அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

அரவிந்தன் நீலகண்டன்


பல கோடி தமிழ் மக்கள் அரசு சேவைகளின் திறமையின்மை மற்றும் சகோதரத்துவமின்மை ஆகியவற்றை உணர்ந்திருக்கின்றனர். பல இடங்களில் நாம் கிராமத்தவர், முதியோர் ஆகியவர்களை அரசு ஊழியர்கள் நடத்தும் விதத்தில் இருக்கும் மனிதாபிமானமற்ற தன்மையை நேரிடையாக உணர்ந்திருக்கின்றோம். கோப்புகள் தன் மேசைமுன் தேங்கியிருக்க தன் முன் நிற்பவரை புழுபூச்சியாக கூட மதிக்காமல் தொலைபேசியில் அளவளாவும் ஒரு மனச்சித்திரமே அரசு ஊழியர் குறித்து மக்கள் மனதில் எழுந்துள்ளது. பின் அரசு அலுவலகத்தில் எங்கெங்கணும் பரவி நிற்கும் ஊழல். ஒவ்வொரு தமிழ் நாட்டவனும் தன் இதயத்தில் உணர்ந்ததோர் விஷயமிது. தொழிற்சங்கங்கள் தங்களுக்கு அரசு இழைத்ததாக கூறப்படும் அநியாயங்களை கொண்டு செல்ல மட்டுமல்ல மக்கள் மன்றம். தங்கள் உறுப்பினர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள் பணிகள் திறமையாக முழுமையாக மக்களை சென்றடைந்திருக்கிறதா என்பதனை அறியவும், சமுதாயத்துடன் இணைந்து எதிர்வினைகள் அறிந்து தம்மை தம் ஊழியர் சேவைகளை மேம்படுத்தியிருந்தால், இத்தொழிற் சங்கங்கள் எழுப்பும் கோரிக்கைகளுக்கு மக்களிடம் மதிப்பு ஏற்பட்டிருக்கும். மாறாக தீபாவளிக்கு தீபாவளி நஷ்டத்தில் ஓடும் அரசு அலுவலகங்களில் போனஸுக்காக வேலை நிறுத்தம் செய்யும் அடாவடியாளர்களாகவே மக்கள் இந்த தொழிற்சங்கங்களை அறிந்துள்ளனர். நாகர்கோவிலில் ஒரே நெடுஞ்சாலையில் இரு துருவங்களில் அமைந்துள்ளன ‘மாவட்ட ஆட்சியர் ‘ அலுவலகமும், போக்குவரத்து கழக பணிமனையும். போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தும் தொழிற்சங்கம் எந்த கட்சியின் அங்கமோ அதே கட்சியின் மாணவர் அமைப்பு மாவட்ட ஆட்சியர் ‘ அலுவலகம் முன்பாக பேருந்து கட்டணம் குறைக்கப்பட போராடும். விளைவு ? இன்றுவரை கன்னியாகுமரி மாவட்ட போக்கு வரத்துக்கான ஏகபோக சேவை அளிப்பவராக இருந்த அரசு பேருந்து கழகம் நஷ்டத்தில் ஓடுவதையும், ஒன்றிரண்டு சாலைகளில் ஒன்றிரண்டு சிற்றூந்துகளை நடத்தும் தனியார்கள் லாபத்தில் செழிப்பதையும் காணலாம். இதற்கு தொழில்சங்க வாதிகள் ஆயிரம் காரணங்களையும் இரண்டாயிரம் புள்ளி விவரங்களையும் கூறலாம். ஆனால் பொதுமக்கள் மனதில் பதியும் சித்திரத்தை சொன்னேன் நான்.

ஆசிரியர்களை பொறுத்தவரை ஒரு சில விஷயங்கள் மனதை மிகவும் புண்படுத்துபவை. நம் மக்களில் பெரும்பாலானோர் தம் செல்வங்களை அரசு கல்விச்சாலைகளுக்கு அனுப்புகின்றனர். ஒரு சிறுபான்மை மக்களே தனியார் கல்விச்சாலைகளுக்கு அனுப்புகின்றனர். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இந்த சிறுபான்மையினருக்கே தம் சேவைகளை லாபகரமாக வழங்குகின்றன. அரசு ஆரம்ப கல்வி ஆசிரியர்களை விட இந்த மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் மிக மிக குறைவு. அரசு கல்விச்சாலைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை விட குறைவான ஊதியம் பெறும் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளை காட்ட முடியும். ஆனால் தரம் எவ்வாறு உள்ளது ? அரசு பள்ளியில் அதிக ஊதியம் பெறும் இந்த ஆசிரியர்களிடம் கல்வி பயிலும் மாணவர்களின் தரம் எந்த விதத்திலாவது இந்த மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களின் தரத்தோடு போட்டியிடும் படியாக உள்ளதா ? எத்தனை ஆசிரியர் சங்கங்கள் இப்பிரச்ச்னையை அணுகியுள்ளன ? நம் மாநில பாடத்திட்டத்தில் பயின்று , ‘கோச்சிங் கிளாஸ்கள் ‘ உதவியில்லாமல் IIT சென்றுள்ள கிராமப்புற அரசு மாணவர்கள் எத்தனை கைவிரல்களுக்குள் நிற்பார்கள் ? நம் கிராம அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியர்களின் தரம் எவ்வாறு உள்ளது ? இது குறித்து நம் ஆசிரியர் தொழிற் சங்கங்கள் தீவிரமாக சிந்தித்ததுண்டா ? நானறிய பல அரசு மற்றும் அரசுதவி பெறும் மாணவர்கள் ட்யூஷன் மூலமே தேர்வில் வெற்றி பெறுகின்றனர். இவர்கள் எல்லோரும் வசதி படைத்த குடும்பத்தினர் அல்ல. மாறாக மிகவும் வருந்தி உழைக்கும் பெற்றோர் தங்கள் அனைத்தையும் தம் மக்களின் கல்விக்காக தியாகம் செய்ய வேண்டிய நிலை. இதில் இந்த அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் பங்கு பெரும் அவமானகரமானது. தெளிவாக சலுகைகள் கூட கூட ஆசிரியர்கள் தரத்தில் கீழ்மையும் கூடியுள்ளது. இதனையும் அனைத்து மக்களும் கவனித்தே வந்துள்ளனர். இத்தகைய சூழலில் இப்போராட்டம் அரசால் எளிதாக நசுக்கப்பட்டதில் அதிசயமல்ல. இந்த தோல்வி ஒரு விதத்தில் சொன்னால், எஸ்மாவினால் வரவில்லை. கர்மாவினால் வந்திருக்கிறது. இடதுசாரி தொழிற் சங்கங்கள் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்குமான பிளவில் கொழுத்து வாழ்ந்தே பழகியவை. அவற்றின் சில போராட்டங்களில் நியாயம் தற்செயலாக இருந்தாலும் கூட அதன் பாதை நாசத்தை நோக்கியதே ஆகும். நியாயமான நிர்வாகம் சிரத்தையுள்ள தொழிலாளிகள் ஆகியவற்றுடன் சமுதாய முழுமை நோக்கு இவற்றை அடையும் பார்வை தெளிவு கொண்ட தொழிற்சங்கங்கள் ஆகியவை மூலமே சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் நல வாழ்வு அடைய முடியும். அது நிச்சயமாக இடது சாரி தொழிற்சங்கங்களால் ஆகாத காரியம்.

-அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்