங்கும்போது அவருடைய மதிப்பும் அதல பாதாளத்துக்கு இறங்கிப் போனது.

காணாமல் போன விஞ்ஞானி கெல்லி அரசாங்கத்தால் தான் அனுபவிக்க வேண்டி வந்த மனம் சார்ந்த சித்தரவதை தாங்காமல் தன் மணிக்கட்டுகளை அறுத்து ரத்தம் சொட்டச் சொட்டத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

அரசாங்கம் தெரிந்தே தவறு செய்து எல்லோரையும் ஏமாற்றியது என்கிற உண்மை மக்களுக்குப் போய்ச் சேர சூசகமாகத் தகவல் தந்த அந்த நல்ல மனிதரின் உயிர் அடங்கியபோது டோனி ப்ளேர் விமானப் படிக்கட்டுகளில் இறங்கி வந்து ஜப்பானியப் பிரதமரோடு கை குலுக்கிக் கொண்டிருந்தார்.

உலகம் முழுக்கப் பார்க்க, டி.வி காமிரா பிளாஷ் பல்புகளின் வெளிச்சத்தில் அவர் முகம் இருண்டு கிடந்தது.

***

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்